செவ்வாய், ஏப்ரல் 25, 2017

காய்ச்சலின்போது சாப்பிடும் சிகப்பு கொண்டைக்கடலை சாறு ரசம் -கிச்சன் கார்னர்

கொண்டைக்கடலைன்னு சொல்லப்படுற  மூக்குக்கடலையில் வெள்ளை மற்றும் சிவப்பு என ரெண்டு வகையுண்டு. ஒன்னு வெள்ளை கொண்டைக்கடலை. இதை ”சென்னா” ன்னும் சொல்வோம். இன்னொண்ணு நாம அதிகமா பயன்படுத்துற சிவப்பு கொண்டைக்கடலை. வெள்ளை கொண்டைக்கடலையவிட சிவப்பு கொண்டைக்கடலை அளவில் சின்னது, அதிகசத்தானதும்கூட. நாடு முழுக்க இது பயிர்விக்கப்படுது. சிவப்புக்கொண்டைக்கடலை உற்பத்தில இந்தியாதான் முதல் இடத்துல இருக்கு. இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கொண்டைக்கடலைக்கு முன்னாடியே சிவப்பு கொண்டைக்கடலை இந்தியருக்கு அறிமுகமாகிடுச்சு.  உலகம் முழுக்க பரவலா இந்த கொண்டைக்கடலை புழக்கத்திலிருக்கு.  இந்தியா மட்டுமில்லாம பாகிஸ்தான், வங்கதேசத்தில் அதிகமா பயிர் செய்யப்படுது.
பழுப்பும், கருப்பும் சேர்ந்த நிறத்திலிருக்கும் இந்த கொண்டைக்கடலைல அதிகம் புரதசத்து உள்ளது.  கொண்டைக்கடலையின் எல்லா நிலையும் பயன்பாட்டிலுண்டு. இதன் காய் பச்சையா இருக்கும்போதே வேகவைக்கப்பட்டு சேலட்டிலும், சாட் ஐயிட்டத்திலயும் வடநாட்டுல சேர்ப்பாங்க.  
சிவப்பு கொண்டைக்கடலையை பெரும்பாலும் சுண்டல் செய்து சாப்பிடுவாங்க. உப்புக்கடலையாயும் கடைகளில் விற்கப்படுது. சுண்டல்ன்னா இந்த கொண்டைக்கடலைதான் நினைவுக்கு வரும். மத்ததுலாம் இதுக்கப்புறம்தான். கேரளத்தில் புட்டுக்கு கடலைக்கறிதான் சைட் டிஷ்.  முளைக்கட்டிய கொண்டைக்கடலை சாலட்டா செய்யப்படுது. இந்த கடலையை வறுத்து பொடி செஞ்சு தண்ணி சேர்த்து கொதிக்க வெச்சு காஃபி, டீக்கு பதிலா குடிச்சா உடலுக்கு நல்லது.
இந்த கொண்டைக்கடலைல போலேட்டு மக்னீசியம் இருக்கு. இது ஹார்ட் அட்டாக் வர காரணமான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்க உதவுது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மைக்கொண்ட சாப்போனின் மாதிரியான வேதிப்பொருள் அதிகமாய் உள்ளது. வெள்ளைக்கொண்டைக்கடலையவிட சிவ் கொண்டைக்கடலைல நார்ச்சத்து அதிகம் இருக்கு. சர்க்கரையின் அளவு இதில் அதிகமிருக்குறதால நீரிழிவு நோய்காரங்களுக்கு மிகவும் நல்லது. கொண்டைக்கடலை வேக வெச்ச தண்ணில அதிகம் இரும்பு சத்து உண்டு. அதனால ரத்தசோகைய தடுக்கும்.  இதில் தாமிரம், மெக்னீசியம் செலேனியம், கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு. 
 இது செரிமானகோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவுது.  முதிராத கொண்டைக்கடலைய வேகவெச்ச தண்ணிய குடிச்சா சீதபேதி சரியாகும்.  அதேப்போல சிறுநீர் அடைப்பை சரி செய்யும் குணமும் இந்த தண்ணிக்குண்டு. இளம் கொண்டைக்கடலை விதைகளுக்கு காமத்தை பெருக்கும் சக்தி உண்டு. கொண்டைக்கடலை செடிமேல வெள்ளைத்துணியை போர்த்தி அதன்மீது விழும் பனித்துளிய சேகரிப்பதற்கு ‘கடலை புளிப்பு’ன்னு சொல்லப்படுது. இந்த நீர் வாந்தி, செரிமான பிரச்சனையை சரி செய்யும் தன்மை கொண்டது.
இனி கொண்டைக்கடலை சாறு ரசம் வைக்குறது எப்பிடின்னு பார்ப்போம்..

தேவையானப் பொருட்கள்:
வேகவைத்த கொண்டைக்கடலை தண்ணி 
 காய்ந்த மிளகாய்
பூண்டு, 
தக்காளி,
மிளகு, 
சீரகம், 
புளி, 
பெருங்காயம்,
உப்பு, 
மஞ்சப்பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் ஊறவெச்சு, உப்பு போட்டு வேக வெச்சு தண்ணிய எடுத்துக்கோங்க.  வேறொரு பாத்திரத்தில்  புளியை ஊறவெச்சுக்கோங்க. 

மிளகாய், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், பூண்டை விழுதா அரைச்சுக்கோங்க.


ஒரு பாத்திரத்தில் அரைச்ச விழுதை கொட்டிக்கோங்க.
அதுல புளி கரைச்சு ஊத்தி, உப்பு, பெருங்காயம், மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விடுங்க.  
கொதிச்சு பச்சை வாசனை போனதும். கொண்டைக்கடலை தண்ணிய ஊத்தி நுரைக்கட்டி வரும்போது... 


கடுகு, கறிவேப்பிலை, கொ.மல்லி போட்டு தாளிச்சு கொட்டுங்க. 

காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாயை தாளிப்புல சேர்த்துக்கோங்க. 

சுவையான ரசம் ரெடி.....

காய்ச்சலின்போது இந்த ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து கரைச்சு சாப்பிட்டா நாக்கின் உணர்ச்சி நரம்புகள் பழையபடி வேலை செய்ய ஆரம்பிக்கும். ஃப்ரிட்ஜுக்கு வெளில இருந்தாலும் ரெண்டு நாளுக்கு நல்லா இருக்கும்.

நாளைக்கு ஆனாய நாயனார் பத்தி தெரிஞ்சுக்க வாங்க..

நன்றியுடன்,
ராஜி.

திங்கள், ஏப்ரல் 24, 2017

ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! ஜோசியம் பார்த்துட்டு வந்தேன். உங்களுக்கு நேரம் சரியில்லையாம். அதனால,  வியாழக்கிழமைல சுக்கிரனுக்கு வெள்ளை கொண்டைக்கடலை மாலை போட்டு  நவக்கிரகத்தை 9 சுத்து சுத்தி வரசொன்னாங்க மாமா. 

 பொதுவா நீ நவக்கிரகத்தை எப்படி வலம் வருவே?!

நேரா சனிப்பகவான் முன் நின்னு விளக்கேத்தி 9 முறை எப்பயும் போல சுத்திட்டு அதுக்கு எதிர்பக்கமா சுத்திட்டு வருவேன். ஏன் மாமா கேக்குறீங்க?!

சொல்றேன் இரு.  கோவிலை வலம்வருதல் என்பது  16 உபச்சாரங்கள்ல ஒன்னு. பிரதட்சணம்ன்னு பேரு. பொதுவா மூணுமுறை சுத்தினாலே இந்த பிரதட்சணம் முழுமையடையும்.   ஆனா, அங்க இருக்கும் தெய்வ உருவங்களுக்கும்  பிரதட்சணம் வருவதற்கும் சம்பந்தமில்லை. அதனால, 9 தெய்வங்களுக்கு ஒன்பது முறை பிரதட்சணம் வரனும்ன்னு கணக்கில்ல. அதேப்போல எதிர்வலம் வருவதும் தப்பு.  நவக்கிரகங்களின் திருவுருவங்கள் ஒரே மேலையில் ஒருங்கே இருக்குறதால தனித்தனியா சுத்தி வர முடியாது. அதனால ஒட்டுமொத்தமா மூணு முறை சுத்தினாலே போதும். நவக்கிரகத்தை பிரதட்சணம் வந்ததற்கான பலன் கிடைக்கும். அதனால, இன்னின்ன தெய்வத்துக்கு இத்தனை முறை பிரதட்சணம் வரனும்ன்னு சொல்றதுலாம் அந்தந்த தெய்வங்களின் பெருமைப்படுத்த உண்டாக்குனதே தவிர வேற ஒன்னுமில்ல. ஆனா, நேர்த்திகடனுக்காக கூடுதல் எண்ணிக்கையில்  பிரதட்சணம் வர்றது இதுல சேராது. மூணு முறை பிரதட்சணம் வந்தாலே போதும்ன்றது நவக்கிரகத்துக்கு மட்டுமில்ல எல்லா இறைவனுக்கும் பொருந்தும். 
ஓ இத்தனை விசயம் இருக்கா?! இனி இதுப்போலவே நவக்கிரகத்தை சுத்தி வரேன் மாமா.  கால்ல வெடிப்பு அதிகமா இருக்கு. பார்க்க அசிங்கமா இருக்கு. கூடவே வலிக்கவும் செய்யுது. இதுக்கு  மாமா என்ன செய்யலாம்?! 

.வாரம் ஒருநாள் சூடு பொறுக்குமளவுக்கு சுடுதண்ணிய பாத்திரத்துல ஊத்தி, அந்த  தண்ணில கொஞ்சம் டெட்டால், எலுமிச்சை சாறு, ஷாம்பு போட்டு கலக்கி ஒரு பத்து நிமிசம் ஊற வெச்சு ப்யூமிக்ஸ் கல்லு இல்லன்னா ஸ்கிரப்பர் போட்டு நல்லா தேய்ச்சு ஈரம் போக துடைச்சு வாசலின் இல்லன்னா பாதத்துக்குன்னு விக்குற க்ரீம் பூசி ஒரு மணிநேரம் ஊற விடலாம்.தினமும் படுக்கும்போது காலை கழுவி சுத்தமாக்கிட்டு கடுகு இல்லன்னா தேங்காய் எண்ணெய் பூசி காலைல எழுந்து கழுவி வரலாம்.  கால்ல வெடிப்பு வராம இருக்கனும்ன்னா பாதம் சுத்தமா இருக்கனும். மிதியடிகளை அடிக்கடி துவைக்கனும். வீட்டு தரையையும் சுத்தமா வெச்சுக்கனும். அடிக்கடி மருதாணியோடு மஞ்சளை சேர்த்து அரைச்சு பாதத்துல பூசி வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும். தினமும் பீச்சுக்கு போறவங்க அலைல கொஞ்ச நேரம் நின்னாலும் இந்த பிரச்சனை தீறும். இது எதுமே செய்யமுடியாதவங்க பாத்ரூம்ல சொரசொரப்பான கல்லை போட்டு வச்சு தினமும் குளிக்கும்போது அதுல தேய்ச்சு வந்தாலும் பித்த வெடிப்பு சரியாகும்.

டிப்ஸ்லாம் கொடுத்ததுக்கு நன்றி மாமா. அப்புறம் இன்னொரு பிரச்சன்பைக்கும்  அட்வைஸ் சொல்லேன். 

என்ன உன் பிரச்சனை?!

ஒன்னுமில்ல. எதிர்வீட்டு குட்டிப்பையன் கௌதம் நம்ம வீட்டுக்கு வருவான். அவன் அம்மாக்கும் எனக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க். அதனால, அவனை இப்பலாம் வீட்டுக்கு அனுப்புறதில்ல. நமக்கு உரிமையான பொருள் இல்லன்னு புத்திக்கு தெரிஞ்சாலும் மனசுக்கு தெரிய மாட்டேங்குது. அவனுக்காக ஏங்குது. என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்களேன்.

இதுக்கு என்ன அட்வைஸ் சொல்ல. இது அட்வைஸ் சொல்லி தீரும் பிரச்சனை இல்ல. மனசு சம்பந்தப்பட்டது. அதுக்கு நிறைய சொல்லனும். ஆனா சிம்பிளா சொல்லனும்ன்னா யாருக்கும் உங்கள் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் கொடுத்து விடாதீர்கள். அன்பை அவர்கள் ஏளனமாக பார்த்துவிடுவார்கள். ன்றதை ஃபாலோ செஞ்சாலே பாதி பிரச்சனை குறையும். சரி நீ சோகமா இருக்கே அதனால இந்த மீம்சை பாரு. ரிலாக்சாகும் மனசு.

இன்னிக்கு முழுக்க நீங்களே பேசிக்கிட்டிருந்தீங்க.  நான் கோவிலுக்கு போகனும் அதனால் ஒரு விடுகதைய சொல்றேன்.   நிலத்தில் நிற்காத செடி. நிமிர்ந்து நிற்காத செடி ..... அது என்ன செடி?!  யோசிச்சு வைங்க. கோவிலுக்கு போய் வந்து விடையை கேட்டுக்குறேன். கூடவே பிளாக்குல கொண்டைக்கடலை சாறு ரசம் எப்பிடி செய்யுறதுன்னும் பதிவை ரெடி பண்ணுறேன். பை பை...


சனி, ஏப்ரல் 22, 2017

பொழுது போக்க டிவியா இல்ல பொழுதன்னிக்கும் டிவியா??!! - கேபிள் கலாட்டா


திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 7.30 வரையும்.. சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 6.45 முதல் 7 மணி வரையிலும் சன் டிவில ’நல்ல நேரம் பொறக்குது’ன்னு ஒரு நிகழ்ச்சி. வெறும் ராசிப்பலன் மட்டும் சொல்லாம பரிகார தலங்கள் பற்றியும், சித்தர்கள் பற்றியும் அழகான உச்சரிப்போடும், எளிய நடையில் ஜோதிடர் சிவக்குமார் சொல்றாரு.


நியூஸ் 7 சேனல்ல  ‘உணவே அமிர்தம்’ன்ற நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியானம் 2.30க்கு ஒளிப்பரப்பாகுது. தினமும் ஒரு ஆரோக்கிய சமையலை அறிமுகப்படுத்துறாங்க. அந்தந்த சீசனுக்கு தகுந்த    நம் பாரம்பரிய உணவுகளை எளிய பொருட்களை கொண்டு சமைக்கும் முறையை அழகா சொல்லிக்காட்டுறாங்க. நேயர்கள் கேட்கும் கேள்விக்கு சித்த மருத்­து­வர் செல்­வ­சண்­மு­கம்  பதில் சொல்லுறது கூடுதல் சிறப்பு.
உடை, உணவு, கேளிக்கை, அலங்காரப்பொருட்கள் போன்ற நமக்கு அத்தியாவசியமானதுக்கூட சிலருக்கு ஆடம்பரம். நூறு ரூபாய்க்கு நல்ல உடைகள் கூட வாங்கமுடியாத மக்கள் இன்னும் இருக்காங்க. அப்பேற்பட்ட சிலரை  மக்கள் டிவி தேடி கண்டுப்பிடிச்சு அவங்களோட ஆசையை ‘சின்ன சின்ன ஆசைகள்’ நிகழ்ச்சி மூலம் நிறைவேத்துது.  நமக்கு படிப்பினையையும் நெகிழ்வையும் ஒருசேற தரும் நிகழ்ச்சி இது. எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி. ஆங்க் சொல்ல மறந்துட்டேனே... இந்நிகழ்ச்சி ஞாயிறு காலை 10.30க்கு ஒளிப்பரப்பாகுது.சன் லைஃப் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.30 முதல் 11 மணி வரையிலும் மதியம் 3 முதல் மாலை 6 மணி  வரையிலும் எஸ்.பி.பி, இளையராஜா, மனோ, சித்ரா, ஜானகி, ஜேசுதாஸ், தேவா போன்றவர்களின் எவர்க்ரீன் பாடல்களை ஒளிப்பரப்புறாங்க. கேட்டு ரசித்து மறந்த அரிதான பாடல்களை பார்த்து கேட்டு மகிழலாம்.முன்னலாம் பொம்பளைங்களை வில்லியா போட்டுதான் சீரியல் எடுத்தாங்க. இப்ப பசங்களை வில்லன்ங்களா போட்டு சீரியல் எடுக்குறாங்க. ஜீ டிவில மாலை நேரத்துல ’மெல்ல திறந்தது கதவு’ன்னு ஒரு நாடகம். எல்.கே.ஜி படிக்குற பசங்களை மையமா வெச்சு போகுது.  ஒரு அஞ்சு வயசு பையன் அப்பாவோட லவ்வை கண்டுப்பிடிக்க ட்ரை பண்ணுறதும், அஞ்சு வயசு பொண்ணை கொல்ல பாம்பை ஏவுறதும், டான்ஸ் ஆடி அந்த பாம்பை இந்த குட்டி மயக்குறதும், சக மாணவி முதல் ரேங்க் எடுக்குறதை தடுக்க பிளான் பண்ணுறதும், டியூஷன் மாஸ்டர்கிட்ட  பாட்டி விடும் ஜொள்ளை கிண்டல் செய்யுறதுன்னும் ரொம்ப நல்ல விசயங்களை வெச்சு போகுது. சேனல் மாத்தும்போது பார்த்ததே இம்புட்டு விசயம். இன்னும் முழுசா பார்த்தா?!


சனி மற்றும் ஞாயிறுகளில் காலை 7 மணி முதல் 7.30 வரை தினமும் ஒரு ஆலயத்தை பத்தி ஒளிப்பரப்புறாங்க. தல வரலாறு, திருவிழாக்கள், அமைவிடம்ன்னு சொல்லுறதோடு சின்ன சின்ன வழிபாடு சம்பந்தமான குறிப்புகளையும் கொடுக்குறாங்க. 


பொழுது போக்க  தொலைக்காட்சி பார்க்குறது தப்பில்ல. ஆனா, பொழுதன்னிக்கும் தொலைக்காட்சியையே பார்க்கக்கூடாது. ஏன்னா நான் அப்பிடிதான். எனக்கு டிவி பார்க்கவே பிடிக்காதுப்பா. 

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம் சகோஸ்..
நன்றியுடன்,
ராஜி.வெள்ளி, ஏப்ரல் 21, 2017

பக்தியிலும் வைராக்கியமுண்டு - நாயன்மார்கள் கதைகள்

கடவுள் மனசுல இடம்பெற லட்டு, இனிப்பு பணியாரம், கார பணியாரம், அதிரசம், பஞ்சாமிர்தம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், மிளகு வடைன்னு எத்தனை விதமான நைவேத்யம் செஞ்சு படைச்சும் தலைக்கீழா நின்னும் கடவுள் மனசுல இடம் புடிக்க முடில.   ஆனா, வயக்காட்டுல விளையுற செந்நெல் சாதமும், செங்கீரையும், மாவடுவையும் படைச்சு கடவுள் மனசுலயும் நாயன்மார்கள் வரிசையிலயும் இடம் பெற்றார்.

அவர் கதைய இனி பார்ப்போம்...

சோழநாட்டு ஆதிக்கத்திற்குட்பட்ட கணமங்கலம் ஊருல வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார்.  இவர்தான் அந்த வேளாளர் இனத்தவருக்கு தலைவர். சிறந்த சிவபக்தர்.  தினமும் செந்நெல் சாதமும்,  செங்கீரை கடையலும், மாவடுவையும் அவ்வூர் வாழ் சிவனுக்கு படைத்து அதை சிவனடியாருக்கு பரிமாறியப்பின்னே தானும், தன் குடும்பத்தாரும் உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

இறைவன் திரு உள்ளப்படி தாயனாரின் செல்வம் சிறிது சிறிதாய் குறைய தொடங்கியது. கொடிய வறுமை தன்னை ஆட்கொண்டபோதும் இறைவனுக்கு செய்யும் திருத்தொண்டை நிறுத்தவே இல்லை. வேளாளர் குலத்தலைவன் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் தான் கொண்ட கொள்கையில் மாறாமல் நின்றார். கூலி வேலை செய்து வரும் சொற்ப பணத்தில் முதலில் நெல்லுக்கென முதலில் பிரித்தெடுத்து வைப்பதை பழக்கமாய் வைத்திருந்தார். நெல்லை பிரித்தெடுத்து செந்நெல்லை இறைவனுக்கும், மீதமுள்ள கார்நெல்லை தங்களுக்குமாய் பிரித்து உண்டு ஜீவித்தனர்.
 மனம் என்பது மாறும் தன்மை கொண்டது.  வறுமை அவர் மனசை மாத்துதான்னு அறிய சோதனையை இன்னும் கொஞ்சம் கடுமையாக்குகிறார் இறைவன்.  கிடைக்கும் நெல்மணிகளில் செந்நெல்லை சிவனுக்கும், காா்நெல்லை தனக்குமாய் ஒதுக்கி வந்ததை அறிந்த இறைவன், கிடைக்கும் நெல் அனைத்தும் செந்நெல்லாகவே கிடைக்கச் செய்தார். அன்றைய தினத்திலே கூலியாக கிடைத்த நெல்மணிகள் பூராவும் செந்நெல்லாக இருந்தது. கிடைத்த நெல்மணிகள் அனைத்தும் செந்நெல்லாக இருந்ததினால் தயானாருக்கு அத்தனை குதுகலம். தம் சாப்பாட்டிற்கு காா்நெல் இல்லையேன்னு கவலையேப்படவில்லை. மாறாக எம்பெருமானுக்கு நிறைய செந்நெல்லாகவே் கிடைத்தற்காக சந்தோஷப்பட்டாா்.

செந்நெல் அத்தனையும் எம்பெருமானின் திருவமுதுக்கு ஒதுக்கி வைத்து விட்டதால், இன்றைய உணவுக்கு சமைக்க நெல் இல்லாது போகவே, தாயனாாின் மனைவி யோசனை செய்தவாறே வீட்டின் கொல்லைப்புறம் வந்தாள். சில நாட்களுக்கு முன்பு தான் நல்ல மழை பெய்ந்திருந்தமையால் கொல்லைப்புறம் முழுமைக்கும் கீரைகள் தளிா்த்து வளா்ந்திருந்தது. சும்மா முளைத்த கீரைதானே என்று புடுங்கி எடுக்காமல், தளா்த்திருந்த முனைக்கீரையையும் தலையையும் ஆய்ந்து எடுத்தாள். மதியத்தின்போது தாயனாரும், அவா்தம் மனைவியாரும் சமைத்த கீரையை ருசித்துச் சாப்பிட்டனா்.
இப்படியே பலநாள் பொழுது கழிந்து போயின. கீரையும் எத்தனை நாளுக்குத்தான் வரும். முதல் நாள் முனையிலேயே ஆய்ந்தது. மறுநாள் தண்டினை ஆய்ந்து, மறுபொழுது வேர்வரையிலும் கிள்ளியே எடுத்தாகி விட்டது. தாயனாரின் மனைவி புத்திசாலி. அதனால்தான் முத்லநாள் நுனி மட்டும் கொய்தாள். அவ்வாறு  ஆய்ந்ததனால் மூன்று நாளுக்கு கீரை.

கீரையைப் பறித்து பறித்து, கீரை கொல்லைப்புறம்  முழுமையும் வெத்து இடமானது. பசியாற்ற இருவரும் என்ன செய்வர்?! வெறும் தண்ணீரையே பருகியே வந்தனா். தாகமெடுக்க தாகமெடுக்க நீரைத் தாகத்திற்கு அருந்தி பசியைப் போக்கி வந்தனா். ஆனால் எம்பெருமானுக்குத் தினமும் திருவமுது கொண்டு சென்று கொடுத்துப் பின், அடியாா்களுக்கு கொடுத்து வந்தது மட்டும் நிற்காது நடந்தது.

அன்றைய தினம் வழக்கம் போல , எம்பெருமானுக்காக அன்னம், கீரை , மாவடு முதலியன கூடையில் வைத்து எடுத்து தலைச்சுமையாக சென்றாா். அவருக்குப் பின்னால் அவா் மனைவியாா் பஞ்சகவ்யத்தை எடுத்து வந்தாா்.
கடந்த இரு நாளாய் சாியாக சாப்பிடாது இருந்து வந்த தாயனாருக்கு தொடா்ந்து நடந்து செல்ல சிரமப்பட்டாா். தலையிலுள்ள அன்னக்கூடையை பிடிக்கக் கூட திரானி குறைந்து தள்ளாடி நடந்தாா். அவா்கள் வீட்டிலிருந்து. ஒரு தெரு திருப்பம்தான் சென்றிருந்தாா்கள். கால்கள் பின்னப்பட்டு இடறி விழப்போனாா் . பின்னால் வந்த மனைவியாா் விழப்போன கணவனை,  பஞ்சகவ்யம் ஏந்திச் மூடிச் சென்ற கரத்துடனே தாங்கி அணைத்து பிடித்தார். ஆனால் அன்னக்கூடையும் மாவடுகளும் சிதறித் நிலத்தில் விழுந்தது.

தாயனாருக்கு துக்கம் தொன்டையை அடைத்தது. பூமியிலே கிடந்து அழுது புரண்டாா். சொல்லொன்னாத் துயரம் கொண்டாா். செய்வதறியாது திகைத்தாா். ஐயனே எனக்கு ஏன் இப்படியாகி விட்டதே? உனக்குக் கொண்டு வந்த திருவமுதை, நிலத்தில் விழத் தட்டிவிட்டேனே! இதுநாள்வரை உனக்கு அளித்து வந்த திருவமுது சேவைய இன்று இல்லாமற் செய்துவிட்டேனே? நாங்கள்  பட்டினி கிடக்க நோிடினும், ஒவ்வொரு நாளும் உனக்குச் செய்யும் கைங்காியத்தை விடாது நடத்தி வந்தேனே? " இன்று அதற்கு இடா் நோ்ந்து விட்டதே?" இனியும் நான் உயிா் வாழ்வது முறையன்று. நான் உயிா் துறப்பேன்  என்று கண்ணீா் விட்டழுது மண்டியிட்டமா்ந்து கீழே கிடந்த  அாிவாளைக்கொண்டு தமது கழுத்திலே தாமே வைத்து அாியத் தொடங்கினாா். ரத்தம் பீறிட்டது. 

விடுவாரா இறைவன்?  அடியாா்க்கும் அடியாராகிய அவா் தம் அடியாா்களை இதற்குமேலும் சோதிப்பாரா?....." அனுமதிப்பாரா?...." நிலத்தைப் பிளந்து கொண்டு ஒரு கரம் நீண்டு,  நாயனாாின் கழுத்தறு செய்கையை தடுத்தன.

கூடவே, "அன்பனே, வேண்டாம், நிறுத்தி விடு?" என்ற குரலும் வந்தது.

இறைவனின் திருக்கரம் பட்டதும், தாயனாாின் மேனி புளகாங்கிதம் அடைந்தது. எப்போ்ப்பட்ட பாக்கியசாலி அவா். இவ்விதம் அடியாா்  தமக்கு இறைவன் நம்முடலைத் தீண்டித்தொட,  நாம எதுவரைக்கும், வேனுமானாலும் எல்லா சோதனைக்கும் உள்ளாக ஆசை தான்.

" நீ கொண்டு வந்த அமுதினை நாம் இவ்விடம் வந்து ஏற்றுக் கொண்டோம். நீயும் உம் மனைவியும் எம் உலகத்துக்கு வந்து சேருங்கள் என்று, கழுத்தறுப்பை நிறுத்திய குரலோடு, இக்குரலும் ஒலித்தது.

அதே சமயம் நிலத்தைப் பிளந்து வெளிவந்த இறைவனின் மற்றொரு கரம், நிலத்தில் சிதறி விழுந்து கிடந்த மாவடுவைக் கடித்துச் சாப்பிடுவதால் எழும் " விடேல் விடேல்" என்னும் குரலும் வந்தது. அது நேரம் நிலத்தில் விதைந்து சிதறிய அமுதும் செங்கீரையும் மறைந்து போயின. சிவபெருமான் உமாதேவியாரோடு விடைமேலேறி வந்து அவருக்குக் காட்சியளித்து, ". நீ செய்த தொண்டு நன்று! நீயும் உன் இல்லாளும் கைலாயம்  வந்து சேருங்களென அருளினார்.
தாயனாா் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பலவாறாகப் போற்றித் தொழுதாா். அாிவாளால் கழுத்தை அறுக்க முயன்றதால் அவருக்கு அாிவாட்டாயா் என்று பெயா் நிலைத்தது. வெகு நாட்கள் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து வந்து, முடிவில் மனைவியோடு நாயனாா் சிவலோகம் சென்று இன்புற்றாா்.

இஅவர்தம் குருபூஜை தைமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சகல சிவாலயத்திலும் நடைப்பெறும்.

நாளை கேபிள் கலாட்டாவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
Related image
ராஜி.

செவ்வாய், ஏப்ரல் 18, 2017

கூழ் குடிப்பது ஆரோக்கியத்துக்கா இல்ல பேஷனுக்கா?! - கிச்சன் கார்னர்

வீட்டுல கேப்பை களி, அடை, புட்டு, கூழ் சாப்பிட்டா கேவலம். அதுவே ஹோட்டல்ல சாப்பிட்டா கௌரவம்ன்னு நினைக்குறோம். இப்ப தெரு முக்குலலாம் தள்ளு வண்டில கூழ் விக்குறாங்க. பேஷனுக்காகவோ இல்ல ஆரோக்கியத்துக்காகவோ இல்ல குறைஞ்ச செலவுல வயிறு நிரையுதுன்னோ கூழ்  எல்லாரும் குடிக்குறாங்க.  அதை வீட்டுல செஞ்சு குடிங்கப்பான்னு சொன்னா தெரியாது, டைமில்லன்னு சொல்வாங்க.  செய்முறையும் ஈசி. சமைக்கும்போதே இதையும் செஞ்சுடலாம். இதுக்குன்னு  ரொம்ப மெனக்கெட வேணாம். 

அப்பப்ப ஒருகிலோ கேழ்வரகுக்கு கால்கிலோ சோளம், கால்கிலோ கம்பு  வாங்கி சுத்தம் செஞ்சு காய வச்சு அரைச்சு வச்சுக்கனும்.  விருப்பப்பட்டா கேழ்வரகை முளைக்கட்டிக்கலாம். இப்பலாம் கடையில் ரெடிமேடா கேழ்வரகு மாவு கிடைக்குது. அதுலாம் எந்தளவுக்கு அது தரமானதுன்னு தெரியாதுல்ல.  அதனால நாமே ரெண்டு மூணு மாசத்திற்கொருமுறை அரைச்சு வச்சுக்கிட்டா நல்லது. அரைக்கும்போது கொஞ்சம் உப்பு சேர்த்து அரைச்சுக்கிட்டா சீக்கிரம் வண்டு வைக்காது.

இனி கூழ் செய்முறைக்கு போவோம்...

தேவையான பொருட்கள்.
கேழ்வரகு மாவு -  2 கையளவு
நொய் அல்லது பச்சரிசி
உப்பு.

முதல் நாள் காலையிலேயே கேழ்வரகு மாவை உப்பு போடாம தோசை மாவு பதத்துக்கு கரைச்சு வெச்சுக்கோங்க. 

ஒரு சிலர் கைப்பக்குவம் சீக்கிரம் புளிச்சு போகும். எனக்குலாம் சட்டுன்னு புளிக்காது. அதனால ரெண்டு பகல் வெயில்லயும், ஒரு நைட் வீட்டுக்குள்ளயும் வைப்பேன்.


நொய் இல்லன்னா பச்சரிசிய ஒரு மணிநேரம் ஊற வைங்க.

உப்பு போட்டு குழைய குழைய நல்லா வேக விடுங்க.

புளிச்ச மாவை நீர்க்க கரைச்சு கொதிக்கும்  கஞ்சில சேருங்க. தண்ணியா இருக்கனும் இல்லன்னா கட்டி கட்டியாகிடும்.


உப்பு சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க. அடிக்கடி கிண்டிக்கிட்டே இருக்கனும். இல்லாட்டி அடிப்பிடிக்கும்.


நல்லா அல்வா பதமாய் சுருண்டு வரும்போது நிறுத்திடுங்க.

சுவையான கூழ் ரெடி. ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு பத்து நாள்  வரை நல்லா இருக்கும். வெளில வச்சா அதிகப்பட்சம் நாலு  நாள் நல்லா இருக்கும். சில்வர் பாத்திரத்தில் கூழ் செஞ்சா களிம்பேறிடும். அதனால, அலுமினியம் அல்லது மண்பானை நல்லது. இது இல்லாதவங்க வீட்டிலிருக்கும் பாத்திரத்தில் சமைச்சு பிளாஸ்டிக் டப்பாவுல எடுத்து வச்சுக்கோங்க.


ஐயே! கை வெச்சு இப்படி கரைப்பாங்களான்னு டீசன்சீலாம் பார்க்கக்கூடாது. கைய நல்லா அலம்பிட்டு கூழெடுத்து ஒரு பாத்திரத்துல போட்டு   கட்டி இல்லாம  அடிச்சுக்கனும். தேவையான அளவு உப்பு போட்டு மோர், வெள்ளை வெங்காயம், வெள்ளரி, மாங்காயை பொடிப்பொடியா நறுக்கி போட்டு அவரவர் விருப்பத்திற்கேற்ப சாப்பிடலாம். என் சின்ன பொண்ணு கூழ்ல எதும் சேர்க்காம சாம்பார் இல்ல காரக்குழம்பு மேல டிசைன் செஞ்சு சாப்பிடும்.


மாங்காய் ஊறுகாய், சுண்டைக்காய், மோர்மிளகாய், கொத்தவரங்காய், சுட்ட கருவாடுலாம் சைட் டிஷ்சுக்கு  ஏத்தது.

இனி கேழ்வரகை பத்தி சில தகவல்களும் பயன்களும்....

கேப்பை, ராகின்னு சொல்லப்படுற   கேழ்வரகு4000 ஆண்டுகளுக்குமுன் எத்தியோப்பியர்களால் இந்தியாவுக்குள் அறிமுகமாச்சு. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்ல கேழ்வரகு விளையுது.  இது வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதியில் விளையும் பயிர். வண்டல் மற்றும் களி மண்ணில் விளையும். இதன் விளைச்சலுக்கு அதிகம் நீர் தேவையில்லை.  இந்தியாவில் மட்டுமில்லாம  ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானிலும் பயிர் செய்யப்படுது. 

கேழ்வரகிலுள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்யும். உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தும். கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள் வலுப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.  லெசித்தின்  மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள்  கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரும்பு சத்து மற்றும் ரத்த சோகையை குணப்படுத்துது. உடலின் வெப்பநிலையை சீராய் வைத்திருக்க உதவுது. குடலுக்கு வலிமை தரும்.  உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற  நோய்களும் கேழ்வரகு குணப்படுத்தும்.

இவ்வளவு நல்ல விசயமிருக்கும் கேழ்வரகின் அருமையை புரிஞ்சுக்காம சமூக அந்தஸ்துக்காக கண்டதை திண்ணு புதுப்புது நோயை வரவச்சுக்கிறோம். இனியாவது மாறுவோம்...

நன்றியுடன்....
 ராஜி.

திங்கள், ஏப்ரல் 17, 2017

தீரன் சின்னமலை - ஐஞ்சூவை அவியல்

என்ன புள்ள! உம்முன்னு உக்காந்திட்டிருக்கே?!

ரொம்ப நாளாச்சு மாமா நாம உக்காந்து கதைப்பேசி... என்னாச்சு நமக்குள்ள.. இப்பலாம் உனக்கு எம்மேல ஆசையே இல்ல. அப்பிடி ஊர்கதை பேச  மனசு ஏங்குது. அதான். 

அதுவா புள்ள. ஆண்ட்ராய்டு போன் வாங்குனாலும் வாங்குனேன். இந்த மூஞ்சிபுக்கை ஓப்பன் பண்ணதுல அங்கனயே உக்காந்துட்டேன். அப்புறம்  கொஞ்சம் கோவில் குளம்ன்னு போய் வந்தேன். அதான் உன்கிட்ட பேசமுடில. இனி பேசலாம்.

கவனிச்சேன் மாமா. நீ கோவில் குளம்ன்னு சுத்தினதுல எங்க சாமியாரா போயி என்னை மறந்திடுவியோன்னு நினைச்சேன்.  சரி ஸ்மார்ட் போன் வாங்குனியே! அதை எப்படி பத்திரமா பார்த்துக்கனும்ன்னு தெரியுமா?!

ம்ஹூம் தெரியாது புள்ள. உனக்கு தெரியுமா?! 


சரி நான் சொல்றேன். கேட்டுக்கோ.  மொபைலை வாங்கினதும்  *#06#ன்ற நம்பரை அழுத்தி அது சொல்லும் ஒரு நம்பரை  (International Mobile Equipment Identity no ) டைரில குறிச்சு வச்சுக்கனும்.  மொபைலோட கேரண்டிக்கும், மொபைல் தொலைஞ்சி போய்ட்டாலோ இந்த நம்பர் யூஸ் ஆகும். தொடர்பு எல்லைக்கு வெளியே போய்ட்டா மொபைலை ஆஃப் பண்ணுறது நல்லது. இல்லன்னா பேட்டரி வேஸ்ட்டாகும்.   மொபைல்  லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD)ஐ லேசா தொட்டா போதும். ரொம்ப அழுத்தினா நாளடைவில் ஸ்க்ரீன் பாழாகிடும். மொபைலோடு சில்லறை காசு, வண்டிச்சாவி மாதிரியான பொருட்களை வைக்காதீங்க. ஸ்க்ரீன்ல கீறல் விழும். மொபைலுக்குண்டான பவுச் இல்லன்னா போம் கவர்ல போட்டு வைங்க.  போனில் சிக்னல் குறைவா இருக்கும்போது ரேடியேஷன் அதிகமா இருக்கும். கூடவே பேட்டரியும் அதிகம் செலவாகும். அதனால, சிக்னல் குறைவா இருக்கும்போது பேசுறதை குறைச்சுக்கோங்க.  

ஆத்தாடி இம்புட்டு விசயம் இருக்கா?!

இன்னும் இருக்கு மாமா. சொல்லவா?!

வேணாம்டி.  இதுவே நினைவில் வச்சுக்க முடியாது. இன்னிக்கு யாரோட பொறந்தநாள்ன்னு தெரியுமா?! 

ம்ம்ம் பாய்ஸ், அரண்மனை 2 படத்துலன் நடிச்ச சித்தார்த்தோட பொறந்த நாள். அப்புறம் நம்ம ஸ்பையோட பிறந்த நாள். 
உன் தம்பியோட பொறந்த நாளையும், சினிமாக்காரன் பொறந்தநாளையும் நினைவு வச்சுக்கிட்ட உனக்கு  விடுதலை போருக்கு முதன்முதலாய் வித்திட்ட தீரன் சின்னமலையோட பிறந்தநாளை தெரியலியே!.  தீரன் சின்னமலையோட பேரு தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டர். அப்பா பேரு ரத்னசாமி கவுண்டர், அம்மா பேரு பெரியாத்தா. 1756 ஏப்ரல் மாசம் 17 ந்தேதி ஈரோடு சென்னிமலைல பாளையக்காரர் பரம்பரைல  பிறந்தார்.  சின்ன வயசுலயே மல்யுத்தம், தடி வரிசை, வாள், வேல் போர்ப்பயிற்சி, சிலம்பாட்டம் மாதிரியான் வீரவிளையாட்டுகளை சிவந்தாரையர் என்பவரிடம் கற்று தேர்ந்தார். மைசூர் அரச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த கொங்குநாட்டின் வரிப்பணம் சங்கக்கிரி வழியாக மைசூர் அரண்மனைக்கு சென்றது. வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் ’சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி வரிப்பணத்தை  அபகரித்து ஏழை மக்களுக்கு கொடுத்தார்.  அன்றுமுதல் தீர்த்தகிரி சின்னமலையானார்.

The Sepoy Mutiny (1857) was a mistrust and cultural differences between the British and Indians led to violent conflict. Causes: 1. Increase of British power in India 2. A growing distrust of British 3. British disrespect of Indian religions and culture. Effects: End of the Mogul Empire, Beginning of direct British rule in India, and India nationalist movement:
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தபோது அதை தடுக்க விரும்பிய சின்னமலை, கேரளத்திலும் கொங்குநாட்டின் சேலம் பகுதியிலும் கிழக்கிந்திய கம்பெனி வேரூன்ற பெரும் தடையாய் இருந்தார்.  டிசம்பர் 7, 1782 இல் ஐதர் அலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும்போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகளுக்கு பெரும் தலைவலியாய் இருந்தார்.
British Bush Fighting on the Cape Frontier:
திப்புசுல்தான் மறைவுக்கு பின், ஆட்களை தேர்ந்தெடுத்து சிவன்மலையில் வைத்து போர்பயிற்சி கொடுத்தார். 1801ல  ஈரோடிலும், 1802 ல ஓடாநிலையிலும், 1804 ல அறிச்சலூர்ல நடப்பெற்ற போர்களில் சின்னமலையே வென்றார்.  கள்ளிக்கோட்டையிலிருந்து பெரும் பீரங்கிப்படையோடு வந்த வெள்ளைக்காரங்களை எதிரித்து நின்றார். ஆனால், போரில் சின்னமலையால் ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்த சுபேதார் வேலப்பன்  சின்னமலையை தப்புவித்து பழனிமலைத்தொடரிலிருக்கும் கருமலைக்கு அனுப்பி வைத்தார்.  நேருக்கு நேர் நின்னு சின்னமலையை ஜெயிக்க முடியாத வெள்ளைக்காரர்கள்  சூழ்ச்சி செஞ்சு பிடிச்சு 1805 ஜூலை 31   சின்னமலையையும், அவரின் தம்பி, படைத்தலைவர்களையும் தூக்குல  போட்டாங்க.

ம்ம்ம் இத்தனை போராடி சுதந்தரம் வாங்கி என்ன பிரயோஜனம் மாமா?! ஊழல், பொய், களவுன்னு நாடு சீரழிஞ்சு போய் கெடக்குதே. 

ம்ம்ம் இந்தமாதிரியான கதையெல்லாம்  பசங்களுக்கு பெரியவங்க நாமதான் சொல்லி புரிய வைக்கனும். அதைவிட்டு எப்பப்பாரு சினிமா, சீரியல், மூஞ்சிப்புக்குன்னு அரட்டைல இருந்தா எப்பிடி புள்ள?!

என்னை மட்டம் தட்டுனது போதும்.  உனக்கு அறிவிருக்குன்னு ஒத்துக்குறேன். இப்ப நான் ஒரு கணக்கு கேக்குறேன். பதில் சொல்லு பார்ப்போம். 0 லிருந்து 9க்குள் ஒரு நம்பர் அதை எட்டு முறை மட்டும் யூஸ் செஞ்சு  கூட்டல் மட்டுமே செஞ்சு 250ன்னு விடை வரனும். எப்பிடின்னு சொல்லு பார்க்கலாம். 

இரு யோசிக்குறேன். அதுக்குள்ள இந்த மீம்சை பார்த்துக்கிட்டிரு. 

சின்ன வயசுல சப்போட்டாவுக்கும் உருளைக்கும் வித்தியாசம் தெரியாது மாமா. சரி.  கணக்குக்கான விடையை யோசிச்சீங்களா?! 

ம்ம்ம் கொஞ்சமிரு. யோசிச்சுக்கிட்டேயிருக்கேன்.  உனக்கு முடிக்கொட்டுதுன்னு சொன்னேல்ல. அதுக்கு வேப்பிலை 6, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம்பழத்தையும் வேப்பங்குச்சியையும் சேர்த்து அரைச்சு  தலையில் பேக் போட்டு கொஞ்ச நேரம் ஊற வெச்சு அலசு. ஈறு, பேன், பொடுகுலாம் இல்லாம போறதோடு முடியும் உதிராது. அடிக்கடி இப்படி செய்ய முடியாதவங்க சீயக்காய்ல இதுலாம் போட்டும் அரைச்சு வச்சுக்கலாம். 

ஓ. ஆன்சரை சொல்லு மாமா. 

விடமாட்டியே!  222+22+2+2+2 = 250  இதான் ஆன்சர் சரியா?!

உனக்கு எல்லாமே தெரியுது மாமா. யு ஆர் பிரில்லியண்ட்..
..
மீண்டும் வேறு ஒரு பதிவில்  சந்திப்போம் அதுவரை சிந்திப்போம்.நன்றியுடன்,
.தேங்க் யூ....  தேங்க் யூ.

வெள்ளி, ஏப்ரல் 14, 2017

நாரதருக்கும் க்ருஷ்ணருக்குமான உறவு - தமிழ் புத்தாண்டு

அனைவருக்கும் இனிய ‪#‎சித்திரை‬ ‪#‎தமிழ்‬ ‪#‎புத்தாண்டு‬ நல்வாழ்த்துகள்!:
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல்நாளா என இருவேறு கருத்துகள் இருந்தாலும் பலகாலமாய் கொண்டாடப்பட்டு வந்த சித்திரை முதல்நாளைத்தான் தமிழ் வருடப்பிறப்பாய் இன்றும் நாம் கொண்டாடி வருகிறோம். இந்நாளை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.  
Bali, Indonesia:
இந்தியா விவசாய நாடு. அதனால், விவசாயிகள் மகிழ்ந்திருப்பது அறுவடை காலத்தில். அறுவடை தைமாதத்தில் வருவதாலும்,   தமிழ் மாதப்பெயர்கள் ஒன்றாவது தமிழில் உள்ளதா?! அதனால் தைமாதம்தான்   தமிழ் வருடப்பிறப்பு என ஒரு சாராரும்  இல்லை  இந்தியா வெப்ப நாடு. சூரியன் நிற்கும் நிலையை கொண்டு இளவேனில் காலம், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என  வருடத்தின் பருவக்காலம் பிரிக்கப்படுது.  சித்திரையில் இளவேனில் காலம் ஆரம்பிப்பதால்  சித்திரை முதல்நாள்தான் தமிழ்வருடத்தின் முதல்நாள் என மற்றொரு சாராரும் வாதாடுகின்றனர்.
ஜோதிடரீதியாக  மேஷம் தொடங்கி மீனம் முடிய பனிரெண்டு ராசிக்குள் சூரியன் குடியிருக்கும் நாட்கள் ஒரு மாதமாகும்.  சூரியன் மேஷராசியில் குடியிருக்கும் மாதம் சித்திரை. சித்திரை தொடங்கி பங்குனி முடிய தமிழ்மாதங்கள்  பனிரெண்டை கொண்டதுதான் தமிழ் வருடம். எனவே, சித்திரை முதல் நாளே தமிழ் வருடப்பிறப்பு எனவும் சொல்லப்படுது.  சித்திரையில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். ஒரு தினம் 60 நாழிகை கொண்டது என்றும் கணக்கிட்டனர். ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது. தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரும் கிரகங்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. வானியல் சோதிட நூலான சூரிய சித்தாந்தம் எனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளன
Dandavats | Sri Adi Kesava Temple, Thiruvattar, Where Sri Caitanya Discovered Brahma-samhita:
சித்திரை ஒன்றில்தான் பிரம்மன் உலகத்தை தோற்றுவித்ததாய் புராணங்கள் சொல்லப்படுது.  சித்திரை ஒன்றில் பெரும்பாலான கோவில்களில்  பஞ்சாங்கம் படிக்கும் விழா நடக்கும்.  இதே நாளில் குள்ளமுனி அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சியளித்தார்.
சித்திரை முதல்நாளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுது. அன்றைய தினம்  தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில் விளக்கேற்றி பச்சரிசி பரப்பி அதன்மேல் மனையிட்டு புதுவருட பஞ்சாங்கம்  வைத்து வெற்றிலை,பாக்கு, பழம் வைத்து சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின் அந்தாண்டுக்குண்டான பலன்களை வீட்டின் பெரியவர் படித்து சொல்ல வேண்டும். இதேப்போன்ற நிகழ்வு அந்தந்த ஊர்க்கோவில்களிலும் நடக்கும். அவரவர் தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்யவேண்டும்.
தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்கள்  தங்கள் வீடுகளில் வேப்பம்பூ, மாங்காய்,  மிளகா, உப்பு, புளி, வெல்லத்தால் பச்சடியை செய்வர். இதன்மூலம்  இன்பம், துன்பம் போன்றவை நிறைந்ததுதான் வாழ்க்கை என உணர்த்தினர்.
Tamil Panchangam - 2015:
பஞ்சாங்கம் படித்தல்:
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் என முக்கிய ஐந்து அம்சங்களை முக்கியமாய் கொண்டது. பஞ்சாங்கம் படித்தலை கேட்கும்போது  யோகம் ரோகத்தை போக்கும். திதி நன்மையை அதிகரிக்கும், கரணம் வெற்றியை தரும். வாரம் ஆயுளை தரும். நட்சத்திரம்  பாவத்தை போக்கும். 
விஷுக்கனி காணல் மற்றும் கைநீட்டம்...

விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல் நாளை சித்திரை விஷு எனக் கொண்டாடுகின்றனர்.  பங்குனி 31 அன்று பூஜையறையில் மனையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன்முன் நிறைநாழி நெல் அதன்மீது  தென்னம்பாளை வைப்பர்.  பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாய் பஞ்சலோகத்தால் ஆன உருளியில்  வாழை, பலா, மா உள்ளிட்ட பழவகைகள், கொன்னைப்பூ உள்ளிட்ட பூக்கள், இனிப்புகள், தங்கநகைகள், பணம் வைத்து உறங்கிவிடுவர். வீட்டின் மூத்த பெண்கள் தூங்கி எழுந்து இப்பொருளை பார்த்து குளித்து பூஜையறையில் விளக்கேற்றுவர். பின் ஒவ்வொருவராக எழுப்பி, அவர் கண்களை கைகளால் மூடி பூஜையறையிலுள்ள கண்ணாடியில் இப்பொருளை பார்க்க வைப்பர். இதையே விஷுக்கணி காணுதல் என அழைப்பர். 
വിഷുവിന് എങ്ങനെ കണിയൊരുക്കാം.. #vishu #tuesday #vishukani:
கேரள செல்வந்தர்கள்  தங்கள்  வயலில் வெளிஆட்களை நியமித்து விவசாயம் செய்தனர். வயலில் விளைந்த பொருட்களை மாலையில்  வயலுக்கு சொந்தமானவர் வீட்டில் கொண்டு  வந்து சேமிப்பர். செல்வந்தரும் அவர்தம் குடும்பத்தாரும் காலையில் இவ்விளைப்பொருட்களைப் பார்த்து மகிழ்வர்.  பாடுபட்டு உழைத்த பணியாளர்களுக்கு  மனமுவந்து பணமும், பொருளுமாய் அள்ளி தந்தனர். இதுவே பின்னாளில் விஷுக்கனியாவும், கைநீட்டமுமாய் மாறியது எனவும் சொல்வதுண்டு.  காலையில் விளைப்பொருட்களை காணுதன் ”கனி காணுதல்” எனவும், பணியாட்கள் பரிசுப்பொட்களை கை நீட்டி வாங்குவதால்  “கை நீட்டம்” எனவும் அழைக்கப்பட்டது.
Quietbystander: A woman collecting Kani Konna (Cassia Fistula) flowers for the Vishu festival. An image from Kerala, India.:
பைசாகி:  
விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம்  பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள்.   ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய் கொண்டாடப்படுகிறார்கள். திருமணம் போன்ற மங்களகரமான நாட்களை நடத்தை ஏற்ற மங்களகரநாளாக இந்நாளை கருதுகின்றனர்.  இநாளில் ஆறு, குளங்களில் நீராடுவதை முக்கிய நிகழ்வாய் கொண்டுள்ளனர். இந்நாளில் அறுவடையான பொருட்களை விற்பனை செய்ய பெரும் சந்தை உருவாகும். பல்வேறு இன்னிசை கச்சேரிகள் நடைப்பெறும். முக்கியமாய் பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமான பாங்க்ரா நடனநிகழ்ச்சி நடக்கும். ஆடை அணிகலன், வீட்டு உபயோகப்பொருட்களும் கடைவிரிக்கப்படும்.  
True sights of India:
1699ம் ஆண்டு  சீக்கிய மதத்தின் கால்சா என்ற பிரிவை  பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் உருவாக்கியதால் இந்நாளை கால்சா பிரிவினர் வெகுவிமர்சையாய் கொண்டாடுகின்றனர்.  இந்நாளில் கரும்புசாறும், பாஸ்மதி அரிசியினாலுமான பாயசத்தை உண்கின்றனர்.
நாரதருக்கும் க்ருஷ்ணருக்குமான உறவு;
ஒருமுறை நாரதருக்கு காம எண்ணம் தலைத்தூக்கியது. எத்தனை முயன்றும் அவரால் காமத்தை அடக்க முடியாமல் போகவே, க்ருஷ்ணரிடம் சென்று முறையிட்டு உங்கள் அறுபதனாயிரம் கோபியர்களில் யாரேனும் ஒருவரை மணக்க ஏற்பாடு செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார். எந்த கோபியர் மனதில் நானில்லையோ அவளை நீ மணந்துக்கொள் என க்ருஷ்ணர் பதிலளித்தார்.  அனைத்து கோபியரிடமும் உங்கள் மனதிலுள்ள ஆண்மகன் யாரென கேட்டார். அனைவரும் க்ருஷ்ணன் பெயரை சொல்லவே, மீண்டும் க்ருஷ்ணரிடம் வந்து, எல்லா கோபியர் மனதிலும் தாங்களே இருக்கின்றீர். அதனால்,  நீங்களே பெண்ணாய் மாறி என்னை மணந்துக்கொள்ளவேண்டுமென வேண்டினார்.  க்ருஷ்ணர் பெண்ணாய் மாறி நாரதரை மணந்து  சிலகாலம்  குடும்பம் நடத்தினர்.  அதன் விளைவாய் அறுபது குழந்தைகள் பிறந்தனர்.  அவையே   பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் எனவும் சொல்லப்படுது.  அறுபது  வருடங்களில் ஒன்றுகூட தமிழ் பெயர் இல்லாமைக்கு இதுவே காரணம். 
Lord Krishna & Srila Narada Muni:
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திங்கட்கிழமை ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம்..
நன்றியுடன்,