Monday, April 21, 2014

தெய்வம் மனுசன் ரூபத்துல வருமா!? - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.

இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.

புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!

இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு  உக்காந்துக்கிட்டான்.

மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன்!!?? சாமி வந்து ஊட்டினாதான்  சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு அவன் பொண்டாட்டி போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே! ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.

சாயந்தரம், மணி 4 ஆச்சு. பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா. அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ! போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான். 

ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு  டயர்டா  திருடனுங்க  வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையைப் பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்போ, டேய் கபாலி,  கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மைப் பிடிக்க இந்த நாட்டு ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருந்தா, நம்ம கதி என்ன ஆகும்!?ன்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிச்சான்.

இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்த திருடனுங்க முத்துவை அடிச்சு, உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து  சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்காது.

அதுப்போலதான்  பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.

நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
                                   


                                           

அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா

அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,

ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,

 வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.

வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.

ஹா ஹா நல்லா இருக்குடி.

                                 
                

நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.  

ஹா ஹா மாமா, நம்ம தெருலயே  பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.

அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட  சண்டைப் போட்டுட்டு,  கோபத்தோட  வூட்டை வுட்டு கிளம்புன ராமசாமி பொண்டாட்டி,  தினமும் ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு அவ வூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?

ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா! 
இருடி,  ஓட்டு போடுற மாதிரி அவசரப்படாதே! நல்லா யோசிச்சு நிதானமா பதிவோட முடிவுல பதில் சொல்லு. 
சரிங்க மாமா, 
              
               

என் ஃப்ரெண்ட் ராஜியோட சின்ன பொண்ணு இனியா இருக்குல்ல.

ஆமா, அவளுக்கென்ன!?

அவளுக்கொண்ணுமில்ல மாமா. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. வீட்டுல பேசி இருப்பாங்க போல. அதை இனியா கேட்டிருக்கு.

நான் போயிருக்கும்போது ராஜி, காலைல டிஃபனுக்காக ஓட்ஸ் பொங்கல் செஞ்சிருந்தா. அப்போ ராஜியோட பாட்டி, இனியாக்கிட்ட கொஞ்சம் பொங்கல் கொடுத்து, மாடிக்குப் போய் காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா. நாங்க  எல்லாரும் சிரிச்சுட்டோம்.

அப்படி என்னதான்டி கேட்டா உன் ஃப்ரெண்டோட பொண்ணு!?

ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.

ஹா! ஹா! இனியா  அவ அம்மா போல இல்லாம ரொம்ப சுட்டி. 

             
அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு மாமா. என்ன பண்ணலாம்!?

அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கு குடுத்தது போக, மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது.  முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடிக்கும். இதை அடிக்கடி செஞ்சு சாப்பிட்டா ருசியோடு வயித்துப் புண், கண் நோய், மலச்சிக்கல்லாம் போக்கும்.தலைவலி, வாய்புண், ரத்த சீதபேதிக்கும் முருங்கைக்காய் கைக்கண்ட மருந்து.  கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

இப்பதான் முருங்கை சீசனாச்சே! அதனால, முத்தின முருங்கைகளை தூக்கி எறிஞ்சுடாம சூப் வச்சு குழந்தைகளுக்கு கொடு. முருங்கைகள சின்ன, சின்னதா வெட்டி உப்பு போட்டு லேசா வேக வச்சு, தண்ணி வடிச்சு அந்த முருங்கைக்காய்களை வெயிலில் நல்லா காய வச்சு மிக்சில போட்டு பொடிப் பண்ணி வச்சுக்கிட்டா சாம்பார் கொதிச்சு இறக்கும்போது ஒரு டீஸ்பூன் முருங்கைத் தூளைப் போட்டு இறக்கினா சாம்பார் வாசமாவும், ருசியாவும் இருக்கும்.

சரிங்க மாமா. அப்படியே செய்யுறேன். உங்கக்கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டேன். துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு. நான் வாரேன் மாமோய். 

Monday, April 07, 2014

தேர்தலும், கிரிக்கெட்டும் கோடைக்காலத்தில் நடத்துவதன் மர்மம் - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! ராத்திரி இம்புட்டு நேரமாச்சே! இப்பதான் வீட்டுக்கு வர வழித்தெரிஞ்சுதா!?  

கட்சி மீட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கப் பேசுறது கேட்டுக்கிட்டு இருந்ததால டைமாகிடுச்சு.

இப்ப பத்தாவது பரிட்சை நடக்குது. மத்த பசங்களுக்கும் பரிட்சை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல, நேரம் கெட்ட நேரத்துல கட்சிப் பாடல்களை சத்தமா பாட விடுறதும், கோஷம் போட்டுக்கிட்டு தெருத் தெருவா சுத்துறதும் நல்லாவா இருக்கு. தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஏன் இதை யோசிக்க மாட்டேங்குறாங்க. எனக்கு ரொம்ப நாளாய் ஒரு டவுட்டு மாமா! அதெப்படி பள்ளி பொதுத் தேர்வு வரும்போது எலக்‌ஷனும் நடக்குது. கிரிக்கெட் மேட்சும் நடக்குது. அதுக்கான காரணம் என்ன மாமா!?

எனக்கும் சரியா தெரியல புள்ள. ஒரு வேளை கோடைக்காலம்ங்குறதால வெயில் கொடுமைத் தெரியாம இருக்க ஒரு பொழுது போக்கா இருக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்துல வைக்குறாங்களோ என்னமோ!!?? 

அப்படியும் இருக்கலாம் மாமா.  மாமா ரெண்டு நாளைக்கு முன்னாடி எதிர்த்த வீட்டு ரேவதி தன் ஒன்றரை வயசு குழந்தையை இடுப்புல வச்சுக்கிட்டு தெருவுல நின்னு வேற ஒருத்தர்கிட்ட கதைப்பேசிக்கிட்டிருந்திருக்கா. குழந்தை கையிலிருக்கும் பிஸ்கட்டை நாய் பிடுங்கி இருக்கு. நாய் பிஸ்கட்டை மட்டும் பிடிங்காம குழந்தை கையையும் சேர்த்து கடிச்சிடுச்சு. நல்ல வேளை அதிகமா காயம் எதும் படல. லேசா பல்தடம் பதிஞ்சதோட சரி. குழந்தை கத்துனதை கேட்டுதான் என்ன நடந்துச்சுன்னு ரேவதி புரிஞ்சுக்கிட்டு இருக்கா. 

இப்படியா! கதை பேசுவீங்க. கைவிரலை கடிச்சு துண்டாக்கி இருந்தா என்ன செய்யுறது. டாக்டர்கிட்ட கூட்டிப் போனாங்களா!?

இல்ல மாமா. லேசா பல்தடம் பட்டதுக்கு எதுக்கு டாக்டர்கிட்டப் போகனும்ன்னு விட்டுட்டாங்க.

என்ன ஒரு இருநூறு ரூபாய் செலவாகுமா!? டாக்டரைப் பார்த்துட்டு வரச்சொல்லு.

ம்ம்ம் சொல்றேன் மாமா. ராஜி பையன் சின்ன வயசுல சாமிக் கும்பிடும்போது சாமி! பெரிய அக்காவை காப்பாத்து, சின்ன அக்காவை காப்பாத்து, எனக்கு கோவம் வரக்கூடாது, 3 வண்டி வாங்கி நாங்க மூணு பேரும் ஸ்கூல் போகனும்.  நான் வேலைக்குப் போய் அம்மா, அப்பாவைக் காப்பாத்தனும், பெரிய வீடுக்கட்டி அம்மாவுக்கு ஒரு ரூம், அப்பாவுக்கு ஒரு ரூம், எங்க மூணு பேருக்கும் ஒரு ரூம் வச்சு வீடுக்கட்டனும்ன்னு சாமிக் கும்பிடுவான். 

ஏண்டா, உங்க மூணு பேருக்கும் ஒரு ரூமா!? அது நல்லா இருக்காதேடா, ஆளுக்கொரு ரூம் கட்டிக்கோங்கன்னு ராஜி சொன்னா, ஆளுக்கொரு ரூம் கட்டினா தனித்தனியா படுக்கனும். அப்புறம் நான் உச்சாப் போறதை நீங்க கண்டுப்பிடுச்சுடுவீங்கனு சொல்வான்.



ஆஹா! நல்ல ஐடியாதான் சரி உனக்கொடு படம் காட்டுறேன். அதுல எத்தனை கறுப்பு புள்ளி, வெள்ளைப் புள்ளி இருக்குன்னு சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க உங்களுக்கொரு ஜோக் சொல்லிட்டு அப்புறம் விடை சொல்றேன். 

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!

ஹா! ஹா! இதும் நல்ல ஐடியாதான். விடைச் சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க வரேன்....,

Friday, April 04, 2014

அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - புண்ணியம்தேடி

புண்ணியம் தேடிப் பயணத்தில் நாம இன்னைக்குப் பார்க்கப்போறது ஒரு புராதானமான கோவில். அதை இப்ப புனரமைச்சுகிட்டு இருக்கிறாங்க. ஆனா இதுல ஒரு வேதனையான விஷயம் என்னன்னா இந்த திருக்கோவிலின் ஸ்தல வரலாறு இங்க யாருக்கும் தெரியாமல் போனதே!!  தெரிந்தவர்கள் இந்தப்பதிவில் தங்களது தகவல்களைத் தரலாம். அதை நான் சேர்த்துக்குறேன்.
இதுதான் நான் சொன்ன அந்தப் பழைமையான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோவிலின் முகப்பு. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள ஏர்வாடி. இதேப்போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு ஏர்வாடி இருக்கிறது(அதானே உன் சொந்த ஊர்ன்னு யாரும் கிண்டலடிக்க வேணாம்.) இந்த ஸ்தலம் புண்ணிய நதியாம் நம்பி ஆறு ஓடும் பாதையில் இருக்கு. இந்த திருஸ்தலத்தின் பழையப் பெயர் வீரரவிவர்ம சதுர்வேதமங்கலம். இது சுமார் 1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என சொல்லபடுகிறது.
நுழைவாயில் மண்டபத்தைத் தாண்டி இருக்கும் உள்புறவாயில். இந்த ராஜக்கோபுரத்திற்கு அடித்தளம் அப்பொழுது இருந்த மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படையெடுப்புகளாலோ இல்லை ஆட்சி மாற்றங்களாலோ என்னமோ  ராஜக்கோபுரம் மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் வரலாறு செவிவழிக்கதையாக நான் கேட்டவை...., சதுர்வேதம் எனப்படும் நான்கு வேதங்களை அடிப்படியாக கொண்ட கோவில் இது. மேலும் சதுர்வேதங்களையும்,  சாஸ்திரங்களையும், உபநிடங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கி, வழிபாடு நடந்து வந்தது எனவும் சொல்லப்படுகிறது.  
இது மிகவும் பழமையானக் கோவில் என்பதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் கோவிலின் நந்தி பீடத்திற்கு கொஞ்சம் மேற்கு பக்கத்தில் உத்திரத்தில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.  இங்கே இருக்கிற சின்னம் அவர்களுடைய நேரடி ஆட்சியின் கீழ் இருந்ததற்கான சான்று ஆகும். ஆகையால் இது பாண்டியமன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம். அல்லது புனரமைக்கப்பட்டும் இருக்கலாம். மேலும், இதன் காலம் 1500 வருடங்களுக்கு முந்தையது என சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று சுமார் 350 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். கோவிலில் திருவிழா முதலிய முக்கிய விஷஷேங்கள் நடந்து சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். இவ்வளவு பழமை வாய்ந்த கோவில் சிவனடியார்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்த அன்பர்களால் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும்.  
இது திருக்கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்று. இந்தக் கோவிலின் விஷேசம் என்னன்னா எல்லா கோவில்களிலும் உற்சவர் விக்ரகம், மூலவர் விக்ரகத்தில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆனா, இந்த திருக்கோவிலில்  மூலவர் விக்கிரகமும் உற்சவர் விக்கிரகமும் ஒரே மாதிரி இருப்பது ஒரு தனி சிறப்பு. மேலும் இந்தத் திருக்கோவிலின் பிரதான தெய்வம் அம்பாள்தானாம். இந்த ஊரில் உள்ள பலபேருக்கு அரூபமாகவும், சிலருக்கு நேரிலும்   காட்சி கொடுத்திருக்கிறதாம் இந்த அம்மன், இது மிகவும் சக்திவாய்ந்த அம்மனாம். 5 வருடங்களுக்கு முன்பு வரை 12 வயது பெண் ரூபத்தில் அன்பர்களுக்கு காட்சி கொடுத்திருகிறாளாம் இந்த ஸ்தலத்து அம்மன்.
மூலவர் சன்னதி போகும் வழியில் ஒரு பலிபீடமும். அதன் முன்னே கொடிமரமும். அதற்கு முன்னே நந்தியும் இருக்கிறது. இந்த ஸ்தலத்து சிறப்புகளில் ஒன்று கிழக்கில் இருந்து, மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடும் நம்பியாறு. இது மூலிகை சத்து கொண்டது. இந்த நம்பியாற்றில் தினம் நீராடி இறைவனை தொழுது வந்ததால் சிலருக்கு குஷ்டரோகம் போன்ற வியாதிகளெல்லாம் குணமாகியிருக்கிறதாம்.
இப்பொழுது இந்த திருக்கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சிலைகள் எல்லாம் மூடி வச்சு இருக்கிறாங்க. மேலும், இது ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி, சீரான செல்வ நிலை, அன்பு நிலைத்திருக்க விளக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும், இங்கே பௌர்ணமி தோறும் நடத்தப்படும் விளக்கு பூஜையினால் திருமணத்தடை நீங்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏன்னா, அங்கிருத்த ஒரு பெரியவர் சொன்னது இங்கே தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்துக் கொண்ட மூன்று பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி நல்லப்படியாக திருமணம் நடைபெற்றதாம். சிலருக்குத் தடைகள் நீங்கி  புத்திரபாக்கியம் கிடைத்துள்ளதாம்.   
நந்தி பீடத்திற்கு இடப்பாகத்தில் ஒரு மேடை போன்ற அமைப்பு இருக்கு. இது கல்யாண விழாக்களுக்கும், உற்சவர் அலங்காரத்துடன் வீற்றிருக்கவும் பயன்படுத்துகின்றனர். அதில் இருபக்கமும் யாழி சிற்பத்தின் கலைவண்ணத்தில் பார்க்க அழாகாக இருக்கும் இந்த மேடையும் இப்ப புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு சாத்தப்படுகிறது. நவராத்திரி விழாக்களும், சிவராத்திரி பூஜைகளும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதோஷகாலப் பூஜைகளும் சிறப்பாக இங்கே நடைப்பெறுகிறது. இங்கே உள்பிரகாரத்தில் கன்னி விநாயகரும், சூரியன், சந்திரன் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகளும் இருக்கு. தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சி அன்று விசேஷப் பூஜைகள் நடைப்பெறும்.  மேலும் ஒரு சிறப்பு என்னனா சனீஸ்வரனுக்கு தனிச் சன்னதி இருக்கு.  சனிப்ப்பெயர்ச்சி அன்றும் விசேஷ பூஜைகள் நடைப்பெறுகின்றன. சண்டிகேஸ்வரரும் இங்கே அருள் பாலிக்கிறார்.    
இந்த திருக்கோவிலின் தூண்கள் எல்லாம் பனைமரத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்தலத்து ஆவுடையார் கிழக்கு நோக்கிய திருக்கோலம். எல்லா சிவன் கோவில்களிலும் பெரும்பாலும் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருந்தால், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கிய திருக்கோலமாக இருக்கும். ஆனால், இங்கே தாயாரும் சுவாமியும் ஒரேமாதிரி கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் வீற்றிருகின்றனர்.  வேறு எந்த கோவில்களிலும் பார்க்க முடியாத ஒரு விசேஷ அமைப்பு.    
உள்பிரகாரத்தில் பைரவர் சுனவாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கே தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. கடன்தொல்லை, வியாபார அபிவிருத்தி, சத்ருநாசம், சகலதோஷ நிவாரண பூஜைகளும் இங்கே நடத்தப்படுகிறது. சித்திரைவிஷு அன்று புஷ்பாஞ்சலி சாத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலின் ஸ்தல விருட்ஷம் என்னவென்று தெரியவில்லை  அதுபோல தெப்பக்குளமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இங்கே தூரத்தில் தெரிவது கோவிலின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூத்தான் சன்னதி. இந்த பூத்தான் சிலை ஒரே மரத்திலான பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருவுருவம். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என சொல்லப்படுகிறது. கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றில் இவரது சன்னதி இருக்கு.
திருக்கோவிலின் வெளிப்புற சுற்றுகளெல்லாம் சிறிய சிறிய முட்களாக இருக்கிறது. பக்தர்கள் வலம் வரும்போது சிறிது சிரமப்படலாம். அதையெல்லாம் இப்ப ஒழுங்குப்படுத்திகிட்டு இருக்காங்க. 
இந்த திருக்கோவிலில் இரண்டு வினாயகமூர்த்திகள் இருக்கின்றன. உள்புறம் இருக்கிறவர் கன்னி விநாயகர். வெளிப்பக்கம் திருக்கோவிலின் நுழைவாயிலின் பக்கம் அருள்பாலிப்பவர் சக்தி விநாயகர்.
திருக்கோவிலின் வாகனங்கள் எல்லாம் உபயோகப்படுத்த முடியாத அளவு சிதிலமடைந்து இருக்கு. புதிய வாகனங்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒரு வழியா திருக்கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளிப்புற மண்டபத்தின் பக்கத்தில் இருக்கிறோம். இந்த திருக்கோவில் கொஞ்சம் கொஞ்சமா புனரமைக்கிற இந்த திருக்கோவிலின் பணிகளுக்கு இப்பொழுது நிதி உதவி தேவைப்படுகிறது. சிவனடியார்களும்,  தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியை நேரடியாக சென்று பார்த்து விசாரித்து கொடுத்து உதவலாம். மேலும் விவரங்கள் தேவைபட்டுச்சுன்னா இந்த திருக்கோவிலின் அர்ச்சகர் சுந்தர் சிவம் (95850 45966) என்பரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

மீண்டும் அடுத்த வாரம் வேற புண்ணிய தலத்திலிருந்து சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

Thursday, April 03, 2014

நல்லா இருக்கா!?- கிராஃப்ட்




வீட்டில் சும்மாதானே இருக்கேன்னு மதியத்துல டெய்லரிங் கிளாஸ் போறேன்.  என்னதான் எம்ப்ராய்டரி தெரிஞ்சாலும், கிளாஸ்ல நாம ஸ்டூடண்ட்தானே!? சொல்லித் தர்ற மேடம்முக்கு மரியாதைக் கொடுத்து அவங்க போடச் சொன்ன அடிப்படையான தையல்களைக் கொண்டு எம்ப்ராய்டரியைப் போட்டு நல்லப் பேரு வாங்கிட்டோமில்ல! 

நான் போட்ட எம்ப்ராய்டரியை ”நல்லா இருக்குன்னு!!” டெய்லரிங் கிளாஸ் மேடம் சொல்லிட்டாங்க. இருந்தாலும், என் சகோஸ் நீங்கலாம் ஒரு வார்த்தை எப்படி இருக்குன்னு சொன்னால்தானே எனக்கு திருப்தி. 

Wednesday, April 02, 2014

செஞ்சிக்கோட்டையில் இதுவரைப் பார்த்திடாத சில இடங்கள் -மௌன சாட்சிகள்

இந்த செஞ்சியை ஆண்ட மன்னர்களும், அந்நகரம் சந்தித்த போர்கள், ராஜாதேசிங்குவின் வீரமரணம் வரை பார்த்துக்கொண்டே இப்ப மலை உச்சிக்கு வந்துட்டோம்!!
வாங்க! இந்த படியேறித்தான் உச்சியில் இருக்கிற கோட்டைக்கு செல்ல முடியும். இந்தப் படிக்குப் பக்கத்திலேயே ஒரு சுழலும் பீரங்கி மேடை இருக்கு. இந்தக் கோட்டையில் அடுக்கடுக்கான பாதுக்கப்பு அரண்களும், சுழலும் பீரங்கி மேடையும், காவலர் கோபுரமும் நிறைய அமைக்கப்பட்டு இருக்கு. வாங்க! 

இந்தப் படிக்கட்டையும், கோட்டையையும் இணைப்பது படத்தில் தெரியும் இணைப்பு பாலம்தான்.  இந்தப் பாலத்தோட பேரு இழுமுனை பாலம்னு சொல்றாங்க. இந்த இழுமுனை பாலத்தின் மூலம்தான் இயற்கையான அமைப்பில் செங்குத்தான நிலையில் அமைந்த ராஜகிரி கோட்டைக்குள் செல்லமுடியுமாம். போர்க்காலங்களில் இந்த இழுவைபாலம் இழுக்கப்பட்டு கோட்டைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு எதிரிகள் நுழையாதவண்ணம் பாதுகாக்கப்படுமாம். இந்த பாலம் 20 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டதா இருக்கு.  இப்ப எந்தப் போர்களும் இல்லாத நிலையில் பார்வையாளர்கள் செல்வதற்காக கைப்பிடியுடன் கூடிய பலகைகளுடன் நிலையான பாலம் அமைச்சு இருக்காங்க.

இதுதான் படியேறி சென்றதும் வரும் நுழைவாயில்.  முழுவதும் கற்களால் கட்டப்பட்டு ரொம்ப பாதுகாப்பா இருக்கு. உட்பக்கம் இந்திய கட்டட கலை அமைப்பில் தூண்களுடன் அழகாக அமைந்து இருக்கு. இங்கேயும் ஒரு தானியக் களஞ்சியம் சுமார் 127 அடி உயரமும், 94 அடி அகலத்தில் பெரியாதாக அமைக்கப்பட்டு கோட்டையுனுள் இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாத அமைப்பில் கட்டப்பட்டு இருக்கு.
  
இங்க தெரிவது ஒரு கருவூலம். பக்கத்தில் ஒரு மண்டபமும் இருக்கு. இதற்கு பக்கத்தில் அழிவுற்ற நிலையில் சில மண்டபங்களும், கோவில்கள் போன்ற அமைப்புடைய சிதைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களும் இருக்கு .

 அடுத்து ஒரு கல்லினால்  ஆன பெரிய மண்டபம் இருக்கு. அதன் உள்பக்கம் பெரிய தூண்களுடன் ரொம்ப உறுதியா கட்டப்பட்டு இருக்கு. அதன் நுழைவாயில் இருபக்கமும் குறுகலான அமைப்புடன் இருக்கு. அதைப்பத்தின விவரங்கள் தெரியவில்லை. கலைஅரங்கமோ இல்ல தர்பர்மண்டபமோ இல்ல வேற எதற்காகப் பயன்படுத்தப்பட்டதுன்னு  தெரியலை.

இந்தக் கோட்டை மலை உச்சியில் சுமார் 800 அடி உயரத்தில் இருக்கு இந்த அரங்கநாதர் ஆலயம். இது நாயக்கர் காலத்துக் கட்டிட அமைப்பை சர்ந்ததுன்னு சொல்றாங்க. அவர்களது கட்டிட கலைதான் அடிப்பக்கம் கல்தூண்களும், மேல்பக்கம் செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு கொண்டது.  இந்த அரங்கநாதர் கோவில் கருவறையினுள் சிலை இல்லாமல் வெறுமனே கட்டிடம் மாத்திரம் தான் இருக்கு.  எல்லாம் சிதைந்து காணப்படுகிறது. அந்தக்காலத்தில் செஞ்சியை ஆண்ட மன்னர்கள் இந்த அரங்கநாதரை வணங்கியதாகக் கூறப்படுகிறது. சுற்றிலும் சிறிய தேவதைகளுக்கான மண்டபங்களும் இருக்கு. அவைலாம்கூட சிதைந்த நிலையில் இருக்கு.

அரங்கநாதர் சன்னதிக்கு நேர் எதிரே இருப்பது மணிக்கூண்டு. இதன் அடிப்பகுதி சதுரமாகவும், மேற்பகுதி வட்டமாகவும் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடமாகும்.  இந்த மணிக்கூண்டின் உச்சியில் ஒரு பெரிய வெண்கல மணி தொங்கவிடப்பட்டு இருந்ததாம். அதிலிருந்து வரும் ஓசை பக்கத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மணி அறிவிப்பு ஒலியாக செயல்பட்டதாம். இங்கிருந்த மணியை பிரஞ்சுகாரர்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்று விட்டனராம். செஞ்சிக் கோட்டையை சிதைத்ததில் பிரஞ்சுக்காரர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும், இங்க ஒரு பீரங்கி மண்டபமும் வேறு சில சிதைந்த மண்டபங்களும் நிறைய இருக்கு. எல்லவற்றையும் பார்த்துக்கொண்டே நாம உச்சி கோட்டையிலிருந்து கீழே இறங்கலாம். ஏன்னா 4 மணிக்குள் இங்கிருந்து திரும்பி கீழே சென்றுவிடவேண்டும்.  

படி இறங்கி கீழே வரும் வழியில் நிறைய காவல் கோபுரங்கள் இருக்கு. அதைத்தாண்டி பால அரங்கநாதர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு சிறிய படிக்கட்டு தெரிந்தது. நாம தான் டிஸ்கவரி சேனல் அடிக்கடி பார்க்கிறோமே!! அதனால அதுல இறங்கி பார்க்கலாம்னு முடிவு பண்ணி கீழே இறங்க ஒரு ஆவல் வந்துட்டது. ஒரு எச்சரிக்கை தனியாக யாரும் இதனுள் இறங்கி செல்லவேண்டாம். சரி, வாங்க! நாம கூட்டமா போகலாம்!!

அதோ தெரிகிற படிக்கட்டு வழியா இறங்கி போகலாம்...., இந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறது போலும்.  சின்ன குகையும் இருக்கு. உள்ளே பார்த்தோம்னா ஏசி போட்டதுப் போல இருக்கு. ஆனா, விஷ ஜந்துக்கள் கூட இருக்கலாம். இதுல ஒண்ணுமே இல்ல. வாங்க மேலே ஏறி போய்டலாம் ஒருவேளை இதுபற்றின வரலாற்று குறிப்புகள் கூட இருக்கலாம். நமக்குதான் தெரிஞ்சுக்க வாய்ப்பில்லை. இந்த இடத்தை கூட இங்கே வரவங்க விட்டு வைக்கல. அதையும் அசுத்தம் பண்ணி வச்சு இருக்காங்க அபிஷ்டுகள்.

ஒரு வழியா மலை மேலே இருக்கிற ராஜகிரி கோட்டையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டோம். நாம மலையேற போகும் போது பார்க்காம விடுபட்ட சில இடங்களை இப்ப பார்க்கபோறோம்.  இது குதிரைலாயம் இது கல்யானமஹாலுக்கு பக்கத்தில இருக்கு அதிலிருந்து நாம நேரே போனா முற்றிலும் அழிஞ்ச நிலையில் இருப்பது வேணுகோபால் சன்னதி.

இதுதான் முற்றிலுமாக சிதைந்து பாழடைந்த வேணுகோபால் சன்னதி. இந்தக் கோவிலின் சிலைகள் எல்லாம் முற்றிலுமாக சிதைந்து இருக்கு. இந்தக் கோவிலின் தெற்குப் பக்க பிரம்மாண்டமான நுழைவாயிலைப் பார்க்கும் போது இது எவ்வளவு பெரியக் கோவிலாக இருந்திருக்கும் என நம்மால கற்பனை பண்ணி பார்த்துத் தெரிஞ்சுக்கமுடியும்.  கோவிலினுள் உடைந்த சிலைகளை எடுத்து வைத்துள்ளனர். இந்தத் தெற்குப் புற நுழைவாயில் வழியாக கோட்டையின் தெற்கு பக்கம் போய்டலாம். இந்த வாசல் எப்பொழுதும் மூடியே வைத்து இருக்கிறாங்க. இந்த வாசலை திருச்சிராப்பள்ளி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.  

நாம இப்ப கோட்டையை விட்டு வெளியே வந்துவிட்டோம். இப்போ ராஜா தேசிங்கு உடல் எரியூட்டப்பட்ட மேடையை பார்க்கப் போலாம். வாங்க!!அதுக்கு முன்னாடி இங்கே ஒரு மசூதி இருக்கு. இது ஜும்மா மசூதி போல அமைந்து இருக்குறதா சொல்றாங்க. ஆற்காடு நவாப் சததுல்லாகான் ஆட்சிப் பொறுப்பை தேசிங்குராஜனிடம் இருந்து பறித்தவுடன் செட்டிக்குளம் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் சுண்ணாம்பு கலவை கொண்டு செங்கற்களால் ஆன ஒரு மசூதியை கட்டி இருக்கிறார்.  அழகிய பூவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட இந்த மசூதி பாழடைந்து இருக்கு. இதையடுத்து ஒரு சதுர வடிவ வழிபடும் தர்காவும் கட்டப்பட்டுள்ளது. இந்த தர்காவின் எதிரே இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு நிறைய சமாதிகள் இருக்கு. அதில் ஒரு சிறிய குழந்தையின் சமாதிபோல ஒன்று இருக்கு. ஆன இந்த சாம்திகளெல்லாம் யாருடையவை என தெரியவில்லை. சுத்திலும் சமாதிகளாய் இருக்கவே கொஞ்சம் பயமா இருக்கு. அதனால இந்த இடத்தைவிட்டு செல்லலாம்.. 
    
இப்ப நாமப் பார்க்கப் போறது இந்தக் கோட்டையின் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதி செட்டிக்குளத்தின் கரையில் வடக்கு பக்கம் அமைந்து இருக்கும் இந்த மேடைதான் தேசிங்குராஜன் உடல் எரியூட்ட பட்ட இடம். தேசிங்கு ராஜாவின் வரலாறு தெரியாதவங்க இங்க போய் படிச்சுப் பார்த்துட்டு வாங்க. இந்த இடத்தை இப்பொழுது கற்களால் ஆன மேடைக்கொண்டு புனரமைத்து இருக்கிறாங்க. மேலும், இந்த இடத்தில்தான் ராஜாதேசிங்குவின் மனைவி ராணிபாய் உயிருடன் உடன்கட்டை ஏறிய இடம் என்றும் சொல்லப்படுகிறது. 17 நூற்றாண்டில் இந்த இடம் ஆள், சேனை, அம்பாரிகளாக இருந்திருக்கும் இன்று எல்லா இடமும் கவனிப்பாரறற்று அமைதியாக இருக்கிறது.

அடுத்து நாமப் பார்க்கப் போறது ஏழு கன்னிமார் கோவில். செஞ்சிக்கு இந்த பெயர் வர முக்கிய காரணமா இருந்தது இந்த ஏழு கன்னிமார் கோவில் என சொல்லப்படுகிறது. இதை முதல் பதிவில் விளக்கமாக பார்த்துவிட்டோம். பார்க்கதவங்க இங்க போய் பார்த்து விட்டு வாங்க ...

இந்தக் கோவில் தெற்கு புற வாசலுக்கு பக்கத்தில் இருக்கிறது. இதில் சிறிய சிறிய ஏழு கோவில்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அடிப்பாகம் கல்லினாலும், மேல்பாகம் செங்கற்கள்லாலும் கட்டப்பட்டு இருக்கிறது.  எல்லாமே சிதைந்த நிலையில் இருக்கின்றது. இங்கே நடுகல் போல கல்லினால் ஆன ஒரு தூண் நடப்பட்டு இருக்கு. அதன் வரலாற்று பின்னணி நமக்கு தெரியவில்லை.
  
அடுத்துப் பார்க்கப் போறது செட்டிக்குளம். இது ராஜாதேசிங்கு தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருக்கிறது. மேலும், இது வழியாகத்தான் சர்க்கரை குளத்திற்கு செல்ல முடியும். இந்த வழியாக சென்றால் அனுமன் கோவிலுக்கும் செல்லலாம். இந்த குளம் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகவும், பின்னர் ராமசெட்டி என்பவர் இந்தக் குளத்திற்கு அழகிய படிக்கட்டுகளும், கருங்கர்க்களால் ஆன படிக்கட்டுகளும், தண்ணீர் வெளியேற சிறப்பான கட்டமைப்புகளுடன் கிழக்கு பக்கம் மதகுகளும் கொண்ட அமைப்பில் சிறப்பாக கட்டினாராம்.  அதனால அவருடையப் பெயரைக் கொண்டே செட்டிகுளம்னு அழைக்கப்படுவதாக சொல்கிறாங்க. இங்க ஒரு கோவிலும் இருக்கு. இப்பவும் இங்கிருக்கிற மக்களால் இந்த குளம் பயன்பாட்டில் இருக்கு ..

அனுமன் கோவிலுக்கு போற வழியில வலப்பக்கம் இருக்கு இந்த குளம். இது இயற்கை அமைப்பு கொண்டதாக அமைக்கபட்டதுன்னு சொல்கிறாங்க பள்ளமான இடத்தில அமைந்துள்ள இந்த குளம் மலைமேல் இருந்து வரும் தண்ணீரை சேமித்துக் கொள்வதற்காகவே கட்டப்பட்டதுன்னு சொல்றாங்க கோட்டையினுள் படிக்கிற பிள்ளைகளும், கல்லூரிக்கு செல்லாமல் ஜோடியாகவும் காதல்ங்கிற பெயரில் ஜோடி ஜோடியாக இருந்ததை பார்த்து வெறுத்துப் போய் இருந்த நமக்கு இப்பொழுது இந்த சர்க்கரைகுளத்து கரையில் "காதாலாய் கசிந்துருகி"ங்கிற பாடல்வரிகளுக்கு ஏற்ப அமைதியா நம்மை சட்டை செய்யாம இருக்கிற ஒரு ஜோடி குரங்கு அதன் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் கூடவே ஒரு நம் மூதாதையர் அவங்களையெல்லாம் தொந்திரவு பண்ணாம நாம இந்த குளத்துக்கரையில இருக்கிற ஆஞ்சேநேயர் கோவிலுக்கு செல்லலாம் .

அதுக்கு முன்னாடி இங்கே சர்க்கரை குளத்தின் அந்தப்பக்கக் கரையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு மேற்புறம் ஒரு உருண்டை வடிவில் கிணறு போன்ற அமைப்பில் தெரிவது தான் மரணகிணறு. அதன் ஒரு பகுதி பாறை இடிந்து பக்கத்திலேயே விழுந்து இருக்கு. இந்த கிணறு பற்றி சொல்லனும்னா இயற்கையில் அமைந்த இந்த பாறையில் கிணறு அமைத்துள்ளனர். இதன் வெளிப்புற சுற்றளவு சுமார் 30 மீட்டரும், உள்புற சுற்றளவு சுமார் 12 மீட்டர் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக்கிணறு வட்டவடிவில் யாரும்  ஏறிப்பார்க்கமுடியாத அமைப்பிலும், உட்பகுதி வெற்றிடமாகவும், ஆழமானதாகவும் அமைக்கப்பட்டு இருக்கு. அந்தக் காலத்தில் பெரிய தவறுகளை செய்பவர்கள் இந்தக் கிணற்றில் தள்ளப்பட்டு விடுவார்களாம். அதன்பிறகு அவர்கள் மேலே ஏறிவரமுடியாமலும்,  பசி, வெயில், சூடு, தாகத்திலும் இறந்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது ..கேட்கவே பயங்கரமா இருக்குல்ல!!

இதுதான் ஆஞ்சேநேயர் கோவில். இங்க நிறைய குரங்குகள் இருக்கு. இந்த இடம் இரண்டு கிணறுகளும் முடியும் இடத்தில அமைந்துள்ளது. அந்தக் கோவிலின் ஆஞ்சேநேயர் இயற்கையாக அமைந்த ஒருபாறையில் சுமார் 2 மீட்டர் அகலமும், சுமார் 3 மீட்டர் உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோவில் தூண்கள் கொண்ட மண்டபமாக இருந்திருக்கிறது. அது எல்லாம் போர்களில் முஸ்லிம் படைகளால் சிதைக்கபட்டிருக்கலாம். இல்ல இந்தக் கோவிலின் கற்கள் எல்லாம் பெயர்த்து வேறு இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏன்னா இதன் பக்கத்தில் சில இடங்களில் உத்திரகற்கள் சிதைந்து பக்கத்தில் சிதறி காணபப்டுகின்றன. இப்பொழுது வெறும் தூண்கள் மட்டுமே இருக்கு. இந்த ஆஞ்சேநேயர் சக்தி உள்ளவர் என்றும், இங்க நிறையபேர் தினமும் வந்து வழிப்பட்டு செல்றாங்க. இப்பவும் இங்குள்ள மக்களால் இந்தக் கோவில் தினசரி பூஜை வழிபாடு செய்யப்படுகிற கோவிலாக இருக்கு.

இங்கத் தெரிவது ஒரு காளிக் கோவில். இந்த இடம் சர்க்கரைக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்க நிறைய குரங்குகள் இருக்கின்றன. இங்கயும் வழிபாடு நடப்பது போல் தெரிகிறது. இப்ப நாம கோட்டையினுள்ளும், வெளியேயும்ன்னு எல்லா இடங்களையும் பார்த்துவிட்டோம். இனி, நாம் போகிற வழியில் ஒரு சிவன் கோவிலும் அதை அடுத்துள்ள அம்மன் கோவிலையும் அடுத்தவார பதிவில் பார்க்கலாம்...,