Showing posts with label பெருமாள். Show all posts
Showing posts with label பெருமாள். Show all posts

Saturday, September 22, 2018

பெருமாள் கோவிலை வலம் வரும் முறைகள் - புரட்டாசி விரதம்

பொதுவா ஏழுமலையானை கும்பிடும்போது, பகவானே! என்னைக் காப்பாத்துன்ன்னு  சொல்லி கும்பிடுறது வழக்கம். பகவான்ன்னா பகம் +ஆன் எனப் பிரிக்கலாம். ‘பகம்’ ன்னா ‘ஆறு’. ‘ஆன்’ன்னா‘உடையவன்’. ஆறு குணங்களை உடையவர் பெருமாள். நானே எல்லாம் என்கிற ‘ஞானம்’, உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் ‘பலம்’, உலகிலுள்ள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ‘ஐஸ்வர்யம்’, எதையும் வெற்றி கொள்ளும் ‘தைரியம்’, உலகத்திலுள்ள கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ‘ஆற்றல்’, சூரிய, சந்திரர் போல ஒளிவீசும் ‘தேஜஸ்’ (ஒளி) ஆகியவையே அந்த ஆறு குணங்கள். ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே பகவான் என்பதன் பொருள் ஆகும்.
புரட்டாசி மாதத்தின் சிற்ப்புகள், பகவானை எப்படிலாம் வழிபடனும்ன்னு போன பதிவில் பார்த்தோம். இந்த வாரம் பெருமாள் கோவிலுக்கு போனால் எப்படி வழிபடனும்ன்னு பார்க்கலாம். இதுக்கெல்லாமா டிப்ஸ்?! கோவிலுக்குள் போறதுக்கு முன் கை கால் அலம்பி, ராஜகோபுரத்தை வணங்கி, பலிபீடத்து முன் நமஸ்கரித்து, கோவிலை வலம் வந்து, மூலவரை வணங்கினால் முடிஞ்சுது சோலின்னு நினைக்கலாம். ஆனா, ஒவ்வொரு தெய்வத்துக்குன்னு தனிப்பட்ட வழிபாட்டு முறை இருக்கு. அதுலாம் பெரும்பாலும் எல்லாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் இதுமாதிரியான பதிவு.
பொதுவா எல்லா கோவிலில்களையும் நெருங்கும்போதே  கண்களில்  படும் பிரம்மாண்டமான ராஜகோபுரத்தை தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள்கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.   அதுமாதிரியே ராஜகோபுரத்தை வணங்கி பெருமாள் கோவிலுக்குள் செல்லலாம். உடல் சுத்தம் மிக முக்கியம். இறை வழிபாட்டில் ஈடுபட, ஈடுபட மனசு தானாய் சுத்தமாகிடும். அதுக்குதான் அங்க போறது. 

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில்தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும். 
பெருமாள் கோயில்கள்ல முதல்ல தாயாரை தரிசனம் செய்த பிறகே பெருமாளை தரிசிக்கறது மரபு. தாயார்தான் மனமிரங்கி பெருமாள்கிட்டே நமக்காக பரிந்து பேசுவாளாம். அதனால் தாயாரை வணங்கி, அடுத்ததா, துவாரபாலகர்கள்கிட்ட மனதால் அனுமதி கேட்ட பின்னரே கருவறைக்குள் நுழையனும். மூலவரைத் தரிசித்ததும்  பிராகார தெய்வங்களை வரிசையாக கோஷ்டத்தில் உள்ளபடி (மாடங்கள்) கும்பிட்டு கோயில் பிராகாரத்தைச் சுற்றி வாங்க. ஞாபகம் இருக்கட்டும். கோயிலுக்குள்ளே எந்த தெய்வத்தையும் தனித்தனியா வலம் வரவேண்டியதில்லை. இது எல்லா தெய்வ சன்னிதிக்கும் பொருந்தும். 

பெருமாளை தரிசிக்கும்போது முதலில் பாதத்தைத்தான் பார்க்கனும்.  இப்படி சாமிக் கும்பிட ஒரு காரணமிருக்கு. மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு போரில் உதவி கேட்டு கிருஷ்ணரிடம்  முதலில் வந்த துரியோதனன்,  இன்னொருவரின் காலடியில் நான் அமருவதான்ற தலைக்கணத்தோடு தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்து காத்திருந்தான். கிருஷ்ணர் தூக்கம் நீங்கி கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை காலடியில் அமர்ந்திருந்த அர்ஜுனன்மீதே விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும். 

பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்கனும். அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யனும். 
 பெருமாள் கோவிலில் முதல்ல தீர்த்தம் தந்து, சபாரி சாத்தி, பிறகு துளசி தருவாங்க. தீர்த்தத்தை கீழே சிந்தாம் வாங்கி, சத்தமாக உறிஞ்சி குடிக்காம மெல்லமா குடிக்கனும். குடிச்சு முடிச்சதும். சிறிதளவு தலையில தடவிக்குங்க. துளசியை வாங்கி காதுல செருகிக்கறதும் சிறிதளவு உட்கொள்வதும் பெரியவர்களோட பழக்கம். ஆனா, துளசியை தேவைக்கு அதிகமாக வாங்கி கீழே இறையும்படியோ வீட்டுல அநாவசியமாகக் கிடக்கும்படியோ போடாதீங்க. தாயார் சன்னதியிலதான் குங்கும் தருவாங்க. நரசிம்மர் சன்னதியில குறிப்பிட்ட தினங்கள்ல பிரத்யேக பூஜை செய்து தீவினைகள் நீங்க தீர்த்தத்தை முகத்துல தெளிச்சுயும் விடுவாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு கோயில்லயும் உள்ள பித்யேக பூஜை 

பெருமாள் கோவிலுக்கு போனால் சடாரி வச்சுக்காம வரக்கூடாது, ஏன்னா, சடாரி நம்மாழ்வாரின் அவதாரம். குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறப்புறுப்பு வழியா வெளிவரும்போது சடம்ன்ற வாயு வெளிப்படும். இந்த வாயு குடும்ப பாசம்ன்ற உலக மாயைக்குள் நம்மை தள்ளிவிடுது. ஒரே ஒருவர் மட்டுமே இந்த மாயையை வென்றவராய்,  பிறப்பின்போதே பூலோகத்தில்  பெருமாளால் தள்ளப்பட்டவர். அவரே நம்மாழ்வார். நம்மாழ்வார், பெருமாளின் பாதத்துக்கு இணையானவர். அதனாலேயே அவரது பாதம் பதித்த சடாரி என்னும் உலோக கலனை நம் தலையில் வைத்து ஆசீர்வதிக்கின்றனர். இதனால், பாசம்,பந்தம்ன்ற உலக மாயையிலிருந்து அவன் விலகி, இறைவனை நெருங்குவான் என்பது நம்பிக்கை. 
பொதுவா எல்லா கோவில்களிலும் இறைவனை வணங்கி முடிச்சதும், கோவில் பிரகாரத்தில் அமர்ந்து, இறைவன் திருநாமம் சொல்லி தியானிப்பது வழக்கம். ஆனால், பெருமாள் கோவிலில் அவ்வாறு அமர்வதை தவிர்க்கனும். ஏன்னா, பெருமாள் நம்மோடு லட்சுமிதேவியை அனுப்புவதால், அவளை நம்மோடு நம் வீட்டுக்கு கூட்டி போகனும்ன்றதாலதான்.  

எந்த கோவிலானாலும் இறை வழிபாடு முடிஞ்சதும் கைகால் அலம்புதல் கூடாது. வீட்டுக்கு வந்ததும் குளித்தல் கூடாது. கோவிலுக்கு செல்லும்  பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ளனும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போடனும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசக்கூடாது. 
இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது. பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பூரம், சந்தனம், சம்பங்கி பூ,  துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.

ஏழுகுண்டலவாடா! வெங்கடரமணா!
கோவிந்தா! கோவிந்தா!
நன்றியுடன்,
ராஜி

Monday, September 17, 2018

புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன்?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இன்னிக்கு புரட்டாசி மாசம் ஆரம்பிச்சுட்டுது. இது பெருமாளுக்கு உகந்த மாசம். அதனால், எதாவது பெருமாள் கோவிலுக்கு போய் வரலாமா?! திருப்பதிக்கு போய் வரலாம்ன்னா கூட்டமா இருக்குமே! 

புரட்டாசி விரதம் ஏன்? எதுக்கு? எப்படி கும்பிடனும்ன்னு தெரியுமா?!

எல்லாம் தெரியும். இருந்தாலும் லெக்சர் கொடுக்குறதுன்னா உனக்கு பிடிக்குமே! அதனால் எப்பயும் போல நீ சொல்லு மாமா! நான் கேட்டுக்குறேன். 
நாறு நறும் பொழில் 
      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் 
நூறு தடாவில் வெண்ணெய் 
      வாய்நேர்ந்து பராவி வைத்தேன் 
நூறு தடா நிறைந்த 
      அக்கார அடிசில் சொன்னேன் 
ஏறு திருவுடையான் 
      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?      
தடான்னா பானை. நூறு பானை வெண்ணெய், நூறு பானை அக்கார அடிசில்(சர்க்கரை பொங்கலில் ஒருவிதம்)  சமர்ப்பிதாகவும், அதை பகவான் ஏற்றுக்கொள்ள வேணுமென ஆண்டாள் வேண்டிக்கொண்டாள். 

இந்த வரிகளை படிக்கும்போது ராமாஜுனருக்கு ஆண்டாள் வேண்டுதல் நிறைவேறிச்சான்னு ஒரு சந்தேகம் உண்டானது.   அதனால் ஆண்டாள் சார்பா    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.  இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை  கொண்டாடுகிறார்கள். அதனால், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்

பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது.  புதனுக்கு சனிபகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமைகளில்  பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து  பெருமாள் நம்மைக் காப்பார்ன்னுதான் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வேண்டிக்குறாங்க.  புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்ன்னு  சொல்லப்படுவதால் புரட்டாசி மாசம் விரதம் இருக்காங்க.

புரட்டாசி  சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.   இங்கு பீமன் என்ற குயவர் திருப்பதி மலையடிவாரத்தில் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம்  இருப்பதாக சங்கல்பம் எடுத்துக்கிட்டார். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.  சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "" பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார்.
படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

 திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமைகளின் காலையில் புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, தூய பருத்தியினை  ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்து, இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் சொல்லி  அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மாலையில்  சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்குபின்  அன்னதானம் செய்வது மிக முக்கியம். இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். பெரும்பாலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இட்டு, அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிட்ஷை எடுத்து வரச் சொல்லுவர்.  அப்படி கொண்டுவந்த அரிசியை கொண்டு பொங்கல், விதம்விதமான காய்கறிகள், வடை, பாயாசம் என நைவேத்யம் செய்வர். ஆனாலும், அன்போடு ஒரு துளசி இலையை கொடுத்தாலும் ஏற்பேன் என கண்ணன் தன் அவதாரத்தில் சொல்லி இருக்கார். 

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் சாப்பிடாம இருக்குறது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம். புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுது. புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும்ன்னு சொல்வாங்க. பிரண்டை தண்ணீர் இல்லாமல்கூட வளரும்.  அப்பேற்பட்ட பிரண்டையே இந்த மாசத்தில்  காயும்  அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும்.   சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.  இதில்லாம, புரட்டாசி மாதம் புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் ன்னு பொருள். என்று சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். உப்பு சப்பில்லாத துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும்.  அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.  

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்ன்றதாலயும் புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்கப்படுது.


 புரட்டாசி சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய விஷ்ணு காயத்ரி மந்திரம் :
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்ன்னு ஐதீகம்.

நான் உன்னை புரட்டாசி மாசம் பொறந்துடுச்சே! கோவிலுக்கு போகலாமான்னுதானே கேட்டேன். அதுக்கு எதுக்கு புரட்டாசி மாசம் முடியுமளவுக்கு லெக்சரர் கொடுக்குறே?!

இதுவே உனக்கு லெக்சரா?! புரட்டாசி பத்தியும், பெருமாள் மகிமையையும், பெருமாள் கோவில்களில் வழிப்பட வேண்டிய முறைகளையும் பார்க்கப்போறோமே அதுக்கு என்ன சொல்வே?!

நன்றியுடன்,
ராஜி

Thursday, August 16, 2018

திருப்பதி மலைவாழ் வெங்கடேசா - திருப்பதி கும்பாபிஷேகம்

எதிர்காலத்தில் பிரம்மாண்டம்ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினா திருப்பதின்னு வந்தாலும் வரலாம். அந்தளவுக்கு, தங்குமிடம், போக்குவரத்து,  சாப்பாடு, சுத்தம்ன்னு எங்க திரும்பினாலும் வியந்து பார்க்குமளவுக்கு திருப்பதி இருக்கு.  எல்லாத்துக்கும் வரிசை, நொடி நேர தரிசனம்ன்னு கடுப்படிச்சாலும் மீண்டும் மீண்டும் போக தூண்டும் ஆவலை உண்டாக்கும் இடம் திருப்பதி.  அந்த திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகம் இன்னிக்கு நடக்குது. நம்மால் போக முடியாது. ஆனா, இங்கிருந்தே இறைவனை நினைச்சுக்கலாமில்ல!!
திருப்பதி பத்தி எழுதனும்ன்னா,  எழுதிக்கிட்டே போகலாம். அம்புட்டு விசயம் இருக்கு, ஆனா, சுருக்கமா!! சொல்ல முயற்சிக்குறேன்.  கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.  தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்லுது. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது  வேங்கட மலை.
திருவேங்கடம் என்ற சொல்லுக்கு   தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்ன்னும் (வேம்- பாவங்கள், கடம்-எரித்தல்), தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்-அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்)ன்னு பொருள். சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம்ன்னுதான் குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என பொருள்படும்படி, இதற்கு ‘திருப்பதி’ ன்னு பேர்.
ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்க,  வராகமாக அவதரித்து இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார். அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.
பிருகு முனிவரின் அலட்சியத்தால் தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென கூறி மகாலட்சுமி பூலோகம் வந்தார், மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் சீனிவாசனாய்  பூலோகம் வந்து திருமலையில்  ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி(வேகவதி என்ற திருமாலின் பக்தை ராம அவதாரத்தில் தன்னை மணக்க வேண்டி, ராமரிடம் கேட்க, இந்த அவதாரம் ஏகபத்தினியாய் இருக்க வேண்டும். அதனால் அடுத்த அவதாரத்தில் மணப்பதாய் வாக்களித்தார். அதன்படி, ஆகாசராஜன் என்ற மன்னன் ஏர் உழும் பொழுது கிடைத்த பேழையில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர் மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். 'அலர்' என்றால் தாமரை, 'மங்கை' என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண் என பொருள். பத்மாவதி என்ற வடமொழி சொல்லுக்கு இதே பொருள்தான். அவதார நோக்கம் நிறைவேறும் நாள் வந்ததும், சீனிவாசனும், அலர்மேல்மங்கையும் சந்தித்து காதல் கொண்டனர்.
சீனிவாசனின் வளர்ப்பு தாயாரான வகுளாதேவி, ஆகாசராஜனிடம் சென்று சீனிவாசன் யாரென சொல்லி, பெண் கேட்க திருமணம் நிச்சயமானது. மகாலட்சுமியை பிரிந்திருக்கும் நிலையில் வறுமையில் இருந்த சீனிவாசன் திருமணச்செலவுக்கு பணமில்லாமல்  திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம். திருமணமும் சுபமாய் முடிந்தது.

இதற்கிடையில்  மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரதர் மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி கோவமாய் திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.  திருப்பதி மலையில் பெருமாளை தரிசித்தபின் திருச்சானூர் சென்று தாயாரை வணங்குதல் முக்கியம்.
திருப்பதி வெங்கடேசப்பெருமாள்  கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் இருக்கு. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கு. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். அதனால் திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசித்து அனுமதி வாங்கிய பிறகே  பெருமாளை வணங்குதல் வேண்டும். 

 2.2 ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்திருக்கும் இக்கோவிலின்  நீளம் 415 அடி, அகலம் 263 அடி.  பக்தர்கள் நடக்கும்போது அவர்களின் இடது பக்கம் "ரங்கநாயக மண்டபம்" இருக்கும். வலது பக்கத்தில் "அயன மஹால்" இருக்கும். முடிவில்லாத பிம்பங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி நிறைந்த மண்டபம் இருக்கும். பக்தர்கள் " வெள்ளிவாசல்" என்கிற வெள்ளி நுழைவாசல் வழியாக பிரதான கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லனும்.



அதற்கடுத்து "பங்கார வாசல்"ன்னு சொல்லப்படும் தங்க வாசலின்முன் நின்று இறைவனை தரிசிக்கனும். சாதாரண பக்தர்களால் அதை தாண்டி உள்ள போக முடியாது. ஜருகண்டி, ஜருகண்டின்னு தள்ளும் வேகத்தில் வெங்கியை அஞ்சு நொடிகளுக்கு மேல் பார்த்தாலே பூர்வ ஜென்ம புண்ணியம்.  ஒரு மணிநேரத்தில் சராசரியாய் 4000 பேர் இறைவனை தரிசிக்குறாங்க. ராஜ கோபுரத்திலிருந்து போகபோக பாதை குறுகிக்கிட்டே போகும். உலக சுகபோகத்திலிருந்து நம் எண்ணைங்களை இறைவன்மீது செலுத்தினால் அவனை அடையலாம்ன்னு சொல்லும் குறியீடா இருக்கு. ஆகம விதிப்படி இந்த குறுகிய வாசலை மாத்தமுடியாது. 


கருவறையினுள் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் வேங்கடவன் அருள்கிறார். 

விமானத்தின் வடகிழக்கு மூலையில் வெள்ளியால் வேயப்பட்ட திருவாசியோடு, விமான வெங்கடேசப்பெருமாள் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு வலம் வந்தால் ஆனந்த வாழ்வு அமையும் என்கிறார்கள். 
கருவறை வெளிச்சுற்றில் வரதராஜர், ராமானுஜர், யோக நரசிம்மர், சீனிவாசனின் வளர்ப்பு தாயான வகுளாதேவி சன்னிதிகளும், பிரார்த்தனை உண்டியலும் இருக்கு. 

புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திருமலைக்கு  மகாவிஷ்ணு எழுந்தருளினாராம். எனவே இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நாரத முனிவரின் வழிகாட்டலின்படி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு பெரும் செல்வமும், வைகுண்டபதவியும் பெற்றானாம் பீமன் என்னும் ஊனமுற்ற குயவன். மண்பானை செய்யும் அவன், பெருமாள் பக்தன். தினமும் புதுபானை ஒன்றை மலைமீதிருக்கும் பெருமாள் கோவிலுக்கு கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். அந்த மண்பாண்டத்தில்தான் நைவேத்தியம் படைப்பது வழக்கம். 

 மழைக்காலத்தில் ஒருநாள், பானை கொண்டு செல்லும்போது மழைநீரில் வழுக்கிவிட, பானை உடைந்தது, தெய்வ கைங்கரியம் பாழ்பட்டதே என மன வருத்தத்தோடு மலைமீதேறி இறைவனிடம் மன்றாட சென்றான்.  ஆனால் அவனுக்கு முன்பாகவே, அவன் உருவமெடுத்து வந்தவர் புதுப்பானையை கோவிலுக்கு கொடுத்து பூஜையும் முடிஞ்சிருந்தது.  வந்தவர் பெருமாள் என உணர்ந்த கோவில் நிர்வாகிகள் பீமனின் பக்தியை மெச்சி அவன் நினைவாகவே   தினமுமொரு புது மண்பாண்டத்திலேயே  நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரித்து படைக்கிறார்கள். 
வெள்ளிக்கிழமைகளில் இங்கு வெங்கடேச பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று  ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின்போது, பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப் பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடக்கும். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.
மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன்  திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும்.


எட்டாயிரம் சதுர கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஏழுமலைகள் 50 கோடி வருடங்கள் பழமையானது. கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் இருக்கிற இந்த "திருமலை" உலகத்திலேயே அதிகமாக தரிசிக்கப்படுகிற கோவிலாகும்.  ஒரு நாளைக்கு சராசரியாக 60000 லிருந்து 70000 மக்கள் வருகிறார்கள். விழாக்காலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருவாங்க.
பல்லவர்கள் காலத்தில்தான் ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு சொல்லுது.  2-ம் தேவராயுலு அரசர் காலத்திலும் பல வகையான பிரசாதங்கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன. அவரிடம் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்கென்றே பல தானங்களை செய்துள்ளார். 
இப்ப மாதிரி போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில்  திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக புளிசாதம், தயிர்சாதம் மாதிரியான பிரசாதங்களே விநியோகிக்கப்பட்டன. இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் வீட்டுக்கு போவதற்குள் கெட்டு போனதால் ஊற வைக்காத உளுந்தை உப்பு சேர்த்து அரைத்து, மிளகு, சீரகம் மட்டுமே சேர்த்த  வடை மட்டுமே அதிகமாய் விற்பனை ஆனது.

இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகு இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது. லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என சொல்வாங்க. ஒரு லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ சொல்வாங்க. லம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம்.  பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ அளவுள்ள பொருட்களைக்கொண்ட 852கிலோ பொருட்கள் சேர்ந்ததே ஒரு படி.  லட்டு ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு   மூணு விதமா பிடிக்குறாங்க.  இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு கொடுப்பாங்க. சாமன்யர்களானா நாம வாங்கும் லட்டு 175கிராம் எடையுள்ளது. ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ என அழைக்கப்படும் இடத்தில்தான் லட்டு உட்பட அனைத்து பிரசாதங்களும் தயாராகிறது. பிரசாதங்களை  ஏழுமலையானுக்கு படைக்கப்படுவதற்குமுன், அவரின் வளர்ப்பு   தாயான வகுள மாதாவிற்குதான் முதலில் படைக்கப்படும் . அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படும். 1940-களில் ஒரு லட்டின் விலை 8 அணா. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்குது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு கிடைச்சிருக்கு, ஆனாலும் இப்ப மாடர்ன் கிச்சன் வந்தப்பின் பழைய ருசியும், அளவும் கிடையாதென்பதே உண்மை. 
1964ல் திருப்பதி கோவிலில் அன்னதான திட்டத்தினை கொண்டுவந்தபோது தெருக்களில் உக்கார வைக்கப்பட்டே உணவு பரிமாறப்பட்டது. முப்பது வருடங்களுக்கு முன்னர், அன்னதானத்துக்கென தனியாய் மண்டபத்தை கட்டினர். இதில் வரிசையில் காத்துக்கிடந்தே மக்கள் நொந்து போயினர். இதைக்கண்ட ஒருவர், தேவஸ்தான அதிகாரியை அணுகி, ஐயா! மக்கள் பசியோடு வரிசையில் காத்துக்கிடப்பது பார்க்க பாவமா இருக்குன்னு சொல்ல, அவ்வளவு அக்கறையா இருந்தால் நீ பணம் கொடு. உன் பேரில் பெரிய  கட்டடம் கட்டி, மக்களை நிக்க வைக்காம சோறு போடுறோம். இஷ்டமிருந்தா லைன்ல நின்னு சாப்பிடு. இல்லன்னா கிளம்பி போன்னு  எகத்தாளம் செய்ய, ஐயா! நான் எனக்காக சொல்லலை, அவரின் அனைத்து பக்தர்களுக்காகவும்தான் கேட்டேன்னுஅவர் தன்னிடமிருந்து ஒரு காசோலையை நிரப்பி கொடுத்தாராம்.
அதில் 25கோடிக்கு எழுதி இருந்ததை கண்டு திகைத்த அதிகாரி, அந்த பக்தரை யாரென விசாரிக்க தன் விலாசத்தை சொல்ல மறுத்து, தான் தொழில் தொடங்கும்போது சீனிவாசனை பங்குதாரராய் மனசுக்குள் நினைச்சு ஆரம்பிச்சதாகவும், அதன்படி வரும் வருமானத்தில் சீனிவாசன் பங்கினை வங்கியில் போட்டு வந்ததாகவும், அந்த பணத்தின் வட்டியினை அப்பப்போ வந்து உண்டியலில் போட்டு போனதாகவும், தான் போட்ட பணமுடிச்சின் அடையாளத்தை சொன்னாராம். முதலிலேயே சொல்லி இருந்தால் தகுந்த மரியாதை செய்திருப்போமே என நிர்வாகி சொல்ல. இது நண்பர்களுக்கான உறவு. இதில் யாரையும் சேர்க்க எனக்கு விருப்பமில்லை. அதனாலேயே வரிசையில் நின்று அவனோடு பேசியபடியே அவனை பார்ப்பது வழக்கமென கூறி சென்றாராம். அந்த பக்தர் கொடுத்த பணத்தில் கட்டப்பட்ட கட்டிடமே, இன்று புஷ்கரணி குளத்துக்கு பக்கத்திலிருக்கும் அன்னதான கட்டிடம். இதில் ஒரேநேரத்தில் 6000 பேர் சாப்பிடலாம். 
பேருந்து, ரயில், விமானம்ன்னு அவரவர் வசதிப்படி வந்து, கீழ்திருப்பதியிலிருந்து மூன்று வழிகளில் மேல் திருப்பதிக்கு வரலாம். பேருந்து மூலமாய் வரலாம். கட்டணம் 40ரூபாய்.   
அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஶ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4  முதல் 6 மணி நேரம்  ஆகும். இன்னொரு வழி இருக்கு. முழுக்க முழுக்க படிக்கட்டுகளால் ஆனது. அது வழியா போனால் 2 மணிநேரத்தில் போயிடலாம். வயசானவங்க இந்த பாதையில் போவதை தவிர்க்கலாம். மலை முழுக்க காவல், மருத்துவம், உணவு, குடிநீர், கழிவறை வசதி இருப்பதால் மீண்டும் மீண்டும் போகத்தூண்டுது. 

பனிரெண்டு வருசத்துக்கொருமுறை கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகம் இன்று (16/8/2018) காலை 10 மணிக்கு சிறப்பா நடந்தேறியது. 
ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.

கோவிந்தன் பெருமை பேச இந்த ஒரு பதிவு போதாது . புரட்டாசி மாசம் வருதுல்ல. அப்ப, ஒவ்வொரு வாரமும் ஏழுமலையானின் பெருமைகளை பார்ப்போம் . திருப்பதி போனால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகுமாம். கோவிந்தா! கோவிந்தா!  ஏழுகுண்டலவாடா! வெங்கடரமணா! கோவிந்தா கோவிந்தா!


நன்றியுடன்,
ராஜி