Tuesday, August 06, 2019

உடல் இளைக்கவும், பெருக்கவும் செய்யும் பொன்னாங்கண்ணி கீரை - கிச்சன் கார்னர்


தினத்துக்கு ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்கனும்ன்னு சொல்வாங்க. ஆனா, அவசர யுகத்தில் கீரை கிள்ளி  சமைக்க சோம்பேறித்தனம்ங்குறதால் வாரம் ஒருமுறையாவது கீரையை சேர்த்துக்க சொல்றாங்க. சாக்கடை தண்ணீரில் கீரை விவசாயம், பறிச்ச கீரையை ப்ரெஷ்சாக காட்ட சுத்தமில்லாத தண்ணியை தெளிக்குறதுன்னு ஆரோக்கியத்துக்காக சாப்பிடும் கீரையே ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்குது. 

பொன்னாங்கண்ணி கீரை தங்கம் போன்ற பளப்பளப்பான உடல் அழகை தரும். தொடர்ந்து 27 நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வர தெளிவான கண்பார்வை  தரும். பொன்னாங்கண்ணி கீரையோடு மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். பொன்னாங்கண்ணி கீரை+பருப்பு+நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஒல்லியான தேகம் சதை பிடிக்கும். இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். எலும்பு வலிமை பெறும். வாய் துர்நாற்றம் நீங்கும். இதயம் மற்றும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். கல்லீரல், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும்.  பொன்னாங்கண்ணி கீரையோடு, பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வர அசுத்த இரத்தம் சுத்தமாகும்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால்தான் இந்த கீரைக்கு கீரைகளின் ராஜான்னு பட்டப்பெயர் உண்டாச்சுது. பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு. சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணின்னு... சீமை பொன்னாங்கண்ணியை அழகுக்காக வளர்க்குறாங்க. இதை சாப்பிடவும் செய்யலாம். நாட்டு பொன்னாங்கண்ணி கீரையே நாம அதிகமா சாப்பிடுவது. 

பொன்னாங்கண்ணியின் தண்டினை ஈரப்பதமான இடத்தில் நட்டு வைத்தாலே வளரும்.  இப்படிதான் நானும் நட்டு வச்சேன்; இன்னிக்கு, வாரத்துக்கு நாலு கட்டு கீரை கிடைக்குமளவுக்கு பரந்து வளர்ந்திருக்கு. இதில் சூப், பொரியல், கூட்டு, குழம்பு, மசியல்ன்னு செய்யலாம். வீட்டிலே வளர்க்குறதால, பூச்சி மருந்து, அசுத்தமான தண்ணின்னு பயமில்லை. 

இனி பொரியல் செய்வது எப்படின்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்..
பொன்னாங்கண்ணி கீரை
து.பருப்பு
தேங்காய் துருவல்
வெங்காயம்
பூண்டு
காய்ந்த மிளகாய்
கடுகு
உப்பு
எண்ணெய்

கீரையை கழுவி சுத்தம் செய்துக்கனும், வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கனும். பூண்டை உரிச்சுக்கனும்.. தேங்காயை துருவிக்கனும். து.பருப்பை குழைவா வேகவைக்காம மலர வேக வச்சாலே போதும்.


 வாணலியில் கொஞ்சமா எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடனும்...
 காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு சிவந்ததும், பூண்டை போடனும்..
 பூண்டு வெந்ததும் வெங்காயத்தை சேர்த்துக்கனும்....

 ஆய்ந்து கழுவி வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும்..
 கொஞ்சமா தண்ணி ஊத்தி வேக வைக்கனும்.. தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கனும்...
 குழையாத துவரம்பருப்பை சேர்த்து தண்ணி வத்துமளவுக்கு வதக்கனும்...
 தேங்காய் துருவல் சேர்த்துக்கனும்..
 நீர் வற்றியதும் அடுப்பை  அணைச்சுக்கனும்...
சத்தான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் தயார். துவரம்பருப்பு, தேங்காய்க்கு பதிலாய் வறுத்த வேர்க்கடலையை கொரகொரப்பா பொடி செய்தும் சேர்த்துக்கலாம்.

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. படங்களும் விளக்கங்களும் ஜோர். ஒரேயொரு தரம்தான் இதுவரை பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. பொன்னாங்கண்ணிக் கீரை - விதம் விதமான கீரைகள் - அதுவும் ஃப்ரெஷாக... அதெல்லாம் நெய்வேலியோடு போச்சு. தலைநகர் வந்த பிறகு இங்கே கிடைக்கும் கீரை வகைகள் ரொம்பவே குறைவு என்பதால் பொன்னாங்கண்ணியெல்லாம் நினைவில் மட்டுமே....

    நல்ல குறிப்பு.

    ReplyDelete
  3. இதன் சுவையே தனி... மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
  4. பொன்னாங்கண்ணி கீரை எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...

    உங்க வீட்டு பொன்னாங்கண்ணி கீரை யும் செம்மையா இருக்கு ராஜிக்கா...

    ReplyDelete
  5. பொன்னாங்கண்ணியின் மகத்துவம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. பொன்னாங்கண்ணி கீரை வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். எளிதாக வளரும் ஒன்று. குண்டு ஒல்லி நீங்கள் சொல்லிருப்பது போலத்தான் சொல்லப்படுகிறது.

    பாண்டிச்சேரி சென்னையில் இருந்தவரை நிறைய சாப்பிட்டிருக்ககோம்...இங்கு பங்களூரில் கிடைப்பதில்லை நம் ஏரியாவில்.

    கீதா

    ReplyDelete