Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Monday, November 05, 2012

நான் ஒரு இல்லத்தரசி

                                                                                 

வாம்மா சுஜி! நல்லாயிருக்கியாடி குழந்தே?!

ம் ம் ம் ஏதோ இருக்கேன் மாமி..,

என்னம்மா ஏன் சுரத்தேயில்லாம சொல்றே? வீட்டுல எதாவது பிரச்சனையா?! உங்காத்துக்காரர் எதாவது சொன்னாரா?

ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி.

அப்புறம் உங்க மாமனார்.., மாமியார்? இல்லை பிள்ளைகளுக்கு எதாவது உடம்புக்கு முடியலையா?

ம்ஹூம்..

அப்புறம் ஏண்டியம்மா! ஒரு மாதிரி இருக்கே. உன் பிரசனை என்னன்னு  சொன்னாத்தானே எதாவது செய்ய முடியும்! ம் சொல்லுடியம்மா!

மாமி! விடிகாலை எழுந்து..,  வீடு வாசல் கூட்டி..,  சமைச்சு.., பசங்களையும்..., வீட்டுக்காரரையும் தயார் பண்ணி அனுப்பி...,  மாமியார், மாமனாரை கவனித்து.., துணி துவைச்சு, பாத்திரம் கழுவி, பால்காரன், கேஸ்காரனுக்கு பதில்சொல்லி, மாவரைச்சு.., துணி மடிச்சு..,குடும்ப நலனுக்காக  கோவ்லுக்கு போய் பூஜை செய்து.., மறுபடியும் நைட்டுக்கு சமைச்சு..,ன்னு ஒரே மாதிரியான வாழ்க்கை!! சலிப்பா இருக்கு மாமி. வேலைக்கு போற பொண்ணுங்களைலாம் பார்த்தா பொறாமையாவும் ஏக்கமாவும் இருக்கு மாமி.

ஏண்டியம்மா? அவங்களை பார்த்து பொறமைப்படுறே?!

விதம் விதமா சேலை.., சம்பளம், மேக்கப், தன் சம்பள பணத்தை அப்படியே  பொறந்த வீட்டுக்கு குடுத்து உதவலாம். வீட்டு பிடுங்கள்ல  இருந்துகொஞ்ச நேரத்துக்கு எஸ்கேப்பாகலாம்.

ஆனா, பகட்டை மட்டும் பார்த்து ஏக்கப்படுறியே! நீ நாள் முழுக்க செய்யுற வேலையை காலைலயே முடிச்சு., வீட்டுக்காரர், பிள்ளைகளை ரெடி பண்ணி அனுப்பி.., வீட்டுல பெரியவங்க இருந்தா அவங்களுக்கு சமைச்சு வெச்சு.., சாப்பிட்டும், சாப்பிடாம ஆஃபீசுக்கு கிளம்பி...,  பஸ்சுல, ஷேர் ஆட்டோல ”இடி மன்னர்கள்”ட்ட இடி பட்டு...,

சின்ன தப்புக்கு கூட நீயெல்லாம் ஏன் வேலைக்கு வர்றே?! வீட்டுல உக்காந்து சட்டி பானை கழுவ வேண்டியதுதானே?!ன்னு மேலதிகாரிக்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு.., தனக்கு உடம்புக்கு முடியலைன்னு ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கிட்டு போனா..., ஹூம் எல்லாம் சம்பாதிக்கும் திமிருன்னு வீட்டுல இருக்குற பெருசுங்க முணுமுணுக்கும். புருசன் காரன் சரியா அமையலைன்னா கொஞ்சம் லேட்டா வந்தாலும், நல்லதா புடவை கட்டுனாலும் திட்டு விழும்.., தன்னோட சம்பாத்தியத்துல கொஞ்சத்தை தன் வீட்டுக்கு குடுக்க முடியாத சூழல்ல இன்னிக்கும் நிறைய பெண்கள் இருக்காங்கடியம்மா.

ஓ இவ்வளவு பிரச்சனை இருக்கா. 

உனக்கு உடம்புக்கு முடியலைன்னா வீட்டு வேலைகளை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்குறே. ஆனா, அவாலாம்  லீவு போட  முடியாம் ஆஃபீசுக்கு போகனும்.  முடியலைன்னா உனக்கொரு கஷ்டம்ண்ணா.., உன் ஆத்து மனுஷா இல்லாம அக்கம் பக்கத்துல நாங்க இருக்கோம். வீட்டைவிட்டு வெளியே போன பொண்ணுக்கு யார் துணைக்கு வருவாங்க? அப்படியே வர்றவால எத்தனை பேர் நல்லவாலா இருப்பா சொல்லு?!

அதுமட்டுமில்லாமா.., ஆத்துல இருக்குற பொம்மனாட்டிகளுக்குலாம் இப்போ வர்ற அரசாங்கள் கூட எவ்வளவு சலுகைகள் டருது. வாரத்துல ஒரு நாள் லீவ், சம்பளம் குடுக்கனும்லாம் கூட சொல்லுறங்க. இவ்வளவு ஏன் நம்மளை மாதிரியான பொம்மனாட்டிகளை மதிச்சு “HAPPY HOUSEWIFE DAY"லாம் ஒவ்வொரு வருசமும் நவம்பர் 2 நாள்  கொண்டாடுறாங்க.


அட, ஆமாம் மாமி இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.


ம் ம் ம் வேலைக்கு போறவாளோ?! இல்ல போகாதவாளோ?! பொம்மனாட்டியா பொறந்துட்டா ஒரே நேரத்துல பத்து அவதாரம் எடுக்கனும்டி புரிஞ்சுதா சுஜி?! அதனால், எல்லா பெரியவாளும் சொல்றாப்புல கடமையை செய்ய ஒரு போதும் சலிச்சுக்காதேடியம்மா.., இந்தா சூடா, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி குடிச்சுட்டு போய் தெம்பா வேலை செய்.


இப்போ மனசு தெளிஞ்சு போச்சு மாமி.., நான் வீட்டுக்கு போய் வேலைகளை மளமளன்னு முடிச்சுட்டு வரேன்.

டிஸ்கி: கடந்த வெள்ளிக்கிழமை WORLD HOUSE WIFE DAY வாம். அன்னிக்கே பதிவு போடனும்ன்னு நினச்சு டைப் பண்ணி வெச்சேன். ஆனா, பதிவிட முடியலை. இருந்தாலும், நாமளே சோம்பேறி. ஒரு போஸ்ட் டைப் பண்ண ஒரு வாரம் ஆகும். டைப் பண்ணது வேஸ்டா போயிடக்கூடாதேன்ற  சுயநலத்துல  கொஞ்சம் லேட்டாவாது பதிவு போடலாம்ன்னு போட்டுட்டேன்.


Saturday, January 14, 2012

போகி...,பழையன கழிதலும், புதியன புகுதலும்.....

                                

      பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.

      அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும். 
                                 


    பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
      பொட்டு பொடுசுங்க லாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்ன்னு பிளான் பண்ணுவாங்க.

         போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணுவேன்.
                  
                    3 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோ மறந்து காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஐயர் மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுக்கு அப்பாற்பட்ட கதை.
 

Wednesday, December 14, 2011

அன்பாலே அழகாகும் வீடு.........

                                                    
சிறு வீடுகளில் வாழ்வதென்பது சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றைப் பராமரிக்கும் செலவும்,நேரமும் குறைவு. ஆனால் வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று.

மேலும் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒதுக்குதல் என்பதும் முடியாத விஷயம். குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் உங்கள் சிறிய வீட்டை அழகாக்குவோம் வாருங்கள்.
வழியை அடைக்காதீர்கள்
 வீட்டில் நுழைந்தவுடன் உங்கள் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் அவை உங்கள் வழியை அடைக்காமலும், தேவையான நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். அமருவதற்கெனவும் பேசுவதற்கெனவும் தனி அறைகள் உள்ள பட்சத்தில் சோஃபா அங்கிருத்தல் நலம். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.

அலங்காரப் படங்களைக் குறையுங்கள்

                                             

பெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களை வாங்கி வந்து வீட்டை நிரப்பாதீர்கள். இந்தப் படங்களால் உங்கள் வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும் போது உங்கள் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும். தெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய் சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.

தகுந்த ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்  
                                          
அழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி (multi storage facility) கொண்ட ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.

கண்ணாடியின் மூலம் இடத்தை விரிவுபடுத்தலாம்.
                                             

வித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதிரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையிலிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.

வண்ணங்களில் விளையாடுங்கள் 
                                         
உங்கள் சுவர்களுக்கு பளிச்சென்ற, கண் கவரும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அத்துடன் சுவரின் நிறம் உங்கள் ஃபர்னிச்சர், கர்ட்டைன், தரை விரிப்பு மற்றும் கால் மிதியடிகள் இவற்றுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பது உங்கள் வீட்டை சிறியதாகக் காட்டாதிருக்கும். அதற்காக அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், ஒரே குடும்ப நிறத்தில் இருந்தால் நல்லது. அதற்காக அதிகமான கலர் கொடுத்து over buildup ஆக்க வேண்டாம். இந்த ஒரு வண்ணக் குறைபாட்டை சுவர்க் கடிகாரம், மலர் ஜாடி, டேபிள் மேட்டுகள் போன்ற சிறு பொருட்களில் நிற வித்தியாசத்தைக் கொடுத்து மாற்றலாம். நினைவில் கொள்ளுங்கள், வண்ணங்களுக்கு உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு.

லைட்டிங்கில் அடுத்த கவனம்
வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஆங்காங்கே இடைவெளிகளில் சிறிய லைட்டுகளை வடிவமைப்பதன் மூலம் வித்தியாச வெளிச்சம் கொடுத்து அழகாக்கலாம். பெரும்பாலும்  படிக்கும் அறையைத் தவிர மற்ற அறைகளில் டியூப் லைட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். இது உங்களின் அலர்ட்னஸைக் குறைத்து, உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும். வண்ண விளக்குகள், வீட்டில் மேலும் கீழுமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் இவற்றின் மூலம் உங்கள் வீடு நிச்சயம் மாறுபட்ட, சற்றே அகலமான தோற்றத்தைத் தரும்.
இரவு நேரத்திற்கு ஹாலில் ஒரு சிறிய மின் விளக்குடன், அரோமா மெழுகுவர்த்தியை உபயோகிக்கலாம். இது நண்பர்கள், உறவினர்களுடன் பேச நல்ல, ரம்மியமான சூழ்நிலையைக் கொடுப்பதுடன் உங்கள் மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தும். ஆனால், இந்த மெழுகுவர்த்தி நாளிதழ், கர்ட்டன்கள், சோஃபா ஆகியவற்றின் பக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். லைட்டுகள், மெழுகுவர்த்திக்குப் பதிலாக லேம்ப்களையும் பயன்படுத்தலாம்.

சமையலறை செட்டிங்

                                        
                     
இப்போது அதிகமான வீடுகளில் திறந்த சமயலறைகளே உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் உங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருப்பவருக்கு சமையல் வாசனையிலிருந்து கமறல் வரை போகும். எனவே அவசியம் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை உபயோகியுங்கள். சமையலறையில் பொருட்கள் வெளியில் இறைந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருட்களுக்கு ஏற்ற வகையில் நல்ல ஸ்டோரேஜ்களை உபயோகியுங்கள்.

சிறிய வீடுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்


               


* விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அழகு சாதனப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள்.
* பெரிய படங்கள் மாட்டுவதைத் தவிருங்கள். சிறு பொருட்களைக் கொண்டும் அழகாக்கலாம்.
* ஒரு அறையின் மணம் மறு அறையில் பரவாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* பளிச்சென்ற நிறத்தில் சுவர் வண்ணங்கள் இருக்கட்டும். ஆனால் கண்களைப் பறிக்கும் நிறத்திலல்ல.
* பொருட்களின் தேவையையும், வீட்டின் இடத்தையும் கருத்தில் கொண்டு பொருட்களின் இடத்தைத் தீர்மானியுங்கள்.
* மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்.
* இயற்கை ஒளி அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைகளையும் நெட் துணிகளில் வடிவமைக்கலாம்.
* ஜன்னல், டி.வி ஸ்டாண்ட், டெலிஃபோன் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வேண்டாத பொருட்களை வைத்து அலங்கோலமாக்காதீர்கள்.
               
* குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.
* ஒவ்வொரு பொருளுக்குமான இடத்தை முடிவு செய்து விட்டால் எதுவும் வெளியில் இல்லாமல் வீடு சுத்தமாகத் தெரியும். சுத்தமான வீடு நிச்சயம் பெரிதாகத் தெரியும்.
* வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.

 டிஸ்கி: என்னதான்  லட்சக்கணக்கில் போட்டு வீட்டை கட்டி, ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பிக்கிட்டு அவங்கவங்க ரூமில அடைஞ்சு  இருந்தால் வீடு கட்டியதன் பலனே இல்லாமல் போகும். அதனால், அன்பென்னும் நூலில் கணவன், மனைவி,பிள்ளைகள், பேரன் பேத்திகள், மருமகள், போன்ற முத்தான உறவுகளை கோர்த்து முத்துசரம் போல் குடும்பம் இருக்கனும்.

உங்கள் வீட்டை ஜொலிக்க வைக்கும் நட்சத்திரமாக நீங்கள் மின்ன வாழ்த்துகள்.
(இதெல்லாம் நம்ம சொந்த சரக்குன்னு நினைச்சுடாதீங்க. நமக்குலாம் அம்புட்டு அறிவு இல்லீங்கோ.  இங்க இருந்து சுட்டதுதான்.)