Friday, October 12, 2018

ஷீரடி சாய்பாபா ஜீவசமாதி, மகாராஷ்டிரா - ஷீரடி பயணம்

ஷீரடி போகும் வழியிலிருக்கும் கோவில்களை ஒருவழியா  எல்லா கோவிலையும் தரிசனம் செய்தவாறே ஷீரடியை  வந்தடைந்தோம். ஷீரடிக்கு முதன்முதலா வருபவர்கள் தங்குவதற்கு இடம் தேடி சிரமப்படவேண்டாம். ஷீரடி ஜீவசமாதி கோவில் சார்பா, பக்தர்கள் தங்குவதறகான வசதிகளை  செய்திருக்காங்க. நீங்கள் ஷீரடிக்கு போகனும்ன்னு  முடிவெடுத்துவிட்டா, முதலில் Shri Saibaba Sansthan Trust (Shirdi). என்ற இணையத்தளத்திற்குள் சென்று உங்களுக்கான அறையை பதிவு செய்துக்கலாம்.  இப்படி ரூம் புக் செய்ய இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் தேவை. இங்கு சாதாரண அறைகள் 200 ரூபாய்க்கு கிடைக்கும் அதில் 5 நபர்கள் வரை தங்கலாம்.  இதில் 2 நாட்கள் வரை மட்டுமே தாங்கமுடியும்.  தங்கும் நாட்கள் கூடும்போது அங்கிருக்கும் அலுவலகத்தில் சென்று  மறுபடியும் காலநீட்டிப்பை செய்யனும் .குளிர்சாதன அறை வெறும் 400  ரூபாய்க்கே கிடைக்குது.
24 மணிநேரமும் சுடுதண்ணி வசதியுடன் அறைகள் சுத்தமாகவும் இருக்கு. இந்த அறை வேணும்ன்னா நீங்க இந்த இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்யவேண்டிடும் . https://online.sai.org.in/roomBooking.do?parameter=input . அரிபரி இல்லாம நல்லா தரிசனம் செய்னும்ன்னா முடிந்த வரையில் வியாழக்கிழமையை தவிர்ப்பது நலம்.  அன்று ஷீரடி ஜீவசமாதி கோவிலில் சாய்பாபா தரிசனுக்காக நிறைய பக்தர்கள் வருவாங்க.  வியாழன் அன்று  கூட்டமா இருக்கும். இங்க, அதிகாலை 4 மணிக்குலாம் நடை திறந்து பூஜைகள் ஆரம்பிச்சுடுறாங்க.  திருவண்ணாமலை கிரிவலத்தின்போதும், மத்த கோவில்களில் அன்றைய விசேச தினத்தின்போதும் புதுசு புதுசா காலணிகள் பாதுகாக்கும் நிலையங்கள் முளைப்பது போல் இங்கேயும் வியாழக்கிழமை கடைகள் முளைக்கும். ஊருக்கு புதுசுன்னு நம்ம நெத்திலயே எழுதி வச்சிருக்கும்போல! நாம போனதும்  அடையாளம் கண்டுபிடிச்சு,  வாங்க!வாங்க! இது கோவிலின் காலணி பாதுகாப்பு இடம்ன்னு சொல்லி கூப்பிடுவாங்க. நம்பிடாதீங்க. காசு கூடுதலாக வசூலிப்பதோடு, பொருளுக்கும் பாதுகாப்பில்லை. ஆகையால் ஷிரிடி ஜீவ சமாதி கோவிலோட இடத்தில மட்டும் செருப்புகளை கொடுங்க ,அதேசமயம் மொபைல் போன், கேமரா பவர்பேங்க் போன்ற பொருட்களுக்கு அனுமதியில்லை. கோவிலின்மூலம் நடத்தப்படுற நிலையத்தில நம்மோட மொபைல் போன் மாதிரியான பொருட்களை கொடுத்து ரசீது வாங்கிக்கனும். பின்னர் அவரவர் விருப்பப்படி சாதாரண வரிசையிலோ இல்ல 200 ரூபாய் கட்டண வரிசையிலயோ தரிசனம் செய்யலாம் .





















நாங்கள் போனபோது கூட்டம் குறைவா இருந்ததால், பொது தரிசன வழியிலயே போனோம். அங்கிருக்கும் கூட்டத்திற்கேற்ப நாம தரிசனம் செய்யும் உத்தேச நேரத்தை குறிப்பிடப்பட்டு ஒரு டேக்கை நம்ம கையில் கட்டிடுவாங்க. இங்க, முடிகாணிக்கை செலுத்தும் இடங்களும் இருக்கு. வரிசையில் செல்லும்போது, இளைப்பாறவும், கூட்ட நேரத்தில் நின்று அவதிப்படாம இருக்க,  அங்க்கங்கே நாம உட்காருவதற்கு பெஞ்ச் மாதிரியான அமைப்பு இருக்கு. காத்திருக்கும் நேரத்தில் பசிக்காம இருக்க,  டீ,காபியும் கிடைக்கின்றன. படிப்படியா வரிசையில் முன்னேறி ஒருவழியா சாய்பாபாவின் ஜீவ சமாதி அருகே வந்துட்டோம். ஆரம்பத்தில் எளிமையா இருந்த அவரது ஜீவசமாதி பக்தர்களின் வேண்டுகோளெல்லாம் நிறைவேறியதால் அவர்களது முயற்சியால் இந்தளவு கட்டப்பட்டுள்ளது என சொல்லப்படுது. பக்தர்கள் இப்பொழுதும் மலர்கள், பழங்கள்லாம் பாபாவுடைய சமாதிக்கு அன்புடன் சமர்பிக்கின்ற்னர் ,
மத, இன, மொழி, நாடு என எந்த பாகுபாடுமில்லாம பாபாவை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசிக்க வருகின்றனர். இருந்தாலும் பாபாவின் பூர்வீகம் எது?! அவர் எங்கிருந்து வந்தார்?! அவரது பெறோர்கள் யார் என ஒருவிவரமும் இதுவரை யாருக்கும் தெரியாது. பாபா உயிருடன் இருந்தபோது ராத்தாவிலிருந்து செடிகளையும்,  விதைகளையும் வாங்கி மல்லிகை மற்றும் பல மலர்களை வளர்த்து பூக்களை பக்கத்திலிருக்கும் கோவில்களுக்கு அனுப்புபவராம். ஆனா, இப்ப அவரது சமாதியை பக்தர்கள் கொண்டுவரும் பலவிதமான பூக்களால் அலங்கரிக்கப்படுது. ஆரம்பத்தில் ஒரு சாதாரண சமாதியாகவும், அங்கே பக்தர்கள் தங்குவதற்காக ஒரு வீடும், அதைசார்ந்த பூங்காவும்தான் கட்டப்பட்டு இருந்ததாம். பின்னர் நாசிக்கை சேர்ந்த கோபால்ராவ்பொற்றி என்னும் பாபாவின் பக்தர் ஒருவர்தான் இந்த ஜீவ சமாதி கோவிலை கட்டியதாக சொல்லப்படுது .
சாய் சரிதம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். நான் சொல்லிதான் தெரியனும்ன்னு இல்லை. தினமும் இங்கு நடக்கும் பூஜைகளை தினமும் சாய் டிவிலும், அதேசமயம் இணையத்தளத்திலும் நேரலையாக இந்த https://www.sai.org.in/en லிங்கிலும் சென்று பார்க்கலாம். அவரின் ஜீவ சமாதியை தரிசனம் பண்ணி முடித்தவுடன் நாம் தரிசனம் செய்ய சில முக்கியமான இடங்கள் இருக்கு. தனது 16-ம் வயதில் ஷீரடி வந்த பாபா அதன்பிறகு ஷீரடியை விட்டு ஸ்தூல தேகமா வேறெங்கும் செல்லவில்லையாம். ஆனா அரூபமாக 10000 மேற்பட்ட தடவை அண்ணாமலையாரை கிரிவலம் செய்ததா அவரது சிலபக்தர்கள் சொல்கிறார்கள். அதேபோல் சாய்பாபாவின் நேரடி சிஷ்யையான ஒரு பெண்சித்தர் சிவம்மாதாயீ பெங்களூர்ல ஜீவ சமாதியாகிருக்கிறாங்க.  வாய்ப்பு கிடைத்தால் அங்கேயும் சென்று அதையும் ஒரு பதிவாக வெளியிடுகிறேன் .
தனது 16-ம் வயதில் ஷீரடி வந்த சாய்பாபா முதலில் இங்கிருந்த கண்டோபா மசூதியில்தான் தங்கி இருந்தார.இங்கிருக்கும் வேப்பமரத்தின் அடியில்தான் அவருடைய குருவின் சமாதி இருக்குது. பாபா பெரும்பானமையான நேரங்களில்லாம் இங்கிருக்கும் வேப்பமரத்தின் அடியில்தான் இருப்பாராம். இந்த வேப்பமரத்தின் இலை  வழக்கமான வேப்பமரத்தின் இலைகள்போல் கசப்பு சுவையில்லாம இனிப்பா இருப்பதுதான் இங்கு விசேஷமே! பாபா ஜீவ சமாதி கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் இந்த வேப்பமரத்தை கும்பிடாம போக மாட்டாங்க. சிலர் அந்தப்புனித மரத்தை 3 முறைவலம் வந்து அங்கு கொடுக்கப்படும் தீர்த்தத்தை அருந்துகின்றனர். பாபா உயிருடன் இருந்தகாலத்தில் அவரை தேடி மனக்குறைகளுடன் வரும் பக்தர்களுக்கு அவர் ஒருகல்லின்மீது அமர்ந்து அருளாசி கொடுப்பார். ஷீலா கல் என அழைக்கப்படும் அந்தகல் பாபா ஜீவசமாதியான அந்த இடத்திற்கு பக்கத்திலேயே இருக்கு. பாபாவை தரிசித்தபிறகு பக்தர்கள் தவறாமல் இந்தக்கல்லையும் வணங்குகின்றனர் .
பாபா முதன்முதல்லா ஷீரடிக்கு வந்தப்போ, அவருக்கு தங்க இடம் ஏதுமில்லை. கிழிந்துபோன உடை, அந்தந்த வேளைக்கு பிச்சையெடுத்து சாப்பாடு என அவரது நாட்கள் கழிந்தது. அவரை ஒரு சத்குரு என்றோ, மகான் என்றோ அங்கிருப்பவர்களுக்கு தெரியாம, அவர் தங்க இடம் கேட்டபோது அங்கே சிதிலமடைந்திருந்த ஒரு மசூதியில் தங்க சொன்னார்கள். அவருக்கு எல்லாமே சமம் தானே?! அவர் இடிந்து பாழாய்ப்போன அந்த மசூதியில் அகமகிழ்வுடன் தாங்கினார். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக அந்த மசூதி சீரமைக்கப்பட்டு அதை  துவாரகாமாயி என  பாபா அழைத்தார். பாபாவைப் பொறுத்தவரை துவாரகமாயி அன்னையின் ஆலயம்.  அங்க அமர்ந்தால் ஆபத்துக்கள் தடுக்கப்படுமெனவும்,   கவலைகள் மறைஞ்சு,   கஷ்டங்கள் முடிந்து பேரானந்தம் வருமென்பதால் அவர் அங்கே அமர்ந்திருந்தார். எனவேதான் பாபா அங்க அமர்ந்து தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்.  அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். இப்பொழுதுபோல் இல்லாமல் அது திறந்தவெளி தர்பாரா இருந்தது..  ஒளிவுமறைவு என ஏதுமில்லை. கெடுபிடியில்லை. யார் வேணும்ன்னாலும் வரலாம். அவரை எளிதாக தரிசனம் பெறலாம்.என்ற நிலையே அன்று இருந்தது .
அதேப்போல் கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு நாழிக் கிணறு என அழைக்கப்படும். இந்த கிணற்றிலிருந்து நீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை வழக்கமாகி கொண்டிருந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வச்சிருக்காங்க.  அதுப்போல, சாவடி என அழைக்கப்படுகிற இந்த இடத்தையும் நாம் முக்கியமா தரிசிக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் மசூதியில் தங்கி இருக்கும்போது/ பாபா இரவு தங்குவதற்கு மட்டும் தன்னுடைய பக்தர்கள் குழுவோடு இங்கவருவாராம். அங்கே தன்னைநாடிவந்த பக்தர்களின் குறைகளை தீர வழிசொல்லுவாராம். அந்த சாவடியில் இரு அறைகளிருக்கு. அதில் முதலாவது அறையில் பாபா அமர்ந்திருக்கும் நாற்காலியும், அதேபோல் பாபா உலகைவிட்டு மறைந்தவுடன் அவரது  பூத உடலை கழுவி கிடத்திய கட்டிலும் காட்சிக்கு வச்சிருக்காங்க. அடுத்த அறை பாபா உண்டு, படுத்து உறங்கி, வாழ்ந்த அறை. நாங்க போனபோது அங்க சிலர் தியானம் செய்துக்கிட்டு இருந்தாங்க.
இங்கு இருக்கும் இன்னொரு அதிசயம், பாபா காலத்தில் ஏற்றப்பட்ட  நந்தா தீபம். இந்த நந்தா தீபம், பாபா கையால் ஏற்றப்பட்டு இன்றுவரை அணையாமல் எரிந்துகொண்டு இருக்குது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். ஆனா, விளக்கின் திரியை மட்டும் மாற்றுவதில்லை. ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த அதிசய நந்தா தீபம். இங்கிருக்கும் அருங்காட்சியில் பாபா உயிருடன் இருக்கும்போது பயன்படுத்திய பல பொருட்களும் இங்க இருக்கு. அதேபோல் தரிசனம் முடிந்து வெளியேவரும்போது, ஒரு சாம்பல் மண் பிரசாதமா கொடுக்கிறார்கள்.   துவாரகாமாயியில்  பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு என்றும், அந்த நெருப்பு அணையாமல் இன்றும் இருக்குது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதி எனப்பேர் கொண்ட சாம்பல்தான் பக்தர்களுக்கு பிரசாதமா விளங்குது. பாபாவினுடைய காலத்திலிருந்து கிடைக்கும் உதின்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவாராம்.

துவாரகாமாயி மசூதியில் சாய்பாபா பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இரவுவேளையில் இங்கிருக்கும் சாவடி என்னும் இடத்தில தங்கி பக்தர்களுக்கு அவர்களுடைய குறைகளை தீர்த்து வைப்பார். ஒருமுறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமா எண்ணெய் தரும் வியாபாரி, ஏனோ எண்ணெய் தர மறுத்துவிட்டார். ஊராரிடம் எண்ணெய் கேட்டபோதும் பலர் மறுத்தனர். ஒருசிலர் தண்ணீரை பாபாவிடம் கொடுத்து, இதைக்கொண்டு விளக்கேற்று என்றனர். உடனே, பாபா அந்த தண்ணீரில் சிறிது  எடுத்து விளக்கெரிய வைத்தார். அன்றுமுதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு ஆகிய இரண்டு மத விழாக்களும், இந்து சடங்குகளும்  அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது. அவரை இந்துவா?! முஸ்லீமா?! என யாரும் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் மசூதியை பாபா “துவாரகாமாயி எனதான் அழைப்பார்.
இங்க இன்னொரு அதிசய வழக்கம் இருக்குது. இங்கிருக்கும் சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்ய தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுது. இதற்கு அந்த குடுபத்தினர் சொல்லும் விஷயம் சுவாரசியமானது.  அவர்களது  பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தார்களாம். ஒருநாள் இரவு, அவரது தாயின் கனவில் தோன்றிய சாய்பாபா  தனது விக்கிரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அன்றுமுதல் இப்போதுவரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம் என தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர் கூறினார்.
இந்த அனுமன் ஆலயம் இப்பநல்ல கட்டமைப்பில் இருக்கு. பாபா ஷீரடி வந்தப்போ அவர் இந்த கோவிலில்தான் எப்பொழுதும் அமர்ந்திருப்பாராம். அதேப்போல் இங்க ஒரு மியூசியம் ஒன்னு இருக்கு. இங்கு சாய்பாபா பயன்படுத்திய எல்லாப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் பாதுகைகள், கண்டோபா பூசாரிக்கு பாபா கொடுத்த நாணயங்கள்லாம் காட்சிக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளது. சாய்பாபா மக்களுக்கு உணவளிப்பதற்காக சமைத்த கல் உபகரணங்கள், மற்றும் 50 பேர்,100 பேருக்கு சமைக்க பயன்படுத்தப்படும் அண்டாக்கள்லாம் இங்க காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. இங்கிருக்கும் கல் அரவை எந்திரம்கூட ஒரு ஆழமான தத்துவத்தை உணர்த்துவதற்காக உபயோகப்படுத்தியதாக சொல்லுவாராம். அந்த அரவை எந்திரமே கடவுள் மீது கொண்டுள்ள பக்தியும் மக்களுக்கு உதவும் தர்மமும் ஆகும். மேல்பக்க கல் பக்தியும், கீழ்பக்க கல் தருமநெறி வாழ்க்கை என்றால் இரண்டும் சேர்ந்து ஆன்மாவை பக்குவப்படுத்தி அரைத்து இறைவனை அடைய உதவும் முயற்சியின் மாதிரியே இது என்பாராம்.
அடுத்து நாம பார்க்கப்போற முக்கியமான இடம் கண்டோபா மந்திர் கண்டோபா,  பைரவரின் அம்சம் என சொல்லப்படுது.இன்னும் சிலர் கிராம தேவதை என்றும் சொல்கிறார்கள் .நம்மூரில் இருக்கும் அய்யனார் பொல .இந்த கோயிலில் கண்டோபா, மற்றும் அவரது துணைவியர் பனாய் மற்றும் மல்சாய் போன்ற கடவுள்களின் சிலைகள் மற்றும் அவருடைய வாகனமான வெள்ளி குதிரையும்  இருக்கு. பாபா முதன்முறையாக ஷீரடிக்கு ஒரு கல்யாண குழுவுடன்தான் வந்ததாக சொல்லப்படுது. அந்த  குழுவினருடன் சாய்பாபா இவ்வழியே வந்தபோது இந்த கோயிலின் அருகிலுள்ள ஆல மரத்தடியில் அவர் அமர்ந்ததாகவும், அவரை இக்கோயிலின் பூசாரி “வர வேண்டும் சாயி” என அவரை முன்பே அறிந்தவர் போல வரவேற்றதாகவும் சொல்லப்படுது. அந்த கோவிலின் தெய்வத்தின் அருளால், அவர் முதன்முதலில் சாய் என அன்றுதான் அழைக்கப்பட்டதா சொல்லப்படுது. பாபா இந்தக்கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தக்கோவில் ஷீரடி பஸ் நிறுத்தத்திற்கு அருகில், சற்று எதிர்பக்கமாக  உள்ளடங்கியுள்ளது இந்த கோவில்.  அதிகாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை இக்கோவிலின் நடைதிறந்திருக்கும்.
தரிசனம்லாம் முடிச்சுட்டு வெளியவரும்போது  அடுத்து முக்கியமா பார்க்கவேண்டிய இடம், இங்கு வரும் பக்தர்கள் நந்தாதீபத்தை தரிசித்து இங்கிருக்கும் மூன்று மரங்களையும் வலம் வருகின்றனர். சிலர் அங்கபிரதட்சணமும், அடிபிரதட்சணமும்கூட செய்றாங்க.  அங்கிருக்கும் தத்தாத்ரேயரின் கோவிலுக்கும் சென்று அங்கிருக்கும் அத்திமரத்தினையும் வழிபடுகின்றனர். விருப்பப்பட்டா இங்கிருக்கும் தீபங்களுக்கும் நாம் நல்லெண்ணெய் ஊற்றலாம். இங்கு சாய்பாபாவின் சீடர்கள் சிலரது சமாதிகளும் இருக்கு. இந்த லெண்டி தோட்டத்தின் நுழைவாயிலில் இருக்கும் கிணற்றிலிருந்துதான் பாபா தான் வளர்த்த செடிகளுக்கு நீர் ஊற்றுவாராம் அதையும் தரிசித்து வெளிய வந்தோம். அங்கே சிறுசிறு வியாபாரிகள் பாபாசிலை மற்றும் டாலர் செயின் போன்றவைகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர் .
இங்கிருந்து 4கிமீ தொலைவில் சாய் ஹெரிட்டேஜ் கிராமம் என சாய்பாபாவின் வழக்கை சரிதங்களை சிலை ரூபமாக வடிவமைத்துள்ளனர். அது மிக சிறந்த பொழுதுபோக்கும் இடமாகும். அதற்கு நுழைவு கட்டணம் உண்டு அதேசமயம் மேலே ஓடும் ஒரு மோனோ ரயில் சவாரியும் உண்டு. அதுப்போல இங்கிருந்து சுமார் 3 கிமீ தூரத்திலுள்ள சகோரி கிராமத்தில் ஸ்ரீஉபாஸனி பாபா சமாதியும், ஸ்ரீகோதாவரி மாதாவின் சமாதியையும் தரிசிக்கலாம். ஆனா எங்களுக்கு நேரமில்லாத காரணத்தினால் அங்கு செல்லமுடியவில்லை. அதேபோல் இங்கே ஒரு பெரிய இலவச அன்னதான கூடம் இருக்கு. கட்டணம் செலுத்தி சாப்பிடும் கூடமும் இருக்குது .சாப்பாடு மிகவும் அருமையா இருக்கு என சாப்பிட்டவங்க சொன்னாங்க. எங்களுக்குதான் நேரம் கிடைக்கலை. எங்களை கூட்டிச்சென்ற வழிகாட்டி, சீக்கிரம் வாங்க! நாம நிறைய தூரம் போகணும்ன்னு எங்களை அவசரப்படுத்தினார். சரி, நாம அடுத்து எங்க போகப்போறோம்ன்னு கேட்டதுக்கு நாசிக்கிலிருக்கும் முக்திதாம் கோவிலுக்கு போறோம்ன்னு சொன்னார். நாங்களும் ஆவலுடன் அந்த கோவிலை தரிசிக்க, வண்டி செல்லும் வேகத்தைவிட மனதின் வேகம் அந்த கோவிலை நோக்கி பயணமானது.....

அடுத்தவாரம் முக்திதாம் கோவிலிலிருந்து சந்திக்கலாம்.
நன்றியுடன்
ராஜி

13 comments:

  1. இன்னும் விளக்கமா நீங்க சென்ற இடங்களைப் பற்றியும் உங்கள் அபிப்ராயத்தையும் எழுதியிருப்பீங்கன்னு நினைத்தேன். பார்த்தால், உங்களைக் கூட்டிச் சென்ற டூர் ஆபரேடர் மின்னல் வேகத்தில் ஒவ்வொரு இடத்திலிருந்தும் அடுத்த இடத்துக்குக் கூட்டிச்சென்றுவிட்டார் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வரு இடத்தையும் விளக்கி சொல்லி ,அதைப்பற்றி எழுதணும்ன்னு தான் எனக்கும் ஆசை ,நேரமின்மை ஒருகாரணம் இந்த ஷீரடி பற்றி எழுதணும்னா நிறைய விஷயங்கள் இருக்கு ,ஆனா ஏற்கனவே நிறையே பேர் நிறைய எழுதிட்டாங்க ,அதுனால புதுசா போறவங்க எப்படி போகணும் கஷ்ட படக்கூடாது என்கிற கோணத்திலும் ,இங்கே பார்ப்பதற்கு வேறு என்ன என்ன இடங்கள் இருக்கின்றன என்ற கோணத்திலும் தான் எழுதி இருக்கிறேன் .

      Delete
    2. அதுபோல 1800 களில் கிழிந்த ஆடையும் கையில் திருவோட்டையும் ஏந்தி நின்ற பாபாவை பார்த்தவர்கள்.அவர் தங்க இடம் கேட்டபோது,பாழடைந்த மசூதிக்கு சென்று தங்க சொன்னார்கள்.அந்த மசூதி எல்லாம் இப்பொழுது இல்லை.ஆனால் அந்த மசூதி பாபா வாழ்ந்த காலத்தில் உள்ள சில இடங்களின் புகைப்படங்கள் உள்ளன.அவற்றை எல்லாம் பற்றிய பதிவு அடுத்து தொடராக வரும் சகோ ...

      Delete
  2. சென்னையில் ஒரு ட்ரஸ்டால் நடத்டப்படுமொரு பாபா ஆலயமென்னைக் கவர்ந்தது பதிவிட்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பதிவின் லிங்க் இங்கே பதிவு செய்தால் நாங்களும் படித்து மகிழ்வோம்பா...

      Delete
  3. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ....

      Delete
  4. எங்கள் அலுவலகத்தில் மாதாமாதம் இங்கு சென்று வரும் ஒரு குழு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் நீங்களும் சென்று வந்துவிட்டீர்கள் சகோ,நம்முடைய பதிவின் மூலமாக ...

      Delete
  5. நான் இரண்டுமுறை ஷீரடி சென்று சாய்பாபாவைத் தரிசித்திருக்கிறேன். என்றாலும் அப்போது நீங்கள் எழுதியுள்ள மாதிரியான தகவல்கள் கைவசம் இல்லை. அடுத்தமுறை இவற்றின் பயனைக் காணமுடியும் என்று நம்புகிறேன். - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சகோ ..ஆரம்பத்தில் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது,ஆனால் உள்ளூர் வழிகாட்டி ஒருவர் சொல்லித்தான் எங்களுக்கும் சிலவிவரங்கள் தெரிந்தன .ரூம் புக் செய்வதிலிருந்து ,நாம் உள்ளூர் சுற்றுலா செல்வதிலிருந்து எல்லாமே அவர் கொடுத்த தகவல்கள்தான் ,இந்தத்தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளவையாக அமைந்ததில் சந்தோஷமே ....

      Delete
  6. பலருக்கும் பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள தகவல்களாக அமையவேண்டும் என்பதே பதிவின் நோக்கம்ண்ணே...

      Delete