Wednesday, November 23, 2016

சாமிசிலைக்கு அபிஷேகம் செய்யும் வழிமுறைகள் - பக்தி

எந்த சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாக இருந்தாலும் மலர் வைத்தே அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்திதான் அபிஷேகம் செய்வார்கள் .சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும் . அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, செய்ய நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் . எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது பிரகாரம் வலம் வரக்கூடாது. சிவனுக்கு கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும்.
வலம்புரி சங்கு அபிஷேகம் 10 மடங்கு பலன்களை தரும் . சிவப்பெருமான் அபிஷேகப்பிரியர். ஆண்டு முழுவதும் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் . வீட்டில் தினமும் காலை சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கயிலாயப் பதவியையே பெற்றுவிடலாம் என்பது ஐதீகம். அக்னி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறந்த புண்ணியங்களைத் தரும்.சிவப்பெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால்தான் அவர் தலையில் கங்கையை சூடி , பனிமலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர நாட்களில் அவரை குளிர்ச்சிப்படுத்தும் விதத்தில் அபிஷேகம் செய்து மகிழ்வித்தால், கோடை வெம்மையால் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து அவர் நம்மை பாதுகாப்பார். அது மட்டுமின்றி நல்ல வரங்களையும் தருவார் .
சிவனின் அம்சமான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் நடக்கும் . அவை மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி , புரட்டாசி சதுர்த்தசி , மார்கழி திருவாதிரை ஆகிய 6 நாட்களில் நடைபெறும் . இதில் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய 2 நாட்களிலும் நடராஜர் அபிஷேகம் மிகப்பெரிய திருவிழா போல நடத்தப்படும். இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்துக்கு முன்பே நடராஜருக்கான அபிஷேகத்தை செய்து முடித்து விடுவார்கள். சிவாலயங்களில் உள்ள நந்தி , தெட்சிணாமூர்த்தி , பைரவர் ஆகியோருக்கும் அவர்களது சிறப்புக்குரிய நாட்களில் பல்வேறு பொருட்களால் விதம்விதமான அபிஷேகங்கள் செய்வார்கள். சிவராத்திரி தினத்தன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம் .
 
சிவராத்தரியன்று  சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம் கீழ்வருமாறு: -

முதல் சாமம் : பஞ்சகவ்ய அபிஷேகம்.
இரண்டாம் சாமம் : சர்க்கரை, பால் , தயிர் , நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம் .
மூன்றாம் சாமம் : தேன் அபிஷேகம் .

நான்காம் சாமம் : கரும்புச்சாறு அபிஷேகம்.
 வாசனைத் திரவியங்கள்தான் அதிக அளவில் இடம்பெற்றிருக்கும் . இந்த அபிஷேகத்துக்கு ரூ . 1 லட்சம் வரை செலவாகும். இந்த அபிஷேகம் செய்ய பணம் கட்டினால் பல மாதங்கள் கழித்தே அபிஷேகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும். வைணவத்தலங்களில் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் ஏராளமான பலன்களை வாரி வழங்கக் கூடியதாகும் .
சக்தி தலங்களில் செய்யப்படும் அபிஷேகங்கள் நம் மனதில் நிறைவை உண்டாகும் . அது அம்பாள், தாயாரின் மனதை குளர்ச்சி அடைய செய்யும் அதுப்போல முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு தலத்துக்கு ஏற்ப அபிஷேகங்கள் விதம், விதமாக நடத்தப்படுகின்றன. பழனியில் உள்ள முருகர் சிலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளால் 81 சித்தர்கள் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டதாகும்.
தினமும் பழனி முருகனுக்கு 6 தடவை அபிஷேகம் செய்யப்படுகிறது . நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய 4 பொருட்கள் மட்டுமே அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது . முருகன் கையில் வைத்திருக்கும் வேலுக்கு அபிஷேகம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இரண்டு நாகங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் ( 10. 30- 12. 00 ) மஞ்சள் , குங்குமம் வைத்து செல்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்தால் கணவன் - மனைவி இடையே அன்பு பெருகும். ஒற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்
வித்தியாசமான  சில அபிசேகங்கள் :

கொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள். திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் . தில்லைக்காளிக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது . திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.
எப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம் திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள். சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பவுர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.
திருப்பழனம் பழனத்தப்பர் , ஐப்பசி பவுர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார். தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது . தருமபுரி ஹரிஹரநாதகோவில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள் .உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது
சென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்ததும் ஜெயந்திநாதர் உருவம் தெரியும் கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். தனக்கு நடக்கும் அபிஷேகத்தை ஜெயந்திரநாதரே பார்ப்பதாக ஐதீகம். ஆரணி, தேவிகாபுரம் சுயம்புலிங்கமாய் பூமியிலிருந்து பக்தரின் ஒருவரால் வெளிவரும்போது ஏற்பட்ட காயம் சீழ்பிடிக்காமலிருக்க வெந்நீர் அபிசேகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த தினத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர் அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகர் மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். திங்கட்கிழமை சிவனுக்கும் , செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் , புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும் , சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம்.
அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டாலும் , சிறிது பருகினாலும் பிரபஞ்ச சக்திகளை நாம் பெற முடியும். அது நம் உள்ளத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் . இத்தகைய சிறப்பான அபிஷேகம் முடிந்ததும்  சுவாமிக்கு அலங்காரம்  பட்டு பீதாம்பரத்தாலும் , பொன்னாலும், மலர் மாலைகளாலும் நகைகளாலும் சிலையை அலங்கரிப்பார்கள்..அந்த காட்சியும் ,தரிசனமும் காண கண் கோடி வேண்டும் .மீண்டும் ஒரு பக்தி பதிவுகளினூடே அடுத்தவாரம் சந்திக்கலாம்  நன்றி 




Tuesday, November 22, 2016

சிவன் குடியிருக்கும் வில்வ மரம் - ஆன்மிகம்

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு. லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும். இந்த வில்வ இலைகள் கிடைப்பதற்காக அனேகமாக சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப்படும். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும்.
சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும். இதனை சிவமூலிகைகளின் சிகரம்எனவும் அழைப்பர்.இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும்.காசி முதல் இராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும்
வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வில்வ காயை பறித்து பார்த்தால், உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது. இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்இமலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல், பித்தம் போன்றவையை குணமாக்கும். அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும். இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.
வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும். ப்ரோட்டின், கொழுப்பு, கால்சியம் இபாஸ்பரஸ் இரும்பு, உலோகச்சத்து, மாசத்து, கலோரி போன்றவை ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே. ஆரோக்கியத்திற்கு அரணாகவும், ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக..
மீண்டும் வேறு ஒரு ஆன்மீக பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன் ...நன்றி .வணக்கம் 

Monday, November 21, 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்

தாய்மை

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் இன்று...
நமது முந்தைய தலைமுறையினர் ,நல்ல குணமுள்ளவர்களாகவும் ஒழுக்கத்திலும் ,சிறந்து விளங்கினர் .காரணம் அவர்கள் .காசுக்கவோ உடல் சார்ந்த இன்பங்களுக்கவோ .ஆசைப்படாமல் . அடுத்தவர்களை தும்புருத்தாது நல்ல மனங்களோடு ,மானத்திற்கு அஞ்சி நடந்ததினால் தான் தங்களுடைய குழந்தைகளுக்கும்  ,அந்த நல்ல பழக்கவழக்கங்களை தாய்ப்பால் என்னும் அமிர்தத்துடன் ,ஊட்டிவளர்த்தனர் அப்பொழுது .நல்ல சமுதாயம் உருவாகி இருந்தது .மனச்சாட்சிக்கு அஞ்சினர் பொய் ,களவு ,சூது மற்றும் மது போன்ற தீய பழக்கங்களை ஒதுக்கி வைத்து இருந்தனர் ஆனால் ,அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போய் ஒழுக்கம் என்பது கடுகு அளவு கூட இல்லாமல் போனதற்கு காரணம் தாய்மார்கள் நல்ல பண்புகளை தாய்ப்பாலுடன் ஊட்டாமல் ,வியாபார நோக்கோடு வரும் பவுடர்ப்பால்களை கொடுப்பதினால் தான் நல்ல சமுதாயம் இல்லாமல் போனது ,இந்த பதிவின் நோக்கமே ,பண்டைய காலத்து மருத்துவ முறைகளை மீண்டும் வெளியே கொண்டுவந்து ,நல்ல சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பதுதான் .அந்த தாய்மை வரிசையில் இன்று
பச்சை மருந்துப்பொடி

தேவையானவை:

சுக்கு - 100 கிராம்
மிளகு - 25 கிராம்
திப்பிலி - 10 கிராம்
நறுக்கு மூலம் - 25 கிராம்
ஓமம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 25 கிராம்
பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு
கடுகு - 50 கிராம்
சீரகம் - 25 கிராம்
அக்கரா - ஒரு சிறிய துண்டு
சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு
சன்னயிரு - 25 கிராம்
சாலியல் - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்
செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின் பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.
கஷாயம் செய்யும் விதம்:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.
குறிப்பு:

பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில் குணமடைய உதவும். மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்

Saturday, November 19, 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் - மருத்துவம்

தாய்மை
வலியின் உச்சத்தில் 
உன்னைப் பெற்றெடுத்த  
உன் தாய், உயிர் கொடுத்து,
வலி மறந்து புன்னகைக்கச் செய்கிறாய் 
உன் விரல்களால் தீண்டியதுமே
அம்மா என்பது ஒவ்வருவருக்கும் நடமாடும் தெய்வமாகும் ,ஒரு நல்ல தாயால்தான் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அவர்கள் நனறாக வளர அந்த தாய் ,தாய்ப்பாலுடன் அன்பையும் ,பிற உயிர்கள் மேல்கருணை காட்டும்ப்பழக்கமும் ,.ஒழுக்கத்தையும் அதனூடே சேர்த்து ஊட்டுவதன் மூலம் தான் ஒரு நல்ல குழந்தையாக அவர்கள் வளரமுடியும். அதற்க்கு மாற்றாக கடையில் விற்கும் கண்ட கண்ட பாக்கெட் ,டின் பால் பவுடர்களை வாங்கி கொடுப்பது.  
அதை செய்யும் போதே அந்த வியாபாரிகள் வியாபார நோக்கோடு செய்வதால் செய்பவர்களின் வியாபார எண்ணமும் ,அடுத்தவர்களை ஏமாற்றியாவது நம்முடைய பொருளை விற்கவேண்டும் என்ற சுயநலமும் நிறைந்து இருப்பதால் ,அதையே குடித்து வளரும் குழைந்தைகள் ,அதுபோலவே வளரும் அதன் காரணமாக  அடுத்தவர்களை ஏமாற்றுதலும் ,திருட்டுத்தனமும் ,ஒழுக்கமின்மையும் கொண்டு வளர்ந்து ,கடைசியில் வியாபார நோக்கோடு ,பெற்றவர்களையே கூடேவே வைத்து இருந்தால் ,காசு செலவாகிவிடும் என வயதான காலத்தில் தனித்து விட்டு போய் விடுகின்ற்னர்.அது கொடிய பாவம்.
இந்த சமுதாய சீர்கேட்டிற்கு என்ன காரணம் .பிள்ளைகளுக்கு சரிவர ஒரு தாய் அன்பெனும் அமுதமாகிய தாய் பால் ஊட்டாமை தான் காரணம். அவர்கள் மேலும் குறை சொல்வதைக்கு ஒன்றும் இல்லை இன்றைய ,அவசரகால வாழ்க்கை ,அதனால் வாரங்களுக்கு முன் பேக்கிங் செய்யப்பட்டு ,தன்னுடைய சத்துக்களை எல்லாம் இழந்து வெறும் சக்கையான உணவுகளை உண்பது தான் கரணம் .இவற்றை எல்லாம் தவிர்த்து ,நம்முடைய குழந்தைகளுக்கு ,நாம் நல்லமுறையில் தாய்ப்பால் எனும் அமுதம் .ஊட்ட இந்த எளிய மருத்துவ முறை உதவும் ,இதை நமது தாய்மார்கள் தெரிந்து கொண்டு .தமது குழந்தைகளுக்கு .நல்ல தாய்களாக இருக்கட்டும் .
கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் மக்கள் பயனடையவேண்டும் என நினைக்கும் ஒரு உயர்ந்த உள்ளத்திடம்  இருந்து மறைந்துவிட்ட இந்த  பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! பற்றிய குறிப்புகளை தொகுத்து அளிக்கிறேன். இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
ரோஸ்டட் கார்லிக்
தேவையானவை:
பூண்டு - 4
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.

குறிப்பு:
பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர... பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் வரிசையில் அடுத்தது
 பத்தியக் குழம்பு
தேவையானவை:
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் - 2 சிறிய துண்டுகள்
பூண்டு - 5 பல்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு:
தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.
மீண்டும் ஒரு மருத்துவ குறிப்பினூடே சந்திக்கலாம் நன்றி வணக்கம்

Friday, November 18, 2016

ஈசனின் அருளைப்பெற "சோமவார விரதம்

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது "கார்த்திகை சோமவார விரதமாகும்".  சிவப்பெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம், ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். 
திங்கட்கிழமை என்பது "சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவப்பெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கள்கிழமையிலிருந்து ஆரம்பித்து கார்த்திகை மாதம் வரும் திங்கள்கிழமை அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.நினைத்த வரம் கிடைக்க 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்கலாம்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில். அவன் வளர்ந்து பருவமெய்தியதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 நட்சத்திர பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இருஎன்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போவாய்என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், நாளுக்கு நாள் தான் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
 சந்திரன், சிவப்பெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
இனி, விரதம் இருக்கும் முறையை பார்க்கலாம்...

இந்து மத திருமணங்களில் " அருந்ததி பார்ப்பது" என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். கற்புக்கரசியாகிய அருந்ததியை வசிஷ்டர் தன் மனைவியாக அடைந்தது இந்த சோமவார விரதத்தை கடைபிடித்ததால்தான். பொதுவாக இந்த விரதத்தை பெண்களே கடைபிடிக்கின்றனர். இருந்தாலும் ஆண்களும் இந்த விரதத்தை கடைபிடித்து நல்ல வாழ்க்கை துணைவியை அடையலாம். சோம வாரத்தில் குற்றாலத்தில் நீராடி குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மையை தரிசிப்பது நல்லது. இதே போல சுசீந்திரம், தாணுமாலய சுவாமியை வணங்கி வருவதும் உத்தமம்.
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிப்பட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூரதீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின்போது சிவநாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைத்துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசிப்பெறவேண்டும்.இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.
சோமவார விரதம் தோன்றிய கதை....

 ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தனியாக அமர்ந்திருக்கச் சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் பார்வதி தேவி அங்கே வந்து பரமனை வணங்கி நின்றார். அப்போது பரமன் யாரும் அறியாதபடி தனது ஜடாமுடியை அசைத்துப் பார்த்தார். அதில் சந்திரன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். பார்வதி தேவியார் இறை வனிடம், “சுவாமி என்ன இது? சந்திரனைத் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்?” என்று கேட்டார். அதற்கு ஈசன், “தேவியே, எனக்கு மிகவும் பிடித்த சோமவார விரதத்தை இந்தச் சந்திரன் முறையாகக் கடைப்பிடித்துச் செய்து இந்தப் பேறினைப் பெற்றுள்ளான்என்றார். உடனே தேவி, “சுவாமி அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விரதத்தை எனக்கும் உபதேசித்து அருள வேண்டும்என்று கேட்டுக்கொண்டார். பார்வதி தேவியும், மற்றவரும் பயன்பெறும் பொருட்டு சோமவார விரதத்தை இறைவன் கூறி அருளினார்.
 வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.
சீமந்தினி பெற்ற மறுவாழ்வு...

சித்திரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் தனது 14 வயது முதல் சோமவார விரதத்தைச் செய்து வந்தாள். சந்திராங்கதன் என்ற இளவரசனை மணந்தாள். அவன் நண்பர்களுடன் படகில் யமுனை நதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்து அனைவரும் உயிர் நீத்தனர். நண்பர்களோடு நாகர் உலகம் சென்று அங்குள்ள நாக மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தான். இதற்கிடையில் சந்திராங்கதன் இறந்துவிட்ட செய்தி கேட்டு அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்தனர். சீமந்தினி விதவைக் கோலத்தில் இருந்தவாறே யமுனை நதிக்கரையில் சோமவார விரதத்தைச் செய்தாள்
கணவன் சந்திராங்கதன் நாக மன்னனிடம் முறையாக நடந்து நல்லபெயர் பரிசுப் பொருட்களை பெற்றுத் திரும்பும்போது மனைவியைக் கண்டு அதிர்ந்துவிட நடந்ததைக் கூறி அவளை மீண்டும் திருமணம் செய்து கொண்டு இறைப்பணியில் ஈடுபட்டான். காசி மாநகர் அருகே ஆட்சி புரிந்து வந்த மன்னன் ஒருவன் சீமந்தினியின் மனதிடத்தைச் சோதித்து அறிய விரும்பி, இரண்டு பிரம்மச்சாரிகளை அனுப்பி ஒருவனை பெண்வடிவாகச் சென்று போகச் செய்தான். அவள் இருவரையும் பார்வதி பரமேஸ்வர வடிவங்களாகத் தியானித்தாள். அப்போது பெண் உருவம் ஏற்றவன் உண்மையான பெண் வடிவமாகவே மாறிவிட்டான் என்பது புராணக் கருத்து.
சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும்.
வரும்  21.11.2016 அன்று இந்த வருடத்திய கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமை வருது. நான் சோமவார விரதமிருக்க ஆரம்பிக்கப்போறேன்.... நீங்க?!
சிவார்ப்பணம்.