Thursday, July 16, 2020

அனைவரையும் பிசியாக வைத்திருக்கும் ஆடி மாதம் பிறந்தாச்சு...

ஆடி மாதம்’ எந்த மாதத்திற்குமில்லாத சிறப்பு இந்த மாதத்துக்கு உண்டு.   இந்த மாசம் முழுக்கவே குடும்பம், இறை சிந்தனை, விவசாயம்ன்னு நீத்தார் கடன்ன்னு இந்த மாசம் முழுக்கவே தினத்துக்கொரு பண்டிகை, விசேசம்ன்னு எல்லாரும் பிசி.  அதனாலதான் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகளை பிரிச்சு வைக்குறது. இந்த ஆடி மாசத்துலதான் விவசாயமும், இறை வழிபாட்டுலயும் மனசும், உடம்பும் லயிக்கனும்ன்னுதான் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதும், கல்யாணம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளை செய்யாம இருக்குறதும்.. அந்த காலத்தில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்துச்சு. ஆடிப்பட்டம் தேடி விதைன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆடியில உழவு, சேடை ஓட்டுதல்,  நடவு, விதைத்தல், நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம்.  


ஆடியில் விவசாய வேலைகளை ஆரம்பிச்சாதான் தீபாவளி, கார்த்திகை, பொங்கல் மாதிரியான பண்டிகை நேரங்களில் அறுவடை நடந்து பண வரவு இருக்கும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.  அதேமாதிரி ஆடிமாசம் விதை வாங்க, வரப்பு சீர் செய்ய, கிணறை சரிப்பார்க்க, ஏர் உழ, நடவு மாதிரியான வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படும். அதனாலதான் அந்த மாசம் சுப காரியம் எதும் நடத்தாம விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. இதுமட்டுமில்லாம இந்த மாசத்தில பித்ரு கடன் செய்ய ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, கருட பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், தீமிதி, கூழ் வார்த்தல்ன்னு வரிசையா விசேச தினம் வரும். இந்த நாளில் புதுசா கல்யாணம் ஆனவங்க ஒன்னா இருந்தா மனசு சஞ்சலப்படும்ன்னுதான் புது பொண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க.  ஒரு வருடத்தினை, போக சம்பிராதாயம், யோக சம்பிராதாயம்ன்னு பெரியவங்க ரெண்டா பிரிச்சாங்க. ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாசமும் யோக சம்பிராதயம்.  இந்த ஆறு மாசம் தெய்வ வழிபாடு அதிகமா இருக்கும்.  தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாசத்தை போக சம்பிராதயம்ன்னு சொல்வாங்க கல்யாணம், காது குத்து, விருந்துன்னு சந்தோசத்தை அனுபவிக்கும் காலம். இதுதான் புதுப்பொண்ணை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்ப காரணம். 
புதுமண தம்பதிகள் ஆடியில் ஒண்ணு சேர்ந்தா சித்திரையில் குழந்தை பிறக்கும். அப்ப இருக்கும் வெயில்ல குழந்தை படாதபாடு படும்ன்னு அறிவியலும், சித்திரையில் குழந்தை பிறந்தா அப்பனுக்கு ஆகாதுன்னு சோதிடத்திலும் சொன்னாலும், இது காரணம் அல்ல. அப்படி பார்த்தா, குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கும்வரை  ஒவ்வொரு ஆடிக்கும் கூட்டிக்கிட்டு போகனுமே?! ரெண்டாவது குழந்தை சித்திரையில் பொறந்தா வெயில்ல அவதிப்படாதா? இல்ல அப்பனுக்குதான் ஆகிடுமா?! கல்யாணம் ஆன புதுசுல   வெவ்வேறு சூழலிலிருந்து வந்ததால், உடல் மயக்கம் தீர்ந்து கொஞ்ச நாளில் இருவருக்குள்ளும் பிரச்சனை தலைத்தூக்க ஆரம்பிக்கும். அதை இறை சிந்தனையோடு கணவனே முக்கியம்ன்னு நினைச்சு எல்லாரும் நல்லா இருக்க பெண்கள் விரதமிருக்கனும்ன்னுதான் பொண்ணுங்களை அம்மா வீட்டுக்கு அனுப்புறாங்க. பொறந்தவீடா?! புகுந்த வீடான்ற பிரச்சனை இப்பத்திய பொண்ணுகளுக்கு மட்டுமில்ல. அந்த பராசக்திக்கே வந்துச்சு. அதை, ஊசிமேல் நின்று தவமிருந்து அன்னை இரண்டுமே முக்கியம்ன்னு நிரூபித்தாள். அதை பெண்கள் புரிஞ்சுக்கதான் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுது. 
வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றி  விழா நடத்துவதும் ஆடி மாதத்தில்தான் நடக்கும். இதற்கு காரணம், ஆடிப்பெருக்கு வந்தால்தான் நிலம் ஈரமாகி பண்பட்டு உழவு நடத்தமுடியும். வெயில் கொளுத்துது, ஆடிக்காத்து அடிக்குது.. கிணறு, ஏரி, குளம்ன்னு எதிலும் பொட்டு தண்ணியில்லை. கடும் பஞ்சம். இதில் பிள்ளைகளுக்கு அம்மை நோய் வேறு.  அம்மை நோய் கண்ட வீட்டில் தாளிக்கக்கூடாது. பதுக்கியவன் கொடுப்பானா?! பார்த்தாள் அம்மன். அருள் வந்து ஆடினாள்.அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்துடா! அம்மன் கேக்கறா! எல்லாருக்கும் ஊத்து! அப்பதான் என் மனம் குளிரும்! பதுக்கியவன் பயந்தான். இருக்கும் அரிசியை பொங்கி கூழும், சுட்ட கருவாடும், முருங்கக்கீரையும் கொண்டு வந்து  படைத்தான்.  காய்ச்சிய கூழை என்ன செய்ய?! கூப்பிட்டான் ஊர்க்காரர்களை. பாவம் போக்க கொண்டு வந்த அந்தக்கூழை அம்மன் பிரசாதமென பசித்திருந்தோர்  பசியாறினர்.  தன் பிள்ளைகள் பசியாறியதை கண்ட அம்மனும் மாரியம்மனாய் ஊருக்குள் புகுந்து விவசாயத்தை ஊக்குவித்தாள். இதுதான் ஆடிக்கூழும், திருவிழாவும் உருவான கதை.

சிவனில்லையேல் சக்தியில்லை. சக்தியில்லைன்னா சகலமுமில்லை. ஆனாலும், சிவனைவிட சக்தியின் கை ஓங்கி இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாதத்தில்தான் ஆண்டாளும், பூமிதேவியும் அவதரித்தனர். ஆடி வெள்ளிகளில் மகாலட்சுமியை வழிப்பட்டால் செல்வம் சேரும். குத்துவிளக்கை லட்சுமியாய் பாவித்து   நகைகள் பூட்டி அலங்கரித்து வழிப்படவேண்டும். அம்மனுக்கு பால்பாயாசம், சர்க்கரைப்பொங்கல் வைத்து படைப்பது நலம். மறக்காம லலிதாசகஸ்ர நாமம் சொல்லனும் இல்லன்னா கேட்கனும். இதனால், வீட்டில் சகல நன்மைகளும் கிட்டும். 
ஆடி மாதம்  சிறப்பு பூஜைகள் செய்யும்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ஜாக்கட் துணி, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்கனும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும். .கற்கடக மாதம்'ன்னு ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ன்னு புராணங்கள் சொல்லுது. 

ஆடிமாதங்களில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல் பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.  ஆடி மாதத்தை “பீடை மாதம்”ன்னு ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.  ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனா, எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைன்ற முருகன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில்  அங்கிருக்கும் முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வாங்க. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

ஆடி  மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டா குடும்பத்தில் அமைதி ஏற்படும்.  முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும். ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். . ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதிதேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்பட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.தஞ்சாவூரில் நிசும்பசூதனி உக்கிர காளியம்மன் கோவில் இருக்கு. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வச்சிருக்காங்க. 

தேங்காய் நார்  குடுமியெல்லாம் எடுத்துட்டு, நல்லா மழுமழுன்னு தேச்சு, தேங்காய் கண்களில் ஒரு கண்  வழியா உள்ளிருக்கும் தண்ணிலாம் எடுத்துட்டு, அந்த கண் வழியா,  லேசாக வறுத்தஎள், பச்சரிசி, உடைத்த பச்சைப்பயிறு, நாட்டுசர்க்கரை கலந்த கலவையை நிரப்பி, கொஞ்சூண்டு தேங்காயிலிருந்து வடிச்ச தண்ணிய சேர்த்து. சீவிய அழிஞ்சில் குச்சியை ஓட்டை போட்ட தேங்காய்க் கண்ணில் செருகி தேங்காய், குச்சிக்குலாம் மஞ்சள் பூசி தேங்காயை சுடனும். சுட்ட தேங்காயை கோயிலுக்கு எடுத்துட்டு போய் உடைத்து , அங்க இருக்கும் சாமிக்கு கொஞ்சம் வச்சி வழிபடனும். தேங்காயில் நாட்டுச்சர்க்கரையின் ருசி ஏறி, எள், தேங்காய் வாசனையோடு நல்லா ருசியா இருக்குமாம். இது, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல்க்காரங்க வழக்கமாம். 
இப்படியொரு  விசித்திரமான விழா கொண்டாட மகாபாரத கதையை சொல்றாங்க.  அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ‘ஆடி18 அன்னிக்கு முடிவுக்கு வருது. இந்த போரில் தர்மம் வெல்லனும்ன்னு யுத்தம் தொடங்கும் நாளன்னிக்கு, பாண்டவர் படையை சேர்ந்தவங்க,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்கனும்ன்னு வேண்டிக்கிட்டாங்களாம். போர்க்களத்தில் என்ன கிடைக்கும்?! பாத்திரம் கிடைக்குமா?! இல்ல வகைவகையாய் காய்கள்தான் கிடைக்குமா?! அதனால தேங்காய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்னிக்கு இப்படி தேங்காய் சுடும் பூஜை உண்டானதாம். 

ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிக்கிருத்திகை, கருடப்பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடி 18ன்னு ஊர் முழுக்க மட்டுமில்ல, நம்ம பிளாக்கும் களைக்கட்டும்...



நன்றியுடன் 
ராஜி

10 comments:

  1. ஆரம்ப பதிவே இப்படி களைக்கட்டுதே... எத்தனை தகவல்கள்... முத்தாய்ப்பாக .L.R.ஈஸ்வரி அவர்களின் பாட்டு...! அனைத்தும் அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. இதுவே குறைச்சல்தான்.. இனி ஒவ்வொரு வாரமும் அம்மன் கோவில் பத்திய பதிவுதான்ண்ணே

      Delete
  2. ஆடி அறிந்தேன்
    நன்றி சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. எல்லோரும் கொரோனாவுல முடங்கிக்கெடக்கோம். நீங்க என்னடான்னா ஆடி மாசம் களை கட்டுதுன்னு சொல்றீங்க. இன்னும் ஆன்மீகப் பதிவுகள்தானா?

    ReplyDelete
    Replies
    1. ஊரடங்குதானே?! மனதடங்கில்லையே!
      இறைவழிபாட்டுக்கு பூ, பழம், கோவில்.. என எதுவுமே தேவையில்லை. ஏன் சிலாரூபம்கூட தேவையில்லை. மனதே போதும்..
      நம் இல்லத்திலேயே கோலாகலமாய் சாமி கும்பிடலாம்,,..

      அப்புறம், அரசியல் தவிர்த்து எல்லா பதிவுகளும் போடுறேனே! பார்க்கிறதில்லையோ!!

      Delete
  4. சிறப்பான தொகுப்பு. இந்த வருடம் ஆடி  கொஞ்சம் அடக்கியே வாசிக்கபப்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சகோ! ஆனா ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே.. தெருவை அடைச்சிக்கிட்டு பந்தல், கட்டாய வசூல், சாமி ஊர்வலம்ன்ற பேரில் குத்தாட்டம். முகம் சுளிக்க வைக்கும் ஆடல் பாடல்ன்னு இல்லாம வெறும் இறை பக்தியை மட்டுமே கொண்ட ஆடி மாதம்..

      Delete
  5. கூழு விசயம் அறிந்தேன் சகோ ஆடி மாதம் அடித்து கலக்குங்க...

    ReplyDelete
  6. ஆடி... தகவல்கள் நன்று.

    ReplyDelete