Wednesday, March 12, 2014

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை - மௌனச்சாட்சிகள்

இந்த வாரம் மௌனசாட்சிகளில் நாமப் பார்க்கப் போறது காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை. ஏன்னா, அந்தக் கோட்டைக்குச் செல்லும்போது தெரியும், அது முஸ்லிம் மன்னர்களாலும்பிரஞ்சுகாரர்களாலும் சிதைக்கப்பட்டு, ஆங்கிலேயர்களாலும் கைப்பற்றப்பட்டு, பின்னர் கவனிப்பாரற்று, இன்றுவரை பல போர்கள், பல அழிவுகளைக் கடந்துக் கம்பீரமாகக் காட்சித் தருவதால்தான் இக்கோட்டைக்கு காலத்தால் அழியாத செஞ்சி கோட்டைன்னு சொன்னா ரொம்ப பொருத்தமா இருக்கும்.

நாங்கப் போன போது கோட்டைக்குள் நிறைய அயல்நாட்டவர்கள் கூட்டமாக காணப்பட்டனர்.  அப்பதான், அப்பு ஒரு கேள்வி கேட்டான் எதுக்காக இவங்க இந்த கோட்டைக்கு வந்து இருக்காங்கன்னு!!?? நானும் புத்திசாலித்தனமா சொல்றதா நினைச்சு..., அது அவங்க போன ஜென்மத்தில இந்தக் கோட்டையை ஆண்டவங்களா இருக்கலாம்! பழைய ஜென்ம தொடர்புகள்னால இங்கே வந்து இருப்பாங்கன்னு சொன்னேன். மீண்டும் அவன் கேட்டான், அப்ப நாம எதற்கு இங்கே வந்து இருகிறோம்!? பழைய ஜென்மத்தில அவங்களால ஓட ஓட விரட்டப்பட்ட இந்த கோட்டைலிருந்தவங்களா நாம!? நமக்கும் அப்ப பூர்வ ஜென்ம நினைவுனால தான் இங்கே வந்து இருக்கிறோமானு கேட்க, நான் இப்ப உன்னை ஓட ஓட விரட்ட போறேண்டான்னு சொன்னவுடனே அவன் அங்கிருந்து எஸ்கேப்.  வாங்க! இனி, நாம கோட்டைக்குள் செல்லலாம்.

அதற்கு, முன்னே இந்த கோட்டையைப் பத்திக் கொஞ்சம் பார்ப்போம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பஸ் ஸ்டான்ட்ல இருந்து கொஞ்ச தொலைவில் இருக்கு. சென்னையில் இருந்து 150கிமீ தொலைவிலும், விழுப்புரதிலிருந்து வடக்கு பக்கமாக சுமார் 35 கி மீ தொலைவிலும், திண்டிவனத்தில் இருந்து மேற்கு பக்கமாக சுமார் 27 கி மீ தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு மார்க்கமாக 38 கிமீ தொலைவிலும் இருக்கு இந்த செஞ்சி கோட்டை.

புவியல் அமைப்புபடி இதன் பாறைகள் எல்லாம் வித்தியாசமான அமைப்புடன் தனித்தனி உருண்டை உருண்டை கற்களாக இருக்கு.  ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மூலிகைகளுக்காக பர்வதமலையை இலங்கைக்குக் கொண்டு செல்லும்போது அதில் இருந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும் காலபோக்கில் மாறி செஞ்சி எனச் சொல்லப்பட்டதாகவும் சில செவி வழி தகவல்கள் உண்டு.

இது கோட்டைக்குள் செல்லும் நுழைவாயில். இங்கே நுழைவுக் கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கபடுகிறது. மேலும், இந்தக் கோட்டை ராஜகிரி கோட்டை அல்லது ராஜகோட்டைன்னும் சொல்கிறாங்க. இப்ப செஞ்சியின் பெயர்காரணம் நிறைய சொல்றாங்க. இந்த ராஜகோட்டைல சப்தகன்னியரின் கோவில் சிதிலமடைந்து இருக்கு. இந்த கன்னிகளில் முக்கியத்துவம் வாய்ந்த மூத்த கன்னியின்பெயர் செஞ்சியம்மன் என்றும் அதைக்கொண்டே செஞ்சி எனவும் அழைக்கப்பட்டதாகவும், அதே சமயம் கிராமங்களில் ஒரு கதை வழக்கத்தில் இருந்தது ஏழு கன்னிப்பெண்கள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் அவர்களின் கற்புக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் தகாரவீரப்பன் பாதுகாத்தான் என்றும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி, ஏழு கன்னியரும் மரணமடைந்ததாகவும் அந்த ஏழு பெயரில் ஒருவரான செஞ்சியம்மன் என்றும்  அவள் பெயராலே இந்த இடம் செஞ்சின்னு சொல்லப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.

இது பாதுகாப்பு மேடை அதை பீரங்கி வைத்து சுழலும் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி உள்ளனர். இந்த கோட்டை கி.பி 985-1013 ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தசோழன் ஆட்சி செய்ததாகவும், அப்பொழுது இது சிங்கபுர நாடு என்று சொல்லப்பட்டதாம். பிரிட்டிஷ் சரித்திர வல்லுரான மேக்கன்ஸ் கூட தன்னுடைய கர்நாடக ராஜாக்கள் சவிஸ்ர சரிதம் என்னும் குறிப்பில் இது கிருஷ்ணபுரம் என அழைக்கப்பட்டதாக சொல்லி இருக்கிறார்.
   
இது, நுழைவாயிலைத் தாண்டி உள்ளே வந்தவுடன், அங்கிருந்துப் பார்க்கும் நுழைவாயிலின் உள்பக்கத் தோற்றம்.  இனி, கோட்டைக்குள்ளேப் போகும் முன்னே செஞ்சி பெயர் காரணத்திற்கான மற்றொரு காரணத்தை நாம கட்டாயம் தெரிந்தே ஆகவேண்டும். இந்திய தொல்பொருள் ஆய்வு துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற மணி என்ற பொறியாளரின் புத்தகத்தில் சொல்லியுள்ள பெயர் காரணத்தை தெரிந்து கொள்வோம். மேலும் பல வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது என்னன்னா செஞ்சிக்கு வடக்கு பக்கம் சிங்கபுரம் என்னும் ஊர் இருக்கிறது.  இது பல்லவ மன்னன் சிம்மவர்மன் இல்ல நரசிம்மவிஷ்ணு (ஏன்னா இங்கே நரசிம்மரின் பல உருவங்கள் நிறைய இடங்களில் பொறிக்கபட்டுள்ளன) பெயரையே கொண்டு உருவானது.  இந்த சிங்கபுரம் இதை பற்றிய சோழர்கால முதலாம் ஆதித்தசோழன் காலத்தைய (கி பி 871-907) கல்வெட்டானது இந்த கோட்டையின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஊரான ஆனான்கூரில் கண்டெடுக்கப்பட்டதாம்.

 அதில் கூட இந்த இடத்தை சிங்கபுர நாடு என குறிக்கபட்டுள்ளதாம் .  அந்த சிங்கவரம் தான் காலபோக்கில் செஞ்சி என உருமாறிட்டதாக சொல்றாங்க.  பிஜப்பூர் சுல்தான்கள் செஞ்சியை பாதுஷாபாத் ன்னு அழைத்தார்கள். மராட்டிய மன்னர்களோ இதை சுந்திரி ன்னும் சிண்டி ன்னும் அழைதர்கள். அதன் பிறகு 1698 ல ஆண்ட முகலாய மன்னர்கள் இதை நசரத் கட்டா என்றும் அழைத்தார்கள். முகலாயருக்குப் பிறகு வந்த தொடக்ககால ஆங்கிலேயர்கள் செஞ்சே என்று அழைத்தார்கள். அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுகாரர்கள் ஜிஞ்சி என அழைத்தார்கள்.  

மேலும், இதனைப் பற்றி மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. பிரிட்டிஷ்காரங்க  இதை  "கிழக்கின் ட்ரோய்"ன்னு சொன்னாங்க..

சரி, வாங்க நம் பயணத்தைத் தொடரலாம்..., இது இரண்டாம் கட்ட நுழைவாயில்.  பக்கத்தில் தெரிவது கோட்டையின் மொஹலாய கட்டிட கலை அமைப்பில் கட்டப்பட்ட கல்யாணமஹால். 

 தூரத்தில் இருந்துப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இந்திய இஸ்லாமிய கட்டமைப்பில் உச்சில பிரமீடு போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடம் இந்த கல்யாணமஹால். இதில் பெண்கள் தங்குவதற்கு அறைகளும், குளியல் குளங்களும், சதுரவடிவ அமைப்பில் எட்டு அடுக்குகள் கொண்டதா இருக்கு.  இதுல அவங்க கட்டிடக்கலையின் வியப்புகள் என்னனா,  ஒவ்வொரு அறைகளும் மூன்று சதுரமீட்டர் அளவும்,  வளைந்து செல்கிற சாரளங்களும், ஒவ்வொரு சாரளங்களின் வழியே இருபக்கங்களிலும் மேலே செல்லவும், கீழே இறங்கவும் வழிப்பாதைகள் அழகாக் கட்டி இருக்கிறாங்க.  இந்த அறைகளின் உட்புற சுவரில் சுடுமண் குழாய்கள் அமைச்சு அதுவழியா தண்ணீர் வரும்படி அந்தக் காலத்துலயே கட்டி இருக்கிறாங்க.  இப்ப இந்த கல்யாணமஹால் பராமரிப்பு பணிகளுக்காக மூடியே வச்சுருக்கிறாங்க. உள்ளே செல்ல அனுமதி இல்ல. அதனால, வாங்க அடுத்த இடத்திற்கு போகலாம்...,


இந்த கல்யாணமஹாலை ராணி மஹால்ன்னு கூட சொல்வாங்க. அதனை ஒட்டி கிழக்கு பக்கமாக அமைந்த நிலையில் சுண்ணாம்பும், செங்கல் கலவையுமா சேர்ந்த அமைப்பில் ஒரு கட்டிடம் இருக்கு. இதுக்கு பேரு மகமத்கான் மசூதி.


யார் இந்த மகமத்கான்ன்னு பார்த்தோம்னா, முஹலாயர்கள் செஞ்சி கோட்டையை கைப்பற்றிய போது அவர்களுடைய நம்பிக்கையான தளபதிகளில் ஒருவரான ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சொருப் சிங் என்பவர் டில்லி பேரரசால் செஞ்சி மன்னராக நியமிக்கப்பட்டார் அவருடைய மகன்தான் தேசிங்குராஜா. 

செஞ்சி கோட்டைய ஆண்ட தேசிங்குராஜாவினுடைய நண்பன்தான் இந்த மகமத்கான். தனித்தே வளரும் தன்மகன் தேசிங்குவிற்கு ஒரு நல்ல நண்பன் அவசியம் என்றுணர்ந்த சொருப் சிங் தன மகனின் அறிவாற்றலுக்கு இணையான வழுவாதவூர் பாளையகாரருடைய மகன் மகமத்கானை தேசிங்குடனே வளர்த்து வந்தார். இருவரும் எல்லா பயிற்சிகளும் கற்றுத் தேர்ந்து வீரர்கள் ஆயினர்.

எல்லா விஷயங்களிலும் தமக்கு உறுதுணையாக இருந்த தன ஆருயிர் நண்பனுக்காக அவனுடைய மத வழிப்பாட்டிற்காக தேசிங்கால் கட்டப்பட்டதே இந்த மகமத்கான் மசூதி. இந்த மசூதி இடிந்த நிலையில் இருக்கிறது. இதுவும் பராமரிப்புப் பணிகளுக்காகப் பூட்டியே இருக்கு வாங்க அடுத்த இடத்திற்குப் போகலாம்.

இரண்டாம் நிலை நுழைவாயிலுக்கும், கல்யாணமஹாலுக்கும் இடையே கருங்கற்களால் ஆன இந்த சதுரவடிவ கற்களால் அமைக்கப்பட்ட பெரிய மேடை போல இருக்கு. இது என்னனு சரியா தெரியல!! தெரிஞ்சவங்க சொல்லலாம்.


இது என்னன்னா இங்கே ஒரு அரண்மனை இருந்ததாகவும், அது முற்றிலும் அழிந்து விட்டதாகவும் சொல்லபடுகிறது. அதன் பின்பக்கம் பணியாளர்கள் தங்கும் அறையும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் கல்யாணமஹாலுக்கு மேற்கு பக்கமாக இருக்கிறது. இதில் ஆர்ச் அமைப்பில் பல அறைகள் இருக்கு. இதிலெல்லாம் அந்தக் காலத்தில் சிப்பாய்கள் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்புறம் குதிரைகள் கட்டிவைக்க பல குதிரை லாயங்கள் இருந்தன என்றலும் தொல்பொருள் ஆராய்ச்சியில் இங்கே ராஜா ராணியின் அரண்மனை வளாகமாகவும், சிறிய அறைகளில் ஆண், பெண் பணியாளர்கள் தங்கி இருந்தமையும், அதற்குப் பின்னே வெடிமருந்து மற்றும் ராணுவ தளவாடங்கள் பத்திரபடுத்தப்பட்டு வந்த இடமாகவும் இருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இது அந்த அழிந்துவிட்ட அரண்மனையின் மைய மண்டபமாக கூட இருந்திருக்கலாம்.  நல்ல கலை அம்சத்தோடு தர்பார் மண்டபம் போல காட்சியளிகிறது இந்த இடம். முழுவதும் கற்களால் வடிவமைக்கபட்டுள்ளது. சரி, இனி அங்கே தூரத்துல ஒரு குளம் தெரியுது!! வாங்க பக்கத்தில போய் பார்க்கலாம்!!

இந்தக் குளத்துக்குப் பேரு யானைகுளம்னு சொல்கிறாங்க. இது கல்யாண மஹாலின் தெற்கு பக்கத்தில் இருக்கு. இதன் உருவம் யானை வடிவத்தில் பெரியதாக இருக்கிறது என ஒருசில ஆராய்ச்சியாளர்களும்,  இல்லை இது 50 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும், 15 மீட்டர் ஆழமும் கொண்டு பெரிய குளமாக யானைகள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக தென்மேற்கு மூலையில அகலமான படிக்கட்டுடன் கூடிய ஒரு வழி அமைத்துள்ளனர். துனால இங்கு யானைகள் குளிபாட்டுற இடம் என்பதால் யானைகுளம்ன்னு பேர் வந்ததா சிலரும் சொல்றாங்க.

இந்தக் குளத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலுமிருந்துப் பார்த்தால்,  மண்டபம் போன்ற அமைப்புடைய திறந்த வெளியில் மேல்பக்கம் மூடிய சுமார் 134 கல் தூண்களுடைய தாழ்வாரங்கள் இருக்கு. இந்த அமைப்புப்படி இந்தகுளம் அரசர்களுக்கும், அரசகுடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், முக்கிய படை வீரர்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிபதற்கும், அரசக் குடும்பத்தினர் குளிப்பதற்கும், ஆடைகளை துவைப்பதற்கும், ஓய்வெடுக்கவும் இந்த மண்டமதையும், தாழ்வாரங்களையும் பயன்படுத்தி இருக்கலாம் என சொல்லபடுகிறது.

இந்த இடம் உடற்பயிற்சி கூடம் ஆகும். இது யானைகுளத்திற்கு சற்று மேற்கு பக்கமாக இருக்கு. முழுவதும் கற்களால் கட்டப்பட்ட இதில். மேல் பக்கம் இருந்தும் கவனிக்கும்படி சாரளங்களும், அதற்கு செல்லும் வழிகளும் இருக்கு. வாங்க இதற்கு உள்ளே போய் பார்க்கலாம்!!

முழுவதும் கருங்கற்களால் ஆன உள்பக்கத்தில் போர்வீரர்களுக்கு ரகசிய பயிற்சியும், ஆயுத பயிற்சியும் இங்கே வழங்கப்பட்டதாகவும், அதேசமயம் எதிரிகளை வீழ்த்த ரகசிய ஆயுதங்களை இங்கேப் பத்திரப்படுத்தி வைத்ததாவும் சொல்லப்படுகிறது. அடுத்து நாமப் பார்க்கப் போறது வெடிமருந்து கிடங்கு

இந்த சதுரமான மேடை போன்ற அமைப்பில் மைய பகுதியில் உள்ளபாறை பகுதியை குடைந்து எடுத்து அதை சுற்றிலும் சதுரவடிவில் கற்களாலான சுவரை கட்டி இருகிறாங்க. இதுலதான் வெடிமருந்து வைக்கப்பட்டு இருந்ததாக சொல்ல்கிறாங்க. அடுத்து மூன்று அடுக்குள்ள தானியக் கிடங்கை பார்க்கலாம். வாங்க....,  

இது ராஜா கோட்டையினுள் நுழையும் நுழைவாயிலின் இடதுபுறமாக இருக்கிறது. இது மேற்பக்கம் வளைந்த அமைப்புடன் கல்லினால் ஆன 2 மீட்டர் அகலமுடைய சுவர்களால் கட்டப்பட்டு இருக்கு. இதன் உள்புறம் மூன்று அடுக்கு உடையது.

இது மேலே இருந்து பார்க்கும் போது தெரியும் காட்சி. இருபக்கமும் தனித்தனியே ஒரு தானிய கிடங்கும் நேர் எதிரே ஒரு தானிய கிடந்குமாக மொத்தம் மூன்று கிடங்குகள் இந்த கல்லினால் ஆன கோட்டையில் இருக்கு. இது பல ஆண்டுகள் தானியங்களை சேமித்து வைக்கும் தன்மை கொண்டதாம்.
இது தானியக் கிடங்கின் உள்பக்க அமைப்பு.  இரு பக்கமும் அகலமான கிடங்கும்,  நேர் எதிரே நீள வாட்டில் ஒரு கிடங்கும் இருக்கு. இதன் மூலம் கோட்டையில் இருப்பவர்களுக்கு ஆண்டுக் கணக்கில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டதாம்.

இது கடைசி தானியக் கிடங்கு. அறையிலிருந்து பார்க்கும் வெளிபக்க வாயில் இதன் சிறப்பு அம்சம் என்னனா இங்கே தானியங்கள் நிறைந்து விட்டால் மேல்பக்கம் இருந்து நிரப்பவும் பெரிய கதவு போன்ற அமைப்பு  மேற் கூரைகளில் இருக்கு.

இதுதான் மலைமேல் இருக்கும் கோட்டையான ராஜாகோட்டைக்கு செல்லும் வழி.  இனி நாம பார்க்க வேண்டியது வேணுகோபால் சுவாமி கோவில்ஜும்மா மசூதி கலைபானியில் அமைந்த மசூதி, செஞ்சியின் நாயகன் தேசிங்கு ராஜனின் உடல் எரியூட்டப்பட்ட இடம், சப்தகன்னியர் கோவில்,  சர்க்கரை குளம்செட்டிகுளம், ஆஞ்சநேயர் கோவில்மரணக் கிணறு இதெல்லாம் இங்கு பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.

அதுக்கு முன்னாடி மலைக்கு மேலே இருக்கிற கோட்டையைப் பார்க்கலாம்.  ஏன்னா படிகள் அதிகம் என்பதாலும் வெயில் அதிகம் என்பதாலும், அதேசமயம் மலை ஏறும் தூரம் அதிகம். அதனால சீக்கிரமா இந்த ராஜாகோட்டையைப் பார்க்க மலை மேல ஏறி செல்வோம். 

மலை மேல ஏறி வந்தக் களைப்பு நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ராஜாக் கோட்டையைப் பார்க்கலாம் சகோஸ்!

26 comments:

  1. மிக மிக மிக அருமை ராஜி..எவ்ளோ அழகா விளக்கிச் சொல்லியிருக்கீங்க. கண்டிப்பா போய் பாக்கணும்..பிரமிப்பா இருக்கு..நேர்ல போன எப்படி இருக்கும்!! நன்றி ராஜி.

    ReplyDelete
    Replies
    1. நேரில் போய் பார்க்கும்போது பிரமிப்பும், ஆச்சர்யமும் இன்னமும் கூடும் கிரேஸ்.

      Delete
  2. படங்களும் பதிவும் மிக அருமை தோழி.
    சின்ன வயதில் பள்ளியில் அழைத்தச் சென்றார்கள்.
    திரும்பவும் இப்பொழுது பார்க்கப்போனால்.... ம்ம்ம்...
    அதிக வெயில். அதனால் பார்க்க முடியாமல் பாதியிலேயே கீழே இறங்கி வந்துவிட்டேன்.

    ராஜா கோட்டையைப் பார்க்கும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வெயில்தான் ரொம்பப் படுத்தும் அருணா!. காலை வேளையில் இல்ல மாலை வேளையில் சென்றால் நலம்

      Delete
    2. மாலை 3 மணிக்கு மேல் மலையேற அனுமதி இல்லை ஏன்னா மலை அவ்வுளவு உயரம் அதுனால திருப்பிவர முடியாதுன்னு அனுமதிக்க மாட்டாங்க ..

      Delete
  3. ஆகா...! அற்புதமான படங்கள் மூலம் நாங்களும் சுற்றிப் பார்த்தோம் சகோதரி... நன்றி... ராஜாகோட்டையைப் பார்க்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. கூடவே சுற்றிப் பார்த்ததுக்கு நன்றிண்ணா!

      Delete
  4. Replies
    1. நன்றி முருகுராஜ்

      Delete
  5. இவ்வுளவு அழகாக இந்த கோட்டையை பற்றி எந்த தளதிலயும் படித்து இல்லை திருவண்ணாமலை கோவில் செல்லும் போது வழியில் இந்த மலையை பார்த்து இருக்கிறேன் இதில் இவ்வுளவு சிறப்புகள் இருப்பது உங்க பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன் கோட்டையை பார்க்கும் ஆவலும் அதிகமா இருக்கு அப்படி போகும் போது உங்கள் பதிவு மிகவும் உபயோகமா இருக்கும் ..ராஜா கோட்டையை பத்தின விவரங்களுக்காக ..அடுத்தவாரம் வரை நாங்கள் காத்துதிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புக் கிடைப்பின் அவசியம் சென்று பாருங்க அமிர்தா!

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திகேயன்.

      Delete
  7. நேரில் பார்த்தது போன்ற அனுபவம்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  8. விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அப்போது பார்த்தது செஞ்சிக்கோட்டையை. மீண்டும் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  9. தங்களின் எழுத்து நடையும் புகைப்படங்களும் அருமை. வாசிப்பவர்கள் தானே கோட்டையை சுற்றிப் பார்த்து ரசித்த அனுபவம் கிடைக்கிறது. தொடரட்டும் உமது பணி. நன்றி.

    ReplyDelete
  10. அக்கா முதல் போட்டோல நிக்கறது நீங்கதானே.. கொஞ்சம் திரும்பி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கலாமே!!

    ReplyDelete
  11. பாதுகாக்கப்பட ேவண்டிய இடம், ெகாஞ்சம் ெகாஞ்சமாக பல இடங்கைைள பராமரிக்காலமல் விட்டுவிடுகிறார்கள். கல்யாண மகால் அற்புதமாக இருக்கும், பராமரிப்பு என்று பூட்டி ைவத்துள்ளனர். எப்ேபாது பராமரித்து திறப்பார்கள் என்று ெதரியவில்ைல. ேகாட்ைடக்கு ெசல்லும் முன் டிக்ெகட் ெகாடுக்கும் அலுவலகத்தில் பல வரலாற்று புத்தகங்கள் ைவத்துள்ளனர். ஆனால் ெசஞ்சிக் ேகாட்ைட வரலாறு ப்றறி ஏேதனும் புத்தகம் இருக்கிறதா என்றால் இல்ைல.

    ReplyDelete
  12. very very superb narration with suitable photos. very very interesting also. all the best. keep it up

    ReplyDelete
  13. மூணாப்பு நாலாப்பு படிக்கிறப்ப டூர் போனதா ஞாபகம்! சமிபத்தில் சென்றதில்லை! மிக விரிவான சிறப்பான தகவல்கள். செஞ்சிக்கு இத்தனை பெயர்களா? வியக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  14. மூணாப்பு நாலாப்பு படிக்கிறப்ப டூர் போனதா ஞாபகம்! சமிபத்தில் சென்றதில்லை! மிக விரிவான சிறப்பான தகவல்கள். செஞ்சிக்கு இத்தனை பெயர்களா? வியக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  15. சிலமுறை செஞ்சி சென்றிருந்தாலும் கோட்டைக்கோ வேறு இடங்களுக்கோ சென்றதில்லை......

    சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. இரண்டாவது படத்தின் நடுவில் காலை மடித்து அமர்ந்திருக்கும் சிலை சில வருடங்களுக்கு முன் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நகருக்குள் நுழையும் முன் சேத்துப்பட்டு,ஆரணி சாலை பிரியும் இடத்தில் இருந்தது.சாலை விரிவாக்கம் செய்தபோது இச்சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்டு கோட்டையுள்ளே வைக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் கற்பூரம் ஏற்றி இந்த சிலையை முனீச்சரன் என்று பலரும் வணங்கிச் செல்வார்கள்.இன்று காட்சிப் பொருளாக கோட்டையில் இருக்கிறார் -தகவலுக்கு நன்றி ஜவஹர் சண்முகம்

    ReplyDelete
  17. வழக்கம் போல படங்களுடன் கூடிய அருமையான விளக்கம்... எப்படி அக்கா நிறைய பயன்ம் போவீர்களோ?

    ReplyDelete
  18. நான் திருவண்ணாமலையில் தான் இருக்கிறேன் ஆனால் இது வரை இந்த கோட்டைக்கு சென்றது இல்லை . உங்கள் பதிவு மிகவும் பிரமிப்பாக இருக்கு .. எப்படியாவது ஒருமுறை சீக்கிரம் சென்று பார்த்துவிட என் மனம் முடிவுசெய்து உள்ளது

    ReplyDelete
  19. 50ல் சென்றபொழுது கேட்பாரற்று கிடந்தது.இன்றைய நிலை மகிழ்ச்சியை அளிக்கிறது

    ReplyDelete