Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Monday, March 16, 2020

கொரோனா வந்தால் உயிரிழப்புதான் முடிவா?! ஐஞ்சுவை அவியல்

மாமா! ஃப்ரீயா இருந்தால் வர்றியா?! கடைவீதிக்கு போய் வரலாம்?! 

அடியே! ஊரு உலகமெல்லாம் கொரோனான்னு அலறிக்கிட்டு இருக்கு. உனக்கு கடைவீதிக்கு போகனுமா?!    சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இப்ப, 110 நாடுகளுக்கு பரவி இருக்கு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5000க்குமேல் உயிரிழந்துள்ளனர். இதுவரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா சொல்றாங்க. . சீனாவுக்கு அடுத்தபடியா இந்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின்,தென்கொரியாவில்தான் அதிகளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கு.  இப்ப இந்தியாவிலும் பரவியிருக்கு.  என் மதமா?1 உன் மதமான்னு அடிச்சுக்கும் நம்மாட்கள், மத வேறுபாடின்றி தங்களோட வழிபாட்டு தலத்துக்கு வரவேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருக்கு. 

கொரோனா வைரஸ்ன்னா என்ன மாமா?!

போன், லாப்டாப், மனுஷங்க மட்டுமல்ல.. கால மாற்றத்திற்கேற்ப எல்லா உயிரினமும் தங்களை அப்டேட் பண்ணிக்கும். இல்லன்னா, அந்த உயிரினம் தங்களை தக்கவச்சுக்க முடியாது. இது வைரசுக்கும் பொருந்தும். கொஞ்ச நாளுக்கு முந்தி வந்த சார்ஸ், எபோலா மாதிரி இப்ப வந்திருக்க வைரசுக்கு பேரு கொரோனா வைரஸ்.  இந்த கொரோனா குடும்பத்தில்  6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இப்ப பரவி இருக்கும் வைரஸ் 7 வது வைரஸ் கொரோனா குடும்பத்தில் நுழைஞ்சிருக்கு. கொரோனாவுக்கு சோறு வச்சியே பேரு வச்சியான்னு யாரும் கேட்டுடக்கூடாதுல்ல! அதனால், இதுக்கு 2019- nCoV (new strain of coronavirus) ன்னு பேர் வச்சிருக்காங்க.  2019 ஆம் கண்டுப்பிடிச்சதுக்காக 2019ன்ற ஆண்டையும் n என்பது புதியதுன்னு , CoV என்பது கொரனாவையும் குறிக்கிற விதமா பேர் வச்சிருக்காங்க. 



2002 ல் சார்ஸ் SARS- CoV ன்ற வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசும்  சீனாவில்தான் முதன்முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் .  கொரோனா குடும்பத்தின் அடுத்த வைரஸான  MERS-CoV கொரனா என்பது 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கண்டுபிடிச்சாங்க. இதை கேமல் ப்ளூ பேர் வச்சாங்க. பழி ஓரிடம், பாவம் இன்னொரு இடம்ன்னு சொல்றமாதிரி ஒட்டகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இது குதிரையிலிருந்து பரவுச்சு. இதுல 800 பேர் வரை இறந்தாங்க. தன்னை அப்டேட் செய்துக்கிட்டே வந்த கோரோனா வைரஸ்  இப்ப 2019- nCoV நிலைக்கு வந்து இருக்கு. 



இந்த வைரஸ் ஒருத்தருக்கு தொற்றுச்சுன்னா,  முதலில் சாதாரணமா சளி, ஏற்படுத்தும் வைரஸ் மாதிரியே பரவுது. அவங்களுக்கு, ஒருவகையான நிமோனியாவை உண்டாக்குது.  கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்தாலும் தும்மல், இருமல்ன்னு ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுது.  சாதாரண சளி, இருமல், காய்ச்சல்ன்னு இதோட அறிகுறிகள் இருக்குறதால் சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடியாது. உரிய பரிசோதனைகளை செஞ்சுக்கிட்டால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கோமான்னு தெரியும். ஆனா, அதுக்கான வசதிகள் நம்மக்கிட்ட இல்லன்றதுதான் இதில் வேதனையான விசயம். இதை பொதுவில் அரசு சொல்லல. ஆனாலும், நிலை இதுதான். அப்படியே கண்டுபிடிச்சாலும் கொரோனாவை குணப்படுத்த இப்பவரைக்கும் மருந்துகள் இல்ல.   முதலில், சளி பிடிக்கும். அடுத்து தலைவலி,காய்ச்சல் வரும். அதுக்கடுத்து, தொண்டைவலி, வறட்டு இருமலை  உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு கொண்டு போய்விடும்.  பிறகு கடுமையான உடல்வலியை ஏற்படுத்தி, நிமோனியா வந்து கிட்னி செயலிழந்து மரணம் ஏற்படும்.


அப்ப, கொரோனா வந்தால் செத்துதான் போகனுமா மாமா?!

அப்படிலாம் இல்ல. 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்குன்னு வச்சுக்க. கொரோனா தொற்று ஏற்பட்டதுன்னு  கண்டுபிடிச்சா அவங்கள்ல 80 பேருக்கு சாதாரண சளி, காய்ச்சல் லெவல்லயே குணப்படுத்த முடியும். மிச்சம் இருக்கும் 20 பேரில் 10 பேர் மூச்சுத்திணறல்   வரை போவாங்க.  அவங்களை ஹாஸ்பிடலில் சேர்த்தா பிழைக்க வச்சுடமுடியும். மிச்சமிருக்கும் 10 பேரில் 8பேர் ஐசியூ வரைக்கும் போனாலும் காப்பாத்திடலாம். மிச்சமிருக்கும் 2 பேர்தான் இறப்பு வரைக்கும் போவாங்க.    


அப்ப கொரோனா வைரஸ் பரவாம எப்படி மாமா தடுக்குறது?!


பாதிக்கப்பட்டங்க, தனி மனிதன்ன்னு ரெண்டே ரெண்டு பேர் மனசு வச்சால் போதும். வைரஸ் தொற்று ஏற்பட்டவங்க மாஸ்க் போட்டுக்கனும். சளியை கண்ட இடத்தில் துப்பாம இருக்கனும். தனியா இருந்துக்கனும். ஹாஸ்பிட்டல்ல சேரனும். கூட்டம் கூடும் இடங்களுக்கு போகக்கூடாது.   ஒவ்வொருத்தரும் கண்ட இடங்களில் கைவைக்காம இருக்கனும், கைகளை கழுவாம முகம், வாய்க்கு அருகில் கைகளை கொண்டு போகக்கூடாது.  இதை செய்தாலே போதும் அதைவிட்டு எல்லாரும் முகமூடின்ற மாஸ்க் போடத்தேவையில்லை, பாதிக்கப்பட்டவர் போட்டாலே போதும். பெருநகரங்களில் பொதுமக்கள் மாஸ்க்கோடு போறதை பல இடத்தில் பார்க்கமுடியுது. பாதிக்கப்பட்டவங்க இருமும்போது நம்மீது தெறிக்காதவரை கொரோனா வைரஸ் காற்றினால் பரவாது. ஆனா, நிலப்பரப்பு வழியா பரவும். அதாவது கொரோனா வைரஸ் உள்ள சளியை தொட்டு நம் கண், மூக்கு, வாய் அருகில் கொண்டு சென்றால் பரவும். நிலப்பரப்பில் இருக்கும் இந்த கிருமி 12 மணிநேரம் வரை உயிர்வாழும்.


பொழுதன்னிக்கும் ஒரே மாஸ்க்கை போட்டிருந்தால் ஒரு பிரயோசனுமுமில்லை. பொதுவாவே ரெண்டு இல்ல மூணு மணி நேரத்திற்கு மட்டுமே மாஸ்க் பயன்படும். அதுக்கப்புறம் அது பயன்படாது. சர்ஜிக்கல் மாஸ்க்ன்னு சொல்லப்படும் ஆப்ரேஷன் தியேட்டரில் பயன்படுத்தும் மாஸ்க் அஞ்சாறு மணிநேரத்திற்கு தாங்கும். மாஸ்கை காதில் மாட்டும் எலாஸ்டிக்கினை மட்டுமே பிடிச்சு போட்டுக்கனும், கழட்டனும்.  அதைவிட்டு, வாய்க்கு அருகில் இழுக்கக்கூடாது.  வாய்க்கு அருகில்  மாஸ்க்கை கழட்டிட்டு  சாப்பிடுறது, சிகெரெட் பிடிக்குறது, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது, லிப்ஸ்டிக்ன்னு போடுறது கூடாது. சானிட்டரி நாப்கின் மாதிரி மாஸ்கையும் அதுக்கு தகுந்த மாதிரி டிஸ்போஸ் பண்ணனும். அதைவிட்டு கண்ட இடத்தில்  போடக்கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது  தெறிக்கும் சளியின் மூலமா மட்டுமே கொரோனா வெளிவருது. அந்த சளியை நம்ம சுவாச்சாலோ, அல்லது எதேச்சையாய் நம் வாயில் விழுந்தாலோ நம் உடலில் பரவும். அதுக்கடுத்து, அந்த சளியை கையால் தொட்டு, முகம், வாய்க்கு அருகில் கொண்டு போனால் பரவும். அதாவது சளியில் இருக்கும் வைரஸ் மூக்கு, வாய் வழியா சுவாசப்பாதைக்கு போகாமல் இருந்தால் ஒரு பிரச்சனையுமில்ல.


கூடிய மட்டிலும், தண்ணியை காய்ச்சி குடிக்கனும்.  எங்க போனாலும் தண்ணியை எடுத்து போங்க. வெளி உணவை  தவிர்க்கலாம்.  சமைச்ச அசைவ உணவையும், சமைக்காத இறைச்சியையும் கிட்டக்க வச்சுக்காம இருக்கனும்.  வெளியில் எங்காவது போகும்போது சுவற்றில், பஸ் ஜன்னல், கதவுன்னு கைவைக்காம இருக்கனும்.வெளி இடங்களில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவனும். அதுவும் 20 நொடிகள் கைகளை தேய்ச்சு கழுவனும்.  கை கழுவுறேன்னு தேங்குற நீரில் கை கழுவக்கூடாது. ஓடும் நீரில்தான் கை கழுவனும்.  எச்சில் தொட்டு பணத்தை எண்ணுற பழக்கமிருக்குறதால பணத்தை தொட்டுட்டு கைகளை கழுவ மறக்காதீங்க.


கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் 14 நாட்கள் வரை தொடரும். எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க. எல்லா வயதினரும் பாதிக்கப்படலாம்ன்னு இருந்தாலும் 40 வயதுக்கு மேல் இருக்கவுங்களுக்குதான் கொரோனா வைரஸ் தாக்கம்  அதிகமா இருக்கும்.  சின்ன குழந்தைகள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லைன்றது ஒரு சின்ன ஆறுதல். அதேப்போல் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் 60 வயதினருக்கு மேலானவர்கள்தான் அதிகமா இறந்திருக்காங்க. நீரிழிவு நோய் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமா இருக்குமாம்.  கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவங்க இறந்துட்டா, அவங்க உடல் வழியா இந்நோய் பரவாது.


அரசாங்கமும் கூட்டமா இருக்காதீங்க, கோவிலுக்கு போகாதீங்க, மாஸ்க் போடுங்கன்னு அட்ராசிட்டி பண்ணாம தகுந்த நடவடிக்கை எடுக்கனும் அதாவது, கூட்டம் கூடும் இடமான ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் மாதிரியான பொது இடத்தில் கழட்டமுடியாத கை கழுவுற லிக்விட்டை வைக்கலாம். தியேட்டர், மால், திருமண மண்டபம் மாதிரியான தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதைவிட்டு,  


கொரோனா பாட்டுக்கு வந்த தடம் தெரியாம போகவும் வாய்ப்பிருக்கு. அதைவிட்டு, கிரிவலம் வந்த கொரோனா, பாண்டிச்சேரியின் புது சரக்கு கொரோனா, காஞ்சிபுரம் பட்டிற்கு போட்டியாய் உலகப்புகழ் கொரோனா...ன்னுலாம் அறிவிக்காதீங்க. ஆனாலும் நம்மாளுங்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கன்னும், ரசம் சாப்பிடுங்கன்னு ஆளுக்காள் அட்வைஸ். குற்றவாளி கிடைக்கலைன்னா கிடைச்சா ஆள் மேல் கேஸ் எழுதுற போலீஸ்க்காரன் மாதிரி இதையும் பிராய்லர் கோழி மேல் உயில் எழுதுனது பரிதாப கதை. நம்மூரு வெயிலுக்கு வராதுன்னு ஒரு வாட்ஸ் அப் மீம்ஸ்.  பரப்பாதீங்க. கூடவே, மணிக்கணக்கா டிவில விவாதமும் பேட்டியும் போடாதீங்க. இதுலாம் பார்த்தா கொரோனா கோபமாகி ஒரு காட்டு காட்டிட போகுது. 

எல்லாம் சரி, நீ எதுக்கு கடைவீதிக்கு கூப்பிட்ட?!
கடையில் கொரோனா வைரஸ் புடவை வந்திருக்காம். அதை வாங்கிக்கிட்டு, அப்படியே எதிர் கடையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஹேர் க்ளிப்பையும் வாங்கிட்டு வந்திடலாம்ன்னுதான் கூப்பிட்டேன். 

ஊரெல்லாம் உயிர் போய்டுமோன்னு பயத்துல இருக்கு. உனக்கு கொரோனா புடவையும், கிளிப்பும் வேணுமா?!

ஆமா, போற உசுரு ஆசைப்பட்டதை அடைஞ்சுட்டு போகட்டுமே! ஆசைப்பட்டதுக்கு ஏங்கிக்கிட்டு இருக்குறதுக்கு இல்லாம போறதே மேல். அப்புறம் புளிய மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் பேயா அலைய வேண்டியதுதான்,.

நன்றியுடன்,
ராஜி

Wednesday, September 06, 2017

சீனாவில் ஒரு பர்வதமலை ...மௌனச்சாட்சிகள்

  நேரிலோ அல்லது சினிமா, ஆங்கில சேனல்களிலோ  நீங்கள் பார்த்த பாலங்களிலோ அல்லது   மலைப்பாதைகளிலோ இன்னிக்கு நாம பார்க்கப்போற பாதைதான் மிகவும் அபாயகரமானதாக இருக்கும்ன்னு நினைக்குறேன்.  பார்க்கும்போதே நமக்கு கைகால் உதறுது. ஹுன் - ஷான் மலைகளுக்கிடையில் ஆகாயத்தில், அதும் மரத்தாலான பாதையில் ஒருத்தர் பயணம் செஞ்சிருக்கார்ன்னா எத்தனை தில் வேணும்?!  இந்த ஆபத்தான மரப்பாதை பழைய  சீனாவின் தலைநகராக இருந்த ஷீ - .ஆன் நகரத்தின் அருகிலுள்ள ஹுன்- ஷான் மலையில் இருக்கு இந்த பாதை. சரியா சொல்லப்போனா,  அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதைப்பற்றி குறிப்பிடும்போது ஆகாயத்தில் ஒரு பாதைன்னே  சொல்றாங்க.
இந்த பாதையை பத்தி படிக்கும்போது   மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைக்க தோணும்.  இந்த பாதையைவிட வேற  அபாயகரமான இடம் வேறெதுமில்லையா?!ன்னு நினைக்க தோணும். எனக்கும் அப்பிடிதான் தோணுச்சு. ஆனா,  இந்த பாதையை பத்தி    ஒரு ஆங்கில இணைய கட்டுரையை படித்தேன். பேட்ரிக் வாட்கின்ஸ் என்பவர் தன்னுடைய திகில் அனுபவத்தை அதில் எழுதியுள்ளார். என்னைப்போலவே  அவரும் இதெல்லாம் கட்டுக்கதைன்னுத்தான்  நினைச்சுக்கிட்டு போனாராம். பார்த்ததும் அப்படியே பயத்துல கைகால் எல்லாம் நடுநடுங்கி போனாராம்.  ஆகாயத்துல, ரெண்டு பலகையில, ஒத்தை சங்கிலிய பிடிச்சு நடந்தா எப்படி இருக்கும்?! மீண்டும் அதை கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியலன்னு பீதியில சொல்லுறாரு. அப்படி என்னதான் இருக்கும் இந்த மரப்பாதையில்?! தெரிஞ்சுக்கலாம். வாங்க! போய் பர்ர்க்கலாம்.....

நம்ம ஊர்  கொல்லிமலை, பர்வதமலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி மாதிரி சீனாவில் புண்ணிய யாத்திரைக்கென்றே புகழ்பெற்ற ஐந்து மலைகள் இருக்கு. அவை முறையே, கிழக்கு, மேற்குவடக்கு, தெற்குஇவை நான்கிற்கும் இடையில் அமைந்த நடுப்புறப்பகுதி என புவியியல் அமைப்புப்படி  அமைந்துள்ளது. அதில் மேற்கு பக்கமாக அமைந்துள்ள இந்த ஹுன் - ஷான் மலை மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மலை அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக வணங்கிவந்த புனித மலையாகும். சீன வரலாற்றில் பல்வேறு மன்னர்களின் வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும்தியாகங்களுக்கும்  இந்த மலை பேர்போனது. 
பேட்ரிக் வாட்கின்ஸ் என்ன சொல்றாருன்னா, அவர் ஒருதடவை சீனா போயிருக்கும்போது    இந்த மலையை பற்றி கேள்விப்பட்டாராம். மூணு பலகையை சேர்த்து உருவாக்கிய பாதையில் மூவாயிரம் அடிக்கு மேலே நடந்து செல்லணும்ன்னு படிச்சபோது,  அதுபத்திதெரிஞ்சுக்க கூகுள்ல தேடி இருக்கார். ஆனா அவருக்கு போதுமான அளவு படம் கிடைக்கல. அதனால தானே அங்க போய் சாகசம் செய்து நிறைய படம்  எடுத்து ஊரு உலகத்துக்கு தெரியப்படுத்தலாம்ன்னு போயிருக்கார். இனி, அவர் வாமொழியா கேட்டாதான் இந்த பாலத்தின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.    அப்படி என்னதான் இருக்குன்னு அவரோட இணைய பக்கத்துல போய் அங்கிருக்கும் படங்களை பார்த்தா எனக்கே மூச்சு நின்னுட்டுது. ஸ்டூல் மேல ஏறவே பயப்படும் ஆளு நானு :-( என்னையெல்லாம் இங்க கொண்டு போய் விட்டா பார்த்ததுமே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். ..
இதுல பயணிக்குறது உயிருக்கு ஆபத்தா இருந்தாலும்இந்த இடத்தை பற்றிய செய்திகள், போட்டோக்கள் பொதுமக்களுக்கு போய் சேரணும்கிற ஒரு வெறி இருந்ததால, அதுக்கு முன்னாடி என்பயமும், எனக்கிருக்கும் ஆபத்துகளும் எனக்கு சிறுசா தோணிச்சு.  சரிஉரலுக்குள்ளே தலையை விட்டாச்சு ,இனி உலக்கை தலையில விழுமேன்னு பயப்படமுடியுமா?! அந்த ஆண்டவன் மேலே பாரத்தை போட்டு அந்த மலைப்பாதை பயணம் தொடங்கும் தொடக்க பாதையில் நின்றுகொண்டிருந்தேன். தொடக்கமே ஒரு குகைப்போல இருக்கு. அங்கதான் நம்ம பைகள், மற்ற பொருட்களைலாம்  டோக்கன் போட்டு கொடுத்திட்டு போகணும். நான்  திகிலோடு  நின்னுகிட்டு இருக்கும்போதுஒரு பெண் தைரியமா என்னை தாண்டி போனாங்க. சரி,  இவங்க உள்ளூர்காரங்க போல! இவங்க பின்னாடியே போனா ஈஸியா போய்டலாம்ன்னு அவங்க பின்னாடி நின்னேன்.  ஆனா, அந்த புள்ளையோ  நீங்க முதலில போங்கன்னு வழி விட்டுட்டாங்க, பொம்பளை புள்ளை முன்னாடி பயப்படக்கூடாதுன்னு கண்ணுல  பயத்தை காட்டாம கெத்தா,   இனி எங்கே எல்லாம் விழபோறமோன்னு மனசுக்குள்ளே திகிலோடு பயணத்தை தொடங்கினேன். 
 நானே தத்தக்க பித்தக்கான்னு நடந்து போய்க்கிட்டிருக்கும்போது எவனோ சாப்பிட்டுப்போட்ட ஒரு பர்கர்ல தெரியாம காலைவச்சி ஒரு புள்ள வழுக்கி விழுந்திட்டா.  சூப்பர்மேன் கணக்கா பாய்ஞ்சு விழப்போன அவ  கையை நான் பிடிக்க, அவ என்னையும் சேர்த்து இழுத்துக்கிட்டு  விழுந்தா. தமிழ் சினிமாவுல ஹீரோ ஹீரோயின் இப்படி விழும்போது பின்னாடி லலலலலன்னு பாடுவாங்க, வயலின் கதறும். அப்படி எதாவது என்னை சுத்தி கேக்குதான்னு காதை தீட்டிக்கிட்டு கேட்டேன். ம்க்கூம், நமக்கு அப்படிலாம் நல்லது நடந்துட்டா எப்படின்னு மனசை தேத்திக்கிட்டு   சுதாரிச்சு எழும்போது, வடிவேலு கணக்கா கெத்தை விடாம முறைச்சுக்கிட்டே எழுந்தா அந்த பொண்ணு கண்ணுல தெரிஞ்ச பீதிய பார்த்து நான் அப்படியே ஷாக்காகிட்டேன்.  சரி முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு சொல்லுவாங்களே!  பாதையின் ஆரம்பத்தில விழுந்தால தப்பிச்சிட்டோம். பாதியில விழுந்தா நேரா பரலோகம்தான்னு நினைச்சு,  முதல் வேலையா உடல் எடையை தாங்கக்கூடிய அளவு உள்ள ஒரு கனமான பெல்ட் எடுத்துஅதன் நுனியில் உள்ள கொக்கி மூலம்,  பாதையில் இருக்கும் சங்கிலியில் பிணைத்து,  அதை எடுத்து உடலோடு கட்டிகிட்டேன்..
இந்த மாதிரி ஆகாயத்து பாதைல இருக்குற போட்டோக்கள் ஏன் நம் பார்வைக்கு வரலைன்ற நம் கேள்விக்கு அவனவன் உயிரை பிடிச்சுக்கிட்டு நடக்கவே கஷ்டப்படும்போது யார் போட்டோ எடுப்பாங்க??!! .அந்த பழையகாலத்து மரக்கட்டைகள் எந்தளவு உறுதியா இருக்கும்ன்னு  நினைப்பே  அதுல நடக்கும்போது ஹார்ட் பீட் எகிறவைக்குது. ஒரு செங்குத்து மலையின் குறுக்கே ஆகாயத்தில் துருப்பிடித்த சங்கிலியின் மீது நடக்குறதை யோசிச்சு பாருங்க... நான் கையில் இருக்கும் பெல்ட்டை பிடிச்சுக்கிட்டு மெதுவாக  நடப்பது மரணத்தின் விளிம்பில் இருந்தாலும், அந்த வெயிலிலும்மழையிலும் தாக்குப்பிடிக்கும் பழைய காலத்து கட்டைகளும்துருப்பிடித்த சங்கிலியும் நம்மளை பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மை மேலும் ,மேலும் முன்னேறி செல்ல தூண்டும். 
இங்கிருந்து பார்க்கும் பொழுது ,சூரியன் மலை உச்சியில் இருக்கிறதோ என்று எண்ணுமளவு இந்த மலை ஆகாயத்தை தொட்டு நிற்குது.  நான் இந்த மலைக்கு வருவதற்கு வழியில் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. அந்த ஆகாய பாதையில் கவனமாகவும், அதேநேரம் வேகமாகவும் போகனும். ஏன்னா சூரியன் மறைந்தபிறகு 2,160மீ உயரமுள்ள அந்த மலையில் நடப்பது தற்கொலைக்கு சமமாகும். 
சில இடங்களில் மரபாலங்கள் இல்லாமல் வெறும் சங்கியிலியின் மேல் கம்பிகளின் துணைக்கொண்டு நடந்து கடக்கவேண்டும். அந்த அனுபவம் பயங்கர திகிலானது .
சில இடங்களில் அந்த சங்கிலிகள் கூட இல்லாமல் பாறைகளில் செலுத்தப்பட்ட ஓட்டைகளில் கவனமாக கால்களை வைத்து அடிமேல் அடி எடுத்து கடக்கவேண்டும். நான் அதில் நடந்துக்கிட்டே லேசா  திரும்பி பார்க்கும்போது ஒரு இளம்பெண் திகிலோடு முன்னேறிக்கொண்டு இருந்தார்.
ஒருவழியா ஆமைபோல நகர்ந்து மலை உச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். என் பின்னால்   ஒரு அழகான இளம் பெண் மலையேறி  வந்துகொண்டிருந்தார். பார்க்க கண்ண்க்கு குளிர்ச்சியா இருந்ததால சிரமம் தெரியல. 
அந்த வழியாக வருவோரின் சிலரது முகத்தில் இனி இந்தமலைப்பக்கமே தல வச்சுக்கூட படுக்கக்கூடாதுன்ற எண்ணம் கண்டிப்பா இருந்திருக்கும். ஏன்னா, எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சு. 
அதே பாதையில் சிலர் சந்தோஷமாகவும், தங்களது பெண்தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டு கம்பிகளின்மேல் கவனமாக கால்வைத்து நடந்தனர்.  அதையெல்லாம் பார்த்துகொண்டுவந்த என் கண்கள், திடீரென ஓரிடத்தில் அகல   திறந்து விரிந்தது. அங்க ஒரு பெண் இந்திய யோகிகள் செய்வதுபோல் ஆகாயத்தில் ஒற்றை காலுடன் நிற்பது போன்று கும்பிட்டு நின்றார். இது ஒரு புனிதமான மலையென்பதால் அவரும் பக்தி நிலையோடு வந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன் .
ஒருவழியாக ஆமைபோல் நகர்ந்து மலைஉச்சிக்கே வந்துவிட்டேன். மலைகளில் இருந்து பார்க்கும்போது ,சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். 
என்னதான் இடுப்பில் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தாலும்,  அந்த பள்ளத்தை பார்க்கும்பொழுது கால்கள் கிடுகிடுவென நடுங்கின .ஒருவழியாக மலையின் சமதள பாதைக்கு வந்துவிட்டேன்ன்ற நினைப்பே போன உயிரை திரும்ப கொண்டு வந்தது. 
சூரியனும் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். பாதையும் ஓரளவு சமதள பாதையாக இருந்தது. உடலை இணைக்கும் பெல்ட் தேவைப்படல. அங்கே தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது .. 
சிவப்பு ரிப்பன்களால் கட்டப்பட்ட திண்டுக்கல் பூட்டுகள் போல இந்த மலையின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. என்னுடைய இந்தியப்பயணத்தின் போது ஒருமுறை தமிழ்நாட்டுக்கு சென்றிந்தபோதுகோயம்பேட்டுக்கு அருகிலிருக்கும் திருவேற்காடு அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்க,  கோவில் கம்பிகளில் நிறைய பூட்டுகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. அங்கிருப்பவர்களிடம் கேட்டபோது மாமியார் ஓவரா பேசினாலோ  அல்லது பக்கத்துவீட்டுக்காரங்க அடிக்கடி நம்மகிட்ட சண்டை போட்டாலோ அவங்க வாயை அடைப்பதற்கு இங்கு வந்து பூட்டு காணிக்கை செய்து,ம் கம்பிகளில்  பூட்டிட்டு போவாங்களாம். வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கும்போது ,ஒரு வயசான அம்மா அங்கே ,பூட்டு போட்டுகொண்டு இருந்தார்.  இந்தவயதிலும் அவருக்கு மாமியார் தொல்லை இருக்குமான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே என்கூட வந்த  கைடுக்கிட்ட அவர் ஏன் பூட்டை கோவில்ல மாட்டுறார்ன்னு கேட்க சொன்னேன். அவருடைய மருமகள் ரொம்ப வாய் பேசுறாங்களாம்.  அதுக்காக பூட்டுப்போட வந்தங்களாம்னு சொன்னார். எனக்கு ஆச்சர்யமாகவும்அதேசமயம் அந்த அம்மாவின் செயல் சிரிப்பை வரவைப்பதாக இருந்தாலும் இதையும் தாண்டி நம்பிக்கை என்ற பூட்டு வலுவானது என்பதை அந்த இந்திய பயணத்தில் நான் கண்டுகொண்டேன். 
அந்த பூட்டு சின்னம் அன்பை வெளிக்காட்டும் சின்னமாகவே அவர்களது வழக்கில் இருந்துள்ளது. தனது காதலன், காதலி, குழந்தைகள், அம்மா,அப்பா இவர்களுக்கு இடையே அன்பு மலரவும், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கவும் செய்யப்படுகிற  வேண்டுகோளின் அடையாளம்தான் இந்த சிவப்பு பிரார்த்தனை ரிப்பன். இது பூட்டுகளோடு சேர்த்து கட்டப்படும்போது  அவர்களுடைய பிரார்த்தனை இறைவனிடத்தில் வைக்கப்படுறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.  மலை உச்சியை அடைந்தபோது இருட்டிவிட்டதால் நான் அங்கேயே தூங்கிவிட்டேன். வானம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த இறைவனின் கைவண்ணத்தில் எல்லாமே அழகுதான் என எண்ணிக்கொண்டு தங்குவதற்கு இடம் இருக்கிறதா என தேடினேன். அங்கே  2 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டல் இருந்தது. விலையும் மிக அதிகம். நான் மலையேறி வந்ததால் பசியோடு இருந்தேன். அங்கு சுவையான நூடுல்ஸ் கிடைத்தது. அங்கிருக்கும் படுக்கைகள் எல்லாம் அழுக்காக இருந்தன.  கடுங்குளிரில் அதையெல்லாம் பார்க்கமுடியாது என எண்ணி உறங்க சென்றேன்.
இவ்வளவு கஷ்டத்திலும் இரவில் அந்த மலையின்மேல் தங்குவது நல்லது என எல்லோரிடமும் நான் சொல்வேன். காரணம், காலையில் சூரிய உதயம் மலைகளுக்கு மேலே இருந்து காண்பது அவ்வளவு அழகு. அதைஅப்படியே என் காமிராவுக்குள் பிடித்துவிட்டேன் உங்களுக்காக ...
சூரியனும் மெல்ல மெல்ல பிரபஞ்சத்தில் தன்னுடைய இளங்கதிர்களை பரவச்செய்து பனிமலைகளுக்கிடையில் மஞ்சள் பழமாய் மேலெழுந்தான். அங்கு மலையின்மேலே ஒரு அழகான கோவில் இருக்கிறது .
கற்களாலும், மரங்களினாலும் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிற ஒரு வழிபட்டுதலம். இயற்கைச்சூழலோடு அழகாக காட்சிதருகிறது. காலையில் சூரிய  உதயத்திற்கு பிறகு வந்த முதல் பயணி நானாகத்தான் இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  கோவில் மிக அழகாக இருந்தது .
புத்த மதத்தை பின்பற்றும் சீன மக்கள்,  இங்கு தியான நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு பௌத்த தெய்வத்தை வந்து வணங்கி செல்கின்றனர். 
 .
குகையினுள் இருக்கும் இந்த தெய்வத்தை இங்குள்ள மக்கள் வந்து வணங்கி செல்கின்றனர்.  காலையில் மீண்டும் பக்தர்கள் வழிப்பட வருவதால் திரும்பி செல்லுவதற்கு கஷ்டமாக இருக்கலாம். நானும் மலையில் இருந்து மெல்ல  மெல்ல கீழே இறங்கத்தொடங்கினேன் . 
திரும்பி வரும் வழியில் சிலர் மும்மரமாக போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வைத்துக்கொள்வது நலம்.  ஏனெனில் அங்கே எதுவும் கிடைக்காது. அபாயகரமான மலையாக இருந்ததாலும் எனது பயணம் திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது என  பேட்ரிக் வாட்கின்ஸ் தனது கட்டுரையில் சொல்லி முடிக்கிறார்.   நம்ம ஊர்ல இருக்கும் கொல்லிமலை, சதுரகிரி, பர்வதமலைக்கே நம்மாளுங்களுக்கு நாக்கு தள்ளுதே! இதுமாதிரியான இடங்களுக்கு போனால்?!

தமிழ்மணம் ஓட்டு பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1471116

நன்றியுடன்,
ராஜி

Thursday, March 02, 2017

பாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா??!!

 உலகத்துக்கே பாலியல் பற்றி எடுத்து சொன்ன தமிழ்நாட்டில் இன்று வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதோடு இன்னுயிரையும் இழக்கின்றனர். இதற்கு பாலியல் பற்றிய முறையான கல்வியும், விழிப்புணர்வும் இல்லாததாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததே காரணமாய் அமைகின்றது.
மதம், குடும்பம், பொருளாதாரம் உட்பட  பலவித கட்டுப்பாடுகளை போராடி தகர்த்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்களால் இனி பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழப்போவது நிச்சயும். தமிழ்நாடே உசிலம்பட்டியாய் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை மிருகங்களைவிட கீழானவர்கள். ஏனெனில் எந்த மிருகமும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்க பாலியல் கல்வியும், வளர்ப்பு முறையும், சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கடுமையான தண்டனை இல்லாவிட்டால் சிறை அல்லது அபராதம்தானே என்ற அலட்சியம் வரும். மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுவர். ஆனால், நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைப்பெறுகிது.  மற்ற நாடுகளில் இருப்பதுப்போல கடுமையான தண்டனைகள் கொடுத்தால் ஓரளவு குறையும்.

இனி பல்வேறு நாடுகளில்  கொடுக்கும் கடுமையான தண்டனை பற்றி பார்ப்போம்...


சீனா;

 சீனாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களிலேயே வக்கிரமான, சைக்கோக்களுக்கு ஆண்மை நீக்கப்படும். உதாரணமாய் சீனாவின்  கான்சு மாகாணத்தின் வுஷுன் நகரின் அருகேயுள்ள கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லி ஜிஷுன் என்பவர் கடந்த 2011-2012 ஆண்டுவாக்கில் 4 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 25 மாணவிகளிடம் வகுப்பறை, தங்கும் விடுதி மற்றும் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாலியல்ரீதியாக முறைதவறி நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகவும் குழந்தைத்தனமாகவும், அப்பாவியாகவும் இருக்கும் சிறுமிகளை தேர்ந்தெடுத்த லி ஜிஷுன், தனது இச்சைக்கு அவர்களை இரையாக்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபணமாகி மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது ஆண்மையும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான்;

ஈரான்  நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக ஈரானில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் கொராசான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிலேயே அதிகமானோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதிவிசாரணைகளின் பின்னரே மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. கொலைபாலியல் வல்லுறவு, ஆயுத முனைக்கொள்ளைபோதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான்;

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துநான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள். அதேப்போல  திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு கொண்டால் ஆப்கானிஸ்தானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 100 கசையடிகள். 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் இந்த கசையடி தண்டனை வழங்கப்பபட்டது. அவர்கள் திருமணத்துக்கு முன்பு  பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இப்படி பலவிதமான தண்டனைகள் இந்த பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்றுஅவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல்துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ்; .

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்குமரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாகஅவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.
வடகொரியா;

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.
ரஷ்யா;

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவிலும் நம் நாட்டைப்போல கடுமையான சட்டங்கள் இல்லை. இங்குபாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்கா;
 அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு அந்நாட்டு சட்டத்தின் கீழ்சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும். ரஷ்ய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் அப்ரமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அப்ரமோவ்கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூனில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்ரமோவ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்ரமோவ்சிறுமியை ஈவிரக்கமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஓடிஸ் ரைட் தீர்ப்பளித்தார்.
சவுதி அரேபியா;

சவுதி அரேபியா உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும்படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால்பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

இந்தியா;


இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் ஈடுபட்டவனுக்கு தையல்மெஷின் கடை வைத்து கொடுத்த கூத்துலாம் இந்தியாவில் நடந்தேறியது. ஜாதி, மதம், அரசியல், பண தலையீடுகளால் இத்தகைய பல குற்றங்கள் வெளிஉலகிற்கு வராமலே புதைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும்இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குகிறது. அதனால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான்யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
இத்தகைய பாலியல் குற்றங்கள் இனி தொடர்ந்து நடைப்பெறாமலிருக்க பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பில் மாறுதல், உணவு கட்டுப்பாடு, சமூக மாற்றத்தோடு முறைப்படுத்தப்பட்ட ஆன்மீகமும் கொண்டு வரவேண்டும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
ராஜி.