Friday, July 27, 2012

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? (பதிவர்களுக்கு டிப்ஸ்)

                                                  
அடிச்சு பிடிச்சு கரெக்ட் டைமுக்கு ஆபீசுக்கு வந்து,  மேலதிகாரிக்கு ஒரு வணக்கம் வெச்சுட்டு,சீட்டுக்கு வந்து,   கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஒரு போஸ்ட்டை போட்டு அதை திரட்டிகளில் இணைச்சு, படபடன்னு மத்த பிளாக்குகளுக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு போஸ்ட்டை தேத்தி டிராஃப்ட்ல போட்டு, அதுக்கு படங்களைஇணைச்சு...,  நிமிர்ந்து பார்த்தா மணி பணிரெண்டுதான் ஆகியிருக்கும்.

சரி,  ட்விட்டர், மூஞ்சி புத்தகத்துலலாம் போய் அரட்டை அடிக்கலாம்ன்னு போய் பார்த்தா எல்லாரும், அன்னிக்குன்னு பார்த்து  சின்சியரா வேலை பார்க்க போய்ட்டு இருப்பாங்க. நம்மை சுத்தி எல்லாருமே வேலை(ஆபீஸ் வேலை) பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நமக்குதான் ஆபீஸ் வேலை செஞ்சு பழக்கம் இல்லியே. அதனால, நமக்கு போரடிக்கும், அதுமில்லாம நம்மளையே மேனேஜர் உத்து பார்க்குற மாதிரி நமக்கு தோணும்.

அதனால, நாம தீயா?! வேலை செய்றோம்ன்னு சீன் போட்டாகனுமே, அதுக்குதான் சில டிப்ஸ்..., டிரை பண்ணி பார்த்துட்டு ரிசல்ட் என்னன்னு  சொல்லுங்க...



   1. உங்க மானிட்டரில முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ இல்ல  கோடையோ (code) திறந்து வச்சுட்டு..., ஏதையோ  யோசிக்குற மாதிரி,  அதையே பார்த்துக்கிட்டு இருங்க . பார்க்குறவங்கலாம்  நீங்க பிஸியா இருக்கீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

2. அடிக்கடி நெத்தியை சொறிஞ்சுக்கோங்க. . எப்ப பார்த்தாலும்னெத்தியை சொறிஞ்சுக்கிட்டு இருந்தாலும் சந்தேகம் வந்துடும். அதனால, கொஞ்சம் மாத்தி  பல்லை(உங்க)  கடிச்சுக்கோங்க.  ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செஞ்சுட்டு யோசிக்குற மாதிரி  பாவ்லா காட்டுங்க.

3. கம்ப்யூட்டர் மவுஸையூஸ் பண்ணாம  கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை யூஸ் பண்ணா பிஸியா, வேகமாக வேலை செய்ற மாதிரி தோணும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைச்சுக்கிட்டும்,  வெறிச்சிக்கிட்டும் பாருங்க. கூடவே நகத்தையும் கடிங்க.

.5. சீட்டுல சாய்ஞ்சு  உட்காராம முன்னால இழுத்து விட்டு, சில நிமிசங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிங்க.

6. அப்பப்போ பேப்பர் ஃபைல்களை கலைச்சு விட்டு பெருமூச்சு விடுங்க. நீங்க முக்கியமான பேப்பர் எதையோ தேடுறீங்கன்னு  நினைச்சுக்குவாங்க. கடைசியில எதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." இல்லைன்னா  "சக்சஸ்" ன்னு  சொல்லுங்க.

7. எங்காவது எழுந்து போகும்போது,  வேகமாக நடந்து போங்க. ஏதோ முக்கியமான விஷயத்துக்காக நீங்க  போறீங்கன்னு  மத்தவங்க  நினைச்சுக்குவாங்க.

8. உங்க கைகளை பிசைஞ்சுக்கோங்க. , கைவிரல்கள்ல சொடக்கு எடுத்துக்கோங்க . அப்பப்போ டென்ஷனா டேபிளில் ஒரு தட்டு தட்டுங்க.

9. உங்க மானிட்டருக்கு பகக்த்துல,   எப்பவும் ஒரு நோட்டையும்,பேனாவையும் திறந்தே வையுங்க. அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை, நம்பர்களையும் கிறுக்கிக்கிட்டிருங்க.

10. ஆபீசுக்குள்ள எங்கே போறதாயிருந்தாலும் கையில ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு போங்க. நீங்க முக்கியமான மீட்டிங்குக்கோ, இல்ல  ஹிண்ட்ஸ் எடுக்கவோ போறீங்கன்னு நினைச்சுக்குவாங்க.

11. ஆபீஸில் நடந்து போகும்போது எதிர்க்க வர்றவங்க  சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாம போங்க. அப்பதான் நீங்க டென்ஷனா வேலை செய்யுறதா நினைச்சுக்குவாங்க. அப்புறமா அவங்ககிட்ட போய் பிஸியாக இருந்தேன், ஸாரி ன்னு  சொல்லிக்கலாம்.

12. சரியாக காபி வர்ற நேரத்துல எங்காவது எழுந்து போய்டுங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து  காபி கேளுங்க. மீட்டிங் போயிருந்தேன், ஃபைல் தேடினேன்னு புருடா விடுங்க.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நாலு இல்லை அஞ்சு அப்ளிகேஷன்களையோ இல்ல பைல்களையோ திறந்து வெச்சுக்கோங்க. அப்பப்போ  அதையெல்லாம்  ஓபன் செஞ்சு,  குளோஸ் செஞ்சு, மாத்திக்கிட்டே இருங்க. 

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கிட்டிருங்க. சீரியஸா முகத்தை வச்சுக்கிட்டு  குறுக்கும் நெடுக்கும் நடங்க.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயா  இருந்தா (உங்களைப் போலவே வெட்டியா இருக்குற) உங்க டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்க. போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டுட்டு வாங்க.

16. முதல்ல  வர்ற  காபியைக்குடிக்காதீங்க. அப்படியே ஆற விடுங்க. மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிங்க. கொஞ்சம் பிஸியா இருந்ததால காபி குடிக்க முடியவிலைன்னு  (மற்றவர் காதில் விழும்படி) சத்தமா  சொல்லுங்க.



17. இதையெல்லாத்தையும் மீறி உண்மையாவே ஏதாவது ஆபீஸ் வேலை செய்ஞ்சுட்டா?!  அதை மத்தவங்ககிட்ட  சந்தோஷமா சொல்லுங்க.. நம்ம பெருமையை நாமளே பேலைன்னா,   நமக்காக யார் பேசுவாங்க!?

டிஸ்கி: இதையெல்லாம் டிரை செஞ்சு பார்த்துட்டு நெகடிவ்வா ரிசல்ட் வந்தா..., நிர்வாகம் பொறுப்பல்ல.

Wednesday, July 25, 2012

அம்மாவின் அறிவுரை

சலிச்சு எடுத்த அரிசியை கையில் எடுத்து!!
பாத்திரத்தில்  போட வண்டுகள் குடு குடுவென ஓட!!
என் மனசோ படபடப்பில் அங்கும் இங்குமாய் ஆட !!
நான் என்ன தவறு செய்தானோ என்று நினைவலை ஓட!!!


முன்னொரு நாள் சமையல் செய்ய நான் நாட !!
கையில் ஈரத்தோடு அரிசி அண்டாவை தேட !!
நான் மெல்ல மெல்ல நடந்து!!
கால்படியை எடுத்து ஈரக்கையுடன் !!
அண்டாவில் விட்டேன் !!


அரிசியும் வந்தது நேக்காக!!
இது போல் தவறு செய்தேன்!!
பல முறை சமத்தாக !!
அது சரி வந்தேன் நிகழ காலத்துக்கு அதிரடியாய் !!
சடக்குன்னு சொடுக்கு போடும் முன் !!

அம்மா சொன்ன விஷயத்தை !!
பின்பற்றவில்லை அன்று!!
நான் வருந்துகிறேன் இன்று!!
ஈர கையில எடுகாதடி என்று !!
அவர் சொன்ன வாக்கியம் தான் அது!!


வண்டுக்களுடன் தினமும் !!
ஒரே போராட்டம் தான் !!
ஆடு புலி ஆட்டம் தான் !!
என் பாடு திண்டாட்டம் தான்!!
ஆனால் நான் தான் சாமர்த்தியமாக!!
ஜெயிக்கிறேன் லாவகமாக!!

Thursday, July 19, 2012

மலர்களே! மலருங்கள்...., பாசப்பைங்கிளியை வாழ்த்த வாருங்கள்

 எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோர்...,

வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் மருத்துவரை நாட, அவரின் தவறான கணிப்பில் குழந்தை இறந்துவிட்டது. ஸ்கேன் செய்து பார்த்துட்டு  ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதை கேட்டு அலறி அடிச்சுக்கிட்டு...,

பெரிய ஆஸ்பிட்டலுக்கு செல்ல, குழந்தை பூரண நலம். கடைசி சில நாட்கள் குழந்தையின் அசைவு தாய்க்கு அதிகம் தெரியாதென்று வயிற்றில் பால் வார்க்க....,

 பதினெட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில், துணியில் சுற்றப்பட்ட பொற்குவியலென கையில் வாங்கினேன்.பிரசவ வலி சிறிதும் இன்றி, ”என் மகளை”

                         

அன்றைய தினத்தை தவிர,  அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா.

என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள்...

நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ.



                                              

என் பெரிய பொண்ணு தூயா, படிப்புல, பேச்சுல, நடத்தைலன்னு படு சுட்டி. அவ,  ரெண்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த போது ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா.

அவக்கிட்ட, ஒரு இங்கிலிஷ் வார்த்தை சொல்லி அதுக்கு மீனிங்க் கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டா.

அடுத்து சின்ன, சின்னதான வாக்கியம் சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிக்கிட்டே வந்தா..., அந்த நேரம் பார்த்து என் ஃப்ரெண்ட் வந்தாங்க. அவங்க  எதிர்க்க பெருமை பீத்திக்கனும்ன்னு  "I AM READING WELL"க்கு மீனிங்க் சொல்லுன்னு கேட்டேன்....

”நான் கிணத்துக்குள்ள இருந்து படிக்குறேன்”ன்னு சொல்லி குண்டை தூக்கி போட்டா.  ஏண்டி, தப்பா  சொல்றே? மீனிங்க் தப்பா வருதேன்னு கேட்டா..., READINGன்னா படிக்குறது, WELLன்னா கிணறு. ஒண்ணா சேர்த்தா, கிணத்துக்குள்ளிருந்து படிக்குறதுன்னு சொல்லி என்னை அசடு வழிய வெச்சா.
 
                                   



நிலவுக்கும், தமிழுக்குமான
ஒரு ஒற்றுமை “தூய்மை”..,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்

நிலைகொண்ட உனக்கு 
யோசித்து...,பெயரிட்டான்...,
உன் மாமன்  அப்பெயரினை,
”தூயா”வென.

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!
என்னைத் தாயாக்கிய பெண்ணே,

நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!
கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

சமையலை  கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!
தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும்,
குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல்
பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும்
குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

கல்வியிலே சிறப்புற்று
பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்வாய்!

'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுவேனடி, பெண்ணே,
உன்னால் பேரின்பம்!

இத்தனையும் செய்துமுடிக்கப் போகும் நீ
போனால் போகிறதென்று?!
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய்
வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான்,
பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினெட்டாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
"பதினாறு" பேறும்
தவறாமல் சேரட்டுமமெஎன்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி!



 டிஸ்கி: இந்த கவிதையை கீத மஞ்சரியிடமிருந்து சுட்டுக்கிட்டேன். பர்த்டே அதுவுமா அவ போடுற ஆட்டத்தை பார்க்க இங்க போங்க
  

Tuesday, July 17, 2012

வந்தேன்.., வந்தேன்..., மீண்டும் வந்தேன் நானே!


                                                 
வணக்கம் உறவுகளே நலமா?  

என்னடா! ராஜி கொஞ்ச நாளா பதிவேதும் போடாம இருக்கே, அப்பாடா இனி நிம்மதியா இருப்போம் னு..., நீங்க  பெருமூச்சு விட்டுக்கிட்டு ஹாயா இருந்தால்.....,

 SO, SORRY. ஏன்னா ?   I CAME BACK கொஞ்ச நாளா பதிவேதும் போடமுடியாத சூழல் . ஏறத்தாழ 2 வருசமா வலையில் எழுதி இருந்தாலும் சொல்லிக்குற‌ மாதிரி ஏதும் எழுதலை. ம்க்கும். அதுக்கே உன்னோட அலம்பல் தாங்க முடியலை. எழுதியிருந்தால் அவ்வளவுதான்ன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது. 

 SO, இனிமேலாவது எதாவது சொல்லிக்குறமாதிரி எழுதமுடியுதானு பார்க்கலாமினுதான் இந்த Re-Entry. யாருப்பா அது, மவுசை,  குளோஸ் பட்டன்கிட்டக் கொண்டுப் போறது. பிச்சுப்புடுவேன் பிச்சு. 

   பதிவு எழுதி, கமென்ட் போடுறது அவ்வளவு ரொம்ப  முக்கியமாக்கும்ன்னுலாம் கேட்கப்படாது..., கேட்டால் பதில் சொல்ல தெரியாது. அப்புறம் அழுதுப்புடுவேன் அழுது. சொல்லிப்புட்டேன் ஆமாம். 

 இதுவரைக்கும் சைலண்டா இருந்த என் வலைப்பூ இனி,  தாரை, தப்பட்டை, சங்குடன் கலக்க வருது (சனியனே தாரை தப்பட்டைலாம் கடைசி நேரத்துல வாசிக்கிறது.)   

இனி,  பொழுது போகாத வேளைகளில் பல மொக்கை பதிவுகளோடு வருவேன். நீங்களும் படிச்சுட்டு கமென்ட் போடணும். அது உங்க தலையெழுத்து நான்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. அடிக்கடி வந்து வலைப்பூவை எட்டிப் பார்த்துட்டு போகணும்.  இல்லாட்டி தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க யாருன்னு தெரியாம போய்டனும்ன்னு இஷ்ட தெயமான ஆஞ்சிநேய சாமிக்கிட்ட வரம் வாங்கி வந்திருக்கேன்.

டிஸ்கி:  சில  சொந்த சூழ்நிலைகளின்  காரணமாக வலைப்பக்கம் வராம இருந்தாலும்,  நிறைய உறவுகளின் தரமான பதிவுகளை மிஸ் பண்ணி இருக்கேன்.  இனி தொடர்ந்து வந்து,  படித்து, கருத்துக்களை சொல்வேன்.

Thursday, June 28, 2012

பிரிவோம்..., சந்திப்போம்...,

ஆனந்தத்தின் உச்சியில் அமர்ந்து ஏகாந்திருந்த வேளையில் நன்பனின் தோழியாய் அறிமுகமானாய்...,
 
ஏதோ சில பொழுதுகளில் சந்தித்த போது ஒரு சில வார்த்தைகளில் கருத்துகளை பரிமாறி கொண்டோம்...,

என்னை வீழ்த்த நான்கு  திக்கிலுமிருந்து  அம்புகள் பறந்து வந்து தாக்கிய போது, என்னை காயத்திலிருந்து மருந்திட்டு  காப்பாற்றியவள் நீ....

சோக மேகம் மீண்டும் சூழாமல் என்னை தாயென தாங்கியவள் நீ அந்த நன்றியை என்றும் மறவேன்...,

என் கருத்துக்களை முகம் சுளிக்காமல் கேட்டு...,  நிறை குறைகளை எடுத்து சொல்லி பாராட்டி, என் தகுதிக்கும் மீறிய இடம் அளித்தவள் நீ...,

என் கிறுக்கல்களுக்கு காமதேனுவாய்  நினைத்து கூட பார்த்திராத  இடங்களிலிருந்து,  முகம் தெரியா பல உன்னத உறவுகளை எனக்கு பரிசளித்தாய்...,

மீண்டும் அதே போல் எட்டு திக்கிலிருந்தும் ஒரு தாக்குதல்...,


ஆறுதல் தேடி உன்னிடம் வரலாம் என்றால், என் விரக்தியினால் வரும் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி நம் நட்பை உடைக்கலாம்..,

சோகத்திலும், கோபத்திலும் வார்த்தைகள் தடிக்கும் என்பது நான் கண்கூடாக கண்டது..., தேவையா அந்த விசப்பரிட்சை?! 

எனவே, சில காலம் பிரிந்திருப்போம்...,  கால ஓட்டத்தில் என் காயம் ஆறும்... அப்போது சந்திப்போம்...,

மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்  என் பதிவுலக தோழியே!