பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இரண்டு வாரமாக தொள்ளைக்காது சித்தர், ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தினை பார்த்தோம். அந்தவரிசையில் இன்று நாம பார்க்கபோறது புதுவை ஆதீன சிதம்பரம் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம். புதுச்சேரியில் உள்ள செட்டிக்கோவிலின் பின்புறம் உள்ள அம்பலத்தார் மடத்து வீதியில் அமைந்து இருக்கிறது ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி. இவர் திருவாசகத்தை மிகவும் நேசித்து அதை மக்களிடம் கொண்டு சேர்பித்தவர். திருவாசகம் உள்ளிட்ட பல ஆன்மீக கருத்துக்களை எடுத்துச்சொல்லி எல்லாருடைய மனதையும் உருக செய்வார். இவருடைய அற்புதச்செயலை பார்த்து பிரெஞ்சு அரசு இந்த தெருவிற்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்து வீதி எனப்பெயர் சூட்டி கௌரவித்தது.
இவருக்கு திருவாசகத்தின்மீதான ஆர்வம் எப்படி வந்தது என செவிவழி கதையாக சொல்லப்படுவது என்னன்னா, இறைவனால் எழுதபட்டதாக சொல்லப்படும் திருவாசகத்தில் இந்நூலில் இறைவனை எப்படி அடைவது, இறைவனின் பெருமைகள், அண்டகோளங்களின் விந்தைகள், இரகசியங்கள் .இயக்கங்கள், அவைகளை இயக்கும் மூலப்பொருட்கள், சூட்சுமநிலைகள் எல்லாவற்றையும் பற்றி விவரிக்கப்பட்டிருக்கு. இறைவனை தேடுபவர்களுக்கு இறைவனை அடைய இன்றளவும் இருப்பது திருவாசகம். இந்த திருவாசகத்தின் பெருமையை அருளுணர்வால் உணர்ந்து இறைவனை அடைந்தார் இராமலிங்க சுவாமிகள். வள்ளலாரைப் போலவே, பல சித்தர்கள் திருவாசகத்தின் வழியே சென்று, இறைவனை அடைவதில் வெற்றி கண்டிருக்காங்க.
முன்னொரு சமயம், கனக சபையிலிருக்கும் இந்நூலை யாரிடம் ஒப்புவிப்பது என்ற பிரச்சனை எழுந்தபோது. ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்ததாம். "இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள். கங்கையை சுற்றியிருக்கும் யாரிடம் கொண்டுபோய் சேருகின்றதோ -அவரிடம் இருக்கட்டும்” என்று அசரீரி சொன்னது. உடனே அந்நூல் சிவகங்கையில் விடப்பட்டது. கங்கையில் குளித்துக்கொண்டிருந்த சித்தரும் சிறந்த சிவபக்தருமாகிய ஒரு பெரியவரிடம் அந்நூல் வந்து நின்றது. அவர் அந்நூலை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக்கொண்டே இந்த மடத்திற்கு வந்தார். அன்று முதல் அவ்விடத்திற்கு ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடையார் மடம் என்று வழங்கலாயிற்று. அந்த பெரியவர்க்குபின் ஒருவர்பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்து வந்தனர்.
இச்சமயம், கர்நாடகா நவாப்கள் தமிழகம்மீது போர் தொடுத்தனர். அப்போரின்போது ஏராளமான கோவில்களும், மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் பரவியது. அப்பொழுது, அம்பலத்தாடையார் மடத்து பத்தாவது பட்டத்தை ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் வகித்து வந்தார். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்ட ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் அதிர்ந்து, கண் கலங்கினார். இறைவனால் கையொப்பம் இடப்பட்ட அத்தெய்வத் திருநூலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என பயந்தார்.ஊண், உறக்கம் என எல்லவரையும் மறந்தார் .அந்த சிவப்பரம்பொருளிடம் அனுதினமும் அழுது முறையிட்டு கொண்டிருந்தார். உடல், உயிர் எல்லாமே அந்த சிவபரம்பொருளை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார் நாட்கள் பல சென்றன. யுத்தம் கடுமையாக நடந்தது. எங்கு பார்த்தாலும் அழிவுச்செய்திகளே வந்துகொண்டிருந்தன. சுவாமிகள் இதைப்பார்த்து சிவபரம்பொருளை நோக்கி கடுமையான தியானம் இருந்தார். உலக அமைதிக்காக தன்னிலை மறந்தார் . ஓம் நமச்சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தினை தவிர அவரது உதடுகள் வேறு எதையும் உச்சரிக்கவில்லை. அவரது சிந்தை முழுக்க திருவாசகத்தை காக்கவேண்டும் என்று மட்டுமே இருந்தது . அந்த குறிக்கோளை நோக்கி கடுந்தவம் இருந்தார்.
தடுத்தாட்கொள்பவன் இறைவன் அல்லவா?! அடியவர்களின் துயர் கண்டு பொறுமையாகவா இருப்பான்?! இனியும் தனது பக்தனை கலங்கவிடவேண்டாம் என எண்ணி, ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் நெற்றிப்பொட்டில் ஜீவஒளியை பாய்ச்சி, திருவாசகத்தினை பாதுகாக்கும் இடத்தினை சுட்டிக்காட்டினார். இந்த தரிசனத்தைக்கண்ட ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் ஆனந்தம் கொண்டார். ஆனந்த கூத்தாடினார். இறைவன் சுட்டிக்காட்டிய இடம் ஞானபூமியான பாண்டிச்சேரி என்று கண்டு மகிழ்ந்தார். ஆத்மசாதனைக்கு மிகவும் உகந்த இடமானதும், சித்தர்களையும், ஞானிகளையும் தன்பால் கவர்ந்திழுக்கும் புண்ணிய பூமியாம் பாண்டிச்சேரிதான் ,” திருவாசகத்தை” பாதுகாக்க சரியான இடம் என்ற இறைவனின் கருணையை கண்டு ஆனந்தமடைந்தார்.
உடனே, திருவாசகம் இருந்த வெள்ளிப்பெட்டகத்தை அழகான பட்டுத்துணியில் மூடி, அந்த மூட்டையினை தலையிலே சுமந்துக்கொண்டு, தனது மடத்தில் இருந்த இருவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, மடத்தைவிட்டு வெளியேவரும் வேளையில் கடுமையான புயலும் அதை தொடர்ந்து மழையாக பொழிந்ததாம், அவற்றையெல்லாம் எதிர்க்கொண்டு கடலூர் வழியாக பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். பாண்டிச்சேரியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு சின்ன குடிசை அமைத்து திருவாசகம் இருந்த வெள்ளிப்பெட்டகத்தை வைத்து சிவப்பரம்பொருளுக்கு அனுதினமும் பூஜைகள் செய்துகொண்டு வந்தார். அங்கு ஆழ்ந்த சிவத்தியானத்தில் எப்பொழுதும் இருந்ததால், ஸ்ரீநாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. சக்திகள் சித்துக்களாக மாறியது. பலரும் சுவாமிகளிடம் வந்து தங்களது குறைகளை சொல்ல, அவைகளை உடனே ஸ்ரீநாகலிங்க சுவாமிகள் தீர்த்து வைத்துக்கொண்டு இருந்தார். நாட்கள் செல்லச்செல்ல, சுவாமிகளின் பெருமை எல்லோருக்கும் தெரிந்தது. தூரத்திலிருந்தும் பக்தர்கள் அவரை தேடி வந்தவண்ணம் இருந்தனர் .
இப்படியே பல ஆண்டுகள் சென்றன. சுவாமிகள் இந்த பக்தர்கள் கூட்டம், புகழ்வெளிச்சம் இதிலெல்லாமிருந்து விடுபட்டு இறைவனுடன் கலக்கும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிவபூஜை செய்துகொண்டிருக்கும்போது, தனது அருகில் இருந்த பட்டத்து தம்பிரான் ஸ்ரீநாகலிங்க சுவாமிகளின் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவித்தார். அதைக்கேட்டு ஆனந்தப்பட்ட சுவாமிகள், தனது சீடன் பக்குவநிலைக்கு வந்துவிட்டான் என்பதை உணர்ந்துகொண்டார். அந்த நிமிடமே தனது 10வது பட்டத்தை 11வது பட்டமாக தனது சீடனுக்கு அளித்து மடத்தின் பீடத்தில் அமர்த்தினார். அன்றிரவே சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நேரத்தை இறைவனின் திருக்குறிப்பினால் உணர்ந்துகொண்டார் . இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலையே சுவாமிகள் காணப்பட்டார். சுவாமிகள் எதுவும் பேசாமல் மௌனத்தையே கடைப்பிடித்தார். சைகையினால் தம்முடைய சீடர்களிடம் அவர்கள் செய்யவேண்டிய முறைகளையும், கடமைகளையும் பற்றி மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் வந்தது. சுவாமிகள் சிவத்தினுள் ஐக்கியமாகும் நேரமும் வந்தது. எல்லோரும் சுவாமிகளை வணங்கி நின்றனர் சுவாமிகள் இந்த உலகவாழ்வை விட்டு சிவத்தினுள் ஆட்கொள்ளப்பட்டு ஜீவன் முக்தியடைந்தார்.
உலகம் உய்ய இறைவன் அருளிய திருவாசகத்தைப் போற்றி
பாதுகாத்து, புதுவைக்கு கொண்டு வந்த பெருமை ஸ்ரீ நாகலிங்க
சுவாமிகளையே சாரும்.சுவாமிகள் தங்கியிருந்த இடத்தினுள்ளே அவரின் ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இந்த தெய்வீக இடத்தை அம்பலத்தார் மடம் என்றே அழைக்கப்பட்டது.இம்மடம் அமைந்துள்ளதால் அத்தெருவிற்கு அம்பலத்தார்மடத்து வீதி என்று பிரஞ்சு அரசு பெயர் சூட்டியது .
ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.இவரது குரு பூஜை ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் 7 -ம் நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன் .
நன்றியுடன்ராஜி.
சிறப்பான தகவல்கள்... பல சிறப்பான சித்த புருஷர்கள் இருந்த தமிழகம்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிண்ணே,சித்தர்கள் பயணம் தொடர்ந்துவரும்....
Deleteஅறியாத தகவல்கள். அரிய தகவல்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிண்ணே,பாண்டிச்சேரியில் நிறைய சித்தர் சமாதிகள் உள்ளன.நாம் சிலவற்றை தான் தரிசிக்க முடிகிறது.இன்னும் நிறைய ஜீவசமாதிகளை தேடிப்பிடித்து பதிவிட வேண்டும் என்பதே என் ஆசை ...
Deleteஐயா பாண்டிச்சேரி வர ஆசைப்படுகிறேன் மடத்திற்கு போன் நம்பர் தெரிவிக்கவும்
ReplyDelete0413221579
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி...ஓம் நமசிவாய
ReplyDelete