Showing posts with label சுத்தம். Show all posts
Showing posts with label சுத்தம். Show all posts

Saturday, January 14, 2012

போகி...,பழையன கழிதலும், புதியன புகுதலும்.....

                                

      பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.

      அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும். 
                                 


    பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
      பொட்டு பொடுசுங்க லாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்ன்னு பிளான் பண்ணுவாங்க.

         போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணுவேன்.
                  
                    3 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோ மறந்து காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஐயர் மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுக்கு அப்பாற்பட்ட கதை.