Sunday, February 26, 2017

மயான கொள்ளை - மேல்மலையனூர்


மயான கொள்ளை,,காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி 

 பெரும்பாலும் அங்காளம்மன் அல்லது அங்காளபரமேஸ்வரி வழிபாடு  கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, ஆற்காடு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படும் ஒரு வழிபாட்டுச் சடங்கே மயான கொள்ளை ஆகும். இதற்கு, மயானத்தில் நிகழ்த்தப்படும் கொள்ளைஎன்று பொருள்படும். ஆனால், “கொள்ளைஎன்பது திருட்டுஎன்ற  அர்த்தம் கொள்ளாமல் தீயதை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுவதாய பொருள் கொள்ள வேண்டும்.


மாசி மகாசிவராத்திரி அன்று நண்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றிரவு  இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) படுத்திருப்பது போல் உருவமொன்று அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர். காலையில் பூசாரி பதினாறு கைகள் கொண்ட அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஏற்றுவர். காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள்.



 குறிப்பிட்ட குலத்தை சார்ந்த ஆண் ஒருவருக்கு புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, அனைத்து ஆபரணங்களும் சூட்டி, நீண்ட முடியுடன் அம்மனாய் உருவகப்படுத்துவார்கள்.  அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரலை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கள் வீடு, கழனிகளில் விளைந்த காய்கறிகளை வீசுவர்.. உடல்நிலை சரியில்லாத போது வேண்டிக்கொண்டதற்கிணங்க பாதிக்கப்பட்டு சீரான உடல் பாகங்களின் உருவங்களை அரிசி மாவில் செய்து வீசுவர். குழந்தை வேண்டி வரம் பெற்றவர்கள் குழந்தை உருவம் செய்து வீசுவர். அதை முந்தானையில் பிடித்து குழந்த வரம் வேண்டுவோர் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் உருவாக்கியிருக்கும் அம்மன் மீதிருக்கும் மஞ்சள், குங்குமம். சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது.



அப்போது எடுக்கப்படும் மண், மஞ்சள், குங்குமம் சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தது  அதனை நிலத்தில் புதைத்தால் நல்ல விளைச்சல் உண்டாகும். அதனை பூசாரி திருநீறு போல் மக்களுக்கு வழங்குவர்.மயான கொள்ளைநிகழ்ச்சியின் போது பம்பைகாரர்கள் பாடல் இசைப்பார்கள். 



கேரளத்திலும், கேரளத்தையொட்டிய குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் அம்மன் கோயில்களில் களமொத்தும் பாட்டும்என்ற நிகழ்ச்சி மயான கொள்ளையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. களமொத்து பாட்டு அம்மன் உருவத்தைத் தரையில் வரைந்து வண்ணம் தீட்டி பாடல் பாடியும் களச்சித்திரம் அழிக்கப்படும்.குமரி மாவட்டத்தில் நாயர் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி நம்பூதிரி அல்லது பிராமணரால் பூசை செய்யப்படுகிறது. நம்பூதிரிதான் தரைச்சித்திரத்தை அழிப்பார். கால் பகுதியிலிருந்து சித்திரம் அழிக்கப்படுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் அரிசி திருமலை பிரசாதம்என நம்பப்படுகிறது.



இந்த அரிசியில் ஒன்றிரண்டை கஞ்சி வைத்து குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்குப் பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. சிதைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொடிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பேய், பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளி, அங்காளம்மன், காட்டேரி, பேய்ச்சி போன்ற பல வேடங்கள் போடப்படுகின்றன. வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும், ஆடலும் சிறப்பிடம் பெறும். ஆயினும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நிகழ்த்தப்படுகின்றன.


வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது, தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க யாகத்துக்கு வந்த தாட்சாயனி, தந்தையை சமாதானப்படுத்த முடியாமல்...  சிவனுக்கு தன் உயிரையே அவிர்பாகமாய் அளிக்க,  யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள்.

அம்பிகையின் உயிரற்ற  உடலைத் தூக்கிக்கொண்டு ஈரேழுலகத்தையும் சுற்றி வந்ததை காண சகியாத மகா விஷ்ணு தன் சுதர்ஷண சக்கரத்தை ஏவி தாட்சாயணி உடலை துண்டாடினார். அப்படி  அறுந்து விழுந்த அம்பிகையின் உடல் பாகங்கள் ச்கதி பீடங்களாய் முளைத்தன. துண்டாய் விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர்.அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.



Mayana Kollai Celebration in Tiruvannamalai

இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய  சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிச்சை இட்டு அந்த பிச்சைய ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிச்சை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.



அன்னையானவள் சுவை மிகுந்த உணவை தயாரித்து சிவனுக்கு பிச்சை இடத்தயரானாள். முதல் கவளத்தை சிவனின் கையிலிருந்த மண்டை ஓடு உண்டது. இரண்டாவது கவளத்தை வேண்டுமென்றே தவறவிட்டாள் அன்னை. உணவின் ருசியால் ஈர்க்கப்பட்ட மண்டை ஓடு உணவை சுவைக்க வேண்டி சிவனின் கையிலிருந்து நழுவியது..  மீண்டும் அக்கபாலம் இறைவனின் கைகளில் ஏறாமல் இருக்க அன்னையானவள் தன் கையிலிருந்த மிச்ச உணவை வானை நோக்கி இறைத்தாள்.  கபாலமும் உணவுக்காக வான் நோக்கி சென்றது.  அப்படி வான் நோக்கி பறந்த கபாலத்தை விஸ்வரூபமெடுத்து தன் கால்களால் பூமியில் அழுத்திகொண்டாள்.

அப்படி சிவனின் பிரம்மஹத்தி தோசம் நீங்கிய நாள் மாசி மாத அமாவாசை தினம். அதன் நினைவாகவே இன்றும் மயான கொள்ளை நடத்தப்படுது. சிவன் கையிலிருந்து கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடிதாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.


மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன்னுடைய பூரண வலுவோடும்பலத்தோடும் இருப்பாள். .இப்படி பட்ட சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசேஷம் மயான கொள்ளை. மாசி அமாவாசையில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை ஒரு தனி சிறப்பு.  மேல்மலையனுரில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது இந்த மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு (ஒரு பக்தர் இவ்விதம் அலங்கரிக்கப்படுவார்) கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.




ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிவிக்க விஸ்வரூபமெடுத்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்திபடுத்தவே எலுமிச்சை மாலையும், வேப்பிலை மாலை, உடையை சார்த்தியும், ஒவ்வொரு  அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடியும் அம்மனை சாந்தப்படுத்தகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காணவரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது..

நாமும் இந்த அங்காளபரமேஸ்வரி , அம்மனுடைய அருளை பெறுவோம்..

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....
நன்றியுடன்,

ராஜி 

Friday, February 24, 2017

குரங்கு சக்ரவர்த்தியான கதை- மகா சிவராத்திரி

விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்திலாம் அந்தந்த இறைவனின் அவதாரங்களின் தினங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்களாகும். ஆனால், பிறப்பும், இறப்புமில்லாத சிவனுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஜெயந்தி விழா இல்லாத குறையை தீர்க்க ‘மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும்,  காத்த உயிர்கலை தன்னுல் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும் இந்த நாளில்தான் என்கிறது நம் புராணங்கள். இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ எனப்படுது. ‘லயம்” என்றால் ஒடுக்குதல்.  ஸ்ருஷ்டி என்றழைக்கப்படும் ‘படைத்தல்’.  அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே ” மகா சிவராத்திரி’ ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை பெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதி தேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நீக்கி நான் எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே  ’மகா சிவராத்திரி’  கொண்டாடப்படுது.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின் முன் பூஜை செய்து, அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். அன்று சிவன் கோவில்களில் நடைப்பெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், தேன், இளநீர்.. போன்ற பொருட்களை வழங்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
விரதம் இருக்கும் முறை;
குளித்து முடித்து பூஜை செய்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்லது. பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ சிவலிங்கத்தை அலங்கரித்து இரவு முழுவதும் விழித்திருந்து நாலு கால பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள்

  குறைந்த பட்சம் லிங்கோற்த்பவ காலத்திலாவது கண்விழித்திருக்கவேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிவாய நம ஓம்... ஓம் நமச்சிவாய.. என சிவ நாமத்தை தியானம் செய்ய வேண்டும். சிவன் தொடர்பான கதைகள், திருவாசகம், திருமூலர், திருமந்திரம்.. போன்றவற்றை படித்தல் நல்லது.. அதைவிடுத்து, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்தல் நலம்...

இனி நாலு கால பூஜை விவரங்களை பார்ப்போம்...

முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது.  இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
மூன்றாம் கால பூஜை:
 இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின்  அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம்,  வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து  அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

சிவராத்திரி விரதத்தின் பலன்கள்;
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும், பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.   வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி உறங்காமலிருக்க  மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழ போட்டும், சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை... நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலை..

பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.
சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு  மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே!
சிவராத்திரிக்கு மறுநாள் சிவப்புராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழித்து மாலை வேலையில் பூஜை செய்து அன்றிரவு எதும் உண்ணாமல் உறங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்வில் எல்லா நலத்தையும் அருள்வதுடன் முக்தியையும் இறைவன் அளிப்பதோடு அவர்களின் மூவேழு தலைமுறைகளின் பாவங்கள் கலையப்பட்டு முக்தி கிட்டும்.


சிவராத்திரி விரதமிருப்போம்
வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்
 சகலமும்  சிவார்ப்பணம்.
ராஜி 

Tuesday, February 21, 2017

கைக்கொடுத்திருப்பாயா சகோதரா?!

அன்புள்ள சகோதரனே,
நீ நலமா? நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா?
தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,

தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,
பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,

என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,
நான் சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,
தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,
பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,
இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு ராஜனைதான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,
மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,
மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை..,
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,

ப்த்து மாதம் சுமந்து, உயிர் கொடுத்து பெற்று,தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, என்னை உல்ளாங்கையில் வைத்து தாங்கிய அன்னை இன்று படுத்த படுக்கையில்...,,

மகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் சில உண்டு.அதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,
ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?
இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,.. துரதிர்ஷ்டசாலியான சகோதரி.

Monday, February 20, 2017

ஹம்சா - உள்ளங்கை வடிவிலான தாயத்து

இன்று நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பற்றி பார்க்கப்போகிறோம்.80-களில் இடுப்பில ஜட்டி போடாத குழந்தைகளை கூட பார்த்து இருப்போம் .ஆனா தாயத்து இல்லாத குழந்தைகளை பார்ப்பது மிக அரிது .இன்றைய நாகரீக கால ஓட்டத்தில் இவைகள் எல்லாம் மறைந்து விட்டாலும் சில இடங்களில் இன்னமும் அந்த பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.சரி நம்முடைய நாட்டில் மட்டும் தான் இப்படி என்று நினைச்சோம்னா, உலகம் பூரா இந்த வழக்கம் பரவலா இருந்துவந்திருக்கு,.அதுபற்றிய ஒரு பதிவை இப்ப நாம பார்க்க போறோம்
Hamsa Brass Door Knocker:
இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பிரபலமான ஒன்று பெரும்பாலான வீடுகளில் சுவர்களில்ல தான் தொங்கவிடுறாங்க கண்திருஷ்டிலிருந்து தடுக்க என்று சொல்லப்பட்டாலும் ,வரலாற்றில் இதன் பயன்பாடு பல்வேறு சமூகங்களில் பாதுகாப்பிற்கான சின்னமாகவும் பயன்படுத்தி இருக்கிறாங்க .  
Hamsa door knocker.  Sometimes known as the Hand of Miriam (sister of Moses).  Five : Books of the Torah.:
திறந்த  நிலையில் இருக்கும் இந்த வலதுகை சின்னமானது ,சுவர்களில் மட்டுமல்ல ,ஆபரங்களாகவும், யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பயன்படுத்தப்படுகிறது .ஹம்சா என்றால் ஐந்து  அல்லது கைகளில் உள்ள ஐந்து விரல்களை என்றும் சொல்லப்படுவதுண்டு. இது அவர்களுக்கு தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக நம்பப்பட்டு வருகிறது..இந்தவழக்கம் பண்டைய எகிப்து நாகரீகத்தினரிடமும் ,மற்றும் பண்டைய Carthage (modern-day Tunisia) துனிசியா சமூகத்தின் வழியாக நடைமுறைக்கு வந்தது எனவும் கூறப்படுவதுண்டு.
My Hamsa and the powers of the evil eye protected me from danger as I continued on my trek to hunt the Nazis…:
இது முதன்முதலாக பண்டைய மெசபடோமியா (இன்றைய ஈராக் )பகுதியில் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்..திறந்த நிலையில் இருக்கும் இந்த கைகள் சிக்கல்களிருந்து அவர்களை காக்கும் இஷ்தார் என்னும் (மெசபடோமியன் நாகரீகத்தில் வணங்கி வந்த பெண்)தெய்வத்தின் கைவடிவிலான தாயத்து என சொல்லப்படுகிறது.இந்த தாயத்துவடிவிலான கைகளை சுற்றி உள்ள குறியிடுகள் ,வீனஸ் என்ற பெண் தேவதையின் கைகள் என்றும் அவைகள் தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் தெய்வீக குறியிடுகள் என்றும் சொல்லப்படுகின்றன .
மேலும் ,பெண்கள் வலுவாக இருக்கவும் ,நல்ல குழந்தைகளை பெற்றெடுக்கவும் அவர்கள்,வாழ்வில் தீய சக்திகளினால் பிரச்சனைகள் வராமல் இருக்கவும்,திருமணவாழ்க்கை நன்றாக அமையவும் இந்த தாயத்து பயன்படுத்தி வந்தனர் பண்டைய எகிப்தியரின் கோட்பாடுகளின் படி ,இது கடவுள்களின் கைகள்,இதன் மூலம் கடவுள் எங்கும் இருக்கிறார் என்று நம்பிக்கைவைத்தனர் .அதில் இருக்கும் கண்கள் ஆகாய கடவுள் ஹார்ஸ்சினுடையது என்றும் ,அவருடைய இரண்டு கண்களாக சூரியனும் ,சந்திரனும் உள்ளனர் என்றும் அதுவே அவர் மனக்கண்ணாக இருந்து பார்த்து வருகிறார் என்றும் , தப்பு செய்கிற எவரும் அவர்களுடைய மனச்சாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியாத அளவு பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்ற நம்பிக்கையும் கொண்டு வழிபாட்டு வந்துள்ளனர்.இஸ்லாமியர் இது பாத்திமாவின் கரங்களாக ஆபத்துகளில் இருந்து காக்கும் கரங்களாக வழிபட்டு வந்துள்ளனர் .
.Hamsa Amulet Large Metal Wall Art:
இதன் பயன்பாடு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே யூதர்களாலும் ,அதன் பின்பு இஸலாமியர்களும் வழிபாட்டு வந்திருக்கிறது ,யூதர்கள் இந்த ஐந்து விரல்களையும் கடவுளரின் ஐந்து நிலைகளாக கருதி வழிபட்டுவந்தனர் இஸ்லாமியர்களால் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் இந்த தாயத்து,,யூத,மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலும் அறியதாக உபயோகத்தில் இருந்து வந்துள்ளது ..கிருஸ்துவர்களும் இதை மேரியின் கைகளாக பாவித்து வணங்கி வந்துள்ளனர் அதேபோல் இஸலாமியரின் ஆட்சி ஸ்பெயினில் முடிவுக்கு வந்தவுடன் ஐந்தாம் சார்ள்ஸ் அரசர் 1526  ம் ஆண்டு இதற்க்கு தடைவிதித்தார்
This Hamsa was handmade in Morocco and features Life Spirals on front and reverse side. The cobalt blue enamel is in excellent condition. The center Coral is an old cabochon and is set in an unusual scalloped bezel.:
இந்த ஹம்சா தாயத்தானது ,தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது .இது தெய்வங்களின் வலதுகையை குறிப்பிடுகிறது என்றாலும் ,மேலும், பாதுகாப்பும் பலமும் அளிக்கும் இது மிகவும் புனிதமானதும் மந்திரசக்தி கொண்டது என்றும் நம்பப்படுகிறது
Michal Golan Tonal de colores tierra con acentos de oro muro mosaico Hamsa:
அரபு மற்றும் பெர்பர் கலாச்சாரதில் முக்கியத்துவம் வாய்ந்த இது ,அல்ஜீரியாவில் தேசிய சின்னமாகவும் இருக்கிறது. மேலும் குரானின் வசனங்கள் அடங்கிய வெள்ளி பெட்டிகளின் வடிவிலும் இது உபயோகத்தில் உள்ளது..பண்டைய எகிப்து கலாச்சாரத்தில் ,இந்த சின்னமானது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்க ,சிறுவர்களின் தலைமுடி அல்லது கருப்பு நூல்களை கொண்டு அணிந்துகொண்டனர்..இந்த சின்னம் இஸ்ரேல் மக்களால் இன்றளவும் அணிகலன்களிலும், வாழ்த்து அட்டைகள், லாட்டரி மற்றும் விளம்பரங்களில் இந்த சின்னம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது..சில இடங்களில் இந்த சின்னம் சுவர்களிலும் அலங்கரிக்கின்றன..பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருக்கும் இந்த சின்னம் அல்லது தாயத்து நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தாலும்,,உலகம் முழுவதும் பல சமூகத்தினராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.மீண்டும் இதுபோன்ற ஒரு வித்தியாசமான பதிவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி 
Hamsa Bracelet Hamsa Charm  Hamsa Hand Bracelet Lava by indietiez:
ராஜி 

Thursday, February 09, 2017

காவடி எடுப்பது ஏன்?! - தைப்பூசம் ஸ்பெஷல்

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம்.  தைமாத  பூச நட்சத்திரம் வரும்  நாளே ”தைப்பூச” விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாகவே  இருக்கும்.

தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் விழாக்களுக்கு முக்கியமானது தைப்பூசம் ஆகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடக்குதல் என செய்கின்றனர். முருக பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், பாதயாத்திரை, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர். இந்த நாளில் முருகனின் அறுபடைவீடுகள் உள்ளிட்ட எல்லா முருகன் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுது.  

தேவர்களின் பகல் பொழுது உத்தராயணம் என அழைக்கப்படுது. உத்தராயண காலம் தைமாதத்தில் ஆரம்பிக்குது. எனவே தேவர்களின் காலைப்பொழுது தைமாதம் ஆகும். சிவ அம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்க்கோட்டில் நிக்க “தைப்பூசம்” அமைகின்றது. அப்பேற்பட்ட புண்ணிய நாள் இன்று(9.2.2017) கோலாகலமாய் கொண்டாடப்படுது..


தைப்பூச நாளன்றுதான் உலக சிருஷ்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிவசக்தி ஐக்கியம் இந்நாளில்தான் நிகழ்ந்ததாக சொல்லப்படுது. சிவனில்லையேல் சக்தியில்லை.... சக்தியில்லையேல் சிவனில்லைன்ற கூற்றுப்படி சிவனும், சக்தியும் இணைந்ததால் உலகம் உருவாகி, இயங்குது. இந்த புண்ணிய தினத்தில் முதலில் உருவானது “நீர்”, அதன்பின் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என உருவானதாக நம்பிக்கை. உலக இயக்கத்திற்கு ஆதாரமான பஞ்சபூதங்கள் சிருஷ்டிக்கப்பட வழிகோலிய இத்திருநாளை போற்றி வழிப்பாடு செய்கின்றோம்.
இயற்கையையும் வழிபடும் நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் தைப்பூசம் கொண்டாடப்படுது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் இயற்கையை மீறி எதும் செயல்படமுடியாது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே இயற்கையே அடித்தளமா இருக்கு. தோற்றத்திற்கும், மறைவிற்கும், அதற்கிடைப்பட்ட காலங்களின் செயல்பாட்டிற்கும் இயற்கையே அடிப்படை விதியாகும்.

பூச நட்சத்திரட்தின் அதிபதி தேவர்களி குருவான பிரகஷ்பதி(குரு பகவான்) இவரே அறிவின் தேவதையுமாவார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவப்பெருமானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டம் ஆடி காட்டிய நாள் இந்த தைப்பூச நாளாகும். இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளதை நமக்கு உணர்த்தும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.
தகப்பனுக்கு மட்டுமல்லாமல், தமையனுக்கும் இந்நாள் விசேஷ நாளாகும். சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும், தன் அன்னையான பராசக்தி தன் அம்சமான வேலை வழங்கிய தினமாகவும் தைப்பூசம் விளங்குகிறது. சிவனின் அருளால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராய் விளங்குவதால், தைப்பூசத்தன்று அபிஷேக ஆராதனையும், திருவிழாக்களும் கொண்டாடப்படுது. தாங்கள் நினைத்தது நிறைவேற தைப்பூசத்தன்று விரதமிருந்து, நினைத்த வரம் கைவரப்பெற்றப்பின் நேர்த்திக்கடனாக அலகுகுத்துதல், காவடி எடுத்தல், பாதயாத்திரை என செலுத்துகின்றனர்.
தைப்பூசம் திருவிழா முருகனின் படவீடுகளில் ஒன்றான பழனியில்தான் மற்ற தலங்களைவிட வெகுவிமர்சையாக கொண்டாடப்படுது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில, நாட்டிலிருந்தும் விரதமிருந்து பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

முருகப்பெருமானின் அருளைப்பெற தைப்பூசம் உகந்த நாள், முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனடியார்கள் சிறப்பு வழிபாடுகள், நேர்த்திகடன்கள் என வெகு விமர்சையாக கொண்டாடுவர்கள். 


தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்தம் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை அனுபவப்பூர்வமாய் கண்ட உண்மையும்கூட. தங்கள் நோய் குணமானதும் பழனி முருகன் கோவிலில் தங்கள் நேர்த்திகடனை காவடி எடுத்து செலுத்துகின்றனர். மற்ற கோவில்களிலும்கூட காவடி எடுக்கும் பக்தர்களும் உண்டு.
காவடி எடுப்பதன் பொருள்: 
அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளை கொண்டுவரும்படி பணித்தார். 

அவ்வாறே இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்குமாறு ஒரு கம்பில் காவடியாய் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகலையும் திருவாவினன்குடியில்(பள்நீ) நிலைப்பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி, இடும்பன் வழித்தெரியாமல் திகைத்தபோது முருகன் குதிரைமீது செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடியில் சற்று ஓய்வெடுத்து செல்லுமாறு கூறினார். 

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து, பின் புறப்படும்போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை இப்போது தூக்க முடியாத காரணத்தை ஆராய்ந்த போது , சிவகிரியின்மீது ஒரு சிறுவன் கோவனத்துடனும், கையில் தண்டத்துடனும் நிற்பதை கண்டு, மலயிலிருந்து இறங்குமாறு பணித்தான். ஆனால், சிறுவனோ, இம்மலை எனக்கே சொந்தம் என சொந்தம் கொண்டாடினான். கோபமுற்ற இடுமபன் சிறுவனை தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் விழுந்தான்.

இதை உணர்ந்த அகத்தியரும், இடும்பனின் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட இடும்பனுக்கு அருளி அவனை உயிர்பித்து தன் காவல்தெய்வமாகவும் உயிர்பித்தார். அப்போது இடும்பன், தன்னைப்போல காவடியேந்தி பால், சந்தன, மலர், இளநீர் போன்ற அபிஷேகபொருட்களை கொண்டு வந்து உம்மை வணங்குபவர்களது பிணி நீங்க அருள்செய்ய வேண்டுமென வரம் கேட்டான். அவ்வாறே முருகனும் அருளினார். அன்றுமுதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும், துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கிறது, மனிதனாய் பிறந்தவன் இவ்விரு துன்பங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். இவ்விரண்டையும் எளிதாய் சுமக்க கடவுள் பக்தி என்னும் மையக்கோல் உதவுது என்பது இதன்மூலம் புலனாகிறது.

இறை சக்தியும், இயற்கை சக்தியும் எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றிவிட்டால் தன்னிம்பிக்கை தானே வந்து நம்வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இத்தைப்பூச நன்னாளில் சிவசக்தி பேரருளை நாடி வழிப்படுவோம்.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...
வணக்கங்களுடன்,
ராஜி.

Monday, February 06, 2017

திருவண்ணாமலை கோவில் - கும்பாபிஷேக ஷ்பெசல்


சிவனே மலையாய் உருக்கொண்ட திருவண்ணாமலை பத்தியும், கிரிவலம் பத்தியும், மகாதீபம் பற்றியும் பல பதிவுகள் நம் தளத்தில் பார்த்திருக்கிறோம். ஆனா, கோவில் பத்திய விவரங்களை இதுவரை நாம பார்க்கலை. ரொம்ப நாளா இருந்த வந்த அந்த குறையும் இறைவன் அருளால இன்னிக்கு கொஞ்சம் நீங்கிச்சு.

இனி கோவில் பத்தி பார்ப்போம். 6 பிரகாரங்கள், 9 ராஜ கோபுரங்கள், கருவறை, முக மண்டபம், திருச்சுற்றுகள், திருக்குளம், மதில்கள் மலையடிவாரத்தில் இருக்கும் இச்சிவாலயத்தில் 142 சன்னிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என 24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில்.


விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோவிலின் பணியை தொடங்கி வைத்தனர். இக்கோவிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகப் பழமையானது தொன்மையானதும்கூட. இக்கோபுரம் கி.பி 1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

கி.பி. 14 நூற்றாண்டில் ஒய்சாளர்களின் தலைநகராக திருவண்ணாமலை இருந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள வல்லாள மகாராஜாகோபுரம் மூண்றாவது வல்லாள மாகாராஜாவால் (1291- 1342) கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி எனக்கூறுவர்.
ஒய்சாள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்சத்தை எட்டியது. கிருஷ்ண தேவராயர் (1509 -1529)தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி.1516 ல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும். இராயக்கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுப்போல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக்கலைக்கு எடுத்துக்காட்டு.


சிவகங்கை குளமும், ஆயிரங்கால் மண்டபமும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானதாகும். விஜயநகர கால கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
அண்ணாமலையார் கோவிலின் மூலவர் அருணாச்சலேஸ்வரர். அம்பாள் உண்ணாமுலை அம்மன். கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சன்னிதிக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் அஷ்டலட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டபம் உள்ளது. விநாயகர் சன்னிதியும், கம்பத்து இளையனார்(முருகன்) சன்னிதியும் இக்கோவிலுள்ள முக்கிய சன்னிதிகளாகும்.

பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரம்மாண்டமாய் இக்கோவில் பரந்து விரிந்து இருக்கு. கோவிலின் உள்ளே நுழைய திசைக்கொன்றாய் நாலு கோபுர வாசல் உள்ளது.. கோவிலின் ராஜ கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும், 11 அடுக்குகளையும் கொண்டது.



 சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்கள் கோவிலினுள் உள்ளது. இக்கோவில் மிகப்பெரியது என்பதால் ஆறு பிரகாரங்களில் என்னன்ன சன்னிதிகள், சிறப்பம்சங்கள் உள்ளது என பார்ப்போம்...

முதல் பிரகாரம்: இங்கு மூலவர் சன்னிதி உள்ளது. விண்ணுக்கும், மண்ணுக்குமாய் நின்றருளிய இறைவனை இங்குதான் தரிசிப்போம்.. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்க இங்கிருந்து வழி உண்டு.

இரண்டாம் பிரகாரம்: இங்கு அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பைரவர், கஜலட்சுமி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வர் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கு. அண்ணாமலையாரின் பள்ளியறையும் இங்குதான் இருக்கு.


மூன்றாம் பிரகாரம்: இங்கு கிளிகோபுரம், தீபதரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சன்னிதி, யாகசாலை, பிடாரி அம்மன் சன்னிதி, கல்லால் ஆன திரிசூலம், சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் சன்னிதிகளை தரிசிக்கலாம்.
நான்காம் பிரகாரம்:  கால பைரவர், பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்திவிலாசம், கருணை இல்லம், பிரம்ம லிங்கம், யானை திரைக்கொண்ட விநாயகர், நளேஸ்வர லிங்கம், பிச்சை இளையானார் சன்னிதிகளை இங்கு தரிசிக்கலாம்..

ஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சன்னிதி, ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சன்னிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மகாராஜா கோபுரம் முதலியவற்றை இங்கு காணலாம்.


ஆறாம் பிரகாரம்: கோவிலுக்குள் நுழையக்கூடிய நாலு கோபுரங்கள் இங்குள்ளது. பதினோரு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் 217 அடி உயரத்திற்கு வானளவி நிற்கிறது. 11 கலசங்களை தாங்கி கம்பீரமாய் நின்று நமக்கு கோடி பலன்களை அள்ளி தருகிறது. ராஜகோபுரத்தை கீழைக்கோபுரம் எனவும் அழைக்கப்படுது. தெற்கு கோபுரத்தை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்கு கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்றும் கூறுவர்.
கிளி கோபுரம்:
ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார். இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று

கம்பத்து இளையனார்: எல்லா சிவன் கோவில்களிலும் உள்நுழைந்ததும் முதலில் தரிசிப்பது விநாயகராய்த்தான் இருப்பார். ஆனால், திருவண்ணாமலை கோவிலில் முருகப்பெருமான் அவ்விடத்தை பிடித்துள்ளார். 16 கால் மண்டபத்தில் அருணகிரிநாதரில் பிரார்த்தனைக்கிரங்கி பிரபுடதேவராய மன்னருக்கு ஒரு தூணில் காட்சி தந்ததால் இப்பெயரில் நமக்கும் அருள்பாலிக்கின்றார் முருகர் 
பாதாள லிங்கமும் ரமணரும் : இங்குதான் பாதாளலிங்கேசுவரர் சந்நதி உள்ளது. ""பாதாளம்'' என்பதற்கேற்ப, படிகள் வழியே கீழே இறங்கி அவரை தரிசனம் செய்கிறோம். பள்ளிப்படிப்பைத் துறந்து, பலத் தலங்களைச் சுற்றி வந்த பின்னர், வெங்கடசுப்ரமணியன் என்ற அந்தச் சிறுவனுக்கு பாதாளலிங்கேசுவரரின் தரிசனம் ஞானஒளியைத்தந்தது. அதன் பின்னர், ரமணர் ஆகி, ரமண மகரிஷி என்ற பெருமையும் பெற்று, திருஅண்ணாமலை திருத்தலத்தில் பல காலம் தங்கி தவம் செய்து முக்தியும் பெற்றது வரலாறு. அடுத்து நாம் காண்பதுதான் வல்லாளமகாராஜா கோபுரம். இந்த கோபுரத்தின் மீதேறிதான் தனது ஊனுடலை நீக்கிக் கொள்ள அருணிரிநாதர் முயற்சித்தார். கீழே விழுகையில்,அவரைத் தாங்கி நின்று காப்பாற்றி அருள்பாலித்த முருகப்பெருமான்,கோபுரவாசலில் காட்சி தருவதும் மிகப் பொருத்தமே ! 
1400 ஆண்டு பழமையான திருவண்ணாமலைக்கோவிலுக்கு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு பிறகு இன்று (6/2/2017) கும்பாபிசேகம். அதனால, சும்மா எனக்கு தெரிந்த கோவில் விவரஙகளை பதிவிட்டுள்ளேன்...
விரைவில் மிக விரிவாக கோவில் அமைப்பும், அதற்குண்டான படங்களும் பதிவிடப்படும்.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
வணக்கங்களுடன்..,
ராஜி.