Tuesday, July 02, 2019

ஈசியாய் செய்யலாம் பூண்டு ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கறிக்குழம்புக்குக்கூட ஊறுகாய் தொட்டுக்கும் ஆள் நான், மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், கிச்சிலிக்காய்...ன்னு விதம் விதமா வத்தல் போட்டு வருசம் முழுக்க வெரைட்டியாய் ஊறுகாய் சாப்பிட்டாலும், பூண்டு, தக்காளி, பிரண்டை..ன்னு இன்ஸ்டன்டா செஞ்சு சாப்பிட்டாதான்  சாப்பிடுறதுலயே ஒரு திருப்தி வரும்.

செமஸ்டர் லீவ் முடிஞ்சு மகனார் ஹாஸ்டல் கிளம்புறதால அவருக்கு தேவைன்னு கொஞ்சம் பூண்டு ஊறுகாய் செய்தோம்.. அப்படியே பிளாக்குக்கும் கொஞ்சம் தொட்டுக்க படம் எடுத்தாச்சுது...

தேவையான பொருட்கள்..
பூண்டு - கால் கிலோ
புளி - 100கிராம்
காய்ந்த மிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு,
நல்ல எண்ணெய் - 50 m.l
கடுகு - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
மஞ்சப்பொடி - ஒரு சிட்டிகை
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

செய்முறை: 
பூண்டினை உறிச்சு சுத்தம் செய்து கழுவி ஈரம் போக காய வச்சுக்கனும்.  மிளகாயை தண்ணில ஊற வச்சுக்கனும், புளியை ஊற வச்சுக்கனும். கடுகு ஒருஸ்பூன், வெந்தயத்தினை வெறும் வாணலியில் வறுத்துக்கனும்.  வெந்தயம் அதிகம் வறுபட்டால் கசக்கும். அதனால் பொன் முறுவலா வறுத்துக்கிட்டா போதும்..
புளியை கெட்டியாய்  கறைச்சு  வடிக்கட்டிக்கனும். பூண்டு, மிளகாயினை புளித்தண்ணி சேர்த்து மைய அரைச்சுக்கனும்...

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமிருக்கும் கடுகினை போட்டு பொரிய விடனும்.. கறிவேப்பிலையும் சேர்த்துக்கலாம்.  
கடுகு பொரிஞ்சதும் அரைச்சு வைத்திருக்கும் பூண்டு விழுதினை சேர்த்து நல்லா வதக்கனும். மிக்சியை கொஞ்சமா தண்ணி ஊத்தி கழுவி  ஊறுகாயில் சேர்க்கலாம். ஒன்னும் ஆகாது.
தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கனும்.... ஊறுகாய், வத்தல் மாதிரியான நாட்பட வைத்திருக்கும் பொருட்களுக்கு கல் உப்பு சேர்ப்பதே சரி. 
மஞ்சப்பொடி சேர்த்துக்கனும்..
பெருங்காயப்பொடி சேர்த்து நல்லா கொதிக்க விடனும். வெளிலலாம் தெரிக்கும். அதனால், வாணலியை மூடிப்போட்டு வைக்குறது நல்லது. 
தண்ணிலாம் வத்தி, எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்தில் அடுப்பை அணைச்சுடனும்.
வறுத்து வச்சிருக்கும் கடுகு, வெந்தயத்தினை பொடி செய்துக்கனும்....
ஊறுகாயினை ஒருநாள் முழுக்க வெயிலில் வைக்கனும். பின்னர், பொடிச்சு வச்சிருக்கும் கடுகு, வெந்தய பொடியினை சேர்த்து நல்லா கலந்துக்கனும். 
சுவையான பூண்டு ஊறுகாய் தயார். பழைய சாதம், தயிர் சாதம், கூழ், எலுமிச்சை சாதம், க்குலாம் இந்த ஊறுகாயினை தொட்டுக்க செமயா இருக்கும்.  வெளில வச்சாலும் 15 நாள் முதல் ஒரு மாசம் வரை தாங்கும். ப்ரிட்ஜில வச்சா இன்னும் கூடுதல் நாட்களுக்கு வரும். 

குறிப்பு: எந்த ஊறுகாயாய் இருந்தாலும் காத்து புகாம இறுக மூடி வைக்கக்கூடாது. கடையில் இருக்கேன்னு கேட்டால் அதில் ரொம்ப நாட்களுக்கு கெடாமல் இருக்க, வினிகர் மாதிரியான ரசாயண கலவை இருக்கும். வீட்டில் அதுலாம் சேர்ப்பதில்லை. அதனால், ஒரு ஸ்பூன் போட்டு அதுமேல மூடி போட்டு மூடி வச்சால் போதும். நேரம் கிடைக்கும்போது வெயிலில் வச்சு எடுத்ஹ்டால் சீக்கிரத்துல கெட்டு போகாது.

நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. செய்துபார்க்கிறோம்.

    நாங்கள் பூண்டையும் மிளகாயையும் வறுக்காமல் வதக்காமல் அப்படியே போட்டு உப்பு மட்டும் சேர்த்து அரைத்து வைத்து மோர்சாதம்,தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்வதுண்டு. இட்லிதோசைக்குத் தொட்டுக்கொள்ளும்போது நல்லெண்ணெய் விட்டுக் குழைத்துக்கொள்வோம்.​

    ReplyDelete
    Replies
    1. அது பூண்டு சட்னி ..

      Delete
    2. ​நாங்கள் பூண்டுப்பொடி என்போம். வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வைத்துக்கொள்வோம்!​

      Delete
    3. பேசிக்கிட்டே இருந்தால் எப்படி?! சட்டுப்புட்டுன்ன்னு அடுத்த கட்டத்துக்கு நகருங்க.

      Delete
  2. நல்லா இருக்கு ராஜிக்கா...

    பூண்டு முழுசா இருக்கும் ன்னு பார்த்தா அரைச்சு போட்டீங்களே..வித்தியாசமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அதும் ஒரு வகை. இது ஒரு வகை..

      பூண்டை கடிச்சு சாப்பிட சோம்பேறித்தனம் இருக்க ஆளுங்க நிறைய உண்டே!

      நான் என்னைய சொல்லலைப்பா.

      Delete
  3. நன்றிண்ணே

    ReplyDelete