Thursday, September 02, 2010

தனிமை வேண்டும்

தனியே விடு,
என்னை தனியே விடு,
அழ வேண்டும் நான்,
என்னை தனியே விடு,

பெருஞ்சுமை நெஞ்சில் கனக்கிறது,
ஓர் பிரளயம் என்னுள் நடக்கிறது,
நெருஞ்சியின் மீது நடப்பதுப் போல,
என் நினைவுகள் என்னை வதைக்கின்றது.

உடம்பே வாயாய் அழவேண்டும்,
நான் "ஒ"வென்றலறி விழவேண்டும்.
வடிகால் தேவை.
இல்லையெனில் இவ்வ்வாரிதி என்னை விழுங்கிவிடும்.

ஊற்று மனற்கரைப் போல்
மனம் உருகி வழிந்திட வேண்டும்.
நீற்றுத் துகளெனத் துன்பம்
நீங்கிப் பொடிந்திட வேண்டும்.

வெந்த பசும்புண் போலே- இதயம்,
இந்த அழுகையின்றி மருத்துவத்தால் ஏதும் பயனுண்டோ?
தனியே விடு என்னை.
ஒற்றை சிறிய கிளை- முற்றி உடைந்த
பலாப் பழத்தைப் பற்றியே தாங்கிடுமோ?
தளைகளை விட்டு விடுபடவேண்டும்.
தாங்கும் சுமைகளை இறக்கிட வேண்டும்.

நன்றி,
iyarkai-kathalan.blogspot.com

தனிமை

பகிரப்படாதநேசம்
என்னைக் கொல்கிறது.


தனக்குத் தானேக்
கட்டிக்கொண்ட கைகளின் தனிமைப் போல

நன்றி,
திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன்

Wednesday, September 01, 2010

என் மரணம்

நாளை நான் இறந்துவிடுவேன்..,
எனக்கு பிடித்த முற்றத்து மல்லியும்,
வேலியோரத்து செவ்வரளியும்
வழமைப் போல் பூக்கும்
இதை நானறிய மாட்டேன்....,

மரண ஓலம் வீட்டை நிறைக்கும்,
இன்னார் என்று அழைத்ததுப் போய்
"பொணத்தை எப்போ எடுப்பாங்களாம்"
உறவினர்களின் அன்பான விசாரிப்புகள் தொடரும்,
இதையும் நானறிய மாட்டேன்....,

மாமரத்து உச்சியினில் கூடுகட்டி வாழும்
தூக்கனாங்குருவியும்
ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு செல்லும்.
பின்பு, மறந்துவிடும்.
உறவுகள் அழும்,
ஒன்று, இரண்டு, மூன்று மாதங்கள்....,
முழுதாய் ஓட
என்னை மறந்து, என் முகமும்
மறந்துவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாய்
சுவற்றில் சித்திரமாய்
என் படமும் ஏறிவிடும்.
இதையும் நானறிய மாட்டேன்..,

ஓர் வருடம் ஆகி விட்டாலோ,
எல்லோரும் என்னை மறந்து விடுவர்.

ஆனாலும்,
எனக்காக எங்கோ தொலைதூரத்தில் ஆத்மார்த்தமாய்
இதயத்தின் வழியெல்லாம்
ஒன்றுசேர,
ஒரேயொரு ஜீவன் மட்டும்
எப்பவும் எனக்காக,
ஊமையாய் அழுதுகொண்டு இருக்குமா?


- கவிதையின் கரு மட்டும் தந்த முகம்
தெரியாத நண்பருக்கு நன்றி

மரணத்தையும் தாண்டும் காதல்

விழி மூடும் மெல்லிசையில்
உதட்டோரப் புன்னகையில்
மென்மையாய் வருடிச் செல்லும்
உன் நினைவுகள்....,

என் மரணத்தோடு மடிந்துவிடுவதில்லை,
நம் காதல்.
என் மரணம் தாண்டியும் அது வாழும்..,

உன்னையும், என்னையும் போல்....,
எத்தனையோ ஜீவன்கள்....,
நிஜத்தையே காணமுடியாத
நிழல்களாய் போனாலும்,
நினைவுகளின் உயிர்குடித்தபடி
வாழ்வதால்தான்.......,
வாழ்கிறது
வாழ்வும்,உலகமும் .....,

ஒரே நிழல் ஒரே பாதச்சுவடு

அந்திவானம்
அலையில்லாக் கடலை அனைத்து
சிவப்பை பூசிக்கொள்ள
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே..,

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ.
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதினாயே

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,

ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,