Friday, November 30, 2018

சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்த இடம், காலாராம் மந்திர் - ஷீரடி பயணம்

அப்பாவின் உடல்நிலை, பண்டிகைன்னு வந்த  காரணத்தால் தடைப்பட்டுப்போன தொடர்பதிவான  ஷீரடி பயணத்தை தொடரலாம் வாங்க!! பஞ்சவடி யாத்திரையில் நாம இப்ப பார்க்கபோறது பழமை வாய்ந்த காலாராம் மந்திர். இங்கிருக்கும் இராமர் இலட்சுமணன் மற்றும் சீதாதேவி, அனுமன் ஆகியோரது சிலைகள் மற்றும் கோவில் எல்லாமே கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டவை. நாங்கள் சென்ற தினம் ஏதோ விசேஷ தினம் போல!   எல்லா இடத்திலும் கூட்டம் கூட்டமா வரிசையில் போய்க்கிட்டு இருந்தாங்க. இந்த கோவிலை பத்தி சொல்லணும்ன்னா கோதாவரி கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான ஆலயம். நாசிக்கிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்குது.  இந்த கோவிலை சர்தார்  ராணாராவ்  தாத்தா என்பவர்தான் 1782-ல்  முதலில் புணரமைத்து விரிவாக கட்டினார்ன்னு சொல்லப்படுது. அதற்கு காரணம் ஒருமுறை இராமர் இவருடைய கனவில் வந்து,  தான் கோதாவரி ஆற்றில் மூழ்கி இருப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து கோவிலை விரிவாக்கம் செய் என சொன்னதாகவும் சொல்லப்படுது. பின்னர் அவர் சிலையை கண்டெடுத்து கோவிலை பெரியதாக கட்டினார் எனச் சொல்லப்படுது.
மேலும் ஒரு சிலரோ, நாதசைவ முனிவர்கள் பழங்காலத்தில் இங்கு தங்கிருந்தாக சொல்லப்படுகிறது. நாத சைவம்  என்பது சித்த சித்தாந்தம் என்றும் அழைக்கப்படும்  சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்று. நாஸ்தம், கோரக்க பந்தம், சித்தயோகி செம்பெருந்தாயம், ஆதிநாத செம்பெருந்தாயம், நாத மதம், சித்த மார்க்கம் என்றும் இதை சொல்லுவார்கள். கோரக்கர், மச்சேந்திரர் ஆகியோர் இந்த குரு பரம்பரையில் இருக்கிறார்கள். இது திருக்கயிலையிலிருந்து நந்திநாதரிடம் கற்ற எட்டுச் சீடர்களின் வழியே பரப்பப்பட்ட மூலசைவத்தின் இன்னொரு வடிவம் என்றும் சொல்லப்படுது. ஆதிநாதனான சிவனை குருவாகக்கொண்டுதான் சித்தர்கள் வந்தார்கள் அவர்கள் மூலமாக வந்ததுதான் இந்த நாத சைவஞானம் எனவும்,  இறுதியில் கோரக்கர் மற்றும் மச்சேந்திரர் ஆகியோர் மூலம், நவநாத சித்தர்கள் எனும் ஒன்பதுபேரால்  உலகுக்கு சொல்லப்பட்டதாக நம்பப்படுது .
எதுக்கு இதுலாம் சொல்றேன்னா  முக்திதாம் கோவிலில் பார்த்த நவசித்தர்கள் சிலைகளான மச்சேந்திர நாதர், கோரக்க நாதர், சலந்தர நாதர், இரேவண நாதர், நாகநாதர், ககினிநாதர், கனிபநாதர், சரபதிநாதர் என்னும் இந்த ஒன்பது பேர்கள்தான். நம்மூரில் பாம்பாட்டி சித்தர், போகன், காகபுஜண்டர் மாதிரி வடஇந்தியாவில் இவர்கள் பிரபலமான சித்தர்கள். கோரக்கரையும் மச்சமுனிவரையும், "மகாசித்தர்"ன்ற பெயரில் திபெத்திய மற்றும் பௌத்தர்கள் வணங்குகின்றனர் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இந்த சித்த புருஷர்கள் அருணா-வருணா நதியிலிருந்து இங்கிருக்கும் இராம, லட்சுமண, சீதாதேவியரின் சிலைகளை கண்டெடுத்ததாகவும், முன்பு இது மரத்திலான கோவிலாக இருந்ததாகவும் அங்க வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுது. பின்னர் 1780ம் ஆண்டு மாதவ்ராவ் என்னும் பேஷ்வாவின் தாயாரான கோபக்காபாய் அந்த காலத்தின் மதிப்புபடி 23 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததாக சொல்லப்படுது.
இந்த கோவில் முழுக்க முழுக்க கருப்பு மார்பிள் கற்களால் கட்டப்பட்டு பார்க்க ரொம்ப அழகா இருக்குது. இந்த கோவிலை கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்களை பாலில் கொதிக்கவைத்து அதன் உறுதித்தன்மையை பரிசோதித்து கட்டினார்களாம்!! இந்தக் கோவில் சுமார் 75 மீ நீளமும், 34 மீ அகலமும், 70 மீ உயரமும் கொண்டதாக இருக்குது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாதிரி நான்கு திசைகளுக்கும் நான்கு வாசல்கள் இருக்கு. கோபுர கலசங்கள் தங்கத்தால் ஆனவைன்னு  சொல்றாங்க. இங்க இருக்கும் முன்புற மண்டபம் 12 அடி உயரம் உள்ள 40 தூண்களால் அமைக்கப்பட்டிருக்கு. இங்க இராமநவமி மிகவும் விசேஷமாக கொண்டப்படும் .
இந்த கோவிலின் இன்னொரு  விசேஷம் என்னன்னா, சத்யயுகத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி வனவாசம் செய்த 14 வருடங்களில் இரண்டரை வருடம் இந்த தண்டகாரண்ய வனத்தில் இப்ப இந்த காலாராம் கோவில்  இருக்கும் இடத்தில்தான் குடிலிட்டு வசித்து வந்ததா சொல்றாங்க. வால்மீகி இராமாயணத்தில் இந்த நாசிக் பகுதியை பற்றி குறிப்பிடும்போது, மிகவும் அமைதியான அனைத்து விலங்குகளும் வசித்துவந்த ஒரு அற்புதமான வனமாக இது  இருந்திருக்கு. இங்க வசித்து வந்த அனைத்து உயிர்களின் தேவைகளையும் இந்த வனம் தீர்த்தது எனச்சொல்லி இருக்கிறார் முனிவர்களுக்கு சிறந்த தபோவனமாகவும், வேடர்களுக்கு வேட்டைக்களமாகவும், விலங்கினகளுக்கு வாழ்வாதாரமாகவும் செழிப்புற்று இந்த வனம் இருந்தது என இந்த இடத்தை பத்தி விவரிக்கின்றார் .
மேலும் இந்த வனத்தில் மிகக்கொடிய அசுரர்களும், பிரம்மராட்சதர்களும் இருந்தார்களாம்.  அவர்கள் அங்கு தவம் செய்துக்கொண்டிருந்த முனிவர்களுக்கு பலவித தொல்லைகளை தந்து அவர்களை பயமுறுத்தி தவத்தை கலைக்கவும் செய்தனராம். அந்தச்சமயத்தில்தான் அவர்கள் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்து தியானித்தனர். முனிவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த வனத்திற்கு வந்த இராமர் தன்னுடைய உருவத்தை மிகப்பெரிய கருப்பு உருவமாக மாற்றி அந்த ராட்சதர்களுடன் சண்டை இட்டாராம்.  அதனால்தான் இங்கிருக்கும் இராமர் மட்டும் கருப்பு வண்ணத்தில் அங்கிருந்த முனிவர்களால் வணங்கப்பட்டது என்றும் சொல்லப்படுது .
கோவிலின் உள்பக்க மணடபத்தை தாண்டித்தான் மூலவர் இருக்கும் கோவிலுக்கு போகனும். மாலையானதும் அங்கிருக்கும் வேலையாட்கள்  பைப் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்துவாங்க. கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். பக்தர்கள் எல்லோரும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தவுடன் நாங்களும் உள்ள போனோம். சில படிக்கட்டுகள் ஏறித்தான் கருவறைக்குள் போகனும். நாம் வாசலிலிருந்து உள்ள போகும்போதே உள்ள பிரகாசமான ஒளியில் காலாராம் சீதாதேவி சமேத இலட்சுமணன் துணையுடன் ராமர் கம்பீரமாக காட்சிகொடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார் . 
எல்லா கோவில்களையும்போல் இங்கயும் போட்டோ எடுக்காதீர் என்ற போர்ட் இருக்குதுதான். ஆனா, நமக்குதான் அட்வைஸ் பண்ணா பிடிக்காதே! அதையும்மீறி சிலர் படம்  எடுத்துக்கிட்டுதான் இருந்தாங்க.  உண்மையில் விளக்கொளியில் அழகான அலங்காரத்தில் காலாராம் காட்சிகொடுத்தார் இந்த விக்கிரகம் சுயம்புவாக தோன்றியது எனவும் சொல்லப்படுது. விசேஷ  தினங்களிலும், விடுமுறை தினங்களிலும் இங்க செல்வதை தவிர்க்கலாம் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், நின்று நிதானமா தரிசனம் செய்யமுடியாது.  கூட்டத்திற்குள் போக  பயந்து சிலர் வெளியில் நின்றே கும்பிட்டு போவாங்கன்னு அங்க இருக்கவுங்க சொன்னாங்க. .
அலங்கார ரூபத்தில் ஸ்ரீராமர்,  தம்பி லட்சுமணன், சீதா தேவியுடனும் அழகாக காட்சியளித்தார். நம்மூர்போல் அர்ச்சனை செய்ய புரோகிதர் யாருமில்லை. நம் பாட்டுக்கு போய் கும்பிட்டுக்கவேண்டியதுதான். அதேப்போல் சத்திரபதி சிவாஜியின் அரசியல் ஆலோசகரும் ,ஆன்மீக குருவுமான சுவாமி ராம்தாஸ் ராமபிரானின் தீவிர பக்தராம். அவர் 1620 முதல் 1632வரை நாசிக் வந்து 12 வருடங்கள் தவம் செய்தாராம். அப்பொழுது தினமும் காலை, மாலை  இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். அவர் இங்கிருக்கும் இராமரின் தரிசனமும் அருளும் கிடைக்கப்பெற்றவர் எனச் சொல்லப்படுது.
உள்ளே சிலர் ஸ்ரீராம்!! ஜெய்ராம்!! ஜெய் ஜெய் ராம்!! எனச் சொல்லி பக்திப்பரவசத்துடன்  சொல்லிக்கிட்டிருந்தாங்க. இந்த தண்டகாருண்ய வனத்தில்தான், தபசு செய்யும் முனிவர்களும், ரிஷிகளும் செய்யும் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த  14000 எண்ணிக்கையிலான ஆட்களைக்கொண்ட  ராட்சசபடைகளையும், அசுரர்களையும் இராமர் வதம் செய்து, அவர்களுக்கு அருள் செய்தார். எல்லா சம்பவங்களும் நடந்த இந்த இடத்தில்தான் கோவில் எழுப்பப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுது. சாமி தரிசனம் முடித்ததும் தஞ்சை பெரியகோவில் மாதிரி  பக்கவாட்டு வாசல் வழியேதான் வெளியே வரனும் .
காலையில் 5:30க்கு நடைதிறந்தது முதல் பூஜை ஆரம்பிக்கப்படும் முடிந்தவுடன் மதியம் 11 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடைபெறும். ஏகாதசி ராமநவமி போன்றவைலாம் இங்க சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களாகும். இங்க போகனும்ன்னு ஆசைப்படுறவங்க இந்த திருக்கோவிலின் பூஜை விவரங்களையும் தெரிஞ்சுகோங்க . காலையில் நடைதிறந்ததும் அதிகாலை 5:30 தொடக்கி  6::30 வரை ஆரத்தி... காலை 7:00 மணியிலிருந்து 8:00 சனி வதன் மற்றும் பூப்பலி.. காலை 8:00 ல இருந்து 10:00 வரை மக்களை ஆரத்தி.. முற்பகல்10:30 ல இருந்து 1:00 மணிவரை மகனாஜ் பூஜை மற்றும் மகா ஆரத்தி பிற்பகல்3:00 மணிக்கு தொடக்கி மாலை 5:00 மணிவரை பஜனை மற்றும் சிறப்பு வழிபாடு.. மாலை7:00 ல் இருந்து இரவு 8:00 வரை மீண்டும் ஆரத்தி . இரவு 8:00 ல இருந்து 10 மணிவரை ராம நாம கீர்த்தனைகள் பஜனைகள் பாடப்படும் .
ஒருவழியாக காலாராம் மந்திர் போயிட்டு நல்ல சாமிதரிசனம் செய்திட்டு வந்தாச்சு. இனி,  ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம்.  இதில் யுகம் யுகமாக நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் ட்சுமணனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலமரத்தின்கீழ் அதற்கான  குறிப்பும் வச்சிருக்காங்க.  இந்த கோவிலுக்கு செல்லும்போது முதலில் ஒரு கலர் புல் கணபதி வீற்றிருக்கிறார். அவரை தரிசனம் செய்துட்டுதான் படியேறிப்போகனும் இந்த ட்சுமணன் கோவிலுக்கு.....
இங்கேதான் ட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த இடம். அதுக்கு சாட்சியா யுகம் யுகமாக ஆனாலும் யாதொரு பழுதுமின்றி  நிற்கும் ஆலமரம் இருக்குது. அதனடியில் ட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிலையும் வைக்கப்பட்டிருக்கு. இந்த இடத்தில ட்சுமணனது சிலை தனியா வைக்கப்பட்டிருக்கு. அங்க லட்சுமண்சேஷ் நாக் அவதார்ன்னு போர்டு வச்சிருக்காங்க. அதனருகில் சிவபெருமானின் சன்னதியும் தனிச்சன்னதியாக இருக்குது. இங்கிருக்கும் ஆலமரம் யுகங்கள்பல  கண்டதுன்னு  சொல்றாங்க.
விநாயகரை தரிசனம் செய்துவிட்டு இந்த படிகள் வழியாகதான் மேலே ஏறி லட்சுமணன் கோயிலுக்கு போகனும். நாம் உள்ள போனதும் மிக பிரம்மாண்டமான  சிலை ஒன்று காணப்படுது.   அதில் லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த சிற்பம்  இருக்குது.  அதை சுற்றிவந்தால் யுகங்களை கண்ட அந்த புனிதமான அந்த மரம் தென்படுது. .அதையும் தொட்டு வணங்கி நின்றோம்.  இராமனும், லட்சுமணனும்  சீதையும் ஒரு யுகத்திலே இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்தனர், அந்த இடத்திலேதான் நாம இப்ப இருக்கோம்ன்னு நினைக்கும்போதே தேகம் சிலிர்த்தது. இந்த மரத்தின் கீழதான் இளவல் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாக ஐதீகம் .
அம்மரத்தை  கடந்து சுற்றி வந்து பயபக்தியுடன் வணங்கினோம்.  இங்க லட்சுமணனுக்கு தனி சன்னதி இருக்குது. இங்க லட்சுமணன் சேஷ்நாக் அவதார்ன்னு எழுதி இருக்காங்க.  பக்கத்தில சிவன் சன்னதிஒன்று  இருக்கு இங்கே, எல்லா  கோவிலையுமே மிகவும் சுத்தமாகவும் பரமரிக்கிறாங்க. தூரத்திலிருக்கும் அந்த இராமாயணகாலத்து மரத்தில் ஏதோ எழுத்திருக்கிறாங்க.   வாங்க! போய் பார்க்கலாம் . உனக்குதான் இந்தி தெரியாதேன்னு நீங்க சொல்லலாம். ஆனா, வெங்கட் அண்ணாக்குதான் இந்தி தெரியுமே! அவர் படிச்சு எனக்கு சொல்வாரு. சொல்வீங்கதானேண்ணே!!!???
 ஒருவழியாக கோவிலை தரிசனம் செய்து அடுத்து எங்கே போறோம்ன்னு எங்களை வழிநடத்தி சென்றவரிடம் கேட்டேன். அதற்கு அவர்  கபில கோதாவரி சங்கமத்திற்கு போகிறோம்ன்னு சொன்னாரு. அங்க என்ன விசேஷம்ண்ணான்னு கேட்டதுக்கு,  இந்த இடத்தை தபோவனம்ன்னுசொல்லுவாங்க. இந்தியில்  இதுக்கு தபோவன்ன்னு பேரு.  ராமாயணத்தில் இது  மிக முக்கியமான இடம். பண்டையகாலத்தில் இந்த தபோவனமான தண்டகாரண்ய வனத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தவம்  செய்துவந்திருக்கின்றனர்.  இங்க நாம பார்க்கவேண்டிய இடங்கள்ன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார் .
அதில் முக்கியமாக 
Lakshman Sheshnag Avatar .. லக்ஷ்மன் சேஷ்நாக் அவதார் நாம பார்த்தாச்சு.  இனி 
Sitha Haran .. சீதாஹரன்
Lakshmana Rekha .. லக்ஷ்மன்ரேகா
Lambe Hanuman .. லம்பேஹனுமான்
LakshmiNarayan Mandhir .. லக்ஷ்மிநாராயன் மந்திர்
Surpanaka Nak Kati .. சூர்ப்பனகை நாக் கடி
Lakshman Tapsya Mandhir .. லக்ஷ்மன் தபஸ்ய மந்திர்
Kapila Godavari Sangham .. கபில கோதாவரி சங்கமம்
Brahma Vishnu Mahesh Dhinkunt .. பிரம்மா விஷ்ணு மகேஷ் தின்குண்ட்
SitaMatha Agnikunt .. சீதாமாதா அக்னிகுண்ட்
Sriram Parankuti .. ஸ்ரீராம் பரண்குடி
தூரத்தில் கோதாவரி சங்கமத்தில் நதிகளில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. .ஆற்றுகரைகள்ல்லாம் பச்சைபசேலென பார்க்கவே அழகா இருந்துச்சு. தூரத்தில் இராம லட்சுமண மற்றும்  சீதா உருவங்கள் இரும்பினால் ஆன தகடுகளினால் பிரமாண்டமாக மலையின்மேல் வைத்திருந்தனர்.  இனி மீதி இருக்கிற இடங்களை கபில கோதாவரி நதிகளின் சங்கமத்திலிருந்து  அடுத்தவாரம் பார்க்கலாம்....

நன்றியுடன் ,
ராஜி .

13 comments:

 1. மரத்துல இருக்க ஹிந்தி வரிகள்....பெரிதாக்கிப் பார்த்தாலும் கொஞ்சம் கிளியரா வரலை...
  வெங்கட்ஜி நல்லாவே சொல்லுவார்...இருந்தாலும் என் ஹிந்தி அறிவை கொஞ்சம் டெஸ்ட் செய்துக்கறேன்...ஹிஹிஹி

  தபோவன்.

  நீங்க சொல்லிருக்கற கதையதான் எழுதியிருக்காங்க...ராவணனுடைய மகன் இந்திரஜித்தை கொல்ல வேண்டி லஷ்மன் இங்கு தவம் செய்ததால் இந்த மரத்துக்கு இந்தப் பெயர்....லஷ்மன் இங்கதான் ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் மூக்கு அறுத்தது ...இருங்க இன்னும் க்ளியரா வாசிச்சுட்டு வரேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதாக்கா என்னையும் ஹிந்தி படிக்கவிடாம ஆகிட்டாங்களே ,அடுத்தமுறை நேரடியாகவே ஒரு ஹிந்தி பதிவு எழுதிடனும் ...

   Delete
  2. எழுதுங்க ராஜி....சூப்பரா இருக்கும்...வேறு ஒரு மொழி தெரிஞ்சுக்கறது ரொம்பவே நல்லது. ஹிந்தி ராஷ்ட்ரபாஷா வரை கத்துக்கிட்டேன்...

   இப்ப பங்களூர் வாசம். ஸோ மெதுவா கன்னடம் கத்துக்க தொடங்கிருக்கேன். ஆனா ஹிந்தி, மலையாளம் போல ஈசியா வரலை. இங்கயும் ஹிந்தியும் பேசுறதுனால என் பட்லர் ஹிந்தி வைச்சு சமாளிக்கிறேன். ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 2. லக்ஷ்மன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து துண்டு கோதாவரி நதியில் தூக்கி எறியப்பட்டதால் இந்த இடத்திற்கு நாசிக் என்று பெயர் வந்தது என்று எழுதியிருக்கு....என் ஹிந்தி புரிதல் சரியா இருந்தால்...ஹா ஹா ஹா...

  கீதா

  ReplyDelete
 3. இந்த இடம் என்பது ஷேத்ரம் என்று சொல்லபப்ட்டிருக்கு....அப்புறம் பாரதத்தில் லக்ஷ்மண்ஜிக்கு ஒந்த ஒரு கோயில்தான் இருக்குன்னும்...பழமையானது என்றும் சொலல்ப்பட்டிருக்கு ..யஹ் ஸ்தான் புரானா - இந்த இடம் பழமையானது என்பதற்கு அப்புறம் உள்ள வார்த்தை சரியாகத்தெரியலை...ப மட்டும் தெரியுது...

  சில எழுத்துகள் மறைஞ்சிருக்கு.

  கீதா

  ReplyDelete
 4. ஒந்த - இந்த டைப்பும் போது ஒ வந்துடுச்சு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மொழிபெயர்ப்புக்கு நன்றி ..வெங்கட் அண்ணா வரட்டும் மீதிக்கதையும் கேட்டுவிடுவோம் ...

   Delete
  2. ராஜி அதுல அம்புட்டுத்தான் இருக்கு!!! அதுக்கு மேல இல்லை. நான் எல்லா வரியும் போட்டிருக்கேன்....ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஅ ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. சரி அடுத்தமுறை உங்களை கையோடு கூட்டிட்டு போயிடுறேன்,அப்போ ஹிந்தி கே பஹஷா ப்ரோப்லேம் நஹி ஹே..ஆகிடும் கீதா ..உங்க ஊரு சடைநாதர் மற்றும் ஜடாயுபுரம் ராமலிங்கேஸ்வரர்ல இருந்து தொடங்கி வடஇந்திய கபிலேஸ்வர் வரை பயணம் போயாச்சு ..இனி தாய்லாந்து அங்கோர்வார்ட் போய் பதிவா எழுதணும் ..என்பதே ஆசைங்க கீதா அப்ப தாய்லாந்து பாஷையும் கத்துக்கோங்க நாம சேர்ந்தே போயிட்டு வரலாம் ...

   Delete
 5. கீதாஜி சொல்லிட்டாங்க.... சூர்ப்பனகையின் மூக்கு கோதாவரியின் மறுகரையில் வீசீனார் என்று எழுதி இருக்கிறது. மூக்கு மற்றும் காது இரண்டும் அறுக்கப்பட்டது. ஹிந்தியில் நாக் என்றால் மூக்கு. நாக் அறுபட்ட இடம் என்பதால் நாசிக்...

  நாக் என்றால் மூக்கு. அப்ப மூக் என்றால் நாக்கா ந்னு கேட்கக் கூடாது....

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லுறது உண்மைதாண்ணே,குத்து சண்டையில மூஞ்சியிலையே குத்தி நாக்அவுட் பண்ணுறாங்களே ,அது இராமாயண காலத்திலையே வந்திடுச்சு, லெக்ஷ்மணனை பார்த்து காபி அடிச்சிருப்பாங்க போல.... ....

   Delete
 6. விளக்கம் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிண்ணே ...

   Delete