Monday, October 08, 2018

அன்னதானத்தை விட சிறந்த தானம் எது?! - ஐஞ்சுவை அவியல்

என்னங்க மேடம் காலைலயே குளிச்சு கோவிலுக்குலாம் போய் வர்றீங்க?! என்ன விசேசம்?! 

என்னன்னு உனக்கு தெரியாதா மாமா?! இன்னிக்கு அமாவாசை. 

உனக்குதான் அமாவாசை கிடையாதே! அப்பா அம்மா இருக்காங்கன்னுச் சொல்வியே! அதான் கேட்டேன்.

அதிலும் புரட்டாசி மஹாளய அமாவாசை. அதிலும் திங்கட்கிழமையா வந்திருக்கு. அதனால்தான் கோவிலுக்கு போய் வந்தேன். 

எப்படியோ நல்ல புத்தி கிடைச்சு கோவிலுக்கு போய் வந்தாலும் சரி, இல்ல கோவிலுக்கு போறதால நல்ல புத்தி கிடைச்சாலும் எனக்கு ஓகேதான்.

ம்க்கும். இப்படிலாம் நக்கலடிச்சா  நான் கோவிலுக்கே போகமாட்டேன்

அம்மா தாயே! அமாவாசைன்னா என்னன்னு உனக்கே தெரியும். அன்னிக்கு ஏன் தர்ப்பணம் கொடுக்குறோம்ன்னு உனக்கு தெரியும்ன்னு நினைக்குறேன். வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும், நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துபடிதான் நடக்கும்.   நமக்கு கிடைக்கவேண்டிய நல்ல பலன்களை  பெற்றுத்தர பல வழிமுறைகள் இருந்தாலும், பித்ருக்கள்ன்னு சொல்லப்படும் நம் முன்னோர்களின் பங்கு முக்கியம்.   நாம் அவசியம் செய்யவேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களின் கோபத்துக்கு ஆளாகி, சுபகாரியத்தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணம்ன்னு இந்து தர்மம் சொல்லுது.  

எல்லாம் சரி,  நம்ம பேரனாச்சே! நம்ம பொண்ணாச்சேன்னு மன்னிக்க தெரியாத பெருசுகள்லாம் ஆசீர்வாதம் பண்ணா என்ன?! பண்ணலைன்னாதான் என்ன?!


ஒரு குடியும் முழுகிடாது. பிரச்சனைன்னு வந்தா அதை தீர்க்க வழி பார்ப்பியா?! இல்ல இப்படியே விதண்டாவாதம் பண்ணிட்டு இருப்பியா?! சரிம் உன் நல்லதுக்குன்னு இல்லன்னாலும் பரவாயில்லை. அகால மரணமடைந்து, இல்ல பாவப்பலனுக்கு ஏத்த மாதிரி மேலோகத்திலும் திக்கு திசை தெரியாம அல்லாடும் பாவாத்மாக்களுக்கள் நல்ல கதி காண நாம கொடுக்கும் பித்ரு தர்ப்பணம் உதவும். அதுக்காகவாவது தர்ப்பணம் கொடுக்கலாமில்ல!இப்படி எல்லா அமாவாசைக்கும்   தர்ப்பணம் கொடுக்க முடியாதவங்க, மஹாளய அமாவாசைன்னு சொல்லப்படும் ஆடி, புரட்டாசி, தை என மூணு அமாவாசைகளில் எதாவது ஒன்றில் பித்ரு தர்ப்பணம் செஞ்சாலும் வருசம் முழுமைக்கும் செஞ்ச பலன் கிடைக்கும். ஏன்னா, மாஹாளயன்னு சொன்னால்  கூட்டாக வருவதுன்னு அர்த்தம். நம்முடைய எல்லா முன்னோர்களும் வருவாங்கன்னு நினைச்சுக்கிட்டாலும் சரி, இல்ல எல்லா அமாவாசையின் கூட்டுன்னு நினைச்சுக்கிட்டாலும் சரி. தர்ப்பணம் கொடுக்கும் அன்னிக்கு வீடு வாசலை சுத்தம் செய்து,  மனம், உடல் சுத்தத்தோடு எதாவது ஒரு நீர்நிலைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கனும். பின்பு வீட்டுக்கு வந்து முன்னோர்களை நினைச்சு படையல் போட்டு நைவேத்தியம் செய்து அன்னதானம் செய்தப்பின் சாப்பிடனும்.
தானம்  தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படுபவையாக 42 வகையான தானங்களை குறிப்பிட்டாலும், கன்னிகாதானமும், அன்னதானமுமே சிறந்தது. ஒரு பெண்பிள்ளைய பெற்று வளர்த்து, இன்னொரு வம்ச விருத்திக்காக, வேரோடு பெயர்த்து இன்னொரு வீட்டுக்கு அவளை கல்யாணம் செய்து கொடுப்பதே கன்னிகாதானம். இந்த தானம் செய்ய எல்லாருக்கும் கொடுப்பினை வாய்க்காது. ஆனா, அன்னதானம் செய்ய எல்லாராலயும் முடியும். அதனால், யாரையும் பசியோடு இருக்க விடக்கூடாது. முடிஞ்சளவு அன்னதானம் செய்யனும்.  தங்கம், வெள்ளி, நிலம், பசு... தன்னோட புண்ணியத்தின் பலனைக்கூட தானமா கொடுத்த கர்ணன் அன்னதானம் செய்யலியாம். அதனால்,  கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, சொர்க்கம் சென்றான். பசி, தாகம், மூப்பு, வியாதின்னு எதும் அண்டாத இடம் அது. ஆனா கர்ணனுக்கு பசியும், தாகமும் எடுத்ததாம். பிரம்மாவிடம் சென்று காரணம் கேட்க, இதுவரை நீ உன் வாழ்நாளில் இதுவரை அன்னதானம் செய்யலியே! அதனால்தான் உனக்கு பசி தாகம் உண்டானதுன்னு சொல்லி, கர்ணனின் பசி, தாகம் தீர  ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் தன் ஆட்காட்டி விரலை சுவைத்ததும் பசி தீர்ந்தது. ஒருமுறை பசியென வந்த ஒருவனுக்கு அன்னதான கூடத்தினை காட்டியதால் உன் பசி தீர்க்கும் ஆற்றல் உன் விரலுக்கு உண்டானதுன்னு சொல்லினார். அன்னதானத்தின் மகிமையை உணர்ந்த கர்ணன்,  நான் ஒரு 15 நாளுக்கு மனித உடலுடன் பூலோகம் சென்று அன்னதானம் செய்து வர அனுமதிக்க வேண்டுமென வேண்ட, எமதர்ம ராஜனும் அனுமதி அளித்தார்.

15 நாட்கள் கெடு முடிந்ததும், கர்ணனை மீண்டும் சொர்க்கம் வர, எமதர்ம ராஜா அழைக்க,  தன் கர்மாவை கழிக்கத்தான் மீண்டும் மீண்டும் உயிர்கள் பூலோகத்தில் பிறப்பெடுக்கின்றன. ஆனா, ஒரு நல்ல நோக்கத்துக்காக வந்த உனக்கு நான் வரம் தருகிறேன் என்ன வரம் வேண்டுமென கேட்க, கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த 15 நாளில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம்லாம் இந்த கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களைகூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடைய வேண்டும் எனக் கேட்கிறார்."யமனும்  ஒப்புகொள்கிறார். "யார் இந்த 15 நாட்களில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். அதனால்தான் அன்னதானம் மிக முக்கியம்ன்னு சொல்றாங்க. இந்த 15 நாள் கெடு என்பது ஆவணி பௌர்ணமியில் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரையிலான காலமாகும். 

இவ்வளவுதானா?! இல்ல இன்னும் இருக்கா?!

அமாவாசையும் திங்களும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை வலம் வருவதால் பல நல்ல  பலன்களைத் தரும். இந்த விரதத்திற்கு 'அமாசோம விரதம்' ன்னு பேரு. இந்த நாளில், அரசமரத்தைப் வலம் வந்து,  பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமா சொல்லப்படுது. அதிகாலை வேளையில் அரசமரத்தைச் சுற்றும் போது, அதிலிருந்து வரும் காற்று, நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி, நல்லபடியா செயல்பட வைக்கும். பித்த சம்பந்தமான நோய்களையும், சரும நோய்களையும் நீங்கும்.  இரத்த ஓட்டம் சீர்ப்படும். மனஅழுத்தம்லாம் நீங்கும், முக்கியமா கருப்பை பலப்படும்.   அரசமரத்திற்கு அஸ்வத்த மரம் ன்னு பேரு. அஸ்வத்தம்ன்ற சொல்லிற்கு இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லைன்னு பொருளாகும். ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து எனும் சொல், அரசங்குச்சிகளையே குறிக்கும். அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் போது வெளிவரும் புகை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது. காற்றில் இருக்கும். அரசமரத்தை வெட்டுவது பாவம்ன்னு சொல்லப்படுது. அரசமரம் விஷ்ணுபகவானின் வலக்கண்ணிலிருந்து தோன்றியதாம்.அரசமரத்தின், வேரில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் சொல்லுது. புத்தர் ஞானம் பெற்றா போதிமரம்ன்னு சொல்லப்படுவது அரசமரத்தைதான்.  அரச மர நிழல் பட்ட  நீர் நிலைகளில் நீராடுவது, பிரயாகையில்(திரிவேணி சங்கமத்தில்) நீராடுவதற்குச் சமம். அதனால்தான் அரசமரத்தை நட்டு வச்சாங்க நம்ம பெரியவங்க.  நாகதோஷ நிவர்த்திக்காக, அரசமரத்தின் அடியில் நாகர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வச்சாங்க அரசமரத்தின் அடியில் லட்சுமி வாசம் செய்வதா சொல்லப்படுது. அதனால்தான்  மஞ்சள் குங்குமத்தை அரச மரத்தடியில் தூவி வழிபடுறாங்க.

அரச மரத்தை நெருங்கியோ, தொட்டோ சுற்றக்கூடாது.  ஆனா, சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை , ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்,  ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்,  நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்பது ஐதீகம். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளின் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரனும். 


மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி

அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம
இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கிட்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்கனும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு தானமா கொடுக்கனும். முடிஞ்சளவுக்கு  அன்னதானம்  ஆடைகள் தானம் செய்யலாம். கோவிலுக்கு வரும் மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம். குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு. அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.  இப்படி பல காரணங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.
இந்த அமாசோம விரதம் எப்படி உண்டாச்சுன்னு சொல்றேன்;காஞ்சிபுரத்துல   தேவசுவாமி -தனவதி தம்பதி குணவதின்ற பெண்குழந்தையோடு சந்தோசமா வாழ்ந்து வந்தனர். குணவதிக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கு மூணு நாட்களே இருந்துச்சு.  அந்த ஊருக்கு சாமியார் ஒருத்தர் வந்தார். தன்னை வணங்கும் எல்லா பெண்களையும் தீர்க்க சுமங்கலி பவன்னும், ஆண்களை சகல சம்பந்தும் பெறுகன்னும் வாழ்த்தினார். 

குணவதி அவரை வணங்க ‘ தர்மவதி பவ’ என வாழ்த்தினார். இதை பார்த்துக் கொண்டிருந்த குணவதியின் தாயார் தனவதி  கேட்டார்.‘ சுவாமிதர்மவதி பவ என என் மகளை வாழ்த்தினீர்கள். அதன் அர்த்தம் என்ன? ன்னு கேட்டார். அதற்கு அந்த சாமியார், தாயே!  உனது மகள் திருமணத்தின்போது மணமகள் கழுத்தில் மணமகன் மங்கலநாணை அணிவித்து அவர் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டதும் மணமக்கள் அக்னியை வலம் வருவார்கள். அந்த சடங்குக்கு ‘சப்தபதி’ என்றுன்னு பேரு.  அந்த சடங்கு நடக்கும் வேளையில் மணமேடையிலேயே அவளை கைப்பிடித்த மணமகன் உயிர் விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறினார்.  இதற்கு பரிகாரம் இருக்கான்னு கேட்க, கிழக்கு கடலில் ‘சிம்ஹத்வீபம்’ ன்ற ஒரு தீவில், .  ‘சோமா’ன்ற மூத்த சுமங்கலி வாழ்கிறார். அவர் மிகுந்த  சக்தி மிக்கவர். அவர் முன்னிலையில் உன் மகளின் திருமணம் நடந்தால் எல்லாம் சுபமாக முடியும். உன் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் என்று சொல்லி  சென்றார். 


அந்த சாமியார்  கூறியதை குணவதியின் தந்தையும், அண்ணன் விஷ்ணுதாசனும் கேட்டுக் கொண்டிருந்தாங்க. தன் தங்கையின் வாழ்வு மங்களகரமாக அமைய, சாமியார் சொன்ன தீவுக்கு போய், .  சோமான்ற மூத்த சுமங்கலியின் வீட்டுக்கு போய் சேர்ந்தார். அவர் போனபோது அங்க அந்த மூதாட்டி இல்ல.  அங்கிருந்தவங்கக்கிட்ட  விசாரித்தபோது மூதாட்டி  பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவர, அந்த கோவிலுக்கு விஷ்ணுதாசன் சென்றார். அப்ப, அங்கிருந்த மிகப்பெரிய அரசமரத்தை சோமா மூதாட்டி வலம் வந்து கொண்டிருந்தார்.  அந்த மூதாட்டியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது நடந்ததை கூறினார். என் தங்கை திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என அவரையும். அவரது கணவரையும் தனது ஊருக்கு அழைத்து சென்றார். 

அங்கு குணவதிக்கு திருமண சடங்குகள் நடந்துக்கிட்டிருந்துச்சு. சோமா தம்பதியரை மனமேடைக்கு முன்பு அமர வைத்தனர்.  மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டியதும் கெட்டிமேளம் முழங்கியது. அடுத்ததாக அக்னியை வலம் வரும் சடங்கு.  மணமகளின் வலது கையை பிடிச்சுக்கிட்டு மணமகன் அக்னியை வலம் வந்த போது திடீரென்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தான். எல்லாருக்கும் அதிர்ச்சி அடைந்தார்கள்.. சோமா தம்பதியரும் அதிர்ந்தார்கள். உடனே சோமா பெருமாளிடம் வேண்டினார். நான் மங்கல அட்சதை தூவி ஆசிர்வதித்த மணமகனுக்கு ஏன் இந்த நிலை என்று உருக்கமாக கும்பிட்டார். 
அப்போது சோமாவின் காதுகளில் மட்டும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘சோமா நீ பல வருடங்களாக சோமவார அமாவாசையன்று கடைப்பிடித்த விரதப்பலனையும், அரச மரத்தை வலம் வந்த பலன்களையும் மணமகனுக்கு அளித்தால் அவர் உயிர் பெறுவார். மணமக்கள் நிடூழி வாழ்வார்கள்’’ என்றது. 
உடனே சோமா மணமகன் அருகில் சென்று தன்அமாசோமவார விரதப் பலன்களை அவருக்கு அளித்தார். உடனே மணமகன் உயிர் பெற்று எழுந்தார். அங்கு கூடி இருந்தவங்களுக்கு அமாசோம விரத மகிமையை எடுத்து சொல்லி மந்திரத்தினையும் சொல்லி அரசமரத்தை வலம் வரும் முறையும் சொன்னார்.   அன்னில இருந்து இந்த விரதமுறை உருவாச்சுது. இதுபோதும். இதுவே  உனக்கு போரடிக்கும். அதனால, இதோடு நிறுத்திக்குறேன்.
சோமா பாட்டி சொன்ன மந்திரம் இதுதான்...


மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி

அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம
இப்படி யாராவது முன்னாடியே சொல்லியிருந்தா அரசமரத்தை சுத்தி நல்ல புருசனா கிடைச்சிருக்கும். இப்படி அடங்காம ஊர் சுத்துற புருசனா வாய்ச்சிருக்காது. ஏகப்பட்ட சோலி  கெடக்கு. நான் போறேன் மாமா.

நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. அமாவாசையின் மகிமையை முழுமையாக இன்றே அறிந்தேன்.

    ReplyDelete
  2. மாமாவின் நிதானம் தான் சிறந்தது...!

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும், என்ன சமாதானம் செய்தாலும் மாறாத நிதானம். ஒருநேரம் வியக்க வைக்குது. ஒருநேரம் ஆத்திரப்பட வைக்குது

      Delete
  3. //மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி

    அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம// -

    அரச மரத்தின் நுனி ப்ரம்ஹ ஸ்வரூபம், மத்தியப் பகுதி விஷ்ணு ரூபம், கீழ்ப்பகுதி சிவ ரூபம் என்றுதான் இது சொல்கிறது என நினைக்கிறேன். மொத்தத்தில், அரச மரத்தைக் கடவுளின் வடிவமாக மனதில் நினைத்து அதனை ப்ரதக்‌ஷணம் செய்யவேண்டும் என்பது ஐதீகம்.

    அது சரி... ஸ்லோகம் இப்படி இருக்க, படம் மாத்திரம் தவறாக தேர்ந்தெடுத்திருக்கீங்களே...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு சமஸ்கிருதம்லாம் தெரியாது சகோ. ஆனா, தமிழ்ல மூலம்ன்னா தொடக்கம். ஒரு மரத்தின் தொடக்கம் எது?! வேர். அதைதான் இந்த பாடல் சொல்லுதுன்னு நான் நினைக்குறேன். கூகுள்ல சர்ச் பண்ணாலும் அரசமரத்தின் வேர் பிரம்மா, தண்டுப்பகுதி விஷ்ணு, நுனிப்பகுதி சிவன்னுதான் சொல்லுது. ஃபேஸ்புக் மாதிரி ஸ்கிரீன் ஷாட் எடுத்து போடும் வசதி இருந்தால் போட்டிருப்பேன்.

      Delete
    2. You are correct, நான் தலைகீழ் மரத்தை (அப்படித்தான் நிறைய இடங்கள்ல ) வைத்துச் சொல்லவந்தேன். ப்ரம்ஹன் மூலம் (வேர்), அதிலிருந்து விஷ்ணு, சிவன் என்பது தவறாகப் பொருள் தரும்.

      Delete
  4. எல்லாமே ஏதோ பெர்செப்ஷந்தானோ என்கருத்துமாறானது இருக்கும்போது பெற்றோரை ஆதரிப்பதே மேல் இல்லாதபோது அவர்களுக்கு தர்ப்பணம்தேவையில்லை என்பதே என்கருத்து பெரும்பாலோருக்கு ஒத்து வராதது

    ReplyDelete
    Replies
    1. ஆனா, உசிரோடு இருக்கும்போது தவிக்க விட்டுட்டு, செத்தபின் தர்ப்பணம் கொடுத்தா போதும்ன்னு சில ஜென்மங்க நினைக்குதே! அதைலாம் என்ன பண்ணலாம்?!

      Delete