Showing posts with label கௌமாரி. Show all posts
Showing posts with label கௌமாரி. Show all posts

Tuesday, September 26, 2017

கண்களுக்கு காவல் இந்த கௌமாரி அம்மன்


நவராத்திரியின் ஆறாவது நாளான இன்று நாம் வணங்க வேண்டியது கௌமாரி. இவள்  முருகனின் அம்சம்.  மிகுந்த அழகுடையவள். வீரத்துக்கும் குறைவில்லாதவள்.  இவள் அகங்காரத்தின் நாயகி. இவளுக்கு வாகனம் மயில். பக்தர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில் இவளுக்கு முதலிடம்.  பன்னிரண்டு கரங்கள் கொண்டவள். அதில் வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். முருகனைப்போன்றே இவளுக்கும் ஆறுமுகம்.  இவள் நமது உடலில் ஓடும் ரத்தத்திற்கு அதிபதி.   இவள் சஷ்டிதேவியாகும். 

ஒருமுறை கௌமாரி அம்மன் அசுரனை கொல்ல வேண்டி வைகை நதிக்கரையோரமிருந்த அடர்ந்த காட்டுக்குள் தவமிருந்தாள். அதை அறிந்த அந்த அசுரன் அம்பாளை கடத்தி செல்லும் நோக்கோடு அன்னையை நெருங்கினான். இதை அறிந்த அன்னை, தன் அருகிலிருந்த தர்ப்பைப்புல்லை எடுத்து அசுரனை நோக்கி வீச அசுரன் இரண்டாக பிளக்கப்பட்டு இறந்தான்.  


 பாண்டிய மன்னன் ஒருவன், தான் செய்த பாவத்தால் பார்க்கும் திறனை இழந்தான்.  தன் செயலுக்கு மனம் வருந்தி சிவனை வேண்ட, மன்னன் கனவில் தோன்றிய இறைவன், இன்றைய வீரபாண்டி தலங்கள் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, நீ வைகைக்கரை ஓரமாக சென்று, நிம்பா ஆரணியத்தில் முருகன் அம்சம் பெற்ற கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கு சென்று அவளை வணங்கு. அவள் அருளால் உனக்கு பார்க்கும் திறன் கிடைக்கும் என கூறி மறைந்தார், அதேப்போல் கௌமாரியை வணங்கிய பாண்டிய மன்னர் ஒரு கண்ணையும், கௌமாரி கட்டளைப்படி திருக்கண்ணீஸ்வரமுடையாரை வணங்கி மறு கண்ணையும் பெற்றார். அன்றிலிருந்து அங்கிருந்த சிவனுக்கு திருக்கண்ணீஸ்வரர் என்று பெயர் உண்டானது.  இதற்கு கைமாறாக சிவனுக்கு பெரிய கோவிலும், கௌமாரிக்கு சிறிய கோவில் ஒன்றை எழுப்பி வணங்கி வந்தான். அதனாலாயே, இவ்வூருக்கு வீரபாண்டி என காலப்போக்கில் மாறிப்போனது. வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.

மந்தையிலிருந்து தனியே பிரிந்து சென்ற பசு ஒன்றின் காலிடறி, அங்கிருந்த கல்லிலிருந்து ரத்தம் கசிந்தது. அதைக்கண்ட பசு, தன் பால் சொரிந்து தன் கால்பட்ட காயத்தை போக்கியது. அன்றிலிருந்து, அக்கல்லுக்கு பால்சொரிவதை வழக்கமாக கொண்டது பசு. பால் குறைவதை கண்ட பசுவிற்கு சொந்தமானவன், மேய்ச்சல்காரனை கேட்க, மேய்ச்சல்காரன் பசுவை கண்காணிக்க, பசு, கல்லுக்கு பால் சொரிவதை கண்டு பசுவின் சொந்தக்காரருக்கு சொல்ல ஊரே திரண்டு வந்து அந்த அதிசயத்தை காண, பசு பால் சொரிந்த கல்லை பெயர்க்க முற்பட்டபோது, தான் கௌமாரி எனவும், தான் சுயம்புவாய் இங்கு அவதரித்துள்ளதாகவும், தனக்கு இங்கொரு கோவில் கட்டவேண்டுமென பணித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. 


இவளை வழிபடுவதால் இளமை, அழகோடு செல்வம் சேரும், குழந்தை பாக்கியம் கிட்டும், கண் பார்வை தெளிவுபெறும், பார்வை குறைபாடு நீங்கும், கண்கட்டி உட்பட அனைத்து விதமான கண் நோய்களும் தீரும்.  கௌமாரியினை நிந்தித்தால் நமது வீட்டில் உள்ள பசுக்களுக்கு கோமாரி நோய் உண்டாகும். இவளுக்கு தேவசேனா என்ற மற்றொரு பெயருமுண்டு. எலுமிச்சை, தேங்காய் சாதம் இவளுக்கு நைவேத்தியம்.



கௌமாரியின் மூல மந்திரம்.....
ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.


மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக.....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி