Wednesday, November 04, 2020

மதுரையின் அழகிய கோலத்தை அலங்கோலமாக மாற்றிய ஆங்கிலேயர் -மௌனசாட்சிகள்.

எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம். மீனாட்சி அம்மன் கோவிலாகட்டும், நாயக்கர் மகாலாகட்டும், அழகர் கோவிலாகட்டும், ராணி மங்கம்மாள் மாளிகையாகட்டும்.. பார்க்க பார்க்க அலுப்பு தட்டாது. இந்நாளில் நாம் காணும்  பழமையும், புதுமையும் கலந்து காணப்படும் மதுரை, 300 வருஷங்களுக்கு முன்னர்  மதுரையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கியது.  இப்பொழுது இருந்ததைவிட நேர்த்தியாகவும்,  அழகாகவும் இருந்ததுன்னு சொன்னா  ஆச்சர்யமாதான் இருக்கும். மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட 13-ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பெரிய கோட்டை இருந்ததுன்னு வரலாற்று ஆய்வுகள் சொல்வதா படிச்சேன். அது நிஜமா?! பொய்யான்னு இன்றைய மௌனசாட்சிகள் பதிவில் பார்க்கலாம்.

தற்போது உள்ள மதுரை நகரமானது "சதுர மண்டல முறை" நகர அமைப்பில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை மையப்படுத்தி அதனைச் சுற்றிலும் அகண்ட வீதிகள் அமைந்துள்ளது.  முன்பு தமிழ் மாதத்தின் பெயரிலும் தெருக்கள் இருந்தன. இப்பொழுது அது சுருங்கி சித்திரைஆணிஆவணிமாசி வீதிகள் மட்டுமே இருக்கு.  இன்று மன்னர் அரண்மனை ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. ஆனால், முன்பு  நாயக்கர் காலக் கோட்டை மதுரையை சுற்றி அரணாக இருந்தது. மதுரையின் அகழியும் கோட்டையும்  1757ஆம் ஆண்டு வரைப்படத்தில் காணக்கிடைக்கும். 30 முதல் 50 அடிகள் உயரம் கொண்ட மதில் சுவர்இன்றைய நான்கு வெளி வீதிகள் இருக்கும் இடத்தில் இருந்திருக்கு. 1559ல் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அரண்மென் (GLACIS) சரிவுகளுடன் கூடிய 72 கொத்தளங்களையும் கூடிய வலுவான மதில் சுவர்களையும் (RAMPARTS) கொண்டிருந்தது.

தற்போது விட்டவாசல் இருக்கும் கிழக்கு பக்கத்திலிருந்து மேற்கு பகுதியில் நேதாஜி சிலை அருகில் கோட்டை வாசல் இருந்ததென்றும்.கோட்டை சுற்றி இருந்த பெரிய அகழியின் அழிக்கப்பட்ட ஒரு பகுதியில்தான் இன்று பாண்டியன் அகழி தெரு என்று அழைக்கப்படும் தெருவாகும்.  கோட்டையை சுற்றி வயல்வெளி இருந்தது. மதுரை 1750-ம் ஆண்டுவாக்கில் பிரிட்டீஷ்காரங்க ஆட்சியின் கீழ்வந்தது. அதுவும் துரோகத்தால் 1736 - ல் கடைசி நாயக்க வம்சத்து ராணியான மீனாட்சி கர்நாடக அரியணைக்காக போட்டி போட்டுக்கொண்டிருந்த  சாந்தாசாஹிப் என்பவனது உதவியை நாடினாள். அவன் உதவுவதாக சொல்லி  பின்னர்ஆற்காடு நவாப் மற்றும் ஆற்காடு நவாப் படை தளபதியான யூசுப்கான்  என அழைக்கப்பட்ட மருதநாயகத்தோடு சேர்ந்து சாந்தாசாஹிப் பிரிட்டிஷ்காரர்களுடன் விலைபோனான். உதவுகிறேன் என வாக்குக்கொடுத்து தன்னை நம்பியிருந்த நாயக்க வம்ச கடைசி ராணியை ஏமாற்றி பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து நாயக்கவம்சத்தை முறியடித்து பிரிட்டீஷ்காரர்கள் தங்கள் கிழக்கிந்திய கம்பெனியை மதுரையில் நிறுவ உதவினான். மேலும், யூசுப்கான் என்னும் மருதநாயகம் பிரிட்டீஷ் கார்னெல் ஹிரோன் உதவியுடன் புலித்தேவன்மற்றும் சில பாளையக்காரர்களை   தோற்கடித்தான். பின்னர் ஆங்கிலேயரிடம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் தமிழக வரி வசூலை கப்பமாக கட்டி ஆண்டு கொண்டிருந்தான்பின்னால் ஆற்காடு நவாப்பின் தம்பி மோபிஸ் கானுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயரை எதிர்த்தான் யூசுப்கான் என்னும் மருதநாயகம். இந்த யூசுப் கான்,  தன்னிச்சையாக மதுரையின் சுல்தான் என அறிவித்து 1757 முதல் 1764 வரை மதுரை கோட்டையிலிருந்து பாண்டிய நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஆற்காடு நவாப் அவனை அடக்க  ஆங்கிலேய மற்றும் ஆற்காடு நவாப் படைகளை அனுப்பி இந்த மதுரை கோட்டையை ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டும் கோட்டையை கைப்பற்ற முடியவில்லை என்ற தகவலும் உண்டு.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பதுபோல் துரோகம் துரோகத்தாலே வீழ்த்தப்பட்டது. யூசுப்கான் என்னும் மருதநாயகம் பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டான். அதன்பிறகு மதுரை கிழக்கிந்திய கம்பனியின் நேரடி ஆட்சியின் கீழ்வந்தது. முதன்முதலில் மதுரை மாவட்டம் பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்டு (A Mc LEOD) ஏ மெக் லியோட் 1790 செப்டம்பர் 6 அன்று மதுரை கலெக்டராக பொறுப்பெடுத்துக்கொண்டார்.  மதுரையில் 1835ம் ஆண்டு முதல் 1848ம் ஆண்டு வரை மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர் ஜான் ப்ளாக் பர்ன் (BLACK BURNE) ன்ற பிரிட்டீஷ்காரர். மதுரை கோட்டை மதில் சுவர்களை இடித்து அதன் கற்களை கொண்டு அகழியையும் மூடி செப்பனிட்டு நகரை விரிவாக்கத் திட்டமிட்டார். இடிப்பதற்கு உத்தரவிடுமுன்கனமான கோட்டைச் சுவர்களை இடிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிக செலவாகும் என்பதை கலெக்டர் உணர்ந்தார். கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அகழியில் பெரும் முதலைகள் இருந்தன. முதலைகள் இருந்த காரணத்தால் கோட்டைச் சுவர்களை அணுகுவதற்கு மக்கள் பயந்தார்கள். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்ட பிரிட்டீஷ் அரசு நிர்வாகம்பிரமாண்டமான கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்து இந்த மதில் சுவர்களை இடிப்பதும்அகலமான அகழியை மணல் நிரப்புவதும் மிகவும் கடினம் என்று கூறினார் .

உடனே அப்பொழுது மதுரையில் ஆட்சி செய்த கலெக்டர் பிளாக் பர்ன்(MADURAI COLLECTOR (between 1834 and 1842) JOHN BLACK BURNE) பொதுமக்களின் உதவியுடன் பணியை மேற்கொள்ள திட்டமிட்டார். இடிக்கும் பணிக்காக அவர் பொதுமக்களின் உதவியை நாடினார். 1841ம் ஆண்டில் கலெக்டர் கோட்டை சுவர்களின் இடிக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். கோட்டையை சுற்றி உள்ள மதில் சுவரை இடித்து அகழியை மணல் இட்டு நிரப்பிய பின்பு உருவாக்கப்பட்ட நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மக்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என ஒரு அறிக்கை விட்டார். உடனே பொதுமக்களில்  சிலர் கலெக்டர் குறிப்பிட்ட பகுதிகளில் கோட்டைச் சுவரை இடிப்பது மற்றும் மணல் இட்டு நிரப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர். கலெக்டரும் கிழக்கிந்திய கம்பெனியில் உள்ள ஆங்கில பொறியாளர் மாரெட் என்பவருடன் சேர்ந்து உள்ளூர்காரரான பெருமாள் மேஸ்திரி என்பவரை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அப்பொழுது மதுரையில் இருந்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை  ஒன்று திரட்டி கோட்டை  மதில் சுவர் இடிப்பு மற்றும் மணல் இட்டு அகழியை நிரப்புதல் ஆகிய பணிகளை  செய்து முடித்தனர்.                   

மணலால் நிரப்பப்பட்ட அகழிகள் இரண்டு பொது வழித்தடங்களாக மாற்றப்பட்டன. மதுரை கோட்டையை இடித்து ஆங்கில பொறியாளர் மார்ட் பெயரில் நான்கு புற வீதிகள் (OUTERMOST ROADSமாரெட்டின் பெயரில் நான்கு புற வீதிகளுக்கு பெயரிடப்பட்டது. மற்ற நான்கு தெருக்கள் வெளி வீதிகள் என்றும் பெயரிடப்பட்டன. கூடவே ஒத்துழைத்த பெருமாள் மேஸ்திரி பெயரில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் பெருமாள் மேஸ்திரி வீதிகளாகப் பெயரிடப்பட்டன

கலெக்டர் ஜான் பிளாக்பர்ன் அவர்களின் நினைவாக பொதுமக்களின் பணத்தைக் கொண்டு உலோகத்தால் செய்யப்பட்ட உயரமான விளக்குத்தூண்கள் தெற்கு மாசி வீதி மற்றும் கிழக்கு மாசி வீதியின் சந்திப்பிலும், 'பத்து தூண்களுக்குவடக்கிலும் அமைக்கப்பட்டது. விளக்குத் தூண் என்றும் ‘பிளாக்பர்ன் தூண்’ என்றும் அழைக்கப்படும் ,விளக்குக் கம்பம் இன்றும் மதுரையில் மிக பிரபலம். விளக்குத்தூணில் இருக்கும் கல்வெட்டில் கலெக்டர் ஜான் பிளாக்பர்ன் பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளனர்.

நகர எல்லை விரிவாக்கத்திற்காகபழைய கோட்டை இடிக்கப்பட்டதும்அகழி மணலால் நிரப்பப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டது. இந்த நிகழ்வைப் கொண்டாடுவதற்காக  ஒரு கல் யானை சிலை திருமலை நாயக்கரின் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டு மதுரை யானைக்கல் சந்திப்பில் நிறுவப்பட்டது.

இதேப்போல் மதுரை யானைக்கல் பாலத்தில்வைகையாற்றில் இடதுபக்கம் ராட்சத கிணறு ஒன்று இருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் 1804ல் இதுபோன்ற கிணறு அமைக்கப்பட்டது. இதிலிருந்து பீப்பாய்களில் நீரை நிரப்பிகுதிரைமாட்டு வண்டிகளில் பொதுமக்களுக்கு வினியோகித்தனர். அந்த ஆண்டிலேயேவெள்ளப்பெருக்கால் கிணறு காணாமல் போனது. இதனால் இதன் அருகிலேயே இப்போதுள்ள கிணறு உருவாக்கப்பட்டது. அதேபோல், 1888ல் ஆற்றின் கல்மண்டபம் அருகே மூன்றாவது கிணறு அமைக்கப்பட்டது.

மதுரை கோட்டையின் அகழி இருந்த இடம்தான் தற்போது மாரட் வீதி என்று அழைக்கப்படுகிறது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு பக்கம் கோட்டையின் மேற்கு பகுதி (காவல் கொத்தளம்.240 ஆண்டு முன்பு வீரபாண்டிய கட்டபொம்மனை "டென்ஷனாக்கிய', நெல்லை கலெக்டர் ஆலன்துரையின் கல்லறையம்  மதுரையில்தான் உள்ளது .மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி - சம்பந்தமூர்த்தி தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள ஐரோப்பியர்களின் கல்லறை தோட்டத்தில்தான் ஆலன்துரை கல்லறையும்  உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பணியாற்றிய பல உயர் அதிகாரிகளின் கல்லறைகளும் இங்கு உள்ளன.

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஊரும், அதை சுற்றி ஒரு நகரமே இருக்குற மாதிரி மதுரை அரணமனைக்குள்  இருந்திருந்து, காலப்போக்கில் அரண்மனை, அகழியை சுற்றி உருவாகியிருக்க வேண்டிய மதுரை நகரம் இன்று எப்படி எப்படியோ மாறி அலங்கோலமாகி இருக்கு. ஆங்கிலேயர் ஆட்சியில் வித்திட்ட விதை இன்றும் பண்பாடு, கலாச்சாரம், வீரம், தெய்வீகம் என பன்முகத்தன்மைக்கொண்ட அந்த நகரை பாழ்ப்படுத்திக்கொண்டுதான் இருக்கு என்பதை வேதனையோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.. 

மௌனசாட்சிகள் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

2 comments:

  1. "எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம்." ராஜிக்கா, இந்தவரியே என் கண்ணில் இதயம் வரைந்தது :)
    அழகான மதுரை இன்று எவ்வளவு மாறியிருக்கிறது. வரலாற்றைப் பாதுகாத்துக் கொள்ளாமல்...ஹ்ம்ம்ம்

    ReplyDelete
  2. அரசியல் ரீதியாக பாழ் படுத்தி விட்டால் (தொடங்கி பல வருடம் ஆச்சி) முடிந்தது கதை...!

    ReplyDelete