“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே…
நீ என்னை மறப்பாய்.”
“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே…
நீ என்னை நினைப்பாய்.”
காதலையும், வாழ்க்கையையும், மனித மனங்களையும், மனதின் தேடுதலையும், மனதின் ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது. எப்போதோ படித்து வெறுத்த கவிதையிது.
ஆனால், வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.
காதல் என்பது இவ்வளவு தானா என்ன?
காதல் எவ்வளவு உயர்வானது?!
எதிர்கால வாழ்க்கைக்காக, பார்த்து, ரசித்து, சிரித்து, மயங்கி, உலகே காலடியில் என்று இறுமாந்திருந்த காதலை மறக்க முடியுமா? கவிதையா இது..? ச்ச்சீசீசீசீ எனறு தோன்றியது. ஆனால், அதுவே இன்று, சிலவற்றை படித்து, பல்வேறு மனிதர்களை சந்தித்து, வாழ்க்கையில் அடிப்பட்டு, உலகை உணர ஆரம்பித்த பின் கவிதையின் பொருள் உண்மையென்றே தோன்றுகிறது.
உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும்?! மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று பார்த்தால் காதல் கூட அப்படித்தான் என்றே தோன்றுகிறது.
நான் பார்த்த காதலும், காதலர்களும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. காதலியாக அல்லது காதலனாக பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக அல்லது கணவனாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.
நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவனும் சொன்னாள்… அவளும் சொன்னான்… ஆனால், வாழ்க்கை ஓட்டத்தில் . அது நடந்ததா?! இல்லையே… ஆனாலும் வாழ்கிறோம்.
பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்களாக இருப்பவர்கள் ?!. ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். அவன் அல்லது அவள் போன பின்னால் எல்லாமே விட்டு போய் விடவில்லை.
அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறோம். சினிமாவை ரசிக்க்கிறோம். இடை இடையே அவள்(ன்) ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடமோ அல்லது தன் மழலை செல்வத்திடமோ பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது.
பின் … “அவனி(ளி)ல்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி வாழ்வதாக” தோன்றுகிறது.
அப்படியெனில் காதல்..?
காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா..? இப்படித் தான் எதையாவது நினைத்து நாம் வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ, விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.
“எழுதுங்கள் இவன் கல்லறையில் –
அவள் இரக்கமில்லாதவன் என்று… ”
பாடுங்கள் இவன் கல்லறையில் –
இவன் பைத்தியக்காரன் என்று,”
என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?
போய் விட்டான்(ள்) அடுத்து என்ன செய்வது? எதிர்காலம், வேலை, குடும்பம், தங்கை, பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், ஆனால், உண்மை வேறு தானே?
ஏதோ ஒன்று, அவனை(ளை) விட்டு விலகும்படி தூண்டியது என்பதே உண்மை. காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.
ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது? பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நாமாக விலகினால் நமக்கது கௌரவம். இல்லையென்றால், காயப்பட வேண்டியிருக்கும்.
யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும்? யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை அவனு(ளு)க்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துங்கள்.
வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது. கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. அதனால், மனசை தேற்றிக் கொள்ள வேண்டும். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.
உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தலாம்.
டிஸ்கி: மெயிலில் வந்த ஒரு கட்டுரையை பட்டி, டிங்கரிங்க் செஞ்சு பதிவாக்கிட்டேன்.
