ஆண்டவா! எனக்கு பொறுமையை கொடு.. பொறுமையை கொடு.. எனக்கு பொறுமையை கொடு.. அட சட்டுன்னு பொறுமையா கொடுய்யான்னு வேண்டிக்கும் கதை மாதிரி பொறுமையில்லாத என்னை போன்றோருக்கு இன்ஸ்டண்டா வரம் கொடுக்கும் கடவுள் எதுன்னு கேட்டா, அது கால பைரவர். உயரமென்றால் பயமெனக்கு. சின்னதா ஒரு ஸ்டூல்லகூட ஏறமாட்டேன். அதுமாதிரி இரவில் மாடிப்படிகட்டில் இறங்க பயம். நட்டநடு நிசியில் பேய், பிசாசுக்கு போட்டியா மொட்டைமாடில குடித்தனம் நடத்தும் ஆளு. ஆனா, இருட்டில் மாடிப்படிக்கட்டில் இறங்க பயம். கடைசி நாலு படிக்கட்டில் பின்கழுத்தில் யாரோ கை வச்சு இழுக்குற மாதிரி ஒரு உணர்வு வரும். அதேமாதிரி, நீச்சல் தெரியலைன்னாலும், ஆழமான இடத்தில் இறங்க பயப்படமாட்டேன். ஆனா, நீருக்கடியில் கண்ணாடி சில்லு இருக்குமோன்னு பயம். இந்த மாதிரி விசித்திரமான பயம் பலருக்கு இருக்கும். அந்த பயம்லாம் தீர வணங்க வேண்டிய கடவுள் கால பைரவர். அதிலும் எம பயம், எதிரி பயம் தீர இவரை வணங்கலாம்ன்னு பெரியவங்க சொல்றாங்க.
கால பைரவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர்ன்னு சொல்றாங்க. ‘பைரவர்’ன்ற. ‘பீருன்ற சொல்லிலிருந்து இருந்து வந்தது ‘பீரு’ன்னா ‘பயம் தரக்கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்’ன்னு பொருள்படும்(பீருன்னதும் அந்த பீரு நினைவுக்கு வந்தா நான் பொறுப்பல்ல! இது சாமி பதிவு. அப்புறம் உம்மாச்சி கண்ணை குத்திடுமாக்கும்). பைரவரின் வாகனம் நாய். அதனால்தான், நாயை பைரவர்ன்னு சொல்லி கூப்பிடுறாங்க. எல்லா சிவன் கோவிலிலும் ஈசானிய மூலையில் தெற்கு நோக்கி அருள் புரிபவர். புண்ணிய பூமியான காசி நகரின் காவல் தெய்வம் இவர்தான். சிவன் கோவிலின் காவல்தெய்வமும் இவரே. முன்னலாம், கருவறையை பூட்டி, பைரவர் சன்னிதானத்தில் சாவியை வச்சிட்டு போவாங்களாம். கால மாற்றத்தில் கடவுளைகூட நம்பமுடியாமல் போனது. அதனால், கோவில் மணியையோ அல்லது ஒரு பித்தளை சொம்பையோ மட்டும் காலபைரவர் சன்னிதியில் ஐதீகம் தெரிஞ்ச மிகச்சிலர் வச்சிட்டு போறாங்க. பெரும்பான்மையான கோவில்களில் அதுகூட கிடையாது :-(
செவ்வரளி பூக்கள்ன்னா இவருக்கு கொள்ளை பிரியம். இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய்களால் தனித்தனி தீபமேற்றி வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பூசணிக்காயில் விளக்கேற்றினாலும் விரும்பியது கிடைக்கும். தேங்காய், எலுமிச்சை, பாகற்காய்ன்னு விதம் விதமா விளக்கேற்றி வழிப்படுவது வழக்கம். வேண்டுதல் பெருசா இருந்தால் கல்யாண பூசணிக்காயில் விளக்கேற்றனும். ஏன்னா, அப்பதான் ரொம்ப நேரம் தீபம் எறிந்து நம்ம வேண்டுதலை சாமிக்கு நினைவுப்படுத்துமாம். தயிர்சாதம், உளுந்து வடை, பாசிப்பருப்பு பாயாசம் நைவேத்தியம்லாம் இவருடைய ஃபேவரிட் அயிட்டங்கள். அஷ்டமி திதி, அதிலும் தேய்பிறை அஷ்டமியில் இவரை வழிபட நல்லது நடக்கும். சுவாதி, ஆயில்யம், மிருகசீரிஷம் நட்சத்திரத்திலும் வழிபடலாம். சனிப்பிரதோஷத்தன்னிக்கு தயிர்சாதம் கொண்டு வழிபட்டால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.
தை மாத முதல் செவ்வாய் தொடங்கி பைரவருக்கு விரதமிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கும் பைரவர் அஷ்டகம் படித்து வர பயமின்றி வாழலாம். காலபைரவர் நிர்வாண கோலத்தோடு, நீல நிறத்தோடும், இரு கோரை பற்கள், பன்னிரு கைகளுடன், நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி, நாய் வாகனத்தின்மீது காட்சி தருபவர். சிவனின் அம்சமென்பதால் மூன்று கண்களுண்டு. காலபைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கிறார். காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் அடக்கம்.
ஆரம்பத்தில் சிவனைப்போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததினால் பிரம்மன் அகங்காரம் கொண்டான்.ஒருமுறை பரபிரம்மன் யாரென கேள்வி எழும்ப, வேறு யார்?! நானேதான் பரபிரம்மன். ஐந்து தலையுடம் உள்ளேன்.ஆக்கல் தொழிலை செய்கிறேன்.அத்தோடு, பரபிரம்மன் என்ற வார்த்தையிலேயே பிரம்மன் இருக்க என்னைதவிர வேறு யார் பரப்பிரம்மன் யார் என ஆணவத்தோடு கூறினான். இதைக்கேட்ட, விஷ்ணு, பரப்பிரம்மன்ன்னா பிறப்பு, இறப்பு இல்லாதவன்னு அர்த்தம். அப்படி பார்த்தால் என் நாபிக்கமலத்திலிருந்து பிறந்தவன் நீ. பிறப்பு இப்படி இருக்க நீ பரபிரம்மனில்லை. பிறப்பு, இறப்பு அற்ற நானே பரபிரம்மன் என விஷ்ணு கூற அங்கே யார் பெரியவன் என வாக்குவாதம் தோன்றியது. இருவருக்கும் பாடம் புகட்டும்படி ஜோதி வடிவெடுத்து அடிமுடி காண சொன்னார் சிவன். விஷ்ணு வராக அவதாரமெடுத்து தன் முயற்சி பலிக்காமல் போக சிவனே பரபிரம்மன் என சரணடைந்தார். ஆனால், தன் முயற்சி தோல்வியுற்றும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தாழம்பூவின் சாட்சியோடு பொய்யுரைக்க சிவன் கோவம் கொண்டார். அவர் கோவத்திலிருந்து பைரவர் தோன்றினார். எந்த நடுசிரசு ஆணவம் கொள்ள செய்ததோ அந்த சிரசை நகக்கண்ணால் கிள்ளி எறிந்தார்.
பைரவரே! நான் செய்த தவறுக்கு தண்டனையாக நீங்கள் என் தலையை கிள்ளி எறிந்தீர்கள். அந்த தலையை இனி என்றும் உங்கள் கைகளில் இருக்கட்டும். உங்கள் கையிலிருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஆணவம் கொண்டு ஆடினால் இதுதான் கதின்னு புரிந்து ஆணவத்தை விட்டொழிக்கட்டுமென பிரம்மன் வேண்ட, அதுப்படியே பிரம்மனும் அருளி, பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்திக்கொண்டார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தேவலோகமே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமானால் உருவானதால் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுபடுபவராக இருக்கார் பைரவர். பிரம்மனின் தலையை கொய்ததால் பைரவரை பிரம்மதோஷம் பீடித்தது. அகிலமெங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அலைந்து திரிந்தார். காசியில் அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்டபின்னே அவர் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து காசியின் காவல் தெய்வமானார் பைரவர்.
பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களால் தன்னை கொல்ல இயலாது என நினைத்த தானாகசூரன் பெண்களால் தனக்கு மரணம் நேரக்கூடாதுன்னு வரம் வாங்கி உலகையே ஆட்டி படைத்து வந்தான். எல்லாரும் சிவன்கிட்ட போய் முறையிட, தனது அம்சமான காளிதேவியை தானாகசூரனை வதம் செய்ய ஆணையிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானாகாசுரனைக் காளி அழித்ததுடன், கோபம் தீராமலே கோபத்தீயுடனே உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்களெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீயைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின் அழிவிலிருந்து காக்கப்பட்டது. குழந்தையாய் அவதரித்து காளியின் கோபத்தைத் தணித்த குழந்தைதான் ஷேத்திரபாலர். இந்த ஷேத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்களில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அவரே பைரவரின் திருவடிவம் என்று இலிங்க புராணம் சொல்லுது.
சிவனிடமிருந்து இருள் என்னும் பெரும் சக்தியை வரம் பெற்ற மமதையில் தேவர்களையெல்லாம் பெண்ணுரு கொண்டு ஏவல் செய்ய பணித்தான் அந்தகாசூரன். மேலும் உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் சொல்லுது. அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்கள் உண்டு. காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில், குரோத பைரவர் - காமாட்சி ஆலயம், உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில், ருரு பைரவர் - அனுமன் காட்டில், கபால பைரவர் - லாட் பஜாரில், சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில், பீஷண பைரவர் - பூத பைரவத்தில், சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கமென தரிசிக்கலாம்.
தட்சனின் மகளாய் அவதரித்த பார்வதிதேவி சிவனுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்காமல் தட்சன் நடத்திய யாகத்தை தடுக்க போய் முடியாமல் அவன் நடத்திய யாகத்தீயில் விழுந்து உயிர்துறந்தாள். அவளின் உடலை கையில் கொண்டு ருத்ர தாண்டவமாடி பித்து பிடித்து போய் உலகை வலம் வந்திருந்தார் சிவன். சிவனின் நிலையை கண்ட விஷ்ணு, தன் கையிலிருந்த சக்ராயுதத்தை வீசி பார்வதிதேவியின் உடலை துண்டாக்கி பூமியில் விழச்செய்தார். அப்படி பார்வதிதேவியின் உடல்பாகங்கள் விழுந்த இடங்கள் 64 சக்தி பீடங்களாய் மாறின. அந்த பீடங்களை தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவர் என 64 பைரவர்களை உருவாக்கி காவல் தெய்வமாகநியமனம் செய்தார்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் , 27 நட்சத்திரங்களும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், பாதத்தில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் சொல்லுது. அதனால், அந்தந்த ராசிக்காரர்கள் அந்தந்த பாகத்தை பார்த்து வணங்குதல் கூடுதல் பலனை தரும்.
அஷ்டமி தினத்தில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டாங்க. ஏன்னா, அன்றைய சுபக்கிரகங்கள், அஷ்டலட்சுமிகள் தங்கள் பலத்தினை புதிப்பித்துக்கொள்ள பைரவரை நோக்கி விரதமிருப்பாங்க. அதனாலாயே சுபக்காரியங்களை அஷ்டமி திதியில் செய்வதில்லை. அன்றைய தினம் இந்த கடவுளை வணங்குவதைவிட அவங்களுக்குலாம் வரம் கொடுக்கும் பைரவரையே நேரடியா வணங்கி பலன் பெறலாமே! அதனால்தான், இடைத்தரகர்கள்லாம் இல்லாம நேரடியா விவசாயிக்கிட்டயே கொள்முதல் செய்யுற மாதிரி...
தேய்பிறை அஷ்டமி திதி, அதிலும் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்கியங்கள் கூடிவரும்.இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியே காலபைரவாஷ்டமின்னு சொல்லப்படுது. அன்றைய தினம், தேங்காயை உடைத்து, குடுமி இருக்கும் பக்கம், அதாவது முக்கண் இருக்கும் தேங்காய்மூடியில் நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய் இதில் எதாவது ஒன்று ஊற்றி, மிளகினை சிறு மூட்டையா கட்டி விளக்கேற்றி, கால பைரவருக்கு சிவப்பு ஆடை சாற்றி, சிவப்பு அரளி அல்லது சிவப்பு தாமரை மலர் மாலை சூட்டி, வெல்லம், பாசிப்பருப்பு பாயாசம் செய்து வடை மாலை அணிவித்து 21 முறை வலம் வந்து வணங்கினால் நினைத்த வரம் கிடைக்கும்.
கால பைரவர் காயத்ரி மந்திரம்...
ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்
காலபைரவர் மூல மந்திரம்..
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பைரவர் சன்னிதியை வலம் வருதலும் சிறப்பு. இந்த வருடத்தைய காலபைரவாஷ்டமி நாளைய தினம்(30/11/2018). யாருக்காவது உடனே எதாவது காரியம் ஆகனும்ன்னா விரதமிருந்து வரம் வாங்கிக்கோங்கப்பா!
நன்றியுடன்,
ராஜி
பைரவர்ல ராசிஎல்லாமும் நட்சட்திரமும் அடங்கிருக்கு என்பது புதுசா இருக்கு...மீ ஜீரோ இப்படியான தகவல்களில்...ராஜி...
ReplyDeleteகீதா
அப்படிதான் சொல்றாங்க கீதாக்கா. நீங்க ஜீரோன்னா நான் மைனஸ் ஜீரோ இந்த விசயத்தில். சாமி கும்பிட போனால் எதுமே தோணாது நிர்மலமான மனசோடு ஒரு ஹார், ஹலோ சொல்லிட்டு வந்திருவேன். என் பார்வைலாம் கோவில் அமைப்பு, தலவரலாறு மேலதான் இருக்கும். இப்ப பதிவு எழுத ஆரம்பிச்சபின் சாமி கும்பிடுறதைவிட படமெடுப்பதில்தான் ஆர்வம் அதிகமாகிட்டுது.
Deleteசிறப்பான தகவல்கள். பைரவ வழிபாடு வடக்கிலும் உண்டு.
ReplyDeleteபைரவர் வழிபாடு நம்மூரில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதுண்ணே. வடநாட்டில்தான் இந்த வழிபாடு அதிகம்.
Deleteஅருமையான பதிவு.பைரவர் அவதார மகிமை கண்டேன்.பைரவரின் அழகிய தோற்றங்களுடன் கார்த்திகை மாத பைரவாஷ்டமி நாளை என்பதை முற்கூட்டியே அறிவித்தமைக்கு நன்றி.////பூசணிக்காயில் தீபம்....இதனைத் தான் இங்கே வெளி நாட்டில் அக்டோபர் மாதத்தில் ஹல்லோவின் என்று கொண்டாடுகிறார்கள் போலும்....என்ன ஒன்று அது பேய்த் திருவிழா என்கிறார்கள்.
ReplyDeleteபடமெல்லாம் கூகுள்ல சுட்டதுண்ணே. ஹல்லோவின் கொண்டாடுவது சாத்தானை பத்தின்னு நினைக்குறேன். இது கடவுளுக்கானதுண்ணே.
Deleteஎங்க ஊர் தாடிக்கொம்பு பைரவர் சன்னதி ரொம்ப பிரசித்தம்...
ReplyDeleteதாடிக்கொம்பு ஊர் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அங்க பைரவர் கோவில் இருப்பது புது தகவல்ண்ணே. எங்க ஊர் பக்கத்துலயே ஒரு பைரவர் கோவில் இருக்குறதா பேப்பர்ல படிச்சேன். வாய்ப்பு கிடைச்சா போய் வரவேண்டியதுதான். என் சின்ன பொண்ணு காலேஜுக்கு பக்கத்துலதான் அக்கோவில் இருக்கு.
Delete