Tuesday, October 01, 2019

பண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்

பண்ணைக்கீரை ... இந்த கீரை எத்தனை பேருக்கு தெரியும்ன்னு தெரியல!! வேர்க்கடலை விளைஞ்சிருக்கும்போது  அதனோடு இதுவும் வளர்ந்து வரும். களைப்பறிக்கப்போகும் பெண்கள், இதை பறிச்சு முந்தானையில் கட்டி வருவாங்க.  களை பறிச்ச களைப்பில் மாலை வீடு திரும்பி விதம்விதமா சமைக்க இயலாது. அதனால, செத்த நேரம் திண்ணையில் உக்காந்து கதை பேசிக்கிட்டே இந்த கீரையை ஆய்ஞ்சு சுத்தப்பண்ணி அடுக்களைக்கு போனால், பண்ணைக்கீரையை ஒரு பக்கம் வேக விட்டுட்டு, எலுமிச்சை அளவு புளியை ஊற வச்சு அது ஊறும் நேரத்தில், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ரெண்டு பல் வச்சு அம்மியில் விழுதா அரைச்சு, அந்த விழுதோடு புளியை கரைச்சு விட்டு உப்பு சேர்த்து கொதிச்சு வரும்போது இறக்கி, தேங்காய் சில்லு ரெண்டு, ரெண்டு பச்சை மிளகாய், உப்பு, உடைச்ச கடலை சேர்த்து அரைச்சு துவையல் அரைச்சு சோறு பொங்கி வச்சா  தேவாமிர்தமா இருக்கும். இப்பயும் மழைக்காலத்தில் எங்க வீட்டில் இந்த காம்பினேஷன்ல இரவு உணவு உண்டு.

தேவையான பொருட்கள்..
பண்ணைக்கீரை,
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
பூண்டு
புளி,
உப்பு
எண்ணெய்
குழம்பு வடகம்.

அடுப்பில் பாத்திரத்தை ஏத்தி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காரத்துக்கேற்ப காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து லேசா வதக்கனும்
உரிச்ச பூண்டு  பற்கள் சேர்த்து லேசா வதக்கனும்..
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கனும்..

பண்ணைக்கீரையை சேர்த்து வதக்கனும்....
கீரை வெந்ததும் உப்பு சேர்க்கனும்...
புளி சேர்த்து அடுப்பை அணைச்சுடனும்...  கல் சட்டியில் கீரையை கொட்டி நல்லா மைய கடையனும்...
தாளிக்குற கரண்டியில் குழம்பு வடகத்தினை சேர்த்து தாளிச்சு...
வாசனைக்கு காய்ந்த மிளகாய் சேர்த்து சிவந்ததும்...

கடையும் கீரையில் கொட்டி லேசா கடைஞ்சால் கமகம வாசனையோடு பண்ணைக்கீரை மசியல் ரெடி.
Image may contain: food
பெரும்பாலும் கீரையை இரவு சாப்பாட்டில் சேர்த்துக்க கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா, மழை நேரத்தில் இந்த கீரையை சாப்பிட்டு பார்த்தால் அந்த ரூல்ஸ்லாம் தூக்கி போட தோணும்...

தக்காளி அல்லது புளியை கொஞ்சம் அதிகமா இந்த கீரைக்கு சேர்த்துக்கனும், தூக்கலான புளிப்பு சுவையில் இந்த கீரை டாப் கிளாசா இருக்கும்..

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. இந்தக் கீரை பற்றிக்கேள்விப்பட்டதேயில்லை.முதல் முறை கேள்விப்படுகிறேன்.  கீரையை நறுக்காமல் அப்படியே முழுசு முழுசாகப் போட்டே வேக வைத்திருக்கிறீர்கள்.   பார்க்க நன்றாயிருக்கிறது.   சுவையும் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. கீரை பொரியல் செய்யும்போது மட்டுமே கீரையை வெட்டுவேன். மத்தபடி சுத்தம் செய்து கிள்ளி போடுவதோடு சரி. ஆய்ஞ்ச கீரையைதான் படமெடுத்ததே!

      Delete
  2. கீரை கேள்விப்படாதது. பூண்டு இல்லாமல் செய்முறை எனக்குப் பரிச்சயமானது.

    ReplyDelete
  3. ஆஹா பண்ணைக்கீரை பேரைக்கேட்டாலே வாயும் வயிறும் மணக்கிறதே !! நீங்கள் இந்த கீரை சமையலுக்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை.! நாலு பச்சை மிளகாய், தேவைக்கு உப்பு புளி, சிறிது நீர், அவ்வளவே ! வெந்ததும் கலசட்டியில் கடைந்து கடுகு, மிளகாய் நல்லெண்ணெய் தாளித்து புழுங்கல் அரிசி சோற்றில் இட்டு சாப்பிட்டு பாருங்கள், அப்புறம் சொல்வீர்கள்.... எந்த ஊர் மார்க்கெட்டிலும் கிடைப்பதே இல்லை.

    ReplyDelete
  4. ஆகா... புதுமையாக இருக்கு சகோதரி... நன்றி...

    ReplyDelete
  5. இந்தக் கீரை எனக்கு புதியது.

    ReplyDelete
  6. பண்ணை கீரை கேள்விப்பட்டதுண்டு ... ஆனால் சாப்பிட்டதில்லை.... இங்கு சாப்பிட முடியாவிட்டாலும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி !!!
    My blog கிளிக்குங்க

    ReplyDelete