Friday, June 30, 2017

மனைவியை அவமதித்து கணவனை மட்டும் வணங்குதல் முறையா?! ஆனி திருமஞ்சனம்.



வாட்டி வதைத்த   கோடையின் கடும் வெப்பம் தணிந்து இதமான தட்பவெப்பம் துவங்குவது இந்த  ஆனி மாதத்தில்.   சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.நட்சத்திரத்திலேயே மிக உக்கிரமானது இந்த திருவாதிரை நட்சத்திரம். அக்னியை கைகளிலே ஏந்தியும், ஆலகால விஷத்தை உண்டதால் உண்டான உடல்சூட்டினாலும், நெருப்பின் சாம்பலை பூசியதாலும் இயற்கையிலேயே சிவபெருமான் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். அதனாலாயே அவனுக்கு பால், தயிர் பன்னீர், கரும்புச்சாறு,  பஞ்சாமிர்தம்...போன்ற குளிர்ச்சியான பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்பது ஆகம விதி. அதனாலயே சிவபெருமானுக்கு அபிஷேகப்பிரியன் என்றும் பெயர்.  


வெம்மையின் நாயகனான சூரியனுக்கு உகந்த நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரமாகும்.  அகில உலகை காக்கும் பெருமானின் திருமேனி குளிர்ந்தால் அண்ட சராசரமும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது ஐதீகம். அதனாலயே வெம்மையுடன் இருக்கும் பெருமானை குளிர்விக்க வெம்மை நாயகனின் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்விக்கப்பட்டுது. 


வேனிற் காலம், ஆனி இலை அசங்க’ என்றொரு வாசகம் உண்டு. அதாவது, ஆனியில் மழை அடிக்கடி பெய்யுமாம். அப்போதுதான் காவிரி பெருக்கெடுத்து ஓடி ஆடிப்பெருக்கெனக் கொண்டாடப்படும். அதுமட்டுமா? மாதங்களில் நீண்ட பகல்பொழுது கொண்டது ஆனி மாதம் எனும் பெருமையும் உண்டு. பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் மிக விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. 


திருமஞ்சனம் என்பது  இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் மிக விசேஷமானது. அன்றைய தினம் பால்  தயிர், எண்ணெய், சீயக்காய், சந்தனம், மஞ்சள், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் , திருமண மஞ்சனப்பொடி போன்ற 36 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்படும்.  நமக்கு ஒரு வருடமென்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பதை எல்லோரும் அறிவோம். தேவர்களுக்கு காலைப்பொழுது நமது மார்கழி மாதத்தில் தொடங்குகிறது. உச்சிக்காலம் சித்திரையிலும் மாலைப்பொழுது ஆனியிலும், இரவுப்பொழுது ஆவணியிலும், நடுஜாமம் புரட்டாசியிலும் வரும். 



இதில் சந்தியாக்காலம் என அழைக்கப்படும் காலையும், மாலையும் முறையே மார்கழியும், ஆனியும் இறைவழிபாட்டிற்கு உகந்ததென போற்றப்படுது.  இதில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் திருமஞ்சனம் செய்விக்கப்படும். இந்த ஆனி உத்திரம் நட்சத்திரத்தில்தான், தேவர்கள் ஆலகால விஷத்தை உண்டு தங்களை காத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாய் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்விப்பதாக ஐதீகம். அந்த நாளைத்தான் நாம் ஆனி திருமஞ்சனம் என்று கொண்டாடுகிறோம். அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் இறைவனுக்கு  சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். 


எல்லா கடவுளும் வெவ்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோவில்களில் காட்சி தருவர். ஆனால், சிவபெருமான் லிங்க ரூபத்தில்தான் பெரும்பான்மையான கோவில்களில் காட்சித்தருவார். அதைத்தாண்டி வெகு சில கோவில்களில் ஆடலரசனான நடராஜராய் காட்சி தருவார்.  நடராஜர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிதம்பரம் கோவிலாகும்.  இங்கு நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் செய்விக்கப்படும்.  ஆனி திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. சிதம்பரம் போன்றே திருவாரூர், திருவாலங்காடு போன்ற ஊர்களிலும் ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுது. சிதம்பரத்தில் 10 நாட்கள் வெகு விமர்சையாக இவ்விழாவை கொண்டாடுவர்.


சித்திரை மாதத்து திருவோண நட்சத்திரத்திலும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதத்து சதுர்த்தசியிலும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமென மொத்தம் ஆறுமுறை சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். இதன் பொருட்டே அனைத்து சிவாலயங்களிலும் ஆறுகால பூஜை செய்விக்கப்படவேண்டுமென ஆகம விதி.  இதில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர அபிஷேகமும் அதிகாலையில் செய்விக்கப்படும். 


சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர் உலகத்திலேயே சிவனுக்கு இணையாகவும்கூட எந்த தெய்வத்தையும் மதிப்பதில்லை. மற்ற தெய்வத்தை தெய்வமாய்கூட அவர் எண்ணுவதில்லை. அவ்வளவு ஏன்!? சிவனின் மனைவியான சக்தியைக்கூட மதித்ததில்லை. தினமும் கைலாயம் செல்வார். சிவபெருமானை மட்டும் வணங்குவார். பின்னர் பூலோகம் செல்வார். இதே வழக்கமாய் கொண்டிருந்தார்.  இதனால் சக்தியின் கோவத்துக்கு ஆளாகி தன் உடல் பலத்தை இழந்து அதை மீண்டும் பெற்றதுலாம் தனிக்கதை. இக்கதையின் மூலம் சொல்ல வருவது 


சிவலிங்கம் மூலவராய் இருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும்போது தனி சன்னிதியில் வீற்றிருக்கும் அம்பிகையையும் வணங்க வேண்டுமென்பது ஐதீகம். ஆனால் நடராஜரை தரிசிக்கும்போது அவரது இடக்காலை பார்த்து வணங்கினாலே போதுமானது. காரணம் சிவனின் இடப்பாகம் முழுக்க பராசக்தியின் அம்சம். அதனால் நடராஜரின் இடது பாதத்தை தரிசித்து வணங்கினால் சக்தியின் அருள் முழுமையாய் கிடைக்கும். தனியாய் அம்பிகை சன்னிதியை வலம்வர வேண்டுமென்பதுமில்லை.  மார்க்கண்டேயரை காக்க எமனை எட்டி உதைத்ததும் அக்கால்தான். நடராஜரின் வலது கால் பக்தர்களின் வாழ்வில் வளங்களை சேர்க்கும். இடப்பாகம் பக்தர்களின் வாழ்விலிருக்கும் இன்னல்களை நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியினை கொடுக்கும் என்பது நம்பிக்கை. 
இன்றைய தினத்தில்   சாயரட்சை  பூஜையில் நடராஜப்பெருமானுக்கு செய்விக்கப்படும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமுமே ஆனி திருமஞ்சனம் என அழைக்கப்படுது.  சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள் முனிவர்கள் தவம் இருந்தனர். அவர்களோடு விஷ்ணு பகவானும் தவமிருந்தார். அவர்களுக்கு இந்த ஆனி திருமஞ்சனத்தின்போது ஆனந்த நடனமாடி காட்சி தந்தார். சிவபெருமானின் நடனத்தை காண கண்கோடி வேண்டும். அத்தனை சிறப்புமிக்கது. நடன ரூபத்திலிருக்கும் நடராஜரின் அபிஷேகத்தையும் நடனத்தையும் தரிசித்து சிவசக்தியின்  பேரருள் கிடைத்துகஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, ஏற்றங்களையும்நல்லமாற்றங்களையும் பெற்று  வளமோடும்நலமோடு வாழ்வாங்கு வாழ நடராஜர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.



அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும்.  நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கினாலே போதும். இந்த தரிசனத்தை தில்லையில் காண இயலாதோர், தம் சித்தத்தையே சிவமாக்கி, மனமுருகி துதித்து வணங்கினாலும் ஈசனின் அருட்பேராறு நம்மை வந்தடையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
 ராஜி.

Thursday, June 29, 2017

பழசு ஆனா புதுசு - கைவண்ணம்.

புடவைக்கு மேட்சிங்கா இருக்க மெட்டல் வளையலை பல கலர்ல டிசன்ல வாங்குவோம். கொஞ்சம் நாள் போச்சுன்னா கலர் மாறிடும்.. வளைஞ்சிடும்... ஒன்னிரண்டு தொலைஞ்சு போய் செட்டு சேராம சிலது தனியா இருக்கும். கொஞ்சம் நாள் வச்சிருந்திட்டு தூக்கி போட்டுடுவோம். முன்னலாம் இந்த வளையல்களை பழைய பேப்பர் பொருள் வாங்குறவங்க வாங்கிப்பாங்க. இப்பலாம் வாங்குறதில்ல. அதனால நிறைய குப்பைக்குதான் போகும். அந்த மாதிரி இல்லாம இப்ப புது வளையல் பிரேஸ்லேட் கம்மல் வீட்டு அலங்காரப்பொருட்கள்ன்னு உருமாறுது.. பார்க்க அழகாவும் இருக்கு. அடிக்கடி புதுசு போடுற மாதிரியும் நாமளே நம்ம விருப்பத்துக்கேத்தமாதிர்இ செஞ்சு போட்டுக்கலாம். அதுமட்டுமல்லாம மனசுக்கு இதமான பொழுதுபோக்கு.. கூடவே வருமானம்ன்னு ஒரே கல்லுல பல மாங்காய்... 


 என்னோட பழைய வளையல்ல பட்டு நூல் சுத்தி......

 ரெண்டு பிளாஸ்டிக் மணிலயும் நூல் கோர்த்து....


 வளையல்ல கோல்ட் முத்து ஒட்டி......


 பிளாஸ்டிக் மணில நூல் கோர்த்து கல் முத்துன்னு இஷ்டம்போல அலங்காரம் செஞ்சு....
 வளையல் நுனில க்ளூ போட்டு ஒட்டி......


 ரெண்டு நுனிலயும் முத்துக்களை ஒட்டிக்கனும்....

அழகான சிம்பிளான பிரேஸ்லெட் ரெடி...

க்வில்லிங்க் பேப்பர்ல திலகம் மாதிரி செஞ்சுக்க்கனும்...

நூல் சுத்திக்கனும்... 


விருப்பப்படி அலங்கரிச்சுக்கனும்....

வெயிட்லெஸ் கம்மல் ரெடி.....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்
 ராஜி. 

Wednesday, June 28, 2017

இருமுறை காப்பாற்றப்பட்டு மூன்றாவது முறை அழிந்த பல்கலைகழகம் - மௌனச்சாட்சிகள்

அமெரிக்க, இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் போய்ப் படிப்பது இன்று பலருக்கும் ஒரு லட்சியக் கனவு. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, நம் பாரத தேசத்தில் இருந்த ஒரு பல்கலை கழகத்தில்  சேர வெளிநாட்டு மாணவர்கள் காத்துக் கிடந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?! மூன்று முறை படையெடுப்புக்குள்ளாகி இரண்டு முறை  மறுசீரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாய் முற்றிலும் அழிக்கப்பட்டு, மீண்டும் சமீபத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டாலும்,  ஒருகாலத்தில் ஆலமரமாய் கிளைத்தது தழைத்து விழுதூன்றி தன் நிழலில் இளைப்பாறிய மாணாக்கர்களை எண்ணிபடி   தன் பழம்பெருமையை பறைசாற்றியபடி மௌனமாய்  நிற்கும்  ஒரு பல்கலைகழகத்தை பற்றிதான் இன்று மௌனச்சாட்சிகளில் பார்க்க போறோம் . 



உலக மனிதன் கற்களை கொண்டு வேட்டையாடி திரிந்த காலத்திலேயே நாம் நாட்டையே உருவாக்கி அரசாண்டோம்.  அப்பேற்பட்ட பழம்பெரும் பாரம்பரியம் கொண்டது நம் பாரத நாடு.  பாரத நாடு கலாச்சாரம், கலை, பண்பாடு, வீரம், பக்திக்கு மட்டும் பேர்போனதல்ல. கல்வியிலும் பாரத மக்கள் கோலோச்சினர். இயல், இசை நாடகம், சிற்பம், சித்திரம், தையல், வானவியல் முதற்கொண்டு பாலியல் கல்வி வரை பல்கலை ஞானத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்த பாரத பூமியிலிருந்துதான் பலதுறை சார்ந்த அறிவியல் உண்மைகள் உலகெங்கும் பரவியது. பலதுறை சார்ந்த படிப்புகளை கற்றுத்தர நாளந்தா, தக்சசீலா மாதிரியான பல பல்கலைகழகங்கள் முதன்முதலில் நம் பூமியில்தான் தோன்றியது.


உலகத்தின் பல மூலைகளிலிருந்து இங்கு வந்து இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பல்லாண்டுகள் தங்கி படித்தனர். தாங்கள் படித்து சேர்த்த அறிவினை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று வளம் சேர்த்தனர் என்பது வரலாற்று உண்மையாகும்.


உலக வரலாற்றிலே அமைப்புரீதியாக முதன்முதலாய் தோன்றியது நாளந்தா பல்கலைகழகமாகும்.  இது இப்போதைய பீகார் மாநிலத்தின் பாட்னாவிலிருந்து 90 கிமீ தொலைவிலுள்ளது.  பாட்னாவின் அன்றைய பெயர் பாடலிபுத்திரமாகும். முழுக்க முழுக்க சிவப்பு நிற செங்கற்களால் கட்டப்பட்டு அறிவுச்சுடர் போல ஜொலித்திருக்கிறது.  பொதுவாக பெரிய பெரிய மகான்கள் தோன்றிய , வாழ்ந்த, படித்த, உபதேசித்த இடங்கள்தான் பிற்காலத்தில் கல்லூரிகளாகவும், அறிவாலயங்களாகவும் மாறும் என்பதற்கேற்ப  புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களுக்கு உபதேசம் செய்த மாந்தோப்பை மையாமாகக்கொண்ட நாளந்தாவில் இப்பல்கலைகழகம் தோற்றுவிக்கப்பட்டது.  பகவான் மகாவீரரும் இப்பூமியில் உபதேசித்தார் என்றும் சொல்லப்படுது. இந்த மாந்தோப்பை பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து 500 வணிகர்கள் வாங்கி புத்தருக்கு அன்பளித்துள்ளனர்.


நாளந்தா பல்கலைகழகம் சுமார் 14 ஹெக்டேர்களுக்கு மேலான பரப்பளவில் இப்பல்கலைகழகம்  பறந்து விரிந்திருந்ததாம். கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள்.  புத்தமத துறவிகளாலும், புத்த சமயத்தைச் சேர்ந்த அசோகர், ஹர்சர் போன்ற மாமன்னர்களின் ஆதரவோடும் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தது வளர்ந்தது.  இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இங்கு அந்த காலத்திலேயே   உள்நாடு மற்றும் கொரியா,  சீனர்கள், திபெத்தியர்கள், பெர்ஷியர்கள், ஜப்பானியர்கள், மங்கோலியர்கள்,  கிரேக்கர்கள் போன்ற  வெளிநாடுகளிலிருந்தும் 10,000 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பல்துறை வித்தகர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். புவியியல், வானவியல், மருத்துவம், வேதியியல், இயற்பியல் போன்ற உயர்மட்ட விஞ்ஞான பாடங்களும் தத்துவம், தர்க்க சாஸ்திரம், வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற பாடங்களிலுள்ள பல்வேறு துறைகளும் இங்கே போதிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைகழகம் உலகின் முதல் பல்கலைகழகம் என்ற பெருமை மட்டுமல்லாது மாணவர்கள் தங்கி படித்த முதல் பல்கலைகழகமும் இதுவே ஆகும்.  கி.பி. 413 ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைகழகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. 



கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற இனிய  சூழலும் இருந்திருக்கிறது.  இங்கு பயிற்றுவிக்க  பகல் பொழுது மட்டும் போதாமல் இரவுப்பொழுதும் வகுப்பெடுக்கப்பட்டதாம்.   



பல்கலைகழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைகழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். 



மாணவர் மற்றும் ஆசிரியர்களின் சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ளவும், அறிவுப்பசியை போக்கிக்கொள்ளவும் மிகப்பெரிய  மகாமேரு என்று பெயர் சூட்டப்பட்ட மிக்கப்பெரிய நூல் நிலையமொன்று   இங்கு இருந்திருக்கிறது.   9 மாடிகளைக் கொண்ட மாபெரும் கட்டிடமாக இந்நூல் நிலையம் இருந்துள்ளது. இந்த நூல்நிலையத்தில் மட்டும் பராமரிப்பதற்கு பல்வேறு மொழிகளை கற்றறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தத் துறவிகள் இருந்துள்ளனர். இந்த நூல்நிலையத்திற்குள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்தமர்ந்து, தாங்கள் அறிவு தாகத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டனர். இங்கிருந்த ஏடுகளை மாணவர்கள் அலசி ஆராயும்போது ஏற்படும் சந்தேகங்களை நீக்க புத்தப்பண்டிதர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். பசிக்கொண்ட பறவையினம் பழ மரங்களைத் தேடி பறந்தோடி செல்வதுப்போல், அறிவுத்தாகம் கொண்ட மாணவர்களும் உலகம் முழுவதிலிருந்தும், நாளந்தா பல்கலைக்கழகத்தில் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த இந்த நூல்நிலையத்திற்கு வந்து தமது அறிவுப்பசியைத் தீர்த்துக் கொண்டனர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பற்றியெல்லாம் சீனயாத்ரீகர் யுவான்சுவாங் மற்றும் ஏனைய வரலாற்று அறிஞர்களும் பல அபூர்வமான உண்மைகளைப் பதிவு செய்துள்ளனர்.



புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எனச்சொல்லப்படும் உதவித்தொகை  அந்த காலத்திலேயே   வழங்கப்பட்டிருக்கிறது. அதேப்போல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும், அவர்களும் பல்வேறு தகுதித்தேர்வுக்குட்படுத்தியே  தேர்தெடுக்கப்பட்ட்னர். கல்விக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.  அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டதென யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். 



தோன்றிய யாவற்றிற்கும் அழிவு உண்டென்ற உலக நியதிக்கேற்ப உலகப்புகழ்வாந்த இப்பல்கலைகழகமும் ஒருநாள் அழிந்துப்பட்டது. நாளந்தா பல்கலைகழகம் எப்படி அழிந்தது என இனி பார்ப்போம்...

புயல் காற்றில் சிக்கி திசை மாறி, கரையை அடைய முடியா தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்போல் அறிவுத்தாகம் கொண்டு அலைபவர்களுக்கு தாகம் தணிக்கும் நீருற்றாய் திகழந்த நாளந்தாவின் மீது  இதுவரை மூன்று முறை படையெடுப்பால் அழிந்து இரண்டு முறை அரும்பாடுப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.  முதல் முறை கி.பி. 455 ல் ஸ்கந்தகுப்தா ஆட்சிக்காலத்தில் மிஹிரக்குலா தலைமையில் ஹன்ஸ் படையெடுப்புக்குள்ளானது. பின்னர் ஸ்கந்த வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு மீண்டு(ம்) கல்வி சேவை ஆற்றியது.மீண்டும் 7ம் நூற்றாண்டில் ஹர்வர்த்தனர் ஆட்சியின்போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி மீண்டும் புனரமைக்கப்பட்டது. 

மூன்றாவது முறையாக 1193 – ம் ஆண்டு  கில்ஜி என்ற துருக்கி மன்னனின் படையெடுப்பால் நாளந்தா பல்கலைகழகம் முற்றிலுமாய் அழிந்துப்போனது. இப்படையெடுப்பில் இங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களையும், ஆசிரியர்களையும், புத்தத் துறவிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான். அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட புத்த மடாலயங்களையும், பல்கலைகழகத்தின் அற்புதமான கலையம்சம் கொண்ட வகுப்பறைகளையும் தரைமட்டமாக்கினான். 

அப்போதும் வெறி அடங்காத கில்ஜி  மகாமேருஎன்று போற்றப்பட்ட நூல்நிலையத்திற்கும் தீ வைத்து அறிவுக் கருவூலங்களை அழித்தான். நூல்நிலையத்தில் வைத்த தீக்கு இரையாகிய பல்லாயிரக்கணக்கான ஏடுகள் மட்டும் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தன. அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தனவாம். இதை யாரும் அணைத்து விடக்கூடாது என்று அவை எரிந்து சாம்பலாகும் வரை  அங்கேயே காவலுக்கு ஆட்களை நியமித்திருந்தனாம்.



2006 ம் ஆண்டு பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் நாளந்தா பல்கலைகழகம் புதுப்பிப்பதற்கான மசோதா முன்மொழியப்பட்டது.  2010 ல் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ம் தேதி முதல் புதுப்பொலிவுடன்   மீண்டும்  கல்விப்பணி ஆற்ற தொடங்கியுள்ளது. 


நாளந்தா பல்கலைகழகத்தின் நினைவு மண்டபம் 

ஆங்கிலேயர் படையெடுப்பிற்குமுன் நமது பாரதத்தில் அனைவரும் படிப்பறிவு கொண்டிருந்தனர். அந்நிய படையெடுப்புக்கு ஆளாகி படிப்படியாய் நம் கல்வியறிவு குறைந்து அடிமையாய் மாறி படாத பாடுகள் பட்டோம் என்பது உலகறிந்த உண்மை.  எத்தனையோ போராட்டங்களுக்குபின் சுதந்தரம் பெற்று மீண்டும் நம் நாட்டில் கல்வியறிவு புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது.  அறிவுக்காகவும், பொருள் ஈட்டவும் திரைக்கடல் தாண்டி ஓடினாலும் முடிவில் நம் நாட்டுக்கே திரும்ப வந்து கல்வியறிவையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவோம்.

படங்கள் கூகுள்ல சுட்டது ...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464804

நன்றியுடன்,
ராஜி


Tuesday, June 27, 2017

எலேய்! நீ நல்லவனா?! கெட்டவனா?! - கிச்சன் கார்னர்.

எனக்கு ஈரல்லன்னா ரொம்ப பிடிக்கும்.  சின்ன வயசுல அம்மா சமைச்சுக்கொடுக்குறதுக்கு முந்தியே   கம்பில நுழைச்சு  உப்பு தேய்ச்சு நெருப்புல சுட்டு சாப்பிடுவேன். வளர்ந்தப்புறம் குழம்புல ஊறிய காரசாரமான் ஈரல் ருசிக்கு பழக்கப்பட்டதால ஈரலை சுட்டு சாப்பிடுறதில்லை. கொஞ்ச நாளைக்கு முந்தி ஈரல் சாப்பிடுறது நல்லதில்ல. எல்லா கிருமியும் அதுலதான் போய் உக்காரும். அந்த கிருமிகளால நமக்கு எதாவது வியாதி வரும்ன்னு சொன்னதிலிருந்து ஈரலை சாப்பிடுறதை விட்டுட்டேன். 

சின்னவளுக்கு டைஃபாய்ட் வந்து ரொம்ப கஷ்டப்பட்டா.  அப்ப அவ ரத்தத்துல  வெள்ளை அணுக்களும், ஹீமோக்குளோபினும் கம்மியா இருக்கும்ன்னு சொல்லி சாப்பிட சொன்ன லிஸ்ட்ல இந்த ஈரலும் இருக்கு. அவ எப்பயுமே ஈரல் சாப்பிடமாட்டா. இதுல என் நண்பர் சொன்னாங்கன்னு சொல்லி நான் சாப்பிடாததையே சொல்லி சொல்லி சாப்பிடாம டபாய்க்குறா. இதுக்கு பேருதான் வாயக்கொடுத்து வாங்கிக்கட்டிக்குறதுன்னு...

முன்னலாம் கிராமங்களில் ஆட்டை வெட்டி கறியாக்கும்போது எடை போடுறதைவிட கூறுபோடுவதுதான் அதிகம். அப்ப எல்லாருக்கும் ஒரு துண்டு ஈரல் வரும். இப்ப கடையில போய் எடைபோட்டு வாங்கி வருவதால நோ ஈரல். ஆட்டு ஈரல் விலை அதிகம். ஒரு ஆட்டோட முழு ஈரல் 160ரூபாய்.  ஆனா கோழி ஈரல் விலை குறைச்சல். 

ஆட்டு ஈரல்ல இருக்கும் சத்துகள்...
உயிர் சத்துக்க்களை சேமித்து வைத்து தேவையானபோது கொடுக்குறதுல ஈரலோட பங்கு முக்கியம். இதுல வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2,பி3,பி5,   தாமிரம்,  செலினியம், துத்தநாகம், புரோட்டீன், இரும்பு சத்து ட்ரிப்டோபேன் கொலைன், ஃபொடேட், இரும்பு சத்துக்கள்ன்னும், போலிக் அமிலமும்கூட இதுல இருக்கு. ரத்த சோகையால பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆட்டு ஈரல் நல்ல பலனை கொடுக்கும். வைட்டமின் ஏ அதிகமா இருக்குறதால ஊட்டச்சத்து குறைவா இருக்கும் கர்ப்பிணிகள் எடுத்துக்கலாம்.  இதுல அதிகளவு கொலஸ்ட்ரால் இருக்கும் இதை மட்டும் கவனத்துல வச்சுக்கனும் சகோஸ்.


 ஈரல் தொக்கு செய்முறை...’’

ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல்,
வெங்காயம்,
தக்காளி,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பட்டை
லவங்கம்,
அன்னாசிபூ
எண்ணெய்,
உப்பு,
மிளகாய்ப்பொடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா..


வாணலில கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, பட்டை, லவங்கம், அன்னாசி பூ போட்டு பொறிய விடுங்க. ஈரல்ல கொழுப்பு சத்து அதிகம்ங்குறதால எண்ணெயை கொஞ்சமா சேர்த்துக்கனும். 

கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துடும்..
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேருங்க.... 
அடுத்து தக்காளி சேர்த்து நல்லா மசிய வேகவிடுங்க.... 


அடுத்து கழுவி சுத்தம் செஞ்ச ஈரலை சேர்த்துக்கோங்க... 

ஈரல் நல்லா வதங்கினதும் மிளகாய்ப்பொடி போட்டுக்கோங்க....
அடுத்து மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க... 


கொஞ்சமா தண்ணி சேர்த்து ஈரல் நல்லா வேக விடுங்க... ரொம்ப நேரம் வெந்தா ஈரல் ரப்பர் மாதிரி ஆகிடும் . அதனால கவனமா கொஞ்சமா தண்ணி சேருங்க. 

ஈரல் வெந்து சுருண்டு வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போட்டு கிளறி இறக்கிடுங்க.... 


ஆட்டு ஈரல் ரெடி.... அதிகமா கொலஸ்ட்ரால் இருக்குறதால கொஞ்சம் மிளகு, சோம்பு, பட்டை, கிராம்புன்னு வறுத்து கொரகொரப்பா பொடி செஞ்சு பூண்டு நாலு பல்லை ஒன்னிரண்டா தட்டி சேர்த்து காரசாரமா சாப்பிடுங்க. என் பொண்ணு காரம் சேர்த்துக்கக்கூடாதுங்குறதால நான் இதுலாம் போடல. 

தமிழ்மணம் ஓட்டு பட்டை லிங்க்..

நன்றியுடன்,
ராஜி.

Monday, June 26, 2017

சென்னைக்கு புதுசா போறீங்களா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா சாப்பிட வாங்க.

இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?!

எதிர்வீட்டு பாய் வீட்டுல இருந்து  பிரியாணி கொடுத்து அனுப்பி இருக்காங்க. அதான் இன்னிக்கு ஸ்பெஷல். என்னதான் நம்ம வீட்டுல பிரியாணி செஞ்சாலும் பாய்மாருங்க செய்யுற பிரியாணி மாதிரி ஆகுமா?!

ம்ம்ம்ம்ம் ரம்ஜான் பிரியாணி ஓகே. ரம்ஜான் பண்டிகைன்னா என்னன்னு தெரியுமா?! 

நமக்குலாம் பிரியாணி தரும் டே..

ஏய் எடக்கு மடக்கா பேசினே ... செவுளு பிஞ்சிரும்... 

ம்க்கும் நான் ஜோக்கடிக்கடிக்கக்கூடாது.  நாம வினாயகர் பொறந்த நாளை வினாயகர் சதுர்த்தி, முருகர் பொறந்த நாளை வைகாசி விசாகம், ஏசு பொறந்த நாளை கிறிஸ்துமஸ்ங்குற மாதிரி எதாவது முஸ்லீம் சாமி பொறந்த நாளை ரம்ஜான்ன்னு கொண்டாடுவாங்க.


ஒருவிசயம் தெரியலைன்னா தெரியலைன்னு ஒத்துக்கோ. அதைவிட்டு ஜல்லியடிக்காத. ஏழைகளின் பசிக்கொடுமையை உணர இந்நோன்பு உதவுது. ஏழைகளின் வறுமையை உணர்ந்து அவர்களுக்கு எல்லாவகை உதவிகளையும் செய்யுறதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கம். ரம்ஜான் பண்டிகைக்கு ஈகை பெருநாள்ன்னும்  ஈகை திருநாள்ன்னும் செந்தமிழில் அழைக்கப்படுது. 

முஸ்லீமா பொறந்த ஒவ்வொருத்தருக்கும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது என மொத்தம் அஞ்சு கடமை இருக்கு. இறைவன் ஒருவனே. முகம்மது நபி அவரது தூதர்ன்னு நம்பனும். அதுக்கப்புறம் தினம் ஐந்து வேளை தொழுகை, ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கனும். ஏழைகளின் துயர் உணர ஜகாத் என்ற கொடை, ஹஜ்ன்ற புனித பயணம்ன்ற ஐந்து கடமை. 

ரம்ஜான் மாதத்துல இருக்கும் நோன்பானது தீமைகள் பக்கம் செல்லாமல் தடுத்து நன்மைகளின் பக்கம் நடக்க முன்னோட்டமாவும், கேடயமாவும் இருக்கும்ன்னு இஸ்லாம் மதம் சொல்லுது.  ரம்ஜான் மாசத்துல 30 நாளும் நோன்பிருப்பது தார்மீக கடமையாகும்.  தனிமனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான். மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது. ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது. 

ஐந்து வேளை தொழுதல், குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது. பொய், புறம் பேசுதல், ஏமாற்றுவது என அனைத்து குற்றங்களில் இருந்தும் மனிதன் தன்னை இம்மாதத்தில் தடுத்துக்கொள்கிறான். நோன்பு இருக்கிறோம் என்ற பயம் அவனை ஆட்டிப்படைக்கிறது. ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும்ங்குறதுக்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ‘சஹர்’ ன்னு சொல்லப்படுற காலை உணவில் இருந்து இந்த நோன்பு தொடங்குது. விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பாங்க. 

சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி) நோன்பு தொடங்கிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ன்னு பேரு. நோன்பு வைக்க சிலப்பேருக்கு விதிவிலக்கு  கொடுத்திருக்கு. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மனநோயாளிகள்,  கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை. வயதானவரகள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள் (வசதி உடையோர்) நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம். மற்றவர்கள் ரம்ஜான் மாதத்துக்கு பிறகு, தங்கள் விட்ட நோன்பை, மற்ற நாட்களில் வைக்க வேண்டுமென்பது விதி. 

ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி கொடுக்கிறார்.  அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’. இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள ஐந்து விஷயங்களில் ஒன்று.  கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகைகளின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஜகாத். ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள் வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம். முதலில் அவங்களுக்கு கொடுக்கனும்.  பிறகு, பிற ஏழைகளுக்கு கொடுக்கலாம். அடுத்தது பித்ரா. பித்ரான்னா அதுவும் ஒருவிதமான தானம்.  ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். பிறை பார்த்ததில் இருந்து ஈகைப்பெருநாளுக்கான தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஏழைக்கு பித்ரா கொடுத்துவிட வேண்டும். அரிசி அல்லது கோதுமையை ஒன்றரை படி அளவுக்கு கொடுக்கலாம். இல்லன்னா அதற்குரிய பணத்தை கொடுக்கலாம். ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்றால் 6 பேருக்கும் கணக்கிட்டு பித்ரா தர வேண்டும். ஜகாத், பித்ரா தவிர சதகா எனப்படும் பிற தர்மங்களையும் இம்மாதத்தில் அதிகம் செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துது.

இம்மாதத்தில் கடைசி பத்து நாள்களில் ஒற்றைப்பட எண்களில் (21, 23, 25, 27, 29 இரவுகள்) புனித இரவு ஒன்று இருக்கிறது. அது லைலத்துல் கத்ர் இரவு. நமக்கு சிவராத்திரி மாதிரி இஸ்லாமியர்களுக்கு இந்த ராத்திரி.  அந்த இரவில் அதிகமாக இறைவனை வழிபடுங்கள் என்கிறார் முகமது நபி. ஆனால் அது எந்த இரவு என்பதை இஸ்லாம் கூறவில்லை. அதனால் இந்த ஐந்தில் எந்த இரவாகவும் அது இருக்கலாம் என்ற படப்படப்புடன் இறைவனின் கருணையை பெற ஐந்து இரவுகளும் விழித்திருந்து பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். இம்மாதத்தின் கடைசி பத்து நாட்களில் முகமது நபி இதிகாப் இருப்பார்கள். 

இதிகாப்ன்னா  பத்து நாட்கள் மசூதியிலேயே தங்கியிருந்து வெளியிடங்களுக்கு செல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து, பிரார்த்தனை செய்யுறது. பத்து நாட்கள் இதிகாப் இருக்க இயலாதவர்கள், 5 அல்லது 3 நாட்கள்கூட இதிகாப் இருக்கலாம். இம்மாதம் முடிந்து, ஷவ்வால் மாதத்தின் முதல் நாள்தான் ஈத் எனப்படும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகை நடத்தி, தர்மம் செய்து, உறவினர்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். 30 நாட்கள் நம்மை பக்குவப்படுத்திச் சென்ற நல்ல குணங்களை அதன் பின்பும் நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இதுதான் ரம்ஜான் பண்டிகையின் நோக்கம். இதுலாம் தெரிஞ்சுக்காம பிரியாணிய மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கே. தீனிப்பண்டாரம். 

அப்ப்ப்ப்ப்ப்பாடி இத்தனை நல்ல விசயம் இருக்கா?!  பிரியாணியோடு சேர்த்து இதையுமெல்லாம் நினைவுல வச்சுக்கிடுதேன் மாமா. 


பிரியாணி சூடு ஆறதுக்குள்ள சாப்பிடனும் அதனால, இன்னிக்கு வெறும் மீம்ஸ் மட்டும் சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு போயிரலாம்...  சென்னைக்கு புதுசா போறவங்க கதி... 


அந்த காலத்து அலாரம் பீஸ்கள்....

நம்மூரு விஞ்ஞானி......

பிரியாணி செரிமானம் ஆக யோசிங்க.....

நிலா, நட்சத்திரங்கள், சூரியன்... இவைகளில் எது புத்திசாலின்னு சொல்லுங்க பார்ப்போம்....

நன்றியுடன்,
ராஜி. 

Saturday, June 24, 2017

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா! - கேபிள் கலாட்டா



வேந்தர்  டிவில பின்கோடுங்குற நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. அமிஞ்சிக்கரை முதல் அமெரிக்கா வரை எல்லா இடத்தையும் சுத்திக்காட்டுறாங்க. நிகழ்ச்சியின் முதல்பகுதியில் அந்த பகுதியின் ஊர்பெயர்க்கான காரணம், அந்த பகுதி உருவான வரலாறு உள்ளிட்ட விஷயங்களும், நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் அந்த பகுதியின் வரலாற்று பழைமை வாய்ந்த கட்டிடங்கள், புகழ்பெற்ற வழிபாட்டுதலங்களுக்கான வரலாற்று குறிப்புகளும்,  நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் அந்த பின்கோடு பகுதியில் கிடைக்கும் பிரபலமான உணவுகள், சாலையோர பிரசித்தமான உணவுவகைகள் முதலியவற்றை அந்த ஏரியாவின் மண்மனம் குறையாமல் ஒளிப்பரப்பாகுட் இந்த நிகழ்ச்சியுடைய மறுஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை இரவு 9:00மணிக்கும் ஒளிபரப்பப்பாகுது.  இந்நிகழ்ச்சியை தி.முத்துராஜ் இயக்கி, அலெக்ஸ் தொகுத்து வழங்குகிறார். 

ஜீ டிவில வீக் எண்ட்  வித் ஸ்டார்ஸ்ன்னு ஒரு நிகழ்ச்சி. திரை உலக பிரபலங்களை கூப்பிட்டு சுகாசினி பேட்டி காணுற சாதாரண நிகழ்ச்சிதான். ஆனா, மத்த நிகழ்ச்சிகளைவிட இந்த நிகழ்ச்சியை அழகாக்குறது அந்த பிரபலங்களோட குடும்பத்தினரையும் அவங்க நண்பர்களையும் அவங்களுக்கே தெரியாம சந்திக்க வைக்குறாங்க. இதுவரை அர்ஜுன், குஷ்பு, பாக்கியராஜ், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்ன்னு கெஸ்ட்டா வந்திருக்காங்க. இன்னிக்கு (23/6/2017) அன்னிக்கு நடிகை ரோஜா கலந்துக்குறாங்க.



 நேஷனல் ஜியாகரபிக் சேனல்ல இன்டியாஸ்  மெகா கிட்சன்னு ஒரு நிகழ்ச்சி முன்ன ஒளிப்பரப்பாச்சு. திருப்பதி, தர்மஸ்தலா, இஸ்கான் கோவில்,  அமிர்தசரஸ், கலிங்கா யூனிவர்சிட்டின்னு சதா சர்வ நேரமும் அன்னதானம் நடக்குற இடம், சாப்பாடு தயாராகுற இடம், அதுக்கு தேவையான மூலப்பொருட்கள் சுத்தம் செய்யுறது, அதை பாதுகாத்து வைக்குறதுன்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பாங்க. பார்க்க பிரம்மாண்டமாவும், பிரமிப்பாவும் இருக்கும். இப்ப புதுப்பொலிவோடு அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிச்சிருக்காங்க. வரும் திங்கட்கிழமை முதல் இரவு 9.00 மணிக்கு இன்னிகழ்ச்சி ஒளிப்பரப்பாக போகுது. முதல் நிகழ்ச்சி பொற்கோவில் நடக்குற அன்னதானத்தையும், உணவு தயாராகுற கிச்சனும்தான். தவறாம பாருங்க.



புதிய தலைமுறை டிவில புதுபுது அர்த்தங்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது.  அரசியல் நிகழ்வு, சமுதாய நிகழ்வினை புது கோணத்துல அலசுறாங்க.. சம்பந்தப்பட்ட தலைவர்களை கூப்பிட்டு வந்து அவர் கருத்தையும் கேக்குறாங்க.


எல்லா தெய்வத்தையும் அந்தந்த கோவில்ல போய் வேண்டிக்கிட்டாதான் வரம் கொடுக்கும், ஆனா, நம்ம குலதெய்வம் மட்டும் நாம வரம் கேட்கனும்ங்குறதுக்காகவே நம்ம வீட்டு வாசல்ல காத்திருக்கும்ன்னு சொல்வாங்க. குலதெய்வம் முதல் கடவுள். அதுக்கப்புறம்தான் மத்த கடவுள். எல்லா சாமியும் குலத்தெய்வமாகிடாது. அதேமாதிரி குலதெய்வம் கோவில் நம்ம வசிப்பிடங்களுக்கு அருகில் இருக்காது. தூர எங்கோ காட்டுல, ஏரிக்க்கரையில, வரப்புமேட்டுல இருக்கும். அப்படி இருந்தாலும் குலதெய்வம் நம்ம வாசப்படில காத்திருக்கும்.   அப்பேற்பட்ட குலத்தெய்வம் இருக்குற கோவிலை தேடிப்பிடிச்சு  அதோட சிறப்புகளை மக்கள் டிவில ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு எங்க குலச்சாமின்ற பேர்ல ஒளிப்பரப்பாகுது.


நமக்கு நம்ம பொறந்த நாள்,  கல்யாண நாள், பசங்க பிறந்த நாள், அவங்க சம்பந்தப்பட்ட நால், நம்ம மூதாதையர்கள் திதின்னு இப்படி நம்மை சார்ந்த நிகழ்ச்சிகள் நினைவிலிருக்கும். இல்லன்னா படிப்பு, நுழைவுத்தேர்வுக்காக கொஞ்சம் முக்கியமான நாட்களை நினைவு வச்சுக்குவோம். அந்த மாதிரி அன்றைய தினத்தின் வரலாற்றை வரலாறு பேசுகிறதுன்ற நிகழ்ச்சில ஒளிப்பரப்பாகுது. அந்நாளில் நடந்த  இயற்கை சீற்றம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நாட்களை திங்கள் முதல் சனி வரை மாலை 6.30க்கு ஒளிப்பரப்பாகுது. பயனுள்ள நிகழ்ச்சி.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464385


நன்றியுடன்,
ராஜி.