Showing posts with label குந்திதேவி. Show all posts
Showing posts with label குந்திதேவி. Show all posts

Wednesday, March 04, 2020

பெண் குலத்திற்கு பாடம் சொல்லும் குந்திதேவி-வெளிச்சத்தின்பின்னே..

சிலர் ராஜவம்சத்திலே பிறந்து ராஜவம்சத்திலே வாழ்க்கைப்பட்டு ராஜக்குமாரர்களையே பெற்றெடுத்தாலும் அவர்கள் வாழ்க்கை ஒருபோதும் சுகமாய் இருந்ததில்லை.   . நமக்கு சரியெனப்படுவது அடுத்தவருக்கு தப்பாக படும். நாம் கொண்டாடும் ஒரு விசயம் இன்னொருவருக்கு அருவருப்பாய் தெரியும்.  இத்தனை விளக்கமும் எதுக்க்காகன்னா , வெளிச்சத்தின் பின்னே.. தொடரில் இன்னிக்கு நாம பார்க்கப்போறது மகாபாரத காதாபாத்திரமான குந்தி தேவியை..  என்னதான் வீரதீர பராக்கிரமாசாலிகளை பெற்றெடுத்திருந்தாலும் கணவனல்லாமல் மற்றவருக்கு குழந்தை பெற்றவள், அதிலும் ஒருபிள்ளையை கல்யாணத்துக்கு முந்தியே பெற்று அதை ஆற்றில் விட்ட கலமனசுக்காரின்னு குந்தி தேவியை ஏளனத்தோடு கடந்து செல்வோர் பல உண்டு... காரணமில்லாமல் காரியமில்லை.,புராணங்களுக்கு மட்டுமில்லை. நம்ம வாழ்க்கைக்கும் பொருந்தும் காரணமில்லாத ஒரு காரியத்தில் எந்த அனுபவத்தையும் நாம் பெற்றுவிட முடியாது... ராஜமாதான்னு மதிப்பான உயரத்தில் இருந்தாலும் சராசரி பெண் அனுபவித்த விசயங்களைக்கூட குந்திதேவி அடைந்ததாய் தெரியவில்லை.  இனி குந்தி தேவி பத்தி பார்க்கலாம். 

யாதவ குலத்தில் வந்த சூரசேனான்ற சிற்றரசுக்கு ராஜாவான சூரசேனாவின் மகளாக பிறந்தார். அங்கு அவரது பெயர் பிருதா. சூரசேனா தனது நண்பனான குந்திபோஜனுக்கு தனது மகளை தத்து கொடுத்தார். குந்திபோஜன் பிருதாவை குந்தியாக்கினார். குந்தி போஜனின் இன்னொரு மகன் கிருஷ்ணரின் தந்தை வாசுதேவன். பருவ வயதுக்கு வந்த குந்திதேவி அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினாலும் எதிலும் பற்றில்லாமலும், பொறுமையுடன் இருப்பதை கண்டு வளர்ப்பு பெற்றோர் பெருமை பட்டாங்க. ஒருமுறை தனது அரண்மனைக்கு வந்த துர்வாசர் முனிவருக்கு பணிவிடை செய்யும் பொறுப்பினை குந்தி தேவியிடம் ஒப்படைத்தார். துர்வாசர் மிகுந்த கோபக்காரர். அதனால், யாரையும் நம்பாமல் தந்தை தனக்களித்த பொறுப்பை திறம்பட குந்திதேவி செய்தார். துர்வாசர் குந்திதேவியின் சேவையில் மகிழ்ந்து, குந்தியை பாராட்டும் விதமாக மந்திரம் ஒன்றை கற்றுக் கொடுக்கிறார். யாரை மனதில் நினைத்து இந்த மந்திரம் சொன்னாலும் உனக்கு அவர் சாயலில் மகன் பிறப்பான் என்று சொல்லிச் செல்கிறார்.

அந்த மந்திரத்தினை சோதித்து பார்க்க மனது அடம்பிடித்தது. இது தவறுன்னு அறிவு சொன்னது. தினத்துக்கும் மனதும், புத்தியும் சண்டையிட்டு கடைசியில் மனசு வென்றது. யாரை நினைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில், வெயில் சுட்டெரிக்க இயல்புக்கு திரும்பியவருக்கு திடீரென்று ஒரு எண்ணம், வானத்தில் மேலே நின்று கொண்டிருந்த சூரியனைப் பார்த்து முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை உச்சரித்துவிட்டார். குந்திதேவியே! எதிர்பாராதது நடந்தது. சூரிய அம்சத்துடன் கர்ணன் பிறந்தான்.  பெண்புத்தியாச்சே! பட்டபின் புத்தி வந்தது விளைவினை நினைத்து அழுதாள். ஊரார் என்ன பேசுவர்?! திருமணத்திற்கு முன்னால் பிறந்த இந்த குழந்தையை என்ன செய்ய?  மந்திரம் சொன்னதால் குழந்தை பிறந்தது என சொன்னால் யாராவது நம்புவார்களா? என பலவாறாய் குழம்பினாள் குந்தி, பிறகு  ஊரார் அவச்சொல்லுக்கு பயந்து கர்ணனை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டாள்..
பிறகு, அதுப்போன்றதொரு தவறு மீண்டும் நிகழாதவாறு கண்ணியம் காத்தாள். குந்திபோஜன் குந்திக்கு திருமண வயது வந்ததை எண்ணி சுயவரம் நடத்த, அதில் குந்தி தேவி பாண்டுவை கணவனாக தேர்ந்தெடுத்து மணந்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் சென்றாள். அதன்பிறகு, மாத்ரி என்ற இன்னொரு பெண்ணை  பாண்டு திருமணம் செய்து கொள்ள, அவளை தனது சகோதரியாகவே பாவித்து அவளை ஏற்றுக்கொள்கிறாள். ஒருமுறை பாண்டு  வேட்டைக்குச் சென்றபோது, இரைக்கு வைத்து எய்த அம்பு, குறிதவறி,  மனைவியோடு உடலுறவில் இருந்த கிண்டாமான்ற முனிவர்மீது பட்டது.  புணர்தலில் ஈடுப்பட்டிருந்த கிண்டாமா என்ற முனிவரை தாக்குகிறது. முனிவர், இறக்கும் நிலையில் மனைவியுடன் உறவு கொண்டால் உனக்கு மரணம் நிகழும் என பாண்டுவிற்கு சாபமிட்டு இறந்துவிடுகிறார்  . இதனால் வருந்திய பாண்டு தனக்கு வாரிசு கிடைக்காது என எண்ணிய பாண்டு,  அதனால், ராஜ்ஜிய பொறுப்பு வேண்டாம் எனச்சொல்லி நாட்டை விட்டே வெளியேறுகிறார். உடன் குந்தியும் மாத்ரியும் காட்டிற்கு சென்றாகள்.    மனைவிகளுடன் உடலுறவு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தான் பாண்டு.   உடலுறவு கொள்ளாததற்கு காரணம் கேட்க, முனிவர் கொடுத்த சாபத்தினை மனைவிகளிடம் சொல்லி தனக்கு வாரிசு இருக்காது என வேதனைப்படுகிறார் பாண்டு. தனக்கு வாரிசு இல்லைன்ற  கணவரின் கவலையை போக்க எண்ணிய குந்தி தேவி, துர்வாச முனிவர் தனக்கு அளித்த மந்திரத்தை பத்தி சொல்ல, அதைக்கேட்டு மகிழ்ந்த பாண்டு, வாரிசை பெறும்படி கேட்கிறார். உடன் எமதர்மனை நினைத்து தருமரையும்,, வாயுவை நினைத்து பீமனையும் இந்திரனை நினைத்து அர்ஜுனையும் பெற்றெடுக்கிறாள். தனக்கு அளித்த மந்திரத்தை மார்தியுடன் பகிர அவரும் நகுலன் சகாதேவன் என இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கிறார். ஒரு கட்டத்தில் முனிவரின் சாபத்தை மறந்து பாண்டு மார்டியுடன் உறவு கொள்ள, பாண்டு இறக்கிறார். பாண்டுவோடு மார்தியும் உடன்கட்டை ஏறுகிறாள். ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்திதேவிக்கு வந்தது.

பாண்டவர்களை அழைத்துக்கொண்டு  ஹஸ்தினாபுரத்திற்கு  வந்தாள் குந்தி. அங்கு, யார் அரசர் என்ற போட்டி ஏற்பட்டது. ஒரு பக்கம் துரியோதனனும் இன்னொரு பக்கம் தருமரும், அடுத்த அரசர் பதவிக்கு போட்டியிட்டார்கள். திருதிராஸ்டிரர் தருமரை அரசனாக பதவியேற்கும்படி அழைக்க துரியோதனன் கோபம் கொள்கிறான். இங்கிருந்து மகாபாரத கதை சூடு பிடிக்கிறது..... இதன் பிறகே தன் மாமா சகுனியுடன் இணைந்து காயை நகர்த்த துவங்குகிறான் துரியோதனன்... துரியோதனனால் பல துன்பத்திற்கு குந்திதேவியும், அவளது பிள்ளைகளும் ஆளாகின்றனர்.

மௌனம் கலகத்தை அகற்றும்ன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது.  எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டாள் குந்திதேவி. ஒருமுறை பிள்ளைகளோடு தங்கியிருந்த அரக்கு மாளிகைக்கு துரியோதனன் தீயிட, அங்கிருந்து பிள்ளைகளோடு தப்பித்த குந்தி, 'ஏகசக்ரா' எனும் நகரில் வசிக்கலானாள்.  அங்கு வாழ்ந்த மக்கள், பகாசுரன் எனும் அசுரனது கொடுமைகளால் அவதிப்பட்டு வந்தனர். மகாத்மாக்கள் தங்களது துயரத்தை மறந்து, மற்றவர்களது துயரை துடைப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும். குந்தியும் அப்படித்தான்! தனக்கு தஞ்சம் கொடுத்த ஊராரை காப்பாற்ற தன் மகன் பீமனை பலிகொடுக்க துணிந்து பகாசுரனின் பசிக்கு அனுப்பினாள். ஆனால், விதி பீமன் பகாசுரனை வதம் செய்ய வைத்தது.
அர்ஜுனன் திரௌபதியை கொண்டுவந்து பிட்சை என்றபோது, ஐவரும் பகிர்ந்துக்கொள்ள சொல்லிவிட்டு,  தான் பங்கிட சொன்னது ஒரு பெண்ணை என நினைத்து வருந்தி கொடுத்த வாக்கை திரும்ப பெறமுடியாத சூழலில் தவித்தாள். பின்னர், துர்வாசர், திரௌபதியின் பூர்வஜென்ம கதையினை சொல்லி, அவள் ஈசனிடம் வாங்கிய 5 மணக்க வேண்டும் என வாங்கிய வரத்தினை எடுத்து சொல்ல மனம் அமைதியானாள். சூதாட்டம், மருமகளின் துகிலுரிப்பை கேள்விப்பட்டு துடிதுடித்தாள், மகன்களுடன், வனவாசம் செல்ல கிளம்பியபோது, அவளின் முதுமையை எடுத்துச்சொல்லி அரண்மனையிலேயே இருக்க வைத்தனர் பாண்டவர்கள். ஆனாலும் கிருஷ்ணர் மூலமாய் தருமத்தின் படி நடக்கச்சொல்லி  தருமருக்கு அடிக்கடி சொல்லி அனுப்பினாள். 

குருசேத்ர போரின்போது,  தன்னால் கைவிடப்பட்ட குழந்தையான கர்ணன் கௌரவர்களுக்கு ஆதரவாகவும், பாண்டவர்களுக்கு எதிராகவும் களத்தில் நிற்க, அதனால் அவனை சந்திக்க செல்கிறாள் குந்திதேவி.  உன்னை பெற்றெடுத்த தாய் நான்தான் எனக்கூறி, பாண்டவர்கள் பக்கம் வந்து விடுமாறு கர்ணனை அழைக்கிறார் குந்தி. என்னதான்  நீங்கள் பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் என்னை வேண்டாமென்று ஆற்றில் விட்டுவிட்டீர்கள். பல இடத்தில் கூனிக்குறுகி நின்றபோது என்னை ஆதரித்து சிறு ராஜ்ஜியத்திற்கு அரசனாக்கி எனக்கு மதிப்பளித்தவன் துரியோதனன். அதனால்,  துணையாகவே நான் நிற்க விரும்புகிறேன் என சொல்லி அவளுடன் வரமறுக்க,  தான் பெற்றெடுத்த பிள்ளைகளே எதிரெதிர் பக்கமாக நின்று போரிடுகிறார்களே என மனம் வருந்தினாள். தாயின் வருத்தத்தைக் கண்டு நெகிழ்ந்த கர்ணன், குந்திக்கு,  அத்தனை பேருடனும் போரிட மாட்டேன். அர்ஜூனன் தான் என் இலக்கு, போர் முடியும்போது உனக்கு ஐந்து மகன்கள் இருப்பார்கள். போரில் ஐவரில் அர்ஜூனன் அல்லது கர்ணன் யாராவது ஒருவர் இறப்பர், இருப்பர் என சத்தியம் செய்ய,  குந்தி ஏற்றுக்கொள்கிறாள். உச்சக்கட்டத்தில் குருச்சேத்திர போர் நடந்து கொண்டிருக்க அர்ஜுனனின் வில் தாக்கி கர்ணன் உயிரிழக்கிறார். பாண்டவர்கள் போரில் ஜெயிக்க ஹஸ்தினாபுரத்தின் அரசனாக தருமர் பதவி ஏற்கிறார். குந்திதேவி ராஜமாதாவானாள். 

தன்னுடைய நூறு மகன்களையும் குருச்சேத்திர போரில் பறிகொடுத்துவிட்டிருந்த திருதிராஸ்டிரர் காந்தாரியுடன்,  நாட்டை துறந்து காட்டில் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புகிறார். அவர்களுடன் செல்ல குந்திதேவி ஆயத்தமாகினாள். அவளைத் தடுத்து தங்களுடன் இருக்கச் சொல்லிய பிள்ளைகளிடம்,   தங்களது முடிவு இதுவானால்... எங்களை எதற்காக போரில் ஈடுபடத் தூண்டினீர்கள்? இப்படியொரு பேரழிவை நிகழ்த்தாமல் இருந்திருக்கலாமே? இத்தனை சிரமங்களும் எதற்காக?! உயிரினும் மேலான உங்களைப் பிரிவதற்காகவா?'' என்று பீமன் கோபங்கொள்ள, நீங்கள் சத்திரிய தர்மத்தில் ஊன்றி இருக்கவும். அறத்தை நிலைநாட்டி நல்லாட்சியை அமைப்பதற்காகவும்தான் இத்தனை சிரமங்களும். எனக்கு அரச போகங்களில் பற்று இல்லை. தவத்தில் ஆழ்ந்து கணவனுடன் இணைய விரும்புகிறேன்’ என்று கூறி, காட்டிற்கு கிளம்பினாள். அங்கு,  சில வருடங்கள் தவ வாழ்க்கை மேற்கொண்டவர்கள், திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் மூவரும் உயிர் துறக்கினறனர்.

அரச குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்ந்தாலும் துளியும் அவற்றில் பற்றில்லாமல் வாழவும், அறியாமல் செய்த தவறு மீண்டும் நேராமல் வாழ்ந்த விதமும்,  கணவனுக்காக எதையும் செய்யும் திடமும், புகுந்த வீட்டினர் தப்பே செய்தாலும் விட்டுக்கொடுக்காத மனதும், பிள்ளைகளுக்கு நன்னெறி ஊட்டி வளர்க்கும் கடமையையும் குந்திதேவியை பார்த்து எல்லோரும் கத்துக்கனும்.இல்லறத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஆசையையும் அகங்காரத்தையும் விலக்கி வாழ்வில் நலம் பெற, இன்றைய பெண்களுக்கு குந்திதேவியின் கதை ஒரு பாடம்தான்.

வெளிச்சத்தின் பின்னே தொடரும்..

நன்றியுடன்,
ராஜி.

Tuesday, February 19, 2019

குந்திதேவியின் பாவம் போக்கிய மாசிமகம்..


மகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால்  அதன் நன்மைகளை அளவிட முடியுமா?!  எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும்  மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசியில் பாயும்  கங்கையில்  நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி  உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.  


பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.  கோவில்களில் வெகுவான  திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும்.  மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது.  உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்.
smilemakerkrishna: Parvathi Weds Shiva!

 பராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய்  மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம்  ஞானம், முக்தியை தருபவர்.
Lord Varuna with crocodile vahana


வருண பகவானுக்கு அருளல்...
வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட,  சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய  தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
பித்ரு கடன் செய்ய...
மக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான்.  இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம். 

வல்லாள மகாராஜா....
திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.

சிவப்பெருமானின் திருவிளையாடல்...
பராசக்தி ஒருமுறை  திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க,  திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த  தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார்.  மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.

சமுத்திரராஜனுக்கு கொடுத்த வரம்...
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார்.  மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்தம் கொண்டார் சமுத்திரராஜன்.  தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.
  
கும்பக்கோணம் மாசிமகம்;
மாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா?! ஒருசமயம் யுகமொன்று  வெள்ளத்தால் அழிய இருந்தது.  மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம்.  வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு  கும்பம் உடைந்து உயிர்கள் உருவான  நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.

ஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள்  தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார். 
குந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:
கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும்  என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.



முருகனுக்கும் உகந்த மாசிமகம்;
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.


இனி விரதமிருக்கும் முறை;
அதிகாலையில்  எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள்  குளிக்கும் நீரில் கங்கை உள்ளிட்ட  புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும்.  மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும்.    வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை
            இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே 
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
   குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும் 
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,
                பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க் 
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்
                   கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.

மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.  குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

ஒருமுறை பார்வதியின்பால் ஊடல் கொண்டாடி, பூலோகத்தில் வந்து தவம் செய்ய உக்காந்துட்டார். அதனால, உலக இயக்கம் நின்றது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவனுக்கு காமத்தை தூண்டும்விதமா எதாவது செய்ய மன்மதனை வேண்டினர்.  மன்மதனும், சிவன்மேல் மலரம்பு விட்டான். அதன்பொருட்டு கோபங்கொண்டு மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தான். பின்னர் மன்மதனின் மனைவியான ரதிதேவியின் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு மட்டும் தெரியும்படி உயிர்பித்து கொடுத்தார்.  அந்த நிகழ்வு நடந்த தினம் இன்று.
இப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.

மீள்பதிவு...

நன்றியுடன்,
ராஜி.