Saturday, January 09, 2016

தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளருக்கு ஒரு வேண்டுகோள் - கேபிள் கலாட்டா

அது ஒரு பிஸ்கட் விளம்பரம். பள்ளியில் காலைல அசெம்ப்ளி கூடி இருக்கு.  பிள்ளைகள்லாம் வரிசைல நிக்குறாங்க. தலைமை ஆசிரியர் பிள்ளைகளை பார்வையிட்டுக்கொண்டே வருகிறார். ஒரு பையன் ”டை” கட்டிக்கிட்டு வரல. உடனே, ஆசிரியர் கோவமாகி.., “கெட் டவுட்”ன்னு சொல்லிட்டு அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வராமல் போகவே அவனையும் வெளில போகச் சொல்லிட்டு.., அடுத்த பையனை பார்க்குறார். அவனும் “டை”கட்டிக்கிட்டு வரல. கொஞ்ச நேரம் அவனை உத்து பார்த்துட்டு, அவன் பாக்கெட்டில் வெளியில் தெரியும் “டை”யை பாக்கெட்டுக்குள் தள்ளிவிட்டு சிரித்தப்படியே அவனையும் வெளில போகச்சொல்லிடுறார். பிள்ளைகள்லாம் சிரிச்சப்படியே பிஸ்கட் சாப்பிடுற மாதிரி அந்த விளம்பரம் போகுது. ஆசிரியரை ஏமாத்தி, வகுப்பை கட் பண்ணுற மாதிரி விளம்பரம் வந்தாலும், நண்பனுக்கு ஒரு துன்பம், அவமானம் வந்தால் துணைக்கு ஓடிப்போகும் நண்பன் ரசிக்க வைக்குறான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதித்யா சேனல்ல “கொஞ்சம் நடிங்க பாஸ்” ன்னு ஒரு நிகழ்ச்சி. சினிமாவுல வந்த ஃபேமசான பஞ்ச் டயலாக்” ஒண்ணை நேயர்கள்கிட்ட சொல்லி நடிக்க சொல்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆதவன்”. பயிற்சி இல்லாததாலும், கேமரா முன் நிக்கும் கூச்சத்தாலும் பெரும்பாலானவர்கள்  அந்த டயலாக்கை சொல்ல சொதப்புவாங்க. அந்த சொதப்பலுக்கு அவர் அடிக்கும் “கமெண்ட்”களும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்குது. எவ்வளவுதான் டென்சன்ல இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது நம்மையும் அறியாம சிரிச்சுடுவோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
சத்தியம் தொலைக்காட்சில சமுதாய அக்கறைக்கு  எடுத்துகாட்டா  ”வர்ணஜாலம்”ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. ”புரியாத வார்த்தை இருந்தும் பயனில்லை, புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை”ங்குற மாதிரியான வாழ்க்கையின் பல தத்துவங்களை கோடிட்டு காட்டி இருக்கிற வாழ்க்கையை இன்னும் எப்படி அழகுபடுத்தி, சீர்படுத்தி, பண்படுத்தி சமுதாயத்திற்கும் நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எப்படி பிரயோஜனமாய் வாழனும்ன்னு   பல பயனுள்ள தகவல்களை தர்றாங்க. இந்த தொகுப்புல சிந்திக்க தூண்டுற பல சுவாரசியமான தகவல்கள், புதுபுது விஷயங்கள், கலகலப்பான குறும்படக்காட்சிகளுடன் ஞாயிறு தோறும் இரவு 8:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகுது “வர்ணஜாலம்”. இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய் தோறும் மாலை 3:30 மணிக்கு காணலாம்.
------------------------------------------------------------------------------------------- 


மக்கள் தொலைக்காட்சியில் மார்கழி மாச சிறப்பை தினமும் மாலை 5.30க்கு “மாதர் போற்றும் மார்கழி”ன்ற தலைப்புல ஒளிப்பரப்பாகுது. இதில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல்களை பிரபல கர்னாடக பாடகர்கள் நிரஞ்சனா சீனிவாசன், யுவகலாபாரதி, வித்யா கல்யாணராமன்லாம் பாடி நம் மாலைப் பொழுதை பக்தி பரவசமாக்கிடுறாங்க.
---------------------------------------------------------------------------------------------
 பெண்களுக்கான நிகழ்ச்சிகள்ன்னு “சினேகிதியே”, “பெண்கள் நேரம்” “லேடீஸ் சாய்ஸ்”, “மகளிர் மட்டும்”ன்னு ரகம், ரகமா நிகழ்ச்சி ஒளிப்பரப்பினாலும், பேருதான் மாறுதே ஒழிய, நிகழ்ச்சி கான்செப்ட்லாம் ஒண்ணைப்போலவே இருக்கு. சமையல், கிராஃப்ட், அழகு குறிப்பு, ஆரோக்கியம், ஷாப்பிங்க்ன்னு...,தான் இருக்குதே தவிர,  விவசாயம், கட்டிடக்கலை, கம்ப்யூட்டர், வியாபாரம், ஷேர்மார்க்கெட்ன்னு இல்லையே! நாங்களும் அறிந்துக் கொள்ள வேண்டியதும், பகிர்ந்து கொள்ள வேண்டியதும் அதிகம் இருக்குன்னு எப்போ உணரப் போகிறீர்கள் சேனல்கார்ஸ்?!
எனக்கு டிவி பார்க்க பிடிக்காதுன்னு பதிவுக்கு பதிவு சொல்லனுமா?! தேவையில்லதானே?!

Friday, January 08, 2016

அகத்தீஸ்வரர் ஆலயம்,பொழிச்சலூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

புண்ணியம் தேடி பயணத்தில இந்த வாரம் ,நாம பார்க்கபோறது ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம். தொண்டைமண்டல கோவில்களில் ”வடதிருநள்ளாறு” என அழைக்கப்படும் ”பொழிச்சலூர் சனீஷ்வர சேஷத்ரம்”.


கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக தலங்கள் இருப்பதைப்போல, சென்னையிலும் நவக்கிரக  ஸ்தலங்கள் உள்ளன. இது தமிழ்நாடு சுற்றுலா துறையினால் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதில் நவக்கிரக நாயகரான சூரியனின் திருக்கோவில், சென்னை கொளப்பாக்கம், அகத்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி தாயார் சன்னதி, சூரியபகவான் கோவிலாகவும், சோமங்கலம், சோமனாதீஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மனுடன் சந்திர ஸ்தலமாகவும், பூந்தமல்லி வைத்தீஸ்வரர், உடனுறை தையல்நாயகி அம்மையுடன் அங்காரகன் சன்னதியாகவும், கோவூர் சுந்தரேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மையாருடன் புதன் சன்னதியாகவும், போரூர் இராமனாதீஸ்வரர் சன்னதி, குருவுக்கும், மாங்காடு வெள்ளீஸ்வரர் சன்னதி சுக்கிரன் ஸ்தலமாகவும்,  பொழிச்சலூர், அகத்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவல்லி தாயர்சன்னதி, சனீஸ்வரன் (சனிஸ்சரன்) கோவிலாகவும், குன்றத்தூர், நாகேஸ்வரர் உடனுறை காமாட்சி சன்னதி ராகுவுக்கும், கெருகம்பாக்கம், நீலகண்டேஸ்வரர் உடனுறை ஆதிகாமாட்சி தாயார் சன்னதி,  கேதுவுக்கும் பரிகார ஸ்தலங்களாக உள்ளன. அந்த வரிசையில் நாம இப்ப பார்க்கப்போறது, சென்னை பம்மலை அடுத்துள்ள பொழிச்சலூரில் அமைந்து இருக்கும் சனீஸ்வர பரிகார  ஸ்தலமான ”வடதிருநள்ளாறு”  என அழைக்கபடும் ”அகத்தீஸ்வரர்” ஆலயம்.
திருக்கோவிலின்  வடக்கு பார்த்த வாசல் வழியே இப்போ நாம நுழையும் போது நமக்கு நேரே காட்சி கொடுப்பது, ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, இந்த கோவிலின் வரலாற்றை பார்த்தீங்கன்னா, முற்காலத்தில் தொண்டைமண்டல வளநாட்டில், "புகழ்சோழநல்லூர்” என்று  அழைக்கப்பட்ட இந்த தலம் அகத்தியர் ஒருமுறை இமயமலையில் இருந்து பொதிகைமலை நோக்கி தவம் செய்யவந்த பொழுது, இந்த தலத்தில் தங்கி இருந்து, சுயம்புவாக தோன்றிய இந்தலிங்கத்திற்க்கு பூஜைகள் செய்தார். அதில், மனம் மகிழ்ந்த இறைவன் அகத்திய முனிவருக்கு காட்சியளித்ததால், இங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரராகவும், தாயார் ஆனந்தவல்லி என திருநாமம் கொண்டு இங்கே அருள்பாலிகின்றனர்.
நாம் வடக்கு வாசல் வழியே உள்ளே நுழையும்போது நமது இடப்பக்கத்தில் அருள்பாலிப்பது, “ஸ்ரீ சம்ஹார மகா காலபைரவர் சன்னதி”, இவர் அறிந்து தவறு செய்வோரை தண்டிக்கும் அமர்தகராகவும், அறியாமல் செய்த தவறினால் வரும் பாவங்களை போக்கும் பாவ விமோசனராகவும் திகழ்கிறார். சிவப்பெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான இந்த பைரவ திருமூர்த்தி, இந்த சன்னதியில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் ஆக்ரோஷம் பெற்று சம்ஹார காலபைரவராக உருபெற்றுள்ளார். 
நேர் எதிரே சிவபெருமான் வீற்று இருக்கிறார் சிவப்பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும் என்பது ஒரு வித்து உண்டு. அதுப்போல நாம சிவப்பெருமானை வலம் வரலாம். இனி வெளிப்பிரகாரம் சுற்றலாம்...,   
மேலிருக்கும் படம் திருக்கோவிலின் கிழக்கு பக்க வாயில்.  இந்த திருக்கோவிலை பற்றி சொல்வதென்றால், விதி எல்லோருக்கும் பொதுவானது. அது மனிதர்களானாலும்  சரி, தேவர்களானாலும் சரி. சனி பகவான் எப்பொழுதும் பிறருக்கு தொல்லைகளை கொடுத்து வருவதால் அவருக்கு கடுமையான பாவங்கள் வந்து சேர்ந்தன. அதை நிவர்த்தி செய்ய இங்கே ஒரு நள்ளார் தீர்த்தத்தை உண்டு பண்ணி அதில் நீராடி இங்குள்ள சிவப்பெருமானை வழிபாட்டு பாவ நிவர்த்தி பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஆகவேதான் ”திருநள்ளாருக்கு” அடுத்து ”சனீஸ்வர பகவான்” தனியே எழுதுந்தருளியுள்ள தலம் என்பதால் இதை ”வடதிருநள்ளாறு” என அழைக்கப்படுகிறது.
இறைப்பணி செய்பவர்கள் முன்னே செல்ல, நாம் அவர்களை பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்கிணங்க நாங்கள் சென்ற தினம் பிரதோஷம் தினம். அங்கே, சேவார்த்திகள் சேவை செய்துக்கொண்டு முன்னே செல்ல நாங்கள் அந்த பிரதோஷ குழுக்கள் பின்னே சென்று கொண்டிருந்தோம்.
அரசமரத்தை ஏழுமுறை வலம் வரனும்ன்னு  சொல்லுவாங்க.  அதேப்போல அரசமரத்து விநாயகரை ஒருமுறை வலம் வரவேண்டும் என்றும்  சொல்வதால் அரசமரத்து விநாயகரை வணங்கி நின்றோம்.
இங்கே இருக்கும் அரச மரத்திற்கு உள்ள தனி சிறப்பு என்னனா, வேம்புவும் அரசுவும் ஒன்றுடன் ஒன்று பின்னி, பிணைந்து இருப்பது சிறப்பு. காரணம் சிலருக்கு சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் என சில ஜோதிட விதிகள் சொல்லப்படுவதுண்டு. அந்த தோஷம் விலகி குழந்தை பாக்கியம் கிடைக்க, அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ...., 

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:| 

ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் || 
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:| 
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:|| 
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :|| 

இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.  மேலும், நிறைவான பலன்களும்  கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. 
ஒரு கோவிலின் கருவறை அமைவிடத்தை தீர்மானிப்பது, சுயம்புலிங்கம் பஞ்சபூதங்களின் சக்தி, தெய்வசக்தி, வானியல் கதிர்வீச்சு போன்றவை மிகும் இடங்கள் தான்   தீர்மானிக்கும். அந்தவகையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னர்களால் கஜ பிருஷ்ட விமான வடிவில் அமைக்க பட்டதாகும்  இந்த கோவிலின் கருவறை.  அனேகதம்(அனேகதம் என்றால் யானை) என்ற .கருவறை அமைப்பு கொண்டு வட்டவடிவமுடையதாக அமையபட்டுள்ளது. அதில் விநாயக பெருமானும், தென்முக கடவுளும் அலங்கரிக்கின்றனர். அவர்களையும் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றோம். மேலும், இந்த கோவிலில் ஈசன் கிழக்கு பார்த்த வடிவிலும், தாயார் தெற்கு பார்த்த வடிவிலும், ராஜகோபுரம் வடக்கு பார்த்த அமைப்பிலும் கட்டபட்டுள்ளது . 
இங்கே ஒரு கோ மடமும் பரமரிக்கப்படுகிறது. பொதுவாகவே ஒருமனிதனின் வாழ்க்கையில் நல்லது கெட்டது என்ற நிலைகளை இயக்கிவருவது கோள்கள் தான் என்று இந்துக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அந்தவகையில் சனி ராசியினுடைய கோரப்பார்வை தாங்கமுடியாமல் அவதியுறும் அனேகர்களின் குடும்பத்தில் துன்பமான நிலை ஏற்படும். அப்படிப்பட்ட துன்பநிலைகள தாங்கிக்கொள்ளும் அளவு நன்மையை தருவது இந்த சனீஷ்வர விரத வழிபாடு. இந்த திருக்கோவிலில் சிறப்பாக செய்யபப்டுகிறது .
சில ராசிகாரர்களுக்கு  7 1/2 நாட்டு சனியான விரயசனி, 51/2 வருஷ ஜென்மசனி , 2 1/2 வருஷ பாதசனி , 2 1/2 வருஷ அர்தாஷ்டமசனி , 2 1/2 வருஷ கண்டசனி , 2 1/2 வருஷ அஷ்டமசனி முதலிய தோஷங்கள் உள்ள ராசிக்கார்கள், அவர்களை பிடித்துள்ள சனித்தோஷம் நிவர்த்தியாக அவர்கள் ராசியிலிருந்து அடுத்த சனி பெயர்ச்சிவரை இங்குள்ள சம்கார மகா கால பைரவரையும் ,  சனீஸ்வர பகவானையும் ,சனிக்கிழமைகளில் எள்ளு தீபம் ஏற்றி அர்ச்சனைகள் செய்து அன்னதானமிட அந்த தோஷங்களின் கோர பார்வைகளில் இருந்து விடுபடலாம் என்பதும் இங்கு வந்து வழிபட்டு பலன் பெற்ற மக்களின் நம்பிக்கையாகும் .    
இது கோவிலின் கிழக்குபக்க வாயிலில் அமைத்துள்ள கொடிமரமும், அதனை அடுத்துள்ள நந்தியையும் வழிப்பட்டு கோவிலின் உள்ளே செல்லலாம் வாங்க. நம்முடைய புண்ணியம் தேடி பயணத்தில் எந்த திருக்கோவலினுள்ளும் புகைப்படம் எடுப்பதில்லை அதே நெறிமுறையை இங்கே கடைப்பிடித்து நம்முடைய கேமராவை  மடக்கிவைத்துக் கொண்டு மூலவரை தரிசிக்க திருகோவிலினுள் நுழைந்துவிட்டோம். கிழக்கு பார்த்த லிங்க திருமேனி. நம்முடைய துன்பங்கள் யாவும் நிவர்த்தி செய்து அருள்புரிந்து கொண்டு இருக்கிறார். இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா மூலவரை தரிசிக்கும் மண்டபத்தின் நாம் நிற்கும் இடத்தின் நேர் மேலே உத்திரத்தில் கல்லினால் செதுக்கப்பட்ட பாம்பின் உருவ படம் செதுக்கப்பட்டு இருக்கிறது. இது இங்குள்ள மூலவரை வணங்கி வந்தால் ராகு -கேது கிரக தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

 தாயார் ஆனந்த வள்ளி அம்மையாக தெற்கு பார்த்த கோலத்திலும் அதற்கு பக்கத்தில் காலப்பைரவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் வீற்று இருக்கிறார். அதனை அடுத்து சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியுள்ளார்.   நாங்கள் சென்ற காலத்தில் அங்கே பிரதோஷ வழிபாடு தொடங்கி இருந்தது .
பொதுவாக இது ”சனீஸ்வர பகவானு”க்குரிய தனி சன்னதி என்பதால் அர்த்தாஷ்டம சனியின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்கள்  வெள்ளிகிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் சாத்தி, புனுகு பூசி, வெண்பூசணி சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்துவந்தால் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். கண்டசனியின் பாதிப்பிலிருந்து மீள திங்கள்கிழமை  காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் பைரவருக்கு அல்லிமலர் மாலை சாற்றி, புனுகு பூசி, வெண்பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையல் இட்டு அர்ச்சனை செய்துவர  கண்டசனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அதுப்போல அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சனிக்கிழமை நாளில் இரவு 7:30 மணி முதல் 9மணிக்குள் பைரவருக்கு கருப்பு பட்டு அணுவித்து வடைமாலை சாற்றி, கருங்குவளை மலர்மாலை, நீலோர்ப்பவ மலர்மாலை சாற்றி  புனுகுபூசி , கறிவேப்பிலை சாதம் படையல் இட்டு, இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு முடிச்சு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவந்தால் அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சனிக்கிழமை நாளில் ராகுகாலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலைமலை சாற்றி புனுகுபூசி, கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயசம் படையல் இட்டு, இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணையால் தீபமிட்டு அர்ச்சனை செய்துவர  ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம். அதேப்போல ராசிக்கு 12ல் சனி இருக்கும் போது தேங்காயில் நெய்தீபமும், ராசிக்கு 1ல் சனி இருக்கும் போது எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம்மும், ராசிக்கு 2ல் சனி இருக்கும்போது வெண்பூசணியில் தேங்காய் எண்ணை தீபம் ஏற்றவேண்டும் என்பது அனுபவப்பட்டவர்களின் நம்பிக்கை.
இது குறிப்பிட்ட ஒரு இனத்தை சேர்ந்தவங்களால் பரம்பரை பரம்பரையாக  பராமரிக்கபட்டுவரும் கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு செல்லும் வழி ”பிராட்வே”லிருந்து 60 G, பல்லாவரத்தில் இருந்து 52M , கூடுவாஞ்சேரியில்இருந்துM52,,   மணிமங்கலத்தில் இருந்துM52H,, வேளச்சேரியில் இருந்துM52P அகஸ்த்தீஸ்வரர் பஸ் ஸ்டாப் அல்லது சிவன் கோவில் பஸ் ஸ்டாப் பொழிச்சலூர் என செல்லும் பேருந்தில் செல்லலாம்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5:30 முதல் பகல் 12 வரை.  பிறகு மாலை 4 முதல் 8வரை.  ஒருவழியாக திருக்கோவிலின் தரிசனத்தை முடித்துக்கொண்டு இந்த வடக்கு புற வாயிலின் வழியாக வெளியேறினோம். இனி, அடுத்தவாரம் வேறொரு கோவிலில் நிறைய விஷயங்களுடன் மீண்டும் நமது புண்ணியம் தேடி பயணத்தில் சந்திப்போம்.

Wednesday, January 06, 2016

”கலாக்ஷேத்ரா” திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் - மௌனசாட்சிகள்

எப்பப்பாரு மௌனசாட்சிகளில் பாழடைஞ்ச கோட்டை, கொத்தளம், சமாதின்னே பார்த்துக்கிட்டே இருக்கோம்ல. ஒரு மாறுதலுக்காக, கலை அம்சமும், கலர் அம்சமும் சேர்ந்த இடமான “கலாஷேத்ரா” பத்திதான் இன்னிக்கு பார்க்கப் போறோம். சென்னை திருவான்மியூரில் இருக்கும் ”கலாஷேத்ரா” பத்தி,  கலை துறையினருக்கும், கலைகளில் ஈடுபாட்டோடு இருப்பவர்களுக்கும், இணையவாசிகளுக்கும்   தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல.  ஆனா, நம்மை போல ஆசாமிகள் நிறைய பேருக்கு இது பத்தி தெரியுமா?!ன்னு கேட்டால் இல்லேன்னுதான் பதில் வரும். தெரியாத மக்களுக்கு எடுத்து சொல்றதுதானே நம்ம வேலை!! அதான் இன்றைய மௌனசாட்சிகளில் ”கலாஷேத்ரா” பத்தி பார்க்க போறோம்...


இந்திய கலைகளான பரதநாட்டியம் மற்றும் இசைக்கலையை மக்களிடையே எளிதாக கொண்டு செல்லவும், பயிற்றுவிக்கவும் 1936 - ல் தொடங்கப்பட்டதே இந்த ”கலாஷேத்ரா”.  இதை,  ”திருமதி ருக்மிணிதேவி அருண்டேல்”ன்றவர்  ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிச்சார். இக்கலைக்கல்லூரியில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உலகம் முழுவதுமிலிருந்து வந்து, தங்கி கலைகளை பயில்கின்றார்கள். ருக்மணிதேவி அருண்டேலின் வழிகாட்டலே ”கலாக்ஷேத்ரா”வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியது.  சரி யார் இந்த ”ருக்மணி தேவி அருண்டேல்” ன்னு தெரிந்து கொள்ளலாம் வாங்க.


நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள்  தம்பதியினருக்கு 29.02.1904 ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்தான் ”ருக்மணிதேவி அருண்டேல்”.  பெண் சுதந்திரம்ன்னு அதிகம் பேசப்படாத அந்த காலத்துலயே, தனிப்பட்ட வாழ்க்கையிலும், புரட்சிகரமான பாதையிலும் நடந்தவர்   இந்த ”ருக்மணி தேவி”. அன்னி பெஸண்ட் அம்மையார் துவக்கிய  தியசோஃபிக்கல்  சொஸைட்டியில்  ஈடுபாடு  கொண்டார். தந்தை நீலகண்ட சாஸ்திரி  மிகப்பெரிய வேத பண்டிதர். தாய் சேஷம்மாள் சங்கீதக் கலைக்கு   மையமான திருவையாரை சேர்ந்தவர். ருக்மணிதேவியின் தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர். ருக்மிணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவர். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவார். 

பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அருணாச்சலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணிதேவியின் தாயார் இல்லத்திற்கு வருவார்கள். ருக்மிணிதேவி தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடக்கும் நவராத்திரி விழா தொடங்கி, முடியும் வரை  இசை நிகழ்ச்சி முடியும்வரை மணிகணக்காக அமர்ந்து முழுவதுமாக கேட்டு கொண்டு இருப்பார்.  ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே கலையின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.


ருக்மணி தேவியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகில் புதிய இல்லம் கட்டி, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டினார். பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும், அவரது சகோதரி கேதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். தியசோஃபிக்கல்  சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில்   பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி அதில் நடித்து கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடலும்  பாடினார்.   இதைப் பார்த்த அவர் தந்தை,  ருக்மணிதேவியை இசை பயில  ஊக்கப்படுத்தினார். ருக்மணி தேவி கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 


1920ஆம் ஆண்டில் அன்னி பெஸண்ட் அம்மையார், ஜார்ஜ்  சிட்னி  அருண்டேல் என்பவரை  இங்கிலாந்தில் இருந்து  கல்வி  மற்றும்  இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக நியமித்தார். அப்பொழுது அன்னி பெஸண்ட் அம்மையார் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டு, அன்னிபெசண்ட் அம்மையாரின் அனுமதியோடு, ருக்மணிதேவியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.



அக்காலத்தில் ஆச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்,  வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இத்திருமணம் அந்த காலக்கட்டத்தில் ருக்மணிதேவியின் உறவினர்களிடையே  பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ருக்மணிதேவி தன் திருமணத்திற்கு பிறகு ஜார்ஜுடன் ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு பயணம் சென்றார். அங்கு இசை.  1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்தபோது, ரஷ்ய நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவாவை(1882_1931) கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணிதேவியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்தபோது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒருக்காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணிதேவியிடம், நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உருகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீதான ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்று கொடுத்தார்.

இது 1936 ல் பின்லாந்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் 

அன்னா பாவ்லோவாதான் ருக்மணிதேவி பரதக்கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணமாக இருந்தார் ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1933ஆம் ஆண்டில், கிருஷ்ண ஐயர், சென்னையில் உள்ள ஒரு மியூசிக் அகாடமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு  செய்திருந்தார். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது. அதைக் காண ருக்மணிதேவியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார் ருக்மணிதேவி. அந்த பரத நாட்டிய நிகழ்ச்சி ருக்மணிதேவிக்கு மிகவும் பிடித்திருந்தது. ருக்மணிதேவி அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தன. இருந்தாலும் சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்..



அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்பவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு ருக்மணிதேவியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். பிறகு பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு எவ்வளவோ வற்புறுத்தல்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார். ருக்மிணிதேவி தன்னுடைய 30-வது வயதில் நாட்டியம் கற்றுக் கொண்டாரென்றால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டத்தான் வேண்டும்.  கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணிதேவி அருண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் மிகவும் உதவினார்.  


நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம்ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, தன்னுடைய நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார். அந்த நிகழ்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பிரம்மஞான சபையின், வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.


மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியாரின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ என்ற நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார். அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது. பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். ருக்மணிதேவியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. உலகின் சிறந்த அனைத்துக் கலைக்களுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்த நாட்டியத்திற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார் ருக்மணிதேவி. இதற்காக, கலாக்ஷேத்ரா” என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்கள் பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். 

கலாக்ஷேத்ரா 1936 ஆம் ஆண்டு ஜனவரி6 இல் முதன் முதலாக சென்னை அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாஷேத்ராவின் முன்னேற்றத்துக்கு அன்னிபெசன்ட் அம்மையார், டாக்டர்.ஜார்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர்.சி.பி.இராமசுவாமி ஐயர்,  ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர்கள் உறுதுணையாக இருந்தனர். தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர்.  இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணைக்கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப்போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆலமரத்தினடியிலேயே நடந்தது. ருக்மணிதேவி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் மரத்தின் அடியில், கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். 



அந்த காலங்களிலேயே விளம்பரங்களில் பிரபலமானார் ருக்மணிதேவி. ,  அழகான பெண்மணியான ருக்மணிதேவியை விளம்பரம் செய்தனர்.  என் அழகுபடுத்தும் முறை வெகு சுலபம்” என்கிறார் சௌந்தர்யவதி ருக்மணிதேவி. “நான் தவறாமல் லக்ஸ் டாய்லட்  சோப் உபயோகப்படுத்துகிறேன்.  அவ்வளவுதான். அதன் சுறுசுறுப்பான நுரை எனது மேனியைப் பட்டைப்போல் வழவழப்பாகவும் மிருதுவாகவும் செய்கின்றது. உங்களுடைய மேனியை மலர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் லக்ஸ் டாய்லட் சோப் உபயோகியுங்கள்” என்றார் ருக்மணிதேவி!


ருக்மணிதேவி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தபோது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977ஆம்ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி  தேசாய், ருக்மணிதேவியை குடியரசுத் தலைவர்  பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். இவ்வளவு சிறப்புகளை கொண்ட ருக்மணி ஜார்ஜ் அருண்டேல் இந்திய அரசின்  பத்ம பூஷண் விருது, காளிதாஸ் சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்..என்பது குறிப்பிட தக்கது.


மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணிதேவிக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன. ருக்மணிதேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச்சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகுமொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும். குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.

இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பினார்.

”அத்தை” என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணிதேவி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக்கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம். அவர் தன்னுடைய 82-வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவர் இறப்பதற்கு முன் ஒரு நிருபரிடம் வேதனையுடன் கூறியதாவது, நாட்டில் மக்களுடைய யோசனை மாறி வருகிறது. எல்லோருக்கும் பணம்தான் முக்கியம் ஆகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். கலைஞர்கள் தங்களுடைய மனதையும், ஆன்மாவையும் கலைக்குத்தான் அர்ப்பணம் செய்யவேண்டும்” என்றார். கடைசி நிமிடங்களிலும் கலையைப் பற்றி நினைத்த அவரின் கலை உணர்வுகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

Monday, January 04, 2016

உங்க வீட்டு கல்யாணத்துலயும் இப்படி செய்யலாமே! - ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! ராஜி மூத்தார் பொண்ணு  கல்யாணத்துக்கு போய் வந்தியே! கல்யாணம் நல்லா நடந்துச்சா?! 
எல்லாம் நல்லா நடந்துச்சு மாமா! எல்லோரையும் நல்லா கவனிச்சாங்க. சாப்பாடுலாம் சூப்பர். அந்த கல்யாணத்துல ஒரு நல்ல விசயம் நடந்துச்சு மாமா!
என்னது அது?! உன் ஃப்ரெண்ட் இருக்குற இடத்துல நல்லதுலாம் கூட நடக்குதா?! 
சொந்தக்காரங்க எல்லோருக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுக்கும்போதே துணிலாம் கொடுத்துட்டாங்க. கல்யாணத்து முதல்நாள், முதல்லியே எல்லோரும் மண்டபத்துக்கு போயிட்டோம். அப்போ, ராஜியோட மூத்தார் சில புது துணிகளை கொண்டு வந்திருந்தாங்க. அதான் உங்களுக்குலாம் ட்ரெஸ் கொடுத்துட்டாங்களே! இதுலாம் யாருக்குன்னு கேட்டேன்.

இங்க மண்டபத்துல கூட்டுற, பாத்திரம் கழுவும் பெண்கள், மண்டபத்து வாட்ச்மேன்னு எல்லோருக்கும்தான்  அந்த துணி. நாம பட்டு கட்டிக்கிட்டு, நகை போட்டு வரும்போது அவங்க பழைய சேலைல இருந்தால் அவங்க மனசு ஏங்கும்ல.  அதுமட்டுமில்லாம, மணமேடையில சடங்கு செய்யும் பெண் ஃபோட்டோவுல கிழிசல் சேலை கட்டிக்கிட்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?! அதுக்குதான் இந்த ஏற்பாடுன்னு சொன்னா. இதும் யோசிக்குற  மாதிரிதான் இருந்துச்சு. 
ம்ம்ம் இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு புள்ள!.

மாமா! இப்போ டிவி பொட்டில கோவிலுக்கு போறதுக்கு இப்படிலாம் ட்ரெஸ் பண்ணனும்ன்னு சொல்றாங்களே! 
அதுலாம் சரிதான் புள்ள. அந்த காலத்துல கோவிலுக்கு போகும்போது ஆண்கள் வேட்டி கட்டி போகனும், கூடவே, மேல் சட்டை இல்லாம வெத்து மார்போடும், பெண்கள் சேலை கட்டி, தங்கம், வெள்ளி நகைலாம் போட்டுக்கிட்டு போகனும்ன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு காரணம் பூமியின் பாசிட்டிவ் காந்த அலைகள் நிறைய பாயும் இடங்களான மலைகள், கடலோரம், காடுகளில்தான் கோவில் கட்டி வெச்சிருக்காங்க. ரொம்ப ரொம்ப பாசிட்டிவ் அலைகள் இருக்கும் இடங்களில்தான் கோவில் கருவறையை கட்டி வச்சாங்க. கருவறையில் இருக்கும் மூல விக்கிரகத்தின் அடியில் மந்திரங்கள்னால உருவேற்றப்பட்ட செப்புனால செஞ்ச எந்திரங்களை புதைச்சு வெச்சுருக்காங்க.
பூமியில் இருக்கும் பாசிட்டிவ் காந்த அதிர்வுகளை அந்த செப்பு தகடு கிரகிச்சு சுற்றுபுறத்துக்கு பரப்புது. அந்த அதிர்வுகள்லாம் காத்தோடு போகக் கூடாதுன்னுதான் மூலஸ்தானத்து சுவத்துல ஜன்னல்களை வைக்கல நம் முன்னோர்கள். 
மூலஸ்தானத்துல சுத்தும் பாசிட்டிவ் காந்த அலைகளை பக்தர்கள் முழுசா உள்வாங்கிக்கனும்னுதான் ஆண்கள் சட்டை போடக்கூடாதுன்னு சொன்னாங்க. பெண்களால் அப்படி வர முடியாது. அதனாலதான் கோவிலுக்கு போகும்போது நகை போட்டு போகனும்ன்னு சொல்லி இருக்காங்க. தங்கத்தோடு செம்பு சேர்த்து செஞ்சு வச்சிருக்கும் அந்த நகைகள்தான் பெண்கள் உடம்புல அந்த பாசிட்டிவ் காந்த அதிர்வுகளை கடத்துது. 

ஸ்ஸ்ஸ்ஸ்  அபா! இம்புட்டு விசயமிருக்கா  மாமா. மூஞ்சி புக்குல பார்த்த இந்த படத்தை ரசிச்சேன். நீயும், நானும் இதுப்போலதான் இருக்கனும் மாமா!



ரொம்ப பேசிட்டோம். எனக்கு வாட்ஸ் அப்ல இந்த மெசேஜ் வந்துச்சு. நானும் எப்படிலாமோ யோசிச்சு பார்த்துட்டேன் மாமா. ஆனாலும், விடை தெரில நீங்க சொல்லுங்களேன். 
என்கிட்ட கேட்காத. நீதான் உன் சகோலாம் புத்திசாலின்னு சொல்லுவியே! அவங்க சொல்லுறாங்களான்னு பார்க்குறேன்.
ரொம்ப சமாளிக்காதீக மாமா. உங்களுக்கு மேல் மாடி காலின்னு ஐ நோ. நான் போய் சமைக்குறேன்.

சமைக்க போறியாடி?! 
ஆமாடி ராஜி! வா! வா! நீ எப்போ வந்தே!
அதுலாம் அப்புறம். சமைக்கப்போறேன்னு சொன்னேல இரு இரு. வெண்டைக்காய், சௌசௌலாம் வெட்டும் போது கைலாம் கொழ கொழன்னு இருக்குன்னு சொல்லுவேல. அதுக்கு என்ன செய்யனும்ன்னு தெரியுமா?!’தெரியாதே மாமா!! உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுடி..

இனி, வெண்டைக்காயை வெட்டி சமைக்காத. அப்படியே போட்டுடு. குளிர்காலத்துல தயிர் உறைய மாட்டேங்குதா?! இனி, தயிர் உறை குத்தாதே! சாம்பார்ல உப்பு அதிகமாகிட்டுதா?! கீழ கொட்டிடு. 

ம்ம்ம் அப்புறம் இவ்வளாவுதானா?! இன்னும் இருக்கா?!

உன் நாத்தனார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லு. வெங்காயம் நறுக்கும்போது கண்ணுல தண்ணி வருதா?! மாமியார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லு. ஏய் நில்லுடி! எங்க ஓடுறே!

Friday, January 01, 2016

மீண்டும் ஒரு 365


இந்த புத்தாண்டுக்கு என்ன பண்ணலாம் என்ன பண்ணக்கூடாதுன்னு எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு அதுலாம் கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, எதுக்கு வீணா சபதம் எடுக்கனும், அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்கலயே!!!

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?!

ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப் போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அபாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.

4. கணேஷ் அண்ணா, சீனு, அரசன், ஆவி, சரவணன்,  மாதிரி நல்ல பசங்களோடு சேரனும். அதை விட்டு மதுரை தமிழன், மாதிரியான ஆட்கள்கூட சேரக்கூடாது.

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும்.

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்.
ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமத்திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட் தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாஆண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,

கடற்கரையில் கொண்டாட்ட கேளிக்கை
காண நூறு பேர் வாடிக்கை..
பன்னிரண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பம்??!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப் படுகிறது??!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது??!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மது விலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னும் ஒரு 365??!!

கையில் பீர் பொங்கினால் தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினால்தான்??!!
 நிறையுமாம் அங்கயர்க் கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்??!!
 அன்பின் தூவர்களுக்கு..,
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது??!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்.

போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,

இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு
பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும் போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!

ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்பு தான் வரும் என்று...,
ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..

அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,
அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

சனவரிக்கு சனவரி மட்டும் ஏன் இந்த பரிவர்த்தனம்??!!