Thursday, March 02, 2017

பாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா??!!

 உலகத்துக்கே பாலியல் பற்றி எடுத்து சொன்ன தமிழ்நாட்டில் இன்று வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதோடு இன்னுயிரையும் இழக்கின்றனர். இதற்கு பாலியல் பற்றிய முறையான கல்வியும், விழிப்புணர்வும் இல்லாததாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததே காரணமாய் அமைகின்றது.
மதம், குடும்பம், பொருளாதாரம் உட்பட  பலவித கட்டுப்பாடுகளை போராடி தகர்த்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்களால் இனி பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழப்போவது நிச்சயும். தமிழ்நாடே உசிலம்பட்டியாய் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை மிருகங்களைவிட கீழானவர்கள். ஏனெனில் எந்த மிருகமும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்க பாலியல் கல்வியும், வளர்ப்பு முறையும், சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கடுமையான தண்டனை இல்லாவிட்டால் சிறை அல்லது அபராதம்தானே என்ற அலட்சியம் வரும். மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுவர். ஆனால், நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைப்பெறுகிது.  மற்ற நாடுகளில் இருப்பதுப்போல கடுமையான தண்டனைகள் கொடுத்தால் ஓரளவு குறையும்.

இனி பல்வேறு நாடுகளில்  கொடுக்கும் கடுமையான தண்டனை பற்றி பார்ப்போம்...


சீனா;

 சீனாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களிலேயே வக்கிரமான, சைக்கோக்களுக்கு ஆண்மை நீக்கப்படும். உதாரணமாய் சீனாவின்  கான்சு மாகாணத்தின் வுஷுன் நகரின் அருகேயுள்ள கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லி ஜிஷுன் என்பவர் கடந்த 2011-2012 ஆண்டுவாக்கில் 4 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 25 மாணவிகளிடம் வகுப்பறை, தங்கும் விடுதி மற்றும் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாலியல்ரீதியாக முறைதவறி நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகவும் குழந்தைத்தனமாகவும், அப்பாவியாகவும் இருக்கும் சிறுமிகளை தேர்ந்தெடுத்த லி ஜிஷுன், தனது இச்சைக்கு அவர்களை இரையாக்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபணமாகி மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது ஆண்மையும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான்;

ஈரான்  நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக ஈரானில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் கொராசான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிலேயே அதிகமானோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதிவிசாரணைகளின் பின்னரே மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. கொலைபாலியல் வல்லுறவு, ஆயுத முனைக்கொள்ளைபோதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான்;

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துநான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள். அதேப்போல  திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு கொண்டால் ஆப்கானிஸ்தானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 100 கசையடிகள். 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் இந்த கசையடி தண்டனை வழங்கப்பபட்டது. அவர்கள் திருமணத்துக்கு முன்பு  பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இப்படி பலவிதமான தண்டனைகள் இந்த பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்றுஅவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல்துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ்; .

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்குமரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாகஅவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.
வடகொரியா;

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.
ரஷ்யா;

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவிலும் நம் நாட்டைப்போல கடுமையான சட்டங்கள் இல்லை. இங்குபாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்கா;
 அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு அந்நாட்டு சட்டத்தின் கீழ்சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும். ரஷ்ய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் அப்ரமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அப்ரமோவ்கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூனில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்ரமோவ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்ரமோவ்சிறுமியை ஈவிரக்கமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஓடிஸ் ரைட் தீர்ப்பளித்தார்.
சவுதி அரேபியா;

சவுதி அரேபியா உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும்படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால்பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

இந்தியா;


இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் ஈடுபட்டவனுக்கு தையல்மெஷின் கடை வைத்து கொடுத்த கூத்துலாம் இந்தியாவில் நடந்தேறியது. ஜாதி, மதம், அரசியல், பண தலையீடுகளால் இத்தகைய பல குற்றங்கள் வெளிஉலகிற்கு வராமலே புதைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும்இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குகிறது. அதனால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான்யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
இத்தகைய பாலியல் குற்றங்கள் இனி தொடர்ந்து நடைப்பெறாமலிருக்க பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பில் மாறுதல், உணவு கட்டுப்பாடு, சமூக மாற்றத்தோடு முறைப்படுத்தப்பட்ட ஆன்மீகமும் கொண்டு வரவேண்டும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, March 01, 2017

ப்ளஸ் டூ தேர்வெழுதுவதில் இத்தனை விசயம் இருக்கா?!

தேர்வுக்கு செல்லும்  மாணவர்கள் கவனத்திற்கு:
1.தேர்வு நடைப்பெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்றுவிடுங்கள்.. இது தேவையற்ற பதட்டத்தை தடுக்கும். 

2.  தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்கு கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிண்ட்ரி பாக்ஸ் , ஹால் டிக்கட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
3. வீட்டில் தேர்வுக்கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த தேதியில் எந்த தேர்வு என்பது குறித்து சந்தேகம் ஏற்படாது. 

4. தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்றுவிட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனும் தேவையில்லாமல் அரட்டை அடிப்பதும் பாடம் சம்பந்தமானதையும்கூட விவாதம் செய்யாதீங்க.  இதை படிச்சியா?!  அந்த கேள்வி கண்டிப்பா வரும்ன்னு வீண் குழப்பங்களை அது உருவாக்கும்.
5. தேர்வு மையத்திற்கு சென்றபின் நேரமிருந்தால் முக்கிய குறிப்புகளை பார்க்கலாம். புதிதாய் எதையும் படிக்காதீங்க. 

6. தேர்வு அறைக்குள் செல்லும்முன் உங்களிடம் எழுதப்பட்ட தாள்களோ அல்லது ஜெராக்ஸ் பிரதிகளோ இருக்கிறதா என பார்த்து அதை  வெளியிலேயே போட்டு விடுங்கள். கவனக்குறைவாய்  தேர்வெழுதும்போது  எதாவது தாள் இருந்து அறை கண்கானிப்பவரிடமோ பறக்கும் படையிடமோ மாட்டிக்கொண்டால் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது.

7. அறைக்குள் நுழைந்ததும் தங்களுக்குரிய இடத்தை கண்டுப்பிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சு பயிற்சி செய்தால் நலம். இதனால் மன அழுத்தம் குறையும்.

8.  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதட்டப்படாமல் படித்துப் பார்த்து கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதை பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விக்களுக்கான பதில்களும் எளிதில் ஞாபகத்தில் வரும். 
9. தேர்வு எழுதும்போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

10.  தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா, பென்சில் போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. தேர்வின் போது தேவையில்லாமல் திரும்பி பார்த்தல், சைகை மொழியில் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் ரிலாக்சாக அமருங்கள். தேர்வு நேரத்தில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை  பார்க்காமல், தேர்வு எழுதுவதிலேயே முழுக்கவனம் செலுத்துங்கள். 

11. தேர்வு நேரமான மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்துவிட்டு, மிச்ச நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா, விடைத்தாளில் தேர்வு எண் சரியாக இருக்கிறதா? விடைத்தாளில் கேள்விக்கான  எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைக்காமல் கண்கணிப்பாளர் வசம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.
இனி மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு..

உங்கள் குழந்தைக்கு தேர்வு பயம் வந்தால்.., நீங்கள்  கவலை கொள்ளாமல் உங்கள் குழந்தைக்கு தைரியமூட்டுங்கள். தேர்வில் வெற்றி பெற பக்கபலமாக இருங்கள்.....

பெரும்பாலும் நன்றாக படிக்கும் குழந்தைகள் கூட தேர்வு என்றாலே காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுவது சகஜம். ஏதோ ஒருவித படப்படப்பு வயிற்றில் பட்டாம்பூச்சி ஓடுவது போல தோன்றும். அந்த சமயத்தில் பெற்றோர்களான நீங்கள் தான் உதவ வேண்டும்.

பொதுவாக இந்த பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வருவது தான். சில மாணவர்கள் தேர்வு எழுதுவதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து கொண்டு இருப்பார்கள். சரியாக சாப்பிடாமல், இரவில் சரியாக உறங்காமல் ஒருவித பயத்துடனே காணப்படுவார்கள் அது மிகவும் தவறான விஷயமாகும். தேர்வுக்கு செல்லும் முன் சில விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது.
தேர்வுக்கு செல்லும் முன் முதலில் என்ன தேர்வு எழுத போகிறோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். மனதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு நேரத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்வது நல்லது. சத்தான உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் மூளைக்கு சுறு சுறுப்பு ஏற்படும்.

சரியாக படிக்காத குழந்தையாக இருந்தாலும், முக்கியக் கேள்விகள், மிகவும் எளிதான கேள்விகளை நன்கு படித்துக் கொண்டால் போதுமான கேள்விகளுக்கு பதிலளித்து தேர்வில் தேர்ச்சி பெறலாம் எளிதாக.
தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த வித மன குழப்பமும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஏற்படும் எந்த பிரச்சனையும் பிள்ளைகள் மனதை பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது பெற்றோர்கள் கடமையாகும்.

தேர்வு எழுதி வந்தவுடன், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் எழுதினே, இந்த கேள்வியை ஏன் விட்டு வந்தே, நூறு மார்க்குக்கு மட்டும்தானா எழுதினேன்னு கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்யாதீர்கள். அது அவர்களை பதட்டப்படுத்தி அடுத்து வரும் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது பதட்ட பட வைக்கும்.

தேர்வெழுதி வந்தவுடன் சிறிது நேரம் தூங்கவோ, இல்லை மெல்லிய இசையையோ ரசிக்க விட்டு பிறகு படிக்க விடுங்கள். அது புத்துணர்ச்சியுடன் அவர்களை படிக்க வைக்கும்.
ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதை ஏற்று கொள்ளும் பக்குவம் உங்களுக்கிருப்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அது, அவர்களை தவறான முடிவுகளை எடுக்க வைக்காதிருக்கும்.

தேர்வெழுதும் அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் என் வாழ்த்துகள். எல்லாரும் தேர்வில் வெற்றி பெறனும்ன்னு இறைவனை வேண்டிக்குறேன். அப்படியே என் மகன் ராம்ஜியும் இந்த வருசம் பரிட்சை எழுதப்போறான். அவனுக்காக நீங்க வேண்டிக்கோங்க.
தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கபடுத்துங்கள் தேர்வில் வெற்றி பெற துணையாய் இருங்கள்.  

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.....
நன்றியுடன்,
ராஜி.


Sunday, February 26, 2017

மயான கொள்ளை - மேல்மலையனூர்


மயான கொள்ளை,,காவேரிப்பட்டினம் கிருஷ்ணகிரி 

 பெரும்பாலும் அங்காளம்மன் அல்லது அங்காளபரமேஸ்வரி வழிபாடு  கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, ஆற்காடு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படும் ஒரு வழிபாட்டுச் சடங்கே மயான கொள்ளை ஆகும். இதற்கு, மயானத்தில் நிகழ்த்தப்படும் கொள்ளைஎன்று பொருள்படும். ஆனால், “கொள்ளைஎன்பது திருட்டுஎன்ற  அர்த்தம் கொள்ளாமல் தீயதை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுவதாய பொருள் கொள்ள வேண்டும்.


மாசி மகாசிவராத்திரி அன்று நண்பகலில் நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்றிரவு  இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் (பார்வதி) படுத்திருப்பது போல் உருவமொன்று அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர். காலையில் பூசாரி பதினாறு கைகள் கொண்ட அம்மனை அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஏற்றுவர். காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள்.



 குறிப்பிட்ட குலத்தை சார்ந்த ஆண் ஒருவருக்கு புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, அனைத்து ஆபரணங்களும் சூட்டி, நீண்ட முடியுடன் அம்மனாய் உருவகப்படுத்துவார்கள்.  அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரலை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்கள் வீடு, கழனிகளில் விளைந்த காய்கறிகளை வீசுவர்.. உடல்நிலை சரியில்லாத போது வேண்டிக்கொண்டதற்கிணங்க பாதிக்கப்பட்டு சீரான உடல் பாகங்களின் உருவங்களை அரிசி மாவில் செய்து வீசுவர். குழந்தை வேண்டி வரம் பெற்றவர்கள் குழந்தை உருவம் செய்து வீசுவர். அதை முந்தானையில் பிடித்து குழந்த வரம் வேண்டுவோர் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் உருவாக்கியிருக்கும் அம்மன் மீதிருக்கும் மஞ்சள், குங்குமம். சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது.



அப்போது எடுக்கப்படும் மண், மஞ்சள், குங்குமம் சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தது  அதனை நிலத்தில் புதைத்தால் நல்ல விளைச்சல் உண்டாகும். அதனை பூசாரி திருநீறு போல் மக்களுக்கு வழங்குவர்.மயான கொள்ளைநிகழ்ச்சியின் போது பம்பைகாரர்கள் பாடல் இசைப்பார்கள். 



கேரளத்திலும், கேரளத்தையொட்டிய குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்த்தப்படும் அம்மன் கோயில்களில் களமொத்தும் பாட்டும்என்ற நிகழ்ச்சி மயான கொள்ளையோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. களமொத்து பாட்டு அம்மன் உருவத்தைத் தரையில் வரைந்து வண்ணம் தீட்டி பாடல் பாடியும் களச்சித்திரம் அழிக்கப்படும்.குமரி மாவட்டத்தில் நாயர் சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி நம்பூதிரி அல்லது பிராமணரால் பூசை செய்யப்படுகிறது. நம்பூதிரிதான் தரைச்சித்திரத்தை அழிப்பார். கால் பகுதியிலிருந்து சித்திரம் அழிக்கப்படுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் அரிசி திருமலை பிரசாதம்என நம்பப்படுகிறது.



இந்த அரிசியில் ஒன்றிரண்டை கஞ்சி வைத்து குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்குப் பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. சிதைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொடிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பேய், பிசாசுகளை விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.மயான கொள்ளை நிகழ்த்துதலில் காளி, அங்காளம்மன், காட்டேரி, பேய்ச்சி போன்ற பல வேடங்கள் போடப்படுகின்றன. வேடம் ஏற்பவர் பம்பை இசைக்கேற்ப ஆடுகிறார். பம்பைகாரர்கள் பாடும் பாடலும், ஆடலும் சிறப்பிடம் பெறும். ஆயினும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மயான கொள்ளை என்னும் வழிபாட்டு நிகழ்ச்சியின் சடங்குகளாக நிகழ்த்தப்படுகின்றன.


வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது, தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க யாகத்துக்கு வந்த தாட்சாயனி, தந்தையை சமாதானப்படுத்த முடியாமல்...  சிவனுக்கு தன் உயிரையே அவிர்பாகமாய் அளிக்க,  யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள்.

அம்பிகையின் உயிரற்ற  உடலைத் தூக்கிக்கொண்டு ஈரேழுலகத்தையும் சுற்றி வந்ததை காண சகியாத மகா விஷ்ணு தன் சுதர்ஷண சக்கரத்தை ஏவி தாட்சாயணி உடலை துண்டாடினார். அப்படி  அறுந்து விழுந்த அம்பிகையின் உடல் பாகங்கள் ச்கதி பீடங்களாய் முளைத்தன. துண்டாய் விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர்.அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.



Mayana Kollai Celebration in Tiruvannamalai

இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய  சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிச்சை இட்டு அந்த பிச்சைய ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிச்சை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.



அன்னையானவள் சுவை மிகுந்த உணவை தயாரித்து சிவனுக்கு பிச்சை இடத்தயரானாள். முதல் கவளத்தை சிவனின் கையிலிருந்த மண்டை ஓடு உண்டது. இரண்டாவது கவளத்தை வேண்டுமென்றே தவறவிட்டாள் அன்னை. உணவின் ருசியால் ஈர்க்கப்பட்ட மண்டை ஓடு உணவை சுவைக்க வேண்டி சிவனின் கையிலிருந்து நழுவியது..  மீண்டும் அக்கபாலம் இறைவனின் கைகளில் ஏறாமல் இருக்க அன்னையானவள் தன் கையிலிருந்த மிச்ச உணவை வானை நோக்கி இறைத்தாள்.  கபாலமும் உணவுக்காக வான் நோக்கி சென்றது.  அப்படி வான் நோக்கி பறந்த கபாலத்தை விஸ்வரூபமெடுத்து தன் கால்களால் பூமியில் அழுத்திகொண்டாள்.

அப்படி சிவனின் பிரம்மஹத்தி தோசம் நீங்கிய நாள் மாசி மாத அமாவாசை தினம். அதன் நினைவாகவே இன்றும் மயான கொள்ளை நடத்தப்படுது. சிவன் கையிலிருந்து கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடிதாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.


மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன்னுடைய பூரண வலுவோடும்பலத்தோடும் இருப்பாள். .இப்படி பட்ட சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசேஷம் மயான கொள்ளை. மாசி அமாவாசையில் அங்காளம்மனுக்கு மயான கொள்ளை ஒரு தனி சிறப்பு.  மேல்மலையனுரில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது இந்த மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு (ஒரு பக்தர் இவ்விதம் அலங்கரிக்கப்படுவார்) கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.




ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிவிக்க விஸ்வரூபமெடுத்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்திபடுத்தவே எலுமிச்சை மாலையும், வேப்பிலை மாலை, உடையை சார்த்தியும், ஒவ்வொரு  அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடியும் அம்மனை சாந்தப்படுத்தகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காணவரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது..

நாமும் இந்த அங்காளபரமேஸ்வரி , அம்மனுடைய அருளை பெறுவோம்..

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....
நன்றியுடன்,

ராஜி 

Friday, February 24, 2017

குரங்கு சக்ரவர்த்தியான கதை- மகா சிவராத்திரி

விநாயகர் சதுர்த்தி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்திலாம் அந்தந்த இறைவனின் அவதாரங்களின் தினங்களை குறிப்பிட்டு நடத்தப்படும் விழாக்களாகும். ஆனால், பிறப்பும், இறப்புமில்லாத சிவனுக்கு ஜெயந்தி விழா என்பது கிடையாது. ஜெயந்தி விழா இல்லாத குறையை தீர்க்க ‘மகா சிவராத்திரி’ கொண்டாடப்படுது.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுது. உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும்,  காத்த உயிர்கலை தன்னுல் ஐக்கியப்படுத்திக்கொள்ளுதலும் இந்த நாளில்தான் என்கிறது நம் புராணங்கள். இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம்’ எனப்படுது. ‘லயம்” என்றால் ஒடுக்குதல்.  ஸ்ருஷ்டி என்றழைக்கப்படும் ‘படைத்தல்’.  அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே ” மகா சிவராத்திரி’ ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை பெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதி தேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நீக்கி நான் எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே  ’மகா சிவராத்திரி’  கொண்டாடப்படுது.

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின் முன் பூஜை செய்து, அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். அன்று சிவன் கோவில்களில் நடைப்பெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பால், தயிர், தேன், இளநீர்.. போன்ற பொருட்களை வழங்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
விரதம் இருக்கும் முறை;
குளித்து முடித்து பூஜை செய்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்லது. பூஜை அறையிலோ அல்லது கோவில்களிலோ சிவலிங்கத்தை அலங்கரித்து இரவு முழுவதும் விழித்திருந்து நாலு கால பூஜைகளில் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள்

  குறைந்த பட்சம் லிங்கோற்த்பவ காலத்திலாவது கண்விழித்திருக்கவேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் சிவாய நம ஓம்... ஓம் நமச்சிவாய.. என சிவ நாமத்தை தியானம் செய்ய வேண்டும். சிவன் தொடர்பான கதைகள், திருவாசகம், திருமூலர், திருமந்திரம்.. போன்றவற்றை படித்தல் நல்லது.. அதைவிடுத்து, தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் கவனம் செலுத்துவதை தவிர்த்தல் நலம்...

இனி நாலு கால பூஜை விவரங்களை பார்ப்போம்...

முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது.  இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
மூன்றாம் கால பூஜை:
 இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின்  அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.
நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம்,  வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து  அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

சிவராத்திரி விரதத்தின் பலன்கள்;
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும், பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.   வேடன் ஒருவன் புலி துரத்தலுக்கு பயந்து மரத்தின் மீதேறி உறங்காமலிருக்க  மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழ போட்டும், சுரைக்குடுவையிலிருந்த நீரை சொட்டு சொட்டாய் ஊற்றியும் உறங்காமலிருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வம் மரம், அவன் பறித்து போட்டது அதன் இலைகளை... நீர் ஊற்றியது மரத்தினடியிலிருந்த சிவலிங்கத்தின்மீது,. இன்னதென தெரியாமல் செய்ததன் பலன்?! பிறவா நிலை..

பிரம்மா தவமிருந்து சரஸ்வதி தேவியையும், விஷ்ணு தவமிருந்து மகாலட்சுமியை மனைவியாய் பெற்றது இதே நாளில்தான். எனவே நல்ல துணை வாய்க்க, திருமணமாகாதோர் இந்நாளில் விரதமிருப்பது நலம்.
பாண்டவர்களில் ஒருவனான பீமன் தன் வீரம் பற்றி அகந்தை கொண்டிருந்தான். அவனது அகந்தையை அழிக்க விரும்பிய கிருஷ்ணர் ஒரு புருஷா மிருகத்தை அனுப்பினார். சிங்க முகம், யானையின் தும்பிக்கை, நீண்ட உடல் என்று வித்தியாசமான விலங்காக அது இருந்தது. அதனுடன் பீமன் முழுபலத்துடன் போரிட்டான். ஆனால், புருஷா மிருகத்தின் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கதறிக் கொண்டே ஒரு இரவு முழுவதும் ஓடினான். அந்த இரவு சிவராத்திரி இரவாக அமைந்தது. இப்படி சிவராத்திரி இரவில் உறங்காமல் இறை நாமத்தை உச்சரித்ததால் பீமனை சிவன் காப்பாற்றினார்.
சிவராத்திரி அன்று வில்வ மரத்தடியில் அம்மையும் அப்பனும் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை மரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று கேட்டது. தான் உறங்காமலிருக்க மரத்தின் இலைகளை பறித்து அம்மையப்பன் காலடியில் போட்டது. நாலு காலமும் விழித்திருந்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததை ஏற்றுக்கொண்ட அம்மையப்பன் அக்குரங்கிற்கு  மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்த பலனும், அடுத்த பிறவியில் முகுந்த சக்ரவர்த்தியாக பிறக்க அருளினார். சிவராத்திரி மகிமையை உலகம் அறிய குரங்கு முகத்தோடவே தான் பிறக்க வரம் கேட்டது குரங்கு. அப்படியே முகுந்த சக்ரவர்த்தியை பிறக்க வைத்தார்.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் வேண்டி சிவப்பெருமானை கும்பக்கோணம் அருகில் உள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலமும், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்திலுள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரிலுள்ள நாகேஸ்வரை நாங்காம் காலத்திலயும் வழிப்பட்டு ஆதிஷேசன் பேறுகள் பெற்றான். படிப்பறிவில்லாத வேடுவன் கண்ணப்ப நாயனாராய் மாறிய நாளும் இந்நாளே!
சிவராத்திரிக்கு மறுநாள் சிவப்புராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதை கழித்து மாலை வேலையில் பூஜை செய்து அன்றிரவு எதும் உண்ணாமல் உறங்கி விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்வில் எல்லா நலத்தையும் அருள்வதுடன் முக்தியையும் இறைவன் அளிப்பதோடு அவர்களின் மூவேழு தலைமுறைகளின் பாவங்கள் கலையப்பட்டு முக்தி கிட்டும்.


சிவராத்திரி விரதமிருப்போம்
வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்
 சகலமும்  சிவார்ப்பணம்.
ராஜி 

Tuesday, February 21, 2017

கைக்கொடுத்திருப்பாயா சகோதரா?!

அன்புள்ள சகோதரனே,
நீ நலமா? நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா?
தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,

தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,
பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,

என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,
நான் சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,
தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,
பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,
இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு ராஜனைதான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,
மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,
மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை..,
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,

ப்த்து மாதம் சுமந்து, உயிர் கொடுத்து பெற்று,தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, என்னை உல்ளாங்கையில் வைத்து தாங்கிய அன்னை இன்று படுத்த படுக்கையில்...,,

மகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் சில உண்டு.அதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,
ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?
இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,.. துரதிர்ஷ்டசாலியான சகோதரி.