Showing posts with label தேசிங்குராஜா. Show all posts
Showing posts with label தேசிங்குராஜா. Show all posts

Wednesday, March 26, 2014

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை (ராஜகிரி கோட்டை) - மௌனச்சாட்சிகள்

போன வாரம் செஞ்சிக் கோட்டைக்கு வெளியே இருக்கிற இடங்களெல்லாம் பார்த்தோம்.  பார்க்காதவங்க ஒரு எட்டு இங்கிட்டு போய் பார்த்துட்டு வந்ததக்கப்புறம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்று முக்கியம் வாய்ந்த ராஜா கோட்டைக்குள் செல்லலாம். வாங்க!!

இதுதான் ராஜகிரி கோட்டைக்கு செல்லும் நுழைவாயில். இங்கே காலைலப் போறது நல்லது. ஏன்னா, பாறைகளா இருக்குறதுனால சூடு அதிகம் இருக்கும். அப்புறம் தண்ணீர் பாட்டில்கள் தேவையான அளவு எடுத்துக்கோங்க. ஏன்னா மலைமேலே ஏறும் போது உடம்பில் வியர்வை அதிகமாகி நீர் இழப்பு அதிகம் இருக்கும். அதனால தண்ணித் தாகம் நிறைய எடுக்கும். அதையும் பிளாஸ்டிக் கவர்லையோ இல்ல கேரி பேக்லயோ எடுத்து செல்லாதீங்க. குரங்குகள் அதிகம் இருப்பதால் கையில் இருப்பதை பறித்து கொண்டு சென்றுவிடும். முதுகில் மாட்டிக்கொள்ளும் டிராவல் பேக்ல எடுத்து செல்லுங்க. கையில் ஒரு குச்சியையும் வச்சுகோங்க. ஏன்னா அது குரங்குகளிடம் இருந்து ஒரு நம்மைப் பாதுகாத்துக்க உதவும். எல்லாம் எடுத்துக்கிட்டாச்சா!? போலாமா!?
 நாம இப்ப ஏறி செல்கிற பாதை நமக்கு முன்னே பல்வேறு அரசாங்கங்களையும், பல அரசர்களையும், பலப் போர்களையும் சந்தித்த இடங்களாகும். இந்தக் கோட்டையின் வரலாற்றைப் பார்த்தோம்னா கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 6ம் நூற்றாண்டு வரை சமண துறவிகளின் வாழ்விடமாகவே இருந்திருக்கு. அதற்கு ஆதாரமாக செஞ்சிக்குப் பக்கத்தில இருக்கிற சிருகடம்பூர் என்கிற ஊர்லயும், ராணி கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட சமணர் படுக்கையிலிருந்தும் அவங்க காலம் தெரியவந்தது. 

அதன் பிறகு பல்லவர்கள் ஆண்டதாக தெரிகிறது. இங்கிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் உள்ள கல்வெட்டுகளில் இந்த இடத்தை விசித்திரசித்தன் என்னும் மகேந்திரவர்மன் என்ற பல்லவமன்னன் கி பி 580-639 வரை இந்த இடத்தை ஆட்சி செய்தற்கான சான்றுகள் இருக்கிறதாம் மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் இருந்து கிடைத்த கல்வெட்டுகள் மூலம் செஞ்சி பல்லவர்களின் அரசாட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது.

இந்த இடம் மேலிருந்து பார்க்கும் நுழைவு வாயிலின் உள்பக்க தோற்றம். இனி இதன் வரலாற்றைப் பார்க்கலாம். பல்லவ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின் இது சோழர்கள் வசம் வந்தது. செஞ்சியின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஊரான ஆனான்ங்கூரில் உள்ள பாறை கல்வெட்டுகள் மூலம் இந்த இடத்தை முதலாம் ஆதித்தசோழன் என்னும் சோழமன்னன் கிபி 871-907 -ல் ஆண்டதாகவும், அதன்பின் இடண்டாம் ஆதித்தசோழனும் அதன் பின் அவர் சகோதரர் ராஜராஜ சோழனும் கிபி985-1013ல் சிங்கபுரநாடு என்னும்  இதன் அந்த நூற்றாண்டு பெயரில் வழங்கப்பட்டு சோழர்களின் ஆட்சியின் வசம் இருந்தது.  தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தததாகவும் சொல்லபடுகிறது. வாங்க! இன்னும் கொஞ்சம் மேலே ஏறி செல்லலாம். 
    
வெயில் வேற அதிகமா இருக்கு. நாம செல்லவேண்டிய தூரம் அதோ மலை மேலே தெரிகிற கோட்டைக்கு அதனால வேகமா போகலாம். முடியாதவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கூட வாங்க. சரி, அடுத்தது இந்த இடத்தை யார் ஆண்டாங்கன்னுப் பார்த்தால் சோழ மன்னர்களுக்கு பிறகு பாண்டிய மன்னர்கள் கி பி 1014-1190 ஆண்டுகளில் ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. இதற்கு ஆதாரமாக ஆங்கில ஆராய்ச்சியாளர் மேக்கன்ஸ் தன்னுடைய குறிப்புகளில் கர்நாடக ராஜாக்களின் சவிஸ்திர சரிதத்தில் குறிபிடபட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.

இந்த மாதிரி கோட்டைகளில் மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பு எழுதுறாங்களோ இல்லையோ நம்மாளுங்க ஏகப்பட்ட குறிப்புகளை இங்கிருக்கும் சுவர்களில் எழுதிடுறாங்க. இங்கே வரும் பொதுமக்களுக்கு சொல்வது என்னன்னா இதெல்லாம் அழிந்து கொண்டு இருக்கும் புராதான சின்னங்கள். நம்மால பாதுகாக்க முடியலைன்னாலும் பரவாயில்ல.அதை அலங்கோலப்படுத்தாமலாவது இருக்கணும்.

சரி, இனி வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், இப்படி பல படை எடுப்புகளை கண்ட செஞ்சி கிபி 11ம் நூற்றாண்டில் அனந்தகோன், என்னும் கோனார் பரம்பரை சிற்றரசர் தான் முதலில் இங்கு ஒரு கோட்டையை கட்டினாராம். பிறகு அனந்தகோன் 1190-1240 வரையிலும் அதன்பிறகு கிருஷ்ணா கோன் கி பி 1240-1270 வரையிலும் அதன்பிறகு கோனேரி கோன் கி பி 1270-1290 வரையிலும் அதன்பிறகு கோவிந்த கோன் கி பி 1290-1310 வரையிலும் அதன்பிறகு வலிய கோன் அல்லது புலிய கோன் கி பி 1310-1320 வரையிலும் இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர் என்றும் அதன்பிறகு கோபிலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320-1330 ல் ஆண்டதாதாகவும் ஆக மொத்தம் இவரது பரம்பரையினர் செஞ்சியை 300 வருடம் ஆண்டதாக சொல்லபடுகிறது.

சரி, வரலாற்றின் தொடர்ச்சியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி இங்கே ஒரு பீரங்கி இருக்கிறது பாருங்க. இது கோட்டையின் மையப்பகுதியில் பாதுக்காப்பு கருதி வைக்கப்பட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கிருந்து பார்க்கும் போது கீழ்பக்க நிலப்பரப்பு எல்லாம் இந்த இடத்துல இருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. அதனால இங்கிருந்து எதிரிகளை துல்லியமாகத் தாக்குவதற்கு பிரஞ்சுக்காரர்களால் இந்த பீரங்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்ல்கிறாங்க.
  
பீரங்கியைப் பார்த்து விட்டு மேலே செல்லலாம் வாங்க. இனி,  கோட்டையோட வரலாற்றை விட்ட இடத்திலிருந்து பார்க்கலாம். அனந்தகோன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அந்தகிரி எனவும் அழைக்கப்பட்டு, பிறகு காலப்போக்கில் ராஜகிரி என அழைக்கப்பட்டதாகவும், அவர்மகன் கிருஷணகோன் கட்டிய கோட்டை கிருஷ்ணகிரி என அழைக்கபடுவதாகவும் சொல்றாங்க. இவர்களது 300 வருஷ ஆட்சிக்குப் பின்னர்,  14ம் நூற்றாண்டில் இந்த கோட்டை விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ்வந்தது.  இதை கோபண்ணராயர் என்பவர் ஆட்சி செய்தார் .விஜயநகரத்து மன்னன் தெற்கில் பெரும்படையுடன் வந்து போர் புரிந்தபோது விஜயநகர பேரரசின் தளபதியாக இருந்தவர் இந்த கோபண்ணராயர்.  இவர் சிறப்பாக போர் புரிந்து, போரில் வெற்றிப் பெற உதவியதால் அவரையே செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி செய்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
   
வாங்க! இந்தவழியாதான் மலை உச்சில இருக்கிற கோட்டைக்கு செல்லனும்.  இதன் வராலாற்று பின்னணியை மலை ஏறிக்கொண்டே பேசலாம். அப்பதான் களைப்பு தெரியாது.

 கிபி 1509-1529 ம் ஆண்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சி இங்கே நடந்துக்கொண்டு இருந்த சமயம்...,  அவர் கிரிஷ்ணப்ப நாயக்கரை செஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்யுமாறு ஆணை பிறாப்பித்தாராம். இந்த நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் தான் கருங்கற்களால் ஆன நீண்ட வலிமை மிக்க கோட்டைகளையும், கற்சுவர்களையும் கீழ்பகுதியில் கருங்கற்களையும், மேல்பக்கம் செங்கல்களையும் கொண்ட வேலைப்பாடுடைய கோவில்களையும் கட்டினர்.  நாயக்கர்களின் வம்சம் இவர் காலத்தில் தான் கல்யாணமஹால் உடற்பயிற்சி கூடம் ,நெற்களஞ்சியம் அரண்மனைகள் எண்ணைக்கிணறு, நெய் கிணறு முதலியவை கட்டப்பட்டது.  இந்தக் கோட்டையை நூறாண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தனராம்.
      
நாமப் பயணம் செய்த வழியை இங்கிருந்துத் திரும்பிப் பார்க்கும்போது அழகான கல் மண்டபமாக தெரிகிறது.  வெயிலில் களைத்து வரும்போது இது போன்ற மண்டபங்களில் ஓய்வு எடுத்துகொண்டு செல்ல, முன் கூட்டியே யோசனை செய்து கட்டி இருக்காங்க. அதனால, நம் களைப்பு போக, நாமும் கொஞ்சம் ஓய்வு எடுத்துகொண்டு இதன் வரலாற்றை திரும்பி பாப்போம். 

நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்கர், மதுரை நாயக்கர் ,செஞ்சி நாயக்க மன்னர்களுக்குள் ஒற்றுமை இல்லாதாதால், அவங்களுக்குள் உட்பூசல், கலவரம்லாம் நடந்தன. இந்தச் சூழ்நிலையை  பயன்படுத்திக் கொண்ட முகமதிய வம்சத்தின் பிஜப்பூர் சுல்தான்கள் 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செஞ்சியின் மீது படையெடுத்தனர்.  அதில் கோல்கொண்டா படைத்தளபதியான மிர்ஜில்லா என்பவர் கிஷ்ணப்ப நாயக்கரை தோற்கடித்து, செஞ்சியை பிஜபூர் ராஜ்யத்துடன் இணைத்துக்கொண்டார். இவர்களுடையக் காலத்தில் கோயில்களையும், சிற்பங்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அந்த சிதிலமடைந்துள்ள கோயில்களையும், சிற்பங்களையும் நாம மேலே செல்லும் போதுப் பார்க்கலாம்.
      
அதோ உயரத்தில் தெரியும் அந்தக் கோட்டைதான் நாம செல்லவேண்டிய இடம். இந்த பயணப் பாதை எத்தனை போர்கள்!? எத்தனை அழிவுகள்!? எத்தனை உயிர் கொலைகள்!? எவ்வளவு ஆடம்பர அணிவகுப்புகள்லாம் சந்தித்திருக்கும்!? ஆனால், இன்று எல்லாமே மறைந்து அவையாவையும் தன்னுள் அடக்கி, அடங்கி, ரொம்பவும் ஆடாதீங்கப்பா! அப்புறம் என்னை மாதிரி கேக்க நாதியில்லாம அழிஞ்சுப் போய்டுவீங்கன்னு சொல்லாம சொல்லி நம்முன் மௌனச்ச்சாட்சியாக நீண்ட நடைபாதையாக நமக்கு வழிக்காட்டி செல்கிறது. அதில்தான் நாம், நம் தவறுகளை உணராமல் இன்னைக்குப் பயணிக்கிறோம்...,

இனிக் கோட்டையின் வரலாற்றைப் பாப்போம். முகம்மதியரின் ஆட்சியின் கீழ் கி பி 1649 முதல் 1677 வரை ஆண்டனர். அதன் பின்னர் முகம்மதியரின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்திய வரலாற்றில் அழியா இடம் பிடித்த மராட்டிய மன்னன் வீர சிவாஜி 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமதியர்களை வென்று செஞ்சியை கைப்பற்றினார் பின்னர் தன்னுடைய சகோதரர் சம்பாஜியை  கிபி 1690 ல் செஞ்சியில் ஆட்சி செய்யும்படி நியமித்தார் அதன்பிறகு சம்பாஜியினுடைய தம்பி ராஜாராம் என்பவரை ஆட்சி செய்யும்படி சாம்பாஜி மகராஜா கூறினார்.

அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆண்டு 1687 ஆகும்.  அந்த சமயத்தில் ஔரங்கசீப், சல்பீர்கான்ன்ற தளபதி மூலம் பெரும்படையை அனுப்பி செஞ்சியை முற்றுகை இட்டான். அப்பொழுதுகூட அவனால் மராட்டியர்களைத் தோற்கடிக்க முடியாததால் ஔரங்கசீப் படைகள் 7 ஆண்டுகளாகக் கோட்டையை முற்றுகையிட்டு, அங்கே உணவு பஞ்சம் ஏற்படுத்தி, அதன்பிறகு கோட்டையை பிடித்தனர். ஒட்டுமொத்தமாக மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலம் கிபி 1677 லிருந்து 1697  வரை இருந்தது.
இங்க ஒரு அழகான கோவில் இருக்குவாங்க அருகில் சென்று பார்க்கலாம் இது பாலரங்கநாதர் ஆலயம். நாமப் போறப் பாதையில மலை அடிவாரத்தில் பாதையின் வடக்கு பக்கத்தில்,  கிழக்கு நோக்கியபடி சிதைந்த நிலையில் காணப்படுவதுதான் இந்த பாலரங்கநாதர் ஆலயம் கீழ்பக்கம் கருங்கற்களாலும், மேல்பக்கம் செங்கற்களாலும் கட்டப்பட்டு ரொம்ப அழகா கலைநயத்துடன் இருக்கு. ஆனா இதில் பூஜையோ புனஷ்காரமோ கிடையாது. குரங்குகளின் வசிப்பிடமாக அழிவுற்ற நிலையில் இருக்கு இக்கோவில்.

இங்கத் தெரிகிற இந்த மண்டபம் இது பாலரங்கநாதர் சன்னதிக்கு நேரே இருக்கு.  அதன் முன்னே ஒரு தெப்பக்குளமும், படிக்கட்டுகளுடன் இருக்கு. முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த குளத்தில்தான் பழையக்காலத்தில் பாலரங்கநாத சுவாமியின் உற்சவ மூர்த்தி சிலை சிங்கபுரம் என்னும் ஊரில் இருந்து கொண்டுவந்து, இங்கத் தெரிகிற குளக்கரை மண்டபத்தில் வைத்துதான் அலங்காரம் செய்து, தெப்பத்தில் வைத்து விழா எடுத்து ரொம்ப கோலாகாலமா கொண்டாடுவார்க.ளாம் அதனால இந்த மண்டபத்திற்கு அரங்கநாதர் மண்டபம்ன்னு பெயர் வந்ததுன்னு சொல்றாங்க .. அதெல்லாம் இப்ப அழிஞ்ச நிலையில இருக்கு.
  
குளத்தையும், மண்டபத்தையும் பார்த்தாச்சு.  இனி, மேலே போகலாம் வாங்க! இப்ப இந்தக் கோட்டையின் வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கிறதுக்கு முன் இங்கே இருக்கும் ஒரு கோவிலைப் பத்தி தெரிந்துகொள்வோம்.

இதுதான் கமலகன்னியம்மன் கோவில். இந்த அம்மன் கோவிலை துர்காதேவி கோவில் ன்னும் இங்கே உள்ளவங்க சொல்றாங்க. இந்த அம்மனை இன்றும் இவ்வூரின் தேவதையாக வணங்கி வருகின்றனர்.  இந்தக் கோவிலுக்கு முன்னால ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு ஒரே பாறையில் ஒரு பலிபீடம் செதுக்கப்பட்டுள்ளது.  பழையக் காலத்தில் இங்கே திருவிழாக்கள் விசேஷமாக கொண்டப்படுமாம்.  அப்ப இந்த பலிபீடத்தில் தான் அம்மனுக்கு எருமைகடா பலிகொடுப்பாங்களாம். இந்த கோவிலுக்கு பின்னால் இருக்கிற பாறையில் பல வண்ணங்களில் 17 ம் நூற்றாண்டில் உள்ள நாயக்கர் கால ஓவியம்  வரையப்பட்டு இருக்கு.  இதில் திருமால், பூதேவி ஸ்ரீ தேவியோடு காட்சி கொடுக்கிறார்.

இனி, இதனை அடுத்து ஒரு  பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதனைப் பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவங்க சொல்லுங்க. நாங்க தெரிஞ்சுக்குறோம்!

சரி, வாங்க நாம மேலே செல்லலாம். இன்னும் நாம போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு. மேலும், இங்க மலை மேலிருந்து 4 மணிக்குள்ளே திரும்பி மலையடிவாரத்திற்கு வந்துடனுமாம். அதனால சீக்கிரம் மேல கோட்டைக்கு போகலாம். வாங்க!

நாம பாலரங்கநாதர் ஆலயமும், கமலகன்னியம்மன் கோவிலையும் பார்த்ததால, நாமக் கோட்டையின் வரலாற்றை மராட்டிய மன்னர்களின் அரசாட்சி வரை பார்த்தோம்.  மாராட்டியர்களின் ஆட்சி வீழ்ச்சியுறத் தொடங்கியபோது மொஹலாய தளபதி ஜோல்பீர்கான் 1697-98 ல் மிகவும் போராடி இந்த கோட்டையை மீட்டார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது ராஜபுத்திர பண்டேல்கணட் தளபதியான சொருப்சிங்.  அதன்பிறகு இந்தக் கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது அப்பொழுது முகலாய மன்னராக இருந்தவர் ஒவ்ரங்கசீப்.  இவர்1707 ல் இறந்தபிறகு அவரது இரண்டாவது மகன் ஷாஆலம் பதவி ஏற்றார். அவர் சததுல்லாகான் என்பவரை ஆற்காடு நவாப்  ஆக நியமித்து பண்டேல்கண்டில் படைத்தளபதியாக இருந்த சொருப்சிங்கிடம் செஞ்சியை ஆளும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இங்கிருந்து வரிவசூல் செய்து ஆட்சி நடத்த நிபந்தனை விதித்தார். இதன் மேற்பார்வையாளராக சததுல்லாகான் நியமிக்கபட்டார் சொருப்சிங்கும் சததுல்லாகானுக்கு திரை செலுத்தி ஆட்சி நடத்தினார். இந்த சொருப்சிங்கின் மகன்தான் செஞ்சியின் வீரத்திருமகன் தேசிங்குராஜா இந்தக்கதையை விரிவாக சொல்கிறேன். கேட்டுகோங்க...
   

 பிரமிக்கவைக்கும் விதமாக இந்த கல் கோட்டைகள் இருக்கு கவனமா நடந்து மேல் நோக்கி செல்வோம். இனி இந்த கோட்டையின் வீர வரலாறான ராஜா தேசிங்கு ஆட்சிப் புரிந்தப் காலத்தைப் பார்க்கலாம்.

மராட்டிய மன்னர் ராஜாராம் 7 ஆண்டு முற்றுகைக்கு பின் மாறுவேடத்தில் கோட்டையை விட்டு வெளியேறிய பின் கோட்டை முகலாயர் வசமானது. அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பண்டேல்கண்ட் தளபதியாக இருந்து செஞ்சியின் வெற்றிக்காக போராடிய சொருப்சிங் என்னும் ராஜபுத்திர வீரர் அவரால்தான் வெற்றி கிடைத்தது என்பதால் அவரையே இந்த கோட்டைக்கு ராஜாவாக நியமிக்கபட்டார். அவருடைய மனைவி ரமாபாய். இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு தேஜ் (தேசிங்கு ராஜா ) என பெயர் வைத்தனர். தேஜ் என்றால் ஒளி பொருந்தியவன் என்று அர்த்தம். இந்த சமயத்தில்தான் நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது போல ஔரங்கசீப் மறைவுக்குப்பின் அவரது இரண்டாம் மகன் ஷாஆலம் டெல்லியின் பாதுஷாவாக முடிசூட்டி கொண்டார். அப்பொழுது அவருக்கு குதிரை ஒன்று பரிசாக கிடைத்தது.  அதன் பெயர் நீலவேணி. அந்த குதிரை மிகவும் வலிமையாக உயரமாக இருந்தது அதை யாராலும் அடக்க முடியவில்லை.    

 டெல்லி பாதுஷா ஷாஆலம் குதிரையை அடக்க நாடு முழுவதும் உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பினார். அதில் செஞ்சியில் கப்பம் கட்டும் சொருப்சிங்கும் ஒருவர். அவரும் டெல்லி சென்று குதிரையை அடக்க முயன்று தோல்வியைத் தழுவினார். அதனால் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன தந்தை டெல்லி சிறையில் இருப்பது 3 ஆண்டுகள் கழித்துதான் ராஜா தேசிங்குவிற்கு தெரியவந்தது.

அப்பொழுது தேசிங்குவிற்கு 15 வயதுதான் ஆயிற்று. அப்பொழுது தாயிடம் அனுமதி வாங்கிக் கொண்டு தன் உயிர் தோழன் மகமதுகானையும் அழைத்துக்கொண்டு குதிரையில் டெல்லி புறபட்டார். டெல்லி சென்ற தேசிங்குவை பார்த்த ஷாஆலம் நீ சிறுவனாக இருப்பதால் உன்னால் குதிரையை அடக்கி வெற்றி கொள்ள முடியாது. உன் நாடு நோக்கி செல் என எச்சரித்தார்.  எதற்கும் அஞ்சாத தேசிங்கு குதிரையை அடக்குவதில் தீவிரமாக இருந்ததால் போட்டிக்கு ஏற்பாடு செய்தார் டில்லி பாதுஷா.

நம் தமிழகத்து இளம்சிங்கம் குதிரையை ஆய்வு செய்து தன் நிழலை கண்டுதான் குதிரை மிரள்கிறது என தெரிந்துக் கொண்டு, தேசிங்கு தன் நிழல் கீழே விழாதவாறு எதிர் திசையில் குதிரையை ஒட்டினார். மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, வாயில் நுரைத் தள்ளிக் கீழே விழுந்து விட்டது அந்தக் குதிரை.

நாம் பேசிக்கொண்டே கோட்டையின் முக்கால் பாகத்திற்கு வந்துவிட்டோம்.  இனி கோட்டையின் உச்சிப் பகுதிக்கு தொடர்ந்து செல்லலாம்.  கூடவே தேசிங்குவின் வரலாற்றையும் தொடரலாம்....,

குதிரையை அடக்கிய தேசிங்குவின் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ராஜா ஜெயசிங்கு என பட்டமும் கொடுத்து, அவனது தந்தை சொருப்சிங்கையும் சிறையிலிருந்து விடுவித்தார் டெல்லி பாதுஷா. பின்னர் அந்தக் குதிரையையும் அவருக்கேப் பரிசாகக் கொடுத்து,  இனி செஞ்சி அரசு டெல்லிக்கு கப்பம் கட்டத் தேவை இல்லை எனவும் உத்தரவு பிரபித்தார்.  பாதுஷாவின் படை தளபதியாக இருந்த பீம்சிங் என்பவர் தேசிங்குவின் வீரத்தை பாராட்டி அவரது மகள் ராணிபாயை திருமணம் செய்து கொடுத்தார். தன் தந்தை, மனைவி, நண்பனுடன் தான் வெற்றிப் பெற்ற குதிரையோடு நாடு திரும்பினார் ராஜா தேசிங்கு.  

இது கோட்டைக்கு செல்லும் வழிகளில் ஒன்று.... தேசிங்குவின் கதையை பார்க்கலாம்...,

இந்த வீரக் கதை இங்கே நாட்டுப்புற பாடலாக படிக்கபடுகிறது. அவங்க மூலமாதான் இந்த கதைகள் தெரிந்துக் கொண்டேன்.அந்த நாட்டுப்புற பாடல்கலை வேற ஒரு பதிவில் பார்க்கலாம். சரி, நாம மீண்டும் தேசிங்குவின் வரலாற்றுக்கு வருவோம். இவங்க நாடு திரும்பின சில நாட்களிலே 1711 ம் ஆண்டு ஷாஆலம் இறந்துவிட, அவரது 4 மகன்களில் ஒருவரான ஜகந்தர் மற்ற மூவரையும் வென்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றினார். ஜகந்தரை தொடர்ந்து டெல்லியில் ஆட்சி மாற்றங்கள் நடந்துகிட்டே இருந்தது. இந்த நிலமையில்தான் இங்கே சொருப்சிங் மரணமடைந்தார். இந்த சூழ்நிலையில் 1717 ம் ஆண்டு ராஜாதேசிங்கு தனக்குதானே முடி சூட்டி கொண்டார். டெல்லியின் பிரதிநிதியாக தென் பகுதியை ஆண்டுவந்த ஆற்காடு நவாப் சதத்துல்லாகானுக்கு தேசிங்கு அரசனது பிடிக்கவில்லை அதுனால ஷாஆலம் தேசிங்குவின் வீரத்தை மெச்சி வழங்கிய கப்பம் கட்ட வேண்டியதில்லை என்கிற சலுகையையும் செல்லாது எனக்கூறி மொத்தமாக அந்தக் காலத்தினுடைய பணம் 70 லட்சத்தைக் கட்டச் சொன்னான்.  அடிமைத்தனத்தைப் பிடிக்காத தேசிங்கு கப்பம் கட்டுவதை மறுத்ததன் விளைவு. போர்!!!

அந்தச் சமயத்தில தேசிங்குவின் நண்பன் மகமதுகானுக்கு வழுதாவூரில் திருமணம் நடந்துக் கொண்டு இருந்தது. விஷயம் கேள்விப்பட்டவுடன் கல்யாணத்தை நிறுத்திவிட்டு போரில் இறங்கினான் மகமதுகான். வெறும் 350 குதிரைப்படைகளும், 500 காலாட்படைகளுடன் போருக்கு கிளம்பினான் மகமதுகான். ஆனால் நவாபிடம் 10,000 காலாட்படை, 8000 குதிரைப்படை மற்றும் பீரங்கிப்படைகள் இருந்தது. மகமதுகான் இவங்களை எதிர்த்து ஆவேசமாகப் போரிட்டுப் பெரிய அழிவை எற்படுதினான். அந்தச் சமயத்தில் நவாபினுடைய ஆட்கள் மறைந்து இருந்து மகமதுகானை தாக்கி,  வீரமரணம் அடைய வைத்தனர் என்று கேள்விப்பட்ட தேசிங்கு ராஜா தன் நண்பனின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போருக்குப் கிளம்பினான்.

தேசிங்குவின் வருகையைத் தடைச் செய்ய மலையனூர், மேலச்சேரி, தேவனூர் இந்த இடங்களில் உள்ள ஏரிகளை எல்லாம் உடைத்து விட்டு ஊரையே வெள்ளக்காடாக ஆக்கினார்கள் ஆற்காடு நவாப் படையினர்.  தேசிங்குவின் நீலவேணி குதிரை கலங்காது தண்ணீரில் நீந்தி எதிரியை நோக்கி சென்றது. அப்பொழுது தண்ணீருக்கு அடியில் நீலவேணியின் கால்களை வெட்டி சாயத்தனர் நாவாபினுடைய படைகள். தனியாளாக நின்ற தேசிங்கு, தன் வாள்வீச்சிமேல் நம்பிக்கைக் கொண்டு கடலி என்னும் இடத்தில எதிரிப்படையை தனியாளாய் எதிரிகொண்டு நாலாயிரம் குதிரை படையை வெட்டி சாயத்தான்.  தேசிங்குவின் வீரத்திற்கு முன்னால் ஈடுக் கொடுக்க முடியாத நவாப் படைகள் பின் வாங்கினர்.

நவாப் படையில் உள்ள சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து பின்பக்கமாக துப்பாக்கியால் சுடப்பட்டான்.   முதுகில் காயம் பட்டு இறக்க விரும்பாத தேசிங்கு, துப்பாக்கி குண்டில் அடிப்பட்டு விழும்போது  தன் வாளையே ஆகாயத்தில் எரிந்து மார்பில் வாங்கி வீர மரணம் அடைந்தான் ராஜாதேசிங்கு.   
   
அதோ தூரத்தில் தெரிவது இழுவை பாலம். எதிரிகள் உள் நுழையாதவாறு இதை இழுத்து கொள்ளவும் முடியும்.  நாம இப்ப இந்த இழுவை பாலத்தை தாண்டிதான் மலை உச்சிக்கு போகணும். ..சரி இனி நாம தேசிங்குவின் கதையின் இறுதி பகுதியை பார்க்கலாம் 

தேசிங்கு இறந்தபோது அவனுக்கு பதினெட்டே வயசு. வெறும் பத்து மாதங்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்தான்.  தேசிங்கு இறந்த பின், அவன் உடலை செஞ்சிக்கு கொண்டு வந்து எரியூட்டினானாம் நவாப். அதே நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறி இறந்துப்போனாள் ராஜபுத்திர இளம் ராணி ராணிபாய். செஞ்சி மக்கள் நவாபின் மேல் கடுங்கோபம் கொண்டனர். செஞ்சி மக்களை சமாதானப்படுத்த ஆற்காடு பக்கத்தில் உள்ள ஊருக்கு ராணிபேட்டை என்று  பெயர் வைத்தார். தேசிங்கு வீரமரணம் அடைந்த நீலம்பூண்டி என்னும் கடலியில் ராஜாதேசிங்குவும் அவன் மனைவி ராணி பாயும் குதிரையில் இருப்பது போல நினைவு சின்னம் எழுப்பினார் ஆற்காடு நவாப்.  அந்த இடம் இப்பொழுது வெறும் சமாதி போல் காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பின் பிறிதொரு சமயம் சென்று பார்க்கலாம்.

இப்படி தேசிங்குவின் கதை முடிந்தது.  இன்னும் இந்தக்கதைகள் நாட்டுப்புறப்பாடலாக செவிவழி கதையாக இன்னும் பாடப்பட்டு வருகின்றன. நாம மலையில் இருந்து இறங்கி வரும்போது அடுத்த பதிவில் தேசிங்கு ராஜன் எரியூட்ட பட்டு, கூடவே  ராணிபாய்  உடன்கட்டை ஏறி தீக்குளித்த இடம் இதெல்லாம் பார்க்கலாம்.. ஒரு வழியாக தேசிங்குவினுடைய சகாப்தம் செஞ்சியில் முடிந்தது.  அதன் பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கம் தொடங்கியது ..அந்த வரலாற்று நிகழ்வுகளை அடுத்தவாரம் பதிவில் பார்க்கலாம் .. ..

Wednesday, March 12, 2014

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை - மௌனச்சாட்சிகள்

இந்த வாரம் மௌனசாட்சிகளில் நாமப் பார்க்கப் போறது காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை. ஏன்னா, அந்தக் கோட்டைக்குச் செல்லும்போது தெரியும், அது முஸ்லிம் மன்னர்களாலும், பிரஞ்சுகாரர்களாலும் சிதைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களாலும் கைப்பற்றப்பட்டு, பின்னர் கவனிப்பாரற்று, இன்றுவரை பல போர்கள், பல அழிவுகளைக் கடந்துக் கம்பீரமாகக் காட்சித் தருவதால்தான் இக்கோட்டைக்கு காலத்தால் அழியாத செஞ்சி கோட்டைன்னு சொன்னா ரொம்ப பொருத்தமா இருக்கும்.

நாங்கப் போன போது கோட்டைக்குள் நிறைய அயல்நாட்டவர்கள் கூட்டமாக காணப்பட்டனர்.  அப்பதான், அப்பு ஒரு கேள்வி கேட்டான் எதுக்காக இவங்க இந்த கோட்டைக்கு வந்து இருக்காங்கன்னு!!?? நானும் புத்திசாலித்தனமா சொல்றதா நினைச்சு..., அது அவங்க போன ஜென்மத்தில இந்தக் கோட்டையை ஆண்டவங்களா இருக்கலாம்! பழைய ஜென்ம தொடர்புகள்னால இங்கே வந்து இருப்பாங்கன்னு சொன்னேன். மீண்டும் அவன் கேட்டான், அப்ப நாம எதற்கு இங்கே வந்து இருகிறோம்!? பழைய ஜென்மத்தில அவங்களால ஓட ஓட விரட்டப்பட்ட இந்த கோட்டைலிருந்தவங்களா நாம!? நமக்கும் அப்ப பூர்வ ஜென்ம நினைவுனால தான் இங்கே வந்து இருக்கிறோமானு கேட்க, நான் இப்ப உன்னை ஓட ஓட விரட்ட போறேண்டான்னு சொன்னவுடனே அவன் அங்கிருந்து எஸ்கேப்.  வாங்க! இனி, நாம கோட்டைக்குள் செல்லலாம்.

அதற்கு, முன்னே இந்த கோட்டையைப் பத்திக் கொஞ்சம் பார்ப்போம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பஸ் ஸ்டான்ட்ல இருந்து கொஞ்ச தொலைவில் இருக்கு. சென்னையில் இருந்து 150கிமீ தொலைவிலும், விழுப்புரதிலிருந்து வடக்கு பக்கமாக சுமார் 35 கி மீ தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து மேற்கு பக்கமாக சுமார் 27 கி மீ தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு மார்க்கமாக 38 கிமீ தொலைவிலும் இருக்கு இந்த செஞ்சி கோட்டை.

புவியல் அமைப்புபடி இதன் பாறைகள் எல்லாம் வித்தியாசமான அமைப்புடன் தனித்தனி உருண்டை உருண்டை கற்களாக இருக்கு.  ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மூலிகைகளுக்காக பர்வதமலையை இலங்கைக்குக் கொண்டு செல்லும்போது அதில் இருந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும் காலபோக்கில் மாறி செஞ்சி எனச் சொல்லப்பட்டதாகவும் சில செவி வழி தகவல்கள் உண்டு.

இது கோட்டைக்குள் செல்லும் நுழைவாயில். இங்கே நுழைவுக் கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கபடுகிறது. மேலும், இந்தக் கோட்டை ராஜகிரி கோட்டை அல்லது ராஜகோட்டைன்னும் சொல்கிறாங்க. இப்ப செஞ்சியின் பெயர்காரணம் நிறைய சொல்றாங்க. இந்த ராஜகோட்டைல சப்தகன்னியரின் கோவில் சிதிலமடைந்து இருக்கு. இந்த கன்னிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மூத்த கன்னியின்பெயர் செஞ்சியம்மன் என்றும் அதைக்கொண்டே செஞ்சி எனவும் அழைக்கப்பட்டதாகவும், அதே சமயம் கிராமங்களில் ஒரு கதை வழக்கத்தில் இருந்தது ஏழு கன்னிப்பெண்கள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் அவர்களின் கற்புக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் தகாரவீரப்பன் பாதுகாத்தான் என்றும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி, ஏழு கன்னியரும் மரணமடைந்ததாகவும் அந்த ஏழு பெயரில் ஒருவரான செஞ்சியம்மன் என்றும்  அவள் பெயராலே இந்த இடம் செஞ்சின்னு சொல்லப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

இது பாதுகாப்பு மேடை அதை பீரங்கி வைத்து சுழலும் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி உள்ளனர். இந்த கோட்டை கி.பி 985-1013 ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தசோழன் ஆட்சி செய்ததாகவும், அப்பொழுது இது சிங்கபுர நாடு என்று சொல்லப்பட்டதாம். பிரிட்டிஷ் சரித்திர வல்லுரான மேக்கன்ஸ் கூட தன்னுடைய கர்நாடக ராஜாக்கள் சவிஸ்ர சரிதம் என்னும் குறிப்பில் இது கிருஷ்ணபுரம் என அழைக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
   
இது, நுழைவாயிலைத் தாண்டி உள்ளே வந்தவுடன், அங்கிருந்துப் பார்க்கும் நுழைவாயிலின் உள்பக்கத் தோற்றம்.  இனி, கோட்டைக்குள்ளேப் போகும் முன்னே செஞ்சி பெயர் காரணத்திற்கான மற்றொரு காரணத்தை நாம கட்டாயம் தெரிந்தே ஆகவேண்டும். இந்திய தொல்பொருள் ஆய்வு துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற மணி என்ற பொறியாளரின் புத்தகத்தில் சொல்லியுள்ள பெயர் காரணத்தை தெரிந்து கொள்வோம். மேலும் பல வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது என்னன்னா செஞ்சிக்கு வடக்கு பக்கம் சிங்கபுரம் என்னும் ஊர் இருக்கிறது.  இது பல்லவ மன்னன் சிம்மவர்மன் இல்ல நரசிம்மவிஷ்ணு (ஏன்னா இங்கே நரசிம்மரின் பல உருவங்கள் நிறைய இடங்களில் பொறிக்கபட்டுள்ளன) பெயரையே கொண்டு உருவானது.  இந்த சிங்கபுரம் இதை பற்றிய சோழர்கால முதலாம் ஆதித்தசோழன் காலத்தைய (கி பி 871-907) கல்வெட்டானது இந்த கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஊரான ஆனான்கூரில் கண்டெடுக்கப்பட்டதாம்.

 அதில் கூட இந்த இடத்தை சிங்கபுர நாடு என குறிக்கபட்டுள்ளதாம் .  அந்த சிங்கவரம் தான் காலபோக்கில் செஞ்சி என உருமாறிட்டதாக சொல்றாங்க.  பிஜப்பூர் சுல்தான்கள் செஞ்சியை பாதுஷாபாத் ன்னு அழைத்தார்கள். மராட்டிய மன்னர்களோ இதை சுந்திரி ன்னும் சிண்டி ன்னும் அழைதர்கள். அதன் பிறகு 1698 ல ஆண்ட முகலாய மன்னர்கள் இதை நசரத் கட்டா என்றும் அழைத்தார்கள். முகலாயருக்குப் பிறகு வந்த தொடக்ககால ஆங்கிலேயர்கள் செஞ்சே என்று அழைத்தார்கள். அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுகாரர்கள் ஜிஞ்சி என அழைத்தார்கள்.  

மேலும், இதனைப் பற்றி மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. பிரிட்டிஷ்காரங்க  இதை  "கிழக்கின் ட்ரோய்"ன்னு சொன்னாங்க..

சரி, வாங்க நம் பயணத்தைத் தொடரலாம்..., இது இரண்டாம் கட்ட நுழைவாயில்.  பக்கத்தில் தெரிவது கோட்டையின் மொஹலாய கட்டிட கலை அமைப்பில் கட்டப்பட்ட கல்யாணமஹால். 

 தூரத்தில் இருந்துப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இந்திய இஸ்லாமிய கட்டமைப்பில் உச்சில பிரமீடு போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடம் இந்த கல்யாணமஹால். இதில் பெண்கள் தங்குவதற்கு அறைகளும், குளியல் குளங்களும், சதுரவடிவ அமைப்பில் எட்டு அடுக்குகள் கொண்டதா இருக்கு.  இதுல அவங்க கட்டிடக்கலையின் வியப்புகள் என்னனா,  ஒவ்வொரு அறைகளும் மூன்று சதுரமீட்டர் அளவும்,  வளைந்து செல்கிற சாரளங்களும், ஒவ்வொரு சாரளங்களின் வழியே இருபக்கங்களிலும் மேலே செல்லவும், கீழே இறங்கவும் வழிப்பாதைகள் அழகாக் கட்டி இருக்கிறாங்க.  இந்த அறைகளின் உட்புற சுவரில் சுடுமண் குழாய்கள் அமைச்சு அதுவழியா தண்ணீர் வரும்படி அந்தக் காலத்துலயே கட்டி இருக்கிறாங்க.  இப்ப இந்த கல்யாணமஹால் பராமரிப்பு பணிகளுக்காக மூடியே வச்சுருக்கிறாங்க. உள்ளே செல்ல அனுமதி இல்ல. அதனால, வாங்க அடுத்த இடத்திற்கு போகலாம்...,


இந்த கல்யாணமஹாலை ராணி மஹால்ன்னு கூட சொல்வாங்க. அதனை ஒட்டி கிழக்கு பக்கமாக அமைந்த நிலையில் சுண்ணாம்பும், செங்கல் கலவையுமா சேர்ந்த அமைப்பில் ஒரு கட்டிடம் இருக்கு. இதுக்கு பேரு மகமத்கான் மசூதி.


யார் இந்த மகமத்கான்ன்னு பார்த்தோம்னா, முஹலாயர்கள் செஞ்சி கோட்டையை கைப்பற்றிய போது அவர்களுடைய நம்பிக்கையான தளபதிகளில் ஒருவரான ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சொருப் சிங் என்பவர் டில்லி பேரரசால் செஞ்சி மன்னராக நியமிக்கப்பட்டார் அவருடைய மகன்தான் தேசிங்குராஜா. 

செஞ்சி கோட்டைய ஆண்ட தேசிங்குராஜாவினுடைய நண்பன்தான் இந்த மகமத்கான். தனித்தே வளரும் தன்மகன் தேசிங்குவிற்கு ஒரு நல்ல நண்பன் அவசியம் என்றுணர்ந்த சொருப் சிங் தன மகனின் அறிவாற்றலுக்கு இணையான வழுவாதவூர் பாளையகாரருடைய மகன் மகமத்கானை தேசிங்குடனே வளர்த்து வந்தார். இருவரும் எல்லா பயிற்சிகளும் கற்றுத் தேர்ந்து வீரர்கள் ஆயினர்.

எல்லா விஷயங்களிலும் தமக்கு உறுதுணையாக இருந்த தன ஆருயிர் நண்பனுக்காக அவனுடைய மத வழிப்பாட்டிற்காக தேசிங்கால் கட்டப்பட்டதே இந்த மகமத்கான் மசூதி. இந்த மசூதி இடிந்த நிலையில் இருக்கிறது. இதுவும் பராமரிப்புப் பணிகளுக்காகப் பூட்டியே இருக்கு வாங்க அடுத்த இடத்திற்குப் போகலாம்.

இரண்டாம் நிலை நுழைவாயிலுக்கும், கல்யாணமஹாலுக்கும் இடையே கருங்கற்களால் ஆன இந்த சதுரவடிவ கற்களால் அமைக்கப்பட்ட பெரிய மேடை போல இருக்கு. இது என்னனு சரியா தெரியல!! தெரிஞ்சவங்க சொல்லலாம்.


இது என்னன்னா இங்கே ஒரு அரண்மனை இருந்ததாகவும், அது முற்றிலும் அழிந்து விட்டதாகவும் சொல்லபடுகிறது. அதன் பின்பக்கம் பணியாளர்கள் தங்கும் அறையும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் கல்யாணமஹாலுக்கு மேற்கு பக்கமாக இருக்கிறது. இதில் ஆர்ச் அமைப்பில் பல அறைகள் இருக்கு. இதிலெல்லாம் அந்தக் காலத்தில் சிப்பாய்கள் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்புறம் குதிரைகள் கட்டிவைக்க பல குதிரை லாயங்கள் இருந்தன என்றலும் தொல்பொருள் ஆராய்ச்சியில் இங்கே ராஜா ராணியின் அரண்மனை வளாகமாகவும், சிறிய அறைகளில் ஆண், பெண் பணியாளர்கள் தங்கி இருந்தமையும், அதற்குப் பின்னே வெடிமருந்து மற்றும் ராணுவ தளவாடங்கள் பத்திரபடுத்தப்பட்டு வந்த இடமாகவும் இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இது அந்த அழிந்துவிட்ட அரண்மனையின் மைய மண்டபமாக கூட இருந்திருக்கலாம்.  நல்ல கலை அம்சத்தோடு தர்பார் மண்டபம் போல காட்சியளிகிறது இந்த இடம். முழுவதும் கற்களால் வடிவமைக்கபட்டுள்ளது. சரி, இனி அங்கே தூரத்துல ஒரு குளம் தெரியுது!! வாங்க பக்கத்தில போய் பார்க்கலாம்!!

இந்தக் குளத்துக்குப் பேரு யானைகுளம்னு சொல்கிறாங்க. இது கல்யாண மஹாலின் தெற்கு பக்கத்தில் இருக்கு. இதன் உருவம் யானை வடிவத்தில் பெரியதாக இருக்கிறது என ஒருசில ஆராய்ச்சியாளர்களும்,  இல்லை இது 50 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்டு பெரிய குளமாக யானைகள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக தென்மேற்கு மூலையில அகலமான படிக்கட்டுடன் கூடிய ஒரு வழி அமைத்துள்ளனர். துனால இங்கு யானைகள் குளிபாட்டுற இடம் என்பதால் யானைகுளம்ன்னு பேர் வந்ததா சிலரும் சொல்றாங்க.

இந்தக் குளத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலுமிருந்துப் பார்த்தால்,  மண்டபம் போன்ற அமைப்புடைய திறந்த வெளியில் மேல்பக்கம் மூடிய சுமார் 134 கல் தூண்களுடைய தாழ்வாரங்கள் இருக்கு. இந்த அமைப்புப்படி இந்தகுளம் அரசர்களுக்கும், அரசகுடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், முக்கிய படை வீரர்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிபதற்கும், அரசக் குடும்பத்தினர் குளிப்பதற்கும், ஆடைகளை துவைப்பதற்கும், ஓய்வெடுக்கவும் இந்த மண்டமதையும், தாழ்வாரங்களையும் பயன்படுத்தி இருக்கலாம் என சொல்லபடுகிறது.

இந்த இடம் உடற்பயிற்சி கூடம் ஆகும். இது யானைகுளத்திற்கு சற்று மேற்கு பக்கமாக இருக்கு. முழுவதும் கற்களால் கட்டப்பட்ட இதில். மேல் பக்கம் இருந்தும் கவனிக்கும்படி சாரளங்களும், அதற்கு செல்லும் வழிகளும் இருக்கு. வாங்க இதற்கு உள்ளே போய் பார்க்கலாம்!!

முழுவதும் கருங்கற்களால் ஆன உள்பக்கத்தில் போர்வீரர்களுக்கு ரகசிய பயிற்சியும், ஆயுத பயிற்சியும் இங்கே வழங்கப்பட்டதாகவும், அதேசமயம் எதிரிகளை வீழ்த்த ரகசிய ஆயுதங்களை இங்கேப் பத்திரப்படுத்தி வைத்ததாவும் சொல்லப்படுகிறது. அடுத்து நாமப் பார்க்கப் போறது வெடிமருந்து கிடங்கு

இந்த சதுரமான மேடை போன்ற அமைப்பில் மைய பகுதியில் உள்ளபாறை பகுதியை குடைந்து எடுத்து அதை சுற்றிலும் சதுரவடிவில் கற்களாலான சுவரை கட்டி இருகிறாங்க. இதுலதான் வெடிமருந்து வைக்கப்பட்டு இருந்ததாக சொல்ல்கிறாங்க. அடுத்து மூன்று அடுக்குள்ள தானியக் கிடங்கை பார்க்கலாம். வாங்க....,  

இது ராஜா கோட்டையினுள் நுழையும் நுழைவாயிலின் இடதுபுறமாக இருக்கிறது. இது மேற்பக்கம் வளைந்த அமைப்புடன் கல்லினால் ஆன 2 மீட்டர் அகலமுடைய சுவர்களால் கட்டப்பட்டு இருக்கு. இதன் உள்புறம் மூன்று அடுக்கு உடையது.

இது மேலே இருந்து பார்க்கும் போது தெரியும் காட்சி. இருபக்கமும் தனித்தனியே ஒரு தானிய கிடங்கும் நேர் எதிரே ஒரு தானிய கிடந்குமாக மொத்தம் மூன்று கிடங்குகள் இந்த கல்லினால் ஆன கோட்டையில் இருக்கு. இது பல ஆண்டுகள் தானியங்களை சேமித்து வைக்கும் தன்மை கொண்டதாம்.
இது தானியக் கிடங்கின் உள்பக்க அமைப்பு.  இரு பக்கமும் அகலமான கிடங்கும்,  நேர் எதிரே நீள வாட்டில் ஒரு கிடங்கும் இருக்கு. இதன் மூலம் கோட்டையில் இருப்பவர்களுக்கு ஆண்டுக் கணக்கில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டதாம்.

இது கடைசி தானியக் கிடங்கு. அறையிலிருந்து பார்க்கும் வெளிபக்க வாயில் இதன் சிறப்பு அம்சம் என்னனா இங்கே தானியங்கள் நிறைந்து விட்டால் மேல்பக்கம் இருந்து நிரப்பவும் பெரிய கதவு போன்ற அமைப்பு  மேற் கூரைகளில் இருக்கு.

இதுதான் மலைமேல் இருக்கும் கோட்டையான ராஜாகோட்டைக்கு செல்லும் வழி.  இனி நாம பார்க்க வேண்டியது வேணுகோபால் சுவாமி கோவில். ஜும்மா மசூதி கலைபானியில் அமைந்த மசூதி, செஞ்சியின் நாயகன் தேசிங்கு ராஜனின் உடல் எரியூட்டப்பட்ட இடம், சப்தகன்னியர் கோவில்,  சர்க்கரை குளம், செட்டிகுளம், ஆஞ்சநேயர் கோவில், மரணக் கிணறு இதெல்லாம் இங்கு பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.

அதுக்கு முன்னாடி மலைக்கு மேலே இருக்கிற கோட்டையைப் பார்க்கலாம்.  ஏன்னா படிகள் அதிகம் என்பதாலும் வெயில் அதிகம் என்பதாலும், அதேசமயம் மலை ஏறும் தூரம் அதிகம். அதனால சீக்கிரமா இந்த ராஜாகோட்டையைப் பார்க்க மலை மேல ஏறி செல்வோம். 

மலை மேல ஏறி வந்தக் களைப்பு நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ராஜாக் கோட்டையைப் பார்க்கலாம் சகோஸ்!