Showing posts with label க்ருஷ்ணன். Show all posts
Showing posts with label க்ருஷ்ணன். Show all posts

Thursday, November 16, 2017

பெண்களுக்கு தொல்லை தரும் க்ருஷ்ணன்

பால்ய கோலத்தில் வணங்கும் வினாயகர், முருகன், ஐயப்பன், க்ருஷ்ணர்ன்னு இருக்கும் தெய்வங்களில் வினாயகரும், ஐயப்பனும் பிரம்மச்சாரிகள் என்பதாலும், முருகன் பொறந்ததிலிருந்து அம்மாக்கள் கண்காணிப்பு, அப்புறம் போர், அதுக்கடுத்து கல்யாணம்ன்னு பிசியா இருக்குறதால அவரையும் யாரும் கண்டுக்குறதில்லை.  ஆனா நம்ம கிருஷ்ணன் அப்படி இல்ல. எப்பயும் சாக்லேட் பாய்,  அதான் எல்லா பொண்ணுங்களும் லவ்வுறாங்க இந்த கருப்பனை....

என் பிள்ளைகளுக்கு சின்ன வயசுல புரட்டாசி மாத 5  சனிக்கிழமைகளில் க்ருஷ்ணர் வேடமிட்டு சாமி கும்பிடுவோம். அதே மாதிரிதான் என்ற  எதிர் வீட்டு  கௌதமுக்கு வேடம் போட்டோம்.   நாமம் போட்டு அசிங்கப்படுத்திட்டேன்னும், துளசி மாலை போட்டதும் அது குச்சி குத்தினதும் கோவம் வந்திட்டு இந்த சின்ன க்ருஷ்ணனுக்கு.... எனக்கு பிடிச்ச போட்டோ இது.
நமக்கு பிடிச்சவங்க அடுத்த பெண்களை பார்த்தா வெட்டி போட்டுடலாம்ன்னு கோவம் வருது. இத்தனை அழிச்சாட்டியம் பண்ணியும் க்ருஷ்ணனை மட்டும் பிடித்து போக என்ன காரணமா இருக்கும்?!
உலகையே கட்டி ஆளும் இறைவனை,  சாதாரண  கயிறு கட்டி வைக்க முடியுமா?! இறைவன் கட்டுண்டது கயிறுக்கல்ல.. அன்புக்கு... இது ஏன் நம்மாளுங்களுக்கு புரிய மாட்டேங்குது!!!!

அவனை சுமந்து செல்ல அடியார்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்க, அன்பை சுமந்தபடி க்ருஷ்ணன்...

இறைவனையே காதல் ஆட்டிப்படைக்கும்போது நாம் எம்மாத்திரம்?!

குழந்தை பருவத்தை ரசித்தபடி....
அன்புக்கு கட்டுப்படும் இறைவன் தீயவர்களை அடக்க முற்பட்டபோது...

தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் ஆசைப்பட்டவளுக்கு மரத்திலும் காட்சியளிப்பான்....

படியளிக்கும் எம்பெருமான் ரிலாக்ஸ் பண்ணும் தருணமிது....

ராதை, பாமா, ருக்மணி, பதினோராயிரம் கோபியர், ஆண்டாள், மீராவுக்கு அடுத்து யாரை தன்வசப்படுத்தலாம்ன்னு யோசிக்குறானோ மாயக்கண்ணன்?!
எதை கொண்டு வந்தோம்?! எதை கொண்டு சொல்லப்போகிறோமென  என வாழ்வின் நிதர்சனத்தை போதித்தபடி... 

நிழலும் அவனே! நிஜமும் அவனே! பார்க்கும் இடத்திலெல்லாம் நீக்கமற நிறைந்து என்னை ஆட்கொண்ட ராஜாதி ராஜனும் அவனே!

அவன்.....

தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான்-சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை
அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)

விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான (தீராத)

அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி
அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை
சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். 
(தீராத)

பாம்பே ஜெயஸ்ரீ குரலில் இப்பாடலை கேட்க இங்க சொடுக்கவும்.... 


 தமிழ்மணம் ஓட்டின் அலைப்பேசி லிங்க்

நன்றியுடன்.,
ராஜி. 

Friday, March 10, 2017

ஹோலி ஹோலி... சுப லாலி லாலி - ஹோலி பண்டிகை வரலாறு

மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே  ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.  இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.
கிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான்.  இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன்,  மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 
ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல்  மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும்,  பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள்  மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். 
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.
சைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...

ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். 
இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..
நன்றியுடன்,
ராஜி.