ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய்
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்.
இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய்.
அலி, பேடி, அரவாணி, திருநங்கை, ஒன்பதுன்னு கேலியாய் அழைத்து, ஊரோரம் புளியமரம்ன்னு, ஒருவாறு நெஞ்சை நிமிர்த்தி, கைகளைத் தட்டி கவர்ச்சி சார்ந்த காமெடியாக சினிமாவில் காட்டி, படிப்பு, சம உரிமை, வேலை வாய்ப்பு என எதையும் தராமல் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, ரயிலில், பஸ்சில் பிச்சை எடுக்கவிட்டு, பாலியல் தொல்லைக்கு நேர்ந்துவிட்ட கொடுமைக்கு ஆளான மூன்றாவது பாலினம், தங்களது வலி, தோல்வி, அவமானத்தைலாம் புறந்தள்ளி பத்து நாள் மகிழ்ச்சியோடு கழிக்கும் திருவிழாவே கூத்தாண்டவர் திருவிழா. இது விழுப்புரம் மாவட்டம் மடப்புறத்திலிருந்து 30கிமீ தூரத்திலிருக்கும் கூவாகம்ன்ற ஊரில் மிகச்சிறப்பா கொண்டாடப்படுது. சாகை வார்த்தல் நிகழ்ச்சியோடு இத்திருவிழா தொடங்கி 18வது நாளன்று தாலி அறுப்போடு முடியுது. இந்த வருடத்தின் 18வது நாள் திருவிழா இன்று கோலாகலமாய் நடைப்பெறுது.
ஆணாய் பிறந்து பெண் தன்மையோடு இருக்குறவங்களுக்கு திருநங்கைன்னும், பெண்ணாய் பிறந்து ஆண் தன்மையோடு இருக்குறவங்களுக்கு திருநம்பின்னு பேரு. ஒரு மனிதனின் உடலில் 36குரோமோசோம் இருக்கும். அதில், கடைசி இரண்டு குரோமோசோம்தான் ஆணா, பெண்ணான்னு தீர்மானிக்கும். Xன்ற குரோமோசோமும் Y குரோமோசோமும் சேர்ந்தால் அது ஆண் , குழந்தையாகவும், இரண்டு Xன்ற குரோமோசோம்கள் சேர்ந்தால் அது பெண் குழந்தையாகவும் பிறக்கும். விதிவிலக்காய் 37வதாய் x அல்லது y குரோமோசோம் சேர்ந்து, அது மூன்றாம் பாலினக் குழந்தையாய் பிறக்கும். இது மருத்துவ ரீதியான உண்மை. ஒருசில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹோர்மோன்ஸ் பிரச்சனையாலும் உடம்பில் மாற்றம் ஏற்பட்டு எக்ஸ்ட்ராவாய் ஒரு குரோமோசோம் சேர்ந்து மூன்றாம் பாலினமாக மாறலாம். இதுதான் மூன்றாம் பாலினம் உருவாக அறிவியல் காரணம். ஆன்மீக பூமியான இங்கு, மூன்றாம் பாலினம் உருவாக ஒரு கதை சொல்றாங்க. அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மகாபாரதத்தில் கிளைக்கதைகள் ஏராளம். அப்படிப்பட்ட கிளைக்கதைகளில் அரவான் கதையும் ஒன்னு. அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிப்பெற காரணம்ன்னு புராணம் சொல்லுது. அர்ச்சுனனுக்கும் நாகக்கன்னிக்கும் பிறந்தவன் அரவான். இவனுக்கு இரவன், இராவத், இராவந்த்ன்னு பேரும் இருக்கு. நாகக்கன்னிக்கு மகனாக பிறந்திருந்தாலும், அர்ஜுனன்போல அழகும், வீரமும் கொண்டவன் இந்த அரவான். மகாபாரத கதையை சொன்னால் பதிவு நீளும். அதனால, ரொம்ப சுருக்கமா அரவான் கதை மட்டும் பார்ப்போம்.
பெரியோர்கள் எத்தனை முயன்றும் குருஷேத்திர போர் மூண்டது. போரில் வெற்றிப்பெற செய்ய வேண்டியவற்றை காரணத்தை ஆராயும்போது, போருக்கு முந்தி களப்பலி இடவேண்டியதை சகாதேவன் சுட்டிக்காட்டினான். அதில் களப்பலி இடவேண்டிய முக்கியத்துவத்தை விளக்கி சொன்னான். களப்பலியாய் இடவேண்டியவரின் தகுதியை கண்ணன் கேட்க, சோதிடக்கலையில் கைத்தேர்ந்தவனான, சகாதேவன், ஓலைச் சுவடிகளை எடுத்து ஆராய்ந்து, ""சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம்”ன்னு கூறினான். களப்பலி என்பது, போர் தொடங்கும்முன் ஆணுக்குண்டான 32 லட்சணங்களுடன்கூடிய வீரன் ஒருவன், தான் சார்ந்திருக்கும் படை வெற்றிப்பெற வேண்டி, போர்க்களத்தில் தானே தன் கழுத்தை அறுத்து காளி தேவிக்கு பலியாக வேண்டும். இதுவே களப்பலியாகும்.
"சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார்யார்ன்னு அராயும்போது, கண்ணன், அர்ச்சுனன், அரவான் என மூவர் மட்டுமே பாண்டவர்வசம் இருந்தனர். போரின் அச்சாணியாய் இருக்கும் அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. கண்ணனை பலிக்கொடுக்க மற்றவர் சம்மதிக்கவில்லை. மிஞ்சி இருப்பது அர்ஜுனனுக்கும் நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான்தான். ஆனால், அவனிடம் களப்பலியாய் எப்படி அவன் உயிரை கேட்பது என தயங்கி நிற்கும்போது மூன்று நிபந்தனைகளுடன் அரவான் களப்பலியாக சம்மதித்தான். 1. திருமணம் ஆகாதவர்களை புதைத்துவிடுவர். அதனால், தனது ஈமச்சடங்கினை சொந்தம் கொண்டாட ஒருத்தி வேணும். அதனால தனக்கு திருமணம் ஆகி, ஒருநாளாகினும், இல்லறத்தில் ஈடுபடனும். 2. போர் முடிந்து பஞ்சபாண்டவர்கள் வெற்றிவாகை சூடுவதை கண்டு களிக்க தன் கண்களுக்கு சக்தி தரவேண்டும், 3.தனது மரணம் வீரமரணமாகனும்ன்னுமென மூன்று வரம் வைத்தான்.
கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றிவிடலாம். ஆனால், முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது?' நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? என சிந்தித்தார். பிறகு அரவானிடம், ""உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம்'' என்றார்.
அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிப் போனான். மாலை நேரம் முடிந்து இரவு மெல்ல மெல்ல தலைகாட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் வந்தாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கி, கைகோர்த்தான். சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்குமுன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக்கொண்டு மாளிகைக்குள் சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன. அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான்.
முறைப்படி தன் கழுத்தை அறுத்து களப்பலி ஆகி காளி தேவிக்கு சமர்பித்தான். அவனின் ஈமச்சடங்கில் கலந்துக்கொண்டு அவன் ஆசைப்படி தாலி அறுத்து, விதைவைக்கோலம் பூண்டு அரவானின் உயிருக்கு சொந்தம் கொண்டாடி அவ்விடம் அகன்றாள் மோகினிப்பெண். போர்க்களம் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு கம்பினை நட்டு, அதில் அரவாணின் வெட்டுண்ட தலையை சொருகி, அரவானுக்கு வாக்கு கொடுத்தபடி, போரினை காணும் சக்தியை அரவானின் கண்களுக்கு அளித்தார் கண்ணன். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் போரினை அத்தலையின் வழியாக அரவான் கண்டதாக சொல்லப்படுது. இன்றும் திரௌபதி அம்மன் கோவில்களில் அரவான் தலை கோவில் வாசலில் இருப்பதை காணலாம். திரௌபதி அம்மன் கோவில் விழாக்களில் அரவானி தியாகத்தை போற்றும்விதமாக அரவான் தலைக்கே முதல் மரியாதை.
விதவைக்கோலம் நிச்சயமென்று தெரிஞ்சு அரவானை மணக்க எந்த பெண்ணும் முன்வராததால், அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார்'ன்னும், கண்ணனே பெண்ணாக மாறினார்ன்னும் புராணத் தகவல்கள் சொல்லுது. அரவானின் களப்பலி நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பௌர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறுகிறது. அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோவிலை நோக்கி வருவது வழக்கம்.
பாரதப்போரில் களப்பலியான அரவான்தான் தங்கள் கணவன்ன்னும், களப்பலிக்குமுன் அரவான் மணந்து, மகிழ்ந்திருக்க வேண்டி, அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள்தான் தாங்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். பௌர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் சந்நிதிமுன் மணப்பெண்போல் ஒவ்வொரு திருநங்கையும் அலங்கரித்து நிற்க, அந்தக் கோவில் பூசாரி ஒவ்வொருவருக்கும் அரவான் சார்பாகத் தாலிகட்டுவார். அன்றிரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத் திருவிழா நடைபெறும். மறுநாள் காலை அரவான் தலை வெட்டுப்பட்டு, களப்பலியானப்பின், முதல் நாள் கட்டிக்கொண்ட தாலியை அறுத்தெறிந்து விட்டு வெள்ளைப் புடவை கட்டி, ஒப்பாரிப் பாட்டு பாடி சோகமாய் ஊர் திரும்புவர்.
இந்த விழாவினையொட்டி கூத்தாண்டவர் கோவிலில் தனியாக அமைந்திருக்கும் மேடையில் அழகிப் போட்டிகள் நடக்கும். இதில் அரவாணிகள் மட்டும் கலந்துக்கொள்ள அனுமதி. முதல் பரிசு பெறும் அரவாணிக்கு "மிஸ் கூவாகம்' கிடைக்கும்.
கூத்தாண்டவர் திருவிழாவின் இன்னொரு கதை..
தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும், பல்லவர்களுக்கும் நடந்த போராகும். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படனும்ன்னு பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் இப்படி போர்க்குணத்தை உண்டாக்க பல்லவமன்னன் மான்யம் கொடுத்ததுக்கு கல்வெட்டுகள் ஆதாரமுண்டுன்னு சொல்றாங்க வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான். நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி என்கிற சிறுதொண்டரும் அக்குலத்தை சார்ந்தவர்தான். அவர்தான் பாதாமியில் இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தவர் (வாதாபி கணபதி).இதுலாம் வரலாற்று உண்மை. பாரதக்கதையிலிருந்து, தமிழர்கள் கலையான தெருக்கூத்தில் பாரதக்கதை புகுந்தது. குறிப்பிட்ட சமூகத்தவரால் ஆங்காங்கு திரௌதி அம்மன் கோவில் உருவானது.
வாதாபி புலிக்கேசியை வென்ற வரலாறு, வாதாபி சூரன் கதையாய் ஆனது. வாதாபி சூரனை வெல்ல சிவனால் படைக்கப்பட்டவர்தான் தங்கள் குலத்தலைவர் என நம்ப ஆரம்பித்தனர். வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு குலத்தலைவன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், தலையில் சூடி இருக்கும் மல்லிகைப்பூ வாடும்" என்று சொல்லிச் செல்கிறார்.
குலத்தலைவன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. தலைவன் ஆற்றைக் கடந்து சென்றுவிட, நாய் ஆற்றைக் கடக்க முடியாமல் வீடு திரும்புது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், தலையில் சூடிய மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் தலைவன், தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். விழுப்புரம் பகுதிகளில் வாழும் இந்த இனத்தவர் கொண்டாடிய இத்திருவிழா காலப்போக்கில் கூத்தாண்டவர் திருவிழாக, அரவான் திருவிழாவாக மாறிப்போனதுன்னு சொல்றாங்க.
கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம்பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் இருக்கு. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் இருக்கு.
கோயிலின் வலப்புறத்தில் உள்ள சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு வைக்கோல்புரி சுற்றப்படும். இதுவே அரவான் திருவுருவம் செய்வதற்கான ஆரம்ப கட்டம். அக்கம் பக்கம் கிராமத்திலிருந்து மார்பு பதக்கம், அரசிலை, விண்குடை, பாதம், கைகள், புஜக்கட்டு, கயிறு, கடையாணி எனக்கொண்டு வரப்பட்டு வைக்கோல் புரியால் சுற்றப்பட்டு அரவான் திருவுருவம் தயார் செய்யப்பட்டு, அதிகாலையில் கோயிலின் உள்ளே இருக்கும் அரவான் தலையை எடுத்து அரவான் உடலின் மீது பொருத்தப்பட்டு மறுநாள் தேர் ஊர்வலம் நடக்கும் இந்த தேர், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பந்தலடி எனப்படும் அழிகளம் நோக்கிச் செல்லும்.
அரவான் ஊர்வலத்தின்போது விவசாயிகள் வேண்டுதல் நிறைவேற்ற, தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், தானியங்களை அரவான் மீது வீசுவாங்க. தாலி கட்டிய திருநங்கைகள் பூமாலை, வல்லவாட்டு என்கிற நீண்ட துண்டுகளை வீசுவார்கள். தேரில் அமர்ந்திருக்கும் பூசாரிகள் மாலைகள், துண்டுகளை அரவானுக்கு சாற்றுவார்கள்.
தேர் அழிகளம் சென்றடையும்போது திருநங்கைகள் கட்டி கட்டியாக கற்பூரத்தை ஏற்றி அரவானை வழிபடுவார்கள். களப்பலியிடும் நேரத்தில் பக்தர்கள் வேண்டுதலுக்காக ஆடு, கோழிகளை பலியிடுவார்கள். அந்த ரத்தத்தை சாதத்தில் கலந்து மாலை 4 மணி அளவில் பலிசோறு படைத்து பிரசாதமாக வழங்குவார்கள். இது உரிமைசோறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோற்றை உண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டுதலில் பிறக்கும் ஆண் குழந்தைகளை கூத்தாண்டவர் திருவிழாவில் திருநங்கைகளைப்போல் தாலி கட்டிக்கொண்டு அரவான் களப்பலி முடிந்ததும் தாலி அறுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தொடர்ந்து 7 மணி அளவில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி ஏரிக்கரை காளிக்கோயிலில் நடைபெறும். தொடர்ந்து அரவான் சிரசு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோயிலில் மீண்டும் வைக்கப்படும்.
திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு பணம், நகை உள்ளிட்ட காணிக்கை செலுத்துவாங்க. தங்களது உழைப்பில் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியை இந்த விழாவுக்காக செலவழிப்பாங்க. . தங்களுக்கு இன்னொரு முகம் உண்டு என்பதையும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இங்கு நடைப்பெறும் அழகிப்போட்டி, ஆடை அலங்காரப்போட்டி, நடனம், பேச்சுப்போட்டி மாதிரி இன்னபிற போட்டிகளில் வெளிப்படுத்தி மகிழ்கிறார்கள். சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வலியை இந்த நிகழ்ச்சியில் மறப்பதோடு சமூகம் தங்களை நடத்தும் விதம் குறித்து வேதனையையும் பதிவு செய்யத் தவறுவதில்லை.
மூன்றாம் பாலினத்தவரை பொறுத்தவரை கூத்தாண்டவர் திருவிழாதான் பொங்கல், தீபாவளி, பிறந்த நாள் மாதிரியான ஒரு கொண்ட்டாம். இதுக்காக, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இங்கு வர முயற்சிப்பாங்க. தங்களது சோகம், வலி, வேதனையை மறந்து சில நாட்கள் மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு, மீண்டும் அடுத்த வருட கொண்டாட்டத்தை மகிழ, திரும்ப கூடடையும் இந்த பறவைகள்.
நன்றியுடன்,
ராஜி
தகவல்கள் சிறப்பு. இதுவும் மீள் பதிவு தானோ?
ReplyDeleteஆமாம் சகோ
Deleteதகவலுக்கு நன்று அக்கா பரஞ்சோதியாய் பறந்துத் திரிந்த காலமதைச் ச்ந்திக்கிறேன்
ReplyDeleteசிவகாமி சபதத்தில் பிடித்த கதாபாத்திரம் அது..
Deleteநெகிழவைக்கும் தகவல்கள்.
ReplyDeleteஅறிந்தவை ஆயினும் மறுபடி படித்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅறிந்த செய்திகள். இருப்பினும் படங்களுடன் கூடுதல் செய்திகளுடன் படித்தபோது நிறைவாக இருந்தது. அவர்களுடைய வாழ்வு நிலை அனைவரையும் யோசிக்க வைக்கும் அளவில் உள்ளது என்பது வேதனையே.
ReplyDeleteமனித பிறவியாய் நினைக்காதது வேதனையே! நல்ல வேளை எங்க வீட்டில் யாரும் அப்படி நினைப்பதில்லை
Deleteஅறிந்த தகவல்கள். நெகிழ்ச்சியும் கூட. எங்கள் வீட்டிலும் கூட யாரும் அவர்களை அப்படி நினைப்பதில்லை.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: நான் ஒரு 4 திருநங்கைகளுடன் பேசியதை பதிவாகவும் போட்டேன். அப்போது இப்படியான தகவல்கள் அனைத்தும் அறிந்தேன். அவர்களின் சூழல் மிகவும் வேதனைக்குரியது. இவர்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு என்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் இவர்கள் கண்டிப்பாக வழி மாறிச்செல்ல மாட்டார்கள். இவர்களில் பலரும் வழி மாறித்தான் இருக்கிறார்கள். ரோஸ், நர்த்தகி என்று சிலரைத் தவிர...