Monday, February 06, 2017

திருவண்ணாமலை கோவில் - கும்பாபிஷேக ஷ்பெசல்


சிவனே மலையாய் உருக்கொண்ட திருவண்ணாமலை பத்தியும், கிரிவலம் பத்தியும், மகாதீபம் பற்றியும் பல பதிவுகள் நம் தளத்தில் பார்த்திருக்கிறோம். ஆனா, கோவில் பத்திய விவரங்களை இதுவரை நாம பார்க்கலை. ரொம்ப நாளா இருந்த வந்த அந்த குறையும் இறைவன் அருளால இன்னிக்கு கொஞ்சம் நீங்கிச்சு.

இனி கோவில் பத்தி பார்ப்போம். 6 பிரகாரங்கள், 9 ராஜ கோபுரங்கள், கருவறை, முக மண்டபம், திருச்சுற்றுகள், திருக்குளம், மதில்கள் மலையடிவாரத்தில் இருக்கும் இச்சிவாலயத்தில் 142 சன்னிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என 24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில்.


விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோவிலின் பணியை தொடங்கி வைத்தனர். இக்கோவிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகப் பழமையானது தொன்மையானதும்கூட. இக்கோபுரம் கி.பி 1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

கி.பி. 14 நூற்றாண்டில் ஒய்சாளர்களின் தலைநகராக திருவண்ணாமலை இருந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள வல்லாள மகாராஜாகோபுரம் மூண்றாவது வல்லாள மாகாராஜாவால் (1291- 1342) கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி எனக்கூறுவர்.
ஒய்சாள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்சத்தை எட்டியது. கிருஷ்ண தேவராயர் (1509 -1529)தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி.1516 ல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களில் ஒன்றாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும். இராயக்கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுப்போல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக்கலைக்கு எடுத்துக்காட்டு.


சிவகங்கை குளமும், ஆயிரங்கால் மண்டபமும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானதாகும். விஜயநகர கால கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
அண்ணாமலையார் கோவிலின் மூலவர் அருணாச்சலேஸ்வரர். அம்பாள் உண்ணாமுலை அம்மன். கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சன்னிதிக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் அஷ்டலட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டபம் உள்ளது. விநாயகர் சன்னிதியும், கம்பத்து இளையனார்(முருகன்) சன்னிதியும் இக்கோவிலுள்ள முக்கிய சன்னிதிகளாகும்.

பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரம்மாண்டமாய் இக்கோவில் பரந்து விரிந்து இருக்கு. கோவிலின் உள்ளே நுழைய திசைக்கொன்றாய் நாலு கோபுர வாசல் உள்ளது.. கோவிலின் ராஜ கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும், 11 அடுக்குகளையும் கொண்டது.



 சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்கள் கோவிலினுள் உள்ளது. இக்கோவில் மிகப்பெரியது என்பதால் ஆறு பிரகாரங்களில் என்னன்ன சன்னிதிகள், சிறப்பம்சங்கள் உள்ளது என பார்ப்போம்...

முதல் பிரகாரம்: இங்கு மூலவர் சன்னிதி உள்ளது. விண்ணுக்கும், மண்ணுக்குமாய் நின்றருளிய இறைவனை இங்குதான் தரிசிப்போம்.. இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்க இங்கிருந்து வழி உண்டு.

இரண்டாம் பிரகாரம்: இங்கு அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பைரவர், கஜலட்சுமி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வர் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் இருக்கு. அண்ணாமலையாரின் பள்ளியறையும் இங்குதான் இருக்கு.


மூன்றாம் பிரகாரம்: இங்கு கிளிகோபுரம், தீபதரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சன்னிதி, யாகசாலை, பிடாரி அம்மன் சன்னிதி, கல்லால் ஆன திரிசூலம், சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் சன்னிதிகளை தரிசிக்கலாம்.
நான்காம் பிரகாரம்:  கால பைரவர், பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்திவிலாசம், கருணை இல்லம், பிரம்ம லிங்கம், யானை திரைக்கொண்ட விநாயகர், நளேஸ்வர லிங்கம், பிச்சை இளையானார் சன்னிதிகளை இங்கு தரிசிக்கலாம்..

ஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சன்னிதி, ஆயிரங்கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சன்னிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மகாராஜா கோபுரம் முதலியவற்றை இங்கு காணலாம்.


ஆறாம் பிரகாரம்: கோவிலுக்குள் நுழையக்கூடிய நாலு கோபுரங்கள் இங்குள்ளது. பதினோரு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் 217 அடி உயரத்திற்கு வானளவி நிற்கிறது. 11 கலசங்களை தாங்கி கம்பீரமாய் நின்று நமக்கு கோடி பலன்களை அள்ளி தருகிறது. ராஜகோபுரத்தை கீழைக்கோபுரம் எனவும் அழைக்கப்படுது. தெற்கு கோபுரத்தை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்கு கோபுரத்தை பேய் கோபுரம் என்றும், வடக்கு கோபுரத்தை அம்மணி கோபுரம் என்றும் கூறுவர்.
கிளி கோபுரம்:
ஒரு சமயம் விஜய நகர் மன்னர் பிரபுட தேவராயர் கண் பார்வை இழந்து துன்பமடைந்தார். மன்னரின் நம்பிக்கைக்குகந்த புலவர் சம்பந்தாண்டான் பாரிஜாத மலரைக் கொண்டு சிகிச்சை செய்தால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்றும் இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிநாதார் தாம் என்று கூறினார். மன்னரும் இதை ஏற்று அருணகிரிநாதரை பாரிஜாத மலரைக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்.

பாரிஜாத மலர் சொர்க்கத்தில் இருப்பதால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தன் உயிரைப் புகுத்தினார். உயிரற்ற தன் உடலை ஓரிடத்தில் கிடத்தி விட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார். ஆனால் மலரைக் கொண்டு வருவதற்குள் புலவர் சம்மந்தாண்டனது சூழ்ச்சியினால் அருணகிரிநாதரின் அவர் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. தன் பூத உடல் மீண்டும் திரும்பப் பெற முடியாதோல் அருணகிரிநாதர் கிளி வடிவில் வாழ்ந்து கந்தரனுபூதி முதலான பாடல்கனை இயற்றினார். இக்கோபுரத்தின் கலசத்தில் அருணகிரிநாதர் கிளி உருவாக அமர்ந்து சென்றதால் இதற்கு கிளி கோபுரம் என்ற பெயர் வழங்கலாயிற்று

கம்பத்து இளையனார்: எல்லா சிவன் கோவில்களிலும் உள்நுழைந்ததும் முதலில் தரிசிப்பது விநாயகராய்த்தான் இருப்பார். ஆனால், திருவண்ணாமலை கோவிலில் முருகப்பெருமான் அவ்விடத்தை பிடித்துள்ளார். 16 கால் மண்டபத்தில் அருணகிரிநாதரில் பிரார்த்தனைக்கிரங்கி பிரபுடதேவராய மன்னருக்கு ஒரு தூணில் காட்சி தந்ததால் இப்பெயரில் நமக்கும் அருள்பாலிக்கின்றார் முருகர் 
பாதாள லிங்கமும் ரமணரும் : இங்குதான் பாதாளலிங்கேசுவரர் சந்நதி உள்ளது. ""பாதாளம்'' என்பதற்கேற்ப, படிகள் வழியே கீழே இறங்கி அவரை தரிசனம் செய்கிறோம். பள்ளிப்படிப்பைத் துறந்து, பலத் தலங்களைச் சுற்றி வந்த பின்னர், வெங்கடசுப்ரமணியன் என்ற அந்தச் சிறுவனுக்கு பாதாளலிங்கேசுவரரின் தரிசனம் ஞானஒளியைத்தந்தது. அதன் பின்னர், ரமணர் ஆகி, ரமண மகரிஷி என்ற பெருமையும் பெற்று, திருஅண்ணாமலை திருத்தலத்தில் பல காலம் தங்கி தவம் செய்து முக்தியும் பெற்றது வரலாறு. அடுத்து நாம் காண்பதுதான் வல்லாளமகாராஜா கோபுரம். இந்த கோபுரத்தின் மீதேறிதான் தனது ஊனுடலை நீக்கிக் கொள்ள அருணிரிநாதர் முயற்சித்தார். கீழே விழுகையில்,அவரைத் தாங்கி நின்று காப்பாற்றி அருள்பாலித்த முருகப்பெருமான்,கோபுரவாசலில் காட்சி தருவதும் மிகப் பொருத்தமே ! 
1400 ஆண்டு பழமையான திருவண்ணாமலைக்கோவிலுக்கு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு பிறகு இன்று (6/2/2017) கும்பாபிசேகம். அதனால, சும்மா எனக்கு தெரிந்த கோவில் விவரஙகளை பதிவிட்டுள்ளேன்...
விரைவில் மிக விரிவாக கோவில் அமைப்பும், அதற்குண்டான படங்களும் பதிவிடப்படும்.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை..
வணக்கங்களுடன்..,
ராஜி.




Friday, February 03, 2017

ஆரோக்கியம் தரும் ரதசப்தமி வழிபாடு - புண்ணியம் தேடி...


கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, படிப்புக்காக, பணத்துக்காகன்னு ஆயிரம் விரதங்கள் இருக்கு. ஆனா, ஆரோக்கியத்துக்கு?!

அதுக்கும் நம் இந்து சமயத்துல இருக்கு...  நாம், நம் குடும்பம் ஆரோக்கியத்தோடு வாழ  ”ரத சப்தமி”ன்னு ஒரு விரதமிருக்கு.. தை மாதத்தில் இவ்விழா அனுஷ்டிக்கப்படுது.

எல்லா தெய்வத்துக்கும் ஜெயந்தி தினம் உண்டு.. சூரியனுக்கும் அப்படி ஒரு தினத்தை வைத்து கொண்டாடும் நாளே ”ரத சப்தமி” தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரியன் ஜெயந்தி கொண்டாடப்படுது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான்.

தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன்,  வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.



சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது.


ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணங்கள் கூறுகின்றது.  அதனை அறிவியலும் ஏற்கிறது.


சித்திரை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
வைகாசி மாதத்தில் அர்யமான் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்.. 
ஆனி மாதத்தில் விஸ்வஸ் என்ற பெயரில் 1400 கதிர்களுடனும்...

ஆடி மாதத்தில் அம்சுமான் என்று 1500 கதிர்களுடனும்...
ஆவணி மாதத்தில் பர்ஜன் என்ற பெயரில் 1400 கதிர்களுடனும்...
 புரட்டாசி மாதத்தில் வருணன் என்ற பெயரில் 1300 கதிர்களுடனும்..
 ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று 1200 கதிர்களுடனும்..
கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் பெற்று 1100 கதிர்களையும்..
மார்கழி மாதத்தில் நண்பனாக 1500  கதிர்களுடனும்....
தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
மாசி மாதத்தில் பகன் என்ற பெயரில் 1000 கதிர்களுடனும்...
பங்குனியில் துவஷ்டா என்ற பெயரில் 1100 கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான்.
ரதசப்தமி விரதம் மிக எளிதானது.. சூரிய உதயத்தின்போது ஏதாவது ஒரு நீர்நிலைக்கு சென்று நீராட வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் இல்லத்திலேயே சிறிதளவாவது சூரிய ஒளி படும் இடத்தில் நீராட வேண்டும்.
தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, கால்களில் இரண்டு என மொத்தம் ஏழு எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள்பொடி, அட்சதையும், ஆண்கள் வெறும் அட்சதம் மட்டும் வைத்து நீராட வேண்டும். இவ்வாறு நீராடுவதால் உடல் ஆரோக்கியமும்   செல்வ வளமும் கிட்டும் என்பது ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே எருக்கம் இலை என மாறிவிட்டது. சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கம் இலைக்குண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும்.


இப்படி செய்வதால் நாம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும், புண்ணிய பலன்கள் பெருகும். அன்றைய தினம் குளித்து முடித்து சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதற்குப்பின் நமக்கு தெரிந்த சூரிய துதிகளை சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிப்படுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது போன்றது அர்க்கியம் விடுவது. எனவே “ரத சப்தமி”யன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சூரிய பகவானுக்கு உகந்தது சர்க்கரை பொங்கல் நிவேதனம்.

பொங்கல் வைத்து அதன் சூடு ஆறும் முன் நிவேதனம் செய்திடல் வேண்டும். சூரியனுக்கு படைத்தப்பின் சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். “ரத சப்தமி”யன்று வீட்டுவாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்த கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதுண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் “ரத சப்தமி” பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச்செய்யும் எனவும் ஐதீகம்.. ரதசப்தமி தினத்தில் வழிப்படும்போது சூரியனை நோக்கி...

”ஓம் நமோ ஆதித் யாய... ஆயுள்ஆரோக்கியம்புத்திர் பலம் தேஹிமேசதா'' 

என்று சொல்லி வணங்கலாம்.
ஆயிரம் நாமங்கள் சொல்லி என்னை எவரொருவர் என்னைத் துதித்து வழிப்படுகிறார்களோ அவர்களின் எண்ணங்களை முழுமையா பூர்த்தி செய்வேன். ஆயிரம் நாமாவளி சொல்ல இயலாதவர்கள் இருபத்தியொரு நாமங்கள சொன்னாலும் போதும் என சூரிய பகவான் அருளிய இருபத்தியொரு நாமாவளி.


"ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாசஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:கர்த்தா ஹர்த்தா 
தமிஸரஹ'தபனஸ் தாபனஸ் சைவ
 கசி:ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:"

மேற்கண்ட இருபத்தியொரு நாமாவளியை செபித்து உடல், மன ஆரோக்கியத்தோடும், செல்வ வளத்தோடும் பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம். 

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை வணக்கங்களுடன் விடைப்பெறுவது
ராஜி.

Sunday, January 29, 2017

கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர் - பக்தி

கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்தவர் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார் என பார்க்கலாம். .இதில் ஒற்றுமை என்னவென்றால் ,வடநாட்டில் பிறந்த இராமகிருஷ்ணர் என்ன கருத்துக்களை சொல்கிறாரோ அதையேதான் சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மம் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே அவன் இல்லை’, ‘அவன் இல்லைஎன்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் இல்லைஎன்ற பதிலோ ஆமாம்என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மத்தை கண்டவர் நிலையும் இதேபோல் தான் அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
 ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். எங்கும் நிறைந்தவன் அவனே ,எதிலிருந்து ஆரம்பிப்பது .எதில் முடிப்பது .ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியாயிற்றே, இரண்டாவது மகன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
இந்த எடுத்துக் காட்டுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர் பிரம்மஞானிகளின் இயல்பை விளக்குகிறார். ஆனால் ஒரு சில ஞானியர் மட்டும், மனித குல நன்மைக்காக மிகவும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நம்மிடையே திரும்பி ஓடிவருகிறார்கள்.கண்டேன், கண்டேன் கண்டேன்!! கண்ணுக்கினியன கண்டேன், தொண்டீர் எல்லோரும் வாரீர்”-- என்று ஆனந்தக் கூத்தாடி நம்மை எல்லாம் உய்விக்க முயற்சி செய்கிறார்கள். சேரவாரும் ஜெகத்தீரே”-- என்று நம்மிடம் கெஞ்சுகின்றனர். அப்படியும் நாம் போகாவிட்டால் கடைவிரித்தேன் கொள்வரில்லையே”--- என்று வருத்தப் படுகிறார்கள்.

திருமூலரின் திருமந்திரம் காட்டும் உண்மை:

உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (2915)

பொருள்; கடவுளை வருணிக்க முடியாது. கரை காண முடியாத கடல் போல அவன் எங்கும் நிறந்தவன். அவனைச் சொல்லுக்குள் அடக்க முயன்றவர்கள் எல்லாம் திணறிப் போய் ஊமையர் போல நிற்கின்றனர். கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். ஆனால் தெளிந்த மனது உடையோருக்கு அவன் எளிதில் புரிபடுவான்..பகவத் கீதையில் பெருங் கடலை, சமுத்திரத்தை ‘’ஆபூர்யமாணம், அசலப் ப்ரதிஷ்டம்’’= எங்கும் நிறைந்தது, நிலைகுலையாதது என்று கிருஷ்ணன் கூறுவான் (2-70). ஆர்பரித்துத் துள்ளி ஓடும் பெரிய, பெரிய நதிகள் எல்லாம் கடலுக்குள் இறங்கியவுடன் சப்தம் ஒடுங்கி தன் நாமம் இழந்துவிடும். இது போல ஆசைகள் எல்லாம் ஒருவனுக்குள் ஒடுங்கவேண்டும். பின்னர் இறைவனைக் காண முடியும். என்று கூறுகிறார்
இதையே ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோஎன்று மாணிக்கவாசகர் பாடினார்.இதுபோன்ற சின்ன உவமை, பெரிய உண்மைகளைப் புகட்டுகின்றன. மீண்டும் ஒரு பக்தி பதிவினூடே சந்திக்கலாம் .நன்றி ..


Monday, December 12, 2016

திருக்கார்த்திகையை கொண்டாடுவது ஏன்?! - கார்த்திகை தீப ஸ்பெஷல்




தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.  

திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சிப்புரத்தில் வாழ்தல் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, இந்த வரிசையில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அத்தகைய வல்லமை கொண்டது இம்மலை.  நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.






ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற மமதைக்கொண்டு தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.

சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார். 

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.



தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், எல்லோரும் வணங்கி வழிப்பட ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டுமென வேண்டி நின்றனர். கோவம் தணிந்த சிவபெருமானும், மலையாக உருவெடுத்தார். அம்மலையே “திருவண்ணாமலை” ஆகும். அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.


சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார். 

உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும். 

திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.


அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 


புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.


இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.



திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.


 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.


இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய
ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார் 
வினை வழுவாவண்ணமறுமே.


தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறவா போற்றி!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்...,
ராஜி.