Friday, December 18, 2020

உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி

போன வருசம் மகளை கல்லூரியில் சேர்த்து, அவளை ஹாஸ்டலிலும் விட்டுட்டு மகளை பிரிஞ்ச துக்கத்தில்!!  அருகிலிருந்த  திருச்செங்கோடு கோவிலுக்கு போனோம்.  திருச்செங்கோடுன்ற வார்த்தைக்கு ”அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை”ன்னும், ”செங்குத்தான மலை”ன்னும் இரண்டு அர்த்தம் சொல்றாங்க. இந்த மலை ஏன் சிவப்பாச்சுன்னா விஷ்ணு பகவான் பள்ளிக்கொண்டிருக்கும் ஆதிசேஷன் பாம்பு மேருமலையை பிடித்தபோது ஏற்பட்ட கலகலப்பில் காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் இந்த மலை சிவப்பு நிறமாச்சுன்னு தலவரலாறு சொல்லுதுங்க. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றூர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் "திரு"ன்ற  அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர்"ன்னு அழைக்கப்பட்டு  திருசெங்கோடுன்னு ஆனதாகவும் ஊர்பெயருக்கான இன்னொரு காரணம் சொல்லப்படுது. 

மலையை நேருக்கு நேராய் பார்க்கும்போது சிவலிங்கமாகவும், வடமேற்கிலிருந்து பார்க்கும்போது பசு மாதிரியும், மேற்கிலிருந்து பார்க்கும்போது ஒரு  ஆண்  படுத்திருக்குற மாதிரியும், தென்மேற்கிலிருந்து பார்க்கும்போது ஒரு பெண் படுத்திருக்குற மாதிரியும் 4 பரிமாணங்களில் இம்மலை காட்சியளிப்பது அதிசயமாய் சொல்லப்படுது. 
பேஸ்புக்கில் சுட்டது..
வாகனங்களில் போறதா இருந்தால்  செல்ல டிக்கெட் வாங்கனும்.  மலை ஏறும்முன் தெற்குப்பக்கமா இருக்கும் கஜமுக பிள்ளையாருக்கும், வடக்கு பக்கமா இருக்கும் ஆறுமுகசுவாமிக்கும் ஒரு வணக்கத்தை போட்டுக்கிட்டு பயணத்தை தொடரலாம். நாங்க காரில் போனதால் படி ஏற வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 1200 படிகள் இருக்குறதா கோவிலில் இருக்கும் குறிப்புகள் சொல்லுது. செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம்ன்னு வரிசையாய் பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் இருக்காம். தைலி மண்டபத்தின் மேற்கு புறத்தில் 7 அடி அகலமும், 4 அடி உயரத்திலான நந்தி ஒன்று இருக்காம்.  நாங்க மிஸ் பண்ணிட்டோம்.
நேராய் கோவில் வாசலிலேயே போய் இறங்கிக்கலாம். வண்டிகள் நிறுத்த கோவிலின் இடப்பக்கம் இடமிருக்கு.. 5 நிலை ராஜ கோபுரம் வடக்கு பார்த்தமாதிரி இருந்து நம்மை வரவேற்கும். மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் இருக்கு கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு மேற்காக 170 அடி நீளமும் கொண்ட அமைப்பில் பெரிய கோவில் இது. 
நாகங்கள் சம்பந்தப்பட்ட கோவில்ன்றதாலோ என்னமோ மலைப்பாதை முழுக்க சின்னதும், பெருசுமாய் நாகர் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கி இருக்காங்க.
 
மலை மட்டும் இங்க அதிசயம் இல்லீங்கோ.. அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அம்மையப்பரின் சிலாரூபம் அரிய மூலிகைகளின் கலவையைக்கொண்டு உருவாக்கப்பட்ட வெண்பாசானத்தால் ஆனது. கருநிலைக்கூடத்தில் விலைமதிப்பில்லா மரகதலிங்கம் பக்தர்கள் ஒன்று இருக்கு. இக்கோவிலுக்கு போகும்போது தவறாமல் தரிசனம் செய்துட்டு வாங்க. பக்தர்கள் தரிசித்து சிவபெருமானின் உருவ தோற்றங்களாய் 64 வகைகளை சொல்றாங்க. அந்த வரிசையில் 22வது வடிவமே இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்ன்னு சொல்றாங்க. 
சுயம்புவாய் உருவானதால் கண், மூக்கு, வாய்ன்னு தெளிவா தெரியாது. தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் கொண்டு அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்கின்றார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடதுபாக காலில் மட்டும் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர்.   வலப்பக்கம் சிவனுக்குண்டான புலித்தோலும், இடப்பக்கம் சக்திக்குண்டான சேலையும் சிலாரூபத்துக்கு கட்டி இருக்கும் உடையை வச்சுதான் சக்தி எது?! சிவன் எதுன்னு தெரிஞ்சுக்கனும்.. 
அர்ச்சனையின்போது ஒருநாமம் சக்தின்ற பெண்பாலுக்கும், அடுத்த நாமம் சிவனென்ற ஆண்பாலுக்குமென மாற்றி மாற்றி செய்யப்படுவதும் இங்குள்ள சிறப்பு. அம்மையப்பரின் காலடியில் இருக்கும் தேவ தீர்த்தம் நோய்களை தீர்க்கும் சக்திக்கொண்டது. இது எப்பவுமே வற்றுவதில்லைன்னும் சொல்றாங்க. இந்த தேவதீர்த்தத்திலிருந்து எடுக்கப்படும் நீரே இங்கு பிரசாத தீர்த்தமாய் பக்தர்களுக்கு வழங்கப்படுது.
ஆணும் பெண்ணும் இணைந்ததே இவ்வுலகம்ன்னு உலகத்துக்கு புரிய வைக்க இங்கு அர்த்தநாரீஸ்வரராய்  சிவன் காட்சியளிக்கிறார். அதற்கு காரணமாய் ஒரு கதை சொல்லப்படுது.. நிறைய பேருக்கு தெரிஞ்ச கதைதான், இருந்தாலும் தெரியாதவங்களுக்கு சுருக்கமாய்...
உலக இயக்கத்திற்கு காரணமான  சூரியன் சிவ சூரியன் என்ற பெயரில்..

பிருங்கின்னு ஒரு முனிவர் இருந்தார். சிவனை தவிர எந்த தெய்வத்தையுமே தெய்வமா ஏத்துக்க மனசு வரலை. அம்புட்டு ஏன் சிவன் குடும்பத்தை சேர்ந்த பராசக்தி, விநாயகர், முருகன், ஐயப்பன்னு யாரையுமே தெய்வமா மதிக்கிறதில்ல. தினமும் கைலாயத்திற்கு வந்து சிவனை வணங்குவது அவரது வழக்கம். அப்படி வரும்போது சிவன் சக்தியோடு இருந்தாலும்கூட சிவனை மட்டுமே  வணங்கி வலம் வந்து பூலோகம் திரும்புவது வழக்கம். எத்தனை நெருக்கமாய் இருந்தாலும் வண்டு, சிறு பூச்சி உருவத்திலாவது சிவனை மட்டும் வணங்கி வலம் வருவது நின்றபாடில்லை.  பொறுத்து பொறுத்து பார்த்த சக்தி ஒருநாள் பொங்கி எழுந்து, பிருங்கி முனிவருக்குதான் அறிவில்லை. என்னை அவமதிக்கிறார். புருசனான நீயும் என்னை அவமதிக்கலாமா?! பிருங்கி முனிவரின் செயலை கண்டிக்காதது ஏன்னு கோவிச்சுக்கிட்டு சிவனை பிரிஞ்சு பூலோகம் வந்துட்டாங்க.

சக்தியை பிரிஞ்ச சிவன் தன் சக்தியெல்லாம் இழந்து மிகவும் அல்லல்பட்டார். பிறகு, சக்தியை தேடி பூலோகம் வந்த சிவன் தவக்கோலத்தில் இருந்த சக்தியை கண்டுப்பிடிச்சு மன்னிப்பு கேட்டு தன் உடலின் இடப்பாகத்தை அளித்ததா புராணங்கள் சொல்லுது. சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை.. இருவரும் இல்லையேல் இவ்வுலகில்லைன்னு உலகுக்கு உணர்த்தவே உலகிலேயே இங்கு  மட்டும்தான் அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கிறார்.  உடனே, இங்க இருக்குன்னு ஆதாரம் காட்டாதீங்க. அதுலாம் சமீபத்துல கட்டுன கோவிலா இருக்கும். சக்தி தேவி சிவனின் இடப்பாகத்தை பெற பிருங்கி முனிவர் காரணமாய் இருந்ததால் அம்மையப்பரின் காலடியில் அவருக்கு ஒரு சிலை கருவறையில் அமைச்சிருக்காங்க.


இந்த கோவிலின் சிறப்பாய்  அர்த்தநாரீஸ்வரர்,  ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர்ன்னு மும்மூர்த்திகளின் சன்னிதிகளை இம்மலையில் ஒருசேர தரிசிக்கலாம்   மாம்பழத்துக்காக கோவிச்சுக்கிட்டு போன முருகர் சமாதானமாகி, இங்க வந்து செங்கோட்டு வேலவர்ன்ற பேர்ல அருள்பாளிக்கிறாராம்.  வலக்கரத்தில் அன்னையிடம் பெற்ற சக்திவேலையும், இடக்கையில் சேவலை பிடிச்சு இடுப்போடு அணைச்சபடி காட்சி தருவதை சிறப்பாய் சொல்றாங்க. உச்சிக்கால பூஜையில் முதல் அபிஷேகம், ஆராதனை இவருக்குதான். பிறகுதான் மற்ற தெய்வங்களுக்கு செய்விக்கப்படுது. பொதுவா எல்லா முருகர் கோவில்களிலும் வேலானது முருகரைவிட உயரம் குறைந்ததாய் இருக்கும். இத்தலத்தில் மட்டுமே முருகரைவிட உயரம் அதிகமாய் வேலவனின் தலைக்கும்மேல் இருக்கு. 
செங்கோட்டு வேலவர் சன்னிதிக்கு அருகிலேயே அருணகிரிநாதருக்கு சிறிய சன்னிதி இருக்கு.   அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்தது இத்தலத்தில்தான். தமிழக அரசால் கோவில்களில்  தொடங்கப்பட்ட அன்னதான திட்டத்திற்கு ஒரு ஆண்டிற்கு தேவையான நிதி ஒரே நாளில் சேர்ந்தது இங்குதானா, 17/1/1964ல் இங்கு கோடி அர்ச்சனை நடைப்பெற்றதா திருச்செங்கோடு மான்மியம்ன்ற நூலில் சொல்லப்படுது.
இக்கோவில் ஆன்மீக தலமாக மட்டுமில்லாமல் சிறந்த கலைப்பொக்கிஷமாகவும் இருக்கு. எதற்கெடுத்தாலும் அடிச்சுக்கும் சேரர், சோழர், பாண்டியர்களின் உழைப்பு, தெய்வ பக்தியால் இக்கோவில் கலைப்பொக்கிஷமாய் திகழ்கிறது.. கோவிலை சுற்றியுள்ள தூண்களே அவர்களின் கலையார்வத்திற்கு சாட்சி. 
இங்கிருக்கும் ஆதிசேஷன் நாகர் சிலைக்கு பால் ஊற்றி,மஞ்சள், குங்குமம் தூவி வழிபட்டால் நாகதோஷம் நீங்கி திருமணம் நடக்கும், புத்திர பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.

செங்கோட்டு வேலவர் சன்னிதிக்கு எதிரில் மேற்கூரையில் எட்டு கிளிகள் எட்டு திசையிலும் தலிக்கீழாய் இருக்குற மாதிரி ஒரு சதுரவடிவ சிற்பம் ஒன்னு இருக்கு. அதன் நடுவே இருக்கும் வாழைப்பூ மாதிரியான அமைப்பை சுத்தினால் சுத்துமாம்.  கலையும், தொழில்நுட்பமும் சேர்ந்த இந்த சிற்பத்தை கோவிலுக்கு வர்றவங்களாம் கண்டு ரசிச்சுட்டுதான் போறாங்க. ஆனா, இப்பலாம் அந்த வாழைப்பூ மாதிரியான அமைப்பை சுத்த யாரையும் அனுமதிப்பதில்லை. 
தேர் மாதிரியான ஒரு மண்டபத்தை ஒரு ஆமை இழுத்துட்டு போற மாதிரியான ஒரு சிலை இருக்கு. இதுக்கு ஏதோ பேர் சொல்வாங்க. இந்த மாதிரியான அமைப்பு அஞ்சாறு கோவில்களில்தான் இருக்காம். அமைப்பின் பேரு தெரிஞ்சா சொல்லுங்க. 
பொதுவா முயலகன்மீது நடனமாடும் நடராஜரைதான் பார்த்திருக்கோம். இங்கு ஆதிசேஷன்மீது நடனமாடும் நடராஜரை தரிசிக்கலாம்.  ரதி மன்மதன், குறவர் குறத்தி, குதிரை சேவகன், மகிஷாசுரமர்த்தினி, யாழி... மாதிரியான சிலாரூபங்கள் பார்க்க இரு கண் போதாது.மிகுந்த கலை அம்சம் பொருந்திய இக்கோவில் மின்சாரம்,  விளக்கு, பேன், தடுப்பு கம்பி மாதிரியான வேலைகளுக்காக  துளைத்தெடுத்து பலமிழக்க வைக்குது. கோவில் நிர்வாகம்தான் இப்படின்னா, பக்தர்களும் தங்கள் பங்குக்கு வளாகத்தில் இருக்கும் சிலைகளின்மீது விபூதி, குங்குமம் கொட்டி பாழ்படுத்திக்கிட்டிருப்பது வேதனையை தருகிறது.
பேஸ்புக்கில் சுட்டது
அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் பின்பக்கம் பக்கத்தில் ஒரு மலைமீது உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கு. நேரமின்மை காரணமா போகமுடிலன்னு சொன்னாலும், ஏறமுடியாதுன்னு தோணுச்சு. அதான் அங்கு போக ஆசைப்படல.  மலைமீது ஏற முடியாதவங்களுக்காகவே கோவில் நிர்வாகத்தாரால் மலைக்கு செல்ல தனி பஸ் விட்டிருக்காங்க.. இந்த கோவில் நாமக்கல்லிலிருந்து 37கிமீ, சேலத்திலிருந்து சுமார் 45கிமீ தூரத்திலும் இக்கோவில் இருக்கு..

அடுத்த வாரம் திருச்செங்கோட்டில் இருக்கும் 60 அடி நாகர் சிலையை பார்க்கலாம்...

நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. படங்களும் பகிர்வும் அருமை
  ஒருமுறை திருச்செங்கோடு சென்று வந்த நினைவுகள் மனதில் வலம் வந்தன
  நன்றி சகோதரி

  ReplyDelete
 2. இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். மிகவும் அருமையான கோயில். தேர் போன்ற ஆமை அமைப்பு..வேலூரில் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பார்த்த நினைவு.

  ReplyDelete
 3. தகவல்களும் படங்களும் சிறப்பு. சிலைகளின் பொலிவு கவர்கிறது. இதுவரை பார்த்ததில்லை. பார்க்கத் தோன்றுகிறது.

  பராமரிக்கப்பட வேண்டிய கோவில்.

  ReplyDelete
 4. படங்கள் சிறப்பு.  தகவல்கள் சுவாரஸ்யம்.

  ReplyDelete