ஷீரடிக்கு வர்றவங்கலாம் இந்த முக்திதாம் கோவிலுக்கு போகாம இருப்பதில்லை. மகாராஷ்டிராவில் உள்ள முக்கியமான மாவட்டம் இந்த நாசிக். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்தபோது இந்த இடத்தில்தான் தங்கி இருந்ததா சொல்லப்படுது. இங்கதான் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததா சொல்லப்படும் இடமும் இதுதான். பண்டைய காலத்தில் இந்த இடம் நாசிகா என அழைக்கப்பட்டதாம். நாசிகா என்றால் மூக்கு என சமஸ்கிருதத்தில் பொருள்படுமாம். மேலும், இந்த ஊருக்கு சிறப்பு என்னன்னா, 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கும் நான்கு ஊர்களில் நாசிக்கும் ஒன்று. மற்ற மூன்று ஊர்கள் ஹரித்துவார், அலஹாபாத் மற்றும் உஜ்ஜைனி. ஆனா கும்பமேளா 3 வருடங்களுக்கு ஒருமுறை இந்த 4 ஊர்களிலும் சுழற்சி முறையில் நடக்கும். தினமும் 10 மணிக்குமேல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். அதை நமது அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். வேறு ஒரு சிறப்பு என்னவென்றால் இந்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகம் இங்குதான் இருக்கு. சரி, நாம் இனி நமது ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்...
ஷீரடியிலிருந்து பயணிப்பவர்கள் காலை சிற்றுண்டியை ஷீரடியில் முடித்துக்கொள்வது நல்லது. ஏன்னா ஷீரடியை விட்டு தாண்டினா வழியில் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுவகைகள் கிடைப்பது கஷ்டம். சாமியாரா போனாலும் நமக்கு சோறுதான் முக்கியம்!! ஷீரடியை சுற்றிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மக்கள் அதிகமா வர்றதால அங்க தென்னிந்திய உணவுவகைகள் தாராளமாக கிடைக்கும். அதேசமயம் நமக்குத்தான் இங்க எப்பவும் இந்த உணவுவகைகள் கிடைப்பதால் நாங்கள் வடஇந்திய உணவுவகைகளான கடாய் சோயா, மேத்தி சன்னா பனீர், பீட்ரூட் குரூமா, ஜுச்சினி கடலைப்பருப்பு தால், ராஜஸ்தானி ஆலூ, வெஜ் கொல்ஹாபுரி, சில்லி குருமா போன்ற போஜ்புரி, பஞ்சாபி ராஜஸ்தானி உணவகைகளை ஒரு பிடிபிடித்தோம். காலைஉணவு முடிந்ததும் ஷீரடியில் இருந்து கிளம்பினோம் இங்கிருந்து சுமார் 90 கிமீ தொலைவில் இருக்கிறது நாசிக் . இந்த முக்திதாம் கோவில் நாசிக் மெயின் ரோட்லயே இருக்கு .
இங்கே பெரும்பான்மையான கோவில்களில் நம்ம ஊர் மாதிரி சிறப்பு கட்டண வரிசை கிடையாது என்பது ஆறுதலான விஷயம். கோவிலின்முன் சிறிய பஜார் இருக்கு. இது வழிபாடு மற்றும் சுற்றுலா தலம் என்பதால் இங்க பலதரப்பட்ட வியாபாரங்கள் நடக்குது. சமோசாவிலிருந்து சாணைபிடித்த கத்திவரை இங்க விக்குறாங்க. நாங்க சென்ற சமயத்தில கூட்டம் அவ்வளவா இல்லை.
இதுதான் நுழைவாயிலை கடந்து கோவிலுக்குள் வரும் மெயின் ஹால். இந்த கோவிலைப்பத்தி சொல்லணும்னா, இது மிக புராதானமான நாசிக் நகரில் கட்டப்பட்ட புதிய கோவில் என்று சொல்லலாம். 1971ம் ஆண்டு நாசிக்கிலுள்ள ஸ்ரீஜெய்ராம்பாய் பயட்கோ (சவுகான்) என்னும் தொழில் அதிபரால் கட்டப்பட்டது. இதற்கு ஓவியம் வரைந்தவர் பிரபல ஓவியர்(மறைவு) ஸ்ரீ ரகுபிர் முல்கோன்கர் ஆவர். நாசிக் மெயின் சிட்டியிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கு இந்த கோவில். இந்த கோவில் இந்தியாவிலுள்ள அனைத்து ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில தரிசிக்கும் அமைப்பில் கட்டி இருக்காங்க. சுருக்கமா சொல்லப்போனா கடவுளர்களின் அணிவகுப்பே இங்க இருக்கு. எல்லா கடவுள்களின் உருவசிலைகளும் இங்க இருக்கு.
முழுவதும் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டிருக்கு இக்கோவில். சூரிய ஒளியில் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கு. இங்க முக்கியமான விஷயம் என்னன்னா சுத்தம். கோவிலின் சுற்றுப்புறமும், உள்ளேயும் மிக சுத்தமாகவும் அழகாகவும் வச்சிருக்காங்க. நம்மூர் மாதிரி நாம போனதும் தீபாராதனை இல்லை. பூசாரி இல்லை நாமளா மலர்களை வாங்கி அங்கிருக்கும் பாதங்களில் சமர்ப்பித்து வரவேண்டியதுதான்!! உள்ளயும் மார்பிளால அழகாக கட்டி இருக்காங்க. இந்த கோவிலில் கட்டப்பட்டுள்ள மார்பில் கற்கள் ராஜஸ்தானிலுள்ள மக்ரனா என்னும் இடத்திலிருந்து கொண்டுவரப்பட்டு கட்டியதாக சொல்லப்படுகிறது. அதுப்போல இதைக்கட்டிய சிற்பிகள்கூட ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்லப்படுது. இங்க முக்கியமான அம்சம் என்னன்னா நாம கோவிலினுள் நடத்துகிட்டே பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் படிச்சுக்கிட்டே செல்லலாம். இங்குள்ள சுவற்றில் கீதையை எழுதிவச்சிருக்காங்க. என்ன ஒண்ணு அதை படிக்க ஹிந்தி தெரியணும் அவ்வுளவுதான். நமக்குத்தான் ஹிந்தி நஹி மாலும் ஆச்சே!!
ராமாயண காட்சிகளை இங்க சிற்பவடிவமா வச்சியிருக்காங்க. ஏன்னா ராமர் வனவாசத்தில் இந்த இடத்தில்தான் அதிக நாட்கள் தங்கி இருந்ததா சொல்லப்படுது . அதுபோல கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. நாங்கள் சென்ற நேரம் அதிகாலை மற்றும் கூட்டம் இல்லாத சமயம் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா கூட வச்சிருக்கிறாங்க. இருந்தாலும் சுட்டுட்டேன்.
நம்மூரில் நவகிரக சந்நிதிகளை எண்ணெய் தேய்த்து விளக்கேற்றி அழுக்கைடைய வைத்திருப்போம். ஆனா இங்க நவகிரகங்கள் பளிச்சோ பளீச்ன்னு கலர்புல்லாக வீற்றிருக்கிறார்கள். அடுத்து நம்ம தமிழ் கடவுள் முருகன் சிலையும், அனுமன் சிலையும் தனித்தனியே இருக்கு. ஆனா முருகர் சிலை இருக்கிற சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதி இல்லை என போர்டு வச்சிருக்காங்க. காரணம் என்னன்னுன்னு எங்களை கூட்டி சென்ற வழிகாட்டி அண்ணாவிடம் கேட்டபோது, மராத்தியில் நம்ம முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததுனால கார்த்திக்ன்னு பெயராம். நோ ராஜி! இது நடிகர் கார்த்திக் இல்ல. கண்ட்ரோல் யுவர்செல்ப்) அவரை கார்த்திக் சுவாமின்னு சொல்றாங்க. அவரு இங்கே பேச்சுலர் கடவுளாம்ப்பா. அடப்பாவிகளா! எங்க ஊர்ல பிள்ளையார் பேச்சிலர். இங்க எங்களுக்கு தெரியாம அங்க ரெண்டு கட்டி ஆண்டு அனுபவிக்குறார். அங்க பேச்சுலர்ன்னு சொல்லிக்கிட்டு இங்க ரெண்டை கட்டி ஆண்டு முருகர் அனுபவிக்குறார். சாமிகளே! இப்படி போங்காட்டம் ஆடினா, மனுசப்பயலுகளும் அப்படிதான் வீட்டை ஏமாத்துவானுங்க!! கார்த்திக்சுவாமியை வழிபடுபவர்கள்லாம் நம்மூர்ல ஆஞ்சநேய பக்தர்கள் மாதிரி பேச்சுலராதான் இருப்பாங்களாம். அதனால பெண்களுக்கு அனுமதி இல்லையாம் .
ஆனா நம்மூர்ல தாயை போல் மனைவி அமையணும்னு ஆலமரத்தடியில பேச்சுலரா இருக்கிற விநாயகரை சுத்தி எத்தனை பொண்ணுங்க?!நமக்கு தெரிந்து சிவபார்வதிக்கு விநாயகரும், முருகனும் மட்டுமே பிள்ளைகளா சொல்லப்பட்டு வருது. ஆனா இங்க விநாயகருக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் அவருக்கு அசோகசுந்தரின்னும் சொல்றாங்க.
வட இந்தியாவில் இன்னும் சில இடங்களில் சிவனுக்கு, வினாயகர், முருகர் மற்றும் ஐயப்பன் என மூன்று மகன்களும், அசோகசுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி என்று அழைக்கப்படுற மானஸா என மூன்று மகள்களும் இருப்பதாக சொல்லப்படுது . ஸ்ஸ்ஸ் அபா, இப்பவே கண்ணை கட்டுதே!
இடத்துக்கு இடம் மாற்றங்கள் சகஜம். அதுமாதிரி உண்மையான கதையை அந்த இறைவன்தான் அறிவார். சரி அடுத்ததா இங்க இமயமலை பர்வத காட்சி சிவ பரிவாரங்களுடன் இருப்பதை தத்ரூபமா வடிச்சிருக்கிறாங்க.
எல்லா சிலைகளையும் காட்சிகளையும் மார்பிளில் தத்ரூபமா வடிமைத்துள்ளனர். அதுமாதிரி 12 ஜோதிர்லிங்கங்களும் ஒரே இடத்தில தரிசிக்கும் வண்ணம் இங்க அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கடவுள்கள் அனைவரின் சிலைகளும் இங்க செதுக்கப்பட்டிருக்கு.
12 ஜோதிர்லிங்கங்களும் ஒரே வரிசையில்...
இராமர், லட்சுமணன், சீதாதேவி சிலைகளும் மார்பிள் கற்களில் அலங்காரங்களுடன் பார்பதற்கே நேரில் நிற்பதுபோல அவ்வளவு அழகு!!
இந்த முனிக்கூட்ட சிலைகளை பத்தி சரியா தெரியலை. ஆனா அவர் ஒரு சிவபக்தர் என்றும் அவருக்கென்று தனியா வரலாறு இருக்க்குன்னும், அவர்பெயர் மச்சேந்திரநாத் என்றும் அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னார் அவர்பக்கத்தில் கோரக்நாத் என்றும் ஒரு முனிவர் இருப்பதாக ஒருவர் சொன்னார். நம்மூரில்கூட கோரக்கரை வடநாட்டிலிருந்து வந்த சித்தர் என சொல்லுவாங்க. அவர்பெயர் கோரக்நாத் என்பதாகும். அதுபற்றி நம்முடைய குறண்டி கோவில் பதிவில் விரிவாக எழுதியுள்ளேன். இவர்கள் வடநாட்டு சித்தர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லலாம். தெரிஞ்சுக்குறேன்.
கும்பமேளா சமயத்தில் இங்க தங்கி இருந்து தரிசிக்க குறைந்த கட்டணத்தில் அறைவசதியும் உண்டு. அதேப்போல குறைந்த கட்டணத்தில் சாப்பாடும் இங்க உண்டு. காலையில் 6 மணிக்கே நடைதிறந்துவிடுவார்களாம் பின்னர் பகல்முழுவதும் திறந்தே இருக்கும். நம்மூர் மாதிரி 12 மணிக்கு நடையடைப்பதில்லை. இரவு 7 மணிக்கே சில சில இடங்களை சாத்தி விட்டு 8 மணிக்கு முழுவதுமா நடையடைத்துவிடுவார்கள் . விஷேச நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் சென்றால் 15 நிமிடங்களுக்குள் எல்ல தரிசனமும் முடித்துவிடலாம் .
எல்லா கோவில்களைப்போல இங்கேயும் கடைவிரித்திருக்கிறார்கள். அதே பேரம், அதேபொருட்கள்... ஆனா என்ன ஒரு வித்தியாசம் வீட்டுக்கு வந்ததும் அக்கம்பக்கத்தினரிடம் இது நாசிக்கிலுள்ள முக்திதாம் கோவிலில் வாங்கியது என பெருமை அடிச்சுக்கலாம்!!
கோவிலை விட்டு வெளியில் வந்தா சாப்பிட எல்லாவகையான உணவுப்பண்டங்களும், பழம் நம்மூர் மாதிரி சமோசா என எல்லாமே கிடைக்குது கோவிலைவிட்டு கிளம்பும் நேரம் மதியம் ஆகிவிட்டதால் வழிநெடுக்க சாப்பிட நல்ல ஹோட்டல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டே சென்றோம் .
ஒரு இடத்தில பார்க்கிங் வசதியுடன் ஒரு ஹோட்டலில் சவுத் இந்தியன் புட்ன்னு போட்டிருந்ததும் அங்க போய் உணவை ஒரு பிடிபிடித்தோம். எல்லாவற்றிலும் இனிப்புச்சுவை ரசத்தில் உட்பட சாப்பாடு வித்தியாசமாக இருந்தாலும் விலை ஹை லெவல். வெளியூரிலிருந்து வருபவர்களுக்காகவே கட்டப்பட்ட ஹோட்டலாக இருக்கவேண்டும் போல! எல்லா கலரிலும், எல்லாவித உடையமைப்பிலும் பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தினை அங்க பார்க்கமுடிந்தது வேறு என்ன செய்ய?! விலை அதிகம்ன்னாலும் சாப்பிட்டுவிட்டு அடுத்து நாம எங்கு போறோம்ன்னு கேட்டபோது கபாலேஸ்வர் சிவன் கோவில் ன்னு சொன்னார். அங்க என்ன விசேசம்ன்னு கேட்டதுக்கு நந்தி இல்லாத ஒரே சிவன் கோவில் இதுதான் எனக்கூறினார். சரி, அவர் ஏன் நந்தி இல்லாம இருக்கிறார்?! என்ன கதையாக இருக்கும் என யோசித்துக்கிட்டிருக்கும்போதே வண்டி வேகமா கபாலேஸ்வரர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மீண்டும் அடுத்த வாரம் கபாலேஸ்வரர் கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன்
நன்றியுடன்ராஜி
எனக்கும் இப்பவே கண்ணை கட்டுதே சகோதரி...!!!
ReplyDeleteஏன் அண்ணா பயணம் செய்கிற நானே ,தெம்பா யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று உங்கள் எல்லோரையும் அந்த இடத்திற்கு அழைத்து செல்கிறேன் .உங்களுக்கு இப்பவே கண்ணைக்கட்டுகிறதா ,இனியும் வட இந்தியப்பயணம் தொடரும்.அப்ப என்ன செய்வீங்க ...
Deleteநம்மூரில் நவக் கிரக சிலைகள் பல்வேறு திசைகளைப் பார்த்தபடி இருக்கும் ஆனால் படத்தில் இருக்கும் நவக்கிரகசிலைகள் ஒரேதிசையை நோக்கியே இருக்கின்றன பதிவின்நடு நடுவே வரும் உங்கள் கமெண்டுகள் சில ரசிக்க வைக்கின்றன
ReplyDeleteநவகிரகங்கள் நம்முரிலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் ஸ்தலங்கள் உண்டடுப்பா,வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன்
Deleteகோவிலிலும், வைத்தீஸ்வரன் கோவிலிலும் நவக்கிரகங்கள் வரிசையாக நின்று ஒரே திசைநோக்கி அமைந்துள்ளது.பதிவை ரசித்தமைக்கு நன்றிப்பா ...
படங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி சகோ ...
Deleteகார்த்திக்கை பெண்களும் சென்று வழிபடவேண்டும் என்று இன்னும் யாரும் வழக்கு தொடரவில்லையா?!!
ReplyDeleteசுவாரஸ்யமான பயணக்கட்டுரை.
ஒருவேளை சபரிமலை முடிச்சிட்டு அடுத்த டார்கெட் அங்கேயோ என்னமோ .யாமறியோம் பராபரமே...கருத்துக்களுக்கு நன்றி சகோ ..
Deleteவட இந்திய உணவுவகைகளின் லிஸ்டை நீங்க போட்டிருப்பதைப் பார்த்தால், ஷீரடியில், மந்திர்களைவிட தென்னிந்திய உணவுக் கடைகளில் நீங்கள் அதிக நேரம் இருந்திருப்பீர்கள் போலிருக்கிறது.
ReplyDeleteஇந்தவிஷயமும் உங்களுக்கு தெரிஞ்சு போச்சா ,பெரிய சைசுல எவ்வுளவு சப்பாத்தி கேட்டாலும் கொடுக்கிறாங்க .சோறு கேட்டா சைனீஸ் படத்தில வரமாதிரி சின்ன கிண்ணத்துல கொண்டு வைக்கிறாங்க.அதுனால கோவிலை தேடுனதை விட கடைகளை தேடினதுதான் அதிகம் .
Delete//இருப்பதை தத்ரூபமா வடிச்சிருக்கிறாங்க.// - என்னவோ இமயமலைல நீங்க நேர்லயே பார்த்த மாதிரிச் சொல்றீங்களே... இது டூ டூ மச் இல்லையோ?
ReplyDeleteஎத்தனை படங்கள்ல பார்த்திருப்போம் ,அட திருவிளையாடல்ல சிவன் கூட நடமாடுவாரே அதைவச்சு குத்துமதிப்பா சொல்லுறதுதான்...இனி அடுத்த பதிவு இமயமலைதான் சகோ ..
Delete///வட இந்தியாவில் இன்னும் சில இடங்களில் சிவனுக்கு, வினாயகர், முருகர் மற்றும் ஐயப்பன் என மூன்று மகன்களும், அசோகசுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி என்று அழைக்கப்படுற மானஸா என மூன்று மகள்களும் இருப்பதாக சொல்லப்படுது///
ReplyDeleteஇதுதான் இந்து மதத்தின் குழப்பங்களுக்கு அடிப்படை காரணம்.
தற்போது வடநாட்டு பக்தி சீரியல்கள் நிறைய குழப்பங்களை மக்களுக்கு போதிக்கிறது.
கார்த்திக் அடடே உங்களது ஃபேவரிட் ஜீரோவாச்சே... அடச்சே ஹீரோவாச்சே ?
பயணமும் அதுபோல் இனிமையாக அமைந்தது .நாங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லும் கண்ணாடி .கருத்து சொல்லி அது அனுமார் வால் போல் நீண்டு கடைசில தீவைக்கிறத விட ,இப்பவே சிரிச்சு கிட்டே நோ கமெண்ட்ஸ் ன்னு வாலை சுருக்கிறேன்ங்கண்ணே..
Deleteபடங்களும் பயண அனுபவங்களும் தகவல்களும் வெகு சுவாரசியம் ராஜி.
ReplyDeleteபதிவை ரசித்தமைக்கு நன்றிங்க கீதா ...
Deleteஎங்களது பயணத்தில் பார்ப்பதற்கு இந்தக் கோயிலைக் குறித்துக்கொண்டேன். அருமையான கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
ReplyDeleteஷீரடி செல்லும் எல்லோரும் இந்த கோவிலை தவிரவிடுவதில்லை ,இந்த பயண குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கும் ..நன்றிப்பா
Delete