Friday, January 31, 2014

ஹரியும் சிவனும் ஒன்று!! - புண்ணியம் தேடி ஒரு பயணம்

ஒரு தேசத்தை ஆள்கிற மன்னன் தன் மக்களின் தேவைகள், தன் படைபலம், வருமானம், செலவை தெரிந்து வைத்திருப்பதுப் போலவே அடுத்த தேசத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த நாட்டு அரசன் தன் மீது படை எடுத்து பொருளையும், பெண்களையும் அபகரித்துப் போனால் என்ன செய்வது என முன்யோசனையோடு ஏற்பாடு செய்து எச்சரிக்கையுடன் இருப்பவனே உண்மையான அரசன்.  அடுத்த நாட்டில் இருக்கும் சிறப்புகளெல்லாம் தங்கள் நாட்டுக்கும் கொண்டு வரவேண்டும் என துடிப்புடனும் இருக்க வேண்டும். 

அதனாலதான் ஒருத்தரை ஒருத்தர் போட்டிப் போட்டிக்கொண்டு அரண்மனை, கோவில், சத்திரங்கள், குளம், ஏரின்னு மக்களுக்கு நல்லது செய்தார்கள். நெல்லோடு சேர்ந்து புல்லும் வளர்வதை போல ஆன்மீகம், கலைகளை வளர்த்தலோடு பொறாமையும் சேர்ந்து வளர்ந்ததால் சண்டையிட்டு தாங்கள் விருப்பப்பட்டு கட்டிய கோவில், அரண்மனை, ஏரிகள் பாழாவதற்கு அவர்களே காரணமாயினர்.


புண்ணியம் தேடிப் போற பயணத்துல இன்னிக்கு நாம பார்க்கப் போறது எங்க ஊரு கோவிலான அருள்மிகு சிவவிஷ்ணு ஆலயத்தை.  எல்லா ஊருலயும் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் இருந்தாலும், அவை தனித்தனியாதான் இருக்கும். ஆனா, ஒரு சில ஊர்களில்தான் ஒரே கோவிலில் ரெண்டு கடவுளுக்கும் தனித்தனி கருவறை, கொடிமரத்தோடு   சந்நிதி இருக்கும். அப்படிப்பட்ட சில ஊர்களில் எங்க ஊரும் ஒண்ணு!!

 

முன்னலாம் ஆரணி நகரம் அடர்ந்தக் காடாக இருந்துச்சு. இப்பகுதியில் உத்தராதி மடத்தின் குருவான ஸ்ரீசத்திய விஜய சுவாமிகள் ஜீவ பிருந்தாவனத்தை எதிர்பார்த்தபடி தனது யாத்திரையைத் தொடங்கினார். அவர் சென்ற வழியில், கமண்டலநாக நதிக்கரையில் ஐந்து தலை நாகமானது அவர் எதிரே தோன்றி அடையாளம் காட்டியது. அங்கே ஸ்ரீசத்திய விஜய சுவாமிகளின் சிஷ்யர்களால் பிருந்தாவனமும், மிகப்பெரிய அரண்மனையும் கட்டப்பட்டு "சத்திய விஜய நகரம்' என்ற ஊர் நிர்மாணிக்கப்பட்டது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சத்திய விஜய நகரத்தை ஜாகீதார் என்ற மன்னன் ஆண்டு வந்தார். புரட்டாசி மாதத்தில் திருமலை திருவேங்கமுடையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஜாகீர்தார் திருமலையப்பனை சேவிக்க முடியாமல் போனதால் மிகுந்த மனக்கவலை அடைந்தார். அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய திருவேங்கடமுடையான் ""நானே உம்மைக் காண வருகிறேன்'' என்று கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில் நேபாளத்திலிருந்து, வேறொரு ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட சாளக்கிராம திருமேனிகொண்ட சிலா ரூபமான ஸ்ரீநிவாஸ மூர்த்தியும், பச்சைக் கல் சிலா ரூபமான பத்மாவதி தாயார் விக்ரகமும் சத்திய விஜய நகரத்தைக் கடந்து எடுத்துச் செல்லும்போது.. வண்டியோட்டி சிரமப் பரிகாரம் செய்துக் கொண்டு வண்டியை கிளப்ப முற்படும்போது வண்டி ஓரடி கூட நகராமல் நின்றது.


பலவாறு முயற்சிச் செய்தும் பயனில்லை. இங்கிருந்த சிலைகளை வேறு வண்டிக்கு மாற்ற முயற்சிச் செய்தபோது சிலைகளைத் தூக்க முடியாததைக் கண்டு திகைத்து நின்றனர். இதனைக் கேள்வியுற்ற மன்னர் ஜாகீர்தாருக்கு கனவில் எம்பெருமான் கூறியது நினைவில் வந்தது. எனவே அங்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பி பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநிவாஸ மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பவித்ர உற்ஸவம், ஸ்ரீஸுக்த  ஹோமம், திருப்பாவாடை உற்ஸவம், சொர்க்க வாசல் திறப்பு ஆகியவை நடைபெறுகின்றது. ஒவ்வொரு புரட்டாசி 4 வது வாரம் இங்கு எல்லா வித பழங்கள், காய்கறிகள், சாத வகைகள் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அவை பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுது.
சீனிவாசப் பெருமாள் கோவில் பக்கத்துலயே, அவரின் தீவிர பக்தனான அஞ்ச்னை மைந்தன் ஆஞ்சினேயர் சுவாமிகளுக்கு தனி சன்னிதி இருக்கு.


ஹரிக்கும், சிவனுக்கும் பிறந்தப் பிள்ளையான ஐயப்பனுக்கும் தனிச் சன்னிதி. கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் இங்கு வெகு விமர்சையாகப் படிப் பூஜை நடத்தி அன்னதானமும் நடக்குது.


நாகக் கன்னிக்கும் கூட சிறு சன்னிதி.

கிராம தெய்வங்களுக்கும் இங்கு இடமுண்டு...,


ஆரண்யம் என்றால் காடுன்னு பொருள். அடர்ந்த காடுகளும், அழகிய சோலைகளும் நிறைந்த இடம்ன்றதாலதான் இந்த ஊருக்கு ஆரணின்னு பேர் வந்தது. அந்த இயற்கை வளம் பொங்கிய காட்டைத்தேடி முனிவர்களும், தவசிகளும் இங்கு வந்தனர்.
சோழ தேசத்தை ஆட்சி செய்த மன்னன், நடுநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தான். ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியைக் கண்டு, அங்கே சூழ்ந்திருந்த அமைதியை உள்வாங்கி மகிழ்ந்தான்.. ‘இந்த இடம் மிகவும் சாந்நித்தியமான இடம். இங்கே முனிவர்கள் பலர், கடும் தவம் செய்திருக்கிறார்கள். சிவகணங்கள் அரண் போல் இந்த இடத்தைக் காத்து, சிவனருளை நாம் பெறுவதற்கு பேருதவி செய்து வருகின்றன’ என்று அமைச்சர் பெருமக்களும் அந்தணர்களும் சொல்ல… மகிழ்ந்து போனான் மன்னன்.

சேர தேசம், சோழ நாடு, பாண்டிய தேசம் என்று சொல்வதுபோல, விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் முதலான பகுதிகளை நடுநாடு என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில், அந்தப் பக்கம் ஆரணியையும், வேலூரையும் பார்த்து வியந்த மன்னர்கள் உண்டு. 

இவ்வூரின் அழகையும், இவ்வூர் மக்களின் சாத்வீகக் குணத்தையும் கண்டு அகமகிழ்ந்த மன்னன் இங்கு சிவப்பெருமானுக்கு ஒரு சன்னிதி எழுப்பி வணங்கினான். 
அறுபத்தி மூன்று நாயன்மார்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க எழுப்பப் பட்ட சன்னிதி. சிவராத்திரி, கார்த்திக தீபம், பிரதோசம் போன்றவை இக்கோவிலில் சிறப்பாக் கொண்டாடப் படுது. ஒவ்வொரு பிரதோசத்துக்கும் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. 


ஆரணி சுற்றுவட்டாரத்தில் கமண்டல நாக நதி ஓடுது. முன்னலாம் இருகரையும் தொட்டு தண்ணி ஓடும். இப்ப மழையில்லாததால ஆற்றில் தண்ணி இல்ல. தண்ணியே இல்ல, அப்புறம் எதுக்கு ஆறுன்னு நம்மாளுங்க யோசிச்சு!! குப்பையைக் கொண்டுப் போய் கொட்டுறதும், ஆத்துல மணலெடுப்பதும் நடக்கும். அப்படி குப்பைகளை அகற்றவும், மணல் தோண்டும்போதும் சிலைகள் கிடைப்பது அடிக்கடி நடக்கும். அப்படி கிடைக்கும் கற்சிலைகளை இக்கோவிலில் வச்சிடுவாங்க. ஐம்பொன் சிலைகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்குக் கொண்டுப் போய்டுவாங்க.




நவக்கிரக நாயகர்களுக்கு தனிச் சன்னிதி. இச்சன்னிதிக்கும், எனக்கும் ஒரு தொடர்புண்டு. 

நான் அப்புவை வயத்துல சும்க்கும்போது இந்த சிவ - விஷ்ணு ஆலயத்துல இருந்து 1 கிமீ தூரத்துலதான் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம். மூத்தது ரெண்டும் பொண்ணாய் பொறந்துடுச்சு. அடுத்தது பையனாய் பிறக்கட்டும்ன்னு வேண்டிக்கிட்டு, நவக்கிரகத்துக்கு விளக்கேத்தி வான்னு அப்பா சொன்னார். தினமும் சாயந்தரம் கோவிலுக்குப் போய் வருவேன். அதாவது புண்ணியத்துக்கு புண்ணியம். நடந்த மாதிரியுமாச்சு.

அப்பு எதாவதுக் கிறுக்குத்தனம் பண்ணால், உடனே, “உன்னை கோவில்லப் போய் நவக்கிரகத்தைச் சுத்தச் சொன்னால் நீ ஆஞ்சினேயரை சுத்தி வந்திருக்கே. அதான், உன்புள்ளை இப்படிப் பொறந்திருக்குன்னு” அப்பா, அம்மா, பசங்க கிண்டல் செய்வாங்க.



எங்க ஊரு கோவிலை நல்லா சுத்திப் பார்த்து புண்ணியம் தேடிக்கிட்டீங்களா!?

இனி, அடுத்த வாரம் வேற ஊர் கோவில் பத்திப் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்.

Thursday, January 30, 2014

அலங்கார சிடி - கிராஃப்ட்

பெரியவ தூயாவோடு சின்னதுங்க ரெண்டுமே ஒத்துப் போகும். சின்னதுங்க கோவம், ஆசைக்கேத்த மாதிரி, தூயா பேலன்ஸ் பண்ணி நடந்துப்பா. ஆனா, சின்னதுங்க ரெண்டுத்துக்கும் எப்பவுமே ஆகாது. சின்னவ ஃபேன் போடச் சொன்னா, அப்பு நோட்டுல இருக்கும் பேப்பர்லாம் பறக்குது வேணம்ன்னு சொல்வான். 

அப்பு ஃபேன் போடச் சொல்லும்போது எனக்கு குளிருதுன்னு சின்னவ சொல்லுவா. அவனுக்கு பூரி சாப்பிட ஆசை வந்தா, சின்னவளுக்கு தோசை வேணும். அவனுக்கு வேலூர்ல துணி எடுத்தா சின்னவளுக்கு சென்னைக்குப் போகனும். இப்படியே ரெண்டும் போட்டிப் போட்டிக்கிட்டு சண்டைப் போடும். 

அவங்க சண்டை முடிவுல “நீ சரியாய் இருந்தா எல்லாம் சரியாய் இருக்கும்”ன்னு எனக்குதான் டோஸ் விழும். டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ்,ஸ்கூல் போய் வரும்போதே இந்த லட்சணம்ன்னா லீவு விட்டா என் கதி!?

அதான் அரைப் பரிட்சை லீவுக்கு கிராஃப்ட் செய்ய தேவையானப் பொருட்களை வாங்கி வந்து கொடுத்திட்டேன். தினம் ஒண்ணு செய்யனும்ன்னுச் சொல்லி..., எப்படி செய்யனும்ன்னும் சொல்லியும் கொடுத்திட்டேன். அப்படி லீவுல பசங்க கிளாஸ் பெயிண்டிங் கொண்டு சிடில செஞ்ச டெகரேஷன் தான் இன்னிக்கு பார்க்கப் போறது....,

தேவையானப் பொருட்கள்:
உதவாத பழைய சிடி
கிளாஸ் பெயிண்ட்
அவுட் லைனர்
சிடி மார்க்கர் பேனா


தேவையானப் பொருட்களை எடுத்து வச்சுக்கோங்க. சிடில தூசு இல்லாம சுத்தமா துடைச்சு வைங்க.

உங்களுக்கு பிடிச்ச டிசைனை சிடில சிடி மார்க்கர் பேனாவால வரைஞ்சுக்கோங்க..., வரையத் தெரியனும்ன்னு அவசியமில்ல. நமக்குத் தெரிஞ்ச கோலத்தைக் கூட போட்டுக்கலாம். இல்லாட்டி ட்ரேஸ் கூட எடுத்த்க்கலாம். அப்படி டிரேஸ் எடுக்கும்போது கருப்பு கார்பன் யூஸ் பண்ணுங்க.

அவுட் லைனர் கொண்டு நாம வரைஞ்சிருக்கும் டிசைன் மேல போட்டுக்கோங்க. அவுட் லைனர் டியூப் ல இருக்கும். அதை லேசா அழுத்திக்கிட்டே அப்படியே டிசைன் மேல வரைஞ்சு ஒரு பத்து நிமிசம் காய விடுங்க.

அவுட்லைன் காய்ந்ததும், பொருத்தமான கிளாஸ் பெயிண்ட் கலரை போடுங்க. இதுக்கு பிரஷ் தேவையில்ல. அந்த பாட்டில்ல இருந்து அப்படியே போடலாம். அப்படிப் போடும்போது, குமிழ் வராம பார்த்துக்கோங்க. அப்படி குமிழ் இருந்தா ப்யிண்ட் காய்ஞ்சதும் குமிழ் உடைஞ்சு அந்த இடம் பெயிண்ட் இல்லாம அசிங்கமா இருக்கும்.

அலங்கார சிடி ரெடி. சிடி நடுவில் இருக்கும் ஓட்டை மேல் பெப்சி, கோக் பாட்டில் மூடியை வச்சு அதன் மேல மெழுகு வத்தி ஏத்தலாம்.  இல்லன்னா சின்னதா குங்குமச் சிமிழ் வச்சு பிக்ஸ் பண்ணி வீட்டுக்கு வரும் கெஸ்ட்களுக்கு கொடுக்கலாம். இதையே சுவத்துலயும் தொங்க விடலாம்.


வலதுப்பக்கம் இருக்குறது அப்பு செஞ்சது, இடதுப்பக்கம் இருக்குறது சின்னவ செஞ்சது, கிளாஸ் பெயிண்டிங் செட் 65 ரூபாய்லயும், 85 ரூபாய்லயும் கிடைக்குது. 65 ல 6 கலரும், அவுட்லைனும் கிடைக்குது. 85 10 க்லரும் அவுட்லைனும் கிடைக்குது.

தேவையில்லாத சிடிக்களை குப்பைலதான் போடுறோம். அதனால சுற்றுச்சூழல் பாதிக்கப்படுதுன்னு பெரியவங்கலாம் சொல்றாங்க.அதனால, தூக்கியெறியாம இப்படி எதாவது செஞ்சு பயன்படுத்தலாமே! சுற்றுச்சூழல் பாதிப்புல இருந்து உலகை காப்பாத்த ஏதோ நம்மால முடிஞ்சது!!!

மீண்டும் அடுத்த வாரம் புதுசா ஒரு கிராஃப்ட் செய்யுறதை பார்க்கலாம்,

டாட்டா! பை பை, சீ யூ....,

Wednesday, January 29, 2014

எங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்

உள்ளுர் சாமிக்கும், உள்ளூர் ஆட்டக்காரனுக்கும் எப்பவும் மதிப்பில்லேன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கு. அதுப்போலதான் எங்கெங்கோ இருக்கும் அரண்மனை, நினைவு மண்டபங்கள், கட்டிடங்கள் பத்திலாம் பதிவா போடுறேன். ஆனா, எங்க ஊருலயும் ஒரு அரண்மனை இருக்கு. அது என் வீட்டுல இருந்து 3வது கிமீல இருக்கு. அதைப் பதிவா போடனும்ன்னு இத்தனை நாள் தோணாமலே போய்ட்டுது. என்னமோ திடீர்ன்னு ஞானோதயம் வரவே கேமராவை தூக்கிட்டு கிளம்பிட்டேன். 
வரலாற்று சிறப்புகள் இந்த கட்டிடத்தில் புதைந்திருந்தாலும், அதெல்லாம் தூக்கி சாப்பிடும் இன்னொரு சிறப்பு இந்தக் கட்டிடத்தில் இருக்கு. அது என்னன்னு பதிவோட கடைசில சொல்றேன். இப்ப சொன்னா, இப்பவே நீங்க எஸ்கேப்பிடுவீங்க. அதான். இனி பதிவுக்குள் போகலாம்...,
ஆரணி டூ செய்யாறு, காஞ்சிப்புரம், சாலையில் 5வது கிலோ மீட்டர்ல சத்திய விஜய நகரம்”ன்ற இடத்துல “ஜாகீர்தார் அரண்மனை”ன்ற பேர்ல பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளைத் தாங்கி மௌனமாய், நிக்குது. மௌனமாய் நின்னாலும் பரவாயில்ல!! தன்னோட மூச்சை எப்ப வேணுமினாலும் நிறுத்திக்குவேன்னு பயமுறுத்திக்கிட்டே இடிப்பாடுகளோடு நிக்குது.

வைரமுத்து தன்னுடைய பிறந்த ஊரைப் பத்தி ஒரு கவிதையில் “என்னை வளர்த்த ஊர் என்பதன்றி அதற்கு எந்த வரலாறும் இல்லை”ன்னு சொல்லி இருக்கார். ஆனா, நான் கல்யாணம் கட்டிக்கிட்டு, வாழும் ஊரான ஆரணியை அப்படி சொல்ல முடியாது.  தொண்டை மண்டலத்தின் முக்கிய ஸ்தலமாக ஆரணி இருந்திருக்கு.
முதலாம் ராஜராஜனின் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு இக்கோட்டைக்கு.... இந்தக் கோட்டைக்கும் சிவாஜி படையெடுப்பு, சம்புவராயம், விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாப் ஆட்சிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு
யாரை!? எதற்காக!? ஏன்!? என உண்மை தெரியாமலேயே மருதநாயகமும் ராபர்ட் கிளைவும் ஓரணியில் நின்று, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்த “சுபான்ராவ்” என்ற மன்னன் மீது போர் தொடுத்த வரலாற்றைக் கொண்டது இக்கோட்டை. 
இங்கு நடந்த போருக்குப் பின், ஆற்காடு நவாபின் சூழ்ச்சி புரிந்து, ஆங்கிலேயருக்கு எதிராய், ”சுபான்ராவ் மன்ன”னுடன் நட்பாகி போராட்டத்தில் இறங்கினார் மருத நாயகம். மருத நாயகத்தின் எழுச்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து போரில் அவனை சிறைப் பிடித்தனர்.   அப்படி சிறைப்பிடிக்கப்பட்ட மருதநாயகத்தை தூக்கிலிட தீர்ப்பு வந்தது. 
கதை எங்கெங்கோ திசை மாறுகிறது. மருத நாயகத்தின் கதையை வாய்ப்பு கிடைப்பின் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.

மருத நாயகத்தை தூக்கிலிடும்போது அவரின் உயிர் பிரியாமல் இரண்டு முறை கயிறு அறுந்து விழுந்தது. நான் யோகக்கலையை கற்றவன், நீண்ட நேரம் கழுத்தை உப்ப வைத்து என்னால் தூக்கிலிருந்து மீள முடியும்ன்னு மருத நாயகத்தின் பேச்சைக் கேட்ட ஆங்கிலேயர்கள் முன்னிலும் வலுவான கயிற்றைக் கொண்டு நீண்ட நேரம் தூக்கிலிட்டு மருதநாயகத்தை கொன்றார்கள். 

அன்றிரவு மருதநாயகம் பழி தீர்க்கப்போவதாய் எச்சரிப்பதுப் போல ஆங்கிலேய கவர்னர் கனவு கண்டதைத் தொடர்ந்துப் புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி எடுத்து ஒவ்வொரு பாகமாய் வெட்டி எடுத்து ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பாகமாய் வீசினர். அப்படி வீசப்பட்ட மருதநாயகத்தின் இடது கால் கிடைக்கப்பட்ட சுபான்ராவ் மன்னன் தன் நண்பனுக்காய் கட்டிய கல்லறையின் வாயிலைதான் மேல் படத்தில் காண்பது. 
மேல் படத்தில் இருப்பது பல்வேறு சட்டம், வழக்குகளைச் சந்தித்த ராஜ தர்பார். இன்று, சீந்துவார் இன்றி புதர் மண்டிப் போய் இருக்கு. அந்த ராஜ தர்பார் சுவத்தில் இந்த அரண்மனையில் நடந்த அணிவகுப்புகள், ஆங்கிலேயர் வருகை, மன்னர் குடும்பத்தின் புகைப்படங்கள் இருக்கு. உள்ளப் போய் படமெடுக்கலாம்ன்னு பார்த்தா பெரிய பாம்பு புத்து இருப்பதால உள்ள போக விடலை கூட வந்த என் தம்பி! ஆனா, தெரிந்தவர்கள் வீட்டில் படங்கள் இருக்கு. நான் கொண்டு வந்து தரேன்னு சொல்லி இருக்கான். 

மேல படத்தில் நாம பார்க்குறது மன்னர் குலப் பெண்கள் தங்கிய அந்தப்புரம். கட்டிடத்திற்குள் மரவேலைப்பாடுகளால் ஆன படிக்கட்டுகள், நாற்காலிகள், சுவர் அலங்காரங்கள் இருப்பதைப் பார்த்து பிரம்மித்ததுண்டு. ஆனா, இப்ப!? 
மன்னர், அரசி,மந்திரி, வேலையாட்கள், விருந்தினர்களின் பசியாற்றிய சமையற்கூடமும், உணவருந்தும் கூடமும் இப்ப கரையான், பாம்பு, சமூக விரோதிகளின் பசிக்கு இரையாகிக் கொண்டு....,
விஜய நகர சிற்றரசனான ஜாகீர்தார் ஆங்கிலேயர் படையெடுப்பில் தோல்வி அடைந்து, அவனின் அழகான இளம் மகளை பெண்டாள வந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கைக்கு அகப்படாமல், தன்னை மாய்த்துக்கொள்ளும் முன் ”இளவரசி விருதாம்பாள்” தானும், தன் குலம் மட்டுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தின் ஒரு உயிரும், ஒரு சிறு துரும்பும் உங்கள் கைக்கு சிக்காது”ன்னு சபதம் கொண்டதோடு, அங்கிருந்த பொக்கிஷத்தையெல்லாம் மறைத்துவிட்டு, வேலைக்காரர்கள், மந்திரி குடும்பத்தோடு தீவைத்து கொளுத்திக் கொண்டாளாம்.

கன்னித்தெய்வமான அவள் எரிந்த பாவம்தான் இந்த அரண்மனை இப்படி பாழ்படுவதற்கு காரணம்ன்னு எங்க ஊரு பெருசுகள் சொல்வாங்க.  
ஜாகீர்தார் மன்னரின் வாளையும்,  பொக்கிஷத்தையும் தேடி ஆங்கிலேயர் இக்கோட்டையை சிதைத்தனர். மீதியை நம்மாளுங்க புதையலை தேடி சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனாலயே, இளவரசி, மன்னர் ஆவி சுத்துதுன்னு சொல்லிச் சொல்லி பொதுமக்களை இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்குறாங்க.
மந்திரிப் பிரதானிகள் தங்கிய தொகுப்பு வீடுகள். ஓரளவுக்கு இடிபாடுகள் இல்லாமல், புதரில்லாம பார்வைக்கு தகுந்த மாதிரி இந்த இடம் மட்டும்தான் இருக்கு. இங்கு அரசு இஞ்சினியர் கல்லூரி சில வருடம் செயல்பட்டது. இப்ப வேறிடத்தில் மாத்திட்டாங்க. அரசு அலுவலகம் போர்டே இல்லாம இயங்குது.
எவ்வளவு முயன்றும், இந்த அரண்மனை எப்பொழுது!? யாரால் கட்டப்பட்டது!? மன்னர்களின் வரலாற்றை முழுமையாய் தெரிஞ்சுக்க முடியலை. இதுவரை இக்கோட்டையின் வரலாற்று சிறப்புகளைப் பார்த்தோம்.  இனி இக்கோட்டைக்கும் ராஜிக்கும் இருக்கும் தொடர்பு என்னன்னு பார்க்கலாமா!? 

  அது என்னன்னா!?
.
..
.
நானும் என் வீட்டுக்காரரும் முதன் முதலா அவுட்டிங் போன இடம் இதான். சும்மா இல்லீங்க சகோஸ், மச்சினர், நாத்தனார், மூத்தார் குழந்தைங்கன்னு ஒரு 14 பேர் கூட கட்டுச்சோறு கட்டிக்கிட்டு போன இடம்தான் இந்த அரண்மனை. உன்னைக் கட்டிக்கிட்ட பின் என் வாழ்க்கை இப்படிதான்னு சிம்பாலிக்கா சொல்ல கூட்டிப் போனாரோ என்னமோ!!??
நீ அந்த அரண்மனைக்குள் போனே இல்லம்மா! அதான் இடிஞ்சு உருப்படாமப் போச்சுன்னு என் பசங்க சொல்வாங்க. அப்பு சின்ன பிள்ளையா இருந்தப்போ (இப்ப அவன் பெரிய மனுஷனான்னு கேட்டுடாதீங்க. அவனுக்கு கோவம் வரும். சார், 9 வகுப்பு படிக்குறார்.) ஹேர் கட் பண்ண கூட்டி போனா, அவன் அழுகையை நிறுத்த ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டும், இங்கிருந்த மான்களைக் காட்டிட்டுதான் வீட்டுக்கு கூட்டி வருவார் என் அப்பா. அந்த மான்கள், இப்ப எந்த அதிகாரிக்கு பிரியாணி ஆனதோ!?

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வரலாறும், அங்கு வாழ்ந்த மன்னனைப் பற்றியும் அங்கிருக்கும் மக்களுக்குக் கூட செவி வழியாய் கூட தெரிஞ்சுக்காததை நினைக்கும்போது அசிங்கமா இருக்கு...., இனி, எப்படியாவது தெரிஞ்சுக்கனும்ன்ற ஆவலோடுதான் வந்திருக்கேன். இந்த அரண்மனைப் பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாய் விரைவில் வரும். 

மீண்டும் அடுத்த வாரம் வேற இடத்திலிருந்து மௌனச்சாட்சிகளுக்காய் சந்திப்போம்.

Tuesday, January 28, 2014

வெங்காய சட்னி - கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு வெங்காய சட்னின்னா உயிர். அந்த சட்னி செய்யும் நாளில் மட்டும் எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி இல்ல தோசை உள்ள இறங்கும். வெங்காயம் விக்குற விலையில கொஞ்ச நாளா அந்தப் பக்கம் போகாம இருந்தேன். இப்பதான் கொஞ்சம் விலை குறைஞ்சு இருக்கே! அதனால, இனி அடிக்கடி செஞ்சு கொடுத்துட வேண்டியதுதான்!

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
தேங்காய் - 2 பத்தை
புளி - சுண்டைக்காய் அளவு
பூண்டு - பத்து பல்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெங்காயம், தக்காளியை கழுவி பெரிய பெரிய துண்டுகளா வெட்டிக்கோங்க. தேங்காயை கழுவி சின்ன, சின்னதா வெட்டிக்கோங்க. புளில ஓடு, தூசு இல்லாம எடுத்து கழுவி வச்சுக்கோங்க.


ஒரு வாணலில ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் உளுத்தம்பருப்பும், மிளகாயும் போட்டு வறுங்க.

லேசா வறுபட்டதும், வெங்காயத்தை போட்டு வதக்குங்க.

ஒரே மாதிரி வெங்காயம் வதங்கவும், சீக்கிரம் வதங்கவும் கொஞ்சம் உப்பு சேருங்க.
வெட்டி வச்சிருக்கும் தக்காளியை சேர்த்து வதக்குங்க.

தக்காளி வெந்ததும் தோல் உரிக்காதப் பூண்டை சேருங்க.
சுத்தம் செய்த புளியை சேருங்க. 
அடுத்து தேங்காயை சேர்த்து லேசா வதக்கி, அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி ஆறினதும் உரல் இல்லாட்டி மிக்சில போட்டு அரைச்சு எடுங்க. 

ருசியான வெங்காய சட்னி ரெடி. இது தண்ணியா இல்லாம கொஞ்சம் கெட்டியா இருந்தா நல்லா இருக்கும். நைசா அரைக்காம கொஞ்சம் கரகரப்பா அரைச்சா நல்லா இருக்கும். மிக்சில அரைச்சா நைசாகிடும் உரல்ல அரைச்சா செம டேஸ்டா இருக்கும். ஆனா, இப்பலாம் யாருக்கு உரல்ல அரைக்க நேரம் இருக்கு. தேவைப்பட்டா கடுகு, கறிவேப்பில போட்டு தாளிச்சுக்கலாம். இல்லேன்னாலும் பரவாயில்ல!

அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம். 

போய் வரேனுங்க சகோஸ்!