மன அமைதிக்குதான் கோவிலுக்கு போறதே! புகழ்பெற்ற கோவிலுக்கு போகும்போது நேரம், பயணக்களைப்பு, கோவில் நடைமுறை, கூட்டம் என பல காரணங்களால் கசப்பான அனுபவத்தை பலர் அனுபவித்திருப்போம்.. ஆனா, அதிக பிரபலமாகாத கோவில்களுக்கு போனால், கசப்பான அனுபவம் நேராது. அதேநேரத்தில் மன அமைதியும் கிட்டும். உள்ளூர் கோவில் என்றால் நேரம், பணம், உடல் உழைப்பு மிச்சமாகி புண்ணியத்தோடு நல்லதொரு அனுபவமும், நம்ம வட்டாரத்துல இவ்வளவு பிரபலமான கோவில் இருக்கான்னு ஆச்சர்யமும் ஏற்படும்.
ஆரணிக்கு அருகிலிருக்கும் சனீஸ்வரன் எந்திர ரூபமாய் எழுந்தருளும் ஏரிக்குப்பம் சென்று சுவாமி தரிசனம் முடிச்சுட்டு வரும்போது மெயின் ரோட்டிலிருந்து கிளைச்சாலையில் 1கிமீ தூரத்திற்கு பயணித்தால் காமக்கூர் என அழைக்கப்படும் ஒரு கிராமம் வரும். போகும் வழியில் நெற்பயிர் விளைந்திருக்கும் வயல் வரப்பு இரு பக்கம் பச்சை கம்பளமாய் விரிந்து னமக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். வயல்களுக்கு இடையில் சிறு குட்டையில் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் பூத்து குலுங்கும். தேரோடும் வீதின்ற பேருக்கேத்த அகலமான தெருக்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்த இந்த திருக்கோவில் பெருசா இருந்தாலும் படு சுத்தம். கிராமத்துல அதிக பிரபலம் ஆகாத கோவில்ன்றதால கூட்டமுமில்ல!
காமக்கூர்ன்னு இன்னிக்கு சொல்லப்படும் இந்த ஊரின் ஆதிக்காலத்து பேர் காமத்தூர்... சுயம்புவாய் உருவாகி இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனது பெயர் சந்திரசேகரேந்திரர் சுவாமி , இறைவியின் பெயர் அமிர்தாம்பிகை. சந்திர சேகரன் என்ற பெயருக்கு பிறை சூடிய பெருமான்ன்னு அர்த்தமாம்.
ஊருக்கு மத்தியில் உயரமான புராதான மதில் சுவர்கள், கிராமத்து காவல் தெய்வமான அய்யனார், ஸ்ரீமுனீஸ்வரன் என்ற பெயரில் கோவிலுக்கு வலது புறம் வெட்டவெளியில் எழுந்தருளியிருக்கிறார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்ன்னு சொல்வாங்க. அதனால் உயர்ந்த ராஜகோபுரத்தினை முதலில் வணங்கி கோவிலுக்குள் செல்லலாம். ராஜகோபுர விதானத்திலிருக்கும் சிற்பங்கள் அனைத்தும் காலங்கடந்தும் இன்றும் புதிதாய் இருக்கு.
நாயன்மார்களால் பாடாவிட்டாலும் திருப்புகழில் காமத்தூர் என பாடப்பட்டுள்ளது. இத்தலத்து முருகன் அருளால்தான் அருணகிரிநாதர் திருப்புகழை இயற்றினதாகவும் சொல்றாங்க. அதனால திருப்புகழ் தலம்ன்னு இத்தலத்திற்கு பேர் உண்டு.
ஸ்ரீசக்கர யந்திரம் ஒன்று ஆதிசங்கரரால் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. அதனால், இங்கு காமாட்சி அம்மனுக்கு தனி சன்னிதி உண்டு. இது காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பானது என சொல்கின்றனர். காமாட்சி அம்மனது சன்னதி வாசலில் இருக்கும் துவார பாலகி சிலைகளை தட்டினால் பல்வேறு ஓசை எழும். இந்த தகவல்களிலிருந்து இக்கோவிலின் பழமையினை நாம் அறியலாம்.
இக்கோவில் சோழர் காலத்தையதுன்னு சொல்றாங்க. நாங்க போனபோது மாலை நேரம் ஆகி பூஜையெல்லாம் முடிச்சுட்டு கருவறையை மட்டும் சாத்தி இருந்தது. ஆனாலும், இரும்பு கேட் வழியா தரிசனம் கிடைச்சது. மூடி இருக்கும் கோவிலில் இறைவனை தரிசித்தல் கூடாதுன்னு சொன்னாலும், சின்ன கோவில்களில் விதிமீறல் நடந்துக்கிட்டுதான் இருக்கு.
ராஜ கோபுரத்தின் வழியே கோவிலுக்குள் நுழைந்தால் வலப்புறத்தில் விஷ்ணு சிலை ஒன்று வெட்டவெளியில் கவனிப்பாரற்று இருக்கு. விஷ்ணு சிலைக்கு பக்கத்திலேயே தலவிருட்சமான மகிழமரம் இருக்கு. மகிழ மரத்தின்கீழ் இளவட்ட கற்கள் சிலது இறைஞ்சிருக்கு. இதை, பிரிட்டீஷ் காலத்து பீரங்கி குண்டுன்னும் சொல்றாங்க.
பலிபீடம் இல்லாத கொடிமரம் இருக்கு. கொடிமரத்திற்கு அருகிலேயே முழுமுதற்கடவுளாம் விநாயகர் ஆலயம் இருக்கு. விநாயகரை வணங்கி சென்றால் வலப்புறம் அமிர்தாம்பிகை அன்னையின் தனிச்சன்னிதியை அடையலாம்.
சகாப்த ஆண்டு (1520)பொ.யு.1598 ஆண்டில் விஜயநகர மன்னர் இரண்டாம் விருப்பணர் இக்கோவிலுக்கு அளித்த நில அளவை நிவந்தன குறிப்புகள் பற்றிய கல்வெட்டு கருவறை வெளிச்சுவரில் காணக்கிட்டைக்கின்றது. பிற்கால சோழர்கள் காலத்தைய கல்வெட்டுகள் தெளிவற்று அழிந்த நிலையில் உள்ளது. ஆலய சுற்றுச் சுவர் முழுவதிலும் ஒரே வரிசையில் நூற்றுக்கணக்கான புடைப்பு சிற்பங்கள், கல்வெட்டுகள் என பழமையை பறைசாற்றியபடி என பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயம் பார்வையாளர்கள் வருகை இன்றி இருவேளை பூஜை மட்டுமே நடைபெறும் பரிதாப நிலையில் இருக்கு.
இதுவரை சென்றிராத கோயிலுக்கு இப்பதிவு மூலம் சென்றேன். நன்றி.
ReplyDeleteஅமைதியான கோவில் படங்கள் மூலமே அறிய முடிந்தது...
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteகோவில் அழகாக இருக்கிறது.
ReplyDelete