Saturday, August 04, 2018

கண்ணாமூச்சி ரே ரே ரே... கண்டுபிடி ரே ரே ரே - கிராமத்து வாழ்க்கை 4

இன்னிக்கு கடைகளில்  ஸ்கூல், ஆஃபீசுக்கு போறவங்களுக்குன்னு விதம் விதமா டப்பர்வேர் செட் கிடைக்குது. முன்னலாம் ஆஃபீஸ் போறவங்களுக்கு இந்த டிஃபன் கேரியர்லதான் சாப்பாடு கட்டி கொடுப்பாங்க. அதை திறந்து, அடுக்கி, மீண்டும் மூடி வைப்பது எனக்கு பிடிச்ச விளையாட்டு. டப்பாக்கள் கழலாம இருக்கவும், சாப்பாட்டை கிளறி போட்டுக்கவும் கேரியர் உச்சியில் ஒரு சின்ன ஸ்பூன் இருக்கும்.  

டூரிங்க் கொட்டா... அந்த காலத்து ஏசி தியேட்டர்.  கீத்து கொட்டகைதான் தியேட்டரே.   மழைத்தண்ணி உள்ள வராம இருக்க,   கீழ இறக்கி கூரை வேய்ஞ்சிருப்பாங்க. மத்தபடி சுவர்லாம் இருக்காது. காம்பவுண்ட்கூட தென்னங்கீத்துதான்.  அப்புறம் தென்னங்கீத்துக்கு பதிலா சிமெண்ட் ஷீட் வந்துச்சு. தரை டிக்கட்டைவிட பெஞ்ச் டிக்கட் விலை அதிகம். அதைவிட சேர் டிக்கட் விலை அதிகம்.  ஒரு படத்துக்கு நாலு அஞ்சி முறை இண்டர்வெல் வரும். அதுக்கு காரணம் ரீல் மாத்துறதா சொல்வாங்க. தரை டிக்கட்டில் ஆண், பெண்ணுக்குன்னு இடம் தனித்தனியா பிரிக்க  இடையில் சின்ன சுவர் எழுப்பி இருப்பாங்க. குடும்பமமா வந்தாலும் தனித்தனியாதான் உக்காரனும்.  சோடா, பச்சை கலர், வேர்க்கடலை உருண்டை, முறுக்கு இதுலாம் கிடைக்கும். முன்னாடி இருக்கவுங்க தலை நமக்கு மறைக்குதுன்னா மணலை குமிச்சு மேடாக்கி அதுல உக்காந்து படம் பார்ப்பாங்க. தியேட்டர் காலியா இருந்தா,. மணலை குமிச்சு தலை வச்சுக்கிட்டு படுத்துக்கிட்டு படம் பார்ப்பாங்க. மாலைக்காட்சியும், இரவுக்காட்சியும் மட்டும்தான் படம் காட்டுவாங்க. பகல்ல வெளிச்சத்துல படம் தெரியாது. சினிமாவுக்கு போகாத நாட்களில் டூரிங்க் கொட்டாவுக்கு வெளிய உக்காந்து கதை கேட்ட அனுபவம்லாம் பலருக்கு உண்டு.
அப்பா வழி பாட்டி வீட்டில் வயல் உண்டு. லீவுக்கு போகும்போது அம்மாவோடும், பாட்டியோடும் வயலுக்கு போகும் வழக்கம் உண்டு. வேர்க்கடலை பயிரிட்டா வேர்க்கடலை பறிப்பது, காய வைப்பது, மூட்டை கட்டுவது, விதைக்கு கடலை உரிப்பதுன்னு கூடமாட நானும் பெரியப்பா, அத்தை பசங்கலாம் விளையாட்டய் செய்வோம். ஆனா, நெல் பயிர்ன்னா என்ன செய்வதுன்னு தெரியாது. ஆனா, பாட்டி ஒரு பெரிய வெங்கல பானையில் நெல்லை கொட்டி, கோணிப்பையை நனைச்சு போட்டு மூடி நெல் அவிப்பாங்க. அந்த மணம் வீடு முழுக்க பரவும். நெல் வேக வச்சுக்கிட்டே, சாப்பாட்டை பெரிய பேசனில் கொட்டி, பிசைஞ்சு உருண்டை உருட்டி கொடுப்பாங்க. அதை இரண்டு கைகளிலும் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே பாட்டி சொல்லும் கதையை கேட்போம். நெல் வெந்ததும் கொஞ்சம் கொஞ்சமா பாட்டி பாத்திரத்தில் கொடுக்க, அதை பெரியப்பா வீட்டு வாசலிலும், எங்க வீட்டு மொட்டை மாடிலும் கொட்டுவோம். பாட்டி கை சாப்பாட்டுக்காகவும், நெல் மணத்துக்காகவும் அடுத்த அறுப்பு வரை காத்திருப்பேன்.
படத்திலிருக்க மாதிரி மூணு இல்ல அஞ்சு இல்ல ஏழு கட்டம் போட்டுக்கனும். ஒரு சிறு ஓட்டு துண்டை எடுத்து, கட்டத்துக்கு வெளில இருந்து முதல் பெட்டியில் வீசனும். ஒரு காலை தூக்கி நொண்டிக்கிட்டே கட்டத்துக்குள் குதிச்சு அந்த ஓட்டை மிதிச்சு கைல எடுத்துக்கிட்டு நம்ம கட்டத்தையும் நம்மோடு விளையாடுறவங்க கட்டத்தையும் தாண்டி வரனும். இப்படியே நம்ம பக்கமிருக்கும் 2,3,4,5ன்னு எல்லா கட்டத்தையும் தாண்டி, எதிராளியின் கட்டத்தில் 5,4,3,2,1ன்னு தாண்டி வரனும். இதுல, நொண்டிக்கிட்டே ஓட்டை மிதிச்சு  கைல எடுத்துக்கனும், கோட்டை மிதிக்கக்கூடாது, தூக்கி இருக்கும் காலை விடக்கூடாது, இதான் கண்டிசன். அப்புறம் கண்ணை மூடிக்கிட்டு நம்மோட கட்டத்துல ஒரு காலையும், எதிராளியின் கட்டத்துல ஒரு காலையும் வச்சிக்கிட்டு ரைட்டா?!ன்னு கேட்க கோட்டை மிதிக்கலைன்னா ரைட்டுன்னு சொல்வாங்க. அப்ப அடுத்த கட்டத்துக்கு போகனும். கோட்டை மிதிச்சுட்டா கொயட்டுன்னு சொல்வாங்க. அப்ப நாம அவுட். எதிராளி ஆடுவாங்க. 
நாம விளையாடிய விளையாட்டுகளில் நம்ம பிள்ளைங்க விளையாடும் விளையாட்டு இது ஒன்னுதான். வரைமுறை இல்லாம எத்தனை பேர் வேணும்ன்னாலும் விளையாடலாம். யார் கண்ணை பொத்திக்குறதுன்னு சண்டை வந்தால் சாட், பூட், த்ரின்னு போட்டு பார்த்து ஆளுங்களை தேர்ந்தெடுத்துப்பாங்க. அப்படி தேர்ந்தெடுத்த ஆள் கண்ணை இன்னொருவர் மூடிக்கிட்டு, மத்தவங்கலாம் போய் ஒளிஞ்சுக்குவாங்க. கண்ணை மூடி இருப்பவர், கண்ணாமூச்சி ரே… ரே… கண்டுப்பிடி ரே… ரே… நல்ல முட்டையைத் தின்னுப்புட்டு, ஊள  முட்டையக் கொண்டு வா...ன்னு கண்ணை திறக்க, மறைஞ்சிருப்பவங்களை தேடி கண்டுப்பிடுச்சு வரனும்., தேடிக்கிட்டு போனவர் கண்ணுக்கு தெரியாம, கண்ணை மூடின பொதுவான ஆள்கிட்ட போயிட்டா அவங்க அவுட் இல்ல. தேடியவர் கையில் சிக்கிட்டா நாம அவுட். நாம கண்ணை பொத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கவுங்களை கண்டுப்பிடிக்கனும்.
பிடிச்ச பாட்டை மெமரி கார்ட்ல பதிஞ்சுக்கிட்டு போன், பிளேயர்ன்னு பொழுதன்னிக்கும் பாட்டு கேட்டாலும், ரேடியோ பெட்டியில் எப்பவாவது ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிக்காக காத்திருந்து கேட்ட காலம் போல வராது. காலையில் வாழ்த்து, மாலையில் ஒரு பட பாடல், சினிமா கதை வசனம்,  நாடகம், வேளாண்மை செய்திகள், செய்திகள், நேர்க்காணல்ன்னு பாரபட்சமில்லாமல் எல்லாத்தையும்  கேட்ட காலமது.  அதிலும் சிலோன் ரேடியோ நிகழ்ச்சின்னா கூடுதல் ஆர்வம். ரேடியோ என் கைக்கு எட்டாத இடத்தில் அப்பா வைப்பார். ஏன்னா நான் ரேடியோவை ரிப்பேர் ஆக்கிடுவேனாம். அப்பா போனதுக்கப்புறம் திருட்டுத்தனமா  நோண்டுறது வழக்கம். அதிலும் ரேடியோவில் இருக்கும் ஆண்டெனாவை நீட்டி, மடக்கி பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமைன்னா இன்னும் கொண்டாட்டம்.அன்னிக்கு முழுப்படத்தின் கதைவசனம் ஒலிப்பரப்பாகும். அக்கம்பக்கம் குடும்பம்ன்னு மொத்தமா உக்காந்து கேப்போம். அப்பா கிரிக்கெட் வர்ணனை கேப்பார்.  எதும் புரியாதுன்னாலும் கூட உக்காந்து கேப்பேன்.  இப்ப மீண்டும் ரேடியோக்கள் உபயோகம் எஃப்.எம் வருகையால் அதிகமாகுது.  அந்த காலத்து ரேடியோவை கரண்ட் இல்லன்னா கேக்க முடியாது. பிற்காலத்தில் செல் போட்டு கேட்கும் ரேடியோ வந்திச்சு. அதேப்போல வெளியூருக்கு போகும்போது கொண்டு போக முடியாது. ஆனா இப்ப எஃப்.எம் நிகழ்ச்சிகளை போன், ஆப்ப்ன்னு எங்கேயும் எப்போதும் கேட்கலாம்.
என் வாழ்நாளில் குறைஞ்சது பத்து இடம் மாறி இருப்போம். ஆனா, சொல்லி வச்ச மாதிரி ஆறு, குளம், அருவி, ஓடைன்னு எங்க வீட்டு பக்கம் இருந்ததில்லை. ஒரு பெரிய கும்பலா சின்ன வயசில் துணி துவைக்க அம்மாவோடு பம்ப் செட் போவேன். என்னோடு வளர்ந்த பிள்ளைகள்லாம் வயித்துல கயிறு கட்டிக்கிட்டு கிணத்துல நீச்சல் பழகுவாங்க. ஆனா, ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கிதான் குடிக்குமாம்ங்குற மாதிரி நான் மட்டும் பம்ப் செட் வாய்க்காலில் கிடப்பேன். இத்தனைக்கும், என் அப்பா, அம்மா ரெண்டு பேத்துக்குமே நீச்சல் தெரியும்.   அண்ணா ஒருத்தங்க அம்மாக்கிட்ட எடுத்து சொல்லி நீச்சல் கத்துக்க கிணத்துக்கு போனால், அங்க  தற்கொலை பண்ணிக்கிட்ட ஒரு அக்கா உடலை தேடிக்கிட்டு இருந்தாங்க. முதல்நாள் இரவு நடந்ததாலயும், பாறைல மோதியும் அக்கா முகம் சிதைஞ்சு போய் இருந்துச்சு. அன்னிக்கு பிடிச்ச பயம் அத்தோடு நீச்சல் ஆசைக்கு முழுக்கு போட்டாச்சு. இன்னிக்கும் எங்காவது தண்ணில முங்கும்போது அந்த முகம் கண்ணில் வந்து போகும்.
 
இது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு?! தகரத்தால் ஆன சின்ன படகு. அகலமான ஒரு பாத்திரத்தில்  தண்ணி நிரப்பி சின்ன தகரத்துண்டில் இருக்கும் திரியை கொளுத்தி அந்த படகில் வச்சு, அந்த படகை பாத்திரத்து நீர்மேல வச்சா, விசிலடிச்சுக்கிட்டே சுத்தி சுத்தி ஓடும். வீட்டில் திட்டு வாங்காம விளையாடிய ஒரே விளையாட்டு இதுதான்னு நினைக்குறேன்,. ஏன்னா வீட்டை விட்டு வெளில போக வேண்டாமே! ஆனா அந்த பாத்திரத்திலிருக்கும் தண்ணி வீண். ஏன்னா படகிலிருந்து புகையும், எண்ணெயும் கசிஞ்சிருக்கும்.

எலக்ட்ரானிக் கடை பக்கமா போகும்போது சின்ன சின்னதா காந்த துண்டுகள் கிடைக்கும். இல்லன்னா, ரேடியோ, ஸ்பீக்கர் ரிப்பேர் ஆகிட்டா அதிலிருந்து வட்டமா ஒரு காந்ததுண்டு கிடைக்கும். குரங்கை வச்சிக்கிட்டு ஆடுறா ராமான்னு வித்தை காட்டுற மாதிரி காந்தத்தை வச்சிக்கிட்டு வித்தை காட்டுறது வழக்கம்.  ஜாமிண்ட்ரி பாக்சுக்குள் காந்தத்தை போட்டுக்கிட்டு பண்ணுன அலப்பறை இருக்கே! காந்தத்தின் ஒரே துருவங்கள் ஈர்க்கப்படுவதில்லைன்ற தத்துவம்லாம் டீச்சர் சொல்லி கொடுக்குறதுக்கு முன்னாடியே செயல்முறைல கத்துக்கிட்டவங்க நாங்க. அந்த காந்த துண்டை மணல்ல வச்சி தேய்ச்சா, மணல்ல இருக்கும் இரும்புதாதும், இரும்பு துருலாம் ஒட்டிக்கிட்டு வரும். எல்லாத்தையும் கழிச்சுட்டு கருப்பா இருக்கும் இரும்புத்தாதை மட்டும் எடுத்து ஒரு காகிதத்தில் அதை கொட்டி, காகிதத்தின் கீழ இருந்து அந்த இரும்பு தாதை அங்கிட்டும் இங்கிட்டும் ஓட வைப்போம். பேயோட தலை தனியா ஓடுது பாருன்னும் சொல்லி சின்ன பசங்களை பயமுறுத்தி இருக்கோம்..

அடுத்த பகுதியில் பொன்வண்டு, ஜியாமெண்ட்ரி பாக்ஸ், குழாய் ரேடியோலாம் பார்க்கலாம்.

நன்றியுடன் 
ராஜி

14 comments:

  1. விடயங்களை மின்னல் வேகத்தில் படிக்கும் வண்ணம் எழுதி இருக்கின்றீர்கள்.

    பல நினைவுகளை மீட்டி விட்டது பதிவு இரண்டாவது படித்த பொன்னம்மாவையும்....

    ReplyDelete
    Replies
    1. ஓ! ரெண்டாம்ப்பு படிக்கும்போதே லவ்வா?!

      வளவளன்னு பதிவு இருக்கோ! என்ன செய்ய?! சுருங்க சொல்லனும்ன்னுதான் எனக்கும் ஆசை.. முடிலயே!

      Delete
    2. நான் பதிவு நீளம் என்று சொல்லவில்லை.

      பதிவின் சாராம்சம் வேகமாக படிக்கும் வர்ணனையில் அமைந்து விட்டதை சொன்னேன்.

      Delete
    3. வஞ்ச புகழ்ச்சின்னு நினைச்சுட்டேன்.

      Delete
  2. Replies
    1. நினைத்தாலே இனிக்கும். திரும்ப பெற முடியாத சுகங்கள்

      Delete
  3. அந்த சொர்க்க வாழ்வு இனி வரப் போவதில்லை... ம்... ஏதேதோ இனிய நினைவுகள் ஏக்கமாக...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. வசதி வாய்ப்போடு இருக்குறதா நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, பெற்றதைவிட இழந்தவை ஏராளம்.

      Delete
  4. இளமைக்கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன சகோதரியாரே
    இக்கால பிள்ளைகளுக்கு கொடுப்பினை இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. பாரம்பரியத்தையும், விஞ்ஞான வளர்ச்சியையும் ஒருசேர கண்டவர்கள் நாம்.

      Delete
  5. அந்தக்கால நினைவுகளை மீண்டும் மீட்டி விட்டீர்கள் என்பதிவைப் பாருங்கள்/http://gmbat1649.blogspot.com/2011/05/blog-post_11.html

    ReplyDelete
    Replies
    1. இந்தா வரேன்ப்பா

      Delete
  6. சுவாரஸ்யமான நினைவுகள்.

    பாண்டி ஆட்டத்த்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன்.

    மதுரை சக்குடியில் நானும் பம்ப்செட் குளியல் போட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாய்ச்சதுலாம் அதுதான். இன்னிக்கும் குளம், குட்டை, அருவி, ஆறுன்னா ஒருவித ஏக்கம்தான்.

      Delete