Wednesday, December 13, 2017

சாத்தனூர் அணை உருவாக ஒரு பெண்தான் காரணம் - மௌனச்சாட்சிகள்.


லாங்க்.. லாங்க் அகோ... ஒன்ஸ் அப்பான் எ டைம்.. சாத்தனூர் போனது.. அப்ப வரண்டிருந்தது.. பின்ன நான் போற இடம் என்ன செழிப்பாவா இருக்கும்?!  சாத்தனூர் போய் வரனும்ன்னு கொஞ்ச நாளாய் ஆசை.. அயித்தானை கூப்பிட்டு.. அந்தாளு இந்தா.. அந்தான்னு நீட்டி முழக்க... நாட்கள் கடந்து போச்சு... போன மாசம் திடீர்ன்னு ஒருநாள் அக்கம் பக்கம் வீட்டினர்லாம் சாத்தனூர் போகலாமான்னு கேட்க பசங்களோடு கிளம்பியாச்சு. முறுக்கிக்கிட்டிருக்கும் ஆளை டீல்ல விட்டாச்சு.. முன்கூட்டியே பசங்க சொல்லிட்டாங்க சாப்பாடு மூட்டை கட்டிக்காதன்னு.. அதன்படியே கைவீசி கிளம்பியாச்சு. திருக்கோவிலூர் போய்ட்டு உலகளந்த பெருமாளுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு, அங்கிருந்து சாத்தனூர் டேம்க்கு வண்டியை விட்டாச்சு...

பிள்ளைங்கலாம் பெருசாகிட்டதால, வாட்ஸ் அப், பேஸ்புக்ன்னு இருக்க, குனிஞ்ச தலை நிமிராம போகும் எங்க தெரு அண்ணன், குட்டீசோடு சேர்ந்து ஆட்டம் போட.. வேன் களை கொஞ்சம் களை கட்டுச்சு.  அணையை நெருங்க, நெருங்க நீரின் குளிர்ச்சி காற்றில் பரவி வரவேற்க ஆரம்பிச்சுது. மெயின்ரோடிலிருந்து அணைக்கு போகும் தனிப்பாதையில் வண்டி திரும்பியது.... மரங்கள், செடிகள், வயல்வெளிகள்ன்னு பார்க்கவே கண்ணுக்கு இதமாவும், மனசுக்கு புத்துணர்ச்சியாவும் இருந்துச்சு. வேன், பஸ், டூவீலர்ன்னு வாகனத்துக்கேற்ப நுழைவு கட்டணம் வசூலிக்கிறாங்க. டாட்டா ஏஸ் மாதிரியான சரக்கு ஏற்றி செல்லும் தனியார் வாகனத்துக்கு அணைக்குள் செல்ல அனுமதி இல்லை. கேட்டோடவே நிறுத்திடுறாங்க.
அணையின் மேல் மட்டம் வரை நம்ம வண்டில போய்க்கலாம்..  அங்க வரை, சிப்ஸ், ஃப்ரூட் , இளநீர் கடைலாம் இருக்கு. நாங்க போனபோது மதியம் நேரம்ங்குறதால செம வெயில். வெயிலுக்கு இதமா பழங்களை உள்ள தள்ளியாகிட்டுது. மரம், செடி, கொடின்னு எங்கயும் பச்சை பசேல். மக்கள் உக்காந்து போட்டோ எடுக்க, சாப்பிட, ஓய்வெடுக்க, லவ் பண்ண.... மரத்துக்கடியில், நத்தை,  பூக்கள், வடிவில் சிமெண்டாலான இருக்கைகள் இருக்கு. 
அழகு மங்கை, குரங்கு, கரடி, ஆதாம், ஏவாள்ன்னு விதம் விதமான சிமெண்டாலான சிலைகள். முன்னலாம் சினிமா ஷூட்டிங்க் எடுக்க உதவிச்சு. குமரிக்கோட்டம் படத்துல வரும் ஒரு பாட்டு இங்க தான் படமாக்குனாங்க. ஹேய் இங்கதான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சேர்ந்து டூயட் பாடுனாங்கன்னு சொல்லி இப்ப செல்பி எடுத்துக்குதுங்க. 
கடலோ என வியக்கும்படி பரந்து விரிந்த அணை. தமிழகத்திலிருக்கும் அணைகளிலேயே இதான் சிறிய அணைன்னு கேள்விப்பட்டிருக்கேன்.  மேலிருந்து பார்க்க பிரமிப்பா இருந்தாலும் அதிக நேரம் நின்னு நீரின் அழகை ரசிக்க முடில. காரணம்.. செம கப்ப்ப்ப்ப்ப்ப்பு... அதனால, சீக்கிரமே கீழிறங்கி வந்துட்டோம். 
முன்பொருமுறை போனபோது, இந்த கடைசில இருந்து அந்த கடைசி வரை போக அனுமதி உண்டு, இப்ப பாதுகாப்பு கருதி அனுமதி இல்ல.  படத்துல காட்டும் இடத்து மேல இருந்து நான் பார்த்திருக்கேன். நீரின் பிரவாகம் நம்மை தலை சுத்த வைக்கும். இப்ப அந்த கொடுப்பனை இல்ல. 
 நாம பறிச்சு விளையாண்டு அலுத்த,  இப்பத்திய பசங்க  அரிதாய் பார்க்கும் தாமரைப்பூ தடாகம்.. 
நீச்சல் குளம், குழந்தைகளுக்கு தனிப்பகுதியும், எருமைங்களுக்கு தனிப்பகுதின்னும் தனித்தனியா இருக்கு. அதென்ன எருமைகளுக்கு நீச்சல் குளமான்னு நீங்க திகைக்காதீங்க. பெரியவங்க குளிக்கத்தான் அந்த இடம். ஆனா, பாருங்க அங்க முழுக்க முழுக்க இளவட்ட பசங்கதான் ஆணும், பெண்ணுமாய் கும்மாளமடிக்குதுங்க. குடும்பத்தோடு வர்றவங்க கொஞ்சம் விலகிதான் போறாங்க. 
சாப்பாடு, மீன் வருவல், ஐஸ், பாப்கார்ன், சிப்ஸ், பழம், சரக்குன்னு எல்லாமே கிடைக்குது. ஆனா, விலைதான் கொஞ்சம் ஓவர்.
டேம் ஆச்சே, மீன் விலைலாம் குறைச்சலா இருக்கும். அதனால, நான் நிறைய சாப்பிடுவேன்,. எனக்கு ஹாஸ்டல்ல மீன் கிடைக்காதுன்னு வயத்தை காயப்போட்டு வந்த என் பிள்ளை, மீன் வருவல் விலைய விசாரிச்சா ஒரு பீஸ் முப்பது ரூபாயாம். சிக்கன சிகாமணி என் பிள்ளை வேணாம்ன்னு மறுக்க, வற்புறுத்தி  வாங்கி கொடுத்தேன். 
பசியெடுக்க ஆரம்பிச்சது. ஆளுக்கொரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு எங்க சாப்பிடலாம்ன்னு பார்த்துக்கிட்டிருக்கும்போது, என் பெரிய பொண்ணு, அவ கூட படிச்ச பசங்கலாம் போன இடம்ன்னு சொல்லி, கூட்டி போனாள். கல், மரம்ன்னு தாவி ஏறி,இறங்கி போனால், செமையான இடம்.  அணையிலிருந்து வழியும் தண்ணி சிறு நதியாய் ஓடும் இடம். அங்க உக்காந்து சாப்பிட்டோம்.  
சலசலத்து ஓடும் நீர், அதை தொட கீழிறங்கும் மரக்கிளை, மரக்கிளையிலிருந்து குதித்தோடும் குரங்கு, ஆணும் பெண்ணுமாய் இறங்கி கும்மாளம் போட,  ஒரு பக்கம் செல்பி.. அங்க இருக்கும் கல் எடுத்து அடுப்பு மூட்டி ஆங்காங்கு பிரியாணி, மீன்குழம்புன்னு சமைக்க..  அட்மாஸ்பியர் சூப்பர். 
ஆத்தா! மகமாயி! உன் புராணம் போதும். அணையின் வரலாற்றை சொல்லுன்னு முணகுறது இங்க கேக்குது.  அதனால, அணையின் வரலாறு... 

பெண்ணையாற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள அணைகளில் சாத்தனூர் அணை முக்கியமானது. இந்த அணை திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பேட்டை தாலுக்காவில் தென்பெண்ணையாற்றின் குறுக்காகா சென்ன கேசவ மலையில் கட்டப்பட்டிருக்கு.  முதல் ஐந்தாண்டு திட்டத்தில்  இந்த அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1958ல் கட்டி முடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.  பொதுவா திருவண்ணாமலை மாவட்டம் வறண்ட மாவட்டமாகும். அங்க இயற்கை சூழல் நிறைந்த மரங்கள், மலைகளோடு ஒரு அணை இருப்பது அதிசயத்திலும் அதிசயமே!
கல்வராயன் மலைக்கும், தென் மலைக்கும் இடையில் செங்கம் கணவாயை ஒட்டி இந்த அணை இருக்கு..  சாத்தனூர் என்னும் ஊருக்கு நான்கு மைல் தூரத்தில், பூண்டி மலைக் கணவாயின் இடையில் ஒரு நீர்த்தேக்கம் உண்டு. அணையின் நீளம் 2,583 அடி, உயரம் 143 அடி, 700 கோடி கன அடி தண்ணீர் தேக்கி நிற்கவைக்க முடியும். அணையைச் சுற்றிய பகுதிகள் அனைத்தும் மலைப்பிரதேசங்கள். இதனால் அணையில் நேரடியாக நீரை எடுத்துச்செல்லும் கால்வாய்களை வெட்ட முடியலை. நாலரை மைல் தூரத்துக்கு மற்றொரு கால்வாய் வெட்டப்பட்டு, மீண்டும் அணையில் நீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடு சாத்தனூர் அணையில் அமைக்கப்பட்டிருக்கு. 
இங்கிருந்து, பாசனத்துக்கான நீர், கால்வாய்கள் மூலம் அனுப்பப்படுது. 22 மைல் தூரத்துக்கு ஒரு கால்வாய் பிரிந்துசென்று செங்கம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதனால் 16 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதைப்போலவே, அணையிலிருந்து திருக்கோயிலூர் அணைக்கும் நீர் பங்கிட்டு அனுப்பப்படுது.  இதனால் திருக்கோயிலூர் வட்டத்தில் 3 ஆயிரத்து 138 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுது. சாத்தனூர் அணை கட்டும் திட்டத்தை ஆங்கிலேயர் ஆராய்ந்து அதற்கான திட்டத்தை 1903-ம் ஆண்டில் வகுத்தார்கள். ஆனால், அதனை அவர்களால் நிறைவேற்ற முடியலை. 1954-ம் ஆண்டில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அணையைக் கட்டத் தொடங்கினார்கள். 1959-ம் ஆண்டு அணை தொடங்கிவைக்கப்பட்டது. 

பொதுவா தமிழகத்தில் நடுகல்லுக்குக்கூட விழா உண்டு. அப்படி இருக்க, திருவண்ணாமலை மாவட்டத்தின் பசி, தாகம் தீர்க்கும் இந்த அணையினை சிறப்பிக்கவும் விழா உண்டு.  செங்கம் வட்டத்தில் காட்டுப் பகுதியில் பொரசப்பட்டு என்ற ஊரில் பெண்ணையாறு சிறுகுன்றுகளைப் பிளந்து கொண்டு செல்லுது.  அங்குள்ள மீப்பத்துறை என்ற இடத்தில், ஆடிமாதம் பெண்ணை ஆற்றுக்கு விழா எடுக்குறாங்க. விவசாயிகள் ஒன்றுகூடி, வேப்பமரம், புங்கமரம், நாவல்மரம் ஆகியவற்றின் விதைகளை காடுகளுக்குக் கொண்டுசென்று... பம்பை, உடுக்கை ஆகியவற்றை அடித்து விதைகளைக் காட்டில் புதைத்துவிட்டு வருவது இன்றும் வழக்கத்தில் உண்டு. இது,  தமிழ் மக்களின் இயற்கை நேயத்தின்  தொடர்ச்சியாக உணரப்படுகிறது. 
சாத்தனூர் அணையை ஒட்டிய செங்கம் பெண்ணையாற்றால் சிறப்புற்ற ஊர். மலைபடுகடாம் என்னும் சங்கப்பாடலில் செங்கண்மா என்றே இந்த ஊர் குறிப்பிடப்பட்டிருக்கு.  இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்த கணவாய், செங்கமா கணவாய் என்றே கூறப்படுகிறது. இந்த ஊர், பெரும்பாணாற்றுப் படையின் தலைவர் செங்கண் மாத்துவேள் என்பவரின் தலைநகரமாகவும் அமைந்திருக்கு. பெண்ணையாற்றின் நீரைப்போலவே கருணை கொண்டவர்கள், பெண்ணையாற்று மக்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கு.  

பொதுவா, திருவண்ணாமலை ஆன்மீக சம்பந்தமாவே எல்லாராலும் பார்க்கப்படுறதால, இங்க இருக்கும் மத்த விசயங்கள் எடுபடாம போயிட்டுது. இந்த மண்ணிலும் பிறர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்திக்கொள்ளும் ஆட்கள் இருந்திருக்காங்க.  கருணையும் தொலைநோக்கு சிந்தனையும் ஆணுக்கு மட்டுமே சொந்தமானதில்லை. அது பெண்ணுக்கு உண்டானதுன்னு நிரூபிக்க   இந்த ஊரில் அம்மணி அம்மாள் அவதரித்தார்.  இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரங்களில் ஒன்றின் பெயர்தான் அம்மணி அம்மாள் கோபுரம்.  
சென்னை சமுத்திரம் ன்ற ஊர்  தென்பெண்ணை நீரால் வாழும் சாத்தனூர் அருகே அமைந்த செங்கத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் இருக்கு. இங்கதான் அம்மணி அம்மா 17 ம் ஆண்டு பிறந்தாங்க.  என்ன காரணம்ன்னு தெரில. இவங்க மண வாழ்க்கையை வெறுத்து துறவு வாழ்க்கைக்கு போய்ட்டாங்க. இவங்க, மைசூர் நாடு வரை போய் பல அரசர்கள், பாளையத்துக்காரர்கள், ஜமீந்தார்களை சந்திச்சு,  அவர்களிடம் பொருள் உதவி பெற்று திருவண்ணாமலைல ஒரு கோபுரத்தை கட்டினாங்க. அதனாலதான் அந்த கோபுரத்துக்கு அம்மா பெயரையே வச்சி இன்னிக்கும் அவங்க பேர் சொல்லி கொண்டாடுறாங்க. இவங்க பேரில் ஒரு சித்தர் பீடமும் திருவண்ணாமலையி இருக்கு. 
இந்த அணை தோன்றுவதற்கு முன்பே,  பெண்ணையாற்றின் கரையில் அம்மாப்பேட்டை என்னும் ஊரை இவர் நிர்மாணித்துள்ளார். அதுமட்டுமின்றி, இப்ப அணை இருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாய் இருந்துள்ளதாம்.  இங்கு வசித்த புலி, கரடி, சிறுத்தை மாதிரியான மிருகங்கள் கோடைக்காலத்தில் தாகத்தால் தவிப்பதை கண்டு இங்கு குளம் ஒன்றை வெட்டி, அவைகளின் தாகத்தை தணிச்சிருக்காங்க.  அப்படி அம்மா வெட்டிய குளம் அம்மணி அம்மாள் குளம்ன்னும், அம்மா தியானம் செய்த பாறை ஒன்று  அம்மணி அம்மாள் பாறைன்னும் இந்த பகுதி மக்களால் கொண்டாடப்படுது. 

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணை இங்கிருக்கு. ரொம்ப வாசமாய்!!! இருக்கும்ன்னு சொன்னதால, நான் போகல. படத்தை கூகுள்ல சுட்டுக்கிட்டேன்.  பெண்ணையாற்றை   பெண்ணின் அழகிய கூந்தலின் கருமையைப்போலத் தென்பெண்ணையின் நுண்மைக் கரும் மணல் சங்கப்பாடல்ல புலவர்கள் சிலாகிச்சிருக்காங்க.  தென் பெண்ணை பாயும் லிப் பகுதி நெல் மிகுந்து விளையும் வளமிக்க பூமியாகும். செஞ்சாலி என்னும் தனித்த சிறப்புமிக்க நெல், பெண்ணை நதிக்குச் சொந்தமானது. நவீன விவசாய வாழ்க்கை, பலவற்றை அழித்துவிட்டது. அப்படி அழிந்துபோன நெல்மணிகளில் செஞ்சாலியும் ஒன்று. இருந்தாலும், இன்றும், திருவண்ணாமலை மாவட்டம், அதிலும் முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணிதான் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கு. 
கழிப்பறை வசதி இருக்கு.  இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். கூடவே, ஹோட்டல்களிலும் கவனம் செலுத்தலாம். தரமற்ற உணவுகள் விலை அதிகமா கிடைக்குது. அதேப்போல, செக்போஸ்ட்ல நுழைவு வரி வசூலிக்க இருக்கும் காவல்துறை, வரும் வண்டிகளை சோதனை இடலாம். குடிமகன்களால் நாங்க எந்த துன்பம் அனுபவிக்கலைன்னாலும் அங்கங்க, பாட்டில் உடைஞ்சிருக்கு. குழந்தைகள் தெரியாம காலை வச்சிட்டா காயப்படும்ல. அதான்..

வாய்ப்பு கிடைக்கும்போது சாத்தனூர் அணைக்கு வாங்க. வறண்ட பூமியில் பரந்து விரிந்திருக்கும் அணையையும், அது உருவாக காரணமான அம்மணி அம்மாவையும், அம்மணி அம்மாவின் கதையை சொன்ன நானும் அங்கதான் மௌனமாய் உங்களுக்காக காத்திருப்போம்.  அப்படி வரும்போது எங்களை நினைச்சுக்க மறக்காதீங்க. 


நன்றியுடன்,
ராஜி.

Tuesday, December 05, 2017

சுய்யத்துக்கு ஏன் இந்த பேர் வந்திச்சு?! கிச்சன் கார்னர்

பள்ளியிலிருந்து பசியோடு வரும் என் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ், மன்ச் ன்னு வாங்கி தருவதில்லை. அதெல்லாம் பார்த்து ஏக்கப்பட்டுடக்கூடாதேன்னு வெளியூர் போகும்போது மட்டும் வாங்கி தருவோம். மத்தபடி வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டைன்னுதான் தருவோம்.

எதுமே இல்லாட்டியும் மதியம் சாதத்தை பிசைஞ்சு எங்கம்மா கதை சொல்லி உருட்டி குடுப்பாங்க. பசங்க சமர்த்தா சாப்பிட்டுடுவாங்க.  பெருமைக்காக சொல்லலை என் பிள்ளைகளை நான் அரக்க பறக்க  மருத்துவமனைக்கு கூட்டி போனதே இல்லை. இப்படியே என் பிள்ளைகள் ஆரோக்கியமா இருந்துட்டா போதும் காசு, பணம் வேண்டாம்ன்னுதான் கடவுள்கிட்டயும் வேண்டிப்பேன்.

ரொம்ப மொக்கை போடாதே! என்னதான் செஞ்சு இருக்கே?!ன்னு பார்க்கனும். நீ முதல்ல பதிவோட மேட்டருக்கு வா!ன்னு நீங்க முணுமுணுக்க்றது கேக்குது. ஒரு புத்தகம்ன்னு போனா தெளிவுரை, அணிவுரைன்னு இருக்குற மாதிரி ஒரு முன்னோட்டம் போடலாம்ன்னு பார்த்தா பொறுக்காதே உங்களுக்கு. அடுத்த பதிவுலலாம் இந்த மொக்கை தொடராது :-)

இன்னிக்கு செய்ய போறது ”சொய்யா உருண்டை” ன்னு எங்க ஊர் பக்கமும், சுய்யம்ன்னு மதுரை, நெல்லை, காரைக்குடி பக்கமும் சொல்லுற ஒரு பலகாரம்.  இதோட பெயர் காரணம் என்னன்னு நீண்ட நாள் ஆராய்ச்சி செஞ்சு கண்ட உண்மை என்னன்னா, இந்த உருண்டை கலவையை எண்ணெயில போடும்போது “சொய்ய்ய்ய்ய்ய்ய்”ன்னு சத்தம் வர்றதால இந்த பேர் வந்துச்சு.  யாருப்பா அங்க கல்லெடுக்குறது?! பேச்சு பேச்சாதான் இருக்கனும்.  சரி வாங்க போய் சமைக்கலாம். ஆளுக்கொரு வேலையா செஞ்சா சீக்கிரம் முடிச்சுடலாம். ஆளை இல்லப்பா சமையலை!!

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கிலோ
வெல்லம் - 150 கிராம்
ஏலக்காய் - 2
மைதா - 200 கிராம்,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
உப்பு  - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


பச்சை பயறை வெறும் வாணலியில  பச்சை வாசனை போகும் வரை வறுக்கனும். 


அப்படி வறுத்த பயறை ஒரு பாத்திரத்துல இருக்கும் பச்சை தண்ணில சூட்டோடு சூடா கொட்டுங்க (எங்க ஊருல பச்சை தண்ணி கிடைக்காதுன்ற கமெண்ட்லாம் டெலிட் செய்யப்படும்.)


குக்கர்ல கொஞ்சம் உப்பு, தேவையான தண்ணி ஊத்தி  குறைஞ்சது பத்து விசில் வரும் வரை வேக விடுங்க.

திறந்து பார்த்து வேகலைன்னா மீண்டும் வேக வச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும். ஆனா, குழைஞ்சுடாம இருக்கனும்.


வெந்த பச்சை பயறை தண்ணி இல்லாம வடிச்சு ஆற விடுங்க.

 
ஆறிய பச்சை பயறோடு வெல்லம்...., ஏலக்காய் சேர்த்து...,

 உரல்ல  இல்லாட்டி மிக்சில கரகரப்பா  அரைச்சுக்கோங்க. (உரல்ல ஆட்டினா நல்லா இருக்கும்.

 
 அரைச்ச மாவை சின்ன சின்ன உருண்டையா பிடிச்சு வச்சுக்கோங்க.

 
 ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி, அதுல தேவையான உப்பு சேர்த்துக்கோங்க.

ஆப்ப சோடாவயும் போட்டுக்கோங்க.

 தண்ணி கலந்து கட்டி இல்லாம  கரைச்சுக்கனும்.

 பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் கெட்டியா கறைச்சுக்கோங்க.

 
 அடுப்புல வாணலியை வச்சு தேவையான அளவு எண்ணெய் ஊத்தி காய வைங்க.

கரைச்சு வச்ச மாவுல பிடிச்ச வச்ச உருண்டையை அதுல போட்டு முக்கி எடுத்துக்கனும்.


உருண்டை  ஃபுல்லா மாவு இருக்குற மாதிரி முக்கி எடுத்துக்கோங்க. கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி கையாளனும். இல்லன்னா, மைதா மாவு கரைசலில் பயத்தம்பருப்பு உருண்டை கரைஞ்சிடும்.


ரெண்டு பக்கமும்  பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்துக்கோங்க.

சொய்யா உருண்டை ரெடி!! மைதா மாவு தண்ணியா இருந்தா மாமியாரும், மருமகளும் ஒன்னு சேராத மாதிரி பிரிஞ்சி வந்திடும், 

மேல கொஞ்சம் மொறுமொறுப்பாவும் உப்பாவும் இருக்கும், அதை தாண்டி இனிப்பும் சேர்ந்து நல்லா இருக்கும். வெல்லமும், பச்சை பயறும் உடம்புக்கு நல்லது. அத   குழந்தைகளுக்கும் கூட கொடுக்கலாம். உள்ளே வெல்லம் இருப்பதால் சூடு ஆற கொஞ்சம் நேரம் பிடிக்கும். அதனால,பச்சை பயறை சூடா வெல்லம் சேர்த்து அரைச்சா இளக்கமா ஆகி உருண்டை பிடிக்க வராம போய்டும். அப்படி ஆயிட்டா , அரை மணி நேரம் ஃப்ரீசர்ல வெச்சு எடுத்தா உருண்டை பிடிக்க வரும்.  .பச்சை பயறு உருண்டை ஃபுல்லா மாதா மாவு கலவை இருக்குற மாதிரி பார்த்துக்கோங்க. இல்லாட்டி உருண்டை உடைஞ்சு வெளில வந்து, மத்த போண்டா மேலலாம்  கருப்பா மாறிடும். எண்ணெயும் பாழாகும். அங்க மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
நன்றியுடன்,
ராஜி.

Monday, December 04, 2017

முன் ஜென்மத்துல என்னவா இருந்தோம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?! - ஐஞ்சுவை அவியல்

போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தேனோ! உங்கக்கிட்டலாம் மாட்டிக்கிட்டு இம்சைப்படுறேன். எதாவது வழியிருந்தா, நான் எப்படி இருந்தேன்னு பார்க்கனும்.


காஞ்சி பெரியவாக்கிட்ட, ஒரு பக்தர்  நான் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தேன், என்னவாக இருந்தேன் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?ன்னு கேட்டாராம்.  ,அதுக்கு முன் ஜென்மங்களைப் பற்றி விசாரிக்கும்முன் இப்போது உமக்கு இருக்கும் ஜென்மம் உண்மையா? இப்போது உமக்கு ஜென்மம் எது என்று பார்க்கலாமே! நம் எல்லாரிடமும் உள்ள குறை என்னவென்றால், கடந்த காலத்தில் நாம் எவ்வாறு இருந்தோம்?! எதிர்காலத்தில் எப்படி இருப்போம் என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்படுறோம்.  ஆனா,  கடந்த காலத்தைப் பற்றியோ, வரப்போவதைப் பற்றியோ நமக்கு எதுவும் தெரியாது. நிகழ்வது தெரியும். நேற்றும், நாளையும் இன்றைய தினத்தைப் பொறுத்தே இருக்கு.  நேற்றை, அப்போது இன்று என்றே அழைத்தோம். நாளையும் இன்று என்றே நாளைக்குச் சொல்வோம். ஆக,  இறந்தக்காலமும், எதிர்காலமும் இல்லை. நிகழ்காலத்தின் உண்மை இயற்கையை, நிரந்தர, சாஸ்வதமான இருப்பைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நிகழ்காலத்தைப் பொறுத்தே, சென்றகாலம், வருங்காலம் என்ற இரண்டும் தோன்றும். இரண்டும் நிகழ்கின்றபோது அவையும் நிகழ்காலமாகவே தோன்றும், நிகழ்காலம் என்ற ஒன்றே இம்மூன்றும். அதனால,  இறந்தக்கால, வருங்கால ஆராய்ச்சிகள் செய்வது, ஒன்று என்ற முதல் எண்ணை விட்டுவிட்டு  எண்ண முயல்வது போல்தான்ன்னு பதில் சொல்றார். அதனால, போன ஜென்மத்துல எப்படி இருந்தேன்னு  ஆராய்ச்சிய விட்டுட்டு உருப்படுற வழியபாரு. 

சரி சரி, ரொம்ப அட்வைஸ் பண்ணாதீங்க..  வெயில்ல சுத்தி சுத்தி கறுத்து போய்ட்டேன்.அதுக்கு ஒரு வழி சொல்லு மாமா..


சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, காய்ஞ்சதும் கழுவினா, நாளடைவில் முகம் சிகப்பாகும். தக்காளியை நல்லா மசிச்சு அதுல எலுமிச்சை சாறு கலந்து கை,கால்ன்னு பூசிக்கிட்டு வந்தாலும் சீக்கிரத்துல சிகப்பாகிடுவே.  முகத்தை கழுவினப்பின் கொஞ்சம் பால் எடுத்து முகத்தில் பூசி கொஞ்சநேரம் கழிச்சு கழுவிவர  முகம் பிரைட்டா மாறும். இதேமாதிரி, வெயில்ல கறுத்த நிறம் மாற இளநீரை பூசிக்கிட்டாலும் நிறம் மாறும்.  சீரகம் , முள்ளங்கியை தனித்தனியா தண்ணீரில் கொதிக்க வச்சு அந்த தண்ணில முகம் கழுவினாலும் முகம் பிரகாசமா மாறும்.  புதினாச்சாறு, எலுமிச்சைச்சாறை சம அளவு எடுத்து கலந்து பூசிவந்தாலும் முகம் சிகப்பாகும். அண்ணாசி, தர்பூசணி, பப்பாளி பழச்சாறுகளை பூசி வந்தாலும் வெயிலால் கருத்த சருமம் சிகப்பாகும்.  இதுலாம் போட்டு பாரு. பழைய மாதிரி சிகப்பாகிடுவே. சரி சிகப்பாகி என்ன பண்ணப்போறீங்க மேடம்..

சினிமாவுக்கு போவேன்... இப்பதான் ரோபோ 2.0 வரப்போகுதில்ல. அதுக்கு போவேன். 

சரி, இந்தியாவில் சினிமா தியேட்டர்ல காமிச்ச இடம் எதுன்னு தெரியுமா?!

தெரியாது மாமா.. 

இந்தியாவில் முதன் முதலில் திரைப்படம் காமிச்ச இடம் பம்பாய் வாட்சன் ஹோட்டல் (1896 ஜூலை 7) . நீதான் ஷோபா, சேர்ல துணி போட்டு வைக்குறேன்னு பார்த்தா, எல்லா பொம்பளைங்களும் அப்படிதான் போல! இந்த படத்தை பாரு.
நீங்க ரொம்ப புத்திசாலிதான். ஒத்துக்குறேன். சரி  நான் கேட்கும் விடுகதைக்கு மட்டும் பதில் சொல்லுங்க பார்ப்போம்..  ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க... ஸ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடலும் தூங்க, ஒருவள் மட்டும் தூங்காமல் விழித்திருப்பாள். யார் அவள்?!
விடையை யோசிச்சு வைங்க. நான் வேலைலாம் முடிச்சுட்டு வரேன்...


நன்றியுடன்,
 ராஜி

Sunday, December 03, 2017

மாவளி சுத்தினா பாவம் போகுமா?!


தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, ரம்ஜானுக்கு பிரியாணி, கிறிஸ்துமஸ்க்கு கேக் போல கார்த்திகை பண்டிகைக்கு எங்க ஊருல “மாவளி” தான் ஸ்பெஷல்.  தோட்டத்துல அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் அளவுக்கு குழி தோண்டுவாங்க. அப்படி தோண்டின பள்ளத்து ஈரம் போக அதுல கொஞ்சம் தவிடு தூவி, அதன்மேல் பனம்பூக்களை அடுக்கி, மேலேயும் கொஞ்சம் தவிடு தூவி, விறக‌டுப்பில் கனன்றுக்கிட்டிருக்கும் கட்டை நெருப்பில் ஒன்றிரண்டு எடுத்துட்டு வ‌ந்து அதுல தூவி விடுவாங்க. எல்லா பனை மரப்பூவும் மாவளி செய்ய பயன்படாது. ஒரு சில மரத்துல பூ பூக்கும். ஆனா, அது காயாகாது. அப்படிப்பட்ட மரத்தை ஆண் மரம்ன்னு சொல்லுவாங்க.  இது எல்லா வகை மரத்துலயும் உண்டு.  (இதை வச்சு கே.பாக்கியராஜ் இது நம்ம ஆளு படத்துல ஒரு விடுகதை வச்சு அதுக்கு பரிசுலாம் கொடுத்த கதை உண்டு). நெருப்பை ஊதக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஊதினா ஊமக்காத்தி ஆகிடும்ன்னு சொல்லுவாங்க. நெருப்பு கனன்றுக்கிட்டே இருக்கனுமாம். தீப்பிடித்து எறியக் கூடாது.   பனம்பூ எரிஞ்சுட்டா சாம்பல் ஆகிடும். அதை வச்சு மாவளி செய்ய முடியாதாம். பனம்பூ முழுசும் நெருப்பு மாதிரி வந்தவுடன் தோட்டத்தில் இருக்கும் பூவரசு இலைகளைப் பறித்து குழியை மூடி அதன்மேல் மண் போட்டு மூடிடுவாங்க.
சாயந்தரத்துக்குள்ள நெருப்பு ஆறிப்போயிருக்கும். மண், இலைலாம் தள்ளிட்டு பனம்பூ கரியை மட்டும் புதுப்பொண்டாட்டிப்போல பக்குவமா எடுத்து அம்மில வச்சு அரைப்பாங்க. அப்படி அரைச்சு வர்ற கரியை பழைய லுங்கித்துணில தேவையான அளவு சுருட்டி கட்டி வைப்பாங்க. கிருத்திகை, நாட்டுக்கிருதிகைன்னு ரெண்டு நாளைக்கு வர்ற மாதிரி வீட்டுல எத்தனை பசங்க இருக்காங்களோ அவங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணி வச்சுப்பாங்க.


பனை மட்டைகளை வெட்டி, கத்தியால சீவி, மூணு மட்டைகளுக்கிடையில் துணில வச்சு சுருட்டிய பனம்பூவை வச்சு மேலயும், கீழயும் வச்சு கட்டிடுவாங்க. தலைக்கு மேல சுத்துறதுக்கு வசதியா ஒரு கயிறும் கட்டி ரெடி பண்ணி வைப்பாங்க.  சாமிக்கு படைச்சு சாப்பிட்டப் பின் இந்த மாவளியை சுத்துறதுக்கு அப்பா ரெடி பண்ணித் தருவார். அந்த மருந்து மேல அடுப்புக் கரி வச்சு லேசா தீப்பிடிக்க வைப்பாங்க. இதுவும் எரியக்கூடாது. நெருப்பு கனன்றுதான் தீப்பிடிக்கனும். சாப்பாடே இறங்காது. மனசு முழுக்க மாவளி மேலதான் இருக்கும். ஒரு வழியா அப்பா மாவளியை ரெடிப் பண்ணித் தருவார்.  தலைக்கு மேல மாவளியை சுத்துசுத்துன்னு சுத்தும்போது, அதிலிருந்து நெருப்பு பொறிகள் கொட்டுறது பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கும். ஊர் முழுக்கவும் இதே காட்சிதான்!




அதுலயும் அக்காக்கள் சுத்தும்போது அண்ணாக்கள் அந்த பக்கம் போய்ட்டா போதும். அக்காக்கள் போடும் சீன் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. சொல்லி மாளாது. எங்க தெருவுல யார் வீட்டு மாவளி நல்லா பொறி பறக்குதுன்னு மினி சர்வே எடுத்து வருவோம். அப்படி நல்லா செஞ்சவங்க வீட்டுக்கு போய் வாங்கி ரெண்டு மூணு சுத்து சுத்துவோம். அண்ணன்கள், மாமா, சித்தப்பா,அக்காக்கள்லாம் விதவிதமாக தலைக்குமேல், பக்கவாட்டுலன்னு விதவிதமா சுத்துவாங்க. கூடவே தங்களோட வீட்டு குழந்தைகளை வச்சும் சுத்துவாங்க. அதைப் பார்க்கும்போதே பொறாமையா இருக்கும்.   சில சமயம் மாவளி சுத்தும்போது கயிறு அறுந்து சுத்துறவங்க முதுகையும், பக்கத்துல நிக்குறவங்களையும் பதம் பார்க்குறதும் நடக்கும்.


சின்னவங்க முதற்கொண்டு பெரியவங்க வரை இந்த மாவளியை சுத்தனுமாம். அப்படி சுத்தினால் நம்மை பிடிச்சிருக்கும் கெட்டதுலாம் விலகிடும்ன்னு ஒரு ஐதீகம். சுத்தி முடிச்சதும் அந்த பனைமட்டைகளை வீட்டு கூரை மேல போட்டு வைப்பாங்க. காய்ஞ்சதும் அடுப்புல வச்சு எரிப்பாங்க. இந்த மகிழ்ச்சி கிடைக்க அடுத்த வருசம் வரை காத்திருக்கனும்!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...

நன்றியுடன்,
ராஜி.

ஒரு ஆசிரியரையே சமாளிக்க முடியாது.. 24 ஆசிரியர்களிடம் பாடம் கற்ற மாணவன்...


Bala Swaroopa of Shri Adiguru Dattatreya  (via Shree Kshetra Ganagapur):
சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அம்சத்தோடு ஒரு பிள்ளை வேண்டுமென அத்ரி, அனுசுயா தம்பதிகள் விரும்பி மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றனர். இச்சா, கிரியா, ஞான சக்தியாகிய மூன்று சக்திகளுக்கும் அப்பாற்பட்ட நிர்க்குணப்பரம்பொருளை குறிக்கும் பெயரே அத்ரி.. அனுசுயா என்பதற்கு பொறாமை, அசூயை, வெறுப்பு போன்ற தீய குணங்கள் இல்லாதவள்ன்னு பொருள்.. தத்த என்றால் வழங்கப்பட்டது என்று பொருள். சுய லாபமில்லாத தியாகத்தை உணர்த்துது. அத்ரி முனிவரின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் சேர்ந்து தத்தாத்ரேயர் என்று பேர் வந்துச்சு.
Sadguru Dattatreya, the first guru to take a body.  Usually depicted as the Male Trinity:
இவர் மிக இளம் வயதிலேயே பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைய பல இடங்களை சுற்றி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கங்காபுரத்தில் பிரம்ம ஞானத்தை அடைந்தார். இவரது பத்தினியின் பெயர் அனகா தேவி. ஆந்திராவில் அனகா தேவி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுது.இந்த விரதம்  கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட அனுஷ்டிக்கப்படுது. வட இந்தியாவில் தத்தாத்ரேயர் விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுது.


Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
இனி தத்தாத்ரேயர் அவதாரம் பற்றி பார்ப்போம்...

Birth of Dattatreya:

மும்மூர்த்திகளே பிள்ளையாய் வரவேண்டி பதிவிரதையான அனுசுயா தவமிருந்ததால் அவளின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில் மும்மூர்த்திகளும் இருந்தனர். இதுக்குறித்து தங்கள் பத்தினிகளான பார்வதிதேவி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோரிடம் ஆலோசித்தனர். பெண்களுக்கே உண்டான பொறாமை குணத்தோடு, அனுசுயா சிறந்த பதிவிரதைதான் என்று நிரூபித்தப்பின் அவள் கேட்கும் வரத்தை கொடுங்கள் என்று கூறினர். அனுசுயாவின் பதிவிரதத்தை நிரூபிக்கும் பொருட்டு அனுசுயா இல்லம் நோக்கி சென்றனர். அப்போது அத்ரி முனிவர் வெளியில் சென்றிருந்தார்.
தங்கள் இல்லம் தேடி வந்தவர்கள் மும்மூர்த்திகள்ன்னு அறியாவிட்டாலும், விருந்தோம்புதல் இல்லாளின் முக்கிய கடமையாதாலால் அவர்களை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தி அறுசுவை சமைக்க சென்றாள். உணவு சமைத்து, உணவு பரிமாற ஆயத்தம் செய்து  மும்மூர்த்திகளையும் அழைத்து மனையில் அமர்த்தி உணவு பரிமாற சென்றாள். அப்போது, மும்மூர்த்திகளும் அம்மா! நாங்கள் உணவு உட்கொள்ள வேண்டுமெனில் ‘நிர்வாண நிலையில்தான் நீ உணவை பரிமாற வேண்டுமென ‘ கூறினர். அனுசுயா ஒருகணமும் யோசியாமல் தன் கணவனின் கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து மும்மூர்த்திகளின் மேல் தெளித்து அவர்களை குழந்தையாக்கி உணவூட்டினாள். 
Lord Dattatreya Mantra or Datta Mala Mantra  is a very oowerful beej mantra. You can chant it 108 times for prosperity, goodluck and Blessing of Dutt Guru.:
அனுசுயாவின் கற்பை பரிசோதிக்க சென்ற தங்கள் கணவன்மார்கள் வராததை அறிந்து கலக்கமுற்ற முப்பெரும்தேவியர்கள் அனுசுயா இல்லம் நோக்கி வந்தனர். அங்கு உலக உயிர்களை தங்கள் குழந்தையாய் பாவித்து காக்கும் மும்மூர்த்திகளும் குழந்தையாய் இருப்பதை கண்டு திகைத்து அங்கு நடந்ததை உணர்ந்து, தங்கள் கணவன்மார்களை திருப்பி தருமாறு அனுசுயாவை வேண்டி நின்றனர்.   அனுசுயாவும் மும்மூர்த்திகளையும் முன்போலவே மாற்றி தந்தாள். அனுசுயாவின் கற்பு நெறியை மெச்சி மும்மூர்த்திகளும் அனுசுயாவின் மகனாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.
Lord Dattatreya Trinity Wallpaper-guru datt-guru-giranar-girnari-parikrama:
மூன்று திருமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார் தத்தாத்ரேயர்.  சிவன் அம்சமாக சூலம், சங்கும், பிரம்மா அம்சமாக கமண்டலமும், துளசி மாலையும், விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நாய்களாகவும்,  தர்ம நெறிகளும் பசு உருக்கொண்டு இவர் அருகில் இருக்கின்றது.   தத்தாத்ரேயரை வாங்கினால் ஞானம்,மோட்சம்,நற்குணங்களை பெறலாம்.இவர் மந்திரம் ஞாபக  சக்தியை தரும்.குழந்தை இல்லாதவர்கள் இவரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நினைவாற்றல் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டில் இன்பம் பெருகும்.

இவரை வழிப்பட கடுமையான விரத முறைகள் ஏதுமில்லை. ஒரு மிட்டாய்க்கு தாவி வரும் பிள்ளைப்போல இவரை உள்ளன்போடு நினைத்து காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். நினைத்தது நடக்கும்.
Vedic Astrology - Acharya Priti Bhargava | This blog is in praise of Bhagwan Shiv Shankar : http://www.vedic-astrology.co.in:
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார். 
Lord Dattatreya (Vishnu) is worshipped in a very graceful householder's avatar in addition to the famously known ascetic forms. This very form is called as Anagha Swami, where His consort is called Anagha Devi - She who can make all of us cross this ocean of bondages and Karma. http://www.dycuk.org/newsletters/anaghastami2011.html:
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன். 

தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..

பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...

எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....

மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...

மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...

வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன்மூலம் பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..

எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன். 

கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..

பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த  விட்டில் பூச்சியிடம் கற்றேன்..

தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென  தேனீக்களிடம் கற்றேன்...

 குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழுக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...

 மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!? பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்  இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..

 நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்.... 

 பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.  இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...

 குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...

பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன். 

 ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.  அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..

போர்   ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,  ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்.. 
Anaghashtami Dattatreya is one of the incarnation of Mahavishnu and Mahalakshmi will be worshipped with him in the form Anagha devi. According to Bhavishyottara Purana, Anagha devi and Dattatreya should be worshipped on Margashira Krishna paksha Ashtami.:
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..

 தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.

ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து  வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்.... எனக்கூறி முடித்தார்..

யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...
தத்தாத்ரேயருக்கு வட நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான கோவில்கள் உண்டு. ஆந்திராவில் எல்லார் வீட்டுலயும் தத்தாத்ரேயரின் படங்கள் வைத்து வழிப்படுவர். தமிழகத்தில் தத்தாத்ரேயர் பற்றி அறிந்தோர் சொற்பமே. இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.

இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி... அவரை வணங்கி அருள்பெறுவோம். தத்தாத்ரேயர் மூலமந்திரம்...


நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே | 
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே
நன்றியுடன்,
ராஜி