Wednesday, December 20, 2017

வேலூரை சுத்திக்காட்ட போறேன் - மௌனச்சாட்சிகள்


வீட்டின் எதாவது ஒரு இடத்திலிருந்து பார்த்தால் அருவி, கடல்,ஆறு(ஆத்துல தண்ணி இருக்கனும்), இப்படி எதாவது நீர்நிலை இருக்கனும், மரம், செடி, கொடின்னு பச்சை பசேல்ன்னு இருக்கனும். வீட்டின் ஒரு அறையில் கல்கி, சாண்டில்யன், இந்திரா சௌந்திரரஜன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலக்குமாரன் .. இவர்களின் புத்தகம் இருக்கனும், எம்ராய்டரி கிட், கம்ப்யூட்டர், பதிவு போட இணையம் இருக்கனும். பசங்க தங்கள் தேவைக்கு கூப்பிடும்போது போய் உதவிட்டு வந்திடனும். என் அம்மா ஆசைப்படி சின்னதா ஒரு ஆதரவற்ற இல்லம் நடத்தனும் இல்லன்னா அங்க போய் உதவனும். இப்படிதான், என்னுடைய கடைசி காலம் இருக்கனும்ன்னு ஐடியா செஞ்சிருந்தேன்..  அதுவரை வேலூர்ல இருக்கனும்ங்குறது என் ஆசை..

 எந்த ஆசைதான் நிறைவேறி இருக்கு இது நிறைவேற!! குடும்ப சூழல் காரணமா ஆரணிலயே வீடுகட்டி இருக்க வேண்டியதாகிட்டுது. ஆனாலும் வேலூர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. வேலூருக்கு போனாலே தனி உற்சாகம் வந்திடும்.  வேலூர் வெயிலூர்ன்னு இப்ப டிவி நியூஸ்ன்னால பேர் வாங்கி இருந்தாலும். புகழ்பெற்ற பல இடங்கள் வேலூர்ல இருக்கு. பாலாற்றங்கரையில் இருக்கும் வேலூர்ல முதன்முதலில் நான் பார்த்தது வேலூர் கோட்டை.  வேலூர் எத்தனையோ மாற்றங்களை கண்டிருந்தாலும் வேலூர் கோட்டை மட்டும் துளி மாற்றமின்றி அப்படியே இருக்கு.  

. வேலூர் கோட்டையை சுத்தி அகழி உண்டு.  அந்தகாலத்துல  போரின்போது இந்த அகழில முதலையை விடுவாங்கன்னு சொல்வாங்க. இப்ப போட்டிங் விட்டிருக்காங்க. சென்னைல மெரினா பீச் போல, இந்த கோட்டைக்கருகில் இருக்கும் பூங்காவிலும், குழந்தைகள் விளையாட்டு மைதானம், போட்டிங்க்ன்னு இவ்வூர் மக்களுக்கு பொழுதுபோக்கு. 


கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம். எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில். தரைமட்டத்திலிருந்து, கீழாக கட்டப்பட்ட ஆலயம். சிறந்த கலைப்பொக்கிஷமும்கூட. ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு கல்லிலும் இருக்கும் சிற்பங்கள் அத்தனையும் பார்க்க கண்கோடி வேணும். 

வேலூர் கோட்டைக்குள் கோவில் மட்டுமில்லாம சர்ச், மசூதியும் இருக்கு. இதில்லாம அருங்காட்சியகம்ன்னு நிறைய பொழுது போக்கு, அறிவுசார் விசயங்களும் இருக்கு. கோட்டைக்குள், குதிரை வண்டி சவாரி, குதிரை சவாரியும் உண்டு.



 திருப்பதி தேவஸ்தானத்தின் ஒரு கிளை வேலூர்ல இருக்கு. திருப்பதி வெங்கியை மாதிரியே இங்க ஒருத்தர் அருள்புரிகிறார். அதே உயரம், அதே அமைப்புன்னு அப்படியே அவரை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கார். மாதத்தின் ரெண்டாவது சனிக்கிழமை திருப்பதி லட்டு இங்கு வரவைக்கப்பட்டு கொடுப்பாங்க. அதுக்கு முதல்லயே நாம புக் செஞ்சுக்கனும். திருப்பதியில் திருமணம், காது குத்து, ரூம் புக் பண்ணுறதுன்னு எல்லாத்துக்கும் இங்கயே பதிஞ்சுக்கலாம். ஆனா, ஒரு மாசம் முன்னாடியே வரனும். எல்லா சனிக்கிழமையும் சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் உண்டு. 

 அந்த கோவிலின் எதிர்க்க, மகாராணி ஐஸ்க்ரீம் கடைன்னு ஒன்னு இருக்கு. பொட்டிக்கடை சைசுக்குதான் இருக்கும். ஆனா, கூட்டம் அள்ளும். மாலை வேளையில் தினத்துக்கு ஒரு ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் கிடைக்கும். இதோட பிராஞ்ச் வேலூர் முழுக்கவும், வேலூர் சுத்துவட்டாரங்களிலும் கிடைக்கும். அருண் ஐஸ், ஜமாய் ஐஸ்க்ரீம்லாம் இதோட டேஸ்ட்க்கு முன்  ஜுஜுபிதான். 

அங்க பக்கத்துலயே ஊரீசு கல்லூரின்னு ஆண், பெண் இருபாலரும் படிக்கும் காலேஜ் இருக்கு. நிறைய பெரிய மனுசங்கலாம் இங்கதான் படிச்சிருக்காங்க. என் அப்பாக்கூட இங்கதான் படிச்சாராம்.  இதுக்கு பக்கத்துலதான் வேலூர் சி.எம்.சியின் கண் மருத்துவமனை இருக்கு.  அதில்லாம, நிறைய அரசு அலுவலகங்களும், கல்யாண், ஜாய் ஆலுக்காஸ் மாதிரியான நகைக்கடைங்க, டார்லிங்க்,, கண்ணா பெரிய்ய்ய்ய்ய்ய ஹோட்டல்களும் இருக்கு.



கோட்டைக்கு எதிரில் இருக்கும் சாரதி மாளிகை. இங்க புத்தகங்கள், துணிகள், நகைகள்ன்னு எல்லாமே கிடைக்கும். இதுக்கு பின்னாடி பெரிய மார்க்கெட் இருக்கு.


வேலூர்க்கு பெருமை சேர்க்கும் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை சி.எம்.சி ஹாஸ்பிட்டல். உலகின் அத்தனை மூலையிலிருந்தும் இங்க சிகிச்சைக்காக வர்றாங்க.  


 மெடிக்கல் சம்பந்தமா படிக்க சி.எம்.சின்னா இஞ்சினியரிங் சம்பந்தமா படிக்க வி.ஐ.டி யூனிவர்சிட்டி.. வெளிநாட்டு பிள்ளைங்கலாம் இங்க படிக்குது. இந்த காலேஜ்ல ஏரோநாட்டிகல் முதற்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வரை படிக்கலாம். இதில்லாம கிங்க்ஸ்டன்னு பெரிய இஞ்சினயரிங் காலேஜ் இருக்கு. என்.டி.டி.எஃப், லா காலேஜ், முத்துராமலிங்கம் பெண்கள் கல்லூரின்னு ஏகப்பட்ட காலேஜ் இருக்கு. பக்கத்துலயே காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து ரயில் உண்டு. இதோ வருது,, இந்தா வந்திடுச்சுன்னு பத்து வருசமா கட்டுமான பணியில் இருக்கு விமான நிலையம். எப்ப வரும்ன்னு தெரியாது.


ராஜாஜி, ரா. வெங்கட்ராமன், வி.வி கிரி, அண்ணா, பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர்ன்னு தொடங்கி ராஜீவ்காந்தி கொலை வழக்கு புகழ் பேரரறிவாளன், நளினி, முருகன் வரை வந்து சென்ற தமிழ்நாட்டிம் இரண்டாவது மிகப்பெரிய சிறைச்சாலை இங்கதான் இருக்கு. 


வேலூர் மலைக்கோட்டை, சஞ்சீவிராயர் கோவில், ராமர் கோவில், செல்லியம்மன் கோவில்ன்னு எத்தனையோ வரலாற்று சிறப்புகள் இருந்தாலும், இப்ப புதுசா ஒரு சிறப்பு சேர்ந்திருக்கு. அது என்னன்னா, தங்கத்தகட்டால் வேய்ந்த கோவிலான பொற்கோவில். இக்கோவில் இருக்கும் ஊரின் பேர் ஸ்ரீபுரம். இந்த கோவில் நிர்வாகத்தால் ஸ்ரீநாராயணி மருத்துவமனையும், கல்லூரியும் உண்டு.   இக்கோவில் அறுகோணம் வடிவிலானது.  கோவில், மற்றும் கோவில் அமைந்திருக்கும் ஊரில் சேரும் கழிவுகள், மற்றும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து கோவிலுக்கு சார்ந்த நிலத்தில் விவசாயம் செய்யுறாங்க. 

வேலூர் பத்தி பதிவெழுதனும்ன்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் ஆசை. ஆனா, எத்தனை முறை போனாலும், படமெடுக்க முடிவதில்லை. அப்படியே படமெடுத்தாலும் பதிவேத்த முடியலை. இனி, பதிவு போட காலம் வாய்க்குமான்னு தெரில. இலவு காத்த கிளி மாதிரி ஆகிடக்கூடாதில்லையா?!  அதான் கூகுள்ல  படங்களை சுட்டு பதிவு போட்டுட்டேன். வேலூர் மீதான என் ஆசை மௌனமாவே என் மனசுக்குள்ளயே அடக்கமாகிடும்போல!


நன்றியுடன்,
ராஜி.

Tuesday, December 19, 2017

சனி பகவானை கண்டு பயப்படனுமா?!

எட்டு எட்டா மனுச வாழ்க்கையை பிரிச்சு வாழச்சொன்னார் சூப்பர் ஸ்டார். ஆனா, இரண்டரை வருசம், வருசமா பிரிச்சு வாழ்க்கையை வாழ வைக்குறார்  இங்க ஒரு சூப்பர் ஸ்டார்.  அந்த சூப்பர் ஸ்டார் யார்ன்னு பார்த்தா தி கிரேட் மிஸ்டர் சனி பகவான். நம்மாளுங்க கொட்டி கொடுத்தா கூழைக்கும்பிடு போட்டு வழிவாங்க. தப்பை தட்டிக்கேட்டா பயந்துக்கிட்டு இருப்பாங்க. அதனாலதான் சனி பகவானை கண்டா நம்மாளுங்க அலறி கட்டுறது.  அவர் சன்னிதி இருக்கும் பக்கம் போகமாட்டாங்க. அவருக்கு நேரா நின்னு கும்பிட மாட்டாங்க. கையெடுத்து கும்பிடமாட்டாங்க.. சனியன்னு உச்சரிக்கவும் பயம்..  இப்படி தினுசு தினுசா பயம் தொடருது.  ஆனா, கூப்பிட்டதும் வராத கடவுள்களைவிட சனியன்னு உச்சரிச்சாலே வரும் சனி பகவான் எவ்வளவோ மேல்ன்னு நினைக்குறேன்.

சனியை போல கொடுப்பாருமில்ல. கெடுப்பாருமில்லைன்னு சொல்வாங்க. அப்படி புகழ்வாய்ந்த சனிபகவானை பத்தி தெரிஞ்சுக்கலாம்.  ஆதிக்கடவுளான சூரியனுக்கு சுகவர்கலாதேவின்னு ஒரு மனைவி உண்டு. இருவருக்கும்  வைவஸ்தமனு, எமதர்மராசன்(நம் உயிரை பறிக்கும் எனமேதான்) என்ற மகன்களும்,  யமுனை என்ற மகளும் இருந்தனர். என்னதான் கருத்தொருமித்து சந்தோசமா சூரியனுடன் இருந்தாலும், அவருடைய வெம்மையை தாங்கிக்கொள்ள சுகவர்கலாதேவியால் முடியல.  அதனால,   இழந்த தன் சக்தியை மீட்க, தவம் மேற்கொள்ள பூலோகம் செய்ய முடிவெடுத்து,  தன் நிழலை தன்னைப் போலவே பெண்ணாய் மாற்றி, அவளுக்கு சாயாதேவின்னு பெயரிட்டு , அவளிடம், நான் தவமியற்ற செல்லபோகிறேன். நீ என்னிடத்திலிருந்து என் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள். இவ்விசயம் சூரியன் அறியாமல் பார்த்துக்கொள் எனவும் கட்டளை இட்டாள்.  அதற்கு சாயாதேவி, சூரியனுக்கு மனைவியாகவும், தங்கள் குழந்தைகளுக்கு தாயாகவும் தங்கள் சொற்படியே நடக்குறேன். ஆனா சூரிய பகவானுக்கு உண்மை தெரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் உண்மையை உரைப்பதை தவிர வேறு வழியில்லை’ ன்னு சொல்ல, சரின்னு . சொல்லி சுவர்க்கலா தேவி தவம் செய்ய பூலோகம் வந்தாள்.
யாரும் அறியா வண்ணம், குதிரை உருவம் கொண்டு சுவர்க்கலாதேவி தவம் செய்ய, அவளிடத்திலிருந்து, சூரியனையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இல்லறம் நடத்தினாள் சாயாதேவி.  அதன் விளைவாக,  கிருதத்வாசி, கிருதவர்மா ன்னு இரண்டு மகன்களும், தபதி என்ற மகளும் பிறந்தார்கள். நிழலே பெண்ணானதால், அவளுக்கு பிறந்த குழந்தைகளில் கிருதவர்மா மட்டும் கருமை நிறம் கொண்டவராக பிறந்தார்.  இதில் கிருதவர்மா தான் இன்றைய கதைநாயகன் சனிபகவான்.  அவரது சகோதரி தபதி, நதியாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறாள். கருமை நிறம் கொண்டதால் தந்தையாலும், மற்ற சகோதரர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டார். 
சனி பகவான் கருமை நிறம் கொண்டதால,  சனிபகவானது செயல்கள் அனைத்தும் சூரியனுக்கு எதிராக இருந்ததால இருவருக்கும் அப்பனுக்கும் மகனுக்கும் சதாசர்வ காலமும் சண்டைதான். இப்படியே இருந்தால் என்னாவது என எண்ணிய, சாயாதேவி, தன் மகனை அழைத்துக்கொண்டு ஈஸ்வரினிடம் சென்று முறையிட்டாள். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுக்கு தகுந்தாற்போல பலன்களை அளிக்கும் பதவியை கிட்டத்தட்ட தன்னுடைய கிளார்க் மாதிரியான பதவியை ஈசன் அருளினார். இதனால், சனி பகவானுக்கு சர்வேஸ்வரரான சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி உண்டானது.  சனிபகவானுக்கும் தேஜஸ்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது.  நீண்ட நெடுங்காலம் ஆனாலும் இருவருக்கும் குழந்தைப்பேறு இல்லாமல் தேஜஸ்வி மனம் நொந்திருந்தாள். ஒருமுறை, சனிபகவான், விஷ்ணு பகவனை நோக்கி தவம் செய்யும் வேளையில் அங்கு வந்த தேஜஸ்வி, தனக்கு குழந்தை வரம் தரச்சொல்லி கணவனை வேண்டி நின்றாள். நீண்ட நேரம் கால்கடுக்க நின்றும் சனிபகவான் தன் மனைவியை கண்விழித்து பாராததால், கோபங்கொண்ட  தேஜஸ்வி, நீ யாரை நேருக்கு நேராய் பார்க்கிறாயோ! அவர்கள் அழிந்துபோவார்கள் என சாபமிட்டாள். அன்றிலிருந்து சனிபகவான் யாரையும் நேராய் பாராமல் கீழ்பார்வையுடன் தலைகுனிந்தவாறுதான் இருப்பார்.

சிவ, பார்வதி தம்பதியருக்கு பெருமாள் அம்சத்தோடு கூடிய வினாயகர் ஜனித்தபோது தேவாதி தேவர்களை அழைத்து விருந்து வைத்து, பிள்ளையை ஆசீர்வதிக்க வேண்டினர். அங்கு வந்த சனிபகவான் வினாயகரை தன் சாபத்தின் காரணமாய் நேருக்கு நேராய் பார்க்காம ஓரப்பார்வையில் பார்த்தார். இதைக்கண்ட பார்வதி, என்ன ஏதுன்னு சனிபகவானிடம் விசாரிக்க, தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை பத்தி சொன்னார். இதனால், பார்வதிதேவியும் அவள் தோழிகளும் சிரித்ததோடு அதுலாம் சும்மா, நீ என் குழந்தையை நேருக்கு நேர் பார் ஒன்றுமாகாதுன்னு சொல்ல, சனிபகவானும் அப்படியே பார்க்க, அந்த வினாடியே, குழ்ந்தையின் தலை காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியுற்று பார்வதிதேவி மயங்கி விழ, தங்கையின் நிலை கண்ட பெருமாள் உடனே இந்திரனின் வஞ்ராயுதத்துடன் சென்று, யானையின் தலையை கொய்து வந்து குழந்தைக்கு வைத்தார். இதனால் கோபங்கொண்ட பார்வதிதேவி, என் பிள்ளை, ஊனமானது போல நீயும் ஊனமாகக்கடவது என சபிக்க சனிபகவானின் கால் ஊனமானது.
சிறு வயதில் எமதர்ம ராஜாவும்,  சனிபகவானும் விளையாடிக்கொண்டிருந்தபோது, தம்பிமீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாய், தன் கையிலிருந்த கதாயுதத்தால் ஓங்கி அடிக்க, சனிபகவான் கால் ஊனமானது. இதேமாதிரியான இன்னொரு கதை, சிவன் அவதாரத்தின்ப்போது கங்காவை மணந்து அதை மறைத்து, கௌரி என்ற பெண்ணை மணக்க இருந்தபோது உண்மை தெரிஞ்சு கௌரி ஆற்றில் பாய அப்போது முதலை ரூபத்தில் வந்து சிவனை பற்றிக்கொண்டார் சிவன். தன் கணவனை மீட்க கௌரி ஓங்கி அடிக்க, முதலை கால் ஊனமாகி சிவன் விடுபட்டார். இதனால், என்னையே நீ இந்த பாடு படுத்துகிறாயே! அதனால் உன் வேகம் மட்டுப்பட உன் கால் சிறிது ஊனமாய் தவறில்லை என சிவன் பணித்தார். அதன்படி சனிபகவான் ஊனமானார்.


என்னதான் நடுநிலை தவறாமல் அனைவரையும் சரிசமமாய் எமனை போலவே தானும் நடந்துக்கொண்டாலும் அப்பாவும், கூட பிறந்தவர்களின் அலட்சியமும் மாறாததால, ஆதி அந்தம் இல்லாத சிவனுக்கு சரிசமமாய் எமனைப்போல தானும் மாற வேண்டுமென உறுதிக்கொண்டு தாயிடம் ஆசிப்பெற்று காசிக்கு சென்று, அங்கு ஒரு லிங்கத்தை உண்டாக்கி பல ஆண்டுக்காலம் கடும்தவம் செய்தார். அவரது பக்திக்கு மெச்சிய  சிவன்  என்ன வரம் வேண்டுமென வினவ, `எனக்கு என் தந்தையை விட அதிக பலத்தையும், பார்வையையும் தர வேண்டும்’ `உடன் பிறந்தவர்கள் உயர்நிலைக்கு சென்றுவிட்டனர். நான் அவர்களை விட பராக்கிரமசாலியாகவும், பலசாலியாகவும் ஆகனும்,  `இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு அருள வேண்டும்’ என்றும் வரம் கேட்டார் சனிபகவான். அவரது வேண்டுகோளை ஏற்ற ஈஸ்வரன், அவருக்கு `சனீஸ்வரர்’ என்ற பெயர் விளங்க அருள் பாலித்தார்.

 சனீஸ்வரன் என்ற பட்டம் மட்டும் போதாது,  நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லாம், தங்கள் பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான். சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.  கருங்குவளை மலர், கருப்பு எள், கருமை நிறத்துக்கு சொந்தக்காரன், மந்தபுத்தி கொண்டவன். ஆனால், அன்பானவன், சனி கொடுப்பதை அந்த சர்வேஸ்வரனாலும் தடுக்க முடியாதென பெயரெடுத்தவன். 

இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் சுருக்கமாய்...
மேஷம் - அஷ்டம சனி முடிவடைகிறது.
ரிஷபம் - அஷ்டம சனி ஆரம்பம்.
மிதுனம் - கண்டக சனி.
கடகம் - சனியின் பாதிப்பு இல்லை.
சிம்மம் - அர்த்தாஷ்டம சனி முடிவு.
கன்னி - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
துலாம் - ஏழரை சனி முடிவு.
விருச்சகம் - பாத சனி.
தனுசு - ஜென்ம சனி.
மகரம் - விரய சனி.
கும்பம் - சனியின் பாதிப்பு இல்லை.
மீனம் - சனியின் பாதிப்பு இல்லை
சனிபகவான் மூல மந்திரம்..

ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ஸ்லோகம்

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
தேவாதி தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான ஒரு குணம் அடக்குவது அல்லது அடங்கி போவது. சனீஸ்வரனை அடக்க நம்மால் ஆகாது.  அதனால அடங்கி போகலாம். காலையில் குளித்து முடித்து சில உலர்ந்த திராட்சைகளை காகத்துக்கு வச்சுட்டு அடுத்த வேலை பாருங்க. சனியின் உக்கிரத்தை குறைக்க உதவும். அதேப்போல எள் கலந்த சாதத்தையும் காகத்துக்கு வைப்பதை பழக்கமாக்கிக்கோங்க. இதும் சனிபகவானை கூல் பண்ணும்... சனி பகவானை கூல் பண்ண, இதோ எங்க ஊர் பக்கத்திலிருக்கும்  சனிபகவான் எந்திர ரூபமாய் இருக்கும் ஏரிக்குப்பத்துக்கு போறேன்.. உங்களுக்காகவும் வேண்டிக்குறேன்...


நன்றியுடன்,
ராஜி.

Monday, December 18, 2017

ஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி


கீழ்படிய கற்றுக்கொள், கட்டளையிடும் பணி உன்னை வந்து சேரும்ன்ற அறிவுரைக்கேற்ப, ராமனின் சேவகனாய் அவதரித்து, என்றென்றும் சிரஞ்சீவியாகவும், கடவுளாகவும் நமக்கு அருள்புரிபவர் ஸ்ரீஆஞ்சிநேயர். அவரின் ஜென்மாஷ்டமி தினம் இன்று. என்னடா! டிவில, கோவில்லலாம் நேத்தைக்கு அனுமன் ஜெயந்தி கொண்டாடுனாங்க. ராஜி இன்னிக்குன்னு சொல்றாளே குழம்பாதீங்க. நேற்றும், இன்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதில் தப்பில்ல. அனுமன் பிறந்தது  மூல நட்சத்திரம்,  அமாவாசை திதியில்  பிறந்தார். நேத்தைக்கு அமாவாசை வந்ததால, நேத்தைக்கு அதாவது ஞாயித்துக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இன்னிக்கு, அதாவது திங்கட்கிழமை  காலை  7:07 மணிக்கு மேல் தான் மூல நட்சத்திரம் வருது அதனால் இன்னிக்கு அவரின் ஜெயந்தியை கொண்டாடுவதிலும் தப்பில்ல. அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வரனும்ன்னா அதுக்கு பலகாலம் காத்திருக்கனும்.  அதனால, நட்சத்திரம், திதின்னு ரெண்டு நாளில் எதுவேண்டுமானாலும் அனுமன் ஜெயந்தியை கொண்டாடலாம்.  (அப்பாடா! எப்படியோ சமாதானபடுத்தியாச்சு. டைப் பண்ண சோம்பேறித்தனமாகி பதிவு லேட்டானதை யாரும் கண்டுப்பிடிக்கல. நல்லதொரு சாக்கு போக்கை எனக்கு எடுத்துக்கொடுத்த தினத்தந்தி டிவி ஆன்மீக சொற்பொழிவாளருக்கு நன்றி)


இப்போ பதிவுக்கு போலாமா?
  ராம அவதாரம் நிகழவிருந்த சமகாலத்தில், அதாவது, குழந்தை பேறின்றி இருந்த தசரதன், புத்திரகாமேட்டி யாகம் செய்து , அதன் பிரசாதமான பாயாசத்தை தசரதன் மனைவிகள் உண்டதின் மிச்சத்தின் ஒரு பருக்கையை கருடன் கொத்திக்கொண்டு சென்று, அஞ்சனையிடம் சேர்க்க,  யாகத்தின் பலன் அஞ்சனை, கேசரி தம்பதிக்கும்  கிடைத்து  மார்கழி மாதத்தின் மூலம் நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு, தங்கள் அழகு மகனுக்கு சுந்தரன் என பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.  



அனுமனின் பிறப்புக்காக இன்னொரு காரணமும் சொல்வாங்க. அது என்னன்னா, ராமர் அவதாரத்தின்போது, விலங்குகள், பறவைகள்ன்னு தங்களது சேவையை செய்ய ஆசைப்பட்டு ஆங்காங்கு அவதரித்தன. ராம அவதாரத்தில் தன் பங்கும் இருக்க வேண்டி ஆசைப்பட்ட சிவன், தன் மனைவி பார்வதியிடம் சொல்லி,   விலங்கு முகமும், மனித உடலும் கொண்ட ஒரு மகனை பெற்றுத்தரச்சொல்லி கேட்க, ஏற்கனவே அப்படி ஒரு பிள்ளையை(வினாயகரை) வைத்துக்கொண்டு  தான் மன வேதனை அடைவதாகவும், இன்னொரு பிள்ளையை அதுப்போல என்னால் பெற்றுத்தர ஆகாது என மறுக்க, தன் சிவ அம்சத்தை வாயு தேவனிடம் கொடுத்து, அதை முதலில் தென்படும் பெண்ணிடம் சேர்க்க சொல்லி பணிக்கிறார். அதுப்போலவே சிவ அம்சத்தை சுமந்துக்கொண்டு வான்வழியே செல்ல, மலைமேல் உலவிக்கொண்டிருந்த அஞ்சனையை கண்டு தழுவி, தான் சுமந்து வந்த சிவ அம்சத்தை அவளிடம் சேர்பித்தார்.   ஒரு கன்னிப்பெண்ணான, தன்னை இன்னொரு ஆடவன் தீண்டலாமா எனக் கேட்க, நான் தழுவியதால் உன் கற்புக்கு யாதொரு பாதகமும் நேராது.   உனக்கு சிவ அம்சத்தோடு கூடிய என் அம்சமும் சேர்ந்து உனக்கொரு மகன் பிறப்பான். அவனால் நீயும் பெருமைப்படுவாய் எனச்சொல்லி அவ்விடம் அகன்றார். அதன்பின் அஞ்சனை, கேசரியை மணந்து  அனுமனை பெற்றாள் எனவும் சொல்லப்படுது. 

  
ஒருமுறை அஞ்சனை, உணவூட்ட நேரமானதால், பசி தாங்காத சுந்தரன், அப்போதுதான் முளைத்து வரும் இளஞ்சூரியனை, காவி நிறத்திலான  பழம் என எண்ணி, சூரியனை பிடித்து வாயில் போட்டுக்கொண்டாராம். சுந்தரன் வாயிலிருந்து வெளிக்கொணர வேண்டி, தேவேந்திரன் சுந்தரனின் தாடையில் வஞ்ராயுதத்தால் இடித்ததன் விளைவு சுந்தரனின் அழகு முகம் மாறி இப்படி ஆகிவிட்டதெனவும் சொல்லப்படுது. அனுமன் என்ற சொல்லுக்கு வளைந்த தாடையுடைவன்னு பொருளாம். 



சுக்ரீவன் அரசவையில்  அமைச்சராக இருந்து ஸ்ரீராமரை சந்திக்காமலயே அவரின் பாராக்கிரமத்தை கேள்விப்பட்டு, அவரின்மீது பக்தி கொண்டார். பின்னர், ராமன் சுக்ரீவன் சந்திப்பு நடந்து, அனுமனும், ராமனும் சந்தித்தப்பின் ராமனி பக்தனாகி ராமனின் அடிப்பற்றியே நடந்தார் அனுமன். கடல் கடந்து சீதையை கண்டது முதல், சீதையின் வனவாசத்தின்போதும் அனுமனின் பங்கு அளப்பறியது. அதுலாம் சொல்லனும்ன்னா, பதிவு நீளும்...  அதனால,  பர்த்டே பேபியான அனுமனை பத்தி மட்டுமே இந்த பதிவில் பார்ப்போம்... 

அனுமனை வெண்ணெய் காப்பில் பலமுறை தரிசிச்சிருப்போம்.. அதுக்கு காரணம், ராமனுக்கும், ராவணனுக்குமிடையில் நடந்த கடுமையான போரின்போது, ஒரு சமயம்  ராமர், லட்சுமணனை சுமந்துக்கொண்டார்.  அப்போது ராவணன் விட்ட அம்பு மழையால், அனுமனின் உடலில் காயங்கள் ஏற்பட்டது. காயத்தின் எரிச்சல் தாளாமல் அனுமன் துவண்டபோது எரிச்சல் நீங்க ராமர் வெண்ணெய் பூசினாராம். அதனால்தான், நாம் நினைச்ச காரியம் நடக்க, அனுமனுக்கு ஐஸ் வைக்க வெண்ணெய் காப்பு செய்து வழிப்படுகிறோம்.

அனுமன் கோவிலில் பிரசாதமாய் செந்தூரம் கொடுப்பது வழக்கம்.. இதுக்கு என்ன காரணம்ன்னா, அடர்ந்த கானகத்திலும், சீதை செந்தூரப்பொட்டு வைக்கும் வழக்கத்தை விடவில்லை. இதைக்கண்ட, அனுமன் சீதையிடம், தாயே! தாங்கள் நெற்றியில் சிவப்பாய் எதோ வைத்திருப்பதன் காரணமென்னன்னு கேட்க,  தன் கணவனான, ஸ்ரீராமர் நூறாண்டு காலம் வாழவே செந்தூரப்பொட்டு வைப்பதை வழக்கமா வைத்திருப்பதாக சொல்ல,  அங்கிருந்த செந்தூரத்தை தன் உடல் முழுக்க பூசிக்கொண்டார். சீதை காரணம் கேட்க, இத்தூனூண்டு பொட்டு வச்சா, நூறாண்டு ராமர் நல்லா இருப்பார்ன்னா, நான் உடல் முழுக்க செந்தூரம் பூசிக்கிட்டா எத்தனை நூறாண்டு ராமர் நலமாய் இருப்பார்?! வானம் பூமி இருக்கும் காலம்வரை ராமர் நலனில் பழுது வராதில்லையா என கேட்டு சீதையை வாயடைக்க செய்தாராம். அத்தனை உயர்ந்த பக்தி, அன்பு அனுமனுடையது...
அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவது வழக்கம்.. அதுக்கு என்ன காரணம்ன்னா, அசோக வனத்தில் இருந்த சீதையை அனுமன் கண்டபோது அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொள்ள சென்றாள். அவளை தடுத்து, தன்னை இன்னாரென அடையாளப்படுத்தி, ராமனின் கணையாழியை தந்து, ராமன் விரைவில் வந்து சீதையை சிறை மீட்பாரென கூறி, ராமனை சமாதானப்படுத்த,  சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்டு அனுமன் கிளம்பும்போது, அருகிலிருந்த வெற்றிலை செடியிலிருந்து ஒரு வெற்றிலையை பறித்து, அனுமனின் தலைமீது வைத்து, சிரஞ்சீவியாய் இருப்பாய் என சீதை ஆசீர்வதித்தாள்.  அதனாலாயே நினைத்தட காரியம், தடையில்லாமல் நடக்க, வெற்றிலை மாலை சாற்றுவதை வழக்கமாய் கொண்டிருக்கிறோம். 


அனுமனுக்கு வடைமாலை சாத்துவதன் ரகசியம் என்னன்னா.. அனுமன் சூரியனை பழமென நினைத்து பிடிக்க சென்ற அதேவேளையில், கிரகணம் உண்டாகும் நேரம் நெருங்குவதால் சூரியனை பிடிக்க, ராகுவும் விரைந்துக்கொண்டிருந்தாராம்.  வாயு புத்திரனது வேகம் அசாத்தியமாய் இருந்ததை கண்டு ராகு  வியந்ததோடு அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.  அனுமனின் வேகத்துக்கு பரிசாக, தனக்கு உகந்த தானியமான உளுந்தால்  உணவுப்பண்டம் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிப்பட்டால் ராகுவால் ஏற்படும் தோசம் நீங்குமெனவும், அப்படி வணங்குபவர்களை எக்காலத்திலும் தான் கஷ்டப்படுத்த மாட்டேனெனவும் அருளினார். அப்பண்டமும், தன் உடலினைப்போல(ராகு பகவான் மனித முகமும், பாம்பு வடிவமும் கொண்டவர்) நீண்டு வளைந்து இருக்க வேண்டுமெனவும் கண்டிசன் போட்டார்.  அதன்படிதான் வடை மாலை உண்டானது. 


பொதுவா அனுமனைவிட, அனுமனின் வாலுக்கு சக்தி அதிகம்ன்னு சொல்வாங்க.  ராமாயணம் முழுக்க அனுமனின் வாலால் நிகழ்ந்த அற்புதம் நிரவி கிடக்குது.  ராம அவதாரத்தில் சிவனின் அம்சம் போல் தன் அம்சமும் இருக்க வேண்டுமென நினைத்த சக்தி அனுமனின் வாலில் குடிபுகுந்ததாய் சொல்லப்படுது. அனுமனின் வாலை வணங்குதல் பார்வதி தேவியை வழிப்பட்டதற்கு சமமாகும்.   அனுமனின் வாலில்  நவக்கிரகங்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படுது. அனுமன் வழிபாட்டால் நவக்கிரகங்களால் உண்டாகும் தோசங்கள் நீங்கும்.    


மகாபாரத காலக்கட்டத்தில் திரவுபதியின் ஆசையை நிறைவேற்ற சவுகாந்திகா மலரை தேடி, வனமெங்கும் பீமன் அலைந்து, களைத்திருந்தபோது, தான் செல்லும் வழியில் கிழட்டு குரங்கொன்று வாலை நீட்டி அமர்ந்திருந்ததை கண்டு கடுங்கோபம் கொண்டு, ஏய்! கிழடே! பாதையை அடைத்துக்கொண்டு உனக்கு என்ன தியானம் வேண்டி கிடக்கு?1 என வினவ, வார்த்தை முற்றி, தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்கன்னு கேப்டன் போல பீனம் சீற, சரிப்பா, என் வாலை தூக்கி போட்டுட்டு போன்னு அனுமனும் சொல்ல, பீமன் எத்தனை முயன்றும் அந்த வாலை நகர்த்த முடியலியாம். அப்புறம்தான் நான் என்னும் அகந்தையை விட்டு பணிந்தபின் தான், வந்திருப்பவர் அனுமன் என்றும் இருவரும் அண்ணன் தம்பி எனவும் தெரிந்து பணிந்து, எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங்களையும் அளித்து வாழ்த்தியதுபோல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சவுபாக்கியங்களையும் அருள வேண்டும் என பீமன் வேண்ட. அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. அனுமனின் உடலிலிருந்து வால் தொடங்கும் இடத்திலிருந்து பொட்டு வைக்க ஆரம்பித்து வாலின் நுனிவரை வைக்கனும். முதலில் சந்தனம், பின்னர் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.

ராவணின் அரசவைக்கு தூதாய் வந்தபோது அனுமனை தரக்குறைவாய் நடத்துவதாக எண்ணி, அவனுக்கு ஆசனம் ஏதும் தராமல் அசிங்கப்படுத்தினான் ராவணன். அனுமன் விஸ்வரூபம் கொண்டு தன்வாலால் ராவணனைவிட உசந்த ஆசனம் உண்டு செய்ததும், அனுமன் வாலில் ராவணன் தீ வைக்க, அதன்மூலம் இலங்கையை தீக்கிரையாக்கினதுலாம் நாம் அறிந்த கதைதானே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம் பார்ப்பாங்க. ஆனா நான் பல சோறுகளை இங்க சொல்லிட்டேன். அப்படின்னா அனுமனின் வாலில் இருக்கும் சக்தி எம்புட்டு கணக்கிட்டு பாருங்க. 

அனுமனின் வாலில் மணி ஒன்று கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீங்க. அதுக்கு என்ன காரணம்ன்னா, தான் ராமனுக்காக காத்திருப்பதை விரைந்து சென்று ராமனிடம் சொல்ல அனுமனை பணித்த சீதை, அனுமனுக்கு தன் வேலையை அடிக்கடி நினைவூட்ட அவன் வாலில் ஒரு மணியை கட்டி அனுப்பினாள், அனுமன் அசைவால் மணி கினுகினுக்க, அதன் ஓசை சீதையையும், சீதையின் கட்டளையையும் அனுமனுக்கு நினைவூட்ட இந்த ஏற்பாட்டை சீதை செய்தாள்.  அதனால்தான் நாமும் நம் கோரிக்கையை அனுமனுக்கு நினைவூட்ட அவன் வாலில் மணியை கட்டி வழிபடுறோம். 







அனுமனின் தோற்றம் பத்தி இப்போதைக்கு இது போதும். பதிவின் நீளம் கருதி, அனுமனின் ஒன்பது அவதாரங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்...

ஜெய் ஆஞ்சயனேயா!

ஸ்ரீராமஜெயம்.. ஸ்ரீராமஜெயம்..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..

நன்றியுடன்,
ராஜி. 

Saturday, December 16, 2017

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்... மார்கழி ஸ்பெஷல்

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என வைணவமும், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ என சைவமும் இணைந்து போற்றும் அதி உன்னத மார்கழி மாதம் இன்று ஆரம்பம்.  பொதுவா, இரவின்போது பெய்யும் பனிப்பொழிவை விட, அதிகாலையில் பொழியும் பனிப்பொழிவானது நோய் உண்டாக்கும் தன்மையற்றதா இருக்கும். அதிகாலை வேளையில் உடலுக்கு தேவையான கதிர்களின் தாக்கம் அதிகமிருக்கும். வாகனங்களால் உண்டாகும் புகை நச்சு அதிகம் இருக்காது.   கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் அதிகாலையிலும் விளக்கேத்தி வைப்பதும் நம் வழக்கம். அதுக்கு காரணம், கார்த்திகை மாதம் முதல் பனிப்பொழிய ஆரம்பிக்கும். வீட்டில் கதகதப்பை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. ஓசோன் வாயுக்கள் அதிகம் இருக்கும் அதிகாலை வேளையில் கோலமிடுவதால் பல சுவாச பிரச்சனைகள் தீரும்.  ஆனா, இப்பலாம் அதிகாலை எழ சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு நைட்டுலயே கோலம் போட்டுட்டு படுத்துடுறாங்க. அது தப்பான செயல். மார்கழி மாசத்தின் முக்கிய நோக்கமே அதிகாலையில் எழுவதும், பின்பனி நேரத்தில் காற்று மாசுபாடு இல்லாதபோது கோலமிட்டு இறைவனை வணங்குவதுமாகும். 

பூசணிப்பூ வைப்பதின் ரகசியம்..

அப்பலாம்,  கல்யாண புரோக்கர்கள் ,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் இல்ல.  எந்த வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா,  அந்த வீட்டின் வாசலில்  மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பாங்களாம்.. ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டாங்களாம்.  மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தை மாசம் கல்யாணத்தை முடிப்பாங்களாம். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்துச்சாம்.  பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசம் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.  

மார்கழி மாதம் பீடை மாதம்ன்னு இப்ப சொல்றாங்க. ஆனா, அது அப்படி இல்ல. நமக்கு வீடு உள்ளிட்ட சகல செல்வமும்  பெற்று நம் வாழ்வில் பீடு நடைப்போட உதவும் மாதம் என்பதால் இதுக்கு பீடுடைய மாதம்ன்னு பேராம்.  காலப்போக்கில் அது மருவி பீடை மாசமாகிட்டுது. பீடுன்னா உயரிய, சிறந்த, உன்னதமான..ன்னு பொருள். இறைவனை வழிபட்டால், வாழ்வின் உன்னத நிலைக்கு செல்லலாம்ன்னு பொருள்படும். இந்த மாசத்தில் கரும்பு, நெல், மஞ்சள், காய்கறிகள்ன்னு அறுவடைக்காலம். வயல்ல பொழுது கழிக்கவும், விளைப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பவுமே சரியாய் இருக்கும். அப்படி இருக்க, மாமன் மச்சான் வீடுகளின் விசேசங்களில் கலந்துக்க முடியாதில்லையா?! அதுமில்லாம, இந்த மாசம் முழுக்க நிறைய ஆன்மீக விழாக்கள் வர்றதாலயும்தான் இந்த மாதத்தில் திருமணம் மாதிரியான சுப நிகழ்ச்சிகளை தவிர்த்தாங்க. சுப நிகழ்ச்சிகளை  நடத்தக்கூடாதே தவிர அதுக்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம்.   இந்த மார்கழி மாசத்தில்தான்  அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் கல்யாணம்,  ஆருத்ரா தரிசனம் மாதிரியான ஆன்மீக நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. 
வைணவ திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவாங்க.  திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலா ஆண்டாளின் திருப்பாவையைத்தான் இந்த மாசம் முழுக்க  திருப்பள்ளியெழுச்சிக்காக பாடுவாங்க. சகல சிவாலயங்களில் திருவெம்பாவை பாடல்கள்  திருப்பள்ளியெழுச்சியாக  இம்மாசத்தில் பாடப்படும். இந்த மாசத்துலதான் நல்ல கணவன் கிடைக்கனும்ன்னு பாவை நோன்பை வயசு பொண்ணுங்க இருப்பாங்க. 
மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்னு கீதைல கண்ணன் சொல்றாப்ல. அப்ப மத்த பதினோரு மாதம் என்ன தக்காளி தொக்கான்னு சண்டைக்கு வர்றவங்களுக்கு பதில் இதோ...

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம்ன்றது தேவர்களைப் பொறுத்தவரை  ஒருநாள்.  அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! ( 1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல்  பொழுது.  இந்தக் காலத்துக்கு உத்தராயணம்ன்னு பேரு. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுது. இந்த காலத்துக்கு தட்சிணாயணம் ன்னு பேரு. தட்சிணாயணத்தின் நிறைவுப் பகுதி,  அதாவது, தேவர்களை  பொறுத்தவரை இரவுப்பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் ன்னு கணக்கிட்டு சொல்றாங்க. இந்த காரணத்தினால்தான் தேவர்களை வரவேற்கும் விதமாக மார்கழி மாசத்து அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமா வச்சிருக்காங்க. 

ஜோதிடரீதியா சொல்லனும்ன்னா  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  ன்னு  வடமொழியிலும்,  மார்கழி ன்னு தமிழிலும் சொல்றோம்.  இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில்  பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் நம்மில் பலபேருக்கு தெரியாது. சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்றவர். . மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அவர், தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார். தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நமக்கு தெரியும்தானே?! மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும்.   அதன்னாலதான் நினைத்தது நிறைவேற, எதிரிகள் தொல்லை நீங்க  ம்ருத்யுஞ்ஜய ஹோமம் த்தை மட்டும் மார்கழிக்குன்னு காத்திருந்து செய்வாங்க. 

ஒருவரை ஒருவர் காணாமலே அவர் பற்றி பேசி அன்புக்கொண்டு அவர்களை அடைந்தது இருவார். அதில் ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்,  ஆண்கொண்ட அன்புக்கு பக்தி, சேவகம்ன்னு பெயர்சூட்டி கடவுளாய் கொண்டாடும் அனுமன் ஜனித்தது இந்த மார்கழியில்தான், காதால் கேட்டு பெண் கொண்ட அன்புக்கு காதல்ன்னு பேர் சூட்டி, அவள் நோன்பிருந்து அரங்கனை அடைந்தது இந்த மார்கழி மாதத்தில்..  மார்கழி மாசத்தில்  சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் ன்னும் சொல்வாங்க. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது,  குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும்  நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள்  உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். அதனாலும் இந்த மாதத்தில் இறைப்பற்றுக்குன்னு ஒதுக்கி வச்சுட்டாங்க. 



இந்த மாசத்தில்தான்  மகாபாரத யுத்தம் நடந்தது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாசத்தில்தான். இந்திரனால் பெருமழை, வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மாசத்தில்தான். 
 எங்க ஊர்லலாம் மார்கழி மாத அதிகாலையிலும், மாலையிலும் பஜனை பாடிக்கிட்டு வருவாங்க. அரிசி, பணம், கோவில் விளக்குக்கு எண்ணெய்ன்னு கொடுப்போம். பதிலுக்கு துளசியை பிரசாதமா தருவாங்க. இப்ப அதுலாம் இல்ல. ஆன்மீக மலர்ச்சிக்கு இந்த மாசம் உகந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த  இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில்  மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!


நன்றியுடன்,
ராஜி. 

Friday, December 15, 2017

பூரணை, புஷ்கலையை ஐயப்பன் மணந்த வரலாறு

யுகங்கள்தோறும் மக்களுக்காக அவதரிக்கும் தர்மசாஸ்தாவே, கலியுகத்தில் ஐயப்பனாக மனித அவதாரம் எடுத்தார் என்பதனை நமது முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இனி, ஐயப்பனின் ஆரியங்காவு திருக்கோவிலை பற்றி பார்க்கலாம்.
பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதியில், வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்கு முதன்முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழா, ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் செவிவழி கதைகள் உண்டு. தர்மசாஸ்தாவை பற்றி சொல்லப்படும் கதைகளில் மகேஸ்வரனின் புத்திரனாகிய அவர் குறுகிய காலத்திலேயே சகல சாஸ்த்திரங்களையும்  பிரம்மாவிடம் கற்று "மஹா சாஸ்த்ரு" என்ற நாமத்தையும் பெற்றார். தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்மசாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன்.  ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்மசாஸ்தாவின் திரு அவதாரமாகும். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால் திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, முதலான பல கலைகளில் சிறந்து விளங்கலாம்.

ஞான சாஸ்தா: தட்சிணாமூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

தர்மசாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே!
எல்லா கதைகளும் செவிவழி கதைகளாகவே வந்திருக்கின்றன. பலவாறு கதைகளை பேசப்பட்டாலும், தர்மசாஸ்தா அவதரித்து கலியுகத்தில் அருள்பாலிப்பது என்பது உண்மையே. முதலாவது தர்மசாஸ்தாவான புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழி வந்த கதையை பார்க்கலாம். நெசவுத்தொழில் செய்துவந்த மதுரையில் குடியேறிய குலத்தவர்கள் நெய்து கொடுக்கும் பட்டாடைகளைத்தான் சேரமன்னர்கள் அணிவார்கள். அப்படியான ஒரு காலகட்டத்தில் சௌராஷ்டிரா நெசவு வணிகர் ஒருவர், தான் நெய்த பட்டாடைகளை மன்னனுக்கு எடுத்து செல்லும் போது தன்னுடைய மகளையும் உடன் அழைத்து சென்றார் .  செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. .அந்த காலத்தில் கோவில்கள் எல்லாம் அன்ன சத்திரங்களாகவும் தங்கும் இடங்களாகவே இருந்திருக்கின்றன. அதனால் நெசவு வணிகரும், அவரது மகளும் அங்கேயே தங்கி விடுகின்றனர். நெசவு வணிகனின் மகளான புஷ்கலை அங்கிருந்த  ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்டவுடன் ஐயன்மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.  மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.  என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை  மனதுடன் மன்னனைகாண  செல்லுகிறார்.
அந்த அடர்ந்த காட்டுவழியே தனியே சென்ற நெசவு வணிகன் ,ஒரு ஒற்றை யானையிடம் சிக்கிக்கொள்கிறார் .உடனே பயந்து ,தான் ஆரியங்காவில் பார்த்த அய்யப்பனை நினைத்து, ஐயப்பா காப்பாற்று என கதறுகிறார். அப்பொழுது அங்கே அழேகே உருவான ஒரு வேடன் வருகிறான். அந்த யானையை அடக்குகிறான். இதைக்கண்டு மகிழ்ச்சியுற்ற நெசவு வணிகன் தன்னிடம் இருந்த உயர்ந்த பட்டாடை ஒன்றினை பரிசாக கொடுக்கிறான் மனம் மகிழ்ந்த வேடுவ வாலிபன், உடனே அதை அணிந்து அழகே உருவாக காட்சிகொடுத்து சிரித்துக்கொண்டு  இருக்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர், "மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறு என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார். "நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள் அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்தி, அசதி மேலிட அப்படியே  தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன்மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. மேல்சாந்தி, வணிகர் உள்ளிட்ட அனைவரும் காலையில்   கோயிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்ட்டது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார். இதேப்போல் மற்றொரு செவிவழி கதையும் இருக்கிறது. அது நடைபெற்ற இடமும், புவியில் அமைப்பில் வெகுதொலைவில் இருந்தாலும், பெயர்களும் சம்பவங்களும் ஒற்றுமையாகவே இருக்கின்றன.
நேபாள நாட்டில் மந்திர தந்திரங்களில் சிறந்த பளிஞன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் காளி உபாசகனாகவும், மந்திர சாஸ்திரத்தில் பண்டிதனாகவும் இருந்தான். அவனுக்கு புஷ்கலை என்னும் மகள் இருந்தாள் பளிஞன் என்றும் சிரஞ்சீவியாக இருக்க அநேக கன்னி பெண்களை காளிக்கு பலியிட்டுவந்தான். அந்த நாட்டில் சிவனிடத்தில் பக்திக்கொண்ட கன்னிகா என்னும் பெண் வசித்துவந்தாள் .பக்தியில் சிறந்த அவளை காளிக்கு பலியிட பளிஞன் முடிவு செய்தான். கருணையே வடிவான அந்த சிவன், பளிஞனின் கொட்டத்தை அடக்கவும் கன்னிகாவை காப்பாற்றவும், குமாரனாக இருந்த சாஸ்தாவையும், கருப்பண்ண ஸ்வாமியையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி மறைத்து வைத்தார். சாஸ்திரத்தில், மந்திரக்கலைகளில் வல்லவரான தர்ம சாஸ்தா பளிஞனின் பல்வேறு சூழ்ச்சிகளையும் மந்திர வித்தைகளையும் தவிடு பொடியாக்கினார். கடைசியில் தன்னுடைய சுயரூபம் காட்ட, பளிஞன் அவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ரட்சிக்குமாறு வேண்டினான். தன் மகளான புஷ்கலையை மனம் முடிக்கவேண்டும் என்றும் வேண்டினான். அவரும் அவ்வாறே செய்து புஸ்கள காந்தன் என்ற பெயரும் பெற்றார் என்றும் ஒரு செவிவழிக்கதை உண்டு . 
இனி, பூரணை மற்றும் புஷ்கலை பற்றிய தர்மசாஸ்தாவின் அவதார தத்துவத்தை பற்றி பார்க்கலாம் .முன்னொரு  காலத்தில் சத்ய பூர்ணர் என்றோரு மகரிஷி வசித்துவந்தார் .அவருக்கு  பூரணை,  புஷ்கலை என்ற இரு மகள்கள் இருந்தனர். அவர்கள் ஹரியினுடைய மகனை மனக்கவேண்டி கடுமையாக விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுடைய தவத்தை மெச்சி உங்கள் இவருடைய எண்ணங்களும் அடுத்த பிறவியில் ஈடேறும் என்று கூறி மறைந்தார்.  அவர்களில்  ஒருத்தி நேபாள மன்னனுடைய மகளாக பிறந்து தர்ம சாஸ்தாவை மணம் முடிக்கிறாள். மற்றொருத்தி இப்பொழுது மலையாள தேசத்தில் இருக்கும் கொச்சியானது அப்பொழுது வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்டது. அதை பிஞ்சகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு மகளாக பூரணை என்ற திருநாமத்தில் வளர்ந்துவந்தாள். மணப்பருவம் எய்திய பூரணை மற்றும் பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்ற மன்னன் வேட்டையாடுதலில் தன்னை மறந்து ,தன்னுடன் வந்தவர்களை பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டான். இரவு நெருங்கியபோதுதான் தான் தனித்துவிடப்பட்டதை மன்னன் அறிந்தான் .
திடீரென அந்த இடத்தில கூச்சல்,அழுகை,ஆர்ப்பாட்டமென எல்லா வீடும் அல்லோகலப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கு ஒரு சுடுகாடும், அங்கிருக்கும் பூதங்களும், பேய்களும் ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி களியாட்டம் ஆடிக்கொண்டிருந்தன . இதைக்கண்ட மன்னன் கதிகலங்கி போய் பூதநாதனாகிய தர்ம சாஸ்தாவை நினைத்து பிரார்த்தனை செய்தான் .
பூதநாதனே சரணம்,
மோகினி மைந்தனே சரணம் ,
செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம் ,
என பலவாறு வேண்டி துதித்தான். உடனே ஐயன் அங்கே வந்து தன் அருட்பார்வையால் பூதகணங்களை நோக்க, அவரைக்கண்ட மாத்திரத்தில் அவல்யெல்லாம் திக்கு தெரியாமல் ஓடி மறைந்தன பயம் வேண்டாம் என அபாயம் கொடுத்த தர்ம சாஸ்தா மன்னனை தன் குதிரையில் ஏற்றி பத்திரமாக அரண்மனைக்கு கொண்டு சென்று விட்டுவிடுகிறார். மனம் மகிழ்ந்த மன்னன் திருமண வயதில் இருக்கும் தன்மகள்  பூரணையை  திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அய்யனிடம் வேண்டுகிறார். தர்மசாஸ்தாவான அய்யன், அவளின் பிறப்பு ரகசியத்தையும் தன்னை மணப்பதற்காகவே அவள் பிறந்து தனக்காக காத்து இருக்கிறாள் என்பதனையும் உணர்த்தி, பூரணையை மணம் முடித்து ஹரிஹராத்மஜனான தர்மசாஸ்தா கயிலாயம் சென்றடைந்தார்.  அங்கு,  மகாதேவரின் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்கு தலைவணங்கி அவற்றை வழிநடத்தி, பூதநாதன் என்று திருநாமம் பெற்று பூரணை, புஷ்கலை சமேதனாக எழுந்தருளினார். தர்மசாஸ்தா, இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு அவனை செல்லப்பிள்ளை என்றும் கைலாயத்தில் அழைப்பார்கள் .
இப்படி இருக்க பூரணயை அய்யன் திருமணம் செய்ததை கேள்விப்பட்ட புஷ்கலையின் தந்தை பளிஞன், ஆவேசம் கொண்டு தன்மகளிடம் முறையிடுகிறான். முற்பிறவியை தன் ஞானதிருஷ்டியினால் அறிந்துக்கொண்ட புஷ்கலை ஏதும் அறியாததைப்போல மௌனம் சாதிக்கிறாள். இதனால் கோபங்கொண்ட பளிஞன் தர்மசாஸ்தாவிடமே சென்று, நீ செய்தது சரியோ என முறையிடுகிறான். ஒரு தந்தையாக பளிஞனின் கோபம் நியமானது என உணர்ந்த அயன் மெளனமாக இருக்க,  மேலும் கோபங்கொண்ட பளிஞன் தர்ம சாஸ்தாவான அவனுக்கு சாபம் கொடுக்கிறான். ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ பூலோகத்தில் ஜெனித்து பிரம்மச்சாரியாகவும் யோகியாகவும் இருக்க கடவாய் என சாமிட்டார். அதையும் சந்தோஷமாக புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட அய்யன் பளிஞனே! நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது. அதில் நான் பிரம்மச்சாரியாகவும் இருக்கவேண்டும்.  இப்பொழுது உன் சாபம் அதை மிகவும் எளியதாக்கி விட்டது.  அப்பொழுது நீயே பந்தள தேசத்து அரசனாக வந்து என் வளர்ப்பு தந்தையுமாய் ஆவாய். நான் என்னுடைய அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய நீயே உறுதுணையாக இருப்பாய் என்று கூறி பளிஞனுக்கு அருள்பலித்தார் . இன்றும் தர்மசாஸ்தா, பூரணை, புஷ்கலை திருக்கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து சௌராஸ்டிர மக்கள் சீர் கொண்டு போவதை வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.  

இனி தர்மசாஸ்தாவின் மணிகண்ட அவதாரமும் அவருடைய அவதாரத்தில் நிகழ்ந்த அற்புதங்களும் அடுத்தவாரம் பார்க்கலாம் .கடந்த பதிவு மிக நீண்டதாக இருந்தது என் நண்பர்கள் கூறியதால் இந்தமுறை பதிவை சுருக்கமாக நிறைவுசெய்திருக்கிறேன் . மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கலாம் ...
நட்புடன் 
ராஜி