Friday, February 14, 2020

ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.

பாண்டிச்சேரி சித்தர்கள் தொடரில் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மற்றும் ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள் பற்றி பார்த்தோம். சரி அடுத்து எங்க போலாம்ன்னு யோசனையா இருந்தப்ப லேசா கண் அசந்துட்டேன். திடீர்ன்னு முழிச்சு பார்க்கிறேன். என்கூட வந்த அப்பா,அம்மா.அப்பு,பெரியவள், சின்னவள்ன்னு யாரையும் காணோம்.  எங்கே போய்ட்டாங்கன்னு மெதுவா சுத்திலும் தேடுறேன். அங்க ஒரு இடத்தில கூட்டமா இருந்துச்சா?! சரி அங்க இருப்பாங்களோன்னு நினைச்சு அந்த இடத்தை நோக்கி நடந்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஆட்களும்,ஆடைகளும் வித்தியாசமாக இருந்தன. ஷாம்பு காணாத சிகைக்காய் வாசனையுடனான தலைகள், பருத்தியிலான ஆடைகள், மொபைல், கார், பைக்ன்னு எதும் இல்ல. முக்கியமா எல்லா மனிதர்களும் எளிமையா இருந்தது என அந்த இடமே வித்தியாசமா  இருந்தது.
அந்த  கூட்டத்துல ஒருவர் ஓலைச்சுவடியிலான பஞ்சாங்கத்தை வச்சு படிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப, அவரிடம் இன்னைக்கு தேதி என்ன?! ஏன் இவ்வளவு பேர் கூடி இருக்கிறாங்க அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவர், இன்று வைகாசி மாசம் 15ம் தேதி 1837ம் ஆண்டு என பதில் சொன்னார். ஏன் இவ்வளவு கூட்டம் என மீண்டும் அவரிடம் கேட்டேன். என்னமா உனக்கு விஷயமே தெரியாதா?! இன்று காலைல இருந்தே நாங்கள் இங்க காத்திருக்கோம். நீயும் இங்க என்ன நடக்குதுன்னு பாருன்னு சொல்ல, அவங்களோடு நானும்  காத்திருக்க ஆரம்பித்தேன்.  

மொத்த மக்களும் காத்திருந்தது ஒரு சித்தர் ஜீவசமாதி அடையும் வைபவத்துக்காக.. ஆறடிக்கு மூன்றடியிலான ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. அருகில் இளநீர், பால், தயிர், எண்ணெய், அரப்புப்பொடி, பூ என ஒரு அபிஷேகத்துக்கான  அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு காத்திருந்தனர்.  சிறிது நேரத்தில் ஒரு சாமியார் அங்கு வந்தார். யார் அவர்ன்னு அருகிலிருந்த ஒரு பெரியவர்கிட்ட கேட்டேன். அவர்தான் சுவாமி சித்தானந்தர், சுவாமி அவர்கள், எங்களுக்கெல்லாம், வெகுநாட்களுக்கு முன்பே எங்களிடம் .வைகாசி மாசம் 15ம் தேதி, நான் பரம்பொருளை சென்றடைந்து விடுவேன். நீங்கள் எல்லோரும் பரம்பொருள் கொடுத்த இந்த பூத உடலுக்கு எல்லாவித அபிஷேகங்களும் செய்து நான் ஜீவ சமாதியாகும் குழிக்குள் வைத்து மூடிவிடுங்கள் என்று சொன்னார். இன்றுதான் அந்த தினம்அதனால்தான் நாங்கள் எல்லோரும் இன்று காலைலையில் இருந்து  இங்கு ஒன்றுக்கூடி இருக்கிறோம் என சொன்னார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே,  அந்த சித்தருக்கு எல்லாவிதமான அபிஷேகங்களையும் செய்து முடித்து சுவாமிகள் ஜீவ சம்தியாகும் இடத்திற்கு சென்று அவரை அந்த குழிக்குள் இறக்கி சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பலகைகளால் மூடினார்கள். எல்லாவித சடங்குகளும் வழிபாடுகளையும் முடித்தவுடன் கூடி நின்ற மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க நிற்கின்றனர். அப்பொழுது ஒருவர் கூட்டத்தில் சத்தமாக பேசினார். யாரும் கவலைப்படாதீங்க!! சுவாமிகள் ஜீவ சமாதி ஆனாலும்கூட, என்னை நாடிவரும் மக்களின் குறைகளை அந்த  இறைவனின் அருளால் தீர்த்து வைப்பேன் என அவர் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னர் நமக்குலாம் வாக்கு கொடுத்திருக்கிறார்அதனால இனி நாம் அவருக்காக அழக்கூடாது. அவருக்கு நாம இங்க ஒரு ஜீவ சமாதி கோவில் எழுப்பி வழிபடுவோம் என்றார்அதைக்கேட்டதும் கூட்டத்தினர் இருகைகளையும் கூப்பி சுவாமி சித்தானந்தர் வாழ்க! என பக்தியுடன் கோஷம் எழுப்பினர். நானும் சுவாமி சித்தானந்தர் வாழ்க என்று சொல்லும்போது, மை டாடியின் குரல் கேட்டது...ஏய்!! கழுதை!! எப்பயும்போல இங்க வந்தும் பகல்லயே தூங்குறியா?! வண்டியிலிருந்து இறங்கு. அடுத்த சித்தர் ஜீவ சமாதி வந்துடுச்சின்னு ஆசையா!! சொன்னார். நானும் காரில் இருந்து இறங்கி பார்த்து ஆச்சர்யபட்டுட்டேன். நான் நின்று கொண்டிருந்தது காருவடிக்குப்பத்தில் இருக்கும் சுவாமி சித்தானந்தரின் ஜீவ சமாதி கோவிலின் முன்பு....
பயபக்தியுடன் அவரது சந்நிதி படிகளை தொட்டுவணங்கி,  ஜீவசமாதி கோவிலுக்குள் நுழைந்தோம். இனி யார் இந்த சித்தானந்த சுவாமிகள்ன்னு தெரிஞ்சுக்கலாம். 18 -ம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிற வண்டிப்பாளையம் என்னும் ஊர்லதான் நம்ம சித்தானந்த சுவாமி பிறந்திருக்கிறார். அவரது இயற்பெயர் சித்தானந்தன். பிறக்கும்போதே இறையருளுடன் பிறந்ததால் வர் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தது. அவரின் வீட்டை பிள்ளையார் வீடு ன்னே சொல்வாஞ்களாம்.சிறு வயது முதற்கொண்டே இவர், திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாடலீஸ்வரரை-வழிபட்டு வந்தாராம். இந்த ஆலயத்திற்கு இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால், ஆலயத்திற்கு மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன் சித்தானந்தன் செய்து வந்தார். அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார். அப்ப தினமும் தாயார் கட்டிக்கொடுக்கும் மாலையினை எடுத்துக்கொண்டு சிறுவன் சித்தானந்தன் பாடலீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள்,  திடீர்ன்னு மழைபெய்து தெருலாம் வெள்ளக்காடா மாறிடுச்சாம். சிறுவனும் பூவை எடுத்து கோவிலுக்கு சென்று கொடுப்பதற்கு நேரமாகிடுச்சு. அப்ப கோவில் பூசாரி பூஜையை முடிச்சுட்டு கோவிலை பூட்டிட்டு போய்ட்டார். சிறுவன் சித்தானந்தனுக்கு என்ன செய்வது என தெரியலியாம். உடனே மனம் தளராது, இறைவா! நான் உனக்கு மாலை எடுத்துட்டு சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனா, வழியெங்கும் வெள்ளக்காடு. நான் அதை தாண்டி வருவதற்குள் நேரமாகிடுச்சுஇதுல என் தவறு ஏதுமில்லை. உனக்கு தெரியாதது ஏதுமில்லை அதனால இந்த மாலையை நீயே வந்து எடுத்துக்கோ என சொல்லிட்டு பூட்டியிருந்த கோவில் கதவில் தொங்கவிட்டுட்டு போய்விட்டான் சிறுவனான சித்தானந்தன். 

காலையில் கோவில் பூசாரி, சிறுவன் சித்தானந்தனை கூப்பிட்டு ஏன் நேற்று இறைவனுக்கு மாலை கொண்டுவரலை எனக் கேட்டார். ஐயா!  நேற்று மழை பலமா பெய்து, வழியெல்லாம் வெள்ளக்காடு. நான்  மழைக்கு ஒதுங்கி ஒதுங்கி வருவதற்குள் நீங்க கோவில் கதவை பூட்டிட்டு போய்ட்டிங்கநானும், இறைவனுக்காக தொடுத்த மாலை வீணாகிட கூடாதுன்னு கோவில் கதவில் மாட்டிட்டு இறைவனிடம் சொல்லிட்டு வந்திட்டேன். நேற்றே அதை இறைவன் எடுத்திருப்பாரே என சிறுவன் சித்தானந்தான் பதில் சொன்னான். அதை கேட்ட பூசாரிஇவன் நேற்று வராம இருந்ததற்கு ஏதோ கதை சொல்கிறான் என எண்ணியபடியே, சிறுவனை அழைத்துக்கொண்டு  சிரித்தவாறே கோவில் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு, இறைவனது கழுத்தில் முதல்நாளிரவு கதவில் தொங்கவிட்டு சென்ற பூமாலை  வாடாமல் கிடந்தது. சிறுவன் சித்தானந்தனிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை பூசாரி உணர்ந்து, சிறுவனது காலில் விழுந்து வணங்கினார். பூசாரியின்மூலம் சிறுவனது புகழ் அக்கம்பக்கம் பரவ ஆரம்பித்தது.  அவர் வளர்ந்து வரவர இத்தலத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு. அனுதினமும் அவரையே  வழிபட்டு வந்தார் எவரொருவர் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு அவனே கதி” என அவன் பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ,  அவரிடமே இறைவன் நிரந்தரமாய் தங்கி இருப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும் என்பதை உணர்ந்த சித்தானந்தர். அதை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுவார்.

தீராத தவத்தினால் ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள் கிடைத்தது கடும் தவப்பயனினால் .அஷ்டமாசித்திகளையும் பெற்றார். அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின் அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.  காலங்கள் ஓடின, இதனிடையே பாண்டிச்சேரியில் முத்துக்குமாரமிப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார். அவருடைய மனைவி பெயர் கண்ணம்மாள். இவங்க பாண்டிச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டையில வசித்து வந்தாங்கமுத்துக்குமாரசாமிப்பிள்ளையின் மனைவியான கண்ணம்மாள் கடுமையான வயித்துவலியினால அவதிப்பட்டு வந்தாங்க. அவங்க, பார்க்காத வைத்தியம் இல்ல. போகாத கோவிலும் இல்ல.  ஆனா வயித்துவலி மட்டும் குணமாகலை.அந்த சமயத்துலதான் மிகுந்த துயரத்தில் வாடிய அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரு பெரியவர் ஒருவர், அந்த தம்பதிகளிடம், கடலூரிலுள்ள ஸ்ரீசித்தானந்த சுவாமிகளின் அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று அவரை  பார்க்க சொன்னார்.  அடியார்க்கு  தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும் முத்துக்குமாரசாமிப்பிள்ளையும் உடனே கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு தன் தம்பியையும் கூட்டிட்டு  கோவிலுக்கு சென்று, சித்தானந்த சுவாமிகளுக்காக அவருக்காக கோவிலில் காத்திருந்தனர். அங்கு அவருக்கு முன்னே ஒரு  15 பேர் சித்தானந்தரின் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அந்த சமயத்தில்தான் சித்தானந்தர் தலையை சாய்த்து முத்துக்குமாரசாமிப்பிள்ளையை பார்த்து, வாங்க! பாண்டிச்சேரியிலிருந்து வந்த யாத்திரை சௌகரியமா இருந்துச்சா எனக்கேட்டார். முத்துகுமாரசாமிப்பிள்ளைக்கோ ஆச்சர்யம் தாளலை. நாம முன்னபின்ன அவரை பார்த்ததுகூட கிடையாது.  அப்புறம் எப்படி நம்மை சரியாக அடையாளங்கொண்டு, பேரோடும், ஊரோடும் சொல்கின்றாரே என திகைத்தார். பிறகு, சுதாரித்துக்கொண்டு,  தன்னுடைய மனைவி கண்ணம்மாளின் தீராத வயிற்றுவலியை பற்றி சொல்கிறார். உடனே,சித்தானந்தர் அவருடன் பாண்டிச்சேரிக்கு செல்கிறார்.
சித்தானந்தர் பாண்டிச்சேரியை நெருங்க நெருங்க முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் துணைவியாரின் தீராத வயிற்றுவலி மெதுவாக  குணமடைந்துக்கொண்டே வந்து, சிறிது நாளில் முழுவதுமாக குணமடைந்தது.  இந்த அதிசயம் மீண்டும் பாண்டிச்சேரி முழுவதும் பரவ ஆரம்பித்தது. சித்தானந்தரின் திருவருளை உணர்ந்துஅவரை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி தம்பதியினர் வேண்டிக்கொண்டனர். அதன் பிறகு சித்தானந்தர் அங்கேயே தங்கி, தம் ஆன்ம ஞானத்தை மேற்கொண்டார். சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்றும், நோய்களை குணமாக்கியும் கஷ்டங்களுக்கு தீர்வும் பெற்று சென்றனர். ஒருநாள்  முத்துக்குமார சாமிப்பிள்ளை கருவடிக்குப்பத்தில் உள்ள தன்னுடைய தோப்பிற்கு சித்தானந்தரை அழைத்து சென்றார். அப்பொழுது ஒரு இடத்தை சுட்டிக்காட்டி சித்தானந்தர் “இது இங்கதான் இருக்கப்போகிறது- இது இங்கதான் இருக்கப்போகிறது” என தம் உடலையும், அந்த இடத்தையும் மூன்று முறை தம் விரலால் சுட்டி காண்பித்தார்.

முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய்யா முதலியார், சொக்கலிங்க முதலியார் போன்றோர் சுவாமிகள்மேல் தீராத பக்தியுடன் பூஜித்து வந்தனர். சித்தானந்தரும் அவர்தம் இல்லங்களுக்கு சென்று ஆசி வழங்குவார். ஒருமுறை முத்தைய முதலியாரின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக்கண்டு பொறுக்கமாட்டாமல், முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார். சுவாமிகளிடம் முறையிடும் முன்பே, முதலியாரின் உணர்வை புரிந்துக்கொண்ட சுவாமிகள், ”கவலைப்படாத! உனக்கு ஆனந்தம் தரும் ஆனந்தன் பிறந்து விட்டான். நீ வீட்டுக்கு உடனே சென்று பார்” என ஆசிர்வதித்து அனுப்பினார். சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனந்தக்கண்ணீர் மல்கினார். சுவாமிகளின் ஞானவாக்கு அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின் திருவாக்குப்படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக்கண்ணால் காணும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார்.
 ஒருநாள் சித்தானந்தர் குயவர்பாளையத்தை சேர்ந்த ஒரு பக்தரை சந்தித்துவிட்டு திரும்பிவரும் வழியில் ஒரு சாராயக்கடை இருந்தது அதில் ஒரு குடிகாரன் குடித்துக்கொண்டு இருந்தான். சித்தானந்தரை கண்டதும் எழுந்து என்ன சாமீ!! ஆன்மிகம் எல்லாம் பேசுறீங்களாமே கொஞ்சம் சாராயம் குடிச்சுப்பாருங்க.. ஆன்மீகம் இன்னும் சரளமா வரும் என கிண்டல் செய்து வழிமறித்தான். சித்தானந்தர் அவனை தவிர்த்துவிட்டு தன்வழியே சென்றார். ஆனாலும், அந்த குடிகாரன் மறுபடியும் மறுபடியும் அவரை வழிமறித்து சித்தானந்தரை குடிக்க வற்புறுத்தினான். கெடுதலை தனக்குத்தானே வரவழைத்துக்கொள்பவனை என்ன செய்யமுடியும்?! சித்தானந்தரோ சரி சாராயம் கொடுன்னு வாங்கி சிரித்துக்கொண்டே குடிக்க ஆரம்பித்தார். திரும்ப திரும்ப குடித்துக்கொண்டே இருந்தார். ஒரு பீப்பாய் சாராயம் காலியாகிடுச்சுகடைக்காரனோ வெவெலத்து போய்சாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். சித்தானந்தர் சாராயம் குடிக்க குடிக்க ,அந்த சாராயத்து போதைலாம், வம்புக்கிழுத்த குடிகாரனின் உடலில் ஏறி குடிகாரனின் நாடித்துடிப்பு மெல்லமெல்ல குறைய ஆரம்பித்தது. தன்னிடம் வம்பு செய்த குடிகாரனை ஒருபார்வை பார்த்துவிட்டு முத்துக்குமாரசாமிப்பிள்ளை வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார். இவற்றையெல்லாம் பார்த்து பயந்துபோன கடைக்காரன்குடிகாரனின் வீட்டுக்கு போய் தகவல் சொன்னான். அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் குடிகாரனின் நிலைமை மோசமானது. வைத்தியரிடம் செல்லலாம் என்று சொன்ன குடிகாரனின் உறவினர்களை தடுத்த குடிகாரனின் மனைவி ஈவனை தூக்கிக்கொண்டு சுவாமிகளிடம் செல்லுங்கள் எனக்கூறி குடிகாரனை தூக்கிக்கொண்டு ஓடினர். சுவாமிகளின் காலில் குடிகாரனை கிடத்தி தனக்கு மாங்கல்ய பிச்சை தருமாறு வேண்டினாள் குடிகாரனின் மனைவி. அவளின் அழுகைக்கு மனமிரங்கிய சித்தானந்தர் அவனை மன்னித்துஇனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன் என எனக்கு சத்தியம் செய் எனக்கேட்டு வாங்கி அவனை திருத்தி  அனுப்பிவைத்தார்.
சித்தானந்தர் சிலமாதங்கள் சாப்பிடாமல்கூட இருப்பாராம். சிலசமயம் பசிவந்தால் கல்லைக்கூட கடித்து சாப்பிடுவாராம். சித்தானந்தர் எதை சாப்பிடுகிறார், எப்ப சாப்பிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது. முத்தையா முதலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அது அம்மிக்கல் போல சற்று சமதளமாக இருக்கும் கல், அதை கழுவி அதில் சாப்பாடு போடச்சொல்வார். உளுந்துவடை, சுண்டல் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார். சித்தானந்தர் சாப்பிட பயன்படுத்திய அந்த கல்லுக்கு தனி விஷேசம் இருந்தது.  பிரசவ காலத்தில் அந்தக்கல்லில் உட்கார்ந்து சென்ற தாய்மார்களுக்கு பிரசவவலி இல்லாமல் இருந்ததாம். சித்தானந்தரின்மேல் ஒரு குயவனுக்கு தீராத பக்தி இருந்தது. அவன் சுவாமிகள் உபதேசம் செய்யும் இடமெல்லாம் தவறாது வந்து கேட்பான். அவன் சுவாமிகளை தன்வீட்டுக்கு சாப்பிட அழைத்தான். அவன் சித்தானந்தர் உபதேசம் செய்யும்போது இருக்கும் நிலையை மனதில் கொண்டு அதேபோல் அழகாக மண்ணில் ஒரு சிலை செய்தான். சுவாமிகளும் ஒருநாள் தான் வருவதாக ஒப்புக்கொண்டார். அந்த நாளும் வந்தது குயவன் வீட்டில் நல்ல விருந்து உண்டார். சுவாமிகள் அவ்வளவு உணவு உண்டதை அன்றுதான் பக்தர்கள் பார்த்தனர். உணவு உண்டு முடித்தபின் குயவன் தான் செய்த மண்ணால் ஆன சுவாமிகளின் திருஉருவ சிலையை கொடுத்தான். அதை ஆவலோடு திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார் சித்தானந்தர். தன் உடலைப்பார்த்து இது தோல் போர்த்தப்பட்ட கூடு . கையிலிருந்த குயவன் கொடுத்த சிலையை பார்த்து ,இது மண்ணினால் ஆன கூடு எனக்கூறி நான் விரைவில் இந்த சிலைக்கு மாறிவிடுவேன் என்றார். 
ஆண்டுகள் பல கடந்தன. சித்தானந்தரின் ஆத்மீக சாதனை முடியும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் ஸ்ரீபாடலீஸ்வரரின் அழைப்புக்காக காத்திருந்தார். திடீரென்று ஒருநாள் முத்துக்குமாரசாமிப்பிள்ளையை அழைத்து “விளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது- இதை எல்லோரும் அறியும்படி செய் “ என்றார். இந்நிகழ்ச்சி சித்தானந்தர் சமாதி அடைய பத்து நாட்களுக்கு முன் நடந்தது. நாட்கள் நகர்ந்தன. தாம் உபயோகித்த பாத குறடையும், கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார். அன்றைய தினம் பத்தாம் நாள். சித்தானந்தருக்கு அபிஷேகம், ஆராதனை  நடந்து, கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெகஜ்ஜோதியாக உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சித்தானந்தர் சிவபழமாகவே காட்சியளித்தார். மக்கள் அவரை கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார். அவரது பிராணன் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள் சிலர் சித்தானந்தரின் சூக்கும சரீரத்தை தரிசித்தார்கள். தங்களையே மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில் முத்துகுமாரசாமிப்பிள்ளை தோட்டத்தில் சித்தானந்தர்  சுட்டிக்காட்டிய இடத்தில் ஜீவசமாதி கட்டப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும், பக்தர்கள் மன அமைதி வேண்டியும் இங்கு வருகின்றனர். நியாயமான வேண்டுகோள்கள் யாவும் நிறைவேறுவதை இங்கு வரும் பக்தர்கள் கண்கூடாக காண்கிறார்கள்.
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலகட்டமாக 1908ல் இருந்து 1918 வரை இந்த சித்தனத்தாரின் ஜீவசமாதிக்கு வர தவறுவதில்லையாம். அவருடைய நிறைய இலக்கியங்கள் இந்த கோவிலில் இருந்துதான் படைச்சாராம்.  காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் என்ற பாடலை இந்த இடத்தில இருந்துதான் பாரதியார் எழுதினாராம்!! இங்கிருக்கும்  குளத்தை பாரதியார் ஞானக்கேணி எனக் குறிப்பிடுகிறார். பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, மணக்குளவிநாயகர் துதி, தேசமுத்துமாரியம்மா, இப்படி நிறைய இலக்கண படைப்புகளை இந்த இடத்திலிருந்துதான் எழுதினார் என சொல்லப்படுகிறது.   இந்த கோவில்ல அவருடைய கால்தடம் பதியாத  இடமே இல்லைன்னு சொல்லலாம். அதனாலதான் அவருடைய நினைவாக இங்க கோவில் வளாகத்திலையே பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கு.
இந்த கோவிலில் இருக்கும் சித்தானந்தரின் உருவம் கோவிலின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் மிகப்பழமையான மணியில் பொறிக்கப்பட்டு இருக்கும் சித்தானந்தரின் உருவ மாதிரியை வச்சுதான் இப்ப இருக்கிற படம் வரைஞ்சிருக்கிறாங்க. அவர் ஜீவன் முக்தியடைஞ்ச நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குருபூஜை தினமாக சிறப்பாக கொண்டாடுறாங்க, அவர் ஜீவ சம்மதியடைஞ்சு 180 வருஷம் பூர்த்தியடைஞ்சாச்சு. இங்க இருக்கும் தியானமண்டபத்தில் இருந்து தியானம் பண்ணினா நல்ல மனநிம்மதி கிடைப்பதாக இங்க வந்து தியானம் செய்பவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறாங்க. இங்கு சித்தானந்தரின் சமாதிக்கு வலது பக்கத்தில் முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் சமாதியும் (இப்பொழுது இருக்கும் விநாயகர் சந்நிதி),அவருடைய மனைவி கண்ணம்மாளின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு பின்புறத்திலும், முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் தம்பி சோமசுந்தரத்தின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு இடப்புறத்திலும் சித்தானந்தரின் விருப்பப்படி வைக்கப்பட்டது. 
இந்த ஜீவ சமாதிக்கோவில் தினமும் காலை 7 :30க்கு காலசாந்தி, 10:30 மணிக்கு காலைபூஜை,  11 மணிக்கு உச்சிகால பூஜை மாலை 7:30 மணிக்கு தேசசாந்தி,  9 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷகமும், சிவராத்திரி திருவிழாவும்  வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாசம் அன்னாபிஷேகமும் அன்று அன்னதானமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை நீக்க நாகப்பிரதிஷ்டை வைக்கும் வழிபடும் இங்கு  சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு எப்படி செல்வதுன்னா, பாண்டிச்சேரியில் உள்ள ECR  ரோடுல இருக்கிற சிவாஜி சிலைக்கு பக்கத்தில தெற்கு நோக்கிய ராஜகோபுரம் இருக்கும். அதுதான் சித்தானந்தர் ஜீவசமாதி கோவில்.

மீண்டும் வேறு ஒரு ஜீவ சமாதி கோவிலில் இருந்து உங்களை சந்திக்கிறேன்,








நன்றியுடன் 
ராஜி  

7 comments:

  1. இது போல் விரிவாக விளக்கம் கொடுக்க, உங்களை மிஞ்ச முடியுமா...?

    ReplyDelete
  2. சித்தர் பதிவு
    அத்தர் போல மணக்கிறது

    ReplyDelete
  3. எத்தனை தகவல்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. அருமை. அலுப்புத் தட்டமல் வாசிக்க வைக்கும் கலையை நன்றாக பிரயோகித்திருக்கிறீர்கள். சிறப்பு.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
  5. அறிந்தேன், பணிந்தேன்.

    ReplyDelete
  6. சித்தானந்தர் சுவாமிகள் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  7. சித்தரின் வரலாரை கேட்கும் போழுது மெய் சிலிர்க்க செய்கிறது.... ஓம் நமசிவாய...🙏🙏

    ReplyDelete