Showing posts with label ஆன்மீகம்.. Show all posts
Showing posts with label ஆன்மீகம்.. Show all posts

Friday, November 17, 2017

புண்ணிய நதிகளில் குளித்தாலே பாவம் போகுமா?!


ஒருமுறை கைலாயத்தில் நம்ம சிவனும், பார்வதியும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்ப, பார்வதி சிவனை நோக்கி, மாம்ஸ்! புண்ணிய நதிகளில் நீராடினா பாவம் கரையும்ன்ற நம்பிக்கைல எல்லா நதிகளிலும் இத்தனை பேர் நீராடுறாங்களே! அப்ப அவங்க பாவம்லாம் நீங்கி  அவங்க புண்ணிய ஆத்மாக்களா ஆகிடுவாங்கதானே?!  அப்ப, பூலோகத்தில் யாரும் பாவிகளே இருக்கக்கூடாதுல்ல, ஆனா, அப்படி நீராடியும் பூலோகத்தில் பாவிகள் இருக்க காரணம் என்னன்னு கேட்டிருக்காங்க.  இந்த காலத்து ஆம்பிளைங்கக்கிட்ட கேட்டா, கோவிச்சுக்கிட்டு உனக்கு எது சொன்னாலும் புரியாதுன்னுட்டு போய்டுவாங்க. ஆனா, சிவன் தன் இடப்பக்கத்தையே தன்னோட டார்லிங்க் பார்வதிக்கு கொடுத்ததால, டியர்! உனக்கு சொன்னா புரியாது. வா நேரில் புரிய வைக்குறேன்னு சொல்லி, வயசான கிழவன், கிழவியா மேக்கப் போட்டுக்கிட்டு ஹாயா கிளம்பி பூலோகத்துக்கு வந்தார். 

காசிக்கு வந்து, அங்க பார்வதிக்கிட்ட, நாம நீராட கங்கையில் இறங்குவோம். நான் கங்கை வெள்ளத்துல அடிச்சுட்டு போற மாதிரி போறேன்.  நீ காப்பாத்துங்கன்னு கத்து. காப்பாத்த வர்றவங்கக்கிட்ட நான் சொல்லுற மாதிரி சொல்லுன்னு சொல்லி வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற மாதிரி சிவன் ஆக்ட் கொடுக்க, கூடவே பார்வதியும் சூப்பரா பர்பாமென்ஸ் பண்ண, கரையில் இருந்த பண்டிதர் உட்பட அனைவரும் வெள்ளத்தில் குதிச்சு காப்பாத்த தயாரானாங்க. உடனே, பார்வதி, மக்களே! எவனொருவன் பாவம் பண்ணாம புண்ணிய ஆத்மாவா இருக்கானோ அவங்கதான் என் புருசனை காப்பத்த முடியும்ன்னு சொல்லுது. ஒருத்தர் ஆண்டவனுக்கு தெரியாம கூட தப்பு பண்ணிடமுடியும், மனசுக்கு தெரியாம தப்பு செய்ய முடியாது. அதுப்போல தன் பாவங்களை உணர்ந்தவங்களாம்  டூ ஸ்டெப் பேக் அடிக்க, எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன் கங்கையில் பாய்ந்து முதியவர் வேடத்திலிருந்த சிவனை காப்பாத்தி இருக்கார். 
அட, பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா யாருன்னு எல்லாரும் காங்கையில் குதித்தவனை பார்த்து எல்லாரும் வாய் அடைச்சு போய் இருக்காங்க. ஏன்னா, அவன் கொலை, கொள்ளை, கற்பழிப்புன்னு எல்லா பாவத்தையும் செய்ய அஞ்சாதவன். உடனே, கிழவியா வந்த பார்வதிக்கிட்ட எல்லாரும் சண்டை பிடிக்குறாங்க, என்னம்மா! நீ பாவமே செய்யாதவங்கதான் காப்பாத்த முடியும்ன்னு சொன்னே. இப்ப ஒரு படுபாவி உன்ற வூட்டுக்காரரை காப்பாத்தி இருக்கானேன்னு.. உடனே பார்வதியும் என்னப்பான்னு அவனை கேட்க, அதுக்கு அவன் சொன்னான், ஆமா, நான் பாவம் பண்ணவந்தான்,. ஆனா, கங்கையில் குளிச்சா பாவம் போகும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்படி பார்த்தா, நான் கங்கையில் குதிச்ச உடனே என் பாவம் போய் இருக்கும். இப்ப நான் புண்ணிய ஆத்மா, அதான் அவரை காப்பாத்த முடிஞ்சுதுன்னு சொல்லிட்டு போய்ட்டானாம். அப்ப, பாவத்தை செஞ்சுட்டு, செஞ்சுட்டு கங்கையில் போய் குளிச்சா பாவம் போய்டும்ன்னு குதர்க்கமா யோசிக்கக்கூடாது. நம்பிக்கையோடு, இறைவன் மேல் பாரத்தை போட்டுட்டு செய்யனும். அதை அந்த பாவி செஞ்சான். ஆனா, மத்தவங்கலாம் சும்மா சாஸ்திரத்துக்காக  குளிச்சவங்க. இப்ப தெரியுதா தேவி?! பூமியில் இன்னும் பாவிகள் இருக்க காரணம்ன்னு தன்னோட மனைவிக்கு புரிய வச்சு  கைலாயத்துக்கு போய்ட்டாங்க. 

பொதுவா கங்கை, யமுனை, சரஸ்வதி நதியில் குளித்தால் பாவம் கரையும் என்பது நம்பிக்கை. அதினினும் புனிதமானது  துலா ஸ்நானம். இது பாபத் துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஏனெனில் கங்கை, யமுனை ஆகிய புண்ணிய நதிகள் இங்கு வந்து காவிரியில் குளித்து புனிதம் ஏற்றுச் செல்லும் மாதம் ஐப்பசி. அதனால் அப்புனித நதிகளின் பங்கும், இக்காவிரியில் கலந்துவிடுவதால், இந்த காவிரி நீராட்டம் பல மடங்கு நன்மையை ஐப்பசி மாதத்தில் அளிக்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்நதியில் நீராடுபவரும் உண்டு. இத்தமிழ் மாதக் கடைசியில் ஒரு நாளேனும் நீராடலாம் என வருபவர்களும் உண்டு. கடைசி நாளானதால் இதற்கு கடை முழுக்கு என்று பெயர்.



முடவன் முழுக்கு ...
பாவத்தின் பலனா முடவனா பிறந்த ஒருவன்,  வருந்தி,  இனி எப்பிறவியிலும் இந்த நிலை ஏற்படக்கூடாது ன்ற பிரார்த்தனையை முன் வைத்து, தொலைதூரத்தில் இருந்து  காவிரியில் நீராடக் கிளம்பினான். அவன்  தவழ்ந்து வந்ததால, ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதமும் வந்திடுச்சு.  தன் நிலை நினைச்சு  அவன் மனம் அழுது புலம்பியது. தன் நிலை மாறாதா/! அடுத்த பிறவியிலும் தான் அல்லல் படனுமான்னு நினைச்சு  மனம் புழுங்கினான்.

அவன் புனித நதியான காவிரியையே எண்ணி வந்த இறை நம்பிக்கையின் காரணமா, ஓர் அசரீரி ஒலித்தது. இன்றைய  "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என ஒலிக்கிறது.  அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள் செய்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" ன்னு பேர் வந்திச்சு.

பொதுவா புண்ணிய நதிகளில் புனித நீராடுவதற்குன்னு சாஸ்திரங்கள் சில வழிமுறைகளை சொல்லி இருக்கு.  நீரில் கால் வைக்கும் முன், குனிந்து இரு கைகளாலும் நீரை ஒதுக்கி தூய்மை செய்ய வேண்டும். பின்னர் ஒரு கை நீர் கொண்டு தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். கண்கள் இரண்டையும் துடைத்துக் கொள்ள வேண்டும். இரு கைகளிலும் கிண்ணம் போல் ஏந்தி நீர் மொண்டு, இறைவனை பிரார்த்தித்தபடி உட்கொள்ள வேண்டும்.
அதன்பின் முழுமையா  நீரில்  இறங்கலாம். சோப்பு, ஷாம்பு மாதிரியான காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. வாசனை பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை இல்லை. ஆற்றில் குடைந்து நீராடி, மூன்று முழுக்குப் போட வேண்டும். ஈரத்தோடு இடுப்பளவு நீரில் நின்று, இரு உள்ளங்கைகளையும் இணைத்து கிண்ணம் போலாக்கி நீர் மொள்ள வேண்டும். சூரியன் இருக்கும் திசை நோக்கி திரும்பி, இரு கண் மூடி, இறைவனை பிரார்த்தித்து, இரு கைகளில் உள்ள நீரை, அவற்றில் இடைவெளி வழியாக, இறைவனுக்கு அர்க்கியமாய் எண்ணி ஆற்றிலேயே விட்டுவிட வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும். அங்கப்பிரதட்சணம் செய்வதென்றால் ஈர உடையோடு செய்யலாம். மற்றபடி, ஈரம் போக உடலைத் துடைத்து, உலர்ந்த ஆடை உடுத்தி, நெற்றிக்கு இட்டுக் கொண்ட பின்னரே கோயிலில் உள்ள இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இதனால் குறைவில்லா புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடையின்றி ஆற்றில் நீராடக்கூடாது. அதேப்போல் நீர் நிலைகளில் எச்சில் துப்புவது, சிறு நீர் கழித்தலும் கூடாது. புண்ணிய நதிகளில் நீராடும்போது இறை சிந்தனையும், இறை தியானமும் முக்கியம் என்பது நம் முன்னோர்கள் வகுத்த நியதி. அப்படி காவேரியில் நீராட முடியாதவர்கள், தான் குளிக்கும் இடத்திலிருக்கும் தண்ணீரில் காவிரியை ஆவாகணப்படுத்தி, தாயே! நின்னை சரணடைகிறேன், என் பாவங்களை போக்கி என்னை புண்ணிய ஆத்மாவாக மாற்று என வேண்டிக்கொண்டாலே போதும். புண்ணிய நதிகளில் நீராடுவதன் முழு பலன் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும். அப்படி முடியவில்லையென்றாலும், உச்சி வேளைக்குள் நீராடல் நலம். அதன்பின் நீராடுவதால் எந்த பயனும் இல்ல. அதேப்போல, இரவில் புண்ணிய நதிகளில் நீராடவே கூடாதாம்.

புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் எல்லாருக்கும் கிட்டாது. அதனால, நம்ம வீட்டுலயே குளிக்கும்போது காவிரி, கங்கை அம்மனை மனசுல நினைச்சுக்கிட்டு குளிச்சு புண்ணியம் பெறுவோம்.

தமிழ்மணம் ஓட்டு அளிக்க..

நன்றியுடன்,
ராஜி.

Monday, April 09, 2012

ஆயிரம் பொய் சொல்லி..... ஐஞ்சுவை அவியல்

ஆனை முகத்தோனே....,
                                     
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது?

 எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். 

அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். 

சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். 

அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.

விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
நன்றி: தினத்தந்தி ஆன்மீக மலர்...,                                              
                              
 ஆயிரம் பொய் சொல்லி....
மனைவி: ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணுன்னு சொல்றாங்களே. நம்ம கல்யாணத்துக்கு நீங்க எத்தனை பொய் சொன்னீங்க?
கணவன்: பொண்ணு அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்.
மனைவி:???!!!!!
                                  
காதுல விளக்கா...,?!
என்  அண்ணனோட மகன் கதிரவன் , எல்.கே.ஜி படிக்குறான்.  ஒரு நாள் காது வலிக்குதுன்னு சொல்லி அழுதான். உடனே, ''காதுல கொஞ்சம் எண்ணெய் விடலாம்...''ன்னு சோல்லி பாட்டிலை எடுத்தாங்க. எங்க பாட்டி. சுட்டியோ தன் இரு கைகளால் காதைப் பொத்திக்கிட்டு இன்னும் அதிகமா அழ  ஆரம்பிச்சுட்டான். 'வலி  அதிகமாகிடிச்சோன்னு' என்று பதறி போய் விசாரிச்சேன், ''என் காதுல திரி போட்டு விளக்கேத்தப் போறாங்க அத்தை... வேணாம்ன்னு சொல்லு அத்தைன்னு என்னை கட்டிப்பிடிச்சு அழ.. நாங்கள் சிரிச்ச சிரிப்புல சில நொடிகள் அவன் தன் காது வலியையே மறந்துட்டான்!
                                                          
என்னை  கண்டுபிடி....,
காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
விடை வழக்கம் போல அடுத்த பதிவில்.....,  
சமைக்க போறீங்களா?!...,
வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும். 
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்