Saturday, December 02, 2017

விளக்கு வைப்போம்.. விளக்கு வைப்போம்....




தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஒரு சிறிய தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுது. இன்று இந்த விழா மிகச்சிறப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுது.  

திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சிப்புரத்தில் வாழ்தல் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, இந்த வரிசையில் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அத்தகைய வல்லமை கொண்டது இம்மலை.  நினைத்தவுடனே முக்தி அளிக்கமளவுக்கு கருணை கொண்டவர்தான் இங்கு குடிக்கொண்டிருக்கும் “அண்ணாமலையார்”. அவர் ஜோதிமயமாய் எழுந்தருளிய நாளான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்  “தீபத்திருநாளாய்” கொண்டாடப்படுது.


ஒருமுறை பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற மமதைக்கொண்டு தங்கள் ஐயம் தீர்க்க சிவப்பெருமானிடம் வந்து நின்றனர். ”மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதிப்பிழம்பாய் உருவெடுத்து , சிவனின் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கிறீர்களோ , அவர்களே உயர்ந்தவர்” என அசரீரி ஒலித்தது.


சிவனின் அடியைக் காண விஷ்ணு வராக அவதாரம் கொண்டு பூமியை துளைத்துச் சென்றார். முடியைக்காண பிரம்மா பறவை உருக்கொண்டு விண்ணில் பறந்தார். யுகம் யுகமாய் பயணித்தும் அடியைக் காண முடியாமல் தன் தோல்வியை விஷ்ணு ஒப்புக்கொண்டு சிவனிடம் சரணாகதி அடைந்தார். 

இதற்கிடையில், சிவனின் சடாமுடியிலிருந்து விழுந்து பூமியை நோக்கி வந்துக்கொண்டிருந்த தாழம்பூவிடம் இன்னும் எவ்வளவு தூரம் எனக்கேட்க, இன்னும் பல யுகம் பயணிக்க வேண்டும் எனச் சொன்னது தாழம்பூ. அப்படியெனில் எனக்கொரு உதவி செய். ன் சிவனின் முடியை நான் கண்டதை நீ கண்டதாக சொல் என பூமிக்கு அழைத்து வந்து இருவரும் சிவனிடம் பொய்யுரைத்தனர். அதனால், கோவம்கொண்ட சிவன், இனி தன் பூஜைக்கு தாழம்பூ ஆகாது எனவும், பிரம்மாவுக்கு தனியான சந்நிதி இனி கிடையாது என சாபமிட்டார்.



தங்கள் தவறை உணர்ந்த மூவரும் சிவனிடம், எல்லோரும் வணங்கி வழிப்பட ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டுமென வேண்டி நின்றனர். கோவம் தணிந்த சிவபெருமானும், மலையாக உருவெடுத்தார். அம்மலையே “திருவண்ணாமலை” ஆகும். அதனால்தான், மலையே லிங்கமாய் உருவகப்படுத்தி மக்கள் கிரிவலம் வருகிறார்கள் என புராணங்கள் சொல்கிறது.  அண்ணா என்றால் ”நெருங்கவே முடியாத” எனப்பொருள். பிரம்மா, விஷ்ணு இருவராலும் அடி, முடியை நெருங்கவே முடியாத மலையானதால் ”அண்ணாமலை” என அழைக்கப்படுது.


சிவப்பெருமானின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாய் மூட பூலோகம் முழுக்க இருள் பரவியது. அதனால கோவம் கொண்ட சிவன், தன்னை நீங்கி பூலோகம் சென்று தன்னை வழிப்பட்டு வரவேண்டுமென சாபமிட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்து மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிப்படுகிறாள். அங்கிருந்து திருவண்ணாமலை வந்து, கௌதம புத்தரின் வழிக்காட்டுதல்படி சிவபூஜை செய்து, “மடக்கு” என்றழைக்கப்படும் மண் பாத்திரத்தில் விளக்கேற்றி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிப்படுகிறார். அம்மையாரின் பக்திக்கும், தவத்துக்கும் மனமிரங்கி ஈசானலிங்கத்தை நெருங்கும்போது இறைவன் ரிஷப வாகனத்தில் வந்து அம்மையை இடப்பாகமாக ஏற்றுக்கொள்கிறார்.



உலக மக்களையெல்லாம் காப்பவளாயிற்றே அன்னை! தன் மக்களுக்காக  “தாங்கள் எனக்கு மட்டும் காட்சியளித்தால் போதாது. அனைவருக்கும்  காட்சியளிக்க வேண்டுமென வரம் கேட்கின்றாள். ஆண்டுக்கு ஒருநாள் தான் இங்கு ஜோதி சொரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தர்சிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் . அந்த நாளில் தன்னை தரிசிப்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என அருள்கின்றார். இறைவன் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் நாளே கார்த்திக மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் மகாஜோதியாகும்.



திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைப்பெறும் இத்தீபத்திருநாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மலைமேல் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  அன்று அதிகாலை சுயம்புலிங்கமான அருணாச்சலேஸ்வரருக்கு “பரணி தீபம்” ஏற்றப்படுகிறது. மாலையில்  ஒருசில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார். மலைமீது தீபமேற்றிய பிறகே கோவிலில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் முழுவதும் வீடு, கோவில்களில் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அக்னியின் அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்துக்குண்டான பலனை அளிக்கவல்லது திருவிளக்கேற்றி வழிப்படுவது.  தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்றி வழிப்படலாம்.


அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 



புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ்லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனால, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து பஞ்சு திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வளர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கேத்துற பழக்கம் வந்துச்சாம்!!.


இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும். பின்கதவு இல்லாதவர்கள் ஜன்னலையவது சார்த்திய பிறகே விளக்கேற்றனும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 

விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.



திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.


எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் கடனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.


 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 


திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றது.


இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.



உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய

ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமேனி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார் 
வினை வழுவாவண்ணமறுமே.


தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறவா போற்றி!


நன்றியுடன்...,
ராஜி.

Friday, December 01, 2017

ஐயப்பன் பிரம்மச்சாரியா?! இல்லை குடும்பஸ்தனா?!

கடந்தவராம் ஐயப்பனின் நான்கு பருவங்களில் குழந்தை பருவ வடிவமான பாலசாஸ்தாவாக வீற்றிருக்கும் குளத்துப்புழாவில் அருளும் தர்ம சாஸ்தா கோவிலைப்பற்றி  பார்த்தோம். இனி,  திருமணக்கோலத்தில் இருக்கும் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பனை  பற்றி பார்க்கலாம்.   ஐயப்பனை பிரம்மச்சர்ய கடவுளாதான் நமக்கு தெரியும். அதனால், பத்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முடிந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள்தான் ஐயப்பனை கோவிலில் தரிசிக்கனும்ன்னு விதிமுறைகள் இருக்கு, ஆனா, வீட்டைவிட்டு வெளில தங்கி இருக்கும் பசங்க, ஆன்சைட்டுக்கு வெளிநாட்டுக்கு போற பசங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி ஐயப்பன், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராய் காட்சி தர்றார்.  அதும் ஒன்றல்ல, இரண்டு மனைவியரோடு... ஐயப்பன் தம்பதி சமேதராய் இருக்கார்ன்னு சொன்னா என்னை லூசுன்னு கேலிப்பேசுவீங்க. ஆனா, அதான் உண்மை. அந்த உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க..

பரம்பொருளின் மகனான ஐயப்பன் வழிபாடு தோன்றி  சுமார் 2000  ஆகிட்டுது.  சாஸ்தா வழிபாடு என்பது பாரத தேசத்தில் மிகத் தொன்மையான ஒன்று. தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்திலும் மலையாள தேசத்திலும் இவ்வழிபாடு பரவலா காணப்படுது. ஹரிஹரபுத்திரன் என்று புராணங்கள் குறிப்பிடும் இந்த பரம்பொருள், ஒரு தெய்வீக லீலையின் காரணமாக "மணிகண்டன்" என்ற பெயருடன் பூமியில் தோன்றி, பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாண்டிமாதேவியின் தலைவலிக்காக புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்று, மஹிஷி எனும் அரக்கியை வதைத்து, புலிக்கூட்டங்கள் புடைச்சூழ அரண்மனைக்கு திரும்பி, இறுதியாக சபரிமலை எனுமிடத்தில் யோகபீடத்தில் அமர்ந்து இன்றும் நம்பினோரை கைவிடாமல் அருள்புரிகின்றார் என்பது நமக்கு தெரிந்த புராணக்கதை. ஆனா, நமக்கு தெரியாத சில செவிவழி கதைகளும் இருக்கு. 

ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனியா வந்துக்கிட்டிருந்தார். அடர்ந்த காடு, இரவு நேரம்,  வழியும் சரியாக தெரியலை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டுவிட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும்        ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர்.

மறுநாள் விடிந்ததும், அந்த வாளை கோவிலில் ஒப்படைத்து விட்டு நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. ‘அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது.கொடி மரத்தை வணங்கி படியேறி மூலவர் ஐயப்பனை தரிசித்து விட்டு விநாயகர், சுப்பிரமணியர், நாகங்கள், மாம்பழத்தறா பகவதி அம்மன் சன்னிதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும். பின்னர் கருப்பன் என்னும் கருப்ப சுவாமியையும் தவறாமல் வழிபட வேண்டும். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின்போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம்அணிந்து கலந்து கொள்கிறார்கள். இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

 தமிழகத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள கேரள மலைப்பகுதி. ஐயப்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அரசனாக ஐயப்பன் இங்குதான் வீற்றிருக்கிறார்.  இக்கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார்.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கபட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டு படிகள் உண்டு. இக்கோவிலின் சிறப்பு  ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள்,  தன் தேவியரான பூரணை, புஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில். இங்கு ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. அச்சன்கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தைப் பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார். அச்சன் கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித் தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். வலது கரம் அருகில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. ஐயப்பனின் இருபுறமும் அவரது தேவியர் பூரணையும், புஷ்கலையும் அமர்ந்திருக்க, ஐயப்பனின் இந்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது.

அச்சன்கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான். அச்சன் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் ‘மண்டல மகோத்சவம்’ வெகு பிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன இருக்கும். இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கும். பின்னர் தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும். அச்சன்கோவில் ஐயப்பன், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள்.  இது விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்புக் கடிபட்டு வருபவர்களுக்கு, எந்த நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம்.

ஆண்டுதோறும் தை மாதம், ரேவதி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் மகாபுஷ்பாஞ்சலி [பூச்சொரிதல்] மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்காகத் தமிழகத்தில் இருந்து இரண்டு லாரி மலர்கள் கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கும் அம்பாள்களுக்கும் விசேஷ புஷ்பாபிஷேக வைபவம் நடைபெறும். வண்ண வண்ண மலர்க் குவியல்களுக்கு இடையே பகவானைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில் திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு செங்கோட்டையில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. 

மண்டல மகோத்சவம்

அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் ‘மண்டல மகோத்சவம்’ வெகு பிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன இருக்கும். இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கும். பின்னர் தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும்.
(பத்ம தளம்) ராஜ வம்சம் கி.பி. 904 -ல் உருவானது. மதுரையில் நிலைக்கொண்ட பாண்டிய அரசர்கள், சோழர்கள் மற்றும் பல எதிரிகளின் தாக்குதல்களால் சிதறுண்டு, அதில் ஒரு பகுதி, தங்கள் ராஜ்ய விசுவாசிகள் வலுவாக இருந்த தென்பாண்டி - கேரள எல்லைகளில் குடியேறினார்கள். செங்கோட்டை, இலத்தூர், பூஞ்சார், பந்தளம் ஆகிய இடங்களில் பாண்டிய ராஜ வம்சம் குடியேறியது. தங்கள் பாண்டிய வம்ச திலகமாக விளங்கிய சபரிமலை சாஸ்தாவையே அண்டி ஒரு கிளை உருவானது. பத்து பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியமாக அது விளங்கியதால், பத்து தாமரை இதழ்களை உருவகித்து, பத்ம தளம் என்ற பெயர் அதற்கு விளங்கியது. இதுவே பின்னாளில் பந்தளம் என்றானது. சபரிமலை சாஸ்தாவைப் போற்றி உருவான பாண்டிய ராஜ பரம்பரை நாளடைவில் பந்தள ராஜ வம்சம் என்றே அறியலாயிற்று.


பத்தாம் நூற்றாண்டு சமயத்தில் தென் தமிழக கேரளப் பகுதிகளில் குழப்பமான சூழ்நிலையே விளங்கியது. சபரிமலை, அச்சன்கோவில் பகுதிகளே அன்றைய தமிழக - கேரள எல்லைப்பகுதியாகவும்,வியாபாரிகள் செல்லும் முக்கியமான வழியாகவும் இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்களெல்லாம் உதயணன் என்றொரு கொள்ளையனுக்கு பயந்து வாழவேண்டிய நிலை உருவானது. எல்லைப்பகுதிகளைக் கடக்கும் மக்களை தாக்கி கொலை கொள்ளைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்தான் உதயணன். அவனுக்கென ஒரு கொள்ளைக் கூட்டமும் உருவானது. தமிழக எல்லையில் தொடங்கிய அவனது கொட்டம், மெல்ல மெல்ல கேரளத்துக்குள் புகுந்து, தலைப்பாறை, இஞ்சிப்பாறை, கரிமலை என பந்தளத்தின் காடுகளில் கோட்டையை கட்டிக் கொண்டு காட்டரசனாக வாழுமளவுக்கு முன்னேறியது.
சபரிமலை தர்மசாஸ்தா கோவில் - அப்போது தமிழக - கேரள பக்தர்கள் இருசாராரும் வந்து வழிபடும் கோவிலாகவும், வியாபாரிகள் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பாதையாகவும் விளங்கியது. வெற்றி போதை தலைக்கேறிய உதயணன், சபரிமலையிலும் தன் வெறியாட்டத்தை நடத்தி கோவிலைக் கொள்ளையிட்டான். அதனை தடுக்க வந்த நம்பூதிரியையும் கொன்று, சாஸ்தா விக்ரஹத்தையும் உடைத்து நொறுக்குகிறான். வெறி தலைக்கேற, கோவிலையும் தீக்கிரையாக்குகிறான். இந்த சமயத்தில் அங்கே இல்லாமல் வெளியே போயிருந்த அந்த பூஜாரியின் மகன் ஜயந்தன் நம்பூதிரி அங்கே திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. இந்த கொடூர சம்பவங்களைக் கண்டு கொதித்த ஜயந்தன், உதயணனை பழிவாங்கவும், மீண்டும் சபரிமலைக் கோவிலை உருவாக்கவும் சபதம் மேற்கொண்டான்.
தன் சபதத்தை நிறைவேற்ற போர்க்கலைகளை வெறியுடன் கற்றறிந்தான் ஜயந்தன். சுற்றியுள்ள பல சிற்றரசர்களையும், ஜமீந்தார்களையும் கண்டு உதயணனின் கொட்டத்தை அடக்க படைகளை கொடுத்து உதவுமாறு வேண்டினான். ஆனால் உதயணனுக்கு பயந்து யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ஜயந்தன், யாராலும் எளிதில் அடைய முடியாத, பொன்னம்பல மேடு பகுதியில் ஒரு குகையில் வசிக்கலானான்.மனிதர்கள் கைவிட்டு விட்ட நிலையில் தன் முயற்சிக்கு உதவ வேண்டி சாஸ்தாவை நோக்கி தவமிருந்தான். சபரிமலை கோவிலையே தரைமட்டம் ஆக்கிவிட்டதனால் தலைகால் புரியாத உதயணன், தன்னைத் தானே ஒரு அரசன் என்று கருதிக் கொண்டான். ஒரு முறை பந்தளம் பகுதிக்கு வந்த அவன், அந்நாட்டின் இளவரசியைக் கண்டான்; இளவரசியை மணந்து கொண்டால், வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவனான தான், அரச பரம்பரையில் இணையலாம் என்ற எண்ணத்தில் இளவரசியை பெண் கேட்டு ஆள் அனுப்பினான். ஆனால் பந்தள மன்னர் அதனை கௌரவமாக மறுத்து விட்டார். இதனால் அவமானமுற்ற உதயணன், அரண்மனையைத் தாக்கி, இளவரசியையும் கடத்திக் கொண்டு சென்று விட்டான். அவளை கரிமலையில் உள்ள தன் கோட்டையில் சிறை வைத்து, ஒரு மாதத்துக்குள் மனத்தை மாற்றிக் கொள்ளும்படி கெடுவைக்கிறான். இந்நிலையில், சிறைபட்டிருந்த இளவரசியின் கனவில் தர்மசாஸ்தா தோன்றி, கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அதேசமயம் பொன்னம்பல மேட்டில் தங்கியிருந்த ஜயந்தனின் கனவிலும் தோன்றி, இளவரசியைக் காப்பாறுமாறும், அதன் பின்னர் தனது சக்தியே அவனுக்கு மகனாக தோன்றி அவன் லட்சியத்தை நிறைவேற்றும் என்றும் கூறுகிறார்.

இந்த கொள்ளைக் கூட்டம் அசந்திருந்த நேரம் பார்த்து திடீரென தாக்குகிறான் ஜயந்தன். போர்க்கலையில் வல்லவனான ஜயந்தன் எளிதில் இளவரசியை காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறான். ஆனால் 21 நாட்கள் காணாமல் போன ஒரு பெண்ணை, இறந்தவளாகக் கருதி அரண்மனையில் இறுதி சடங்குகளை முடித்து விடுகிறார்கள். வேறு வழியில்லாத ஜயந்தன், தானே அவளை மணந்து கொண்டு, யாராலும் அடையாளம் காண முடியாத காட்டுப் பகுதியில்(இன்றைய பொன்னம்பலமேடு) வசிக்கிறார்கள். கடும் தவமும், த்யானமும் கொண்ட தம்பதிகளின் மனதில் எப்போதும் ஒரே எண்ணம்தான். உதயணனை அழித்து, சபரிமலைக் கோவிலை மீண்டும் உண்டாக்கும்படியான ஒரு மகனை அளிக்கும்படி தர்மசாஸ்தாவை வேண்டியபடியே இருந்தார்கள்.

விரைவில் இளவரசி கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால், அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள். (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்று; மரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப்போகும் தவப்புதல்வன் என்ற எண்ணத்தில் ஜயந்தன், மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம், அரசியலோடு, போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில், பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும், அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.

இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாது என்று முடுவெடுத்த ஜயந்தன், பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன், கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்துவிட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும், அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்தது; யாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன், அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.
அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன், தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்று விட்டான். அரசனும், தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்து, அவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச பிரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனை, எல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்) அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன், அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்று, தன் பிறவியின் லட்சியத்தை எண்ணி தியானம் செய்து பொழுதை கழிக்கலானார்.
பாண்டிய அரச பரம்பரையின் மற்றொரு கிளை வம்சமான பூஞ்சாறு ராஜ்ய வம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன், வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்த போது, உதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன், ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல், மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகு விரைவிலேயே, அவன் வேண்டுதல் பலித்ததைப் போல ஒரு இளைஞர் யானை மேல் வந்து கொண்டிருந்தார். வனத்தில் திரிந்து கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன் மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன் தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன், மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன், அரசனுக்கு துணையாக, தன் ப்ரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)

இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன் தான் ஒரு போர்வீரனாகவும், யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என்று உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும், சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாது; எனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார். இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம், அம்பலப்புழை, சேர்த்தலை, ஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.
முதன் முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர், தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும், போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்து, கடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன், உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்), காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும், தோழனாகவும் ஏற்ற ஐயப்பன், வெகு விரைவில் படைகளை திரட்டலானார்.

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டி, படை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது). இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கி, சிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.

சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன், அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள், கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.உதயணனுக்கு எதிராக, ஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின்  தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன், படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.

ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன், போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, காட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்; அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்) உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.


ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும், அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும், பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார். மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்கு, வடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள். லட்சியம் வென்றது.  எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டது; முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன், அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லை; அவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது.  உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறை, கரிமலை, உடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது.


பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்கு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும், உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது. மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன், ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அம்பு, கத்தி, கதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)  வீர விளையாட்டின் முடிவுபின்னர் ஐயப்பனும் மற்ற படை வீரர்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே அவரது தந்தை ஜயந்தனும் மற்றவர்களும் புதிய விக்ரஹத்துடன் காத்திருந்தார்கள். சபரிமலையை அடைந்ததும் ஐயப்பன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பூரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். ஆலய நிர்மாணம் முடிந்து ப்ரதிஷ்டைக்கு தயாராகும் வரை ஐயப்பன் ஓரிடத்தில் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்(இன்றைய மணிமண்டபம்) தனுர்மாதம் (கார்த்திகை) முடிந்து தைமாதம் துவங்கும் வேளையில் புதிய விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்ய வேளை குறிக்கப்பட்டது. புதிய ப்ரதிஷ்டையை ஐயப்பன் தானே தன் கையால் நடத்தினார்.  பக்தர்கள் பரவசத்துடன் இதனை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொன்னம்பல மேட்டில் ஓர் ஒளி தோன்றியது. மறு கணம், ஆலயத்துள்  ஆர்ய கேரள வர்மனைக் காணவில்லை. இத்தனை நாள் தங்களுடன் இருந்த தங்கள் அன்புள்ள, பாசமுள்ள, கருணையுள்ள இளவரசன்  -ஆர்யன் ஐயப்பன்- சாக்ஷாத் அந்த ஐயப்பனே ! என்று உணர்ந்து மெய்மறந்து சரண கோஷம் செய்தார்கள். பந்தளம் ராஜ வம்சம், பூஞ்சார் அரண்மனை, மற்ற பல குடும்பங்கள் இன்றும் இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறார்கள். பல பொருட்களும், இடங்களும், பாடல்களும் இன்னும் கண்முன் இருக்கத்தான் செய்கிறது.

ஐயப்பன் பிரம்மச்சாரியா?! இல்லையா?! அவருக்கு ரெண்டு மனைவிகள் வந்ததெப்படின்னு இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. ஏன்னா.. இப்பவே பதிவு நீண்ண்ண்ண்ண்டு போனது. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
ராஜி.