Tuesday, July 22, 2014

கோதுமை வடை - கிச்சன் கார்னர்

கோதுமைல என்னென்னெச் செய்யலாம்!? சப்பாத்தி, பூரி, அல்வா, கஞ்சி..., இதெல்லாம்  கேள்விப்பட்டும், சாப்பிட்டுமிருப்பீங்க.  கோதுமைல வடை!?   என்னாது கோதுமைல வடையா!? எதிர் வீட்டக்கா நாலு வடையை சாப்பிட கொடுத்தபோது நானும் இப்படித்தான் ஆச்சர்யப்பட்டேன். ஆனா, கோதுமை வடையை சாப்பிட்டப் போது இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டோமே!!ன்னு தோணிச்சு. கோதுமை வடையை சாப்பிடனும்ங்குற ஆசையைவிட, அதை பதிவாக்கனுமேன்ற ஆவலில் மறுநாளே கோதுமையை ஊற வச்சு வடை சுட்டு பதிவும் தேத்தியாச்சு!

தேவையான பொருட்கள்:
முழு கோதுமை  - ஒரு ஆழாக்கு,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 1,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - ஒரு துண்டு,
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - வடை பொறிக்க தேவையான அளவு



கோதுமையை நாலு மணி நேரம் ஊற வச்சு, கழுவி உப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைச்சுக்கவும். உளுந்து, க்டலைப்பருப்புப் போல சீக்கிரம் மசியாது. மிக்சில போட்டு அரைச்சாலும் கொஞ்சம் நேரமெடுத்துக்கும். 


அரைச்ச கோதுமை மாவில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், கறிவேபிலை, கொத்தமல்லி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க.

அடுப்பில் வாணலி வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி கோதுமை மாவை வடையாய் தட்டி போட்டு, ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

கோதுமை வடை ரெடி. மத்த வடைகள் போல் இல்லாம கொஞ்சம் கடினமா இருக்கும். எப்ப பாரு கோதுமைல சப்பாத்தி, பூரியே சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் நமக்கு ஒரு மாறுதல்.

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்....,

Monday, July 21, 2014

ஜோசியக்காரர்களே சிந்திப்பீரா!? - ஐஞ்சுவை அவியல்

போன வாரம் வாசல் தெளிச்சு கோலம் போட்டிருந்தேன். தாயி! கோல மாவு வேணுமான்னு ஒரு குரல். ஒடிஞ்சு விழுந்துடுற மாதிரி ஒரு உடல்வாகு.   வாதத்தால் வீங்கிய கால்கள் தலியில் சும்மாடு கூட இல்லாம தலையில் கணக்கும் கோலமாவு கூடை. . ரெண்டு பிள்ளைங்களாம். வாதம் வந்ததால், பேரப்பிள்ளைங்களுக்கும் தொத்திக்கும்ன்னு மருமகள்கள் துரத்திட்டாங்க. பிச்சை எடுக்க மனசு வரல தாயின்னு சொல்லி கேட்டாங்க. ஏற்கனவே வீட்டில் இருந்தாலும், அங்கம்மாவோட சுமையை குறைக்கனும்ன்னு தோணவே ரெண்டுப் படி கோல மாவு வாங்கிக்கிட்டேன். கூடவே, பாட்டி நீ இந்தப் பக்கம் எப்போ வந்தாலும் என்கிட்ட கேட்டுட்டு, அப்புறம் மத்த வீடுகளுக்குப் போன்னு சொன்னேன். கூடவே சூடாய் ஒரு டம்ப்ளர் காஃபியும் போட்டு தந்தேன். அதுக்குப் பதிலாய் , என் வீட்டு வாசலில் அழகாய் பெருசாய் ஒரு கோலம் போட்டுட்டுப் போனாங்க. அப்புறம் இன்னொரு சேதி இப்பலாம் நான் 5 புள்ளி கோலம்லாம் போடுறதில்ல. தினமும் 15 புள்ளி கோலம்தான் போடுறது.


சமீபத்துல என் தம்பிக்கு பொறந்த ஆண்குழந்தை நட்சத்திரப்படி என்ன எழுத்தில் பேர் வைக்கலாம்ன்னு ஜோசியக்காரர்கிட்ட போயிருந்தேன். ஒரு பத்துக்கு பத்து அறையின் நடுவில்.., கிழக்கு திசை பார்த்த மாதிரி உட்கார்ந்திக்கிட்டிருக்கா.., அவரைச் சுற்றி குறைந்தது இருபது பேர் இருந்தாங்க. எனக்கு முன் அமர்ந்திருந்தவர் தன் மகளுக்கு எப்ப கல்யாணம் நடக்கும்ன்னு கேட்க வந்திருந்தார். இந்தப் புள்ள, மூக்கும், முழியுமா நல்லா இருந்தாலும் வீட்டுக்கு அடங்காது. இதோட ஜாதகப்படி மாமியாருக்கு ஆபத்துன்னு சொன்னார். அடுத்து ஒரு அம்மா, தன் மூத்தாருக்கு  பேரன் பிறந்திருப்பதாகவும், அதைக் கணிக்க வந்திருப்பதாக சொன்னாங்க.

ஏதேதோ கணக்குப் போட்டு பார்த்தவர், அந்தம்மா முகத்தைக்கூட பார்க்காம, அவர் தந்த குழ்னதை பொறந்த நேரம் எழுதிய தாளை தூக்கிப் போட்டுட்டு, “குழந்தை மரன யோகத்தில் பொறந்திருக்கு. இது மரணத்தைதான் ச்மபவிக்கும்”ன்னு எடுத்த எடுப்பிலேயே போட்டுடைத்தார். அந்தம்மா, மீண்டு வேற தாளைக் கொடுத்து, ஐயா! இது அந்தக் குழந்தையோட அப்பாவோடது, இவன் ஆறு மாசமா நினைவு, நீச்சில்லாம கெடக்கான். கல்யாணமான அஞ்சாவது மாசத்துல, இந்தக்குழந்தை வயத்துல நாலு மாசமா இருக்கும்போது வண்டில போனவன் கீழ விழுந்து மண்டையில் அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் கெடக்கான். அவன் நிலையைப் பார்த்துச் சொல்லுங்க ஐயான்னு கேட்டாங்க. புள்ள பொறந்த நேரம் அப்பனுக்கும் கண்டமிருக்கு. எதாவது பொழைச்சிருந்தா நீங்க ஆடி மாசம் 27 தேதிக்கு மேல் வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சிட்டார். அந்தம்மா அழுதுக்கிட்டே போனது மனசை என்னமோ பண்ணுச்சு. ஆண்டவா! அந்தக் குழந்தைக்கும், தகப்பனுக்கும் ஏதும் நேராம நீதான் அருள் புரியனும்ன்னு கண்ணீர் சிந்தி வேண்டிக்கிட்டேன்.

ஐயா! ஜோசியக்காரர்களே! ஜோசியம் சொல்றதுதான் தொழில்ன்னு ஆகிட்டுதே! நல்லாத்தானே கல்லா கட்டுறீங்க. இரண்டு அறைகள் இருக்கு இடத்தில் கடை விரிங்கப்பா. இப்படியா, அடுத்தவங்க முன்னாடி அவங்க குடும்ப கஷ்டத்தை சொல்லனும்!? அப்புறம் இன்னொன்னும் தாழ்மையோடு கேட்டுக்குறேன், நிஜமாவே எதாவது கண்டம் இருக்குறதா தெரிஞ்சாலும் பக்குவமா, அவங்க மனசு ஏத்துக்குற மாதிரி சொல்லுங்க. அப்பத்தான் உங்க ஜோசியத்துக்கும் ஒரு மரியாதை இருக்கும், பலிக்கும். 


சின்னவ பத்தாவது படிச்சிட்டு இருந்த போது,  டியூசனுக்குப் போயிட்டு எப்பவுமே சரியாய் நைட் 8.10க்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. ஒரு நாள் 8.45 ஆகியும் வீட்டுக்கு வரல. அன்னிக்குன்னு பார்த்து பலமான தூறல். டியூஷன் மாஸ்டருக்கு ஃபோன் போட்டால் அவர் நம்பர் நாட் ரீச்சபிள். கை, கால் லாம் உதறலெடுக்க சரின்னு குடையெடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன். கொஞ்ச தூரம் போனதும், தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. அருகில் வந்தவக்கிட்ட, அப்பாடி! வந்துட்டியா! ஏன் லேட்டு!? நீ வர்றதுக்குள் வயத்துல நெருப்பைக்கட்டிக்கிட்டு வாசலுக்கும், வீட்டுக்குமா அலைஞ்சுக்கிட்டிருந்தேண்டி!!ன்னு சொன்னேன்.

அப்படின்னா ஏன் குடை எடுத்திக்கிட்டு வந்தே!? அப்படியே வந்திருந்தா, மழையில் நனைஞ்சு வயத்தில் இருக்கும் நெருப்பு அணைஞ்சிருக்குமில்ல!  வீட்டுக்கு போனதும் முதல்ல குளி, அப்பவாவது நெருப்பு அணையுதான்னு பார்க்கலாம்ன்னு சொல்லி சிரிச்சா. என் கவலை எனக்கு. அதுலாம் அவளுக்குப் புரியுமா!?

 


10 க்கு கீழ் ஒரு எண் . அதை எட்டு முறை பயன்படுத்தி வெறும் கூட்டல் மூலம் 250 விடை வர வேண்டும். வரும்தானே!?


மல்லிகைப் பூவை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் போது பிளாஸ்டிக் டப்பாவை விட, எவர்சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால்  இன்னும் ஓரிரு நாள் புதுசா இருக்கும். எலுமிச்சை பழத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். கிரைண்டரை கழுவும்போது சிலர் வெறும் கிரைண்டரை ஆட்டுக்கல்லோடு சேர்த்து தண்ணி ஊற்றி சில சுத்து சுத்த விடுவாங்க. அப்படி செய்தால் கிரைண்டரின் கற்கள் சீக்கிரம் தேய்மானமாகிடும்.

Saturday, July 19, 2014

முதன் முதலாய் அன்னையென பட்டம் தந்தவளின் பிறந்த நாள் இன்று!!

தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம்.  என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.

20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,


முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு...,  மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!

 ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.

பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால,  அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.

மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.


அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.

தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட...,
முதல் மகளாய் பிறந்தாய்
முதன்முதலாய் “அம்மா”வென்னும்
புதுப்பட்டம் பெற்றேன் உன்னால்...,
அன்றையத் தினத்தை
நினைத்துப் பார்க்கிறேன்...,
ஆடிமாதம், முற்காலை வேளையில்
வெண்துகிலுக்கிடையில்
சிவப்பு ரோஜாவான உன்னைக் கண்டதும்..,
வலியும், சோர்வும், மயக்ககடலில்
இருந்த எனக்கு சிறந்த களைப்பாறல்!!

சின்னஞ்சிறு பொன்மலர்,
செம்பவழ வாய், வெள்ளிக்காசின்
இரைச்சலாய் உன் அழுகை, இதுவரை
பழகியிறாமலே ஆராரோ பாடியது
மனமும்.., வாயும்...,

பேர் வைக்கும் நாளன்று.., 
பட்டுத்துணி விரிப்பில்
தங்கம் போல் ஜொலித்த உன்னைக் 
கண்டு பொன்னே வெட்கியது!!
உறவினர்கள் தேன் தடவி வாழ்த்த...,
எனக்கோ பூரிப்போடு கவலையும்!!!!
எவர் கண்படுமோவென்று!!!

”ங்கா” பேசி மயக்கிய நீ
“அம்மா”வென அழைத்து
என்னை உன் சேவகி ஆக்கிவிட்டாய்!!
கவிழ்தல், முட்டிப்போடுதல்
நடைப்பயில்தல், உண்ணுதல்
போன்ற இயல்பான விசயங்களுக்குக் கூட
சிறகடித்துப் பறந்தேன்.

காலண்டர் படி பத்தொன்பது முடிந்து,
 இருபதாம் வயதாம் உனக்கு!!
ஆனால், முதள் நாள் கண்டு பூரித்த,
அதே குழந்தைதான்  இன்றும் நீ எனக்கு!!
நாளாக, நாளாக
வயது மட்டும்
கூடினால் நலமா!?
இனி, கழியும் ஒவ்வொரு நாளும்
உன் சரித்திரத்தில் நன்னாளாய்
பொரிக்கப்பட வேண்டும்...,

போட்டாப் போட்டி, பொறாமை,
சூது, சண்டைகள்லாம் பொதுவாய் உள்ள உலகில்,
போராட..., மனவலிமை, முயற்சி, உழைப்பு
மட்டும் போதாதம்மா!!
சோர்வு தரா, உடல்வலிமையும்
வேண்டுமென நினைவுக் கொள்.

பருவத்துக்கே உண்டான குறும்பு, துடுக்குத்தனம்,
வேண்டாத ஆசைகளை நீக்கி
விடாமுயற்சியோடு, பயிற்சியும்
எந்நாளும் தொடர்ந்தால் எழுச்சி
காண்பாய். எழுச்சியோடு...,
வேகமும், விவேகமும் 
சேர்ந்தால் “வளர்ச்சி” கைக்கூடும்.
வளர்ச்சியினால் எந்நாளும் உன்வாழ்வில்
மலர்ச்சி உண்டாகும்.

உன் வாழ்வில் என்றும் மாறா மலர்ச்சி 
உண்டானால்......, உனை
நினைந்துருகும்
தாய் மனசு குளிர்ந்து

பார் போற்ற வாழ்ந்திடுவாய்.
அந்நிலையில்  உன்னைக்
காணுகின்ற நாளில் 
உன் அன்னையின் துயரம் 
மறந்தல்ல.. பறந்தே போகும்!!

Thursday, July 17, 2014

தையல் வகுப்பு ஆல்பம் - கிராஃப்ட் கார்னர்

பசங்கலாம் பெருசாகிட்டு,  அதுங்க வேலைகளை அதுங்களே பார்த்துக்குதுங்க. காலைல எல்லோருக்கும் சமைச்சுக் கொடுத்து அனுப்பி, மாலை அவங்கலாம் திரும்பி வரும் வரை சும்மாதான் இருக்கனும். டிவி பார்க்கப் பிடிக்காது. அதிகப்பட்சம் இணையத்துல வந்து கும்மியடிப்பேன். கொஞ்ச நேரம் எம்ப்ராய்டரி செய்வேன்.

ரொம்ப நாளாய் தையல் கத்துக்கனும்ன்னு ஆசை. தையல் வகுப்பு நடக்கும் இடம் எங்க வீட்டுல இருந்து 4கிமீ தூரம்க்குறதால அந்த ஆசை நிறைவேற ரொம்ப நாளாய் தள்ளிப் போட்டுக்கிட்டே போச்சு. தற்செயலாய் எங்க ஊர்ல  ரோட்டரி சங்கத்துல இருந்து வந்து தையல் வகுப்பு சொல்லித் தர்றதா சொன்னாங்க. அதும் எங்க வீட்டுக்கு  பக்கத்துலயே வகுப்பு நடக்கும் இடம்ன்றதால உடனே சரின்னு சொல்லிட்டேன்.  

மூணு மாசம் சின்சியரா வகுப்புக்குப் போறேன்ற பேர்ல வகுப்புக்குப் போய் அரட்டை அடிச்சுட்டு வந்தேன். போன வாரத்துல ஒருநாள் திடீர்ன்னு இதுவரை கத்துக்கிட்டதையெல்லாம் சின்ன அளவுல செஞ்சு சாட் பேப்பர்ல ஒட்டி ஆல்பமா கொண்டு வரனும்ன்னு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. அப்புறம் என்ன மாங்கு, மாங்குன்னு உக்காந்து ஆல்பம் ரெடிப் பண்ணி மேடம் கிட்ட வாங்கி குட்ன்னு பேரும் வாங்கியாச்சு.


மகிழ்ச்சியோ, துக்கமோ, கஷ்டமோ, நஷ்டமோ எதாயிருந்தாலும் உங்கக்கிட்ட பகிர்ந்துக்குறதுதானே என் வழக்கம்!? அதான் அந்த ஆல்பத்தையும் உங்கக்கிட்ட காட்ட படமெடுத்து பதிவாக்கிட்டேன். நல்லா இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க சகோ’ஸ்.


முதல் பக்கத்துலயே தேசியக்கொடியை எம்ப்ராய்டரி செஞ்சு ஒட்டனும்ன்னு சொன்னாங்க. 

நெளிவு சுளிவுகள் அதிகமிருக்குற வட்டங்களும்.., இதயமும்.....


அடுத்து சுடிதார் மற்றும் ஜாக்கெட்களுக்கான பின்கழுத்து மாதிரிகள்..., ”ரவுண்ட்” கழுத்தும், ”பானை” கழுத்து மாதிரியும்...,

அடுத்து ”பா” கழுத்து மாதிரி...,


அடுத்து “வி”கழுத்து, படிக்கட்டு கழுத்து மாதிரி....,

இரண்டு விதமான “ஸ்டார்” கழுத்து மாதிரி...,

”மாங்காய்” கழுத்தும், “அரும்பு” கழுத்து மாதிரியும்....,

பைப்பிங் கழுத்து மாதிரி....,


“நெக்லெஸ்” கழுத்து மாதிரி...., 

இப்பலாம் உள்ளாடைகளை வீட்டிலயே தைச்சி யாரும் பயன் படுத்துறதில்ல. ஆனாலும் தையல் வகுப்பில் இதான் முதல் பாடம்..,

அடுத்து நிக்கர்....,



சின்ன குழந்தைக்களுக்கான “ஃப்ராக்”...,

அடிப்படையான சுடிதார் டாப்...,

சுடிதார் ஃபேண்ட்...,

 பெண்பிள்ளைகளுக்கான பாவாடை மாதிரி..., 

கடைசியாய்தான்  ஜாக்கெட். 

 இனி தையல் வகுப்புக்கு போறேன்ற பேர்ல அரட்டை அடிக்க முடியாது. இனி பொழுது போக்க வழி!!??

ம்ம்ம்ம் இனி உங்களுக்கெல்லாம் வகுப்பெடுக்குறேனே!!?? ப்ளீஸ்!!!

 

Wednesday, July 16, 2014

சொர்க்க வாசல், மதுரை திருமலை நாயக்கர் மஹால் II - மௌனச் சாட்சிகள்

ரெண்டு வாரங்களுக்கு முன் மதுரை  நாயக்கர் மகாலை சுத்திப் பார்க்க ஆரம்பிச்சோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சுத்திப் பார்க்கலாம்ன்னு நினைச்சு ஓய்வெடுக்க ஆரம்பிச்சு கொஞ்சம் கூடுதலாக ஓய்வெடுத்துவிட்டோம். இன்னிக்கு நாமப் பார்க்கப் போறது நாயக்கர் மகாலின் ஒரு பகுதியான “சொர்க்கவிலாசம்”.

இந்த ”சொர்க்கவிலாசம்” பகுதிதான் மன்னரின் வசிப்பிடமாக இருந்தது. இங்கே கல் பீடத்தின் மேல, யானை தந்தததினாலான ஒரு மண்டபம் இருந்ததாம். இதில் ரத்தினத்திலான ஒரு அரியணை இருந்ததாம். அதன் மீது அமர்ந்துதான் மன்னர் செங்கோல்லாற்றினார் எனச் சொல்லப்படுகிறது.  இந்த மண்டபத்தின் அழகு,  விதானங்களிலும் சுவர்களிலும் வெளிப்படுகிறது. அத்தனையும், வெகுநுட்பமான வேலைபாடுகள் நிறைந்ததாகவும், இதற்க்கு ஈடு இணை வேறு எங்கும் காணப்படவில்லை எனவும் சொல்லபடுகிறது .இந்த அரண்மனைத் தொகுப்பில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தனவாம்.

இங்கே தெரிகிற இந்த வரைப்படம் அரண்மனையின் மொத்த பரப்பளவினை பற்றியக் குறிப்புகள். ஆனா, அவை எல்லாமே தோராயமான அளவுகள். ஏன்னா, நிறைய இடம் சிதிலமடைஞ்சு இருக்கு. சில இடங்கள் புதுபிக்கபட்டு இருக்கு.  திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு ஒரு செவி வழி தகவல் உண்டு.
ஹாலின் உள்புறம் இருந்து செல்லும் நுழைவாயில் வழியாக இந்த சொர்க்கவாசலுக்கு செல்லலாம்.  முழுவதும் கலை நயம் மிக்க சிற்பங்கள், தூண்கள்லாம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. நாம இப்ப ”சொர்க்கவிலாச”த்தினுள் வந்துட்டோம்.

முழுவதும் தூண்களால் ஆனா நாட்டிய சாலையும், எந்த வித பிடிமானமும் இல்லாமல் தூண்ளின் பிடியில் நிற்கும் மேற்கூரையும், உயரமான சாரளங்களும், அந்தக் காலத்து கலையரங்கதினையும், அங்கு நடந்த இசை,நாடக கச்சேரிகளை நம் மனக்கண் முன்னே கொண்டு வருகின்றன.

தூண்களின் பின்னணியில் மஹாலின் அந்தக் காலத்து வரைபடங்களும், புகைப்படங்களும் அலங்கரிக்கின்றன.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 58 அடி நீளமும், 5 அடி விட்டமும் கொண்டது. தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.    
   
இங்கே காணபடுவது எல்லாம் நாயக்க மன்னர் காலத்தில் வழிப்பாடுகளும், பூஜைகளும் செய்யப்பட்ட சிலைகள். மேலும், பல கல்வெட்டுகளும் காணப்படுகிறது.  அதன்மூல்ம் சில செய்திகளும், வரலாறுகளும் நமக்கு தெரியவருகிறது.  


ராணி மங்கம்மா என்னும் அரசி திறம்பட மதுரையை ஆட்சி செய்ததும், அவர் புதுப்புது நகரங்களை உருவாக்கி மதுரையை சிறப்பாக ஆண்டதும் தெரிகிறது.  ராணி மங்கம்மா திருமலை நாயக்கரின் வழித்தோன்றலே!   ராணி மங்கம்மா இன்றும் தென்னாட்டில் சாதாரணமாக நினைவுக் கூறப்படும் பெயர். தன் மகன் அம்மை நோயில் இறக்க,  பேரன் ஒரு வயதுகூட நிரம்பாமலிருக்க,  மங்கம்மாள் 1689ல் ஆட்சிக்கு வந்தாள். 1706 வரை பதினேழு வருடம் ஆட்சிச் செய்த ராணி மங்கம்மா அதிகம் போர்கள் செய்ததில்லை. தென்னாட்டை போரில்லாது காத்தாள். அதனால் செல்வம் பெருகியது. மங்கம்மாள் அதிகமும் கோயில்கள் கட்டவில்லை. ஆனால் சாலைகள் அமைக்கவும், சந்தைகள் உருவாக்கவும் பெருஞ்செலவு செய்தாள். இன்று தென்தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் ராணி மங்கம்மா போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர், சிவகாசி, கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள் ராணி மங்கம்மா கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன.

இந்த நரசிம்ம சிலை நாயக்க மன்னர்களது காலத்தில் உள்ளது என சொல்லப்படுகிறது.  அதேச்சமயம் நரசிம்மர் வழிபாடு நாயக்க மன்னர்களின் முக்கிய வழிப்பாடாக இருந்திருக்கிறது.  அவர்கள் கட்டிய கோவில் தூண்களில் நரசிம்மர் உருவம் கட்டாயம் இருக்கும்.


 செஞ்சி கோட்டை நாயக்க மன்னர்களின் ஆட்சியில் இருந்த போது அவர்கள் கட்டிய கோவிலின் தூண்கள் எல்லாம் நரசிம்ம உருவம் பொரிக்கப்பட்டுள்ளதை செஞ்சிச் சென்றால் காணலாம். மதுரை அழகர் கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இதெல்லாம் இதற்குச் சான்று. 

இந்த மகாலில் மகாவீரர் சிலையும் இருக்கு.  அதேப்போல் நிறைய சமணப் பள்ளிகளும் அழிக்கப்பட்ட வரலாறுகளும் தெரிகிறது.  அவர்களது வழிபாடுகளில் நாகம் முக்கிய பங்கு வகித்தமையும் தெரிகிறது. நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோவிலும் ,ஒரு சமணப்பள்ளி எனவும் அதை மாற்றி “நாகராஜருக்கு கோவில் எழுப்பினதாகவும் சொல்றங்க.  இதற்கு சான்று 'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகாவீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.


அதேப்போல, கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கோவிலைக் குறிப்பிடுகிறது. இன்று அவரது சிலை மஹாலின் அருங்காட்சியத்தில் மட்டுமே. 

இது இசக்கி சிலை என அழைக்கப்படும் கிராமதேவதையின் வழிபாட்டு சிலை என இங்குள்ள குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிராம தேவதைகள் எல்லாம் நடுகல் வழிபாடு வகையை சார்ந்தது என சில கருத்துக்களும் உண்டு.

இது உடைந்த பீரங்கியின் நுனிப்பாகம்.  இது எந்த போரில்,  யாருக்கு எதிராக எப்பொழுது உபயோகப்படுத்தப்பட்டது போன்ற குறிப்புகள் இல்லை.   

இங்கே இருக்கும் கல்வெட்டுகளில் அண்டை ராஜ்யங்களான திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும்  மற்ற ராஜ்யங்களுக்கும் கொடுக்கப்பட்ட கொடைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் முதற்கொண்டு அவர்களது ஆட்சிமுறை, அரசியல் முறை எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.  மேலும் ஆங்கிலேயர் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளும் மதராசபட்டினத்து அரசியல் நிகழ்வுகளும் குறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் இங்க இருக்கு.
  
இது அருங்கட்சியத்தின் உட்புற தோற்றம்......,


இது, நாடகச் சபையின் உட்புற தோற்றம்...,

அந்தக் காலத்தில் உபயோகப்படுத்திய ஓலைச்சுவடிகளும், எழுத்தாணிகளும் காண்ணாடிப் பேழைக்குப் பின்னே காட்சிக்காக....,


அருங்காட்சியதைதை விட்டு வெளியே வரும் போது இருக்கும் நாயக்கர் மஹாலின் தோற்றம்.

வேலைப்பாடுகளை உடைய நாயக்கர் மகாலின் உத்திரத்திலுள்ள கலை வேலைப்பாடுடைய சித்திரங்கள்.

பகல் பொழுதுகளில் நாயக்கர் மகாலின் அழகினை பார்த்தா மட்டும் போதுமா!? இரவு நேரத்தில் இம்மாகால் எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா!? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்க....., பார்க்கலாம்.