Monday, October 31, 2016

சஷ்டி விரதம் உருவான கதை - பக்தி

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. வாழ்க்கையில் நாம் எதற்கு ஓடிக்கொண்டு இருக்கிறோம் / எதற்கு சம்பாதிக்கிறோம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பது குழந்தை தான். முன்ஜென்ம வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, "கந்தசஷ்டி விரதம்". குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். அதிகாலையில் எழுந்து நீராடி பூஜை அறையில் திருவிளக்கேற்றி கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுராகவசம், கந்தர் அலங்காரம் படிக்கலாம்.தெரியாதவர்கள் முருகன் பெயர் சொல்லி கும்பிடலாம். 
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். சஷடி தேவி என்பவள் பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான்.

திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை அழகிய உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவிதேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்விரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள்
ஸ்கந்த சஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் 4.30 மணியில் இருந்து 6.00 மணிக்குள் நீராட வேண்டும். பகலில் பழம் பால் மட்டுமே உண்ணவேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம். முருகருக்குரிய மந்திரங்களை பாடல்களை நாள் முழுவதும் பாராயணம் செய்து வருதல் நலம். ஓம் சரவணபவாய நம என்று ஜபித்து வரலாம். திருப்புகழ்,ஸ்கந்த சஷ்டி கவசம், போன்ற கவசங்களை பாராயணம் செய்யலாம். அருகில் உள்ள முருகர் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்து வருதல் வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து விட்டு வீட்டில் பூஜையறையில் முருகரை வழிபட வேண்டும். முடிந்தால் கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இதன் பின்னர் 8 மணிக்கு மேல் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இவ்வாறு ஆறுநாட்கள்செய்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் எனும் நிகழ்ச்சி முருகர் கோயிலில் தரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வர புத்திர தோஷம் விலகி புத்திர பாக்கியம் கிடைக்கும் குழந்தை முருகர் அருளால் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சஷ்டி விரதம். இதையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனுஷ்டிக்க குழந்தை பிறக்கும்.

Sunday, October 30, 2016

கேதார கௌரி விரதம் - பக்தி

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா வில்லினில் பாட..............வந்தருள்வாய் பூமித்தாயே................

அதாகப்பட்டது என்னானா..... இன்னிக்கு நம்ப பொம்மனாட்டாகள்லாம் "கேதார கௌரி விரதம்" இருக்காங்க... அது எதுக்குன்னு சொல்லப்போறேன்..

 கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடல் என்பதை உணர்த்தும் விரதம்தான் கேதார கௌரி விரதம்.

ஆயுள் முழுக்க ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அப்படி இருக்க நினைக்குறவங்க இந்த விரதமிருந்தா... சிவன் அர்த்தநாரீஸ்வரரா அவதாரம் எடுத்துப்போல உங்க ஆம்படையானும் தங்களை தன்னில் பாதியா ஏத்துப்பார்ன்னு நம்புறாங்க... 

"கேதாரம்" என்னும் இமயமலைச்சாரலில் சக்திதேவி  "கௌரி" என்னும் அவதாரமெடுத்து சிவனின் இடப்பாகத்தை பெற்றதால இதுக்கு "கேதார கௌரி விரதம்"ன்னு பேரு...

இந்த விரதமிருந்தா கணவன், மனைவி பிரிஞ்சிருந்தா ஒண்ணு சேர்வாங்க. அவங்களுக்குள் அன்பு பலப்படும்.. குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு ஐதீகம்.

சக்தி தேவி ஏன் இந்த விதமிருந்தாங்கன்னு அதுக்கொரு கதையிருக்கு...


தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது எத்தெய்வத்தையும்   வணங்கமாட்டார்.  இதனால் , நாரதர் கலகத்தால்... முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார்.  இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்... தன்னை பிருகு முனிவரும், சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோவத்துடன்  பூலோகம் வந்தார்.


சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி... அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும்.

அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம்

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.


இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல்  உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கிவீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.

இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார் என ஐதீகம்.

இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அளிப்பார் எனக்கூறி


வந்தனமாம் வந்தனம் வந்த சனத்துக்கு நன்றியாம்

Saturday, October 29, 2016

தலை தீபாவளி....தீபாவளி கவிதை....

வந்தது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் மணமகனும்...,
தேவதையின் வரவாய் புது பெண்ணும்...,
தாய் வீட்டு அழைப்பிற்கேற்ப,
தாய் வீடு செல்லும் வைபவம்...,
சிறகில்லா சிட்டாய் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு செல்ல!!
தாயின் அன்பும்..., தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!
இப்போதும் கிடைக்கிறது..., ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!! வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.
ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!
மாப்பிளையும் , புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.
பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!
இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை குடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!
மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.
பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!
அவளும், அவரின் காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.
இருவரும், எழுந்து  கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!
பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,
காலை உணவுக்கு தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும், கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.
காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள் அவளிடம்.
இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,
பட பட பட்டாசுவைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!
விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,
ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,, தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
இந்த படையலை!!
கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!
கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!

Friday, October 28, 2016

தித்திக்கும் தீபாவளி - தீபாவளி ஸ்பெஷல் .

தீபாவளின்னாலே சின்னதுல இருந்து பெருசு வரைக்கும் உற்சாகம் பிச்சுக்கும். எல்லா கடைகள்ல தீபாவளி ஆபர் போடுவாங்க. இனிப்புக்கடைல புதுப்புது இனிப்புகள் தயாராகும்.. புதுப்புது பட்டாசுகள் உருவாகும். தெரியுதோ தெரியலியோ பெண்கள் வீட்டுல இனிப்புகள் செய்றேன்ன்னு புருசன்மார்களை டெஸ்ட் எலியாக்குவாங்க... பிள்ளைங்க துணி வாங்க, ஆல்ட்ரேசன்ன்ன்னு கடையிலேயே பழியா கிடைப்பாங்க...

எல்லாம் சரி, இந்த தீபாவளிய ஏன் கொண்டாடுறோம்ன்னு தெரிஞ்சுக்கலாமே!


'தீபம் ' ன்னா  'விளக்கு '. 'ஆவளி' ன்னா 'வரிசை '.அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி , இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைக்குறதாகும்.  இப்படி செய்யுறதால, நம்ம மனசுல இருக்கும் அகங்காரம் , கோபம், பொறாமை  போன்ற கெட்ட குணங்களை எரிச்சுடனும் என்பதையும் குறிக்குது. அதனால்தான் இதற்கு "தீபாவளி"ன்னு பேர் வந்துச்சு..

தீபாவளி கொண்டாடுறதுக்கு  நிறைய காரணங்ளை நம்  இந்து புராணங்கள் கூறுகின்றன. அதுல சிலதைப் பார்க்கலாம் !!!
நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.


மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,
இனி மற்ற காரணங்களை பார்க்கலாம்....

 * இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வரும்போது அந்நாட்டு மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்ற நாள்ன்னு சொல்லப்படுது...
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகெளரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக்கொண்டு, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக உருவெடுத்த நாள் தீபாவளியாக  கொண்டாடப்படுவதாக , ஸ்கந்த புராணம் சொல்லுது..

உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.
சீக்கியர்களின் தீபாவளி

1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீமாவளி


சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.
 கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர் . இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.

வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.
சகோதரிகளுக்கு பரிசு:

தமிழகத்தில், சிறுவீட்டுப் பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம் விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள். வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான்.


தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. வடமாநிலங்களில் தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை சகோதரர்கள் வழங்குவார்கள். பெண்களும் சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை செய்கிறார்கள். அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.
பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் .

அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .

பரிசுகள் தந்து மகிழ்வர் . பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் .
தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு .
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு
காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும் 
அந்த நீராடலைத்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும்....
தலைக்கு தேய்த்து குளித்து தீபாவளி கொண்டாடுபவர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

Thursday, October 27, 2016

கடந்த கா(லம்)தல்.....சிறுகதை

இன்னும் எத்தனை தூரம்தான் நடக்கனும்?! லக்கேஜ்லாம் அனுப்பிய வண்டியிலேயே நாமும் போயிருக்கலாம்டா.
சுமி! நான் பொறந்து வளர்ந்த ஊருக்கு பதிமூணு வருசம் கழிச்சு வரேன்... நான் மட்டும் வந்தா பரவாயில்ல. நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட நீயும் வர்றே! என்னைப் பத்தி நான் ஒளிவுமறைவில்லாம சொல்லியிருக்கேன். இருந்தாலும், அந்த இடங்களைலாம் உனக்கு காட்டனும்ன்னு  ஆசை... அதான்...

ம்க்கும். பெரிய ஹிஸ்டாரிக்கல் ஸ்பாட். அப்புறம் வந்து சுத்தி காட்டக்கூடாதா?! ட்ரெயின் ஜர்னி செஞ்சது இடுப்புலாம் வலிக்குதுடா.

வீட்டுக்கு போனதும் அம்மாவை பார்த்து, ஆசீர்வாதம் வாங்கிட்டு, நல்லா வெந்நீர் வெச்சு குளிச்சா சரியாகும்....


சுமி, இதான் நான் படிச்ச ஸ்கூல்.. அப்பலாம் இந்த மாதிரி கட்டிடம் இல்ல... ஓடு வேய்ஞ்ச கூரைதான்... இந்த குளத்துலதான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன்.  அந்தா தெரியுது பாரு அந்த மைதானத்துலதான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்...
பதினாலு வயசுப்பிள்ளையாவே மாறிட்டேன் சுமி... இங்க ஒரு பூவரசம் மரம் இருக்கும்.. அதுல சம்பத்து மாமா தூக்கு போட்டுக்கிட்டாரு.... இந்த கண்மாயில துணி ...

துவைச்சிட்டு பக்கத்துல இருக்கும் குட்டிச்சுவத்துல உக்காந்து தம்மடிச்சீங்க... சுடுகாட்டு மயானத்து புளியமரத்தடியில் தண்ணியடிச்சீங்க.... அந்த குட்டிச்சுவத்துக்கிட்ட ரெக்கார்டு டான்ஸ் பார்த்தீங்க.. எத்தனை முறைடா சொல்வே?! முடில சாமி...

சுமி, இந்த மரப்பொந்துலதான்.... எதோ சொல்ல வந்து தயங்கியவனை...

வர்றது யாரு?! முருகேசனா?! எனக் களைத்தது ஒரு குரல்.

ஆமா! நீங்ங்ங்க!பெட்டிக்கடை குமாரசாமி பெரியப்பாவா?!


ஆமாண்டா படவா! பழசைலாம் மறக்காம இருக்கியே! நல்லாயிருக்கியா தம்பி!? ம்ம்ம்  அப்பன் அடிக்கு பயந்து ஓடி.... பதிமூணு வருசம் கழிச்சு ஊருக்கு வர இப்பதான் தோணுச்சோ!! எதுக்கு அடிச்சான்னு சொல்லாம அவனும் போய் சேர்ந்தான்.. ம்ம் எல்லாம் விதி... உங்கம்மா காத்துக்கெடக்கு. சீக்கிரம் வீட்டுக்கு போ.
வீட்டுக்கு போனதும் அம்மா காலில் விழுந்து, அழுது, அரற்றி, குளிச்சு, அம்மா சமைத்த சாப்பாட்டை உண்டு.... இளைப்பாற திண்ணையில் வந்து உக்காந்தான். இதற்குள் விசயத்தை கேள்விப்பட்ட ஊரார் அத்தனை பேரும் வீட்டு வாசலில் வந்திருந்தனர்.

இத்தனை நாள் எங்கிருந்தப்பு?!

எதாவது படிச்சியா?! ஆயி, அப்பனில்லாத புள்ள எது படிச்சிருக்கு?

இந்த புள்ளைய எங்கய்யா புடிச்சே?! யாரு?! அதுக்கு பெத்தவங்க இருக்காங்களான்னு கேட்ட கேள்விகளுக்குலாம் பொறுமையாய் பதில் சொல்லி வந்தவனை கூட்டத்திலிருந்த இரண்டு கண்கள் முருகேசனை நிலைக்குலைய வைத்தது.. முக்காடிட்டிருந்த முகத்திலிருந்த அக்கண்களில்தான் எத்தனை கொலைவெறி?! யாரந்த பெண்?! என நினைவடுக்குகளை கிளறிப்பார்த்தான்.
ம்ஹூம்.. ஏதும் சிக்கவில்லை...


ம்ம்ம கேள்வி கேட்டு எம்புள்யை கொடைஞ்சது போதும்... எல்லாரும் போங்க. எய்யா முருகேசு! உம்பொஞ்சாதிய கூட்டி உள்ளாற போய் படு. தெரிஞ்சு வந்தியோ தெரியாம வந்தியோ! ஆனா, நல்ல நேரத்துலதான் வந்திருக்கே.  நாளைக்கு ஊருணி பொங்க  வைக்குறாங்க.  காலைல முனீஸ்வரன் கோவில்ல பொங்க வைக்கனும். வெள்ளன எந்திரிக்கனும் என முணுமுணுத்தவாறே ஆடு, மாடுகளை கொட்டடியிலடைக்க போனாள்...
அதான் சுமி தெரில. ஒருவேளை புதுசா ஊருக்குள் வந்ததால என்னை அடிச்சதோ என்னமோ?! சரி வா! வீட்டுக்கு போகலாம் என படியேறினான்...

ஏண்டி, இப்டி வயசான காலத்துல என்னை பாடாய் படுத்துறே?! உன்னாக்கூட பொறந்த ஆணும், பொண்ணும் கல்யாணம் கட்டி புள்ள குட்டியோட போகுதுங்க. பத்து வருசமா உன் தலைமுடிய நீயே வெட்டிக்கிட்டு, நகை நட்டு பேடாம, சொந்தங்களோடு சேராம பைத்தியக்காரி மாதிரி இருக்கே! இத்தனை நாள் நல்லாத்தானே இருந்தே! எத்தினி வருசம் கழிச்சு வந்திருக்கான் முருகேசு அவனை ஏண்டி அடிச்ச?! ரெண்டு பேரும் ஒண்ணு மண்ணா சுத்துன கழுதைங்கதானே? அவனை ஏன் அடிச்சே! அவனை அடையாளம் தெரிலயா ரேனு?!
ரேனு...... 

சடாரென திரும்பிப் பார்த்தாவன் விழிகளை, உரசிச்சென்ற ரேனுவின் கசிந்த விழிகள் கோவில் குளக்கரையிலிருந்த ஆலமரப்பொந்தை நோக்கிச்சென்றது....

அரைக்குறையாய் ரேணுவிடம் விளையாடிய அப்பா அம்மா விளையாட்டும்அதைகண்டு அடித்த அப்பாவும்.... ஊரைவிட்டு வரும்போது என்னிக்காயிருந்தாலும் நீதான் எம்பொஞ்சாதியென... ரேனுவிடம் கையடித்து செய்த சத்தியத்தை நினைவுப்படுத்தியப்டி ஆக்ரோசமாய் அசைந்துக் கொண்டிருந்தது குளத்துக்கரை ஆலமரம்!!