Wednesday, March 30, 2016

பாண்டிச்சேரி புரொமெனேட் பீச்- மௌனச்சட்சிகள்

எப்பப்பாரு தமிழ்நாட்டுலயே சுத்திக்கிட்டு இருக்கோமே ஒரு மாறுதலுக்கு வேற எங்கிட்டாவது போலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது....., குட்டீசுக்கு கடற்கரைக்கு போகனுமாம். பெரியவங்களுக்கு கோவிலுக்கு போகனுமாம். எனக்கு எதாவது வரலாற்று சம்பந்தமான இடத்துக்கு போகனும், ரெண்டும்கெட்டான் வயசுல இருக்கும் என் பிள்ளைகளுக்கு கலர்ஃபுல்லான இடத்துக்கு எதாவது போலாம்ன்னு ஆளுக்கொரு ஆசைகளை சொன்னாங்க. 

அப்போ, தெருவில் ரெண்டு குடிமகன்கள் சரக்கு பத்தி பேசிக்கிட்டு போனது கேட்டுச்சு.   .உடனே “பாண்டிச்சேரி”தான் எல்லார் ஆசையும் நிறைவேத்துற இடம்ன்னு சொல்லி ”பாண்டிச்சேரி”க்கு கிளம்பிட்டோம்.  சரி, நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தங்கதானே?! நீங்களும் வாங்களேன் ”பாண்டிச்சேரி”க்கு....  

ஹலோ! ஹலோ! வெயிட், வெயிட்....., உடனே, ராஜியக்கா பாண்டிச்சேரிக்கு கூப்பிடுதுன்னு கிளாஸ், ஊறுகாய்லாம் எடுத்துட்டு வரப்படாது. பாண்டிச்சேரில சரக்கு கடை போலவே ரொம்ப ஃபேமசான இடங்களும் பல இருக்கு. அதுல,  அழகிய கடற்கரை என அழைக்கப்படும் ”புரொமெனேட் பீச்” ஒண்ணு. நாம அங்கதான் போகப்போறோம். போலாமா?! ரை ரை ரை ரைட்ட்ட்ட்டு....,
பாண்டிச்சேரி” சரக்குக்கப்புறம்  நம்ம ஞாபகத்துக்கு வர்றது ”அரவிந்தர் ஆஸ்ரமம்”. சுதந்திர போராட்ட வீரரான  அரவிந்தர், பாண்டிச்சேரிக்கு அடைக்கலம் தேடி 1910ல் வந்தார். தியான சக்தியை அனைவரும் உணரும் வகையில் ஆஸ்ரமம்ஒன்றை தொடங்கினார். 1914ம் ஆண்டு அரவிந்தரை சந்தித்த பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மிரா அல்பாசா அவரது போதனைகளால் கவரப்பட்டார். அங்கேயே தங்கி ஆன்மீக கருத்துக்களை பரப்பிய இவர்தான் ”ஸ்ரீஅன்னை” என்று அழைக்கப்படுகிறார். இங்கு அரவிந்தர், ஸ்ரீஅன்னை சமாதிகள் உள்ளன. நாம் அந்த சாமதிகளின் மேல் தலைவைத்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் ஆஸ்ரமம்   திறந்திருக்கும். முதலில அங்க போய் அரவிந்தரின் ஆசிகளை வாங்கிக்கிட்டும், இந்த கூட்டத்துக்கிட்ட இந்த நாள் முழுக்க நான் படப்போற பாட்டுக்கு,,, தியானம் செஞ்சு கொஞ்சம் எனர்ஜி சேர்த்துக்கிட்டு போலாம் வாங்க...........

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாம வாங்க ப்ளீஸ்..., உங்க மொபைல் போனையும் ஆஃப் பண்ணி வச்சிடுங்க. இல்லன்னா, மத்தவங்களுக்கு  டிஸ்டர்ஃபா இருக்கும்.
எல்லோரும் மொபைல ஆன் பண்ணிக்கோங்க. ஏன்னா, நாம இப்போ மரைன் வீதில இருக்கோம். அட, யாருப்பா அங்க, ராஜியோட சேர்ந்ததால நாங்க தெருவுக்கு வந்துட்டோம்ன்னு முணுமுணுக்குறது?!  அரவிந்தர் ஆசிரமம் சுத்தி பார்த்ததுல பசிக்குதுல!! சரி வாங்க இந்த ஹோட்டல்ல போய்  எங்க கூட வந்த ஒரு சிண்டு ,இங்கே ஒரு ஹோட்டல் இருக்கு இங்கேசாப்பிடலாம். அழகா, மஞ்சாக்கலர் பெயிண்ட் அடிச்சு சுத்தமா இருக்கு. ஆனா, ஆட்கள் யாரையும் காணோமே! ஒருவேளை சாப்பாடு நல்லா இருக்காதோ!?

எதுக்கும் இருங்க. நான் போய் விசாரிச்சுட்டு வரேன்.  எல்லோரும் போயி அடி வாங்கக்கூடாதுல்ல. அட, இது ஹோட்டல் இல்லியாம்பா.  ”பிரெஞ்ச் எம்பசி”யாம் எம்புட்டு  எளிமையா இருக்கு?!ல்ல என்னைப்போல!! அதுக்கும் என்னைப்போலவே விளம்பரம்லாம் பிடிக்காதுப்போல!!!

எங்கயோ இருக்கும் ”பிரெஞ்சு”க்கும், ”பாண்டிச்சேரி”க்கும் என்ன தொடர்புன்னா,  1699ல் இந்தியாவின் சூரத்திற்கு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் துணை வணிக அலுவலராக பொறுபேற்று, பிறகு புதுச்சேரிக்கு இயக்குனராக வந்தவர் பிரான்சுவா மார்ட்டின்(Rue François Martin) என்ற பிரஞ்சுகாரர்.  அதுலாம் ஒரு பெரிய கதை. அதைலாம் அப்புறம் விரிவா பேசலாம். இப்போ ஊர் சுத்தும் நேரம். அதனால,  இவர்தான் பாண்டிச்சேரியை 1674ல் உருவாக்கியவர்ன்னு சொல்லி சுருக்கமா முடிச்சுக்குறேன். தான் உருவாக்கிய பாண்டிச்சேரியில் 1706 டிசம்பர் மாதம் 20 தேதி பாண்டிச்சேரியின் தலைமை ஆளுனராக பொறுபேற்றுக்கொண்டார். இந்த பிரெஞ்சு எம்பசியை பார்க்கும்போது, பாண்டிச்சேரியை உருவாக்கியர்களுக்கு ஒரு நன்றியை சொல்லிக்கலாமே!! ஏன்னா, நன்றி மறப்பது நன்றன்றுன்னு எங்க தாத்தா சொல்லி இருக்கார். அன்னிக்கு இவங்கலாம் “பாண்டிச்சேரி”யை உருவாக்கி தரலைன்னா இன்னிக்கு நமக்கு இவ்வளவு......, சரக்கு குறைஞ்ச விலைல கிடைக்குமா?! 
”பாண்டிச்சேரி” பத்தி சொல்லணும்ன்னா, இன்று ”தண்ணி”யாலயும், அலையாலும் தள்ளாடிக்கிட்டிருக்கும், பாண்டிச்சேரி கடற்கரை, முதலாம் நூற்றண்டிலேயே  ரோமானியர்கள் வியாபாரம் செய்ய பயன்படுத்திய துறைமுக நகராகும். அதை அவர்கள் ”பொடுகா” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவ பேரரசின் கட்டுப்பாட்டிலும், அதன்பிறகு தஞ்சையை தலைநகராகக் கொண்டு,  ஆண்ட சோழ மன்னகள் வசம் பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலும், அதன்பிறகு பாண்டிய மன்னர்களின் வசம் 13ஆம் நூற்றாண்டில்   வந்தது. 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது. 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும், டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்தது. 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இதுதான் ”பாண்டிச்சேரி” கடந்துவந்த வரலாற்று பாதை.
பாண்டிச்சேரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை ”மரைன் வீதி” வழியாக செல்லும் போது நாம பார்க்குறது ”போர் நினைவுச்சின்னம்”. பாண்டிச்சேரி சாலைகளில் நடக்கும் “குடிமகன்”கள்தான் கோணல்மாணலா நடக்குறாங்களே தவிர, பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் இருக்குன்றது என்பது ஒரு சிறப்பு .
புதுச்சேரி நகரின் 1741 ம் ஆண்டு உள்ள பழங்கால நகர அமைப்பு 

அதுப்போல நீலமன்ன இந்த கடற்கரை வடக்கே பழைய சாராய வடிஆலை முதல் தெற்கே டூப்ளே சிலை வரை 1.5 கி.மீ. தூரமுள்ள சாலையில் நடந்துகொண்டே இந்த பக்கம் கடல் அழகையும் ரசித்தவாறு நடந்து செல்லும் வகையில் நேராக அமைந்துள்ளது .  
பாண்டிச்சேரியின் தலைமை செயலகமும் இந்த கடற்கரையில்தான் அமைந்துள்ளது.  மேலும், இந்த சாலையில் கார்கில் நினைவுச்சின்னம், பழைய கலங்கரை விளக்கம், காந்திசிலை, போர் நினைவுச்சின்னம், பழைய சுங்கச்சாவடி, டூப்ளே சிலை லாம் பார்த்துக்கிட்டே நடக்கலாம் வாங்க. யாராவது கொறிக்க எதாவது வாங்கிட்டு வாங்களேன் ப்ளீஸ்...
பிரெஞ்சு மொழியல் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற பெயருக்கு 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தம். அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் அழகிய கடற்கரையாக இருந்த இந்த இடம் தற்பொழுது கற்பாளங்கள் கொண்டு செயற்கை சுவர்களாக அமைக்கப்பட்டது.  இதனால இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாது. அப்படின்னா லவ்வுன்ற பேருல மூக்கையும், மூக்கையும் உரசிக்கவும் முடியாது. அதை ஓரப்பார்வைல பார்த்து ரசிக்கவும் முடியாதே :-(
நம்முடைய பழைய பதிவில் படிச்ச மதராசபட்டிணத்து சிவப்பு நிற கட்டிடம், போலவே இதுவும் இருக்கே!  பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுடன் சம்பந்தப்பட்ட கட்டிடமோ இல்லை பிரெஞ்ச் இந்தியபாணி கட்டிடமோ அல்லது மியூசியமா?! என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன். அடடே! இது  ஹோட்டல்ப்பா! யாரோட பர்ஸ் நல்லா வெயிட்டா இருக்கு. உள்ள போலாமா?!
மயக்கும் மாலைபொழுதில் கடற்கரை மட்டுமின்றி அங்கே அமர்ந்திருக்கும் காதலர்கள்  கூட்டமும் கடல் அலைகளைப்போல் கரையில் உற்சாகமா இருக்காங்க. இதை பார்க்கும் பொழுது நம்முடைய சென்னை மெரினா பீச் அளவுக்கு சேட்டைகள் இல்லைன்னாலும் எதோ நம்ம கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கு. 
இந்தப்பக்கம் சிலர் குடும்பத்தினருடன் கூட்டமாக  அமர்ந்து, கற்களின் மேலிருந்து கடலையும், ஆர்பரிக்கும் அலைகளின் அழகையும் ,ரசித்தவாறே போட்டாக்கள் எடுத்து இயற்கை அழகை ரசித்தவாறே கடற்கரையில் காற்று வாங்கலாம்.வாங்க!!
கடற்கரையை ரசிக்கும் இவர்களை ரசித்தவாறே நாம கடற்கரையில் நடப்போம். பாண்டிச்சேரி பீச் மட்டுமில்லாம கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்தா கோயிலும் பார்க்கவேண்டிய இடம். இந்த கோவிலில் அமர்ந்துதான் பாரதியார் பல பாடல்களை எழுதினார். அங்கு பாரதியாருக்கு சிலை வெச்சிருக்காங்க.  .மகாகவி பாரதியார் புதுவையில்  தங்கியிருந்த வீடு, மேலும் பல சித்தர்களும் புதுவையில் ஜீவ சமாதி அடைந்துள்ளனர்.  அதிலும் முக்கியமாக  குரு சித்தானந்தா, கம்பளிசாமி, அக்காசுவாமி மடம், கண்டமங்கலம் அருகே உள்ள படேசாகிப், ராம் பரதேசி சுவாமி மடம் போன்றவைலாம் நாம் இங்கே பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு. இதுக்கே நமக்கு பொழுது போகிட்டுது. மீண்டும் ஒருமுறை வாய்ப்பும், கடவுள் அருளும் இருந்தால் அவைகளையும் பார்க்கலாம்.
அங்கே கடலுக்குள் சில கம்பங்கள் நட்டுவைக்கபட்டு இருக்கே! அதுலாம் மீன்பிடிக்குறதுக்காகவா?! இல்ல படகுகளுக்கு எச்சரிக்கைக்காக வச்சிருக்காங்களன்னு  தெரியலையே! ஆனா, இந்தபக்கம் சில மீன்பிடி படகுகளும் சென்று கொண்டிருந்தன பாண்டியில் உள்ள நண்பர்கள் யாராவது இருந்தால் அது பற்றி தெரிவித்தால் நலம் .போய்க்கிட்டிருக்கு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா!
கடற்கரையில் குப்பைகள்  கொட்டி மாசுபடுத்தாதீர்கள்ன்னு அறிவிப்பு மட்டுமில்லாம குப்பைக்கூடையை கூட அழகாக, பிள்ளைகளுக்கு பிடிச்ச உருவங்களில் உருவாக்கி இருக்காங்க. ஆனா, நம்ம ஆளுங்க அந்த குப்பைக்கூடையை சுத்திதான் குப்பைகளை கொட்டியிருக்காங்க. மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள பூங்காவில் குழந்தைகளுக்கு அடிபடாதவாறு கடல்மண்ணை பரப்பி வைத்துள்ளனர். வாங்களேன் கொஞ்ச நேரம் பூங்காவில் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்.
இந்த கலங்கரை விளக்கம் 173 ஆண்டுகால வரலாற்றை கொண்டது. பல போர்கள் பல ஆட்சிமாற்றங்கள், பல அழிவுகளை தாண்டி இன்றும் கம்பீரமா காட்சியளிக்குது. 1836 ல் பிரஞ்சுகாரர்களால் எண்ணெயினால் எரியும் விளக்குகளுடன் 24 கிமீ தொலைவு கடலுக்குள் தெரியும் வண்ணம் வடிமைக்கப்பட்டது இந்த கலங்கரை விளக்கம். பின்னர் 20 ம் நூற்றாண்டில் அது மின்விளக்குகளால் இயங்கும்படியாக அமைக்கப்பட்டது.
இதுதான் பழைய கலங்கரை விளக்கம் - புதுச்சேரி அரிய பழைய போடோக்களிலிருந்து !
கலங்கரை விளக்கம் இருக்கும் கட்டிடத்தில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களை கொண்ட ஒரு ஸ்டால் இருக்கு. அதில் பழைய தஞ்சாவூர் ஓவிய பாணியில் இருக்கும் ஓவியங்களும், கைவினை சிலைகள் மற்றும் பல உபயோக பொருட்களும் விற்பனைக்கு வெச்சிருக்காங்க. வேணும்ங்குறவங்கலாம் வாங்கிக்கோங்கப்பா. 
கடற்கரையில் காந்திசிலை கம்பீரமாக காட்சிதருது. இங்கிருக்கும் தூண்களில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கு. வாங்கப்பா எல்லோரும் நின்னு ஃபோட்டோ எடுத்துக்கலாம்.
பாண்டிச்சேரி கடற்கரையில் அடுத்து பார்க்க வேண்டிய முக்கியமான இடம் தூய இருதய கிறிஸ்து தேவாலயம். (சர்ச் ஆஃப் சேக்ரட் ஹார்ட் ஆஃப் ஜீசஸ்  இது 1908-ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது என சொல்லப்படுது. இது இந்தோ -கோதிக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்ட தேவாலயம். இங்கே என்ன சிறப்புன்னா இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சித்திரங்கள் கண்ணாடி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. நமக்குதான் எம்மதமும் சம்மதமாச்சே!! வாங்க! உள்ள போய் ஏசுவுக்கு ஒரு வணக்கம் போட்டு வரலாம். 
இதுதான் சிறுவர் பூங்கா அமைந்துள்ள இடம். இங்கே சிறுவர்களுக்கென நிறைய விளையாட்டு சாதனங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறையவே இருக்கு. நாமளும் சின்ன பிள்ளையாய் மாறி விளையாடுவோம். எனக்கு சேப்பு கலர் பலூன் வாங்கி தாங்க சகோஸ்.
இதுதான் புதுவை பழைய துறைமுகத்தின் அரிதான படம். 

தூரத்த்த்த்த்துல தெரிவது துறைமுக பகுதி. கடற்கரையில் விதவிதமான உணவுவகைகள்.  பிரஞ்சு வகை காப்பி ஸ்டல்கள்,  பாஸ்ட் புட் போன்றவைகள மற்றும் கடற்கரையை சுற்றி உள்ள இடங்களில் தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ், பிரெஞ்ச் என அனைத்து உணவு வகைகளும் கிடைக்கின்றன. சென்னையில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் இருப்பதால்  திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக இருமார்க்கங்களில் பேருந்து வசதியும், விழுப்புரம், சென்னை, திருப்பதி, புவனேஸ்வரம், யஷ்வத்பூர், மங்களூர், ஹவுரா போன்ற இடங்களில் இருந்து ரயில் வசதியும் இருக்கு. ஒருவழியா பழமையானதும், நூற்றாண்டை கடந்த,  பெருமை வாய்ந்த கடற்கரையை சுத்தினதுல கால்லாம் வலிக்குதுல்ல! அதனால, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இந்த பாண்டிச்சேரி உருவாக காரணமாக இருந்த பிரான்சுவா மார்ட்டின்(Rue François Martin)வரலாற்றை நமது மௌனசாட்சிகள் பதிவில் அடுத்த வாரம் பார்க்கலாம்