Saturday, November 05, 2016

ஐந்தாவது படைவீடு திருத்தணிகை - பக்தி

முருகனின் அறுபடை வீடுகளில் திருத்தணிகை ஐந்தாவது படைவீடாகும்.
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ண்ம். 'உலகப்பற்று' எனப்படும் ஆசையையும் குறிக்கும். 
'இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்' என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண் கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத் தன்மையைக் குறிக்கும். இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இது போன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே இறைவன் விரும்புவான். 
அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப் பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவள் அவரைத் தழுவினாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள்.
மக்கள் அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத் தலம் இது. முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் 'தணிகை மலை' என்று பெயர் பெற்ற இத்தலம் 'திருத்தணி' என்று மாறியது.
 இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முருகனுக்குரிய 'குமார தந்திர' முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது.
கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவர் காட்சி அளிக்கிறார். ஒரு நாய் பைரவருக்குப் பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் ஒரே அம்பிகையாக 'கஜவள்ளி' என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளிவாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டில் 1008 குட பால் அபிஷேகம் நடக்கும்.
மூலஸ்தானத்திற்கு பின்புறபுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீது கொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.வள்ளியை யானை ரூபத்தில் பயமுறுத்திய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின் போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிக அளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.
முருகத்தலங்களில் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.சித்திரை மாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சித்திரையில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.
பள்ளியறை பூஜையின் போது ஒரு நாள் தெய்வானையும், ஒரு நாள் வள்ளியுமாக முருகனுடன் அருள் செய்கின்றனர்.திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர்.இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார். திருத்தணிகை மலையின் வடக்கே உள்ள மலை வெண்ணிறமாக உள்ளதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறத்துடன் உள்ளதால் பிண்ணாக்கு மலை என்றும் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.நாளை பழமுதிர் சோலையிலிருந்து முருகன் புகழ் பார்ப்போம்

Friday, November 04, 2016

நான்காவதுபடை வீடு சுவாமி மலை - பக்தி

நம்மில் எத்தனைப் பேருக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியும்!!? அட, நமக்கு தெரியலைன்னா பரவாயில்ல. ஆனா, உலகத்தையே காக்கும் கடவுளுக்கு தெரியலைன்னா!? அதெப்படி கடவுளுக்கு அதன் பொருள் தெரியாம போகும்!? அப்படி தான் அறியாததை யார்கிட்ட கத்துக்கிட்டார்!? பிரணவ மந்திரமான “ஓம்” இந்துக்களுக்கு மட்டும் உரியதா!? இப்படி பல விடைகளுக்கான பதிலை இன்றைய பதிவில் பார்க்கலாம். வாங்க!!
ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே! ஒ
* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்!
* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!
அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்!
அடிப்படை அ+உ+ம
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன்

சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள்,  கிறிஸ்த்து, அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குது.., நம்பிக்கையில்லையா!?
"ஓம் நமஹ"-ன்னும், "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" ன்னு சமணத்துலயும்....,
வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ”ஓம்” சேர்த்துதான் உச்சரிப்பார்கள். நாம்  நமச்சிவாயத்தோடு “ஓம்” சேர்க்குற மாதிரி மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் உடன்”ஓம்” சேர்த்து வணங்குவது பௌத்த மதம்.
சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்!
"ஏக் ஓம்கார் " என்று சீக்கியத்தில் உண்டு. இதை உச்சரித்தவர் குருநானக்.
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! என கிறித்துவத்தில் உண்டு. ”ஓம்”ன்னு குறிப்பிடலையே ஒழிய  ”வார்த்தையாய் இருந்தார்”ன்னு சொல்லாம சொல்றார்.

இதேப் பொருள்படுமாறு நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடி இருக்கார்.
கும்பக்கோணத்திலிருந்து மேற்கே ஐந்து கிமீ தூரத்தில் இருக்கு சுவாமிமலை. இதற்கு திருவேரகம்ன்னு மற்றொரு பெயரும் இருக்கு. இது முருகப்பெருமானின் நான்காவது படைவீடாகும். சுவாமிமலைன்னு அ சொல்லப்பட்டாலும் இது மலை இல்லை. செயற்கையாய் உருவாக்கப்பட்ட குன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால் இக்கோவில் “கட்டுமலை”ன்னும் அழைக்கப்படுகிறது.இந்த கோவில் இரண்டு அடுக்குகளாகவும், மூன்று பிரகாரங்கள், மூண்டு கோபுரங்கள் கொண்டுள்ளது கீழ் அடுக்கில் மீனாட்சி அம்மன்,சுந்தரேஸ்வரர் சன்னிதி, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிக் கொண்டு அருள்புரிகின்றனர். அவர்களை வணங்கி அப்பனுக்கே பாடம் சொன்ன கதையை தெரிந்துக் கொள்வோம்....,
படைப்பு கடவுளான பிரம்மனுக்கு தான் என்ற ஆணவம் தலை தூக்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வேளையில் முருகப் பெருமானை சந்திக்க நேர்ந்தது. இருவருக்குமிடையில் பேச்சு எங்கெங்கோ சென்று, பிரணவ மந்திரத்திற்கு வந்தது. படைப்புத் தொழிலைச் செய்யும் உமக்கு பிரணவ மந்திரமான “ஓம்”க்கு பொருள் தெரியுமா!? என முருகன் கேட்டான். பிரம்மனால் பதிலுரைக்க முடியாமல் போகவே, முருகன் பிரம்மாவின் நான்கு தலியிலும் கொட்டி பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலை முருகனே செய்தார்.
பிரம்மன் சிறையில் இருப்பதை கேள்வியுற்ற திருமால் சிவபெருமானிடம் சொல்லி  சிவபெருமானும், முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற..., தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க..., முருகனும் எல்லோரும் அறிய பிரணவ மந்திரத்தின் பொருள்  கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது
அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைக் கொண்ட அறுபது படிகளை ஏறிச் சென்றால் முருகன் சந்நிதி. தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு வஸ்திரம் சாத்தி, தேங்காய், பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள் . இதற்கு திருப்படி பூஜை என்று பெயர். அதற்கு முன் தென் திசை நோக்கி இருக்கும் விநாயகரை வணங்கி கொள்கிறோம். இக்கோவிலில் முருகப் பெருமானின் வாகனமாக மயில் கிடையாது. பிணிமுகம் என்ற யானை தான் முருகனது வாகனம்.  ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாத பெருமானை வணங்கி, இந்திரன் வென்றதால் தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
மூலவர் 6அடி உயரத்துடன், கையில் தண்டம், தலையில் உச்சிகுடுமி, மார்பில் பூணுலுடன் காணப்படுகிறார். முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்றக் கோலத்தில் காட்சித் தருகிறார்.  பீடம் சிவ பீடம், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார். கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.
ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்திலும், சந்தன அபிஷேகத்தின்போது பாலகுமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் சுவாமிநாதர்.  கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்" வேறு வேறு அல்லர் என்பதும் புலனாகும்.
சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' எனக் கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள் அதன் பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றிதலவிருட்சமாக இத்தலத்தில் இருக்கிறாள்.
இத்தலம் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர், நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்டது இத்தலம். பழனி, திருச்செந்தூர், திருத்தணி போல பரப்பரப்பும், கூட்ட நெரிசலும் இல்லாம அமைதியாய் இருக்கு.சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்டது இத்தலம். . இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றனவாம்.
”அஜீரணத்தைப் போக்க ரசம் சாப்பிட்டு குணம் அடையலாம்” என்றும், 'உடம்பு தளரும்போது நம் ஆன்மாவுக்கு மோட்சத்தைத் தரவல்லது, ஸ்வாமிநாதரின் பேரருள் மட்டுமே!' என்று இரு பொருள்படுமாறு

வெங்காயம் சுக்கானால், வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

சொக்கநாதப் புலவர் பாடி இருக்கார்.
அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் இத்திருக்கோயிலின் பங்குண்டு. இது வேறெந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

 நாளை அறுபடை வீடுகளில் ஐந்தாது தலமான திருத்ணிகை பத்தி பார்க்கலாம்.நன்றி 





Thursday, November 03, 2016

மூன்றாவது படைவீடு பழனி - பக்தி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.மலைகளில் மருந்து கிடைப்பது  இயற்கை. ஆனா ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்...  அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுது
 பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது
திரு - லட்சுமி
ஆ - காமதேனு
இனன் - சூரியன்
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று.இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பொதினி என்ற பெயரே நாளடைவில் பழனி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.
முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.
பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். 
இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார்.இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன்.
அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன்.ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.
இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார்.அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது.
மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார். இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.
திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர்.இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.
இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு. என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும். திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.
மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப்பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார். ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், "நவபாஷாணம்" எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இப்படை வீட்டில் முருகப்பெருமான் அபிஷேகப் பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை.அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. தண்டாயுதபாணி சுவாமியை மொட்டையாண்டியாகப் படங்களில் சித்தரித்திருந்தாலும், இப்பெருமான் சடாமுடியுடனே விளங்குகின்றார் என்பதனை அபிஷேக காலத்தில் நன்கு அறியலாம்.
ஆதியில் போக சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிப்பட்டு வந்த ஞான தண்டாயுதபாணியின் கோயில் முதன்முதலில் சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக இத்தலத்தில் வழிபட கேரள மக்கள் மிகவும் அதிகமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது.சபரிமலை ஐயப்ப சுவாமியைச் சென்று தரிசித்து வருபவர்களும், குருவாயூரப்பனைத் தரிசித்து வருபவர்களும் பழனிக்குச் சென்று பழனி ஆண்டவனையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற வழக்கமும் நிலவி வருகிறது.
 இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்தப் பெருமானை ஞான தண்டாயுதபாணி வடிவில் வணங்கி, தரிசனம் செய்து ஞானமும், அருளும் பெறுவோமாக!

வழித்தடம்: இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.இனி வேறு படைவீட்டில் இருந்து சந்திக்கலாம்.நன்றி.

திருச்செந்தூர் இரண்டாவது படை வீடு - பக்தி

அறுபடை வீடுகளில், ''குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்'' என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப திருசெந்தூரைத் தவிர, ஏனைய அனைத்துப் படைவீடுகளும் குன்றுகளின் மீதும், திருச்செந்தூர் மட்டும் அழகிய கடலோரத்திலும் அமைந்திருக்கின்றன. கடற்கரையில் இருந்து இத்திருக்கோயிலைக் காணும்போது இக்கோயிலின் தோற்றம் பேரழகு. அங்கே ஆர்ப்பரிக்குக்கும் அலைகள் ஓம் ஓம் ஓம் என முருகனை நினைத்து அவன் பாதம் தேடிவருவதாகவே தோன்றுகிறது. அந்த வெள்ளை நுரை அலைகள் செய்த பாக்கியம் தான் என்ன?! நாள்தோ றும் தமிழ்கடவுளாம் முருகனை தரிசிக்கும் பேறு பெற்றுள்ளனவே!!
முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபபெருமானையும், பார்வதி தேவியையும் காண கைலாயத்திற்குச் சென்றனர. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்க, ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும்படி கேட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவப்பிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோமுகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயுதேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.
எல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்த அக்னிக்குஞ்சுகள் கற்பனைக்கெட்டாத அழகான குழந்தைகளாகத் தெரிந்தன விஷ்ணு பகவானுக்கு.கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார்.  கார்த்திகைப்பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.
காசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும்தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர். சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்திரன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது. இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். 
தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்த பிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன். கார்த்திகேயன் படைப்பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர்.தேவர்களை சிறைப்பிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர்தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன். கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூறுகளாக்கியது. இவ்வாறு பிளவுப்பட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுப்பகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாக கொண்டு சூரனை ஆட்கொண்டார். 


 முத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர். பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி. இந்த கடல் பகுதிக்கு சண்முக விலாசம் என்ற பெயருண்டு. இங்கே 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவை காயத்திரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.
ஐப்பசி மாத வளர்பிறை அன்று சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தினம் என்பதால், இங்கே நடைபெறும் சூரசம்ஹார விழா மற்றும், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கடல் போல வருகின்றனர்.ஆவணி மற்றும் மாசி மாதங்களில் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது 7-ம் நாள் மாலை வேளையில் சிவப்பு நிற ஆடை உடுத்தி சிவப்பிரானின் அம்சமாகவும், அடுத்தநாள் 8-ம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளை நிற ஆடை உடுத்தி பிரம்மாவின் வடிவமாகவும், அன்றே மதிய வேளையில் பச்சை நிற ஆடை உடுத்தி விஷ்ணுவின் அம்சமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே  விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்றும் பெயருண்டு
இந்த திருக்கோயிலில் முருகனுக்கு நான்கு உற்சவ தோற்றங்கள் உண்டு. இவர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உண்டு. சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் போன்றோர் உற்சவர்கள். குமர விடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ''சந்தன மலை''யின் மேல் அமைந்துள்ளது. நாளடைவில், காலப் போக்கில் அது மறைந்து விட்டது. இவ்விடத்தை கந்த மாதன பர்வதம் என்றும் அழைக்கிறார்கள்.
இத்திருத்தலம் ''குரு பரிகார'' தலமாகவும் விளங்குகிறது. சூரனை அழிக்க கந்தன் இங்கு வந்த போது முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை குருபகவான் அருளியுள்ளார். திருசெந்தூரிலேயே கோயில் கட்டி இங்கேயே முருகனை இருக்கச் சொல்லியுள்ளார். இத்தலத்தில் கார்த்திகேயன் ''ஞானகுரு''வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது.
கடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அழகன் முருகன், சூரனை அழித்தது போல இன்று உலகில் நிலவும் அத்தனை கொடியவைகளையும் அழிக்க, வேண்டுவோம் முருகனை, கடம்பனை, கதிர்வேலனை!!!!எல்லா ஊர்களிலும் இருந்து ,சிறப்பு பேருந்துகள் ,இந்த திருக்கோவிலுக்கு ,இயக்கப்படுகின்றன ,தினமும் 3:30 க்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து ,செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது .மீண்டும் அடுத்த படைவீட்டில் வைத்து சந்திப்போம் நன்றி .