Showing posts with label அறுபடை வீடு. Show all posts
Showing posts with label அறுபடை வீடு. Show all posts

Sunday, November 06, 2016

ஆறாவது படை வீடு - பழமுதிர்சோலை

அறுபடை வீடுகளில் ஆறாவது வீடான பழமுதிர் சோலை பற்றி பார்க்கலாம்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்ங்குறதுக்கு ஏத்தமாதிரி அழகானதொரு இடத்துல இக்கோவில் அமைந்திருக்கு..  தனது, தமிழ் புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் தலை தூக்க ஆரம்பித்தது. அந்த அகங்காரம் தமிழுக்கும், தமிழன்னைக்கும் நல்லதில்லைன்னு உணர்ந்த முருகன் சிறு விளையாட்டை நடத்த விரும்பினான்.
அவ்வைப்பாட்டி நடந்து செல்லும் இவ்வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக மாறி அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நீண்ட தொலைவு பயணம் செய்திருந்ததால் அவ்வைக்கு களைப்பும், பசியும் வரவே, சிறிது ஓய்வெடுக்க நாவல் மரத்தின் நிழலில் வந்து ஓய்வு எடுத்தார் அவ்வை பாட்டி.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார். உடனே அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களைப் பறித்துத் தர முடியுமா?"
என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? "
என்று கேட்டார்.

சிறுவனின் கேள்வி அவ்வைக்குப் புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப் பழம், சுடாத பழம் என்று இருக்கிறதாஎன்று எண்ணிக் கொண்டவர்,
விளையாட்டாக "சுட்டப் பழத்தையே கொடுப்பா..." என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப் பெருமான் உலுக்க, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. 

அந்தப் பழங்களைப் பொறுக்கிய அவ்வைஅந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால்,அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வை பாட்டியின் அகங்காரம் பறந்து போனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான்,

தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.


இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இருக்கிறது.
திருத்தணி, திருச்செந்தூர், பழனிப் போல இக்கோவில் ஆடம்பரமில்லாம மிக எளிமையாய் இருக்கு. முன்னலாம் இக்கோவிலில் முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனை உண்டாம். சமீபக்காலங்களில்தான் முருகனின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்றாங்களாம். அந்த வழிபாடுகள் கூட வேடுவர்கள், குறிஞ்சி நில மக்களின் வழிபாட்டு முறைப்படிதான் இன்றும் நடக்குதாம்
ரொம்ப நாட்களுக்கு முன், முருகனுக்கு இத்தலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசி சோற்றை வேடர் குலத்தவங்க படையல் போட்டதா சொல்றாங்க. அதுக்கு ஆதாரம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்ற அடியே சான்று. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்குமாம். ஆனால், இத்திருதலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில்தான் பழுக்குமாம் இதற்கு திருமலிருஞ்சோலை குலமலை கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு.
பழமுதிர்சோலை முருகன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கு. வேட்டுவர் குலத்தெய்வமான ராக்காயி கோவில் இங்கு நூபுரக கங்கை தீர்த்தம் விழுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.யானை துதிக்கைப் போல பருமனாக கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இத்தீர்த்தத்தில் நீராடினால் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது சிலம்பாறுன்னு பேர் பெறுகிறது.
அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசியாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங்களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு தேனாறு என்றும் பெயர் இங்கிருக்கும் மாதவி மண்டபத்தில் அமர்ந்துதான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதியதாக செவிவழி சேதியும் உண்டு. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.
இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அனுமார் தீர்த்தம். இங்க ஓர் அநுமார் கோயில் இருக்கிறது. இதற்குச் சற்று மேல், கருட தீர்த்தம், கருடர் கோயில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும் கோயிலும் இருக்கு. மலையில் வட பக்க சரிவில், பார்த்த உடனேயே பாபத்தை போக்கக் கூடிய பெரிய அருவி தீர்த்தம் இருக்கிறது. அழகர் கோயிலுக்குச் சிறிது வடக்கே போனால் இருக்கும் உத்தர நாராயண வாவி என்னும் தீர்த்ததினால் தான் கோயில் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும் 2 மைல் அப்பால் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரவேண்டும். சைத்ரோற் சவ காலத்தில் அழகர் மதுரைக்கும் வண்டியூருக்கும் போய்த் தங்கி இருக்கும் போது கூட இந்தத் தீர்த்தமே கொண்டு வரப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால் அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுகிறது. இந்த விநோதத்தின் ரகசியம் இன்றுவரை ஒருவருக்கும் புலப்படவில்லை.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்து பற்றி மீனாட்சி சிவனிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தாள். உங்களோடு வந்திருப்பவர்களை உடனடியாய் சாப்பிடச் சொல்லுங்க. இங்கு பல்வேறு உணவுகள் கொட்டிக் கிடக்கின்றது. நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அனைத்தும் வீணாகி விடுமே!ன்னு கிண்டலடிக்க..., இப்போது எங்கள் யாருக்கும் பசியில்லை. எனது கணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு மட்டும் பசிக்கின்றதாம். அவனுக்கு மட்டும் விருந்து வைங்கள் என்று சுந்தரேஸ்வரர் சொல்லி இருக்கிறார்.
மலையளவு இருந்த விருந்து சாப்பாட்டை ஒரு நொடியில் விழுங்கி இன்னும் கொண்டா” வென வாய் பிளந்து நிற்கும் குண்டோதரனை கண்டு மீனாட்சி திக்கித்து நின்று, தன் தவறை உணர்ந்து சுந்தரேஸ்வரரிடம் தஞ்சம் புகுந்தாள். ஐயனும் அன்னப்பூரணியை அழைத்து அவன் பசியை தீர்க்கச் சொன்னார். அன்னை அளித்த உணவுகளை சாப்பிட்டு, ஏரி, குளம், வாய்க்காலில் இருந்த தண்ணீரை குடித்தும் அவன் தாகம் அடங்காமல் ஈசனிடம் முறையிட்டான்
உடனே, தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறாது. நீ அங்கு செல் என கட்டளையிட்டார். குண்டோதரனிடம்..., "" நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் ,'' என்றார். இதுவே "வைகை' ஆனது. இப்படித்தான் வைகை உருவானது. நதிநீர் இணைப்பை அன்றே சிவப்பெருமான் துவக்கி வைத்துவிட்டார். நாம்தான் அதை தொடரவில்லை. காற்றுக்கு போட்டிப்போடும் வகையில் பாய்ந்து வந்ததால் இதற்கு வேகவதின்னும் பேர் உண்டு.வைகையை பாழ்படுத்தியதோடு அழகரையே செயற்கை ஊற்றில் இறக்கி விட்டு தீராத இன்னல்களுக்கு ஆளாகிவிட்டோம். கீழிருக்கும் மாமனிடமும், மருமகனிடமும் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வைகையில் நீர் கொணறச் செய்வோம்.
மதுரை மாடுத்தவனியிலிருந்தும் ,பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தும்  ,நிறைய பேருந்துகள் அழகர் கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.அங்கிருந்து தேவசம் போர்டு வேனில் 10 ரூபாய் கட்டணமாக ஏற்றி செல்கிறார்கள் .நடைப்பயணமாகவும் செல்லலாம் ஆனால் குரங்குகள் தொல்லை அதிகமாக இருக்கும் .தனியே நடைபயணம் செல்வது அவ்வுளவு உசிதமல்ல.
மீண்டும் வேறு ஒரு பக்தி பதிவுகளோடே மீண்டும் சந்திக்கலாம் ..நன்றி  

Saturday, November 05, 2016

ஐந்தாவது படைவீடு திருத்தணிகை - பக்தி

முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணிகை ஐந்தாவது படைவீடாகும்.
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ண்ம். 'உலகப்பற்று' எனப்படும் ஆசையையும் குறிக்கும். 
'இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்' என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண் கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத் தன்மையைக் குறிக்கும். இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இது போன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே இறைவன் விரும்புவான். 
அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப் பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவள் அவரைத் தழுவினாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள்.
மக்கள் அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத் தலம் இது. முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் 'தணிகை மலை' என்று பெயர் பெற்ற இத்தலம் 'திருத்தணி' என்று மாறியது.
 இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முருகனுக்குரிய 'குமார தந்திர' முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது.
கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவர் காட்சி அளிக்கிறார். ஒரு நாய் பைரவருக்குப் பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக 'கஜவள்ளி' என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளிவாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டில் 1008 குட பால் அபிஷேகம் நடக்கும்.
மூலஸ்தானத்திற்கு பின்புறபுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீது கொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிக அளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.
முருகத்தலங்களில் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.சித்திரை மாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.
பள்ளியறை பூஜையின் போது ஒரு நாள் தெய்வானையும், ஒரு நாள் வள்ளியுமாக முருகனுடன் அருள் செய்கின்றனர்.திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர்.இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார். திருத்தணிகை மலையின் வடக்கே உள்ள மலை வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன் உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.நாளை பழமுதிர் சோலையிலிருந்து முருகன் புகழ் பார்ப்போம்

Tuesday, November 01, 2016

அறுபடை வீடு - முதல் படை வீடு திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு .  247 தேவாரத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இந்த தலத்தைப் பத்தி பாடியிருக்காங்க.
இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் இருப்பது வேறு எந்த முருகன் திருக்கோவில்களிலும் காணக்கிடைக்காத காட்சி. 
திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். துர்க்கையின் சன்னதி எதிரிலேயே கொடிமரமும், கோபுரமும் இருந்து தலத்தின் சிறப்பை அதிகரிக்கின்றன. கருவறையில் துர்க்கைக்கு இடது புறம் கற்பக விநாயகர் அருளுகிறார். கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு சிறப்பு. 
இந்த கோவிலில் கருவறைக்கு மேலே விமானம் இல்லாததால் மலையையே விமானமாக வணங்குகின்றனர். சிவபெருமானே மலை வடிவில் அருளுகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். 
அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இங்குதான் சூரசம்ஹரத்தின் போது சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குவார். இங்கு மட்டும் தான் முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மற்ற வீடுகளில் நின்ற கோலத்தில் அருளுகிறார். இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அருளுகிறார். அருகில் நாரதர், இந்திரன் ஆகியோர் உள்ளனர். பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். சூரியன், சந்திரன், கீழே முருகனின் வாகனமான மயில் மற்றும் ஆடு உள்ளது. இது மற்ற தலங்களில் காணக் கிடைக்காத அபூர்வக் காட்சி ஆகும்.
சுப்பிரமணியரின் தரிசனம் காண்பதற்காக, தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதாக ஐதீகம்.சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். இங்கு இவர்தான் பிரதான மூர்த்தி ஆவார். விழாக் காலங்களில் இவருக்கு தான் கொடி ஏற்றப்படுகிறது. இருப்பினும் முருகனே சிவபெருமானின் வடிவம் என்பதால் அவரே வீதி உலா வருகிறார் என்பது இன்னொரு சிறப்பு.
 மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார். இங்கு சிவபெருமானுக்கு எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சிவனுக்கு எதிரே நந்தி இல்லை, பெருமாளுக்கு எதிரே கருடன் இல்லை. மாறாக சிவனும் பெருமாளும் எதிர் எதிரே உள்ளனர். ஆகவே இதனை மால்விடை கோவில் என்று அழைப்பது இன்னொரு சிறப்பு. 
இந்த பவளக்கனிவாய்ப் பெருமாள் தான் மதுரையில் நடைபெறும் மீனாக்ஷி திருக்கல்யாணம் அன்று சொக்கருக்கு தாரை வார்த்து கொடுக்கப்போவார்.ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே "திருப்பிய பரங்குன்றம்" என்றழைக்கப்பட்ட இவ்வூர் "திருப்பரங்குன்றம்" என்று மருவியது.
அருணகிரியார் தன் பாடல்களில் தென்பரன்குன்றுரை பெருமாளே என்று பாடுகிறார். இப்போதும் மூலவர் சிவன் தான். இவரை "சத்தியகிரீஸ்வரர்" என்று அழைக்கின்றனர்.முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாற்றப்படுகிறது. முருகன் குடைவரை மூர்த்தியாக இருப்பதால் இந்த ஏற்பாடு. 
புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று முருகனிடம் உள்ள வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இங்கு மட்டுமே ஆகும். வேலுக்கு முக்கியத்துவம் ஏன் என்றால் சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததே ஆகும்.சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருப்பது மற்றுமோர் சிறப்பு ஆகும்.
தங்களை சூறை ஆடிய சூரபத்மனை சுப்பிரமணியர் அழித்ததின் நன்றிக் கடனாக அவருக்கு தனது மகளான தேவசேனாவை திருமணம் செய்து கொடுக்க இந்திரன் ஆசைப்பட்டார். அங்கு கூடி இருந்த பிரம்மா மற்றும் விஷ்ணு போன்றவர்களிடம் அதை அவர் தெரிவிக்க அவர்களும் அதை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அது குறித்து அவர்கள் சுப்ரமணியரிடம் கூறியவுடன் அவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே இந்திரன் தனது மனைவி இந்திராணி மற்றும் மகள் தேவசேனாவை அழைத்து வருமாறு தூதுவர் ஒருவரை அனுப்பினார். திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த திருமணத்திற்கு சிவனும் பார்வதியும் வந்து சுப்ரமணியருக்கு வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்கள். அது முதல் அந்த இடம் புகழ்பெற்ற தலமாயிற்று.
சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்தபோது, மகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும் சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டு சரவணா பொய்கைக்கு வந்து தவம் இருந்தார்கள். அவர்களது தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிருதவல்லியிடம் ''நீ இந்திரனின் மகளாகப் பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன்' என்றார். அது போலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார். அவளும் சிவ முனி என்ற முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப்பட்டு சுப்ரமணியரை மணந்து கொண்டார்.
அதற்கு முன்னர் அமிருதவல்லி ஒரு சிறிய பெண்ணாக வடிவெடுத்து மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று 'நான் மகா விஷ்ணுவின் மகள் ஆவேன். ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை அவர் உங்களிடம் தந்து உள்ளார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதரை வரவழைத்து அந்தக் குழந்தையைப் பாதுகாக்குமாறுக் கூறினார். அந்த யானையும் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவளை எடுத்து வளர்த்தார். அதனால்தான் யானையினால் வளர்க்கப்பட்ட அவள் தெய்வ யானை என்றப பெயரைப் பெற்றாள். அவளுக்கு திருமண வயது ஆயிற்று. சூரபத்மனை அழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கும் திருமணம் ஆயிற்று.
இத்திருக்கோவில் மதுரை , மாட்டுதாவணியில் இருந்து ,திருமங்கலம் செல்லும் பேருந்து வழிகடத்தில் இருக்கிறது.மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன .இந்த திருக்கோவிலின் அருகில் தான் மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி இருக்கிறது .
சஷ்டி விரதத்தை முன்னிட்டு இன்னிக்கு அறுபடை வீடுகள்ல முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்.நாளைக்கு இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் பற்றி பார்ப்போம்..