Friday, July 19, 2019

பாளையத்தம்மா! பெரிய பாளையத்தம்மா! - ஆடி முதல் வெள்ளி


ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகையையும், இரண்டாவது வெள்ளியன்று வழிபட வேண்டியது அங்காளம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரியை...  அங்காள பரமேஸ்வரி பத்தியும், அவள் குடிக்கொண்டிருக்கும் மேல்மலையனூர் ஆலயத்தையும் போனவருசம் ஆடி மாசத்து பதிவில்  பகிர்ந்திருக்கேன். அரைச்ச மாவையே ஏன் திரும்ப திரும்ப அரைப்பானேன்?! அதனால் இன்னிக்கு சென்னைக்கு அருகிலிருக்கும் பெரிய பாளயத்து பவானி அம்மன் கோவில் பத்தி பார்க்கலாம். அங்காள பரமேஸ்வரி பத்திய பதிவினை இங்க போய் பார்த்துட்டு வந்திடுங்க.
கண்ணனைக் கொல்வதாக நினைத்து, பெண்ணைக் கொல்லத் தூக்கி வீசினான் ஒருத்தன். அவன் கருத்தைப் பிழைப்பித்துக், கம்சன் வயிற்றில் நெருப்பென்ற நின்ற நெடுமாலே என்பது போல் பறந்தவள் பவானி! கண்ணன் போல் அவளுக்கு விளையாடக் கொடுத்து வைக்கலியேன்னு பாரதியும் கண்ணன் பாட்டின் நடுவில் இவளை எழுதினார். கிருஷ்ணர் பிறப்பு நமக்கு தெரியும்தானே?! தனது உயிருக்குயிரான தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது பிள்ளையினால் தனது உயிருக்கு ஆபத்து என்ற சாபத்தினால் பயந்த கம்சன், தனது தங்கை வாசுகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து விடுகிறான். அங்கு அவர்களுக்கு பிறக்கும் 7 குழந்தைகளை பச்சிளம் குழந்தைன்னு பார்க்காமல் கொன்று விடுகிறான்.   8வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது. ‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இவள் விஷ்ணுவின் தங்கை என்பதால் கையில் சங்கும் சக்கரமும் இருக்கு. காளியைப்போல கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப்படுகிறது. காளிதேவியே இங்கு பவானி அம்மனாக இருப்பதாக கூறப்பட்டாலும், இல்லை இங்கிருப்பது ரேணுகாதேவின்னு சொல்றவங்களும் இருக்காங்க. 

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அம்மனும், உற்சவ மூர்த்தி அம்மனும்,  அம்மன் தலை மட்டுமே இங்கு காட்சி அளிக்கின்றது.  ரேணுகாதேவிதான் இப்படி சிரசு மட்டுமே காட்சியளிக்கும் கோலத்தில் இருப்பாள். மேலும் கோவிலினுள் இருக்கும் பரசுராமன் சிற்பமே சாட்சி என்கின்றனர். ரேணுகாதேவி பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகாதேவிக் காயங்களுடன், இப்பகுதிவாழ் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் நம்ம பக்கம் ஒரு நம்பிக்கை உண்டு.  
ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார். (திருவண்ணாமலை மாவட்ட ஆரணி இல்ல. ஆரணின்ற ஆறு ஓடுவதால் அந்த ஊருக்கு ஆரணின்னு பேரு. எங்க ஊரில் ஓடுவது கமண்டலநாகநதி)

ஓய்வெடுத்த பின்,  அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சியடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகாதேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள்.

வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு  ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரகம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர். 

இத்தலத்தில் வினோதமான நேர்த்திக்கடன் ஒன்று நடக்கின்றது. அது என்னன்னா,  திருமண வரம் வேண்டி வேண்டிக்கிட்டவங்க,  திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியை கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இது திருமணமான அன்றே நடக்கின்றது. பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்வதை இன்றும் காண முடிகிறது. இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் என்பது நம்பிக்கை. குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் தனது கணவர் கடலுக்குச்சென்று நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தனது தாலிக்கொடியை அம்மன் உண்டியலில் செலுத்தி புதியதாக தாலிக்கொடியை கட்டிச்செல்கிறார்கள். 


இக்கோயில் பல வருசங்களுக்கு முன் வரை மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும்தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். 
வெளிப் பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கென தனித்தனி சந்நிதி உண்டு.  நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர்.
பாளையம்ன்னா படை வீடு ன்னு அர்த்தம். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து செங்குன்றம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் பெரியபாளையம் இருக்கு. சென்னை கோயம்பேடு, வள்ளலார் நகர், பிராட்வே, திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது. ரயில் மூலம் வரவேண்டுமானால், சென்னை சென்ட்ரல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பெரியபாளையம் வரலாம்.
ன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சியளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் காட்சி தருகிறாள். 
இக்கோவிலில் ஆண், பெண், குழந்தைகள்  என்ற எவ்வித பாகுபாடின்றி, உடம்பில் எவ்வித உடையும் அணியாமல் வேப்பிலையை ஆடையாக அணிந்து திருக்கோயிலை சுற்றி வலம் வருவது வேறு எங்கும் காணாத மிக முக்கிய பிராத்தனையாகும். அம்மை நோயினால், காலரா, வைசூரி மாதிரியான நோய்களால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாக வேண்டி, குணமானதும் வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருவதை முக்கிய பிராத்தனையாக கொண்டுள்ளார்கள்.


உடல் நலம் குன்றியவர்கள் அம்மனை வேண்டிக்கிட்டு உடல் நலம் குணமான பின்பு அங்கப்பிரதட்சனம் மூலம் திருக்கோயிலை வலம் வருவதை பிராத்தனையாக செய்றாங்க. அங்கப்பிரதட்சணத்திற்கு பதிலாய் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஈரத்துணியுடன் தேங்காயை உருட்டிக்கொண்டு வலம் வருபவர்களும் உண்டு. உருண்டு வரும் தேங்காய் எங்கு நிற்கிறதோ  அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மீண்டும் தேங்காயை உருட்டிச்செல்லனும். இதுபோன்று  திருக்கோயிலை ஒன்று அல்லது மூன்று முறை சுற்றிவருவாங்க. 

தீச்சட்டி ஏந்தி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இக்கோவிலில் தனது தலை முடியினை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவதுமுண்டு. 
 தனது குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லாமலும், விபத்து போன்றவற்றின் மூலமாகவோ உயிருக்கு போராடும் நிலையிலிருந்தால்  உயிர் கொடுப்பதாக அம்மனிடம் வேண்டிக்கிட்டு, உடல் நலம் பெற்றதும் ஆடு அல்லது கோழியை உயிருடன் திருக்கோயிலில் சுற்றிவிடுகிறார்கள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் அம்மனுக்கு கரகம் எடுப்பதாக வேண்டிக்கிட்டு திருமணம் நிச்சயமானதும், கரகத்தை மலர்களால் அலங்கரித்து, பட்டுச்சேலை உடுத்தி கரகத்தை தலையில் ஏந்தி உடுக்கை சிலம்பு வாத்தியங்களுடன் திருக்கோயிலை வலம் வருகிறார்கள். திருமணத்திற்காக இந்த பிராத்தனை செய்யப்படுவதால், இதை குடை கல்யாணம்ன்னு சொல்றாங்க.

வயிறு சம்பந்தமான நோய் கண்டவர்கள்  நோய் குணமாக அம்மனை வேண்டிக்கிட்டு குணமானதும் சக்திமண்டபம் எதிரே மல்லாந்து படுத்துக்கிட்டு தனது வயிற்றின் மீது மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். 
குழந்தை இல்லாத பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி சக்தி மண்டபம் அருகே தொட்டில் பிள்ளை கட்டி வழிபடுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை நாணயமாகவோ, அரிசி, சர்க்கரை, கற்கண்டு, வெல்லம் போன்ற பொருட்களையோ துலாபாரமாக இக்கோவிலுக்கு தர்றாங்க. 


உயிர் பலி கொடுக்கும் இடம்ங்குறதால கொஞ்சம் சுத்தம் குறைவாதான் இருக்கும். ஆனா, கோவிலுக்குள் சுத்தமா இருக்கும். கம்சனுக்குக் காளியானாள்.  சரண் புகுந்தவருக்குத் தாயுமானாள். சங்குச் சக்கரம் ஏந்தி கருவறையில் காட்சிதரும் பவானி சகலருக்கும் நல்வாழ்வு அளிக்கட்டும்! 

ஆயன் சோதரியே.. ஆஸ்தான மாரிமுத்தே.. அம்மா பவானி ஆதரிக்க வேணுமம்மா.
நன்றியுடன்,
ராஜி.

Thursday, July 04, 2019

இதுலாம் ஒரு பெருமையாம்மா?! - கைவண்ணம்

மூத்த மகளின் நிச்சயதார்த்தம், இளைய மகளின் கல்லூரி வேட்டை..இதுலாம் முடிஞ்சும் பிளாக்குலயும், கிராஃப்ட்லயும் மனசு செலுத்த முடில. எல்லாருக்கும் கூடை பின்னித்தர்றியே! ஒரே கலர்ல எனக்கொரு கூட பின்னித்தான்னு அம்மா கேட்க, அவங்களுக்காக ஒரு ரோல்ல பின்ன ஆரம்பிச்சேன்.  மே கடைசி வாரத்தில்  மூணே நாளில் முழுக் கூடையை பின்னிட்டேன். 

கைப்பிடிக்கான வயரையும் கட் பண்ணி ஒரு கைப்பிடி பின்னிட்டேன். இன்னொரு கைப்பிடி பின்ன நேரம் கிடைக்கல. திங்கட்கிழமைதான் கைப்பிடியை பின்னி முடிச்சேன். அதும் பதிவுக்காக.... இதுலாம் ஒரு பெருமையாம்மான்னு கேட்டுடாதீங்க. ஏன்னா, பேசிக்கலி ஐ ம் சோம்பேறி...


இம்ம்ம்ம்மாம்பெரிய கூடை பின்ன முடிக்கத்தான் ரெண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு மாசம் ஆச்சு.
நன்றியுடன்,
ராஜி

Wednesday, July 03, 2019

கொண்டவன் சரியில்லாத பெண்ணின் கதி என்ன?! - வெளிச்சத்தின் பின்னே...

மிருக இனத்திலிருந்து, மனித இனம் தனியாய் பிரிந்து வந்தபோது ஆணும், பெண்ணும் சரிசமமாய் இருந்தனர்.  கிடைத்த உணவை உண்டு, மரக்கிளையில் தங்கி ஒருவரை ஒருவர் சார்ந்திராமல் வாழ்ந்து வந்தனர்.  ஆணையும், பெண்ணையும் இணைக்கும் ஒரே புள்ளி செக்ஸ் மட்டுமே! பல்கி பெருகி வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களுடன் போராடி மனித இனம் வெற்றியடைய, இன்னும் மனித உயிர்கள் தேவைப்பட்டது. மனித உயிர்கள் உண்டாக மனித உடலில் செக்ஸ் சுகத்தை இயற்கை மனித உடலில் உண்டாக்கியது. சுகத்தினை அனுபவித்த மனிதன் மீண்டும் மீண்டும் செக்ஸ்சில் ஈடுபட்டான். மனித சந்ததி அதிகரித்தது. நாகரீகம் வளர வளர ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என குடும்ப அமைப்பு உருவானது. 

குடும்ப அமைப்பு உருவானது முதல் ஆணை சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை அமைந்தது. பெண் வெறும் போகப்பொருளாகவும், குல விருத்திக்கும் என சமூகம் பார்க்கப்பட்டது. ஒருசில இடங்கள் விதிவிலக்கு. இன்று அந்த நிலையில் மாற்றம் வர ஆரம்பித்துள்ளது. பெண் ரத்தமும் சதையுமான மனுஷி, அவளுக்கும் மனசு, வலி, வேதனை, ஆசை, மரியாதை உண்டு என சமூகம் உணர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இன்றும் சுய கௌரவத்துக்காகவும், சமூகத்துக்கு பயந்தும் தன்னுடைய ஈகோவிற்காகவும் பல பெண்கள் பாதிக்கின்றனர். அறிவியல், நாகரீக வளர்ச்சியும் அடைந்த இந்த காலக்கட்டத்துலயே இப்படி என்றால்!? அந்த காலத்தில்?!... அப்படி சுய கௌரவம்,  வாரிசு போட்டி, பழி உணர்ச்சி.. இவற்றால்  பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிதான் இன்றைய வெளிச்சத்தின் பின்னே பார்க்கப்போகின்றோம்...

கொண்டவன் சரி இருந்தால் கூரை மேலேறி சண்டைப்போடலாம்..ன்னு எங்க ஊரில் சொல்வாங்க. அது எத்தனை சரி என்பதற்கு மகாபாரதத்தில் வரும் காந்தாரி சிறந்த உதாரணம். குணநலம் சரியில்லாத கணவன்,சொல்பேச்சு கேட்காத  பிள்ளைகள் , அவர்கள் இரு தரப்புக்கும், பதவி சண்டையை ஊதி பெரிதாக்கி தனது பழி உணர்ச்சியை தீர்க்க காத்திருக்கும் சகோதரன் என முத்தரப்பு ஆட்களிடம் சிக்கிய ஒரு பெண், எத்தனை பேரழகியாய், குணநலனில் சிறந்தவளாய் இருந்தாலும், அவளின் அத்தனை நல்ல விசயமும் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டுவிடும்.  ஒரு பெண்ணின் நடத்தை போற்றப்படுவதும், தூற்றப்படுவதும் கட்டிய கணவனால் மட்டுமே! இதற்கு சிறந்த உதாரணம் காந்தாரி
.

காந்தாரி காந்தார நாட்டின் இளவரசியாகும். காந்தார நாட்டு மன்னனான சுலபனின் மகள்தான் இந்த காந்தாரி. காந்தாரி தாய் தந்தையரால் மட்டுமல்ல தனது சகோதரர்களாலும் பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டாள்.    காந்தார நாட்டில் பிறந்ததால் காந்தாரின்னு பேர் வந்ததா இல்ல  காந்தம் மாதிரியான கண்களைக் கொண்டதால் அந்தப்பேர் உண்டாச்சான்னு தெரில. காந்தாரிக்கு அத்தனை அழகான கண்கள்.  அழகும் இளமையும் நற்பண்புகளோடு காந்தாரி வளர்ந்து வரும் வேளையில், அரசப்பரம்பரையில் பிறந்ததால் ஆயுதக் கலையிலும் பயிற்சி பெற்றாள் காந்தாரி. எல்லாவிதமான ஆயுதங்களையும் சுலபமாகக் கையாளும் திறனை பெற்றாள். 


காந்தாரிக்கு திருமணப்பருவம் வந்தது. தனது திருமணத்தை பற்றியும், தனக்கு வரப்போகும் கணவனை பற்றியும் பல்வேறு கனவுகளை காண ஆரம்பித்தாள்.  தனக்கு திருமணத்திற்குப்பின் நூறு குழந்தைகள் பிறக்கவேண்டுமென  சிவப்பெருமானிடம் வரம் வாங்கினாள். ஆனால், அவள் ஜாதகரீதியாக அவளது முதல் கணவன் இறந்துவிடுவான் என்று இருந்ததை அறிந்த சுலபன், தனது மகளுக்கு திருமணம் நடக்குமா என பரிதவித்து வந்தான்.

Image result for காந்தாரி


அதேசமயத்தில்  பீஷ்மர் தன் குலம் தழைக்க, குரு குலத்தின் வாரிசுகளான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் பெண் தேடிக்கொண்டிருந்தார். இதில் காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கும், யாதவ குல மன்னனான சூரசேனனின் மகளும், குந்தி போஜனின் வளர்ப்பு மகளுமான குந்தி மற்றும் மத்ர இளவரசி மாத்ரியை பாண்டுவுக்கும் மணம் முடிக்க விரும்பினார்.  பீஷ்மரின்  பெண் கேட்டு வந்த தூதினை சுலபன்   உடனே ஏற்கவில்லை. அறிவும் அழகும் ஆற்றலும் நிரம்பிய தன் மகளை ஒரு குருடனுக்கு மனைவியாக்குவதா என்ற எண்ணம் அவனை வாட்டியது. அதன்பின் குரு குலத்தின் அருமை பெருமைகளை மனதில் கொண்டு பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துவைக்க சம்மதிக்கிறான். ஆனாலும், மகளுக்கு இருந்த தோஷம் அவனை கவலை அடையச் செய்தது. அதனால் தோஷம் நீக்குவதற்கு பரிகாரமாக, ஒருவரும் அறியாமல் ரகசியமாக ஒரு ஆட்டுக்கடாயை அவளுக்கு மணம் செய்து வைத்தபின் அதை வெட்டி பலி கொடுத்து விடுகின்றனர். அதன்படி காந்தாரி ஆட்டுக்கடாவான தன் முதல் கணவனை இழந்த விதவையாகிறாள்.  அதன்பின்னர் திருதராஷ்டிரன் இரண்டாம் கணவனாகிவிடுவதால் அவன் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்ற ஜோதிடக்கணக்கு சரியாகிவிடுகிறது. (ஆனால் இதுவே காந்தார நாட்டு வாரிசுகளுக்கும், அதன்பின் குருகுல வம்சம் நாசமாவதற்கும் காரணமாகிவிடுவது தனிக்கதை).
Image result for காந்தாரி

பீஷ்மர் பெண் கேட்டு வந்து, காந்தாரியின் திருமணத்திற்காக சுலபன்  யோசிக்கும்போது , திருதிராஷ்டிரனை மணக்க காந்தாரி தனது  சம்மதத்தை தெரிவித்தாள்.  குருடனானாலும் தன் கணவன் மூத்தவன், அரசக்குமாரன், குலத்தில் சிறந்தவன்,  என பல்வேறு காரணங்களால் மனம் தேற்றிக்கொண்டாள். சகல சீர் வரிசைகளுடனும், பரிசுகளுடனும் தன் தமக்கையை காந்தார நாட்டிலிருந்து பாரதத்திற்கு அழைத்துச் செல்கிறான் சகுனிஅங்கு காந்தாரியையும் சகுனியையும் சகல மரியாதைகளோடு  வரவேற்க பீஷ்மர் ஏற்பாடு செய்கின்றார்.  திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெறுகிறது. தன் கணவன் பார்வையற்றவனாக இந்த உலகை காண முடியாதவனாக இருந்த காரணத்தால்,  தானும் இனி இவ்வுலகை காண மாட்டேன் என்று தன் கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொள்கிறாள் காந்தாரி.
எல்லா பெண்களுக்கும் மாமியார் வீடென்பது  சகல வசதிகளும் இருக்கும்போதே,  கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரிதான், இதில் முன்பின் தெரியாத இடத்தில், மனிதர்கள் குணநலன் புரிபடாதபோதும் தன் கண்ணையே கட்டிக்கொள்ள காந்தாரிக்கு எத்தனை மனோதைரியம் வேண்டும்?!   இத்தனை காலம், இயற்கை அழகையும், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சிற்பம், சித்திரம், அழகுக்கலை.. என அத்தனையையும் ராஜக்குமாரியாய் பட்டாம்பூச்சியாய் சுற்றித்திரிந்து பறந்து ரசித்து வந்தவள் தன் கணவனுக்காய அதும் பிறவியிலேயே பார்வை இல்லாதவனுக்காக உலகை இனி காண மாட்டேன் என் முடிவெடுக்க எத்தனை பெண்கள் துணிவாங்க?!

காந்தாரி இப்படி ஒரு முடிவெடுக்க அவளை எது தூண்டி இருக்கும்?! கணவன் மீதிருந்த அன்பா?! அல்லது பதிவிரதாத்தனமா?! மனதிடமா?! அல்லது பட்டத்து ராணியாகும் அவளது ஆசை பொய்த்து போனதா?!  இருந்தும் மணிமுடி மறுக்கப்பட்டவனாய் இருக்கும் கணவனுக்கு வாக்கப்பட்டவள்தானே தனக்கு  எதற்கு பார்வை என்ற விரக்தியா?! எது அவளை தூண்டியது என்பதை காந்தாரியின் மனது மட்டுமே அறியும். எது எப்படியானாலும் அத்தனை அறிஞர்களும், மதியூக மந்திரிகளும் பெரியோர்களும் நிறைந்த சபையில் அவள் கண்ணைக் கட்டிக் கொண்டபோது 'ஏன் இப்படிச் செய்கிறாய் காந்தாரி? உனது அன்பை அபிமானத்தை காதலை கற்பைக் காட்ட இது சரியான வழி இல்லை. இயற்கையிலேயே பார்வை இழந்தவனும் நீயும் ஒன்றல்ல. உன் துணையால் அவனை வழி நடத்தவும், உன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்திடவும் உன் பார்வையும் கவனிப்பும் அவசியம் என்று அவளுக்கு எடுத்து சொல்ல ஒரு நாதியும் அந்நாட்டில் இல்லாதது கொடுமையே! 

மற்றவர்கள் எப்படியோ போகட்டும். கட்டிய புண்ணியவானும்கூட, காந்தாரி, இது தியாகமல்ல! உன்னை நீயே வருத்திக்கொள்ளும் செயல். இனி வாழ்நாள் முழுமைக்கான கொடுமை இது., பார்வை இல்லாமல் நான் படும் துயர் போதும், கண் இருந்தும் நீ ஏன் குருடாய் அலைய வேண்டும் என திருதிராஷ்டரனும் அவளை தடுக்காதது அவள் செய்த பாவமே!  இது பதிவிரதாத்தனம், கற்பு என எல்லாரும் சிலாகித்தனரே தவிர எக்காரணமும் இன்றி அவள் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை என அவளை மறுத்துக்கூற எவரும் முன்வரவைல்லை. 
Related image
கணவன்தான் தகுதி இருந்தும் பார்வையற்றவன் காரணத்தால் அரசப்பதவி மறுக்கப்பட்டதால்,  தனக்குப் பிறக்கும் குழந்தைகளாவது நாடாளும் ஆசியைப் பெறட்டும் என்று ஏங்கி இருந்தவளுக்கு விதியும் சேர்ந்தே சதி செய்தது. பத்து மாத கருக்காலம் தாண்டியும் அவளுக்கு பிள்ளை ஈன்றெடுக்கும் நேரம் வரவில்லை. குந்திக்கு முதலில் குழந்தை பிறந்து குரு வம்சத்தின் வாரிசை பெற்றுவிட்டாள் என்ற செய்தி அவளுக்கு அளவில்லாத துக்கத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது. விதி இந்த விஷயத்திலுமா தன்னை வஞ்சிக்க  வேண்டும் என மனம் நொந்தாள். நூறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வரம் வாங்கியும், கடவுளும் தன்னை வஞ்சிக்கப்பட்டவளாக உணர்ந்தாள். 
Related image
அக்கோபத்தில் ஏமாற்றத்தில் தன் வயிற்றை தடியால் அடித்துக்கொள்ள, மாமிசப்பிண்டம் தசையும் ரத்தமுமாக வெளியேறியது. அப்போது அங்கு வந்த வியாசர் அப்பிண்டங்களை சுத்தப்படுத்தி சம பாகங்களாகப் பிரித்தார். 100 பாகங்களும் மிச்சமாக ஒரு சிறிய பாகமும் தேறியது. அவற்றை நூற்றி ஒரு கிண்ணங்களில், பசு நெய்யை நிரப்பி அதில் போட்டு வைத்தார். உரிய காலம் ஆனதும் முதல் கிண்ணத்திலிருந்த பாகம் துரியோதனானகவும், அடுத்த கிண்ணத்தில் இருந்தது துச்சாதனாகவும் மற்றும் ஏனைய எல்லாம் அவனது சகோதரர்களாகவும் பிறப்பெடுத்தனர். கடைசி கிண்ணத்தில் இருந்த பிண்டம் துச்சலை என்ற பெண் குழந்தையாக உருவெடுத்தது. 
Image result for துரியோதனன்
துரியோதனன் பிறந்த நேரம் சரியில்லை என அரண்மனை ஜோசியர்கள் கூறினர். குல அழிவு துரியோதனனால் ஏற்படும் என்றும்,  அவனை மட்டும் குழந்தையாய் இருக்கும்போதே அழித்து  விடும்படியும் கூறினர். இதுவரை குழந்தை பிறக்கவில்லையே என்ற வேதனை. இப்போதோ,  பிறந்த குழந்தையை அழிக்க வேண்டும் என்ற சோதனை. பாவம் ஒரு பெண் எத்தனை இன்னல்களை மன உளைச்சல்களைத்தான் தாங்குவாள்?! 
Image result for காந்தாரி

கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே வளர்ந்து வந்த பகையை போக்க எத்தனையோ அறிவுரைகள் சொல்லியும் அதை கௌரவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம், திருதிராஷ்டிரனும், சகுனியும்...  இருவரின் பங்காளி சண்டை பாரதப்போரில் கொண்டு வந்து நிறுத்தியது. பாரதப்போர் நெருங்கியது... பாரதப் போருக்குமுன் துரியோதனும் அவனது சகோதரர்களும் ஆசிப்பெற காந்தாரியின் கால்களின் விழுந்தபோது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி் உண்டு’ என்றுக்கூறி மறைமுகமாய் புத்தி சொன்னாள். வியாசர் அளித்த வரத்தினால்,  போரை அவள் கண்மூடி இருந்த போதும் நேரில் பார்ப்பது போலவே பார்த்தாள். தனது ஒவ்வொரு மகன்களும் பாண்டவர்களால் அழிக்கப்படும்போது அவளது உள்ளம் பட்ட பாட்டை விளக்க வார்த்தைகள் இல்லை. அறநெறிக்கு புறம்பாக இருந்தாலும் தாய்க்கு தன் பிள்ளைகள் பிள்ளைகள்தானே?!


Image result for gandhari'
தர்மமே ஜெயிக்கும் என்று தெரிந்திருந்தபோதும், தன் மகன் போரில் வெற்றிப்பெற, எந்த ஆயுதத்தாலும் தன் மகன் பாதிக்கப்படாமல் இருக்க, துரியோதனன் உடல் வஜ்ரம் போல மாறவேண்டும் என ஜோதிட சிகாமணியான சகாதேவனிடம் காந்தாரி யோசனை கேட்டாள்.  உலகம் போற்றுதலுக்குரிய அரிய குணநலன்கள் கொண்ட அன்னையே! கணவன் காணாத உலகத்தை நான் காண்பதில்லை என சபதமேற்று நீ கண்ணை மூடிக்கொண்டாய். இயற்கை அதிசயங்களை காணாதது மட்டுமில்லாமல் தீயவற்றையும் காணாததால், உனது கண்களுக்கென ஒரு அபூர்வ சக்தி உள்ளது. அவற்றினால் உனது மகனை பிறந்த மேனியுடன் கண்டால் அந்த சக்தி உனது மகனின் உடலை வஜ்ரம் போலதாக்கிவிடும்.எந்த ஆயுதத்தாலும் அவனை வீழ்த்தமுடியாது என ஆலோசனை தந்தான். 
Image result for காந்தாரி

வளர்ந்த பிள்ளையை உடையில்லாமல் காண்பதா?! என யோசித்தாலும், துரியோதனின் நலன் கருதி அப்படியே செயல்படுத்த காந்தாரி முடிவெடுத்து துரியோதனனை பிறந்த மேனியாய் வரச்சொல்லி ஆள் அனுப்பினாள்.   துரியோதனும் பிறந்த மேனியாய் அன்னையின் அரண்மனை நோக்கி வந்தான். இந்த விசயம் கேள்விப்பட்ட கிருஷ்ணர், துரியோதனன் வரும் வழியில் ஒரு தோட்டக்காரன் வேடம் கொண்டு, மன்னா! என்ன இது கோலம் என துரியோதனனை இடைமறித்து நின்றான். சகாதேவனின் ஆலோசனையையும், அன்னையின் ஆணையையும் துரியோதனன் சொன்னான். மன்னா! வளர்ந்த பிள்ளையை உடை இல்லாமல் தாய் காண்பது அறமாகாது. அப்படி கண்டால் தாயின் கோவத்துக்கு ஆளாகி, தாங்கள் எரிக்கப்படுவீர்கள். அதனால், நீங்கள் பிறப்பு உறுப்பு மறைக்கும்படும்படி இடையில் மட்டுமாவது எதாவது ஒரு சிறு துணியை கட்டிக்கொண்டு செல்லுங்கள் எனக்கூறினார். துரியோதனனும் மனம் குழம்பியவனாய் சிறு துண்டு கட்டிக்கொண்டு அன்னையின்முன் சென்றான்.

Image result for காந்தாரி துரியோதனன்
இதையறியாத காந்தாரி, கண்களை திறந்து துரியோதனனை பார்க்க, துணி மூடி இருந்த இடை மட்டும் பலவீனமாகவும், துணியினால் மூடப்படாத மற்ற பாகங்கள் வஜ்ரம் மாதிரி உறுதியாகவும் ஆனது. திரௌபதியை எந்த தொடையில் வந்து அமரச்சொன்னாயோ! அந்த தொடையை பிளந்து ரத்தமெடுத்து திரௌபதி கூந்தலில் தடவி உன்னைக்கொல்வேன் என எடுத்த சபதம் அவளது நினைவுக்கு வந்தது.  ஏன் இப்படி வந்தாய் என துரியோதனனிடம் விசாரிக்க, தோட்டக்காரனுடன் நடந்த உரையாடலை சொன்னான். இது கிருஷ்ணனின் சதி என்பதை காந்தாரி உணர்ந்து விதியின் விளையாட்டை எண்ணி மனம் வருந்தினாள்.
Image result for காந்தாரி துரியோதனன்
குருஷேத்திரப்போரில் துரியோதனன்  வீழ்ந்தான். அவனை மடியில் கிடத்தி அழுததோடு, குருஷேத்திர போருக்கு காரணமான கிருஷ்ணருக்கு, அவரது  யதுகுல வம்சம், 36 ஆண்டுகளுக்குப்பின்னர் அழிவினை சந்திக்க வேண்டுமெனவும், என்னைப்போலவே தனது வாரிசுகளின் மடிவதை கண்டபின்னர் கிருஷ்ணரும் இறக்க வேண்டுமென சாபமிட்டாள். 
Image result for குந்தி காந்தாரி

திருமணத்திற்குமுன் தனக்கிருந்த தோஷத்தால், ஆட்டுக்கடாயை திருமணம் செய்து கொண்டு, அதை பலி கொடுத்த சடங்கின்மூலம், தனது  முதல் கணவன் நிலைக்க மாட்டான் என்ற தோஷம் நிவர்த்தி செய்யப்பட்ட விவரம், பீஷ்மருக்கு தாமதமாக தெரிய வந்தது. தன் குலத்திற்கு ஒரு விதவை மருமகளாக வருவதா? இந்த விஷயம் மற்றவர் அறிந்தால் இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணி, அந்த ரகசியம் தெரிந்த சுலபன் குடும்பத்தினர் ஒருவரையும் விடாது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதன் காரணமாக அவர்களை குடும்பத்துடன் சிறை வைத்து ஒரு பிடி உணவு மட்டுமே கொடுத்து அழிக்க   முயன்று, எல்லாரும் ஒரு பிடி உணவு உண்டு உயிர் வாழமுடியாது என்பதை உணர்ந்த சுலபனும், அவரது மகன்களும் தங்களுடைய உணவினை சகுனிக்கு தந்து அவனை உயிர்பிழைக்க வைத்து தாங்கள் உயிர் விட்டதாகவும், தந்தை, சகோதரர்களின் மரணத்திற்கு பழி வாங்கவே  குருகுலத்தை பழிவாங்கி சகுனி அழித்தான். ஆக, சகோதரனாலும் காந்தாரி வஞ்சிக்கப்பட்டாள். 
Image result for குந்தி காந்தாரி
கடவுள், தந்தை, குலகுரு, கணவன், சகோதரன் என அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட காந்தாரியின் வாழ்க்கை  மன அமைதியின்றி, தவிப்பு, சோகம் பதட்டம் நிறைந்ததாகவே அவள் வாழ்க்கை இருந்தது.  தன் கணவன் பார்க்காத உலகை நானும் பார்க்கமாட்டேன் எனக்கூறி தன் கண்ணை கட்டிக் கொண்டதிலாகட்டும், தனது வாரிசுகள் அரியணையில் ஏறவேண்டுமென்ற ஆசைக்கு குந்தி புத்திரர்கள் தடையாய் இருந்தாலும், குந்தியையும், பாண்டவர்களையும், மருமகள் திரௌபதியை அரவணைத்து சென்றதிலாகட்டும், திரௌபதியை துகிலுரித்ததை கண்டித்தலாகட்டும்,  பாண்டவர்கள் போருக்கு போகும்முன் ஆசிப்பெற வந்தபோதிலும், அறம் உள்ள பக்கம் ஜெயிக்கட்டும் என கூறியதில் ஆகட்டும்,போரில் தனது நூறு மகன்களையும் இழந்து சோகத்தில் இருக்கும்போதும்,  போரில் வெற்றிப்பெற்று தன்னைச் சந்திக்க வந்த பாண்டவர்களை எதிரிகளே ஆனாலும் தன் வருத்தத்தையும் கோபத்தையும் அளவோடு வெளிப்படுத்தி அவர்களை அரவணைத்துச் சென்றதிலாகட்டும் காந்தாரி கற்புக்கரசி மாத்திரம் அல்லாமல் திட சித்தமும், மன உறுதியும் கொண்ட வெற்றிகரமான பெண்மணி ஆகிறாள். 
எத்தனை திறமைகள், நல்ல குணநலன்கள் இருந்தாலும் துரியோதனின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக, அவளும் வில்லியாகவே இந்த உலகம் பார்க்க வைக்கப்பட்டிருக்கு. தியாகம், அன்பு, அழகு, குணநலன், அறிவு என அத்தனை திறமைகள் இருந்தபோதும், அனைத்து தரப்பினாலும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை வெளிச்சத்தின் பின்னே இருளில் கிடக்கின்றது....

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

Tuesday, July 02, 2019

ஈசியாய் செய்யலாம் பூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கறிக்குழம்புக்குக்கூட ஊறுகாய் தொட்டுக்கும் ஆள் நான், மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், கிச்சிலிக்காய்...ன்னு விதம் விதமா வத்தல் போட்டு வருசம் முழுக்க வெரைட்டியாய் ஊறுகாய் சாப்பிட்டாலும், பூண்டு, தக்காளி, பிரண்டை..ன்னு இன்ஸ்டன்டா செஞ்சு சாப்பிட்டாதான்  சாப்பிடுறதுலயே ஒரு திருப்தி வரும்.

செமஸ்டர் லீவ் முடிஞ்சு மகனார் ஹாஸ்டல் கிளம்புறதால அவருக்கு தேவைன்னு கொஞ்சம் பூண்டு ஊறுகாய் செய்தோம்.. அப்படியே பிளாக்குக்கும் கொஞ்சம் தொட்டுக்க படம் எடுத்தாச்சுது...

தேவையான பொருட்கள்..
பூண்டு - கால் கிலோ
புளி - 100கிராம்
காய்ந்த மிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு,
நல்ல எண்ணெய் - 50 m.l
கடுகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
மஞ்சப்பொடி - ஒரு சிட்டிகை
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

செய்முறை: 
பூண்டினை உறிச்சு சுத்தம் செய்து கழுவி ஈரம் போக காய வச்சுக்கனும்.  மிளகாயை தண்ணில ஊற வச்சுக்கனும், புளியை ஊற வச்சுக்கனும். கடுகு ஒருஸ்பூன், வெந்தயத்தினை வெறும் வாணலியில் வறுத்துக்கனும்.  வெந்தயம் அதிகம் வறுபட்டால் கசக்கும். அதனால் பொன் முறுவலா வறுத்துக்கிட்டா போதும்..
புளியை கெட்டியாய்  கறைச்சு  வடிக்கட்டிக்கனும். பூண்டு, மிளகாயினை புளித்தண்ணி சேர்த்து மைய அரைச்சுக்கனும்...

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமிருக்கும் கடுகினை போட்டு பொரிய விடனும்.. கறிவேப்பிலையும் சேர்த்துக்கலாம்.  
கடுகு பொரிஞ்சதும் அரைச்சு வைத்திருக்கும் பூண்டு விழுதினை சேர்த்து நல்லா வதக்கனும். மிக்சியை கொஞ்சமா தண்ணி ஊத்தி கழுவி  ஊறுகாயில் சேர்க்கலாம். ஒன்னும் ஆகாது.
தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கனும்.... ஊறுகாய், வத்தல் மாதிரியான நாட்பட வைத்திருக்கும் பொருட்களுக்கு கல் உப்பு சேர்ப்பதே சரி. 
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்..
பெருங்காயப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடனும். வெளிலலாம் தெரிக்கும். அதனால், வாணலியை மூடிப்போட்டு வைக்குறது நல்லது. 
தண்ணிலாம் வத்தி, எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுடனும்.
வறுத்து வச்சிருக்கும் கடுகு, வெந்தயத்தினை பொடி செய்துக்கனும்....
ஊறுகாயினை ஒருநாள் முழுக்க வெயிலில் வைக்கனும். பின்னர், பொடிச்சு வச்சிருக்கும் கடுகு, வெந்தய பொடியினை சேர்த்து நல்லா கலந்துக்கனும். 
சுவையான பூண்டு ஊறுகாய் தயார். பழைய சாதம், தயிர் சாதம், கூழ், எலுமிச்சை சாதம், க்குலாம் இந்த ஊறுகாயினை தொட்டுக்க செமயா இருக்கும்.  வெளில வச்சாலும் 15 நாள் முதல் ஒரு மாசம் வரை தாங்கும். ப்ரிட்ஜில வச்சா இன்னும் கூடுதல் நாட்களுக்கு வரும். 

குறிப்பு: எந்த ஊறுகாயாய் இருந்தாலும் காத்து புகாம இறுக மூடி வைக்கக்கூடாது. கடையில் இருக்கேன்னு கேட்டால் அதில் ரொம்ப நாட்களுக்கு கெடாமல் இருக்க, வினிகர் மாதிரியான ரசாயண கலவை இருக்கும். வீட்டில் அதுலாம் சேர்ப்பதில்லை. அதனால், ஒரு ஸ்பூன் போட்டு அதுமேல மூடி போட்டு மூடி வச்சால் போதும். நேரம் கிடைக்கும்போது வெயிலில் வச்சு எடுத்ஹ்டால் சீக்கிரத்துல கெட்டு போகாது.

நன்றியுடன்,
ராஜி

Monday, July 01, 2019

பால் கவரை வெட்டுறதுக்குமுன் இதை படிங்க! - ஐஞ்சுவை அவியல்

மாமா இன்னிக்கு என்ன நாள்ன்னு தெரியுமா?!
ம்ஹூம் தெரியலியே!
Image result for பிதான் சந்திர ராய்
இன்னிக்கு மருத்துவர்கள் தினமாம். மாபெரும் மருத்துவ மேதையும், மேற்கு வங்க மாநிலத்தின் 2வது முதல்வராய் இருந்த மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தைத்தான் மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுது. பீகார் மாநிலம், பான்கிபூரில் 1882 ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி பிதான் சந்திர ராய் பிறந்தார். இவரது தந்தை சப் கலெக்டராக பணியாற்றியவர். பள்ளிப்படிப்பை பாட்னாவிலும், கல்லூரி படிப்பை கல்கத்தா பிரசிடென்சி காலேஜிலும், பாட்னா கல்லூரியிலும் முடித்தார். பெங்கால் பொறியியல் கல்லூரியிலும், கொல்கத்தா மருத்துவ கல்லூரியிலும் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தார். இரண்டிலும் பிதான் சந்திர ராய்க்கு இடம் கிடைத்தது. ராய் மருத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்தார். மருத்துவ மேற்படிக்காக அயல்நாட்டுக்கு சென்றார். அங்கு, ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை தொடர்ந்தது ஒரு சாதனை என்றால், இரு படிப்பையும் இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது இன்னொரு சாதனையாகும்.
Image result for பிதான் சந்திர ராய்
கொல்கொத்தா மருத்துவ கல்லூரியிலும், வேறு சில மருத்துவகல்லூரியிலும் பேராசிரியராய் பணியாற்றினார். 1928ல் இந்திய மருத்துவ நிறுவனத்தின் நிர்வாகியாய் இருந்தார். 1931ல் கொல்கத்தா மேயராய் பதவி வகித்தார். 1948ல் காங்கிரஸ் மீதான ஈடுபாட்டினால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டார். காந்திஜி, நேரு உட்பட பலருடன் சேர்ந்து பணியாற்றினார். ’பிதான் தா’(பிதான் அண்ணா) என சக காங்கிரஸ்காரர்களால் அழைக்கப்பட்டார். உடலும், மனமும் ஆரோக்கியமாய் இருந்தால்தான் கடுமையாய் பாடுபடமுடியும் என விடுதலை வேட்கையோடு ஆரோக்கியத்தையும் சேர்த்தே மக்கள் மனதில் விதைத்தார்.
வறுமையில் தவித்த மக்களின் நல்வாழ்க்கைக்காக, ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை உருவாக்கினார். சுதந்திரத்திற்கு பின்னர், வங்காளத்தின் முதல்வராய் சந்திர பிதான் ராய்தான் பதவி ஏற்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் விரும்பினர். ஆனால், தனது மருத்துவ சேவைக்கு பதவி தடையாய் இருக்குமென மறுத்துவிட்டார். ஓராண்டுக்கு பின்னர் காந்திஜியின் ஆலோசனைப்படி வங்காளத்தின் முதல்வராய் பதவியேற்றார். வேலையின்மை, பஞ்சம், பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளின் தொல்லை என பலவற்றை சமாளித்து வங்காளத்தை இவரது தலைச்சிறந்த நிர்வாக திறமையால் மீட்டெடுத்தார். 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு  தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். இவர் பதவியில் இருந்தபோது வங்காளம் அபார வளர்ச்சி கண்டது,. அதனால், வங்காளத்தின் சிற்பி எனவும் போற்றப்பட்டார்.  முதல்வராக இருந்தபோதும், தான் நேசித்த மருத்துவதுறையினை விடாமல், ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்தார். தனது வீட்டையும் தனது இறப்புக்கு பின்னர் மருத்துவமனையாக மாற்றப்படவேண்டுமென உயில் எழுதி வைத்தார். இவரது சேவையினை பாராட்டி 1961ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1982ல் தபால் தலையினையும் இந்திய அரசு வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தது. மருத்துவம், நிர்வாகம், அரசியல் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பிதான் சந்திர ராய் தன்னோட 80வது வயதில் தன் பிறந்த நாளன்றே இயற்கை எய்தினார். அவரது சேவையினை மதிக்கும் விதமா அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பி.சி.ராய் விருது அளிக்கப்படுவதோடு ஒவ்வொரு ஜூலை 1னை இந்திய மருத்துவர்கள் தினமாய் கொண்டாடப்படுது.
இதுவரை தெரியாத தகவலை தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி புள்ள! அதேமாதிரி உனக்கு தெரியாத தகவலை நான் சொல்றேன். அதை நீ தெரிஞ்சுக்கிட்டு அதன்படி நடந்துக்க.
நம்ம வீட்டில்தான் ஸ்டோர்ல போய் பால் வாங்கி வர்றோம். ஆனா, டவுனில் பெரும்பாலும் எல்லார் வீட்டுலயும் பாக்கெட் பால்தான். பால் பாக்கெட்டை வாங்கி வந்து ப்ரிட்ஜில் வச்சுக்கிட்டு தேவைப்படும்போது, பாலிதீன் பாக்கெட்டின் மூலையில் கட் பண்ணி பாத்திரத்தில் ஊத்தறோம். இங்கதான் ஒரு விசயத்தை கவனிக்கனும். 200ml அல்லது அரை லிட்டரோ அல்லது ஒரு லிட்டர் பாலோ எல்லாரும் இப்படிதான் செய்வோம். பால் ஊத்தி கொஞ்சமா தண்ணி ஊத்தி அலசி பாத்திரத்தில் ஊத்திட்டு பால் கவரை சேர்த்து வச்சு பேப்பர் காரர்கிட்ட கொடுத்து காசாக்கிடுவோம். இதுல காசு வந்துச்சுன்ற பெருமையோடு கவரை குப்பைல போடலைன்னு இன்னொரு சமாதானமும் பண்ணிக்குவோம். பால் கவரை யோசிச்ச நாம, பால் பாக்கெட் மூலையில் வெட்டி வீசிய சின்ன துண்டினை என்னிக்காவது யோசிச்சிருப்போமா?!
யோசிச்சதில்லையே மாமா!
யோசிக்க மாட்டோம். ஏன்னா நம்ம டிசைன் அப்படி. வெட்டி வீசப்பட்ட அந்த சின்ன பாலிதீன் துண்டு என்னாகும் தெரியுமா?! கண்ணுக்குத்தெரியாத பல லட்சம் பாலிதீன் துண்டுகள், மண்ணிலும், நீர் நிலைகளுக்கும் போய் சேருது. சென்னையில் ஒரு நாளில் சுமார் 25 லட்சம் லிட்டர் பால் பாக்கெட் செலவாகுது. 200ml, அரை லிட்டர், ஒரு லிட்டர் பாக்கெட்டுனு கணக்கு பண்ணா சுமார் 40 லட்சம் வெட்டப்படுது. இதில் குறைஞ்சது 25 லட்சம் துண்டாவது மண்ணில் வீசப்படும். இது வெறும் பால் பாக்கெட் கணக்கு மட்டும்தான். தயிர், மோர், தண்ணி பாக்கெட், எண்ணெய், ஷாம்பு, மசாலா பாக்கெட்ன்னு நீளும்.. அப்படி கணக்கு பார்த்தால் எத்தனை லட்சம் சின்ன துண்டுகள் தினமும் மண்ணுக்குள் போகுதுன்னு பார்த்தால் தலையே சுத்தும்.

இப்படி வீசப்படும் சின்ன துண்டு கழிவுநீர் காவாயில் அடைச்சுக்கும், கடல், ஏரி, குளம் குட்டைல இருக்கும் உயிரினத்துக்கு பேராபத்தா முடியும். அதனால் இனிமே, எண்ணெய், ஷாம்பு, பால், தயிர்ன்னு எந்த பாக்கெட்டை வெட்டினாலும் மேல படத்தில் காட்டி இருக்குற மாதிரி வெட்டனும். இதை நினைவில் வச்சுக்க.

நினைவில் வச்சுக்கிறேன் மாமா. நீயும் இன்னும் ஒன்னை நினைவில் வச்சுக்க. கடவுளினால் ஆகாதது ஒன்னும் இல்ல. எல்லாம் அவன் காப்பாத்துவான்னு சொல்லிக்கிட்டு திரியிறியே! இந்த பிள்ளையை ஏன் கடவுள் காப்பாத்தலை!? கேட்டால் கர்மான்னு ஒற்றை வார்த்தையில் முடிச்சுடுவீங்க. கடவுளுக்கு பிடிச்ச மாதிரி அவரை கும்பிட்டுக்கிட்டே இருந்தால் மார்க்கண்டேயன், சத்யவான் மாதிரி அவர்களது கர்மா மாத்தி அமைக்கப்படும். கும்பிடலைன்னா இப்படி வேதனைப்படனுமா?!


பிட்டுக்கு மண் சுமந்தபோது  மனித உருவில் வந்த இறைவனின்மீது விழுந்த பிரம்படி  அனைத்து உயிரினத்தின்மீதும் பட்டதாம். அதுமாதிரி இந்த சிறுவனின் வலி இறைவனுக்கு உணர்ந்திருக்கனுமே! கோவில் அன்னதானத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தின் சிறுவன் சரிக்கு சமமா உக்காந்தன்னு சொல்லி அடுப்பிலிருந்த தோசைக்கல்மீது உக்கார வச்சிருக்கு, இதை பார்த்திட்டிருந்த உன் சாமியை என்ன சொல்ல?!

இந்தா புள்ள! இதுக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னா.....

நீ வாய மூடிக்கிட்டு இரு போதும்.  எல்லாமே மாயை. அதில் ஆன்மீகம் மட்டும் விதிவிலக்கில்லை. இந்த விளம்பரங்கள் மாதிரி பில்டப் கொடுத்த விசயம்தான் கடவுளும்.... இதை சொன்னா என்மேல் கோவம் வரும். எனக்கு ஏகப்பட்ட வேலை கெடக்கு.. நான் போறேன்.. 
இந்த விளம்பரங்களை பார்த்துட்டு நீங்களும் கிளம்புங்க!

நன்றியுடன்,
ராஜி