Friday, August 14, 2015

ஆடி அமாவாசை - பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை

இன்று ஆடி அமாவாசை நமது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்ய மிகவும் உகந்த நாள்,அதேபோல நமது பதிவும் நீண்ட நாள்களுக்கு பிறகு வரும் ஒரு விசேஷமான நாள்.சரி,இந்த ஆடி அமாவாசையை பற்றிய உண்மைகளையும், வழிபாடுகளையும், சம்பிரதாயங்களையும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.புண்ணியம் தேடி கோவில்களுக்கு பயணம் செல்லும் போது ஒரு முறை கன்னியாகுமரி சென்றிருந்த நேரம் காலை நான்குமணி, சூரியன் கூட உதிக்காத அந்த காலை பொழுதில் கடல் அலைகளைவிட திரளான கூட்டம் கரையினில்,என்ன விஷேசம் என்று பார்க்கும் பொழுது,பொதுவாக தென் மாவட்டங்களில் மிகவும் விசேஷமாக செய்யப்படும்,குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் விசேஷமாக தலைமுறை தலைமுறையாக செய்துவரும் வழிபாடான ஆடி அமாவசை பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை,பொதுவாக இந்த மாவட்டத்தில் பூஜை முறைகள் பலவும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முறைகளிலேயே பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும்,இங்கே முன்னோர்களுக்கு செய்யப்பட்டுவரும் பலிகர்ம பூஜையானது,கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும்,திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லத்தில் உள்ள பரசுராமர் ஷேத்திரத்திலும் மிகவும் விசேஷமாக செய்யபடுகிறது
சரி அமாவாசை என்றால் என்ன?, இந்து கலாச்சாரத்தில் தாய் மற்றும் தாய் வழி மாதுர்காரனாகிய சந்திரனும் ,தந்தை மற்றும் தந்தை வழி பிதுர்காரனகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும் .இந்த தினத்தில் நமது தாய் மற்றும் தந்தைவழி மறைந்த நம் முன்னோர்கள், அவர்களது சந்ததிகள் முன்னேற இந்த அமாவாசை தினத்தில் வந்து  அருள்புரிவார்கள் எனபது ஐதீகம்.மேலும், நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை,இந்த பித்ருகர்ம பூஜையினை கன்னியாகுமரி,ராமேஸ்வரம் , பவானி ,பாபநாசம் ,திருச்செந்தூர் திருவையாறு இந்த இடங்களில் உள்ள நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்யபடுகிறது , இந்த இடங்களில் சென்று   பலிகர்ம பூஜை  செய்ய முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள், அன்றைய தினம் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவிட்டு வஸ்திரதானம் செய்து  ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மனம் குளிர செய்தாலும் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்
இங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்கள் ,கோவில்களின் தெப்பகுளம் இங்கெல்லாம் கூட அதிக அளவில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.நதிக்கரை,எரிகரைகளில் மட்டுமில்லாது,கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பிதுர்க்களுக்கு பலிகர்மபூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.அதேபோல் தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இருக்கும் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் இங்கேயும் ஆடி அமாவாசை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் ஆடி அமாவாசை நடக்கும் காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.என்ற நம்பிக்கையும் இந்துகள் மத்தியில் கடைபிடிக்கபட்டுவரும் ஒரு சடங்கு ஆகும்
ஆடி அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சகல  சௌபாக்கியங்களுடனும்,சுமங்கலிகளாகவும்,நீண்ட ஆயுளுடனும், மாங்கல்ய பாக்கியத்துடனும்  வாழ்வார்கள் என்பதும் ஒரு ஐதீகம் அதற்கு ஒரு கதையும் உண்டு.அழகேசன் என்னும் பராகிரமம் மிக்க அரசன் அழகாபுரி என்னும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான்,நட்டுமக்களிடமும் கடவுளிடமும் மிகவும் அன்பும்,பற்றுதலும் கொண்ட அரசன் தனக்குப்பின் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என வருத்தம் கொண்டிருந்தான், அதனால் புத்திர பாக்கியம் வேண்டி தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை சென்றான் அதன் பலனாக அவனுக்கு அழகிய ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்,அபொழுது ஒரு அசரீரி,கூறியது ஹே..மன்னா,உன் மகன் வாலிப வயதை அடையும் போது இறந்துவிடுவான் என கூறியது,உடனே மன்னன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான் மன குழப்பத்தில் இருந்த அவன்,மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கு சென்றான்.ஒருநாள் மன்னன் ஒரு காளி கோவிலில் வழிபட்டு கொண்டு இருக்கும் போது,உன் மகன் இறப்பது என்பது விதிபயன் ,நீ அவன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை ,அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.  
இளமைப் பருவம் வந்த இளவரசன் அசரீரி சொன்னது போல ஒருநாள் இறந்துபோனான். மன்னனும் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி,இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் கதறி அழுதாள்.அரற்றினாள். தவித்தாள்.தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள்.உடனே அந்த பெண்,தேவியிடம் தாயே .இதேநாளில் உன்னைவழிபடும் பெண்கள் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டினாளாம்  இதைகேட்டு மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் வழிபட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.
ஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.இந்த அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற ,தடைகள் அகல, பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..
இங்கே  கன்னியாகுமரியில்,கரையில் அமர்ந்து இருக்கும் பிராமணர்கள் அதற்கான பூஜைமுறைகளை செய்கின்றனர்.முன்னோர்களை நினைத்து எள்ளும்,சோறும் கலந்து தங்கள் முன்னோர்களின் 5 தலைமுறைகளின் பெயர்களுக்கு சொல்லி அவர்களுக்கு சாந்தி செய்யபடுகிறது,பின்னர் அதை தலைமேல் சுமந்து முக்கூடல் சங்கமத்தில் சூரியனை பார்த்து கடலில் மூழ்கி அந்த பிண்டத்தை பின்பக்கமாக தூக்கி போட்டு கடலில் நீராடி ஐயருக்கு தட்ஷணை கொடுத்து  திருநீறு வைத்து,கொள்வார்கள்,இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்,பெண்கள் தங்கள் கணவன் உயிருடன் இருக்கும் போதுதன்னுடைய தந்தைக்கு இந்த பலிகர்ம பூஜை செய்ய கூடாது அதே சமயம் தன்னைவிட வயது குறைந்த ஆன்மாக்களுக்கு தனியாக இந்த பூஜை செய்யகூடாது,தங்களுடைய முன்னோர்களுடன் சேர்ந்தே செய்யவேண்டும்
பலிகர்ம பூஜை முடிந்த பின்னர் சூரிய உதயத்தை கும்பிட்டு நம்முடைய முன்னோர்களுக்கு தெய்வங்களின் ஆசிகள் கிடைத்திட பிரார்த்தனை செய்கிறார்கள் .பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்துவிட்டு,தங்கள் வீட்டிற்கு சென்று முன்னோர்களுக்கு படையல் இட்டு காகங்களுக்கு படைத்தது,பின்னர் யாருக்காவது  வஸ்திரதானம்,செய்து அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து தாங்களும் உண்பார்கள்.இதில் சிலர் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.ஆனால் சிலர் காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவற்றை முன்னோர்களுக்கு படைத்தது வழிபடுவார்கள்
பிதுர் சிரார்த்தம் எனபது,ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். ஆனால் சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.அப்படி சென்ற உயிர்,பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதுர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும்.அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர்.இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீத்தி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.
ஆனால் ,இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும்,முத்தியடைவனவுமன்றி சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும்.இவைகள் அல்லாது ஒரு உயிர் இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.இதற்கும் ஒரு ஜோதிடம் உண்டு ,சாதரணமாக நாம் பார்க்கும் ஜோதிடம் ஜாதகம் எல்லாம்  ஜோதிடம் படித்த எவரும் சொல்லிவிட முடியும் ,ஆனால் இறப்புக்கு பின் வரும் சூக்கும தேகத்தின் ஆயுள் கணக்கிடுவதர்க்கு ஒரு ஜோதிடம் உண்டு ,அது அவர்கள் இறந்த காலத்தை வைத்து கணக்கிட படுகிறது .இந்த ஜோதிடம் சித்திரகுப்தன் ,மற்றும் யமதர்மராஜாவுக்கு மட்டும் தான் தெரியுமாம்
சென்னையில் கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர கோவிலில் பித்ரு கர்ம பூஜை செய்வது சிறப்பு,ஏனெனில்,லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். என்றும் அதில் இருந்து நீர் எடுத்து இங்கிருக்கும் சிவனை  அபிஷேகம் செய்து வழிபட்டனர். எனவும் , இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். ஈசனின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது. திருக்கோவில் ஸ்தலபுராணம்.ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச்சஞ்சலம் நீங்கும்,பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்..பூஜை பொருட்களை,எள்ளும்,நீரும் சோறும் ,நீர்நிலைகளில் தான் சமர்பிக்கவேண்டும் ,எனபது விதி ஆனால் இபொழுது அங்கே பிதுர் கர்ம பூஜை பொருட்களை பூஜை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் ,அது நமக்கும் நம் முன்னோர் களுக்கும் பாவத்தை கொண்டு செல்லும்
பொதுவாகவே வடமாவட்டங்களில் மற்றும் சென்னையை சார்ந்த இடங்களைல்லும் இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அந்த வழிபாடுகளை செய்யமுடியவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது மிகவும் நல்லது.அதே போல பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் திருவல்லம் பரசுராமர் ஷேத்ரத்திலும் மிகவும் விஷேசமாக பலிகர்ம பூஜைகளும் செய்யப்படும்.அதிலும்  நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள்.இதே மாதிரி, இராமேஸ்வரம் ஸ்லத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்யபடுவதும் சிறப்பு.
அதே போல இறந்தவர்கள் ஆன்மா மோட்சத்திற்கு செல்ல ,கோபுரங்களின் உச்சியில் மோட்ச தீபம் கூட ஏற்றலாம் ,ஆனால் அந்த மோட்ச தீபம் ராஜகோபுரத்தின் அளவைவிட கொஞ்சம் உயரம் குறைந்ததாகவே இருக்கவேண்டும் சுத்தமான பசுநெய் கொண்டுதான் மோட்சதீபம் ஏற்ற வேண்டும். இல்லைஎனில் நம் வீட்டில் செய்த நெய் உத்தமம்.மூலவருக்கு நேரே கிழக்கு நோக்கி இருக்கும் கோபுரத்தில் ஏற்றுவது நலம்
வாயகன்ற ஒரு மண் சட்டி,இல்லை ,பெரிய மண் விளக்கு எடுத்து ,அதில் நவதானியங்களை,வெள்ளை துணியில் முடியவேண்டும் ,நவதானியங்கள் கிடைக்காதவர்கள் எள்ளு கூட எடுத்துக்கொள்ள்ளலாம்.அதை வெள்ளை துணியில் முடிந்து அந்த முடிப்பை சுத்தமான் நெய் சட்டியில் வைத்து ,கோபுரத்தின் மேல் நம்முடைய முனோர்கள் மற்றும் நம்மைவிட்டு நீங்கியவர்களை நினைத்து தீபம் ஏற்றி அவர்கள் ஆன்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்து ,சுவாமிக்கு அர்ச்சனை செய்தல் நலம்.
ஆடி அமாவாசை எனபது நம்மை விட்டு நீங்கியவர்கல்ளுக்காக பலிகர்மம் செய்யும் ஒரு நல்லநாள் அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் தொல்லைகொடுந்து இருந்தாலோ இல்லை , அவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை நாம் கோபத்தில் பேசி இருந்தாலும் தவறு என தெரிந்தும் நாம் ,அவர்களுக்கு செய்த தவறுகளுக்கு, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு நல்ல வாய்பான  இந்த ஆடி அம்மாவசை தினத்தில்  நாம் முன்னோருக்கு வழிபாடு செய்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்தது அவர்களின் ஆசிகளை பெறுவோம் ..

நன்றி.

14 comments:

  1. ஆடி அமாவாசை குறித்து விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, சிவனுக்கு சிவராத்திரி, பிள்ளையாருக்கு விநாயக சதுர்த்தி, பெண் தெய்வங்களுக்கு நவராத்திரி வணங்கத்தக்க நாட்கள் போல நம் முன்னோர்களுக்கு இந்த ஆடி அமாவசை. மூத்தார் கடன்களை கண்டிப்பாய் நாம் இந்நாளில் செய்யனும்ங்குறது இந்துக்களின் ஐதீகம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. வணக்கம்,
    சிறப்புகள் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் பாதங்களில் சரணடைந்த நம் முன்னோர்களுக்கு அங்கு எல்லாமே கிடைக்குமாம். சாப்பாடும், தண்ணீரும் மட்டும் நாம்தான் கொடுக்கனுமாம். நாம இங்க கொடுக்குற எள்ளு கலந்த சாதம்தான் அவங்களுக்கு சாப்பாடு. அந்த பிண்டத்தின் மீது தெளிக்கும் தண்ணீர்தான் அவங்களுக்கு குடிநீர்னு சொல்லுது நம்ம சாஸ்திரங்கள்

      Delete
  3. நீண்ட நாட்களுக்குப் பிறகு
    தங்களின் பதிவினைக் காண்கிறேன்
    மகிழ்ச்சி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. முன்போல தினமும் வரலைன்னாலும் இனி அடிக்கடி வருவேன்.நன்றி சகோ ..

      Delete
  4. எது எப்படியோ உங்கள ரொம்ப நாள் கழித்து பார்த்து ரொம்ப சந்தோசம் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  5. ராஜி அக்கா....
    ரொம்ப நாள் எழுதலையேன்னு நினைச்சேன்...
    அருமையான பகிர்வு...
    படங்களுடன்...
    தொடர்ந்து எழுதுங்க அக்கா...

    ReplyDelete
    Replies
    1. இனி கண்டிப்பாய் படங்களுடனும், பதிவுகளுடனும் தொடர்ந்து வருவேன் சகோ!

      Delete
  6. அடிக்கடி ராஜி அக்காள் இப்போது வலையில் காணமுடிவதில்லை என்றாலும் காத்திரமான பகிர்வுடன் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இனி காத்திரமான பதிவுகளுடன் காமெடி பதிவுகளும் தொடர்ந்து வரும் சகோ.

      Delete
  7. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.

    ஆடி அமாவாசை பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவுகள் மூலம் உங்களையெல்லாம் சந்திகணும்ன்னு தான் எனக்கும் ஆசை,தினமும் வரமுடியலைன்னாலும்,இனி அடிகடி வருவேன்,நன்றி அண்ணா ,

      Delete