Showing posts with label ஈசன். Show all posts
Showing posts with label ஈசன். Show all posts

Friday, January 18, 2019

சிவபெருமான் நடனமாடிய ஐந்து அரங்கங்கள்


ஆருத்ரா தரிசன பதிவின்போது பதிவின் நீளம் கருதி சிவ வடிவமான நடராஜர் தோற்றம் பற்றியும், இவர் நடனமாடி சிறப்பித்த ஐந்து சபைகள் பத்தியு பதிவு வரும்ன்னு சொன்னேன். அதுமாதிரி நடராஜர் பத்திய பதிவு இதோ..... ஆருத்ரா தரிசனம் பதிவை பார்க்காதவங்களுக்காக... இதோ பதிவு 1, பதிவு 2

 தீமைகளை அழிக்கவும், பக்தர்களை காக்கவும் விஷ்ணு பகவான் மாதிரி புதுப்புது அவதாரங்களை சிவன் எடுப்பதில்லை. தனது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்வதோடு சரி. உருவ, அருவ,அருவுருவன்னு மொத்தம் 64 வடிவங்களை சிவன் எடுத்திருக்கார்.  அதில் 5 வடிவங்கள் மிகமுக்கியமானது. அவை,  வக்ர மூர்த்தியான பைரவர்,  சாந்த மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, வசீகர மூர்த்தியான பிட்சாடணர், ஆனந்த மூர்த்தியான நடராசர்,  கருணா மூர்த்தியான சோமாஸ்கந்தர் ஆகும். இதில்லாம, அரூப வடிவமான லிங்கம்தான் நாம் பெரும்பாலும் வணங்கக்கூடியது. லிங்கத்திருமேனிக்கு பிறகு நாம் அதிகம் வணங்குவது நடராஜ வடிவத்தில் இருக்கும் சிவரூபமாகும்.
 அணுத்துகள்கள் அசைந்ததால் உலகம் உருவானது. உலகம் சரிவர இயங்க, அணுத்துகள்கள் சதாசர்வக்காலமும் அசைந்துக்கொண்டே இருக்கனும். மெல்லிய அசைவில் தொடங்கி, நளினமாய் நகர்ந்து, வேகமாய் நகர்ந்து, முடிவினில் ஈசனை அடையும். இதையே, நடராஜரின் ஆடல் நமக்கு உணர்த்துது.  அந்த அசைவினை உணர்த்தும்படி  வலது காலை ஊன்றி இடதுகாலை உயர்த்தி, வலது கையால் அருளும், நாட்டிய பாவனையில் இருக்கும் சிவ வடிவத்தின் பெயரே நடராசர். நாட்டிய கலைக்கே ராஜாவென அர்த்தம் சொல்கிறது இந்த பெயர். அபஸ்மராவை  (முயலகன்) வதம் செய்த கோலத்தில் காட்சியளித்தாலும், மிகவும் பாசமிக்கவர். இசை, நடனத்தில் கைதேர்ந்தவர் இவர். படிப்பறிவில்லாதவர்களின் அறியாமையை ஆடல், பாடல்களினால் போக்கமுடியும் என்பதை நடராஜ அவதாரம் வலியுறுத்துகிறது.
சோழர்கள் காலத்திய வெண்கலச் சிலைகளின் மூலமாய்தான் முதன் முதலாக நடராஜ ரூபம் வெளிப்பட்டது. தகதகவென எரியும் தணலின் மேல் அபஸ்மரா என்ற அசுரனைக் கொன்று அவன் மேல் வலது காலை மட்டும் ஊன்றி, இடது காலைத் தூக்கி, மேலே உள்ள வலது கையில் உடுக்கையும். கீழே உள்ள வலது கை 'யாரும் பயப்படத் தேவையில்லை' என்று கூறும் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறார். அறியாமையின் அறிகுறியாக  அபஸ்மரா என்ற குள்ள அரக்கன் இருந்தான். குள்ள வடிவத்தில் இருந்த அவனைக் கொன்றால் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான பேலன்ஸ் போய்விடும் என்றொரு நிலை. அவனைக் கொல்வது என்பது முயற்சி, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு இல்லாமல் அறிவைப் பெறுவதற்குச் சமம் என்றும் ஒரு நிலை. வதம் செய்ய இவற்றையெல்லாம் நடராஜர் யோசித்துகொண்டிருந்தார். 

இதனால் அவனுக்கு தான்தான் எல்லாமே என்ற அகந்தை உண்டானது. அகந்தையால் சிவனுக்கே பயங்கர சவால்களையும் கொடுத்தான். இதற்குப் பிறகும் தாமதித்தால் ஆகாதென, சிவன் நடராஜ அவதாரம் எடுத்து, ருத்ர தாண்டவமாடி, அவனைத் தன் கால்களில் மிதித்து வதம் செய்தார்.   நடனத்தின் மூலம் கடவுளுடன் ஒன்றி இருக்கலாம் என்பதையும் நடராஜ அவதாரம் விளக்குகிறது. இதுதான் 'ஆனந்தத் தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான தத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

நடராஜரின் தோற்றம் பற்றி இனி பார்க்கலாம்..

நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும்,  சிவன் கையிலிருக்கும் டமருகம்ன்ற உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். சிவன் உடம்பிலிருக்கும் அரவம், முக்காலமும் காலகாலனிடம் அடக்கம்,  உயர்த்திய கால்கள்  அனைத்து உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பது.  அபயவரத முத்திரை கரங்கள்,  எல்லாவற்றிற்கும் துணையாய் நானிருக்கிறேன். பயம் கொள்ளாதே!.  பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.  திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே.  பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே!  சிவன் கையிலிருக்கும் அக்னி, தன் படைப்பே ஆனாலும் தீயவைகளை அழிப்பதும் கடவுளின் வேலை, சிவனின் திருவடியில் இருக்கும் அபஸ்மரா என்னும் முயலகன், ஆணவம் கொள்ளக்கூடாது. இவை அனைத்தையுமே நடராஜர் தோற்றம் நமக்கு உணர்த்துது.
சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களை பஞ்சசபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுது. அவை, பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுது.  இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமைந்துள்ளது. மார்கழி திருவாதிரை திருவிழா, ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்கு திருவிழா எடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இனி ஐந்து சபைகளைப் பற்றிப் பார்ப்போம்.
பொற்சபை - திருமூலட்டநாதர் திருக்கோவில்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் இருக்கு இக்கோவில். இங்கு இறைவன், தனது நடனத்தை பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவருக்கு, உமையம்மை சமேதராக காட்சியளித்தார்.  நடராஜர் நடனமாடிய இந்த இடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம்ன்னு பலவாறா சொல்லப்படுது.  இங்கு இறைவன் வலது காலை ஊன்றி,  இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம்ன்னு சொல்லப்படுது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியருளுகிறார். இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் ன்னு அழைக்கப்படுகிறார். ஆடல்வள்ளானை சிறப்பிக்கும் வகையில் இங்கு வருசந்தோறும் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படுது. 
இரஜித(வெள்ளி) சபை - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...

இது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கு. இங்கு, இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்கி வலது இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனம் ஆடிய தலம். இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் மாணிக்க  நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார். முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில்  ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாற்றி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுது.  இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.

இரத்தின சபை - வடராண்யேஸ்வரர் திருக்கோவில்..

இக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார். இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம்லாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை, ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார். காளியுடனான நடனப்போட்டியில் காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார்.  இங்கு இறைவன் ஆடிய ஆட்டத்துக்கு அனுக்கிரக தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்ன்னு பேரு. இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது. இங்குதான், அம்மை முக்தியும் பெற்றார். இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

தாமிர சபை- நெல்லையப்பர் ஆலயம் 
இக்கோவில்,  திருநெல்வேலியில் இருக்கு. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம்  என்றழைக்கப்படுது.  இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது.  இங்கு இறைவன் சந்தன சபாபதி ன்னு அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன், நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.

சித்திர சபை - குற்றாலநாதர் திருக்கோவில்...

இக்கோவில்  திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கு.  இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவன் புரிந்த திருநடனத்துக்கு திரிபுரதாண்டவம்ன்னு பேரு.  இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம்ன்னு அழைக்கப்படுது. சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு இறைவன் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி ன்னும்  அழைக்கப்படுகின்றனர்.

தத்துவம் ஆடச்
 சதாசிவம் தானாடச்
 சித்தமும் ஆடச்
 சிவசத்தி தானாட
 வைத்த சராசரம் ஆட 
மறையாட அத்தனும் ஆடினான்
ஆனந்தக் கூத்தே!
ன்னு உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சதாசர்வக்காலமும் ஆடிக்கொண்டும், தனது திருநடனத்தினை பக்தர்கள் துயர் தீர்க்கும்  ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவோம்.

இது ஒரு மீள்பதிவு...

நன்றியுடன்,
ராஜி

Friday, November 10, 2017

மரகத லிங்கத்தை பார்க்கனுமா?! - புண்ணியம் தேடி

இன்னிக்கு புண்ணியம் தேடி போற பயணத்துல நாமப் பார்க்கப் போறது ”திருவடிசூலம்”. இந்த தலம் ”திரு இடைச்சுரம்”ன்னும் ”திருவடி வலம்” ன்னும் முன்னலாம் அழைக்கப்பட்டதாம். அது காலப்போக்கில் திருவடிசூலம் ன்னு சொல்லப்படுது. 
செங்கல்பட்டிலிருந்து திருப்போருர் போற வழியில சுமார் 10 கி மீ தொலைவில் போகும் போதும், செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போற பாதையில 3 கி மீ தூரத்தில் போருர் செல்ல ஒரு பாதை பிரியும். அதன் வழியே 7 கி மீ தொலைவில் பயணம் செஞ்சா இந்த கோவில்   வந்து சேரலாம்.  இந்த திருவடிசூலம் திருக்கோவிலுக்கு செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கு. பஸ்லாம் திருவடிசூலம்  திருக்கோவிலின் அலங்கார வளைவுக்கிட்டயே நிக்குது.  அங்க இருந்து சுமார் ஒரு கி மீ தூரத்துல கோவில் இருக்கு. மலைகள் சூழ்ந்த இயற்கை எழிலில் வயல்களை ஒட்டி இந்த கோவில் அமைஞ்சிருக்கு!!
இந்தக் கோவில்சுமார் 2000 வருடங்களுக்கு முந்தையதுன்னு சொல்றாங்க. கிழக்கு பார்த்த சன்னதிதான். ஆனாலும் தெற்கில் நுழைவாயிலை கொண்டிருக்கு. நுழைவாயிலுக்கு முன்பு வெளியே இடப்புறம் வரசித்தி விநாயகர் அருள் பாலிக்கிறார்.  வலப்புறம்  திருக்கோவில் திருக்குளம் இருக்கு.  நுழை வாயிலில்  நேரே தெரிவது தாயார் சன்னதி. இடப்புறம் இருக்கும்  விநாயகரைத் தொழுதுவலமாகப் பிராகாரம் சுற்றி வரும்போது  சுப்ரமணியர் சன்னதி வருது.

தாயார் சன்னதிக்கு நேரே 10 வருடங்களா வளர்ந்து நிற்கும் ஒரு புற்றும் , அதன் அருகில் ஒரு நந்தியும் காணபடுது அதற்கு ஒரு கூரையும் அமைச்சிருக்காங்க.  ஆனா அதனோட வரலாறு என்னன்னு யாருக்கும் தெரியலை ஆனாலும், கோவிலுக்குள் காண்பவை யாவுமே வணக்கத்துக்குரியதுன்றதால புற்றை வணங்கிட்டு போலாம்.
வலபுறமமா திருகோவிலை சுற்றி வந்தா வள்ளி தெய்வயானை உடன் சுப்ரமணியரை தரிசிக்கலாம்.  பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் அதையடுத்து பிரம்மாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே இருக்கு. இந்த இடத்தை ஆண்ட மன்னர்கள் வழிபட்டது தாயார் பிரம்மாண்டேஸ்வரியைதானாம்.

வலப்புற மூலையிலிருந்து பார்க்கும் போது ஒரு கலையரங்கம் இருக்கு . அங்க வேதபிரசங்கங்கள் நடைபெறுவதற்கும், இங்கே உளவார பணிகள் செய்யும் சிவனடியார்கள் இளைப்பாறவும் பயன்படுது.

பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமா இருந்த இந்த இடத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று மட்டும் சரிவர பால் தரலை. சந்தேகப்பட்ட மாடு மேய்ப்பவன் அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் போய் தானாக பால் சொரிவதைப் பார்த்திருக்கான். இவ்விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லஅவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைப் பார்த்திருக்காங்க.  பின் இந்த இடத்துல கோயில் கட்டி வழிபாடு செஞ்சிருக்காங்க. . அம்பிகையே பசு வடிவில்ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' ன்னும்அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' (கோ - பசு) ன்னும் அழைக்கிறாங்க. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.
நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியா போய்க்கிட்டு இருக்கும்போது, நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏறஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்ப அங்கு கையில் சிறிய தடியுடன்கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன்சம்பந்தர் பசியோடு இருந்ததை பார்த்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்ன்னு மாடு மேய்ப்பவன் கேட்கஅவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி சொல்லி இருக்கார். அவரிடம்இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிஅங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். மாடு மேய்ப்பவன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியலை.

மாடு மேய்ப்பவனாக  வந்தவன் அழகு மிகுந்தவனா இருப்பதைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற மேய்ப்பவனாக  வந்தவன் சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன்இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ”இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார்.
கோவிலில் கொடிமரம் இல்லை. பலிபீடம்நந்தி மட்டுமே இருக்கு. பக்கத்தில் வில்வமரம் இருக்கு. குரங்குளின் தொல்லைகள் இருபதினால் மூலவர் வாயில் பெரும்பாலும் திறந்து வைப்பதில்லை.  மூலவர் சன்னதி நோக்கி செல்லும் வாயில் கல்சுவரில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் திருஉருவங்கள்  பொறிக்கப்பட்டிருக்கு.  பிரகாரத்தில் வில்வம்வேம்புஆலமரம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து ஒரே மரமா காட்சியளிக்குது.  சிவன்அம்பாள்விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தின் வடிவில் அருள் புரிகின்றனர் என்பதால்,  இங்கு வேண்டிக்கொண்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும்ஒற்றுமை கூடும் என பக்தர்கள் நம்புகின்றனர். 

பிரம்மாண்டேஸ்வரி  தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கூடவே இரண்டு சிவலிங்கங்களும் இருக்கு. .தட்சிணாமூர்த்தியின் சீடர்களுள் ஒருவரான சனத்குமாரர் தன் பொற்பாதங்களை இங்கு பதித்து மரகதலிங்கமான ஸ்ரீஞானபுரீஸ்வரரை பூஜித்திருக்கிறார்.  கெளதமரிஷியும்  இடைச்சுரநாதரை ஆராதித்துப் பல பேறுகள் பெற்றுள்ளார்.
இத்தல விருட்சம் பதினோரு முக வில்வதளம்.  இது ரொம்ப விசேஷமானதுன்னு சொல்றங்க. இதை ஞான புரீஸ்வரருக்கு சாற்றி வணங்கினால் எண்ணியது ஈடேறும் ன்னு சொல்றாங்க. இக்கோவில் முழுக்க கருங்கல் கட்டுமானம்.வெளிச்சுற்றின் ஈசான்ய பாகத்தில் பிரம்மாண்டேஸ்வரர் மேற்க்கு நோக்கி அருள்பாலிக்கிறார்


பிரம்மாண்டேஸ்வரர் சன்னதியின் முன்பக்கம் அமர்ந்திருக்கும் நந்தி வாகனத்தோடு அருள்பாலிக்கிறார்.  அதன் பின்னில் மலைவளம் நிறைந்த பகுதியும் மழை மேகங்களும் சேர்ந்து திருகோவிலை மேலும் அழகுபடுத்தி காட்டுகின்றது,

சுவாமி, அம்பாள் விமானங்கள்,  ஸ்ரீகாஞ்சி மடத்தின்  திருபணிகளுள் சேர்த்து புதுபிக்கபட்டிருக்கு. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்துடன் சேர்த்து இத்திருக்கோவில் பராமரிக்கபடுது.
இனி தெற்கு வாயில் வழியாக இமயமடகொடி என்னும் கோவர்தனாம்பிகை தாயார்   சன்னதிக்குள் போவோம்.  பொதுவா அம்பாள் தன் பாதங்களை  ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள்.


திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால நீ இங்கயே இரு! என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் ன்னு சொல்றாங்க. காலில் ஊனம் இருக்குறவங்க இவளிடம் வேண்டிக்கொண்டால் குணமாவதுடன், தன் ஊணம் குறித்த கவலை நீங்கி மனதில் அமைதி உண்டாகும்ன்னும் சொல்றாங்க.
உள் முகப்பு வாசலில் பிரவேசித்து, மண்டபம் கடந்து, வந்தால் சைவ குறவர்கள் நால்வரைத் தரிசிக்கலாம். பைரவரையும் அடுத்து காணலாம்.
கருவறை அகழி அமைப்புடையது. அம்பிகை தெற்கு முகமா நின்ற திருக்கோல நாயகியாய் எழிலுற அருள்பாலிக்கிறார்.  இத்தலத்து தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமா காட்சியளிகின்றது.

ஸ்ரீஞானபுரீஸ்வரர் மரகதலிங்கம் ஒரு சுயம்பு லிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிதது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. சதுரபீட ஆவுடையார். குலோத்தூங்க சோழன் கல்வெட்டு ஆலயத்துள் இருக்கிறது. அதில் குலோத்துங்கனின் ஆலயப்புனருத்தாரணம், நித்திய பூஜை, மற்றும் விளக்கெரித்தல் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கு.இந்த திருக்கோவில் பல்லவர் பாணியிலும், விஜயநகர மன்னர்களின் கட்டுமான மாகவும் அமைந்திருக்கு.
.
ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், சித்ரா பெளர்ணமி, பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை இங்கு விசேஷமாக நடத்தபடுது. சிவராத்திரி 4 காலங்களிலும் முறையாக பூஜை நடைபெறுகிறது. பிரதோஷ விழா சிறப்பாக் கொண்டாடப்படுது. தினமும் இரண்டு கால ஆராதனை நடக்கிறது. புதன் தசை, புதன் புக்தி, ஜாதகத்தின் புதன் நீசமாயிருக்கப் பிறந்தவர்கள் இந்த ஞானபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து ஒருமண்டலம் அருந்தினால் தோல் நோய்கள் குணமாகும். தம்பதியரிடம் அன்யோன்யம் பெருகும்.

இத்திருகோவில் காலை 7-30 முதல் 11-00 மணி வரையிலும், மாலை 4-30 முதல் 7-00 மணி வரையிலும் திறந்திருக்கும்.  மேலதிக தகவல்கள் வேண்டுவோர் இத்திருகோவிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் செல்லப்பா குருக்களை 9444948937 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.


திருக்கோவில் தரிசனம்லாம் முடிச்சுட்டு அங்க இருக்கும் நம் முன்னோர்களுக்கு தேங்காய், வாழைப்பழம்லாம் தந்து பசியாத்தி அவங்க ஆசியையும் வாங்கிட்டு அங்க இருந்து கிளம்பலாம்.

இது ஒரு மீள் பதிவு....


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1477543 நன்றியுடன்,
ராஜி