Friday, November 09, 2018

பஞ்சவடி, நாஸிக் -ஷீரடி பயணம்

கபாலேஸ்வரர் தரிசனத்தை முடிச்சுட்டு இதேவழியாகத்தான் திரிவேணி சங்கமத்திற்கு போகனும். இந்த இடத்திலிருந்து எல்லா இடங்களுக்கும் ஆட்டோவில்தான் பயணம் செய்யனும். நாம போகப்போற இடத்துக்கு பேரு பஞ்சவடி ஸ்ரீஇராமரும் சீதாதேவியும் லட்சுமணனும் தங்களுடைய 14 வருச வனவாசத்தின்போது இந்த பஞ்சவடியில் சிலகாலங்கள் வசித்தார்கள் என்பது புராணக்கதை. இராமாயண காவியத்தின்படி தண்டகாரண்ய காட்டின் ஒரு பகுதிதான் பஞ்சவடி. சீதாதேவியின் கஷ்டகாலம் இந்த பஞ்சவடியில்தான் தொடங்கியது. இந்த இடம்தான்  பலமுக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாயிற்று என இராமாயணம் குறிப்பிடுது. அப்படி இராமாயண நிகழ்வுகள் நடந்த ஒரு இடத்தில நிற்கிறோம்ன்னு நினைக்கும்போதே உடல் புல்லரித்தது. பஞ்சவடி என்பது ஐந்து ஆலமரங்களை  குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இன்றும் இலட்சுமானனால் நடப்பட்ட இந்த மரங்கள் இப்ப பெரிய ஆலமரங்களாக நிற்குது.  அவைகளின் எண்ணிக்கையே பஞ்சவடி என்பதன் பெயர்க்காரணம் .
இந்த பஞ்சவடி பயணம் என்பது நம்மை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்களை பொறுத்தது. கூட்டம் அதிகமா இருந்தால் ஒன்றிரண்டு கோவிலை காட்டி தரிசனம் முடிந்ததுன்னு சொல்லி அனுப்பிடுவாங்க. ஆனா, வருகிறவர்களுக்கு நல்ல சுற்றிக்காட்டனும் என்ற எண்ணத்துடன் வருபவர்களுக்கு காசு கொஞ்சம் கூடுதல் வாங்கினாலும் பொறுமையா சுற்றிக்காட்டும் நபர்களும் இருக்காங்க. அதுலயும் அவர்களே கைடு போல் எல்லாவிஷயங்களையும் விளக்கி சொல்வது அருமை. ஒருவழியா நாங்கள் 4 ஆட்டோக்களை எடுத்து ஒரு குழுவாக எடுத்து பஞ்சவடி பயணத்தை தொடர்ந்தோம் .
உண்மையில் அந்த குறுகலான சந்துகளில் கூட்டநெரிசனால சாலைகளிலும் ஆட்டோவில்தான் பயணம் செய்ய முடியும் போல. அவர்களே ஒரு அட்டவணைய கையில் வச்சிருக்காங்க. அதில் மொத்தம் 20 இடங்கள் இருக்கு. எல்லாவற்றையும் நம்மால் பார்க்கமுடியாது அதற்கு இரண்டுநாள் அங்க தங்கி இருந்தால் மட்டுமே சாத்தியம். அங்கிருப்பவர்களின் லிஸ்ட்படி முதலில்...
1.லட்சுமணன் ரேகை
2.சீதா ஹரன்
3.கட்ய மாருதி
4.லட்சுமி நாராயண் மந்திர்
5.லட்சுமணன் தபஸ்
6.லட்சுமணன் சேஷ்நாக் அவதார்
7.சூர்பனகா நாக் கட்
8.ப்ரம்மா ,விஷ்ணு ,மகேஸ்வர் குண்ட்
9.கபில கோதாவரி சங்கமம்
10.சீதா அக்னி குண்ட்
11.ராம் கி வனவாஸ் குட்டியா
அவர்கள் எல்லாமே ஹிந்தியில் எழுதி வைத்திருந்தார்கள் அதை குறித்துக்கொண்டு அதேபோல் இங்கே எழுதி இருக்கேன். இதற்கு தமிழில் சரியான அர்த்தம் தெரிந்தவர்கள் கமெண்டில் தெரிவித்தால் அங்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் .
இரண்டாவது லிஸ்ட்ல
1.திரிவேணி சங்கமம்
2.ராம் குண்ட்
3.கங்கா கோதாவரி
4.அர்தநாரிஸ்வரர்
5.கபாலேஸ்வர்
6.சீதா குனபா
7.பாஞ்ச்வாட் ஆப் பஞ்சவடி
8.கோர் ராம் மந்திர்
9.காலா ராம் மந்திர் 

இது இரண்டாவது சுற்றுப்பயண விவரம் ஆனால் எல்லாமுமே நம்மால் பார்க்கமுடியுமா?! ன்னா சந்தேகம்தான். எல்லாவற்றையும் குறிச்சு வச்சாச்சு நாங்க ஏறின ஆட்டோவும் கோதாவரி கரையிலிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தது. முதல்ல எந்த கோவிலுக்கு செல்லப்போகிறார் என்ற ஆவல் உங்களைப்போல எனக்கும் தொற்றிக்கொள்ள ஆட்டோவில் பயணம் தொடர்ந்தது .
எங்களை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் முதன்முதலில் அழைத்து சென்ற இடம் சீதா குபா என்று சொல்லப்படுகிற சீதா குகை. இந்த இடம்  இராமாயண காலத்திற்கு முன்பாகவே கபிலமுனிவர் இங்கே தங்கி இருந்து தவமியற்றினார் என சொல்லப்படுது. சீதாகுகை வாசலுக்கு எதிரில் இருக்கும் ஆலமரம் முதலாம் எண். என்று குறிக்கப்பட்டு இருக்கு. இதற்கும் சில கதைகள் சொல்லப்படுகின்றன. இலட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததினால் இராவணன் கோபப்பட்டு அவனுடன் 10,000 ஆயிரம் அசுரர்கள் போருக்கு வந்தபோது இராமனும் ,இலெட்சுமணனும் சீதாதேவியை பாதுகாப்பான இடத்தில தங்கவைக்க அங்கிருந்த மலைக்குன்றை குடைந்து ஒரு குகையை ஏற்படுத்தி அதற்கு அடையாளமாக ஐந்து ஆலமரங்களையும் நட்டுவைத்ததாகவும் சொல்லப்படுகிறது.இதுதான் இந்த குகையின் புராணக்கதை.
இந்த சீதா குகையானது ஹிந்தியில் சீதா குஃபா என்று சொல்லுறாங்க ,இராமாயணகாலத்தில் இங்கே சிலகாலம் இராமர், லட்சுமணன் சீதாதேவி ஆகிய மூவரும் வசித்ததாக கூறப்படும் இந்த புனித இடத்தை சுற்றி மொத்தம் 5 கிமீ சுற்றளவில்தான் எல்ல கோவில்களும் இருக்கின்றன . இன்னும் இந்த ஐந்து ஆலமரங்களும் அருகருகே காணப்படுகின்றன. நாம இந்த இடத்தை பார்க்கணும்ன்னு முடிவெடுத்திட்டா சீதாதேவி குகைதான் கடைசியா பார்க்கணும். ஏன்னா எப்பவும் பெரிய வரிசை நின்னுக்கிட்டே இருக்கும். நாங்க குகைக்குள் செல்ல 1 மணிநேரம் ஆகிவிட்டது .இதனால் மற்ற இடங்களை  பொறுமையாக பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விவிட்டது. காரணம் இந்த குகையானது மிக குறுகலான 3 அடி உயரம் மட்டுமே இருக்கக்கூடிய செங்குத்தான இறக்கங்களை கொண்டது.  சில இடங்களில் தவழ்ந்துதான் போகனும். சில இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்துபோகனும். காற்றில்லாமல் மூச்சு திணறல் கூட ஏற்பட வாய்ப்பண்டு. உடல் பருமனாக இருப்பவர்களும், உடல் உபாதை இருப்பவர்களு இங்கே செல்வதை தவிர்க்கலாம் .
இந்த கோவில் மிக சிறிய கோவில் ஆனால் அருளால் மிக பெரிய இடம். இதுதான் குகைக்குள் செல்லும்வழி. இந்த வழியாக செல்ல சுமார் 20 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது.  கூட்டத்தை பொறுத்தே நாம் விரைவாக வருவதும் காலதாமதமாக வருவதும் அமையும். ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்லமுடியும் ஒருமுறை சென்றுவிட்டால் திரும்பி போகமுடியாது. நமக்குப்பின்னே நீண்ட வரிசையில் மக்கள் நிற்பார்கள். நாம் வெளியேசெல்லும் அந்த குறுகலான வழியே இருந்தும், தவழ்ந்தும் தான் செல்லவேண்டும்.  கொஞ்ச தூரம்    குகைக்குள் சென்றால் கொஞ்சம் நிமிர்ந்து நிற்குமளவு ஒரு விசாலமான பகுதி இருக்கிறது. இங்கே நல்ல அதிர்வலைகளும் ஆன்மீக சக்தியும் நிலவுவதை நம்மால் உணரமுடியும் .இங்கே இராம,இலட்சுமண மற்றும் சீதா தேவியின் கற்களினாலான சிலைகள் இருக்கு. இந்த குகையில் இரண்டு அறைகள் உள்ளன.இங்கே ஒரு ஜோடி பாதுகைகளும் இருக்கின்றது
அடுத்தது குனிந்து முன்னே சென்றால் சிறிய அறைபோன்று இருக்குது இங்கே நிற்கலாம் முடியாது உட்கார மட்டுமே முடியும். அல்லது குனிந்து நிற்கனும் .இங்கே இருக்கும் சிவலிங்கமானது சீதாதேவி பிரதிஷ்டை செய்து தினமும் அவளால் வழிபட்ட  சிவலிங்கம் என சொல்லப்படுது. நம்மூர் போல் இங்கே பூஜை செய்ய எந்த அய்யரும் கிடையாது. நமே பூக்களை போட்டு தொட்டு வணங்க வேண்டியதுதான். .சீதாதேவியே தினமும் பூஜித்த லிங்கத்திருமேனியை நாமும் இன்று பூஜிக்கிறோம் என்கிறபோது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோசம் .
இப்படித்தான் குகைக்குள் வரவேண்டும். திரும்பி செல்லவும் முடியாது ஆகையால்தான் இங்கே அறிவுப்பலகையே வைத்துள்ளனர். இப்பொழுதான் இந்த இடங்களை ஒழுங்கு படுத்தி வைத்திருக்கின்றனராம். அதற்கு முன்பு கரடு முரடாக இருக்குமாம். அதில் சென்றுதான் பக்தர்கள் தரிசிப்பார்களாம் அப்பொழுது சிலருக்கு காற்று இல்லாததினால் மயக்கம் எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது .அதற்காகவே இங்கே இந்த அறிவிப்பை வைத்துள்ளனர்
நம்மூர் மாதிரி இங்கே காலணிகளை பாதுகாக்க தனி இடம் எதுவுமில்லை நாம் வெளியே விட்டுவரவேண்டும். ஆனா, சிலசமயம் செருப்புகள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆகையால் இங்கே சுற்றுலா செல்பவர்கள் செருப்புகளை ஆட்டோவிலோ இல்லை வண்டிகளிலோ விட்டுவருவது நலம். அதுபோல வழக்கமாக புகைப்படமும் இங்கே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலரும் படம் எடுத்துக்கிட்டுதான் போறங்க. அப்படியே இந்த குகை வாசலைவிட்டு வெளியே வந்தோமானால் ஒரு பாதை செல்கிறது .அது இப்பொழுது கடைகள் நிறைந்த இடமாக இருக்கு. இந்த வழியாகத்தான் மாரீசன் மாயமான் வடிவில் இராமனை வனத்திற்குள் கூட்டி சென்றான் என்று சொல்லப்படுகிறது.
சீதாகுகைக்கு சில அடி தூரத்தில் ரதம் ஒன்று இருக்கிறதாகவும் சொல்லப்படுது.  அதன் பேர் 'ஜடாயு விமானம்'. இராவணன் சீதையை தூக்கிக்கொண்டு செல்லும்போது, பட்சிராஜா ஜடாயு இந்த விமானத்தின் மூலம்தான் போய் தடுத்து நிறுத்தி போரிட்டார் என நம்பப்படுகிறது. இ ராமநவமி விழா கொண்டாட்டத்தின்போது இந்த விமானத்திற்கு விசேச பூஜைகள் நடக்கும்  என எங்கள் வழிகாட்டி அண்ணா சொல்லிகொண்டுவந்தார். ஆனா, நேரமின்மை காரணமா அங்கு செல்லமுடியாமல் போனது. சீதா குகையை ஒட்டி கோரே ராம் மந்திர் இருக்குது.  இங்கே காலாராம், கோரேராம் என இரண்டுவிதமான கோவில்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. கோரே ராம் என்றால் வெள்ளைராம் என்று பொருள்படுமாம் . 
காலா ராம் மந்திரில்  எல்லா சிலைகளுமே கருப்பாக இருக்கும். கோரேராம்மந்திரில் எல்லா சிலைகளுமே வெள்ளையாக இருக்குமாம். அதை நாம நேரில் போய் பார்த்துவிடுவோம். இந்த கோரே ராம் மந்திரில்  இராமர் சீதா இலட்சுமணன் பரதன் சத்ருக்னன் மற்றும் அனுமான் சிலைகள் உள்ளது .எல்லாமே வெள்ளை சலவைக்கற்களால் பளிச் பளிச் என பார்ப்பதற்கே அழகாக இருக்கு.  .இங்கே எல்ல இடமும் புகைப்படம் தடை செய்யப்பட்டுள்ளன. அப்ப ராஜி மட்டும் எப்படி புகைப்படம் எடுத்தான்னு கேட்கக்கூடாது. சில போட்டோக்களை அங்கிருக்கும் வழிகாட்டி அண்ணாமூலம் இந்திக்கார்களிடமிருந்து வாங்கினேன். காரணம் பதிவுகளுக்காக.... இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்கள் போட்டோ எடுத்தாலும் இந்தியில் எதையாவது சொல்லி சமாளிச்சுடுறாங்க. ஆனா, நமக்குத்தான் மொழி பிரச்னையாச்சே! எப்பவுமே பயணம் செல்லும்  இடங்களில் உள்ள நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்வது நல்லது .
அடுத்து நாம பார்க்கப்போற முக்கியமான கோவில் காலா ராம் மந்திர் பஞ்சவடியில் இருக்கும் மிக பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில் .இந்த கோவிலின் அழகையும், வரலாற்றையும் பார்க்கும் முன்பு சனிசிங்கனாப்பூரில் இருக்கிறமாதிரி  இங்கிருக்கும் மரத்திலான கரும்பு அச்சு இயந்திரத்தில் கலப்படமில்லாத கரும்பு சாற்றினை குடித்து கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டு காலாராம் மந்திர் பத்தி பார்க்கலாம். 

மீண்டும் அடுத்தவாரம் காலா ராம் மந்திர்ல இருந்து சந்திக்கலாம் ...

அதுக்கு முன்னாடி ஒரு வேண்டுகோள். கூட்டு பிரார்த்தனைக்கு எப்பயுமே மதிப்புண்டு. அதேப்போல எந்த எதிர்பார்ப்புமில்லாம இரத்த சம்பந்தமே இல்லாதவர்களின் வேண்டுகோள் அத்தனை மதிப்பு வாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

என் அப்பா, உடம்புக்கு முடியாம  சுயநினைவில்லாம ஐ.சி.யூவில் இருக்கார்.  டாக்டர் நேரக்கெடு கொடுத்திருக்காங்க. பலாப்பழம் போல் என் அப்பா. பார்க்க அத்தனை கரடுமுரடா இருந்தாலும் பாசமானவர்.  எனக்கு எல்லாமே என் அப்பாதான். அவருக்கு அடுத்துதான் அம்மா, மத்தவங்கலாம்... அவர் நல்லபடியா குணமாகி பூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்பனும்ன்னு எனக்காக வேண்டிக்கோங்க சகோஸ். உடல் உபாதைகளோடு படுத்த படுக்கையா எந்த வேலைக்கும் அடுத்தவங்க கையை எதிர்பார்க்கும் நிலைமையை அவருக்கு கொடுக்காதேன்னு கடவுளை வேண்டிக்கோங்க சகோஸ். 

நன்றியுடன்,
ராஜி.

4 comments:

 1. கவலைப்பட வேண்டாம் சகோதரி... அனைத்தும் நலமாக நடக்கும்...

  ReplyDelete
 2. அதுக்கு முன்னாடி ஒரு வேண்டுகோள். கூட்டு பிரார்த்தனைக்கு எப்பயுமே மதிப்புண்டு. அதேப்போல எந்த எதிர்பார்ப்புமில்லாம இரத்த சம்பந்தமே இல்லாதவர்களின் வேண்டுகோள் அத்தனை மதிப்பு வாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.//

  உண்மையே சகோ/ராஜி

  கண்டிப்பாகப் பிரார்த்தனை செய்கிறோம். நல்லதே நடக்கும்.

  துளசிதரன், கீதா

  பதிவு வாசித்துவிட்டோம் இந்தச் செய்தி பார்த்ததும் பதிவின் கருத்தை இட முடியவில்லை

  ReplyDelete
 3. உங்கள் தந்தை பூரண நலம்பெற எனது பிரார்த்தனைகள்..

  ReplyDelete
 4. hi, this is Radha, content expert in parentune.com. Am searching for a Tamil blogger. kindly send ur number to radhashrim@gmail.com. thank u

  ReplyDelete